பிக்பாஸ் நேற்றைக்கு மொக்கைப் பாஸ்த்தான்... ரொம்பல்லாம் எதுவும் நடந்துடலை... எப்பவும் போல நாமினேசனும் கவின்-லாஸ்லியா கடலையும் மொக்கையாய் ஒரு டாஸ்க்கும் சாப்பிட சுட்டகோழியுமாய் முடிந்தது
77ம் நாளின் தொடர்ச்சியாய்... சேரனின் வெளியேற்றம் வனிதாவை உண்மையாகப் பாதித்திருக்கிறதா அல்லது அதை வைத்து எப்படியும் நாமினேசனுக்குள் வர இருக்கும் தன்னைக் காத்துக் கொள்ள முயற்சிக்கிறாரா என்று யோசித்தால் இரண்டாவதற்கான சாத்தியக்கூறுகள்தான் அதிகம் என்றாலும் இதுவரை எதற்கும் கண்ணீர் சிந்தாத வனிதா கண்ணீர் சிந்துவதால் கொஞ்சமேனும் சேரனின் வெளியேற்றம் அவரைப் பாதித்திருக்கிறது என்றுதான் தெரிகிறது.
சேரன் போனதைக் குறித்து ஷெரினுடன் பேசி, அப்புறம் என்னத்துக்கு நாம இங்க வரணும்... விளையாடணும்ன்னு கேட்டுக் கொண்டிருந்தார். ஷெரின் கூட நியாயப்படிப் பார்த்தால் கவின்தான் வெளியே போயிருக்கணும் என்று சொன்னார். கடந்த சீசன்களில் எல்லாம் அப்படித்தானே நடந்தது... எந்தக் குழுவும் இல்லை... திறமைசாலி முன்னே போய்க் கொண்டிருந்தார். இந்த முறை அப்படியே தலைகீழ் திறமையானவன் எவனோ அவனை குழுவாக சேர்ந்து அழகாக வெளியேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தக் குழு அமைப்பின் மூளைதான் கவின்... கவினைப் பொறுத்தவரை நண்பேன்டா... விட்டுக் கொடுப்பேன் என்பதெல்லாம் குழுவைத் தனக்கு தேவையான இடம் வரை இழுத்துச் செல்லவே தவிர, அதில் துளியும் உண்மையில்லை என்பதை பிக்பாஸ் பார்க்கும் பச்சைக் குழந்தை கூட சொல்லிவிடும். யாரை எப்படித் தன் வலையில் விழ வைக்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாக படித்து வந்திருக்கிறான். சாக்சி தனக்குப் படிப்பில் தங்கப்பதக்கம் கிடைத்ததாகச் சொல்லியிருந்தார். கவினுக்கு அடுத்தவனை ஏமாற்றுவது தெரியாமல் ஏமாற்றி மேலேறிக் கொண்டிருப்பதற்காக தங்கம் என்ன வைரப் பதக்கமே கொடுக்கலாம்.
இந்தக் குழு மனப்பான்மையை விளையாட்டில் வெற்றிக்கான முயற்சி என பிக்பாஸ் கடந்த சீசன்களில் சொல்லவில்லை ஆனால் இந்த முறை கமலை வைத்தே சொல்கிறது என்றால் அவர்களுமே கவின், சாண்டியின் வெற்றியைத்தான் விரும்புகிறார்கள் என்றுதானே அர்த்தம்.
சென்ற வாரத்தில் சிறந்த போட்டியாளர் எனத் தன்னைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதை கமல் கேலியாகப் பேசியதை வனிதாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இவ்வளவுக்கும் வனிதா பக்கத்து நியாயத்தைச் சேரன் மிகத் தெளிவாக கமல் முன் எடுத்து வைத்தார். அதைக் கமலும் மக்கள் முன் பாராட்டினார். அப்படியிருக்க ஏதோ ஒரு கணக்கில் கூட்டிக் கழித்துப் பார்த்ததில் சரியாய் வருமெனத் தோன்றியதால் இந்த வாரத் தலைவர் தேர்வில் நான் கலந்துக்க விரும்பலை... எனக்குப் பதிலாக நீ கலந்துக்க என ஷெரினிடம் நூல் விட்டார் வனிதா. இப்ப தூக்கிக் கொடுப்ப அப்பறம் எல்லார் முன்னாலயும் போட்டு மிதிப்பே போதும்த்தா என மனசுக்குள் நினைத்த ஷெரின், அதெப்படி முடியும் என மறுத்து விட்டார்.
உடனே வனிதா நேரே கேமராக்கிட்ட போய் விபரத்தைச் சொல்லி என்னால் முடியாதுன்னு 'பட்'டுன்னு சொல்லிட்டார். பிக்பாஸ்க்கு 'டக்'குன்னு தூக்கி வாரிப் போட்டிருக்கும் போல... 'சட்'டுன்னு அதெல்லாம் உனக்காக முறையை மாற்ற முடியாது... நீ விளையாண்டுதான் ஆகணும்ன்னு கட்டையைப் போட்டுட்டார். உடனே வனிதாவும் எல்லாப் பயலுக்கும் முன்னால சீனைப் போட்டாச்சு... சேரன் அண்ணா போனதால அக்கா உண்மையிலேயே வருத்தமாத்தான் இருக்குன்னு நினைச்சிக்கிட்டாங்க.
தனியறையில் சேரன், அமைதியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
அவெஞ்சர்ஸ் அணி மீண்டும் சிகப்புக் கதவுக்கிட்ட கூடிச் சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க... உள்ள வந்து போட்டுக் கொடுத்துட்டுப் போன மூவரணியைப் பற்றித்தான் பேசிக்கிட்டிருந்தாங்க... மோகன் சேரனிடம் யாரையும் நம்பாதீங்க என்று சொன்னதை சாண்டி சொல்ல, சாக்சி உள்ள எதுக்கு வந்துச்சுன்னே தெரியலை மூதேவி எனக் கவின் திட்டினான். அவர்களைக் கேலி செய்து, சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை சாக்சி பார்த்திருந்தால்...?
அபி எதுக்கு வந்துச்சுன்னு எனக்குத்தான் தெரியும்ன்னு முகன் வெளியில சொல்லாம மனசுக்குள்ள வச்சிக்கிட்டான்... நமக்கும்தான் தெரியுமே... அபியோட உடைகள் பற்றி எல்லாருக்கும் தெரியும்... வீட்டுக்குள் ஷெரின் போடும் குட்டைப் பாவாடைகளைவிட (சில நேரங்களில் கரகாட்டக்காரி மாதிரியே இருக்கும்) சாக்சியும் அபியும் போட்ட உடைகள் ரொம்ப மோசமானவை... அதைப் பற்றி 'ஜாங்கிரி' மது 'ஆங்கிரி'யாப் பேட்டி கொடுத்திருக்கு... நல்லவேளை முகன் வெளிய இல்லை.
இவர்கள் பேச்சின் இடையே ஜாலியாப் பாட்டுப் பாட, சாண்டி பாட்டுப் பாடியது தனக்குக் கேட்கவில்லை எனவும் தான் கேட்க வேண்டும் என்பதால் மைக்கை சரியாகப் போடும்படியும் பிக்பாஸ் சொல்ல, ஓடி ஓடி விழுந்து விழுந்து சிரித்தார்கள். பிக்பாஸ் சாண்டியின் நண்பராக இருக்குமோ..? சாண்டியிடம் செமையா விளையாட்டுக் காட்டுகிறார். அந்தாளும் எத்தனை நாள்தான் அடிச்சிக்கிட்டுக் கிடக்குறதையே பாக்குறது... இப்படியாச்சும் எஞ்சாய் பண்ணட்டும் பாவம். சாண்டியும் கலகல ரகம்தான்... கவின் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான் என்பதை உணராமலேயே இருக்கிறார்... இன்று உணர்வார் போல் தெரிகிறது... பார்க்கலாம்.
தர்ஷனும் ஷெரினும் பேசிக் கொண்டிருந்தார்கள்... ஷெரின் ஏதோ சொல்ல தர்ஷன் முதலில் உன்னோட தோழிதான் பிரச்சினையைக் கிளப்புவாங்க... எனக்கொன்றுமில்லை எனச் சொல்லிவிட்டுச் சென்றான். வெளியில சனம் (சனம்ன்ன உடனே மக்கள்ன்னு நினைச்சிடாதீங்க.. தர்ஷனின் காதலி) என்னோட வாழ்க்கை போச்சு.... வளையல் போச்சு.... எங்க வீட்டுல வாழக்காய் போச்சு... காலணியில கரண்டு போச்சு... ஆரணிக்கு ஆயா போச்சுன்னு யூடியுப் சேனல்காரன்களுக்கு அழுதழுதே ஹிட்ஸை அள்ளிக் கொடுத்துக்கிட்டு இருக்கு. அது தெரியாம தர்ஷன் நட்பைக் கொண்டாடிக்கிட்டு இருக்கான். ம்.. பாவம்... வெற்றியோட வெளியே வந்தால் காதல் தோல்வியாய்த்தான் முடியும் போல.
78ம் நாள் காலை பள்ளியெழுச்சியாய் 'தாறுமாறு...' பாட்டு... தாறுமாறா ஆடுவானுங்கன்னு பார்த்தா எல்லாரும் தூங்கி வழிஞ்சானுங்க... போங்கடா நீங்களும் உங்க பாட்டும்ன்னு அவனவன் தூக்கத்தைத் தொடர, சாண்டி படுக்கையில் ஆட்டத்தை ஆரம்பித்து வெளியில் வந்து முகன், தர்சனுடன் ஒரு சின்ன ஆட்டம் போட்டார்... அவ்வளவே.
தலைவரைத் தேர்ந்தெடுக்க போட்டியில் இருக்கும் மூவரும் அரை மண்டியில் (அதாவது கமல் உட்காரும் பிக்பாஸ் நாற்காலியில உட்கார்ந்து இருக்க மாதிரி நினைச்சிக்கிட்டு காலை அகட்டி நிற்க வேண்டும்... நாற்காலி மட்டும் இருக்காது.) இரண்டு கைகளிலும் கலர் தண்ணி நிரப்பிய பவுலை வைத்துக் கொண்டு நிற்க வேண்டும். யார் அதிக நேரம் நிற்கிறாரோ அவரே இந்த வாரத் தலைவர்.
நாங்க ஒரு முடிவெடுத்துட்டா பிக்பாஸ் என்னடா பண்ண முடியும்ன்னு விளையாடத்தானே சொன்னே விளையாண்டுட்டேன்னு பஸ்ஸர் அடிச்ச அடுத்த நொடியே வனிதா என்னால முடியாது நான் விட்டுக் கொடுக்கிறேன்னு சொல்லிட்டு வந்திருச்சு.... அக்கா நிக்கும் போது நாம இறங்கினால் என்ன தர்ஷன் விட்டுக் கொடுக்குறியா... இது என்ன விளையாட்டா... இல்ல அண்ணன் தங்கச்சி பாசத்தைப் பொழியிற இடமா... பிக்பாஸ் இதுக்கு ஒரு முடிவு சொல்லுங்கன்னு அக்கா அங்கயே உக்காந்திரும்ன்னு காத்திருந்த தர்ஷன், விட்டுக் கொடுக்கலை விலகுறேன்னு விளக்கம் கொடுத்து அக்கா இறங்கிய உடனே என்னால முடியாது கால் வலிக்கிதுன்னு இறங்கி தங்கைக்கு தலைவி பதவியை விட்டுக் கொடுத்தான். விட்டுக் கொடுத்த வெற்றி எனக்கெதுக்குன்னு லாஸ்லியா பொங்கினார்.
ரகசிய அறையில் சேரன் அமைதியாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார்... அண்ணன் தங்கச்சி பாசத்தை மனசுக்குள் பாராட்டியிருப்பார் போல... முகத்தில் பாபாவைப் (நான் சாய்பாபாவைச் சொன்னேன்) போல் சின்னதாய் ஒரு புன்னகை.
கக்கூஸ்ல கவினிடம் அவனெதுக்கு எனக்கு விட்டுக் கொடுக்கணும்... நாம விட்டுக் கொடுத்தா அவனுக்கு வேண்டாம்... அப்ப அவன் விட்டுக் கொடுத்து நாம விளையாடணுமா...? எனக்கு வேண்டாம் இந்த வெற்றின்னு கத்திய லாஸ்லியாவிடம் சரிப்பா... உங்கப்பா... எங்கப்பா... சேரப்பா... இது போரப்பா அப்படின்னு ஆற்றுப்படுத்தினான் கவின். இதெல்லாம் நல்லாச் செய்வான்... ஆனா தலைவர் போட்டிக்கோ, சிறந்த போட்டியாளருக்கோ மட்டும் எது தேவையோ அதைச் செய்ய மாட்டான். ம்... அவனுக்கு என்ன தேவையோ அது சரியாப் போகுதுல்ல... பின்ன என்ன 'டேஸ்'க்கு டாஸ்க்குப் பண்ணனும்..?
மீண்டும் மீண்டும் தர்ஷனிடம் நீ ஏன் விட்டுக் கொடுத்தே... இது சரியில்லை என லாஸ்லியா சொல்லிக் கொண்டே இருக்க, நீ தலைவியா வந்தா என்ன பண்ணுவேன்னு எல்லாருக்கும் தெரியணும்... உனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு பேசுற ஆட்கள் முன்னாடி தலைவியா நீ நிக்கணும். அதுக்குத்தான் விட்டுக் கொடுத்தேன்... இது தலைவரைத் தேர்ந்தெடுக்கும் டாஸ்க்... போட்டியில்லை... இறுதிப் போட்டிக்கான ரேஸில் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்... தங்கச்சி புருசனே என்றாலும் போடா அங்கிட்டுன்னு பொடறியில போட்டு விரட்டிருவேன்னு விளக்கம் கொடுத்தான் தர்ஷன்.
தர்ஷன் விட்டுக் கொடுத்ததில் ஷெரினுக்கு விருப்பமே இல்லை... தர்ஷனிடம் அதைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார். கால்வலி என்றான்... அதெல்லாம் இல்லை பொய் சொல்றே என்றார். விட்டுக் கொடுத்ததுக்கு அந்தப் பெண் வருத்தப்பட்டுக்கிட்டு இருக்கா... அதையாச்சும் செய்யிறாளே என வனிதாவிடம் சொன்னார் ஷெரின்.
அணி பிரித்தலில் பாத்ரூம் தினம் ஒருத்தர் கழுவ வேண்டும்... பாத்திரம் கழுவ, வீடு சுத்தம் செய்ய, சமையல் பண்ண என தனித்தனி அணியில்லை. எல்லாரும் சேர்ந்தே செய்ய வேண்டுமென இருக்கும் ஏழுபேரை அணி பிரிப்பதில் இருக்கும் சிக்கலை அழகாகக் கையாண்டார். மூளை கவினாகவும் இருக்கலாம். பன்னீரை வைத்து அம்மா ஆட்சி செய்தது போல லாஸ்லியாவை வைத்து கவின் ஆட்சி செய்வான்.
