வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

மனசின் பக்கம் : அபி முதல் அன்னை வரை

காலையில் பள்ளிக்கு பரபரப்பாக கிளம்பும் சூழலிலும், விடுமுறை தினத்தில் இன்னும் சிறிது நேரம் தூங்கலாமே என்று எண்ணும் சூழலிலும் நாள் தவறாமல் ஒரு குழந்தை திருக்குறள் சொல்லி, அதற்கு விளக்கம் கொடுப்பது என்பது சாதாரண விசயம் அல்ல... இதைப் பார்த்து நாம் ஆச்சர்யப்படுவதைவிட தொடர்ந்து காலையில் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் அந்தக் குழந்தையின் மனசுக்குள் ஏற்பட்டிருப்பதற்கு வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும்.

முத்துநிலவன் ஐயாவின் பேத்தியும் சகோதரர் நெருடாவின் செல்ல மகளுமான அபி , திருக்குறள் சொல்ல ஆரம்பித்து நூறு குறள்களைச் சொல்லி முடித்திருக்கிறார். இப்போது தினம் ஒரு சங்கப்பாடலும் அதற்கு விளக்கமும்  கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். இது ஒரு நல்ல பழக்கம் என்பதைவிட அருமையானதொரு பயணம் என்றே சொல்ல வேண்டும்.  தொடரட்டும் இந்தப் பயணம் சிகரம் தொட... வாழ்த்துக்கள் அபி.

தினமும் தவறாது சொல்ல வைத்து அதை வீடியோவும் எடுத்து முகநூல் பக்கத்தில் பகிரும் அவரின் அம்மாவுக்கும் யுடியூப்பில் வலையேற்றம் செய்யும் நெருடாவுக்கும் வாழ்த்துக்கள்.

அபியின் யுடியூப் சேனல் முகவரி : செம்மொழி

அபியின் முகநூல் முகவரி : செம்மொழி

சிறுகதைகள் தளத்தில் பலரின் கதைகள் பகிரப்படுகிறது. அதை எப்போதேனும் வாசிப்பதுண்டு. அந்தத் தளத்தில் கதைகள் பகிர நினைத்ததில்லை... நெருடாதான் கதை அனுப்புங்கள்... அங்கு பகிர்வார்கள் என்று சொன்னார். ஆல்ப்ஸ் தென்றல் நிஷாந்தி அக்கா உள்ளிட்ட பலரை உறவாப் பெறக் காரணமாக இருந்த, சேனைத் தமிழ் உலா என்னும் இணையதளம் நடத்திய சிறுகதைப் போட்டியில் 2015-ம் ஆண்டு முதல் பரிசு பெற்ற விழலுக்கு இறைத்த நீர் என்னும் சிறுகதையை அனுப்பி வைத்தேன். பத்து நாட்களுக்குப் பிறகு இன்று காலையில் உங்கள் கதை பகிரப்பட்டிருக்கிறது என்ற மின்னஞ்சல் வந்தது. சில பல காரணங்களால் வருந்திக் கிடந்த மனசுக்குள் நம் கதை பகிரப்பட்டிருக்கிறதே என்ற மகிழ்ச்சி மழை பெய்தது என்பது உண்மையே. தனபாலன் அண்ணன் சொன்னது போல் எதையும் தூக்கிச் சுமக்காமல் அங்கங்கே இறக்கி வைத்துவிட்டு என் பாதையில் பயணித்துக்  கொண்டுதான் இருக்கிறேன். இன்னும் நிறைய எழுத வேண்டும் என்ற ஆவலுடன்.

நீங்கள் வாசித்த கதைதான் என்றாலும் சிறுகதைகள் தளத்தில் வாசித்து கருத்துக்கூற...


லுவலகத்திலும் வேலையில்லை... எதுவும் எழுதவும் தோணலை... அப்படியே எப்போதேனும் சிறுகதைகள் எழுதினாலும் இங்கு பகிர்வதில்லை என்ற போது பிக்பாஸ் எழுதலாமே என பொழுது போக்காக ஆரம்பித்தது இன்று 51வது பதிவாக வந்துள்ளது. இப்படித் தினமும் பதிவெல்லாம் எழுதியவன் கிடையாது நான்... மீண்டும் மனசு தளம் இயங்கக் காரணமாய் அமைந்தது பிக்பாஸ் எனலாம். 

ஆரம்பத்தில் சாதாரணமாக எழுத ஆரம்பித்து... இடையில் சுவராஸ்யமில்லாத போது அதில் என்ன நிகழ்வோ அதை அப்படியே காமெடியாக எழுதித் தொடர்ந்து கொண்டிருந்தேன். இப்போது கொஞ்சம் விரிவான பார்வையுடன் எழுத முடிகிறது. இதை வாசிப்பதற்கும் விவாதிப்பதற்கும் இங்கும் பிரதிலிபியிலும் முகநூலிலும் சிலர் இருப்பதாலேயே இது சாத்தியப்பட்டுள்ளது. இத்தனை பதிவுகள் தொடர்ந்து எழுதியதில் ஒரு நன்மை... தடைப்பட்டிருந்த எழுத்து கொஞ்சம் சரளமாக வர ஆரம்பித்திருக்கிறது. அதற்கு இதை வாசித்து, எழுதவில்லை என்றால் ஏன் எழுதலை என்று கேட்கும் உறவுகளுக்கு நன்றி.

டல் நலமில்லை... உடம்பில் சில மாற்றங்கள்... இங்கு கொலஸ்ட்ரால், சர்க்கரை வியாதி என்பதெல்லாம் வயது பார்த்து வருவதில்லை... அதேபோல் யூரிக் ஆசிட்டும் நூற்றுக்கு தொன்னூற்றி ஒன்பது பேருக்கு இருக்கும். யூரிக் ஆசிட் இங்கு வந்து இரண்டு வருடத்தில் வந்தது. தீவிர உணவுக் கட்டுப்பாட்டில் இதுவரை யூரிக் ஆசிட் குறைந்த அளவுக்கு மேல் இல்லாமல் செய்து விட்டேன். இப்போது கொலஸ்ட்ராலா சர்க்கரையா என்று தெரியவில்லை... டெஸ்ட்டுக்கு இரத்தமும் யூரினும் கொடுத்திருக்கு. நாளைதான் தெரியும்... எது எப்படி என்றாலும் மாத்திரை எடுத்துக் கொள்ள மாட்டேன். உணவுக் கட்டுப்பாட்டிலும் நடைப்பயிற்சியிலுமே குறைத்துக் கொண்டு வர வேண்டும். பார்க்கலாம்... பிரச்சினைகள் இல்லாத வாழ்வு எப்போது வாய்க்கும்..?

மீபத்தில் எழுதிய கதையில் இருந்து சில வரிகள் உங்கள் பார்வைக்கு... முழுக்கதையும் போட மாட்டோமுல்ல...

"சார்... நிஜம்மா.." கண்கள் விரிய முகுந்தன் கேட்டார்.

"பொய்யா சொல்லப் போறேன்.... அன்னை சாயந்தரம் அப்படியே மரங்களுக்கு இடையே நடந்து போவாங்க.... அதைப் பாக்கக்கூட கூட்டமா அங்க அங்க நிப்பாங்க... அப்ப சிலர்கிட்ட அன்னையே போயிப் பேசுவாங்க... போன தடவை நான் போயிருந்தப்போ அப்படி ஒரு மாலையில என்னைப் பேர் சொல்லிக் கூப்பிட்டுப் பேசினாங்க... தினம்தினம் எத்தனையோ ஆயிரம் பேர் வர்றாங்க... பேரெல்லாம் ஞாபகம் வச்சிப் பேசுறதுன்னா... எம்புட்டு ஞாபக சக்தி வேணும்..."

"ஓ...என்ன ஒரு கொடுப்பினை சார் உங்களுக்கு"

"சின்னப்புள்ளைங்கன்னா அன்னைக்கு ரொம்ப இஷ்டம் சார்... அவங்களோட போனா  அன்னைக்கிட்ட முதல் முறையே ஆசி வாங்கிடலாம்..."

"ம்... ஆமா சார்... உங்க எண்ணமெல்லாம் நிறைவேறியிருக்கா?"

"என்ன சார் இப்படிக் கேக்குறீங்க... நிறைவேறாமையா அன்னையோட அடிமையாயிருப்பேன்... எம் பொண்ணுங்க கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது... மனைவிக்கு பைபாஸ் அன்னையோட அருளால இப்ப நல்லாயிருக்கா... பசங்க வெளிநாட்டுல சம்பாதிக்கிறானுங்க... வேற என்ன சார் வேணும்..?"

"ஆஹா... எனக்கும் அன்னையோட ஆசிரமத்துக்குப் போகணும்ன்னு ஆசை வந்திருச்சு சார்..." என்றார் முகுந்தன்.

இராஜமாணிக்கம் வாயில் வைத்திருந்த சோறு தெரித்து விழுமளவுக்குச் சிரித்தார்.

மனசின் பக்கம் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

10 கருத்துகள்:

  1. பழைய நிலை போல், என்னால் எனது பதிவுகளையே தொடர முடிவதில்லை... காரணம் வியாபார பயணம் + இடது கால் 'பார' பயணத்துடன்...

    உண்மையை சொல்லப் போனால், வியாபாரம் என்னுடைய மனநிலைக்கு ஒத்து வராது... ஆனாலும் எனது நேர்மையை, கேவலம் பணத்திற்காக விட்டுக் கொடுப்பதில்லை குமார்...

    பதிலளிநீக்கு
  2. அபியின் காணொளி பார்க்காத நாளில்லை... பார்க்க தவறுதுமில்லை... அதுவே அந்நாளின் ஒரு உற்சாகமுமே...

    பதிலளிநீக்கு
  3. // பிரச்சினைகள் இல்லாத வாழ்வு எப்போது வாய்க்கும்..? //

    ஹா... ஹா... வாய்த்தால் சலித்து விடும்...

    அப்படிப்பட்ட வாழ்வையும் சென்னையில் கடந்துள்ளேன்...

    பதிலளிநீக்கு
  4. பிக்பாஸ் - அதில் நடக்கும் நிகழ்வுகள் பல இருக்கும்... சில சமயம் பார்க்க முடியாவிட்டாலும்...

    நீங்கள் எழுதும் விமர்சனத்தில், உங்களின் மனம் சார்ந்த சிந்தனையை மட்டும் அதிகமாக கவனிப்பேன்...

    தொடர்க...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  5. செம்மொழி நல்ல அறிமுகம்.

    உடல் நலம் முக்கியமான ஒன்று. கவனமாக இருங்கள் குமார்.

    பதிலளிநீக்கு
  6. அபி...வியந்தேன்..வாழ்த்துக்கள். உடல் நலனை கவனித்துக்கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  7. அபி... யாருடைய பேத்தி? பின்னே தமிழ் இல்லாமல் இருக்குமா? பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

    நாற்பது வயதுக்குமேல் ஆறு மாதத்துக்கு ஒருமுறை எல்லா சோதனைகளும் செய்து பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பார்கள். அட்லீஸ்ட் வருடத்துக்கொருமுறையாவது... உடல்நலனில் கவனம் வையுங்கள்.

    பதிலளிநீக்கு
  8. செம்மொழி வீடியோ பதிவுகள் பார்த்தேன் நல்ல முயற்சி ! அருமை ...வாழ்த்துக்கள் !!!
    https://www.scientificjudgment.com/

    பதிலளிநீக்கு
  9. செம்மொழி பார்க்கிறேன்.
    முத்துநிலவன் அவர்கள் பேத்திக்கு வாழ்த்துக்கள்.

    உடல்நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் நலமாக இருந்தால்தான் ஊரில் மனைவி, குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்க முடியும். உணவு கட்டுப்பாடு, நடைபயிற்சியுடன் மாத்திரையும் எடுத்துக் கொண்டால் விரைவில் நலமாக இருக்கலாம்.
    கதை நன்றாக இருக்கிறது படிக்க ஆவல் முழுகதையை.

    பதிலளிநீக்கு
  10. அபிக்குப் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி