புதன், 7 ஆகஸ்ட், 2019

பிக்பாஸ் : 'நடிப்பரசி' மது

Image result for bigg boss-3 madhu images
ன்னடா நேற்றுத்தானே சரவணனை வண்டியில ஏத்தி அனுப்புனானுங்க... இங்க உக்காந்திருக்காரேங்கிற யோசனையோட பார்த்தா... அவர் வெளியேற்றப்படும் முன் நிகழ்வுகளாம்... அது சரி பிக்காலிப்பாஸ் உள்ள இருக்கவனுகளை மாதிரியே நம்மளுக்கும் பிபி ஏத்திவிட்டு டிஆர்பிய ஏத்திக்கிறாராம்... நல்லா வருவீங்கப்பு.... நல்லா வருவீங்க....

எப்பவும் போல ஆடல் பாடல்... அதிரடியாய்... கருத்தவனெல்லாம் கலீசாம் பாட்டு... அதிகமாகவே ஆட்டம் போட்டார் சாக்சி... அப்புறம் நாமினேசன்ல இருக்கோமுல்ல.... அப்புறம் எல்லாருமே ரொம்ப ஓவராவே ஆடுனாங்க... 

இனி நான் மௌனச் சாமியார்.... ஷெரினைத் தவிர யார்க்கிட்டயும் பேசமாட்டேன் என முகத்தை உர்ருன்னு வச்சிக்கிட்டு திரிஞ்ச சாக்சி, ஷெரினுடன் பேசிக்கொண்டிருக்கும் போது கவினும் சாண்டியும் ஷெரினை அழைக்க, அவங்க எழ... நீ அவனுக கூப்பிட்டதும் போகணுமான்னு இவங்க அழ.... அடி என்னங்கடி எளவெடுத்தவளுகளா லவ்வு புட்டுக்கிட்டா... எனக்காக எவளுமே வருத்தப்படலை... எதுக்கு அவனுக்கிட்ட பேசுறீங்க... அப்படின்னு கத்துறிய... சும்மா கடலை போடத்தானே கூப்பிடுறான்... இப்பவும் போகாதேன்னு வெள்ளையம்மாக் கணக்கா நின்னா எப்படி..? கொஞ்சம் எனக்காகவும் இங்க இருக்க விடுங்களேன்னுட்டு எந்திரிச்சுப் போக, சாக்சி முகத்தில் காளியின் ருத்ரம்.

சாண்டியும் கவினும் சாக்சியை வெறுப்பேற்றவே ஷெரினைக் கூப்பிட்டார்கள் என்பதைச் சம்பந்தமில்லாமல் பேசியதில் அறிய முடிந்தது. கடலை போடணும்ன்னா தர்ஷன்கிட்டதான் போகணும் இந்தச் சனியனுங்க அந்தச் சனியனை வெறுப்பேற்ற, நம்மள பந்தாக்கி விளையாடப் பாக்குதுக... ஏதோ கமல் சார் ரெண்டு வாரமாப் புகழ்றதுக்குப் பங்கம் வர வைக்க நினைக்கிறானுங்க போல... நம்ம ரோட்டுல வண்டியை ஓட்டுறது நல்லதுன்னு யோசிச்சிருப்பார் ஷெரின்.

தலைவராய் முகன் நேற்று உங்களுக்கு எதுவும் பிரச்சினையின்னா பிராது கொடுங்க சத்தியமா உங்க ஏரியா கவுன்சிலர் மாதிரி குறையை எழுதி வாங்கி குப்பையில் போடமாட்டேன்னு சொல்ல, நாட்டாமி அம்மா சாப்பிட்ட தட்டுல தின்ன மீதியை வச்சி சிங்குல போடுறது.... காபிக் கப்பைக் கழுவாம காய வைக்கிறதுன்னு சில பிரச்சினைகளைப் பேசினார். அதன் பிறகு முகன் யார் யார் எப்படி வேலை பாக்குறாங்கன்னு நல்லாக் கவனிங்கப்பா... வாராவாரம் வெள்ளிக்கிழமை வில்லங்கத்தைக் கூட்டித் வெட்டப் போற ஆட்டுக்கு மஞ்சத்தண்ணி ஊத்துற மாதிரி தலைவர் தலையில பிக்பாஸைத் தண்ணி ஊத்த வைக்காதீங்கடா.... அப்புறம் கட்டில் இருந்த இடத்துல உங்க தலையிருக்கும் என்பதாய் மிரட்டலாய்ச் சொன்னான்.

ரொம்ப பாதுகாப்பா விளையாடுறான்னு அபி பற்றி மது அன்று சொன்னதை, அதெப்படிச் சொல்வே... பாதுகாப்பா வெளாண்டா ஏன் வாராவாரம் எனக்குக் குத்துறாங்க.... பாதுகாக்க வேண்டியவனே வேற பசுக்களுக்குப் புல்லுக் கொடுத்துக்கிட்டு இருக்கான்னு குழாயடிச் சண்டைக்குத் தயாராக, தலைவன் இருக்கிறேன் என முகன் வந்து என்ன பிரச்சினைன்னு கேட்க, மது சொல்ல, இப்ப அவங்க என்ன சொன்னாங்கன்னான்னு மதுவுக்கு ஆதரவாப் பேச, ஆத்தாடி அபி விஜய் டிவி சீரியல் நாயகி ஆயிருவாளேன்னு நீ போப்பா... நாங்க பேசிக்கிட்டுத்தான் இருந்தோம்ன்னு மது சொல்ல, உனக்கு எப்பவும் என் அணைப்புத் தேவை ஆனா அன்பை மட்டும் காட்டவே மாட்டேன்னு அபி பொங்க, முகன் கைக் காப்பை ஏற்றிவிட, அய்யய்யோ மாடு முட்டிட்டான்னு அபி அடங்கிட்டாங்க.

அப்புறம் அபிக்குச் சின்னதாய் ஒரு அட்வைஸ்... காலையிலயே கண்ணக் கசக்கினா வாழ்க்கை வெளங்காது... ஜாலியாய் இருன்னு சொல்லி... சிரிப்பை வரவழைக்க முன்றான் முகன். அப்ப லாஸ்லியா வேற வந்து ஏதோ பேசி, அபிக்கு நான் எப்பவும் நண்பிதான்னு காட்டிக்கிச்சு.

'மனசு துடிக்குது... அவ்வ... அவ்வா...' அப்படின்னு சாண்டியும் கவினும் தர்ஷனுமாய்ப் பாடிக்கிட்டு இருந்தாங்க... என்னைத்தான் ஓட்டுறானுங்கன்னு மனசுக்குள்ள கறுவிக்கிட்டு சாக்சி பாத்திரம் கழுவிக்கிட்டு இருந்தாங்க... 'கக்கா...கக்கா'ன்னு சொன்னப்போ சாப்பிட்டுக்கிட்டு இருந்த அபி, பாகிஸ்தானி பொயிட்டு வந்த பாத்ரூமுக்குள்ள நுழைஞ்ச மாதிரி ஒரு முகபாவனை கொடுத்தார். பாட்டின் வேகத்தோடு புயலாய் வெளியில் போனார் சாக்சி... ஏதோ வெடிக்கும் என்று நினைத்தால் தம்மடித்து கோபம் தணித்துக் கண்ணீரில் கரைகிறார்... பெண்கள் அழும் இடம் புகைபிடிக்கும் இடம்... ஆண்கள் அழும் இடம் கக்கூஸ் என்பதாய் முடிவு செய்து வைத்திருக்கிறார்கள் போலும்.

இவ வேற வெடுக்குன்னு வெளிய பொயிட்டா... நாம போகலைன்னா 'அந்தக் கவின்தான் கண்டுக்க மாட்டேங்கிறான்... நீயுமாடி'ன்னு ஆடுவாளே... எதுக்கும் அந்தப் பக்கமா எட்டிப் பார்ப்போம்... அப்படின்னு ஷெரின் போயி, 'எதுக்கு இப்ப அழுகுறே... என்ன நடந்துச்சு'ன்னு கேக்க, எல்லாரும் என்னையவே குறி வச்சி அடிக்கிறா.. அதனாலதான் நான் வாய்க்குப் பூட்டுப் போட்டு உனக்கு மட்டும் டூப்ளிகேட் சாவி கொடுத்திருக்கேன்... ஆனா அந்த சாண்டிப்பய எப்பப்பாரு பாட்டுப்பாடி கேலி பண்றான்... பக்கத்துல அந்தப் பன்னி கவினும் இருக்கான்... எனக்கு எப்படியிருக்கு தெரியுமா..? அபி அழுதா முகன் ஓடுறான்... நான் அழுதா மட்டும் கவின் பாடுறான்' அப்படின்னு ஒப்பாரி வைத்தார்.

'ஏய் நான் எப்பவும் உன்னோடதான்.. எதுக்கு அழறே... ஆமா சாண்டி அப்படியென்ன பாடினான்..?'

'மனசு தவிக்குது அவ்வ.... அவ்வா...' 

'ஏய் இது ஒப்பாரிப் பாட்டுயில்லை... எதுக்கு இம்புட்டுக் கேவலமாப் பாடுறே.. இரு சாண்டியைக் கூப்பிட்டுப் பேசி உனக்கு சரியாப் பாடச் சொல்லித் தரச் சொல்றேன்...'

'வேணாம்... வேணாம்... என்னைய வாலண்டியரா வண்டியில ஏத்திராதடி என் செல்லம்... அவனுக்கிட்ட நேரம் வரும் போது நேர்ல பேசுறேன்'னு சொன்னதும் அப்ப நீ தொடர்ந்து பாடுன்னு சொல்லிட்டு ஷெரின் போயாச்சு.

அப்புறம் இந்த வாரத்துக்கான லக்ஸூரி பட்ஜெட் டாஸ்க்.... வெளியில் இருந்து வீசப்படும் காயினை (20,50,100) பிடித்துச் சேர்க்க வேண்டும்... அதை வைத்திருப்பவரிடமிருந்து ஆட்டையைப் போட என்ன வழியை வேண்டுமானாலும் கையாளலாம்... அப்பத்தானே அடிச்சிக்குவாங்க...  அதிக காயின் வைத்திருப்பவர் அடுத்த வார நாமினேசனில் இருந்து தப்பலாம். முதல் சுற்றுல சேரனுக்கு ஒண்ணும் கிடைக்கலை... ஷெரின் தான் சேகரித்ததில் ஒன்றைப் பெருந்தன்மையாகக் கொடுக்க, லாஸ்லியாவும் சேரப்பாவுக்கு சேர்மானமாய் ஒன்றை அளித்தார்.

இரண்டாவது சுற்றிலும் மூன்றாவது சுற்றிலும் எல்லாருமே ரொம்பத் திறமையாக் காயினைச் சேகரித்தார்கள். அன்றைய நாள் முடிவில் சாண்டி ஆயிரத்துக்கு மேல் எடுத்திருந்தார். சரவணன் மற்றும் தர்ஷன் அடுத்த இரு இடங்களைப் பிடித்தார்கள். ஒவ்வொருவரும் தங்கள் காயினை மூட்டையாகக் கட்டித் தூக்கிக் கொண்டு திரிந்தார்கள். ஊரில் வந்து அழுக்குத் துணியெடுத்துச் செல்பவர்கள் மூட்டையாகக் கட்டி தலையில் வைத்துக் கொண்டு செல்வதை ஞாபகப்படுத்தியது.