சேரன் பார்த்துக் கொண்டிருந்தார்... என்னய்யா பார்த்துக்கிட்டு இருந்தார்ன்னு சொல்லிக்கிட்டே இருக்கே... பின்ன தனியறையில அந்தாளு என்ன பண்ண முடியும்..? ரிலீசான படங்களோட டிவிடி கொடுத்தா அதையாச்சும் பார்த்துக்கிட்டிருப்பார்... அதுவும் கொடுக்க மாட்டானுங்க... சூப்பர் சிங்கர் சிடியாச்சும் கொடுக்கலாம்... அதுவும் மாட்டானுங்க.... அப்ப இதைத்தானே பார்க்கணும்ன்னு நினைக்கிறீங்க... அதேதான்... வீட்டில் சண்டையென்றால் வெண்டைக்காய் வெட்டுவார்... வெளிநடப்பு செய்வார்... இரண்டும் முடியாத ஒரு அறைக்குள் என்பதால் சேரன் பார்த்துக் கொண்டிருந்தார்... பார்த்துக் கொண்டிருந்தார் என்பதை அப்படித்தானே சொல்ல முடியும்... அதைத்தான் நானும் சொன்னேன்.
ஆம்... சேரன் பார்த்துக் கொண்டிருந்தார்.... ஹெட் செட் மாட்டிய பாடகனைப் போலிருந்தார்.
ஆனாலும் சேரனைப் பொறுத்தவரை சண்டையின் போது பேசினால் யாருக்கு அறிவுரை சொல்றோமோ அவர் அதை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருக்க மாட்டார் என்பதை உணர்ந்தே பெரும்பாலான பிரச்சினைகளில் அது ஒரு முடிவுக்கு வந்தபின் அதைப் பேசித் தீர்த்திருக்கிறார் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். அவர் வெண்டக்காய் நறுக்கினாலும் வெளிநடப்புச் செய்தாலும் தன் மனசுக்குப்பட்டதை வெளிப்படையாக சண்டையை ஆரம்பித்தவரிடமும் அடிபட்டவரிடமும் சொல்லியிருக்கிறார். சேரன் இல்லைன்னாலும் அவருக்காக ரெண்டு பத்தியான்னு பிரதிலிபியில் வாசிக்கும் சகோதரிகள் பல்லைக் கடிப்பது இப்பவே கேட்கிறது என்பதால் வாங்க நாமினேசனுக்குப் போவோம்.
அவெஞ்சர் அணி எப்பவும் போல் எதிரில் இருந்த வனிதா, ஷெரினைச் சொன்னார்கள்... தர்ஷனும் முகனும் மாற்றி மாற்றிச் சொல்லிக் கொண்டார்கள். ஷெரினுக்குச் சொன்ன காரணம் சுத்த மொக்கை... ஒரே காரணத்தை மூவரும் சொன்னார்கள். வனிதா விவேகம் அஜீத் மாதிரி ஷெரினுக்கிட்ட கட்டிப்பிடிச்சிக்கிட்டே உள்ள போயி கழுத்தறுத்துச்சு... ஷெரின் வனிதாவைச் சொல்லாமல் விட்டிருந்தால்தான் தவறு. அந்தளவுக்கு சென்ற வாரம் அழ வைத்திருக்கிறார். கவின் முன்னமே நாமினேட் ஆயிருக்க, வனிதா, ஷெரின், சாண்டி, தர்ஷனும் இணைந்து கொண்டார்கள். லாஸ்லியா தலைவியாய் தப்பிக்க, முகன் மட்டும் ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்ததால் தப்பினார்.
நாமினேசன்ல இல்லை என்றால் வனிதாவின் ஆட்டம் சேவாக்கைப் போல செமையா இருக்கும்... அதே நாமினேசனில் இருக்கிறார் என்றால் திராவிட்டைப் போல் ரொம்பப் பொறுமையாக விளையாடுவார். நாமினேசனுக்குப் பின் 'உக்கிர' காளி 'உறைந்த' காளியாக ரொம்ப அமைதியாயிட்டார். இந்த வாரம் அக்காவின் ஆட்டம் இருக்காது... அடிக்கடி சேரனைப் பற்றிப் பேசி கேமரா முன் கண்ணீர் சிந்துவதையும் லாஸ்லியாவை தூக்கித் தலையில் வைப்பதையும் கண்டு களியுங்கள். காணக் கிடைக்காத காட்சிகளாய் அவை இருக்கும்.
மொக்கையா ஒரு டாஸ்க்... நாம விளையாடுற மியூசிக் சேர் மாதிரி எல்லாரும் சேர்ல உக்கார்ந்து ஒருத்தர் மாற்றி ஒருத்தருக்குப் பந்தைத் தூக்கிப் போடணும்... பாட்டு நின்றதும் பந்து யார் கையில் இருக்கோ அவர் ஒரு சீட்டை எடுத்து அதில் இருப்பதை மற்ற போட்டியாளர்களில் இருந்து ஒருவரைச் செய்யச் சொல்ல வேண்டும்.
பேட்டை படத்தில் வரும்...
'ஹே எத்தன சந்தோஷம்
தினமும் கொட்டுது உன்மேல..
நீ மனசு வச்சிப்புட்டா
ரசிக்க முடியும் உன்னால..'
என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டது.... போட்டியாளர்களுக்குத்தான் முகத்தில் எத்தனை சந்தோஷம்.
முதலில் அவுட்டான சாண்டி, லாஸ்லியாவிய ஒரு லிட்டர் ஐஸ்கிரீமைச் சாப்பிடச் சொன்னார். ஒவ்வொருவராக அவுட்டாகும் போது வனிதாவுக்காக உப்புக் காபியைக் குடிக்க, முகனுக்காக சுட்ட கோழியை சாப்பிட தர்ஷனும். லாஸ்லியாவுக்காக உடலெல்லாம் கிளிப்பை முகனும், ஷெரினுக்காக தலையில் உடைக்கப்பட்ட முட்டைய கவினும், கவினுக்காக ஜஸ் தண்ணியை உடம்பில் ஊற்றிக் கொள்ள சாண்டியும், தர்ஷனுக்காக முகத்தில் பெயிண்டை ஷெரினும் ஏற்றுக் கொண்டார்கள். வனிதாக்காவை யாரும் கூப்பிடலை.
இறுதியில் லாஸ்லியா தர்ஷன் விளையாட, லாஸ்லியா கையில் இருந்து பந்து பறக்கும் போதே பாடல் நிறுத்தப்பட, அவர் தர்ஷன் எனக் கைகாட்ட, அவனோ இல்லை நீதான்னு சொல்லிவிட, லாஸ்லியா சிரித்தபடி ஏற்றுக் கொள்ள கவினுக்கு அது சரியாகத் தெரியவில்லை... தர்ஷன்தான் அவுட் என்பதாய் முழித்தான்.
போட்டி முடிந்த பின் லாஸ்லியாவிடம் காதலைச் சொல்லச் சொல்லி கரைச்சல் கொடுக்க ஆரம்பித்தான் கவின். லாஸ்லியாவுக்குள் வெளியில் போய் பார்க்கலாம் என்ற மனநிலைதான் இப்போதும்... வெளியே போனா பார்க்க மாட்டாளோங்கிற கவலையுடன், தற்போதைய நாமினேசனில் தப்பிக்க காதலைச் சொல்ல வைப்பது ஒரு கேடயம் என்பதை உணர்ந்திருப்பதாலேயே தீவிர வற்புறுத்தலை லாஸ்லியாவிடம் காட்டிக் கொண்டிருந்தான் கவின்.
இப்போது சேரன் என்ன பண்ணுகிறார்..?
ரகசிய அறையை உடைத்துக் கொண்டு வந்துவிட்டாரா...?
இல்லை முகனைப் போல கட்டிலை உடைத்தாரா..? என்ற பயத்தில் கேமரா அங்கே போக, உட்கார்ந்து கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்... பின் மைக்கை எடுத்தார்... உள்ள இதைப் பற்றிப் பேசமாட்டோம்ன்னு ரெண்டு பேரும் எங்கிட்டச் சொன்னாங்க... ஆனா இப்ப அவளைச் சொல்லச் சொல்லி வற்புறுத்துறார்... தான் நாமினேசன்ல இருப்பதால் வெளியேறாமல் இருக்கவே இதைச் செய்கிறார்... இது தவறு... புரிஞ்சிக்கங்க மக்களேன்னு சரியான பார்வையில் செமையா ஒரு கருத்தை மக்கள் முன் வைத்தார்.
இது புரியாம நாம இவனைக் காப்பத்துறோம்... இது புரிஞ்சி இதனாலதான் நமக்குப் பொழப்புன்னு விஜய் டிவியும் இவனைக் காப்பாத்துது. மொத்தத்துல கவின் எப்பவும் பாதுகாப்பாய்... வனிதா சொன்ன மாதிரி நல்லா விளையாண்டா சீசன்-3ல் வேலையில்லை... காதல், நண்பன்னு குள்ளநரித்தனம் பண்ணினால் மட்டுமே வேலை.
கவின் போன வாரம் தாடி எடுத்தான்... இப்ப மீசையெல்லாம் எடுத்து கலக்குறான்... வைரமுத்து 'காதலித்துப் பார்' என்ற தனது கவிதையில் எழுதி இருக்கும்...
காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால்...
இந்த உலகமே
உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்...
என்ற வரிகளே ஞாபகம் வந்தது.
சேரன் சொன்னதை இன்று பிக்பாஸ் உள்ளே எடுத்து வருகிறார்... கவின் என்ன செய்வான்... ? காத்திருப்போம்.
சரி... சரி... பழசை சூடு பண்ணிச் சாப்பிடாதீங்க... ஸ்பெஷல் அனுப்புறேன்னு கொஞ்ச நேரம் காக்க வச்சி, ரெண்டு சுட்ட கோழி அனுப்புனாரு பிக்பாஸ்... ஏழு பேருக்கு ரெண்டு எப்படிப் பத்தும்..? முழுக்கோழியை முழுங்கின தர்ஷன் முன்னால தட்டை எடுத்துக்கிட்டு நின்னான். சாப்பாட்டுல என்ன வெட்கம்..? கிடைக்கும் போது திங்க வேண்டியதுதானே...
எல்லாரும் சாப்பிட்டாங்க...ஷெரின் எனக்கு லெக் மட்டும் போதும்ன்னு வாங்கிட்டு ஒதுங்கிட்டார். வனிதாதான் பங்கு வைத்தார். அவரிடம் சுத்தமாச் சத்தமேயில்லையே... மற்ற நாளெல்லாம் மழைத் தவளை மாதிரி கத்திக்கிட்டே இருந்துச்சு.. நேற்று கண்மாய் தவளை மாதிரி கமுக்கமாய் இருந்துச்சு... நாமினேட் ஆயிட்டோமுல்ல... அடக்கி வாசிப்போம்.
சொல்ல மறந்துட்டேனே.. இதையெல்லாம் சேரன் பாத்துக்கிட்டுத்தான் இருந்தார்.
டிஸ்கி : வேலையின் போது எங்க 'பாஸ்'க்குத் தெரியாம 'பிக்பாஸ்'க்கு எழுதியிருக்கேன். பிழைகள் இருந்தால் பொறுத்துக்கங்க. விரட்டும் பிரச்சினைகளுடன் ஒரு பதிவெழுதுவது என்பது மிகவும் கடினமே. மனநிலையைப் பொறுத்தே பதிவில் எழுத்தும் இருக்கும். எழுத வேண்டாம் என்ற நிலையில்தான் மனசு இருந்தது என்றாலும் என் மனநிலையும் சற்றே மாறுதல் பெறும் என்ற எண்ணத்துடன் எழுதியிருக்கிறேன்...
பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.
முதல் பத்தியிலேயே மொத்த நிகழ்வையும் சொல்லிட்டீங்க...
பதிலளிநீக்குதொடர்ந்து வாசிக்கிறீங்க... கருத்தும் சொல்றீங்க... ரொம்ப நன்றி அண்ணா...
நீக்கு