வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

பிக்பாஸ் : வில்லுப்பாட்டு

Related image
பிக்பாஸ் கிராமத்து டாஸ்க்ல பொம்மலாட்டம், தெருக்கூத்து முடிச்சிட்டு இன்னைக்கு வில்லுப்பாட்டு... இந்த டாஸ்க் ஆரம்பிக்கிறதுக்கு முன்னால எப்பவும் போல பாட்டுப் போட்டு எழுப்பி விடும் கடமையுடன் கவின் லாஸ்லியாவின் காதலையும் காட்டும் கடமையைச் செய்யலைன்னா பிக்பாஸ் நிகழ்ச்சியே இல்லை என்பதை நாம் அறிந்துதானே வைத்திருக்கிறோம். 

காலை பள்ளியெழுச்சிக்கு 'ஹேய்... டிய்யா... டிய்யா... டோலு...' பாட்டு... எப்பவும் போல முகனும் லாஸ்லியாவும் எப்பவும் போடும் அதே ஆட்டத்தைப் போட்டார்கள்... வனிதாவும் ஷெரினும் கட்டியணைத்து காலை வணக்கம் சொல்லிக் கொண்டார்கள்... சேரனின் தலை மட்டும் டிய்யா... டிய்யா டோலுன்னு ஆடுச்சு.... பாட்டு முடியும் வரை கவின் எழவில்லை.... நைட் டூட்டி பார்த்திருப்பார் போல.

அப்புறம் எப்பவும் போல கவினும் லாஸ்லியாவும்... 

கொஞ்சநாள் கக்கூஸ்க்குள்ள காதலும் பாட்டும் இல்லாம இருந்துச்சு... இப்ப ஆரம்பிச்சிட்டானுங்க... முதல்நாள் கவின் காதல் கதையைச் சொன்னதே மிகப்பெரிய திட்டத்தின் ஆரம்பமாகத்தான் இருக்கும் என்று தோன்றியது. வெளிய போய் பார்த்துக்கலாம் என்ற எண்ணத்தை லாஸ்லியா மனசுக்குள் எல்லாரும் விதைத்து வைத்திருக்கிறார்கள். வெளியில் போனதும் அவர் மனம் மாறிவிட்டால் என்ன செய்ய என்பதாலேயே பிரச்சினைக்குரிய காதலை மூன்று ஆண்டுகள் தொடர்ந்த கதையைச் சொல்லி வைத்திருந்தார். காதல் பிரச்சினையின்னா எதுக்குய்யா மூணு வருசம் தொடரணும்... அதுவும் பிக்பாஸ்க்கு வரும்வரை தொடர்ந்த காதல் அபி, சாக்சி, லாஸ்லியான்னு மாறிமாறி பயணித்த பின்தான் பிரச்சினைக்குரிய காதலைச் சொல்லத் தோன்றி இருக்கிறது, அந்த காத்லுக்கு முற்றுப்புள்ளி வைத்தேன் என்று சொல்வதெல்லாம்... ம்... பல்லிருக்கவன் பக்கோடா சாப்பிடுறான்.

நான் உங்ககிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன்... இதுக்கு மேல சொல்ல என்ன இருக்கு... இனி இதுல வெளிய போயி பார்த்துக்க என்ன இருக்கு... வெளியில போயி ஒரு வாரத்துக்கு ரெண்டு பேருமே பேட்டி அது இதுன்னு பிஸியா இருப்போம். அப்புறம் நார்மலாயிருவோம்... வெளிய போயி பேசுவோம்ன்னா எதைப் பற்றி... கடந்த காலத்தைப் பற்றியா... இல்லை எதிர்காலத்தைப் பற்றியா... எதிர்காலம் நம் கையில் இல்லை... ஆனாலும் நான் எதிர்காலத்துல எப்படி என்ன எதுன்னு எல்லாம் முடிவு பண்ணித்தான் வச்சிருக்கேன். என்னோட கடந்த காலத்தைப் பற்றிப் பேச ஒன்றுமில்லை... நான் எல்லாம் சொல்லிட்டேன்... உங்க் கடந்த காலம் பற்றிப் பேசணுமா...? என்ன கல்யாணம் ஆயிருச்சா..? குழந்தை இருக்கா...? எனக்கொன்னும் பிரச்சினையில்லை... அப்படி இருந்த என்ன இப்போ..? நாம வாழ்க்கையை நாம எப்படி வாழ்றதுன்னு பேசலாம் என்றார் கவின்.