முதல் சுற்றில் காயினை எடுப்பதில் தர்ஷனுக்கும் சாக்சிக்கும் சின்ன முட்டுதல்... அடுத்த சுற்றின் ஆரம்பத்தில் இந்தத் தடவை எங்கிட்ட மோதினே... நான் உன்னைத் தூக்கிப் போட்டு மிதிப்பேன்னு தர்ஷங்கிட்ட சாக்சி சொல்ல, பயலுக்கு கடுப்பாயிருச்சு... என்னையைப் பார்த்து இப்படிச் சொல்லிட்டா, அவளை விட மாட்டேன்... அடிச்சித் தூக்குறேனா இல்லையான்னு பாருங்கன்னு கவினுக்கு கேக்குற மாதிரி கத்தினான்... அவ அப்படித்தான் மச்சி... என்னைய மிதிச்சிட்டு... என்னையவே சாரி கேக்க வச்சிட்டு.. உங்ககிட்ட எல்லாம் நான் அவளை மிதிச்சதுக்கு சாரி கூட கேக்கலைன்னு சொல்லுவா... என்பதாய் கவின் பார்த்தான். இந்த மாதிரிச் சூழல்ல கவின் காதல்கொண்டேன் தனுஷ் மாதிரியே இருப்பாப்ல.

தர்ஷன் பொங்குறது எப்படியோ சாக்சி காதுக்குப் போக, ஆஹா இவன் கவின் மாதிரி காஞ்சுபோன பய கிடையாது போலவே... அடிச்சுத் தூக்கிட்டான்னான்னு மெல்ல வந்து சமாதானம் பேசி, எனக்காக நீ அழுதியா... எனக்காக அழ இங்க ஆளிருக்குன்னு நினைச்சா எனக்கு மகிழ்ச்சியா இருக்குடான்னு அன்பை விதைச்சிச்சு... அப்புறம் அடியையா அறுவடை பண்ண முடியும்..?

அப்பத்தான்யா இந்தப் பிக்பாஸ் சரவணனைக் கூப்பிட்டு கண்ணைக்கட்டி கூட்டிப் பொயிட்டாரு... போனவரு வரலை ஏதோ தப்பாத் தெரியுதுன்னு சாண்டியும் கவினும் பேசிக்கிறாங்க... பிக்பாஸ் எல்லாரையும் கூப்பிட்டு சரவணனை வெளியாக்கியாச்சுன்னு மட்டும் சொல்லி, அழுங்கடா... அடிச்சிக்கங்கடா.. எனக்கு டிஆர்பிடான்னு மௌனமாயிட்டாரு. எதுக்குச் சரவணன் போனார்..? ஏன் போனார்...? என்பது தெரியாமல் எல்லாருக்கும் ஷாக்.

கவினும் சாண்டியும் உணர்வின் வெளிப்பாட்டில் அழுதார்கள்... மற்றவர்கள் தங்கள் வேதனையை... வருத்தத்தை முகத்தில் காட்டினார்கள். மது மட்டும் கண்ணம்மாவாய் கண்ணீர் சிந்தினார்... ரொம்ப அழுதார்... அப்பப்ப பக்கத்திலும் ஆறுதல் சொன்னார்... அம்மாடி என்ன நடிப்பு..? அவர் பொய்யாய் அழுகிறார் என்பது நமக்கு நல்லாவே தெரிகிறது. எல்லா விஷயத்திலும் ஏன் இப்படி இருக்கிறார் மது... என்ற கேள்வியே மனசுக்குள்.

எல்லாருக்குமே 'குடும்பத்தில் ஏதாவது...?', 'மகனுக்கு என்ன நேர்ந்ததோ..?' என்ற எண்ணங்களே அழுகையைக் கொடுக்க, ஆளாளுக்கு புலம்பித் தவிக்க, சேரனும் முகனும் மட்டுமே சரவணன் சென்றதற்கான காரணம் எங்களுக்குத் தெரியணும்... இங்கே எல்லாருடைய மனநிலையும் ரொம்ப மோசமா இருக்குன்னு சொன்னாங்க. உடனே பிக்பாஸ் எல்லாரையும் அழைத்து சரவணனும் அவரது குடும்பத்தினரும் நலம். ஒரு சில காரணங்களால் சரவணன் வெளியேற வேண்டிய கட்டாயம்... காரணத்தை சனிக்கிழமை தெரிந்து கொள்வீர்கள் என்று முடித்துக் கொண்டார். 

கவின் மற்றும் சாண்டி உடைந்து அழுதார்கள்... உண்மையில் செவ்வாழையுடன் சுற்றிய அவர்களின் நிலமை எப்படியிருக்கும் என்பதை உணர முடிந்தது.

மதுவின் அழுகை செயற்கையானது.... நடிப்பரசி

என்னைக் காலையில் சாப்பிட்டியா... முதல்ல சாப்பிடுன்னு சொல்வாருன்னு அபியும் எம்மேல அதிக பாசம் வச்சிருந்தாருன்னு சாக்சியும் என்ன சொல்றதுன்னு தெரியாம அவரை நாமினேட் பண்ணினேன்னு லாஸ்லியாவும் இருக்கும் போது விரிக்காத பாசத்தை ஆளில்லைன்னு சொன்னதும் விரிச்சாங்க... அந்த விரிப்பு வார்த்தைகளாய் மட்டுமே வந்து விழுந்தது. அதில் அன்பு துளி கூட இல்லை.

அப்புறம் மறக்க முடியாத நண்பனைப் பற்றிச் சொல்லும் நண்பேன்டான்னு ஒரு டாஸ்க்.. சாண்டி, கவின் அழுதபடி சரவணனை நண்பேன்டான்னாங்க... தர்ஷன், லாஸ்லியா, முகன் எல்லாம் ஊரில் இருக்கும் நண்பரைச் சொன்னாங்க....ஷெரினும் அபியும் அம்மாவைச் சொன்னாங்க... சேரன் தனக்கும் சரவணனுக்குமான நட்பு, பிக்பாஸ் இல்லச் சண்டை மற்றும் சமாதானம் பற்றிச் சொன்னார். சாக்சி சொன்னதை மட்டும் காட்டவில்லை என்று நினைக்கிறேன். ஒரு வழியா அழுகாச்சியோட முடிச்சாங்க. 

இந்த டாஸ்க்ல கவின் பேசும்போது சாக்சி-லாஸ், அபி பேசும்போது முகன், ஷெரின் பேசும் போது தர்ஷன், லாஸ்லியா பேசும்போது கவின், தர்ஷன் பேசும்போது ஷெரின், முகன் பேசும்போது அபி என கேமரா முகங்களின் உணர்ச்சியைக் காட்டியது செம.

எல்லாரும் ஒய்ந்திருக்க, படுக்கப்போன கடவுளிடம் எனக்குச் சேரனும் சரவணனும் நாத்தாநப்பனா இருந்தாங்களே... அதுல நாத்தாவ காரணம் சொல்லாம விரட்டிட்டானே இந்தப் படுபாவி பிக்பாஸ்... அவன் நல்லாருப்பானா... நாசமாப் போக... ஆமா சரவணனுக்கு என்னாச்சு..?  எங்க போனீங்க சரவணன்..? அப்படின்னு படுத்தியெடுத்துக்கிட்டு இருந்தாங்க மது.

முடியலை மது... இது 1960கள் இல்லை... கண்ணம்மாக்களின் கண்ணீர் கண்டு வருந்தியழ... இது 2019... அடிபட்டுக் கிடந்தாலும் செல்பியும் வீடியோவும் எடுத்து முகநூல், வாட்ஸப், டுவிட்டர்களில் பதிந்த பின்னரே என்ன ஏதென்று பார்ப்பார்கள் என்பதை மனதில் வைத்து உண்மையாய் விளையாடுங்க ப்ளீஸ்... போதும் தங்களின் நாடக அரங்கேற்றம்.

பிக்பாஸ் தொடரும்.

-'பரிவை' சே.குமார்.

1 கருத்து:

  1. கோப்பால் கோப்பால் எல்லாமே பொய்யாக இருக்கக்கூடாதா கோப்பால்...! - புதிய பறவை மதுதேவி...!

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி