'சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கீங்க... இங்க இனி அழிஞ்சி போறதுக்கு எதுவும் இல்லை' என்ற வசனம் சக்தியிடம் பாபி சொல்வதாய் படத்தில் வரும்... இந்த வசனமே அந்த வீட்டைப் பற்றிச் சொல்லிவிடும். அப்படியானதொரு வீடு... அதில் போனி, சாஜி, பாபி, பிராங்கி என நாலு சகோதரர்கள்... மூணு பேருக்கு ஒரு அம்மா... மூணு பேருக்கு ஒரு அப்பா... அப்பா இறந்து போக, அம்மா இவர்களை விட்டுப் பிரிந்து தனியே இருக்கிறார். பிராங்கி ஹாஸ்டலில் தங்கிப் படிக்கிறான். விடுமுறையில் வீட்டுக்கு வெறுப்போடுதான் வருகிறான். இவர்களுக்குள் எந்த ஒட்டுதலும் இல்லாத வாழ்க்கையை, எது ஒட்டுதலான வாழ்க்கையாக மாற்றுகிறது என்பதே கதை.
கும்பளங்கி மீன் பிடித் தொழிலையும் சுற்றுலாவையும் ஆதாரமாகக் கொண்ட அழகிய ஊர். ஊரைப் போலவே அந்த கதவில்லாத வீடும் நம்மை ஈர்த்துக் கொள்கிறது... அப்ப அந்த வீட்டில் இருக்கும் மனிதர்கள் ஈர்க்கவில்லையா..? நிச்சயமாய் படம் நகர... நகர... அவர்கள் நால்வர் மட்டுமின்றி, அவர்களுடன் சம்பந்தப்பட்ட அனைவரும் நம்முள் சிம்மாசனம் இட்டு அமர்கிறார்கள்.
வாய் பேச முடியாத போனிக்கு கடைக்குட்டி பிராங்கி மீது அதிக நேசம்... சாஜிக்கும் பாபிக்கும் ஆரம்பம் முதலே அடிதடிதான்... கட்டி உருளும் சண்டை அடிக்கடி நிகழும்... பிராங்கி மட்டும் இருவருடனும் பேசினாலும் சாஜிக்கு மூவரையுமே பிடிப்பதில்லை. இப்படியான இவர்களின் வாழ்க்கைக்குள் பெண்கள் வந்தால்...?
கறுப்பினப் பெண்ணான நைலா (ஜாஸ்மின்) கும்பளங்கிக்கு சுற்றுலா வந்து போட்டோ எடுப்பதற்காக சில நாள் தங்குகிறார். அப்போது அவருக்கும் போனிக்கும் (ஸ்ரீநாத் பஸி) காதல்... ஒரு பிரச்சினையின் காரணமாக வீட்டிற்கே கூட்டி வந்து தங்க வைக்கப்படுகிறார்.
பாபி (ஷான் நிகாம்) பள்ளியில் லெட்டர் கொடுத்தவளான பேபியை (அன்னா பென்) நண்பனின் காதலி மூலமாகப் பார்த்து லவ் பண்ண ஆரம்பிக்கிறார். கன்னத்தில் விழும் குழியின் அழகில் சொக்க வைக்கிறார் நிகாம். முத்தப் பிரச்சினைக்கு காதலே வேண்டான்னு விலகி விலகி ஓடுபவர் திடிரென முழுவதுமாய் காதலில் விழுகிறார்.
பள்ளி நண்பர்களை தன் வீட்டிற்கு கூட்டி வர முடியாத நிலையில் இருக்கும் பிராங்கி (மேத்யூ தாமஸ்) தன் சகோதரர்கள் சண்டையில் ஒதுங்கியே இருக்கிறான். போனிக்கு மட்டுமே பிராங்கி மீது பிரியம் அதிகம். கூடப் பிறந்த அண்ணனான பாபி கூட அவனுடன் ஒட்டுதலாய் இருப்பதில்லை. அம்மாவின் நினைப்பில் வாழும் ஒரே ஜீவன் அவன் மட்டுமே.
சாஜிக்கு (ஷௌபின் ஷஹிர்) ஓசிக்குடி கதாபாத்திரம்... தான் உதவி செய்த தமிழன் முருகனின் (ரமேஷ் திலக்) சம்பாதிப்பதை எடுத்துக் குடிக்கும் மனிதன். தன்னால்தான் ரமேஷ் திலக் செத்தான் என்பதால் வயிற்றுப் பிள்ளையான சக்திக்கு (ஷீலா ராஜ்குமார்) உதவி தன்னுடைய வீட்டிற்கே கூட்டி வருகிறான்.
உறவுகள் என்று சொல்லிக் கொள்ள பெரியவர்கள் இல்லாத வீட்டில்... நாலு பேரும் நாலு விதமான மனநிலையில் இருக்கும் இடத்தில்... முழுவதும் அறியாத இரண்டு பெண்கள் இருத்தல் சரியல்ல என்பதே பாபியின் எண்ணமாய் இருக்கிறது... ஆரம்பத்தில் முரண்டு பிடிப்பவன், அந்தப் பெண்களுக்காக அம்மாவை மீண்டும் சில நாள் வீட்டுக்கு வரச் சொல்லிக் கூப்பிட்டும் வர மறுத்த நிலையில் 'நீ சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கே' என சக்தியிடம் சொல்லுமிடத்தில் அவர்கள் அங்கே தங்கலாம் என்ற எண்ணத்துக்கு வருகிறான்.
இந்த நாலு பேருடன் ரெண்டு பெண்களைச் சேர்த்துவிட்டால் போதுமா...? வெவ்வேறு மனநிலை கொண்ட இந்த நாலு சகோதரர்களையும் சேர்க்கும் மையப்புள்ளி வேண்டாமா...? அது எங்கிருக்கிறது...? எப்போது வைக்கப்படும்...?
பேபியின் அக்கா கணவன் ரூபத்தில் வைக்கப்படுகிறது மையப்புள்ளி...
அந்தப் புள்ளிதான் நடிப்பு அரக்கன் பஹத் பாசில்.
மீசை சரி செய்யும் போது குளிக்கையில் மனைவியோ / கொழுந்தியாளோ எடுத்து ஒட்டிய ஸ்டிக்கர் பொட்டை பிளேடால் தள்ளித் தண்ணீர் திறந்து விடும்போதே உணர முடிகிறது இவர்தான் வில்லன் என்பதை... உதடுகள் மட்டுமல்ல அவரின் கண்களும் சிரிக்கின்றன கள்ளத்தனமாய்.
படம் முழுவதும் ரொம்பச் சாதுவாய் காய் நகர்த்தும் குரூர வில்லன்... ஆரம்பத்தில் கிரிக்கெட் விளையாடுங்கடா... வலைகட்டி என புட்பாலை எடுக்க ஓடிவந்த சிறுவனிடம் சொல்லும் போது வண்டியின் ஆக்ஸிலேட்டரைத் திருகி மனைவியைப் (கிரேஸ் ஆன்டனி) பயமுறுத்தி இதுக்குப் பயப்படுவியா எனச் சிரித்து, கொழுந்தியாளிடம் செய்யும் வில்லத்தனம், சாஜி, பாபி, மாமியார் என எல்லாரிடமும் நடந்து கொள்ளும் விதம்... வீட்டுக்குள் மீண்டும் வந்து விழுந்த புட்பாலை தேங்காய் உரிக்கும் கம்பியில் குத்தி வைப்பது என மெல்ல மெல்ல குரூர முகம் காட்டி... இறுதிக்காட்சியில் ராட்சஸ ஆட்டம்... செம.
இந்த மனிதருக்கு நடிக்கச் சொல்லியா கொடுக்க வேண்டும்... லேசான புன்னகை... சிரிக்கும் கண்கள்... ஆஹா... செம... நம்ம ரகுவரனை இந்தச் ஷம்மி கதாபாத்திரத்தில் பார்ப்பது போல் இருந்தது. இவரில்லை என்றால் கும்பளங்கி நைட்ஸ் சொல்லிக் கொள்ளும்படியாக இருந்திருக்காதோ எனத் தோன்றியது. மொத்தப் படத்தையும் அசால்ட்டாய் தூக்கி நிறுத்துகிறார். நடிப்புக்காக எந்த எல்லையும் தொடும் கலைஞன்... இன்னும் சிறப்பாகத் தொடரட்டும்.
ஷான் காதலின் பின்னே, ஷௌபின்னிடம் உதவி கேட்கும் இடத்தில் 'சேட்டன்னு கூப்பிடு' எனச் சொல்ல, ரொம்ப யோசித்து ஷான் 'சேட்டா' என்றதும் அவர் சிரிக்கும் இடம்... ஆஹா... மனுசன் சிரிப்பால் ஈர்க்கிறார்... எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காது அந்தச் சிரிப்பும்... காட்சிப்படுத்தலும்... தம்பிக்காக பஹத்திடம் மென்னு முழுங்கிப் பேசுவது... ஷீலாவிடம் ரொம்ப அன்பாய் நடந்து கொள்ளுதல் என மனிதர் கலக்கியிருக்கிறார். ஷௌபின் நடிப்பு எப்பவுமே பிடிக்கும்... இதில் இன்னும் கூடுதலாய். நல்லதொரு கலைஞன்.
ஷானுக்காக சகோதர்ரகள் இணைகிறார்கள்... காதலைச் சேர்த்து வைத்தார்களா என்பதைச் சொல்வதே கதையின் முடிவு.
பஹத் யார் என்பதை இறுதிக்காட்சியே விலக்கினாலும் குரூரத்தனத்துக்குள் வேறு ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை ஆரம்பம் முதலே அவர் வரும் காட்சிகளில் சொல்லிக் கொண்டே இருக்கிறது திரைக்கதை.
பம்மிப் பம்மிப் போகும் கிரேஸ், அன்னாவிடம் பஹத் பேசும் இடத்தில் கொசுப்பேட்டை உடைத்து உடைந்து எழுவது செம. கதையில் திருப்பம்...
பஹத்தின் முன்னே ஸ்ரீநாத்துக்கு இதழில் முத்தம் கொடுத்து இப்ப என்ன பண்ணுவே என்பதாய் திமிர் காட்டும் ஜாஸ்மின், முத்தம் கொடுக்கப் பயந்து பயந்து கொடுக்கும் அன்னா, பயத்தைத் தூக்கி வீசி எழும் கிரேஸ், கணவனை இழுந்து இன்னொரு வீட்டில் வந்து இருப்பதை விரும்பாமல் நான் ராசியில்லாதவள்... சபிக்கப்பட்டவள் எனச் சொல்லும் ஷீலா என நாலு பெண்களும் நடிப்பில் குறை வைக்கவில்லை. ஷீலாவை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம் என்றே தோன்றியது இருப்பினும் பெருங்கூட்டத்துக்கான தீனியில் தனக்கான தீனியை சரியாகவே சாப்பிடிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.
பைஜூ ஜான்சன், அம்பிகா ராவ், சூரஜ், ரியா சயிரா என படத்தில் நடித்த எல்லாருமே அருமையாக நடித்திருக்கிறார்கள்.
தமிழன் கதாபாத்திரம் என்றால் வீட்டு வேலைக்காரி / காரன், சலவைத் தொழிலாளி என்பதை வழக்கமாக மலையாளிகள் வைப்பதுண்டு. அதே வழக்கம்தான் இதிலும் என்றாலும் ரமேஷ் திலக் மறைவுக்குப் பின் நிறைமாத கர்ப்பிணியான ஷீலாவின் காலில் விழுதல், அவரைத் தன்னோடு வைத்துக் கொள்ளல் என வித்தியாசப் படுத்திருக்கிறார்கள். அதற்காகப் பாராட்டலாம்.
எந்த இடத்திலும் தொய்வே இல்லாத திரைக்கதை (ஷ்யாம்)... அழகான பின்னணி இசை(சுசின் ஷ்யாம்)... கும்பளங்கியை பகலிலும் இரவிலும் அழகாய்க் காட்டும் ஒளிப்பதிவு (ஷைஜூ காலித்), சிறப்பான எடிட்டிங் (ஷைஜூ ஸ்ரீதரன்)என எல்லாமே கலக்கலாய்...
ஷியாம், திலீஷ் போத்தனுடன் பஹத்தும் நஸ்ரியாவும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். படத்தை இயக்கியிருப்பவர் மது சி.நாராயணன்.
மீன் பிடித்தல், படகுகள், சுற்றிலும் நீர் என மிக அழகாக இருக்கிறது அந்த வீடு... விளக்கொளியில் நம்மை ஈர்க்கிறது.
ஆஹா... ஓஹோன்னா படத்துல குறையே இல்லையா...?
இருக்கே.... ஜாஸ்மின் சுற்றுலா வந்தவர், இங்கே தங்குதல்... அதுவும் திருமணம் செய்து கொண்டு தங்குதல் என்பது சற்றே உறுத்தல்.
ஷீலா கணவனை இழந்தவள், உன்னை அவர் அண்ணன்னு சொல்லிக்கிட்டே இருப்பார் என்பவர், அந்த வீடு அவரைச் சகோதரியாக ஆக்கிக் கொண்டாலும் சட்டென உடன் வருதல் சற்றே உறுத்தல்.
பாபியின் குணம் காதலிலும் சரி வீட்டிலும் சரி சட்டென மாறுதல் சற்றே உறுத்தல்.
உறுத்தல் எல்லாம் இருக்கட்டும் கதவில்லா வீட்டில் முரண்பாடுள்ள மனிதர்களைத் தாராளமாகப் பார்க்கலாம். கும்பளங்கி நைட்ஸ் தீபாவளி இரவாய் தித்திக்க வைக்கும்.
-'பரிவை' சே.குமார்.
பொதுவாகவே மலையாளத்த்தில் நல்ல பல படங்களை எடுக்கிறார்கள். இந்தப் படத்திற்கான உங்கள் விமர்சனம் பார்க்கத் தூண்டுகிறது. இணையத்தில் கிடைத்தால் பார்க்க வேண்டும் என நினைத்திருக்கிறேன். கிடைக்கிறதா பார்க்கிறேன்.
பதிலளிநீக்குமலையாளப் படங்கள் கதையும் வித்தியாசமாக இருக்கிறது திரைக்கதை எடுக்கும் விதம் என்று நன்றாகவே எடுக்கிறார்கள். நடிப்பும் இயல்பாக வருகிறது அவர்களில் பெரும்பான்மையோருக்கு..
பதிலளிநீக்குஉங்கள் விமர்சனம் நல்லாருக்கு குமார். படத்தைக் குறித்து வைத்துக் கொண்டேன்.
கீதா