காற்றுவெளியில் தொடரும் வாய்ப்பாய் இந்த மாதம் உமை மறு பாகம் சிறுகதை. இக்கதை 'திருநங்கைகள்' குறித்தான சிறுகதைப் போட்டிக்கு எழுதியது. அங்கு தெரிவாகவில்லை என்ற நிலையில் காற்றுவெளிக்கு அனுப்பினேன். எப்பவும் போல் காற்றுவெளியில் இடம் பிடித்தது. பெரிய கதை... காற்றுவெளியில் எட்டுப் பக்கங்கள்... அதிகப் பக்கங்கள் என்றாலும் தொடரும் ஆசிரியர் குழுவின் அன்புக்கு நன்றி.
**************
உமை மறு பாகம்
'புது மேனேஜர் வர்றாராம்...'
இந்த வார்த்தை ஆபீஸ் முழுவதும் ஒரு வாரமாகவே வலம் வந்து கொண்டிருந்தது.
'யார் அந்த புது மேனேஜர்..?' என்பதற்கான விடை யாருக்கும் தெரியவில்லை.
அடுத்த வாரத்தில் ஜாயின் பண்ணுவார் என்ற செய்தி மட்டுமே மேலிடத்தில் இருந்து வந்திருந்தது.
'யார் அவர்...?'
'ஆணா... பெண்ணா...?'
'எப்படி இருப்பார்..?'
'மற்றவர்களிடம் எப்படி நடந்து
கொள்வார்...?' என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது.
மதிய லஞ்ச் பிரேக்கில் "வரப்போற புது மேனேஜர் யாரு... எங்கேயிருந்து வர்றாருன்னு
தெரிஞ்சிக்க முடியலையே... ஒரே சஸ்பென்சா இருக்கு..." மெல்லப் பேச்சை ஆரம்பித்தான்
பிரேம் மசாலா உருளைக்கிழங்கை மென்றபடி.
"ஆமா... ஆல் இண்டியா ரேடியோவான
நம்ம பியூன் செல்வத்துக்குக்கூட தெரியலைங்கிறதுதான் ரொம்ப ஆச்சர்யமா இருக்கு..."
என்றாள் தேவகி தன் முட்டைக் கண்களை விரித்தபடி.
"ம்... அந்தாளு எப்படியும்
தெரிஞ்சிக்கிட்டு வந்து கதையளப்பாரு... இந்த முறை அவருக்கே தெரியலைங்கிறதுதான் அதிசயமா
இருக்கு..." என்றான் பிரேம்.
"எது எப்படியோ... இப்ப ஆக்டிங்
மேனஜரா இருக்க ரமணி அம்மாவோட தொந்தரவுல இருந்து விடுதலை கிடைக்கப் போகுதுங்கிறதே நமக்கெல்லாம்
சந்தோஷம்தானே..." மெல்லச் சொன்னான் லாரன்ஸ்.
"ஆமா... ஆமா... இந்த ரெண்டு
மாசமா அந்தப் பொம்பளை என்ன ஆட்டம் போடுது... நல்லவேளை அதுக்கு மேனேஜர்ன்னு புரமோசன்
கொடுத்து இங்கயே இருந்து நம்ம தாலிய அறுக்காம விட்டானுங்களே..." சிரித்தாள் தேவகி.
"அதுதான் மேனேஜருன்னு சொல்லியிருந்தா
நானெல்லாம் ரிஜைன் பண்ணிட்டு போயிருப்பேன்... இதுக்கிட்ட வேலை பாக்குறதுக்கு... மாமியாக்கிட்ட
வேலை பார்த்துடலாம்" கன்னத்தில் குழி விழச் சிரித்தாள் மல்லிகா.
"இப்ப மேனஜரா வேற மாநிலத்தைச்
சேர்ந்தவங்களைத்தான் நம்மளோட ரெண்டு மூணு பிராஞ்சுல
போட்டிருக்காங்க... சோ நம்ம பிராஞ்சுக்கும் வேற மாநிலத்துக்காரன் எவனாச்சும்தான் வருவான்னு
தோணுது..." என்றார் அனுபவ அக்கவுண்ட்டன்ட் அருணாச்சலம் செட்டியார்.
"அப்படியும் இருக்கலாம்... இங்கல்லாம் மொழி தெரியாத ஆளைக் கொண்டாந்து போட்டு
என்னத்தைப் பண்றது..."அலுத்துக் கொண்டான் பிரேம்.
"இங்கன்னு இல்ல மச்சான்...
இப்ப எல்லா சென்ட்ரல் கவர்மெண்ட் ஆபீஸ்லயும் வட நாட்டானுங்களை கொண்டாந்து போட்டு நிரப்புறானுங்க...
இது எதுக்குன்னு தெரியல... ஒருவேளை தமிழனுக்கு வேலை தெரியாதுன்னு முடிவு பண்ணிட்டானுங்களோ
என்னவோ... நேத்து கனரா பேங்க் போனேன்... பழைய
ஆளுங்க எல்லாரையும் மாத்திட்டாய்ங்க... மேனேஜரையும் சேர்த்து... இப்ப வந்திருக்கவனுங்க
பேசுற ஹிந்தி நம்மாளுகளுக்குப் புரியலை.... நம்மாளுக பேசுற தமிழைக் கேட்டு அவன் ஹியா...
ஹியான்னு கத்துறான்... முகத்துல சிரிப்பே இல்லாம கடுகடுன்னு பேசுறானுங்க... அதுலயும்
அங்க ரெண்டு குட்டிக இருக்காளுக பாரு... என்ன மண்டையாப் பேசுறாளுகங்கிறே... அங்க வர்றது
பூராம் நூறு நாள் வேலைத்திட்டத்துல வேலை பாத்துட்டு..."
எல்லாரும் சிரித்தார்கள்.
"சரி... சரி... சிரிக்காதீங்க...
எங்க வேலை பாக்குறாங்க... படுத்து ஊர்க்கதைதான் பேசுறாங்க... என்ன இருந்தாலும் படிப்பறிவில்லாத
வயசானவங்கதானே அவங்க... இவளுங்க நுனி நாக்கு இங்கிலீசுல பேசினா அவங்களுக்கு என்ன புரியும்
... புரியாம முழிக்கிறவங்ககிட்ட முகத்தைத் தூக்கி வச்சிக்கிட்டு திட்டுறாளுங்க... வேலை
பாக்காம பக்கத்துல இருக்கவனுக்கிட்ட சிரிச்சிப் பேசிக்கிட்டு இருக்காளுக... நான் ஏம்மா
எம்புட்டு நேரம் நிக்கிறதுன்னு கேட்டதுக்கு எங்கிட்ட ஏறுனா... நேரா மேனேஜருக்கிட்ட
பொயிட்டேன்... அந்தாளு வந்து சாருக்கு முடிச்சிக் கொடும்மான்னதும் எங்கிட்ட சார்...
சார்ன்னு சிரிச்சிப் பேசுறா... வரும்போது அழகா இருக்கேன்னு ஆட்டம் போடாத... காலம் இந்தா
நிக்கிற ஆயா மாறி உன்னையுந்தான் மாத்தும்... இப்படியே வச்சிருக்காதுன்னு சொல்லிட்டு
இன்னொன்னும் சேர்த்து சொல்லிட்டு வந்தேன்" என்றான் லாரன்ஸ்.
"என்ன சொன்னே...?" ஆவலாக் கேட்டான் அவனைப் பற்றித் தெரிந்த பிரேம்.
"வேணாம் விடு... சக தோழிகள்
இருக்காங்க..." என மழுப்பினான்.
"மூதேவி நீ என்ன சொல்லியிருப்பேன்னு
தெரியும்... இனி அங்க போனியன்னா கொன்னுடுவாளுங்க...."
"சரி... சரி... நம்ம புது மேனேஜரை வரவேற்க ரெடியா இருங்க..." சிரித்தபடி சொன்னாள் தேவகி.
"சரி... சரி... நம்ம புது மேனேஜரை வரவேற்க ரெடியா இருங்க..." சிரித்தபடி சொன்னாள் தேவகி.
"ஆமா அதுவும் ஹியா... ஹியாவாத்தான்
இருக்கும்... என்ன பான்பராக் கோஷ்டியில இருந்து வராம இருந்தாச் சரி." என்றான்
ப்ரேம்.
திங்கள் கிழமை காலை...
வர இருக்கும் புது மேனேஜரை வரவேற்க்க, மாலை, பொன்னாடையுடன் அலுவலகமே காத்திருந்தது.
ரமணி மானேஜர் அறையில் இருந்த தன்னுடைய பொருட்களை சனிக்கிழமையே தனது பழைய இடத்தில் வைத்துவிட்டு அறையைச் சுத்தம்
பண்ண செல்வத்திடம் சொல்லியிருந்தாள். அறை சுத்தமாக, பளிச்சென்று இருந்தது.
ஆனாலும் தனக்கு புரமோசன் கொடுக்கவில்லை என்ற வருத்தமும் கோபமும் அவளுக்குள் இருந்ததால்
என்னதான் வலியச் சிரித்தாலும் அவளின் முகம் இருண்டுதான் இருந்தது.
வாசலில் வந்து நின்ற வாடகைக் காரில் இருந்து இறங்கி வந்தவளைப் பார்த்ததும் ஆபீஸே
ஆச்சர்யத்தில் மூழ்கியது.
ஆம்... அமலாபால் போல் ஒருத்தி சிவப்புச் சேலையில் தேவதையாய் வந்தாள்.
"ஹாய்... ஐ'யாம் நியூ மேனேஜர் ஆப் திஸ் பிராஞ்ச்" நுனி நாக்கு ஆங்கிலம்
கொஞ்சியது. மூக்குத்தி தெலுங்குக்காரி போலக் காட்டியது.
மாலையைக் கழுத்தில் போட்டுவிட்டு, ரமணி கொடுத்த பொன்னாடையை வாங்கி
கையில் வைத்துக் கொண்டு 'ரமணிதானே' எனக் கட்டிக் கொண்டாள்.
"என்னடா இது போர்ட்டி பிளஸ்
ஆளு ஒண்ணு வரும்ன்னு பார்த்தா பார்ட்டி பிரஷ்சா வந்திருக்கு" லாரன்ஸ் காதில்
கிசுகிசுத்தான் ப்ரேம்.
"ஆமா மச்சான்.. எதாச்சும் பேரல்
வரும்ன்னு பார்த்தா 36-24-36ன்னு ஊறல் வந்து நிக்குதுடா..."
"ம்... செம பிகருடா... இதுக்குக்
கீழ நாம எப்படிடா வேலை பாக்குறது.... வேலை பார்க்க மனசே வராதேடா..."
"கீழ வேலை பாக்கலைன்னா மேல
பாரு...." டபுள் மீனிங்கில் சொன்னான் லாரன்ஸ்.
"மூதேவி... எப்பவும் அதே நினைப்புலயே
இரு..."
"இனி கண்ணெல்லாம் அங்கிட்டுத்தான்
மேயும்... எங்க பக்கம் தவறிக்கூட வராதே..." அவனுங்களுக்கு மட்டும் கேட்கும்படி
சொன்னாள் தேவகி.
"உலக அழகி வந்த பிறகு உள்ளூர்க்
கிழவிக்கு என்ன வேலை..." எனச் சிரித்த லாரன்ஸ். 'வாடி' என முறைத்தாள் தேவகி.
"டியர் ப்ரண்ட்ஸ்... ஐ ஆம்
சஞ்சனா... ப்ரம் மலப்புரம்... கேரளா..." என ஆங்கிலத்தில் ஆரம்பித்து சில நிமிடம்
பேசியவள், "எனக்குத் தமிழ் கொறச்சி அறியாம்...
எங்கிட்ட மேனஜர்ங்கிற டிஸ்டண்ட்ஸ் எல்லாம் வேண்டாம்... பிரண்ட்லியா இருக்கலாம்..."
என்றாள் சிரித்தபடி.
அவள் அறைக்குள் சென்று அமர்ந்ததும் பிரேமைப் பார்த்து "மூக்குத்தி தெலுங்கோன்னு
நினைக்க வச்சா... சேச்சியாம்... அப்புறம் என்ன மாப்ள... இனி உங்காட்டுலதான் செமமழை..."
எனச் சிரித்தான் லாரன்ஸ்.
"ஏன் நீ பாக்க மாட்டியாக்கும்..?" உள்ளூர் கிழவின்னு சொன்ன கடுப்பில் கேட்டாள் தேவகி.
"பலாப்பழம் வெளியில இருந்தா
ஈ மொய்க்காம இருக்குமா...? ஆனாலும் அடிக்கடி அந்த ரூமுக்குப்
போறவன் மாப்ளைதானே... தேவி தரிசனம் அடிக்கடி நிகழுமில்ல..."
"அடப் போடா..."
நாட்கள் நகர... நகர... ப்ரேம் நெஞ்சுக்குள் சஞ்சனாவின் உருவம் பிரேம் போட்டு மாட்டப்பட்டுவிட்டது.
அவளும் இவனிடம் ரொம்பப் பிரியாகவும் பிரியமாகவும் பேச ஆரம்பித்தாள்... அவளின் கொஞ்சிப்
பேசும் மலையாளத் தமிழ் அவனுக்கு ரொம்பப் பிடித்திருந்தது.
ஹோட்டலில் தங்கியிருந்தவளுக்கு வீடு பிடித்துக் கொடுத்தவன் ப்ரேம்தான்... அப்பவே
லாரன்ஸ் அப்புறம் என்ன குடியும் குடித்தனமுமாய் இருக்க வேண்டியதுதானேன்னு கேலி பண்ணினான்.
மற்றவர்கள் இருவரையும் இணைத்துப் பேசுவதை சந்தோஷமாக ரசிக்க ஆரம்பித்தான்... சஞ்சனாவிடம்
தன் காதலைச் சொல்வதற்கான நாளுக்குக் காத்திருந்தான்.
கையெழுத்து வாங்க அவளின் அறைக்குள் சென்றவன் "ஈவினிங் பிரியா..." என்றான்.
"ம்... ஏன்...?"
"உங்ககிட்ட கொஞ்சம் பர்சனலாப்
பேசணும்... எதாவது ஒரு காபி ஷாப் போயிட்டு... மாக்ஸிமம் ஹால்ப் ஆன் ஹவர்தான்... ரொம்ப
லேட் ஆக்க மாட்டேன்.."
ஒரு மாதிரி சிரித்தவள் "ஓகே... நோ பிராப்ளம்..." என்றாள்.
அந்த காபி ஷாப்பில் ஆட்களே
இல்லை... காலியாக இருந்தது... ஒரு ஓரமாக இருவரும் அமர்ந்தனர்... சேர நாட்டுப் பெண்...
அதுவும் காட்டன் சேலையில்... காலையில் எப்படி அவளைப் பார்த்தானோ.... அப்படியே... அதே
அழகில் இருந்தாள்.
அவளையே ரசித்தான்....
முகம் பார்த்து ரசித்தவன் பார்வையை மெல்ல இறக்கினான்...
மலையாளத்துக்கே உரிய வனப்பு அவனைத் திக்குமுக்காட வைத்தது.
"அலோ... பெர்சனலா சம்சாரிக்கணும்ன்னு
பறைஞ்சிட்டு நீங்கள் என்னை நோக்கிக்கிட்டே இருக்கு... இதுக்கா இவட வான்னு விளிச்சது..."
என்ற அவளின் குரலால் மீண்டும் சுயத்துக்கு வந்தான்.
"எப்படிச் சொல்றதுன்னு தெரியலை...
பட்... உங்க மேல... எனக்கு ரொம்பப் பிரியம்... ஐ திங்க்... ஜ ஆம் பால் இன் லவ் வித்
யூ..." மெல்லச் சொன்னான்.
உதட்டில் புன் சிரிப்புடன் "ஆமா... என்னைப் பற்றி சாருக்கு என்ன அறியும்..."
"உங்களுக்கு மேரேஜ் ஆகலைன்னு
தெரியும்... அது மட்டும் போதுமே.... வேறென்ன தெரியணும்..."
"லவ் பண்ண அது மட்டும் மதியோ..? பாஸ்ட் லைப்பெல்லாம் அறிய வேண்டாமா..?"
"எனக்குப் பிரசண்ட் மட்டும்
போதும்... பாஸ்ட்டெல்லாம் வேண்டாம்..."
"ப்ரேம்... எனக்குன்னு ஒரு
பாஸ்ட் இருக்கு... அது ரொம்பப் பயங்கரமானது... பரிதாபமானது... அதை நீங்க தெரிஞ்சிக்கணும்...
இதுவரைக்கும் நிறையப் பேருக்கிட்ட சொல்லிட்டேன்... அதுல ஒரு ஆளா நீங்க சேரப்போறீங்க...
தட்ஸ் ஆல்... நான் என்னோட பாஸ்ட்டைச் சொல்ல வெட்கப்பட்டதுமில்லை... வேதனைப்பட்டதுமில்லை..."
மலையாளம் கலந்த தமிழில் பேசுவதைவிட ஆங்கிலம் சுலபமாய் வந்தது அவளுக்கு.
அவளே தொடர்ந்தாள்... "எங்க வீட்ல நான் மூணாவதாப் பிறந்தேன்... எல்லார் மாதிரித்தான்
நானும் வளர்ந்தேன்... பதின்ம வயசுல எனக்குள்ள மாற்றம்... ஆண் பிள்ளையான நான் எனக்குள்
பெண்மையை உணர்ந்தேன்.... அதை ரசித்தேன்... அப்படியே வாழத் துடித்தேன்... வெளியில் சொல்ல
முடியாமல் தவித்தேன்... தகித்தேன்... வீட்ல ஆளில்லாத நேரத்துல அக்காவோட பிரா, பாவாடை என எல்லாம் எடுத்துப் போட்டுப்பேன்... கண்ணுக்கு மை போடுவேன்...
வளையல், தலைக்குப் பூன்னு ஒரு பொண்ணா
வாழ்ந்து மகிழ்வேன்."
ப்ரேம் சிலையாய் இருந்தான்.
"எத்தனை நாள் மறைக்க முடியும்..? ஒரு நாள் அக்கா பார்த்துட்டா... வீட்டில் பயங்கர பிரச்சினை...
அப்பா என்னைய அடி அடின்னு அடிக்கிறாரு... என்ன செய்ய எனக்குள்ள ஆண்மை துளி கூட இல்லை
எதிர்த்து நிக்க... பொட்டச்சியா சுருண்டு படுத்துக்கிட்டு அழுதேன்... அழுதேன்... அழுதுக்கிட்டே
இருந்தேன்..." கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
"எனக்குள்ள வளர்ச்சி மாற்றம்
இருக்குங்கிறதை அப்பத்தான் அம்மாவே பார்த்தாள். என்னோட மார்பக வளர்ச்சி அவளுக்கு அதிர்ச்சியைக்
கொடுத்துச்சு... ஆளாளுக்கு இவன் இப்படி மொட்டச்சியா மாறிட்டானேன்னு புலம்புனாங்க...
ஏதோ என்னால எங்க வீட்டுக்கே கேவலம் வந்துட்ட மாதிரி பேசினாங்க... என்னால அவங்கள்லாம்
இனி வெளிய தலைகாட்ட முடியாது... எல்லாரும் செத்துடலாம்ன்னு பேசினாங்க... என்னால அவங்க
ஏன் சாகணும்... எனக்கு வாழணும்... இந்த சமூகத்துல ஜெயிச்சிக் காட்டணும்ன்னு வெறி வீட்டை
விட்டு வெளியில வந்துட்டேன்..."
"ம்... வெளிய வந்து எப்படி...
இப்படி... " ப்ரேம் குழப்பமாய்க் கேட்டான்.
"ம்... வெளியில வந்து எங்க
போறதுன்னு தெரியாம தவிச்சி நின்னேன்... முதல்ல தங்க இடம் வேணுமே... நேர எனக்குத் தெரிஞ்ச
அக்காக்கிட்டப் போயி நடந்ததைச் சொல்லி அழுதேன்... அவங்க திருநங்கைதான்னாலும் படிச்சிட்டு
ஒரு அமைப்பை நடத்திக்கிட்டு இருக்காங்க... பாலியல் தொழில்ல மாட்டிக்கிட்ட திருநங்கைகளுக்கு
உதவுறவங்க... என்னை... என்னோட நிலையைப் புரிஞ்சிக்கிட்டாங்க... எனக்கு முதல்ல பெண்ணாய்
மாறணும்... என்னை ஆணாய் அடையாளம் காட்டும் அந்த உறுப்பை அறுத்து எரியணும்ன்னு வெறி
மனசுக்குள்ள... அவங்கதான் பொறுமையா இரு... முதல்ல படி... மத்ததுக்கெல்லாம் காலம் வரும்ன்னு
சொல்லி என்னைப் படிப்பைத் தொடர வச்சாங்க..."
ப்ரேம் காபியைக் குடிக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். சஞ்சனா காபியைக்
குடித்தபடி, "காபியைக் குடிங்க..."
என்றாள்.
"அப்புறம்..?" என்றான் காபியைக் குடித்தபடி.
"படிச்சேன்... இப்பத்தான் எப்படி
வேணுமின்னாலும் மாற ஆபரேசன் இருக்கே... அக்காதான் அவங்க அமைப்பு மூலமா எனக்கு ஆபரேசனுக்கு
ஏற்பாடு பண்ணுனாங்க... நிறைய செலவு... ஆபரேசனுக்காக பலர் பிச்சை எடுத்திருக்காங்க...
ஆனா எனக்கு அக்கா முழுச் செலவையும் பண்ணினாங்க... ஆபரேசன்ல முழுப் பெண்ணாய் மாறி நின்னேன்...
எனக்கு அன்னைக்குத்தான் மகிழ்ச்சி மனசுக்குள்ள... ரொம்பச் சந்தோஷமாய் உணர்ந்தேன்... இத்தனை நாள் அடைபட்டுக் கிடந்த கூண்டுக்கிளி அது
போக்குல சுதந்திரமாப் பறக்கிற மாதிரி உணர்ந்தேன்..."
"ம்..."
"என்னோட பெர்த் சர்ட்டிபிகேட்ல
இருந்து எல்லாத்தையும் அக்கா மாத்த ஏற்பாடு பண்ணினாங்க... அதனால் பெண் பேர் வைக்கணுமே
என்ன பேர் வைக்கலாம்ன்னு யோசிச்சாங்க... அவங்க லிவிங் ஸ்மைல் வித்யா மேடம் மாதிரி வித்தியாசமான
பேரா இருக்கணும்ன்னு யோசிச்சாங்க... அப்ப நாந்தான் அவங்க பேரையே வச்சிக்கிறேன்னு சொல்லிட்டேன்...
ஆமா அவங்க பேரும் சஞ்சனாதான்... என்னோட சர்டிபிகேட்ஸை மாத்த நிறைய சிரமப்பட்டோம்...
எத்தனை கிண்டல், கேலி தெரியுமா...?"
பிரேம் உறைந்து போயிருந்தான்.
"இதெல்லாம் என்னோட படிப்பு
முடிஞ்சதும் நடந்தது. அப்புறம் மேற்படிப்புக்கு யுனிவர்சிட்டி போனேன்... பசங்களோட அமர்ந்து
படிச்ச நான் அங்க பொண்ணுங்களோட அமர்ந்தேன். நான் மூன்றாம் பாலினம்ன்னு யாருக்குமே தெரியாது...
எல்லாருமே என்னைப் பெண்ணாத்தான் நினைச்சாங்க... என்னோட குரல் கரகரப்பா இல்லாம பெண்மை
கலந்திருந்ததுதான் முக்கியக் காரணம்... அப்பவும் என்னோட அழகுல நிறையப் பேர் லவ் பண்றேன்னு
முன்னால வந்தாங்க... விபரம் சொன்னதும் டேய் அவ அலியாமுடான்னு சொல்லிட்டுப் போயிடுவாங்க...
ஆனா காதல் வேண்டாங்கிறதுக்காகத்தான் நான் அப்படிச் சொல்றதா என் காதுபடவே பேசிக்குவாங்க...
சிரிச்சிக்குவேன்... நான் இன்னைக்கு வரை திருநங்கைதான்.... என்னோட பாலினம் அப்படித்தான்
பதியப்பட்டிருக்கு..."
ப்ரேம் பதில் பேசாது அமர்ந்திருந்தான்... கையிலிருந்த காபி மேல் ஆடை படர்ந்திருந்தது.
"நாம இந்தச் சமூகத்துல ஜெயிச்சிக்
காட்டணுங்கிற வெறியில படிச்சேன்... எக்ஸாம் எழுதினேன்... டிஸ்டிங்சன்ல பாஸானேன்...
எக்ஸாம் எழுதி, இன்டர்வியூ அட்டண்ட் பண்ணி, திருநங்கைக்கு இவ்வளவு பெரிய போஸ்டைக் கொடுக்கிறதான்னு ஒரு சில
அதிகாரிகளால எதிர்ப்பு... எல்லாம் சமாளிச்சி கேரளாவுல வேலை பார்த்தேன்... அப்புறம்
இங்க மாத்திட்டாங்க... ம்... இதுதான் என் கதை... இப்பவும் நீங்க பால் இன் லவ் வித்
மீயா..?" சிரித்தாள்.
"பாஸ்ட்டை தெரிஞ்சிக்காம இருக்கிறதுதான்
நல்லதுன்னு சொன்னேன்... நீங்க கேக்கலை... பட் இன்னைக்கு திருநங்கைகள் காவல்துறை உள்பட
எல்லா வேலையிலும் இருக்காங்க... குறிப்பா அவங்ககிட்டதான் மனிதாபிமானம் நிறைஞ்சிருக்கு...
அவங்களை அலியின்னும் ஒம்போதுன்னும்... சாரி... சொல்றது இப்ப குறைஞ்சிருச்சு... அதேபோல
அவசர பாலியல் தேவைகளைப் பூர்த்தி செஞ்சிக்கிறதுக்காக காசு கொடுத்து மறைவான இடத்துக்கு
அழைச்சிக்கிட்டுப் போறதும்... பஸ்ல, வீதிகள்ல கைதட்டி பிச்சை எடுக்குறதும்...
மார்பைத் திறந்து காட்டி பணம் பறிக்கிறதும் இப்ப கொஞ்சம் கொஞ்சமாக் குறைஞ்சிருக்குங்கிறது
நல்ல விஷயம்தான்... பெரும்பாலானோர் படிச்சி முன்னேறி வர்றது நம்பிக்கையைக் கொடுக்குது...
நல்ல விஷயமாத் தெரியுது..." என்றான் ப்ரேம்.
"ம்... நான் முழுமையான பெண்தான்
இப்போது... என்னால செக்ஸைக் கொடுக்க முடியும்... பட் ஒரு குழந்தைக்குத் தாயாக முடியாது...
நான் கேட்டதுக்கு உங்ககிட்ட இருந்து பதில் வரலை... சோ... நீங்க என்னை இனி லவ் பண்ண
மாட்டீங்கன்னு நினைக்கிறேன்..." என்று சிரித்தவள் "எப்பவும் போல பிரண்ட்டாவே
இருப்போம்... நான் திருநங்கைன்னு சொல்லிக்க வெட்கப்பட்டதில்லை... பட் ஆபீஸ்ல யாருக்கும்
தெரிய வேண்டாம்... அவங்களோட பார்வை வேறு மாதிரி இருக்கும்... ஏன்னா என்னதான் காவல்துறை...
நீதித்துறை... சினிமான்னு நாங்க இப்ப கால் வச்சிருந்தாலும் எங்க மீதான சமூகப் பார்வை
இன்னும் விகாரமாத்தான் இருக்கு... சோ இங்க சொன்னது ஆபீஸ்ல வேண்டாம்... ப்ளீஸ்..."
"ம்..." மூச்சை இழுத்து
விட்டான்... அதில் காதல் வெளியேறிச் செல்வதை சஞ்சனா உணர்ந்து சிரித்துக் கொண்டாள்.
"சரி.... வாங்க போலாம்... இப்பத்
தொடச்சிட்டுப் போட்ட டிஸ்யூ பேப்பரா நினைச்சிக்கங்க என்னோட கதையை... அதை தூக்கிச் சுமக்காதீங்க....
என்னோட கனவு பெரிசு... அக்காவை என் பக்கத்துல
வச்சிக்கணும்... அவங்களைப் போல நானும் சமூக சேவைகள் செய்யணும்... குறிப்பா நான் இன்னும்
சிறகை விரிக்கணும்... எல்லையில்லா வானம் நோக்கிப் பறக்கணும்... எனக்குச் சிறகா இருக்கப்
போற துணைதான் வேணுமேயொழிய திருநங்கைதானேன்னு
சிறகொடிக்கிற உறவுகள் எல்லாம் இனித் தேவையில்லை..." என்றபடி எழுந்தாள்.
ப்ரேம் என்ன பேசுவது என்று தெரியாமல் "கொஞ்ச நாள் அவகாசம் வேணும்... என்னோட
முடிவு என்னன்னு நான் யோசிக்க..." என்றபடி அவள் பின்னே நடந்தான்.
-'பரிவை' சே.குமார்.
இது ஒரு பகுதியா...?
பதிலளிநீக்குஇல்லை அண்ணா.. இதுதான் கதையின் முடிவு....
நீக்குஇதை இன்னும் விரிவாய் எழுதலாம் என்ற எண்ணமிருக்கிறது.
அவ சுதந்திரமா இருக்க நினைக்கிறா... இவனோ திருநங்கை என்றதும் யோசிக்கிறான் அவ்வளவே.
நல்ல கதை குமார். பாராட்டுகள்.
பதிலளிநீக்குகாற்றுவெளியில் வெளியீடு - வாழ்த்துகள்.
திருநங்கைகள் நிலையில் இன்னும் நிறைய மாற்றங்கள் வேண்டும் - அவர்கள் மீதான பொதுப் பார்வை மாற வேண்டும். இனிமேல் நல்லதாக நடக்கும் என்று நம்புவோம்.
ரொம்ப நன்றி அண்ணா
நீக்குகுமார் மிக அருமையான கதை. வாழ்த்துகள்!
பதிலளிநீக்குதிருநங்கைகள் குறித்த பார்வை மாற வேண்டும். இப்போது குறைந்திருக்கிறதுதான் என்றாலும் சமூகத்தின் பார்வை மாறினால் நல்லது நடக்கும்.
முடிவு இப்படி அமைத்தது நன்றாக இருக்கிறது குமார்.
கீதா
ரொம்ப நன்றி அக்கா
நீக்குவித்தியாசமான களத்தில் ஒரு கதை. பிரேம் சரி என்று சொல்லி இருந்தால் செயற்கையாக இருந்திருக்கும்.
பதிலளிநீக்குரொம்ப நன்றி அண்ணா
நீக்குவழக்கமான முடிவாக இருக்கிறதே! இன்னும் வித்தியாசமாகக் கொண்டுபோனால் சுவையாக இருக்குமே! சும்மா ஒரு யோசனை - அவ்வளவே!
பதிலளிநீக்குகண்டிப்பாக ஐயா...
நீக்குஅவனோ அல்லது அவளோ ஏற்றுக்கொண்டிருந்தால் சாதாரண கதை ஆகிவிடும் என்பதாலேயே அவள் பறந்து திரிய நினைப்பதாகவும்... அவன் சமூகத்தை நினைத்து யோசிப்பதாகவும்... இவர்கள் சேர்ந்தார்களா என்பதை நம் யூகத்துக்குமாய் விட்டேன். இன்னும் விரிவாய் எழுத வேண்டும் அய்யா.