எல்லாத்துக்கும் வெளிய போயிப் பார்த்துக்கலாம் என்ற ஒற்றை வரியை மட்டுமே திரும்பத் திரும்பத் சொல்லிக் கொண்டிருந்தார் லாஸ்லியா. அவருக்குள் கவினைப் பற்றி எதிர்மறையான எண்ணம் வந்திருக்கும் போல... அதான் பழங்கதையைச் சொன்ன கையுடன் நான் பிள்ளைக்குப் பேர் வச்சி ராமச்சந்திராவுல டாக்டருக்குப் படிக்கிற வரைக்கும் முடிவு பண்ணி வச்சிருக்கேன்... நீ என்னடா இன்னும் கடந்த காலத்துலயே நிக்கிறேன்னு பிராண்ட ஆரம்பிச்சிட்டார் கவின். மேலும் வெளியில் சென்றால் மனமாற்றம் நிகழக்கூடும் என்பதையும் நினைவில் வைத்தே இப்போதே முடிவைச் சொல்லு என்ற நெருக்கடியும் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். கமல் பேசிய பின் இந்த ஒரு வாரத்துக்குள் எப்படியும் லாஸ்லியாவும் நானும் தீவிரமாகக் காதலிக்கிறோம் என்பதை வெளிப்படையாகக் காட்டவும் முனைகிறார் என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

இவர்களின் காதல் கதையை காட்டித்தான் பிக்பாஸையே ஒட்ட வேண்டிய சூழல் இருப்பதால் பிக்பாஸ்க்கு இது தித்திப்பாகத்தான் இருக்கிறது என்றாலும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுன்னு சொல்ற மாதிரி நமக்கு நஞ்சாகத்தான் தெரிகிறது. என்னைப் பார்த்துக் கொள்ள ஆளிருக்கு என்ற எண்ணம் மனசுக்கு ஒரு தைரியத்தைக் கொடுக்கும் என்றாலும் அரவணைக்கிறேன் பேர்வழின்னு பின்னாலயே திரிஞ்சா தைரியத்தைவிட அசௌரியமே அதிகமிருக்கும். பழங்கஞ்சி புளிக்கத்தான் செய்யும் என்பதையும் இவர்கள் உணர்ந்து காதல் உணர்வுடன் மற்றவர்களுடன் இணைந்து பயணித்து வெளியே வந்தால் இவர்களின் காதல் நேற்றுப் போட்ட ரோடு மாதிரி அழகாகப் பயணிக்கும்.. இல்லேன்னா மழை பெய்து குண்டுங்குழியுமான ரோட்டில் பயணிப்பது போல்தான் ஆகும். உணர்வார்களா இருவரும்..?

அண்ணே... பிக்பாஸ் அண்ணே... நல்ல டாஸ்க்கா கொடுங்கண்ணே... விளையாட்டுகளைக் காட்டுங்கண்ணே... இவங்க காதலைப் பார்த்து என்னண்ணே ஆகப்போகுது... ஆரம்பத்துலயே இது மக்களின் பிரதிபலிப்புன்னு சொன்னீங்க... ஊருல உள்ள மக்கள் பூராம் கக்கூஸ்க்குள்ள காதல் வளர்த்துக்கிட்டாத் திரியிறானுங்க... அவனவன் அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லல்பட்டுக்கிட்டு ஒரு நேரச் சோத்துக்கு உழைச்சிக்கிட்டு இருக்காங்கண்ணே... எதிர்பாராததை எதிர்பாருங்கள்ன்னு சொல்லிக்கிட்டு எப்பவும் நாங்க இதுதான் இன்னைக்கு நடந்திருக்கும்ன்னு எதிர்பார்க்கிற மாதிரித்தானே வச்சிருக்கீங்க பிக்பாஸ் அண்ணே... முடியலைன்னே... கவின் லாஸ்லியா பின்னால கண்ணை அலைய விடாம நல்ல டாஸ்க் கொடுத்து இனி வரும் வாரங்களையாவது கொஞ்சம் கலைகட்ட விடுங்கண்ணே... பெரிய மனசு பண்ணுங்கண்ணே...  சிநேகனெல்லாம் நாலுநாள் காருக்குள்ள கிடந்தாரேண்ணே... தண்ணி டாங்கைக் கட்டிக்கிட்டு அஞ்சு நாள் இருந்தாங்களேண்ணே... பொம்மை செஞ்சு ராப்பகலா திருடு போகமா காத்துக்கிட்டுக் கிடந்தாங்களேண்ணே... அப்படி டாஸ்க்கெல்லாம் எதுவுமே கொடுக்கலையேண்ணே ஏண்ணே..?

அப்புறம் எப்பவும் போல ஒரு கலை பற்றிய விளக்கம், பயிற்சி, அணி பிரிந்து செய்தல்ன்னு ஆரம்பிச்சிட்டானுங்க... ஐயா வந்து வில்லுப்பாட்டுப் பாடி அதைப் பற்றி விளக்கினார். அப்புறம் நாலுநாலு பேரா பயிற்சி எடுத்துக்கிட்டாங்க... அடுத்து ஆளுக்கு ஒரு தலைப்பெடுத்து நிகழ்ச்சி நடத்துனாங்க... 

வனிதா, சாண்டி, முகன், லாஸ்லியா அணி விவாகரத்து வாங்குதல் அதனால் குழந்தை அனாதையாதல் என்ற கருத்தை வைத்து நிகழ்ச்சி நடத்துனாங்க.... சேரன், கவின், தர்ஷன், ஷெரின் அணி அளவுக்கு மீறி வாழ ஆசைப்பட்டு கடனால் பாதிக்கப்படுவதைப் வைத்து நிகழ்ச்சி நடத்துனாங்க. வனிதா அணிதான் வெற்றி பெற்றது. 

பெரியவருக்கு பொன்னாடை போர்த்தி, பழங்கள் கொடுத்து மரியாதை செலுத்தினார்கள். வெற்றி பெற்ற அணியினருக்கு மட்டும் மரியாதை கொடுக்கும் விதமாக வாழ்த்துப் பாடல் பாடியபடி தலைப்பாகை கட்டிவிட்டார் பெரியவர். இதை எல்லாருக்கும் செய்திருக்கலாம். ஒரு வழியாக கிராமத்து டாஸ்க் முடிவுக்கு வந்தது.

கிராமத்து வாழ்க்கையை வாழ, அந்தக் கலைகள் அழியாமல் இருக்க இப்படி ஒரு டாஸ்க்குன்னு சொல்லிட்டு அதெல்லாம் ஒண்ணுமே இல்லாமல் கிராமியக் கலைஞர்களை பயிற்சி கொடுக்கச் சொல்லி இவர்களைச் செய்யச் சொல்லி ஒரு வழியாக ஒண்ணுமே இல்லாம ஒரு டாஸ்க்கை ஒப்பேத்தியிருக்கார் பிக்பாஸ்... கிராமத்து மனிதர்கள் எல்லாரும் கசங்காத புதிய ஆடைகள் அணிந்து திரிந்தது நகைச்சுவையிலும் நகைச்சுவை... 

கிராமியக் கலைகளை உடனே கத்துக்கிட்டு அதில் புதிய பரிமாணத்தையும் செய்து விட்டீர்கள் என்று புகழ்ந்ததெல்லாம் காலங்காலமாக அந்தக் கலையைச் சுமந்து கொண்டு வாழ்க்கைப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் மனிதர்களைக் கேவலப்படுத்துவது போலிருந்தது. பத்து நிமிடம் நடிப்பவர்கள் கிட்டத்தட்ட இரவெல்லாம் ஆடியும், பாடியும், நின்று கொண்டே மேளமிசைத்தும் நாதஸ்வரம் வாசித்தும் வாழ்க்கையை நகர்த்தும் கலை அழியக்கூடாதென நினைக்கும் கலைஞர்கள் முன் நிற்கக்கூட தகுதியில்லாதவர்கள்... இவர்கள் அவர்களை விட நன்றாகப் பண்ணினார்கள் என்பதெல்லாம் தேவையில்லாத ஆணியே.

கிராமியக் கலைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன... நடவுப்பாடல், குலவைப்பாடல், தாலாட்டுப் பாடல் என எல்லாமே வாழ்வை இழந்து பல வருடமாகிவிட்டது. எங்க ஊரில் கோவிலில் குலவை போட யோசிக்கும் இளம்பெண்களே இப்போது இருக்கிறார்கள். மைக் செட் காரரிடம் குலவைப்பாட்டு கேசட் கொண்டு வரச் சொல்லி சாமி கும்பிடும் போது போடும் நிலையில்தான் உள்ளது. கரகாட்டம் என்னும் கலையை மிகக் கேவலமாக்கி வைத்திருப்பது அந்தக் கலைஞர்கள்தான்... ஏனென்றால் வயிற்றுப்பாட்டுக்காகவே அதை மாற்றித் தொலைத்திருக்கிறார்கள். எங்கள் தேவகோட்டையில் கரகாட்டம். ஆடல்பாடலுக்கு எல்லாம் தடை இருக்கிறது. கரகாட்டக் கலையை சுத்தமாகத் தொலைத்துவிட்டோம்... அதேபோல கூத்து... வள்ளி திருமணத்தில் வள்ளியும் நாரதருமே இரட்டை அர்த்த வசனம் பேசுகிறார்கள். இப்போது சில புதியவர்கள் நிறைய தர்க்கங்கள் பேசி கூத்துக் கலையை மீட்டெடுத்து வருகிறார்கள். கலைகளை மீட்டெடுப்போம் என்பது இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்தி அதில் அவர்களை விட நீங்க அருமையாகச் செய்கிறீர்கள் என்பதல்ல... அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுத்தாலே போதும்... அக்கலை காலத்துக்கும் உயிர்ப்புடன் இருக்கும்.

அப்புறம் ஓப்போ போனுடன் போட்டோ எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள். வனிதா முன்னரே வெற்றி பெற்று அடுத்த வார தலைவருக்கான போட்டியில் இருப்பதால் இன்னும் ஒருவரைச் சொல்லச் சொன்னார்கள்... எல்லாரும் முகன் என்றார்கள்... சரியான தேர்வுதான்... இந்த வாரம் முகன் டாஸ்க்கில் கலக்கினார். அடுத்து ஒட்டு மொத்தமாக சிறப்பாகச் செயல்பட்டவர் என்றதும் சேரனைச் சொன்னார்கள்... ஆச்சர்யமாக இருந்தது... பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் மழை பெய்திருக்கிறது. சேரனுக்கு காயின் பரிசாகக் கிடைக்க தனது உண்டியலில் போட்டு வைத்திருக்கிறார். சேரன் கையிருப்பு நாலு ஆக உயர்ந்திருக்கிறது.

அடுத்தது எப்பவும் போல் சிறப்பாக விளையாடாதவர்கள் யார் என்ற கேள்வி... இதில்தான் வில்லங்கமே வரும்... நானும் தர்ஷனும் சரியா விளையாடலை... ஆனா என்னைய நான் சொல்ல முடியாது... நீங்க யாராச்சும் என்னைச் சொல்லுங்கன்னு கவின் சொன்னார்... லாஸ்லியாவைச் சொல்லி விடுவார்களோ என்ற பயம் அவருக்கு... தர்ஷன் முழுத் திறமையுடன் விளையாடினார் என்பதை பார்த்தவர்கள் அறிவார்கள். இப்பத்தான் வனிதாக்கா நீ சொல்றதுன்னா தர்ஷனைச் சொல்லு... அதென்ன உன்னைய சொல்ல முடியாதுன்னு சொல்றே மத்தவங்களும் தர்ஷனைச் சொல்லணும்ன்னு நினைக்காதேன்னு வனிதாக்கா கம்பு சுத்த ஆரம்பிச்சது. கவின் என்ன சொன்னார்ன்னு புரிஞ்சிக்கவே இல்லை... நீ என்ன கூமுட்டையான்னு கவின் கேட்டுட்டு பேசாம உக்காந்துட்டார்.

கவின் போறான்னா அங்க நாமளும் போயிடலாம்... கக்கூஸ்ல கூட கவனமாப் பாத்துக்கிறவன் ஜெயிலுக்குள்ள தாங்க மாட்டானான்னு லாஸ்லியாவுக்கு ஒரு எண்ணம்... நானே நல்லா விளையாடலைன்னு சொல்ல, வனிதாவுக்குள்ள இது ரெண்டும் ஜெயிலுக்குள்ள போனா... ஆத்தாடி என்ன நடக்குமோன்னு ஒரு பயம் தோணியிருக்கும் போல லாஸ்லியா நல்லா விளையாண்டா... அப்படின்னு கம்பு சுத்த, சாண்டி நாந்தான் விளையாடலைன்னு சொன்னதும் எல்லாருமே நல்லா விளையாண்டீங்க... மாஸ்டர் நீங்க நல்லா விளையாண்டீங்க... உங்களை எப்படிச் சொல்லமுடியும்ன்னு சேரன் மறுத்தார். ஒரு வழியாக் கவினும் தர்ஷனும் என முடிவானதும் லாஸ்லியா சோகத்தை சோறாய்ச் சாப்பிட்டார்.

நீங்க எல்லாரும் அவங்கவங்க வேலையைப் பார்க்கலாம்ன்னு பிக்பாஸ் சொல்ல, எல்லாரும் எழுந்து போனாலும் லாஸ்லியா மட்டும் சோகத்தோடு இருந்தார். அப்ப வனிதாக்கா ஜெயில்ல போட்டா போராடுவோம்ன்னு சொன்னதும் பிக்பாஸ் பயந்து போயி, அடேய் எல்லாரும் வாங்கடா இங்கன்னு கூப்பிட்டு தெரியாம யாரு சரியா விளையாடலைன்னு கேட்டுட்டேன்... போராட்டமெல்லாம் வேண்டாம்ய்யா... இப்பவே நிகழ்ச்சி சரியாப் போகாம இருக்கு... இதுல போராட்டம்ன்னு போயி உக்காந்துட்டீங்கன்னா என் நிலமை என்னாகுறதுன்னு யாருக்கும் ஜெயில் இல்லைன்னு சொல்லிட்டார். வனிதாக்கா பாத்தீங்களா நானே இங்கே பிக்பாஸ்... என கொக்கரித்தார். லாஸ்லியா சிரித்த சிரிப்பு காஞ்சிபுரத்துல தண்ணிக்குள்ள இருக்க அத்தியோட நித்திரையைக் கலைச்சிருக்கும்.

வில்லுப்பாட்டு டாஸ்க்கில் என்னால் சரியாகச் செய்ய முடியவில்லை என சேரன் தன் அணியினரிடம் மன்னிப்புக் கேட்டார். அவர்கள் ஏண்ணே நீங்க வேற நாங்களும்தான் விளையாடலை என்று சொல்ல, சாண்டி இப்ப அவனுக எதுவும் சொல்லலையே அப்புறம் ஏன் சார் நீங்க மன்னிப்பெல்ல்லாம் கேட்டுக்கிட்டு என்றபோது என்னோட தவறு என்றால் அதற்கு முழுப்பொறுப்பு ஏற்றுக் கொள்வேன்... மன்னிப்புக் கேட்பேன் அது என்னோட குணம் என்றார் சேரன். நல்ல குணம்தான்... மன்னிப்புக் கேட்பதால் கெட்டுப் போவதில்லை.

வில்லுப்பாட்டு பயிற்சியின் போது தர்ஷன் பின்னால ஷெரின் சுத்துறான்னு சாண்டி பாடியதற்கு ஷெரின் தனிப்பட்ட முறையில் கோபித்துக் கொண்டார்... இப்படிப் பேசுவதை நான் விரும்பவில்லை... அவன் பின்னாடி நான் எங்க போனேன் என முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்தவரை அணைத்து அப்படியே கக்கூஸூக்குள் கொண்டு போய் மாற்ற முயற்சித்தார் சாண்டி.  கட்டியணைத்தல் எல்லாம் இங்கே சாதாரணம்... ஆம் இவர்கள் நடிகர்கள்.

பாவாடை தாவணியும் சேலையும் எப்போதும் அழகுதான்... லாஸ்லியாவை விட ஷெரின் இன்று தேவதையாகத் தெரிந்தார்.

வில்லுப்பாட்டு பற்றி பேச ஆரம்பிக்கும் போது வனிதா மேக்கப் பண்ணிக் கொண்டிருந்தார். அவர்கள் அது குறித்து விளக்கமெல்லாம் சொல்லிக் கொடுத்து வந்தனம் முடிக்கும் போதே கட்சிக் கூட்டத்துக்கு வந்த மந்திரி மாதிரி மெல்ல வந்து சேர்ந்தார். இதைப் பற்றி ஒரு பய கேள்வி கேட்கலை... அக்கா சரியாக விளையாடவில்லை என்று சொல்லியிருந்தால் என்னாகுங்கிற முன்முடிவோட பயலுக பேசாமல் இருந்துட்டாங்க.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

2 கருத்துகள்:

  1. பெண்கள் தான் இந்த இசையைக் கண்டுபிடித்தவர்கள் உட்பட காளீஸ்வரன் அவர்கள், இதன் வில்லுப்பாட்டு உருவான பின்னணியையும் சிறிது கூறியது அருமை...

    எல்லாவற்றையும், எல்லாரையும் பாராட்டியது காலத்தின் கோலம்...

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி