அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழும முன்னெடுப்பில் முஹம்மது யூசுஃப் அண்ணனின் 'மணல் பூத்த காடு' விமர்சனக் கூட்டம் வெள்ளி மாலை ஆசிப் அண்ணாச்சியின் வீட்டில் நடைபெற்றது. இது 'ஆபாசக் குழுமம்' என முகம் மறைத்துச் சிலர் பேசினாலும் ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு கூடுகையின் மூலம் வார நாட்களின் அயற்சியைப் போக்கும் 'ஆசுவாச'மான குழுமமாகத்தான் இது இருக்கிறது என்பதே உண்மை. இங்கு வைக்கப்படும் கருத்துக்கள் எப்படிப்பட்டது எனினும் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எல்லாருக்கும் இருப்பதுதான் சிறப்பு.
மணல் பூத்த காடு (நீளமா இருக்குதானே... இனி மபூகான்னு அண்ணாச்சி சொல்ற மாதிரி எழுதுவோம்...) - சௌதி பற்றி அறியாத செய்திகளைத் தாங்கிப் பயணிக்கும் நாவல். அது குறித்தான பார்வையை முன் வைக்கும் முன் 448 பக்கங்கள் கொண்ட நாவலை முழுவதுமாய் வாசித்து விமர்சனம் செய்வதுதான் நல்லது என்பதால் பேசியவர்களில் பலர் நாவலை மட்டுமின்றி அதன் ஊடாக இன்னும் தேடுதல் வேட்டையாகப் பலவற்றை வாசித்து வந்து மிகச் சிறப்பாகப் பேசினார்கள்.
எப்பவும் போல் அண்ணாச்சி அழகு தமிழில் விழாவை ஆரம்பிக்கும் முன்னர், சசி அண்ணனின் மகன் எனக்கு இலக்கியத்தில் ஆர்வம் உண்டு... இந்த மாதிரி நிகழ்வுகளில் நானும் கலந்துக்கணும்ன்னு அப்பாக்கிட்ட கேட்டேன் என்றபடி, ரொம்ப சங்கோஜப்பட்டு இன்னைக்கு வேண்டாமே என கொஞ்சலாய்க் கேட்டவன், வற்புறுத்தலுக்காக 'சத்தம் போடாதீங்கடா'ன்னு ஆரம்பிச்சதும் ஆடிப் பொயிட்டேன்... அப்புறம்தான் அது எம்.ஜி.ஆர். குரலுக்காக பேசியதுன்னு தெரிந்தது... என்னைய மாதிரி பலரும் ஆடியிருக்கலாம். அவனை நம்மாளுக பிலிப்பைனி மபூகா பற்றிப் பேசினா எப்படியிருக்கும்ன்னு சொல்லுன்னு கேட்டதுக்காக, பிலிப்பைனி மாதிரிப் பேசி எனக்கு மபூகா பற்றி எனக்கு எதுவும் தெரியாதுய்யா... ஆளை விடுங்கன்னு சொல்லி முடிச்சிக்கிட்டான். அருமை... தொடரட்டும்... வாழ்த்துக்கள்.
இன்னும் சிலர் வர வேண்டியுள்ளதால் அண்ணாச்சி நீங்க பாடுங்கன்னு... எல்லாரும் சொல்ல தனது செல்போனில் தான் பாடி சேமித்து வைத்திருந்த 'வெத்தல போட்ட சோக்குல...' பாட்டைப் போட்டுவிட்டு, நாந்தான் பாடுறேன் கேளுங்கன்னுட்டு அவரு வெளியில் போய்விட்டார்.
எப்பவும் போல் தமிழ்தாய் வாழ்த்துடன் விழா ஆரம்பிக்க, தமிழில் இது ஒரு முக்கியமான நாவல், இதைப் பற்றி முதலில் என்னிடம் சொன்னவன் பிரபு கங்காதரன்தான்... யூசுஃப் என்னிடம் கொடுத்து வாசிக்கச் சொன்ன போது எனது வேலைப்பளூவின் காரணமாக அதிக நாட்கள் எடுத்துக் கொள்வேன் என்று சொன்னதும் எவ்வளவு நாள் ஆனாலும் முழுவதும் வாசித்துச் சொல்லுங்க எனச் சொன்னதாகவும், தான் வாசித்து எழுத்துப் பிழைகளையும் சரி செய்து கொடுக்க இரண்டு மாதங்கள் ஆகியது என்றார்.
'காளி' விமர்சனக் கூட்டத்தில் சசி அண்ணன் அடுத்த முறை தொடக்க ஆட்டக்காரர் என்பதிலிருந்து எனக்கு விலக்கு வேண்டும் என்று கேட்டதால் நெருடா தான் இறங்குவதாகச் சொல்லியிருந்தார். அதன்படி நெருடாவைக் கேட்க, அவர் நான் பின்னால் இறங்குகிறேன் வேற யாருக்காச்சும் வாய்ப்புக் கொடுங்க என்று சொல்லிவிட, திடீரென களமிறக்கப்பட்ட எந்த நிலையிலும் அடித்து ஆடும் 'கரும்புனல்' சுரேஷ் அவர்கள், நாவலுக்காக யூசுஃப் அண்ணனின் உழைப்பைப் பாராட்டினார். கவிதை, சிறுகதை, நாவலுக்கென்று ஒரு வடிவம் இருக்கிறது... அந்த வடிவத்தின்படி எழுதினால்தான் அது முற்றுப்பெறும். அந்த வடிவம் மபூகாவில் இல்லை என்றவர், நாவலில் பல மொழிகள் பயன் படுத்தப்பட்டிருப்பதால் ஒரு வறட்டுத் தன்மை இருக்கிறது என்றும் என்னுடைய கரும்புனல் நாவல் நடக்கும் களம் முழுக்க முழுக்க இந்தி பேசும் பகுதி என்றாலும் தமிழில்தான் கொடுத்தேன் என்றும் சொன்னார். இறுதியாக யூசுஃபுக்குத் தயவு தாட்சண்யம் பார்க்காமல் கத்திரி வைக்கும் எடிட்டர் கண்டிப்பாய் தேவை என்றார்.
அடுத்ததாய் களம் இறங்கிய தேவா அவர்கள் அந்த எழுத்துத் தன்மை உள் வாங்கிக் கொண்டதால் இரண்டு நாளில் முடித்ததாகவும், காபாவை மலை உச்சியில் இருந்து அனீஸ் பார்க்கும் போது ஆடு பார்த்ததையும் சிலாகித்துப் பேசியவர், மணல் மீது யூசுஃப்புக்கு எவ்வளவு காதல் இருக்கக் கூடும் என்றார்.இது நாவலாய் இல்லை இது ஒரு ஆவணம் என்றார். இஸ்லாத்துக்கும் தமக்குமான தொடர்புகளைச் சுட்டிக் காட்டிப் பேசினார். நாவலில் பல கதாபாத்திரம் இருந்தும் அது அனீஸின் பின்னே சுற்றுவதை மட்டுமே சொல்லாமல், ஒவ்வொருவரின் பார்வையிலும் பயணித்திருக்கலாம் என்றவர், இறுதியில் நீங்கள் சிங்கம் உங்களைக் கூண்டில் அடைக்கப் பார்ப்பார்கள் அதில் அடைந்து விடாமல் சிறை உடைத்து வெளியில் வாருங்கள் என்றார்.
தேவாவைத் தொடர்ந்து இறங்கிய நூருல் அமீன் அவர்கள், சௌதியைப் பற்றி படித்ததும் தனக்கு துபையை மீண்டும் ஒரு முறை சுற்றிப் பார்த்து ரசிக்க வேண்டும் என்று தோன்றியதாலேயே இங்கு இன்னும் சிலகாலம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றார். தேவா பேசியதையும் மேற்கோள்காட்டிப் பேசினார். தான் எடுத்துக் கொள்ளும் உணவு செரித்துப் பின் தாய்ப்பாலாக கொடுத்தால்தான் சிறப்பு, அப்படியில்லாமல் வாந்தியாய் எடுத்தால் எப்படி என்றவர் மபூகாவில் ஆசிரியர் வாந்தியாய் எடுக்கவில்லை என்றாலும் இன்னும் சிறப்பாக எழுத வேண்டும் என்றார். திருச்சியில் இருக்கும் பேராசியர் நண்பருக்கு புத்தகத்தை அனுப்பியதாகவும் அவர் வாசித்து சிறப்பாக இருப்பதாகவும் சொன்னதுடன் அவரின் மாணவர் ஒருவர் அடுத்த ஆண்டு மபூகாவை தனது முனைவர் ஆய்விற்கு எடுக்க இருப்பதாகவும் சொன்னார். நீண்ட உரையாடல் என்றாலும் மிகச் சிறப்பாய் பேசினார்.
அடுத்ததாகக் களம் இறங்கிய சசி அவர்களும் ஆசிரியரின் உழைப்புக்கும் தேடுதலுக்கும் வாழ்த்துச் சொன்னார். கவிதை, சிறுகதை, நாவல் என்பதற்கு இவர் ஒரு வடிவம் காட்டினார். கவிதையை தேனின் ஒரு துளியாய் இருக்க வேண்டும் என்றும் சிறுகதையை நீரோடை போலிருக்க வேண்டும் என்றும் நாவலைக் காட்டாறாய் இருக்க வேண்டும் என்று சொன்னார். நாவலில் நாயகன் நடந்து கொண்டே இருக்கிறார். அவன் லாடம் கட்டிய குதிரையாய் நடந்து கொண்டே இருப்பதாய் யூசுப் சொல்லியிருக்கிறார் அது லாடம் அல்ல சேனை கட்டிய குதிரை என்றவர், தனது அப்பத்தா சிவாஜி படம் நல்லாயிக்கும் என தியேட்டருக்கு அழைத்துச் சென்று டிக்கெட் கிடைக்காமல் மீண்டும் நடந்தே வீட்டுக்கு கூட்டியாந்ததை நாவலுடன் ஒப்பிட்டுப் பேசிய போது அரங்கில் சிரிப்பலை. நிறையப் பக்கங்கள் இருந்தாலும் என்னை முழுமையாகப் படிக்க வைத்தது நாவலின் எழுத்து நடை என்றார். மேலும் எனக்கு ஏனோ ஒரு வீட்டுக்குள் நகரும் டூலெட்டை விட பரியேறும் பெருமாள் பிடித்திருந்தது என்றவர், மபூகா காட்டாறாய் இல்லை அது கால்வாயாகத்தான் இருந்தது என்றார். இறுதியில் முத்தாய்ப்பாய் மணல் பூத்த காடு... கனவுப் பிரியனைத் தேடு... என்று சொல்லி தனது உரையை எப்பவும் போல் அழகு தமிழால் பேசி முடித்துக் கொண்டார்.
அடுத்து வந்த கௌசர் அவர்கள் இந்தப் புத்தகத்தைக் கொடுங்க ரெண்டு மூணு நாள்ல வாசிச்சிருறேன் என வாங்கும் போதே இரண்டு மாதமாவது ஆகும் என்றார்கள். அப்படியென்ன இருக்கு என யோசித்து வாங்கினால் 448 பக்கம், நானெல்லாம் அவ்வளவாக வாசிப்பவன் இல்லை என்றாலும் வாசிக்க வேண்டும் என்பதால் செல்போன் லைட்டை ஆன் பண்ணி நெஞ்சில் போட்டுக் கொண்டு படித்தேன், சில நேரங்களில் புத்தகம் மூக்கில் எல்லாம் விழுந்தது என்றார். இவ்வளவு விளக்கம் தேவை இல்லை என்றவர் மிஷினின் நம்பர் முதக் கொண்டு எல்லாமுமா சொல்ல வேண்டும் என்றார். பதினெட்டுப் பாகம் முடித்த நான் இங்கு வந்தபின் 40வது பாகத்தைப் படித்தேன். அதுவும் அதே செய்திகளுடனும் நடையுடனுமே போகிறது என்றவர் தான் சௌதி சென்ற போது விமான நிலையத்தில் நடந்த கூத்தை விவரித்தார்.
அடுத்ததாகப் பேச வந்த கவிமதி அவர்கள், ஒட்டு மொத்தமான எல்லா நிகழ்வுகளுக்கும் வஹாபியிசக் கொள்கைகளையே குற்றம் சொல்லக்கூடாது. நிறைய நல்ல நிகழ்வுகளும் வஹாபியிசத்தால் நடந்திருக்கிறது என்றார். வஹாபியிசக் கோட்பாடுகள் அது குறித்து விரிவான அறிதல் இல்லாதவர்களின் தவறான வழிகாட்டுதலால் இன்று மாறிக் கிடக்கிறது என்றார். கோயம்புத்தூர் குண்டு வெடிப்புக்கும் வஹாபியிஸத்துக்கும் சம்பந்தம் இல்லை என்றார். எங்க ஊரில் வேறு வேறு தினங்களில் ரமதான் கொண்டாடப்படுகிறது. நான் இந்த வருடம் ரமதான் இல்லைடா என்று கூட அவர்களிடம் சொல்லியிருக்கிறேன். அப்போது அவர்கள் என்னை எப்படிப் பார்த்திருப்பார்கள்... எனக்கு என்ன கொடுத்திருப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரியும் அல்லவா என்றார். முஸ்லீம் கொள்கைகளை தீவிரமாகக் கடைபிடித்த ஒரு குடும்பத்தில் பிறந்து 23 வயதில் சௌதி போனவன், அங்கு கடைபிடிக்கப்படும் கொள்கைகளை பார்த்து வியந்தேன் என்றார், தலை வெட்டு இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது... ஆறு மாதம் முன்னர் வேலைக்காரப் பெண்ணான இலங்கைச் சிறுமியின் தலை வெட்டப்பட்டது எல்லாருக்கும் தெரியும் என்ன பொது வெளியில் கூடாது என்பதால் சிறைச்சாலையிலேயே வைத்துச் செய்தார்கள் என்றதுடன் தான் வேலை பார்த்த போது வேலை முடிந்து திரும்புவதற்குள் தலை வெட்டப்பட்டு சுத்தம் செய்யப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பதையும் நினைவு கூர்ந்தார். இன்னும் நிறைய சௌதி குறித்தும் வஹாபியிஸம் குறித்தும் பேசினார்.
மபூகா பற்றி ஆண் விமர்சகர்களே பேசிக் கொண்டிருந்ததால் அண்ணாச்சி ஜெசிலா அவர்களை அழைத்தார். எல்லாரும் பேசிட்டாங்க... அதையேதான் நானும் திரும்பப் பேசணும்... சுவராஸ்யமில்லை... நாவல் வடிவமில்லை... செய்திகள் அதிகமிருக்கு என திரும்பத் திரும்ப அதையே சொல்லணுமா என்றவர், எனக்கு மபூகா பிடித்திருந்தது. அந்த இயந்திரத்தின் நம்பர் கொடுத்ததில் என்ன தவறு. நான் எப்பவுமே தேடல் உள்ளவள்... எல்லாவற்றையும் குறித்து வைத்துள்ளேன்... கூகிளில் தேடி அதன் விபரம் அறிந்து கொள்வேன் என்றார். அப்போது சுரேஷ் குறுக்கிட்டு அதுக்காக 23எப் சீட்டில் பயணித்தேன் என்பதெல்லாம் ஓவர் என்றார். அதென்ன கடிதங்களுக்கு மட்டும் மொழி நடை மாறுது... என்று கேட்டவர், ஒருவேளை அது தனியாக எழுதிச் சேர்த்ததால் இருக்குமோ என ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். தனது அம்மாவும் கொஞ்சம் வாசித்ததாகவும் அவருக்கும் பிடித்திருப்பதாகவும் சொன்னவர் செய்திகள் தேவை என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.
துவக்க ஆட்டக்காரராக களமிறங்க இருந்து கடைசி நேரத்தில் மாற்றிக் கொண்ட நெருடா அழைக்கப்பட்ட போது, கீழே பிரியாணி வந்திருக்கிறது போய் எடுத்து வாருங்கள் என ராஜாராம், நௌஷாத்துடன் என்னையும் அனுப்பினார் பாலாஜி. எடுத்து வருவதற்குள் என்ன பேசினார் என்பது தெரியாது என்றாலும் நாவலில் உள்ள நுண் அரசியலை, உருவ வழிபாடு கூடாது என்பதால் கற்களை உடைத்ததை, வஹாபியிசத்தை தோற்றுவித்தது யார்..?, அதனால் என்ன நிகழ்ந்தது..?, பிரிட்டீஷ்காரனின் வருகையால்தான் வஹாபிஸம் வந்ததா..? என புத்தகத்தைப் படித்து அதன் ஊடான தேடுதலில் தான் அறிந்தவற்றைப் பற்றி மிக நீண்ட விவாதத்தை முன் வைத்தார். பேசியவர்களில் தீவிர ஆராய்ச்சி செய்து பேசியது நெருடா மட்டுமே. இப்படித் தேடிப் படித்திருக்கிறாரே என்ற வியப்பே மேலிட்டது. மிகச் சிறப்பான பேச்சு... மபூகாவுக்குள் பயணிக்காமல் அவருக்கு பிடித்த, நெருடலாய் இருந்த விஷயங்களைப் பேசினார். மகேந்திரன் 'சித்தப்பு நீ எப்ப மபூகா பற்றிப் பேசுவே..?' என வாட்ஸப்பில் தட்டி விட்டார் என்றாலும் கம்யூனிசக் கொள்கை கொண்டவரின் விரிவான பார்வை இப்படியாய் இருந்ததும் சிறப்புத்தான். வாழ்த்துக்கள்.
அண்ணாச்சி வெளியில் சென்ற தருணத்தில் மைக் பிடித்த பாலாஜி சான்யோ நீங்க பேசுறீங்களாவெனக் கேட்டபோது அண்ணாச்சி இல்லையே என யோசித்தவரை, அவர் வரட்டும் நீங்க வந்து பேசுங்க என அழைத்தார்.
சான்யோ பேசும் 'கிளியோபாட்ரா ஏன் செத்தாள்...? விஷம் அருந்தி என்கிறார்கள்... பாம்பைக் கடிக்கவிட்டு என்கிறார்கள்... எப்படி செத்திருப்பாள் என ரெண்டு மூணு நாளாவே யோசித்து அதற்கான தேடலில் இருக்கிறேன் என்றவர் மபூகாவை கண்டிப்பாக நான் நான்கைந்து முறைக்கு மேல் படிப்பேன் என்றார். எனக்கும் தேடுதல் ரொம்பப் பிடிக்கும் என்றவர். விரிவான தகவல்களுடன் சொல்லியிருப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று வாதிட்டார். மேலும் யார் என்ன சொன்னாலும் நீங்க அடுத்த நாவலும் இதேபோல் தகவலுடன் எழுதுங்க என்றார். இவர் பேசும் போது விமர்சனக் கூட்டத்துக்கே விமர்சனம் பண்றீங்களா... நாவலைப் பற்றிப் பேசுங்கன்னா இங்க பேசுனவங்க சொன்ன கருத்துக்களை வைத்துப் பேசுறீங்க என கௌசர், சுரேஷ், தேவா போன்றோர் சத்தம் போட்டனர். சிரித்துக் கொண்டே எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது என்றார்.
'காளி' எழுதிய கவிஞன் பிரபு பேசும்போது இந்த நாவல் வெளிவரும் முன்னர் நானும் அண்ணனும் இது குறித்து நிறையப் பேசியிருக்கிறோம். கவிதை, சிறுகதைக்கு எல்லாம் என்னய்யா வடிவம் இருக்கு... ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை... இப்படித்தான் இருக்க வேண்டும்... இந்த வடிவத்துக்குள் வரவேண்டும் என்றெல்லாம் சொல்லக்கூடாது. இது நாவல்தான்... எவ்வளவு உழைப்பு இருக்கு தெரியுமா இதில் என்றெல்லாம் பேசியவர், அனீஸ் மனைவிக்கு எழுதிய கடிதங்கள் எல்லாமே என்னைக் கவர்ந்தவை... அதில் அத்தனை காதல் இருக்கு.... குறிப்பாக ரெண்டாவது கடிதத்துக்கும் என்னுடைய காளி கவிதைக்கும் ஒரு தொடர்பு இருக்கு... அதை மீண்டும் வாசித்து யாராவது என்ன தொடர்புன்னு சொல்லுங்க பார்ப்போம்... வேறொன்னும் பேசுவதற்கு இல்லை என முடித்துக் கொண்டார்.
பாலாஜி அவர்கள் பேச ஆரம்பிக்கும் போது நாவலைப் பற்றிப் பேசணுமா... இல்லை இங்கு பேசியவர்களைப் பற்றிப் பேசணுமா எனக் கேட்க, நாவலைப் பற்றிப் பேசுங்க என்றதும் நானும் பயணத்தைக் கொண்டாடுபவன் என்பதால் நாவலை வாசிக்கும் போது நான் குருஷேத்திரம், தில்லி என சுற்றி வந்தேன் என்றவர் படிப்பு முடிந்து முதலில் வேலைக்குச் சேர்ந்ததும் நான் சென்றது தில்லி என்றும், தன்னைக் கூட்டிப் போனவன் விட்டுவிட்டு வேறு வேலையாகச் செல்ல, இந்தி தெரியாத ஊரில் சாப்பாடு வாங்கக் கூட தான் பட்ட கஷ்டத்தைப் பகிர்ந்து கொண்டார். நம்ம ஊரில் இட்லி வாங்கினால் சாம்பார், சட்னி கட்டிக் கொடுத்துருவாங்க... ஆனா சப்பாத்திக்கு பாஜியும் காசு கொடுத்து வாங்கணும் என்பதை அங்குதான் தெரிந்து கொண்டேன் என்றார். மேலும் தமிழ் ஆட்களே இல்லாத ஊரில் ஒரு ராணுவ வீரன் தமிழ்ப் பாடலை விசிலில் பாடிக்கொண்டு சென்றதைக் கேட்டு தான் அடைந்த சந்தோஷத்தையும் பகிர்ந்து கொண்டார். எனக்கு இந்த சந்திப்பிழை, ஒற்றுப்பிழை எல்லாம் தெரியாது என்பதால் 'ப்' போட்டானா, 'ண்' போட்டானான்னு எல்லாம் யோசிக்கலை... எனக்கு பிடித்த களம் என்பதால் அனீஸ் கூட பயணப்பட்டேன் என்றார். கடுமையான கத்திரி வேணுமாம்... அப்படி கத்திரிபோட்டிருந்தா மூணு பக்கத்துல முடிஞ்சிருக்குமேய்யா என்றார். இன்னும் நிறைய உருக்கமாய்ப் பேசியவர் இறுதியில் நல்லாச் சமைச்சவளுக்கு வளையல் போடணும் என்பதால் இந்த மோதிரத்தை அண்ணனுக்குப் போடுறேன் என யூசுஃப் அண்ணனுக்கு மோதிரம் அணிவித்து முத்தமும் கொடுத்தவர் உணர்ச்சிப் பெருக்கில் கண் கலங்கினார். உணர்ச்சிகரமாகப் பேசினாலும் அவரது பேச்சில் இழையோடும் நகைச்சுவை கடந்து இரண்டு விமர்சனக் கூட்டத்திலும் மிஸ்ஸிங்... அது ஏனோ...? சிங்கத்தை சிறையிட்டது யாருய்யா... நகைச்சுவையாய் பேசவும் ஒருவர் வேண்டும் என்பதை மனதில் கொள்வோம்.
பணி நிமித்தம் தாமதமாக, ரொம்பச் சோர்வாக வந்த அசோக் அவர்கள், நான் அதிகம் பேச முடியாது என்றதுடன் மைக்கும் வேண்டாம் எனச் சொல்லி ஒரு விரிவான பார்வையை தன் பேச்சின் மூலம் கொடுத்தார். நிறைய விஷயங்களைத் தவறென்றதுடன், சுற்றிக் காட்டுபவனுக்கும் பயணப்படுபவனுக்கும் உள்ள வித்தியாசத்தைச் சொன்னார். சுற்றுலாப் பயணிகளுக்குச் சுற்றிக்காட்ட உதவியாக வருபவன் அந்த ஊரில் உள்ள முக்கிய இடங்களுக்கு மட்டுமே கூட்டிச் செல்வான். அதே நேரம் பயணப்படுபவன் என்றால் அந்த ஊர் முழுவதும் சுற்றுவான்... மண், மக்கள், மொழி, வாழ்க்கை முறை என எல்லாவற்றையும் தேடித்தேடி பார்ப்பான். மபூகாவில் நீங்க சுற்றித்தான் காட்டுகிறீர்கள்... அந்த மக்களைப் பற்றியோ அவர்களின் வாழ்க்கை முறை பற்றியோ பேசவில்லை... ஏன் உள்ளூர் ஆட்கள் என மூவரை மட்டுமே சொல்கிறீர்கள்... மற்றவர்கள் எல்லாமே வெளியூர்வாசிகள்தான். எங்கு சென்றாலும் இடங்களை மட்டுமே பேசுகிறீர்கள் என்ற குற்றச்சாட்டை வைத்தார். இஸ்தான்புல் பற்றிய நாவலில் அங்கிருக்கும் ஒவ்வொரு வீதியும் பற்றி சொல்லப்பட்டிருக்கும்... அதனுடன் நான் மதுரையை ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறேன் என்றெல்லாம் மிக விரிவாய்... சோர்வை நீக்கிப் பேசினார்.
அண்ணாச்சி அவர்கள் பேசும் போது இதை ஏன் நான் முக்கியமான நாவல் என்கிறேன் என்பதற்கான விளக்கத்தைச் சொன்னார். கணேசகுமாரனின் பார்வை குறித்து விரிவாகப் பேசினார்... வாசகனின் பார்வையில் அது சரியான விமர்சனமே என்றார். சுரேஷ் கூட கணேசகுமாரனின் கருத்துக்கள் பெரும்பாலானவற்றில் நானும் ஒத்துப் போகிறேன் என்றார். சுவராஸ்யம் இல்லை என்பது வாசகனின் மனநிலை... ஆழப்படித்தால் இதிலிருக்கும் நுண் அரசியல் புரியும் என்றார். சுவராஸ்யம் இல்லை என்பதாய் எதைச் சொல்கிறீர்கள்..? நாவல் இல்லை என எப்படிச் சொல்லலாம்...? என விரிவாய்ப் பேசி விளக்கம் கொடுக்க, தாங்கள் ஆதரவுக் கரம் நீட்ட வேண்டும் என்பதால் எங்கள் கருத்துக்களைக் குறை சொல்கிறீர்கள் என சுரேஷ், தேவா எனப் பலரும் எதிர்க்குரல் கொடுக்க, விவாதம் சற்றே காரசாரமானது. நான் யூசுஃப்புக்காக கம்பு சுத்துறேன்னு நெனைக்காதீங்கய்யா எனச் சொல்லி, சௌதி குறித்தான வித்தியாசமான பார்வையை மபூகா முன் வைக்கிறது என்றும் எங்களிலும் பல பிரிவுகள் இருக்கத்தான் செய்யுது என்றெல்லாம் தன் அழகு தமிழில், காந்தக் குரலில் பேசி, யூசுஃப் விளக்கமாய்ப் பேசுவார் என முடித்துக் கொண்டார்.
யூசுப் அவர்கள் முன் முடிவோடு வந்து விட்டார் போல... இப்படித்தான் பேச்சு இருக்கும்... இதற்கு இப்படியான பதில் கொடுக்க வேண்டும் என எழுதிய குறிப்புடனே வந்து விட்டார். அங்கு பேசிய எல்லாருக்குமான பதிலை தன் நீண்ட உரையில்... கிட்டத்தட்ட அரைமணி நேரம் (அவர் பேசியதை முழுவதுமாய் வீடியோ எடுத்தவன் என்பதால் அவர் பேசிய நேரத்தைச் சொல்ல முடிகிறது) மிக விரிவாய்ப் பேசினார்... இப்படியான பேச்சுத்தான் அவரின் சிறப்பு. இந்தப் புத்தகம் எழுத தான் எப்படியெல்லாம் உழைத்தேன் என்றும், இதை எழுத எது அடிப்படைக் காரணமாக அமைந்தது என்றும், சின்னச் சின்ன விஷயங்களுக்காக பல படங்களை பார்த்தேன் என்றும், பல புத்தகங்களை வாசித்தேன் என்றும் சொன்னார். நாவலில் என்ன என்ன செய்ய வேண்டும் என ஒரு முன் முடிவு எடுத்ததையும் சொன்னார். டாக்குமெண்ட் பிக்சன் வகையில் நாவல் எழுதுவது எவ்வளவு சிரமம் என்பதையும் புனைவாய் எழுதுதல் எவ்வளவு சுலபம் என்பதையும் சொன்னார். அடுத்த நாவல் புனைவாய் எழுதுவதாய்ச் சொன்னார். அதில் கூட தான் தகவல் கொண்டாடி என்பதால் சிந்துபாத் பற்றிய செய்திகளை இணைக்க இருப்பதாகவும் அதற்கான தேடலில் இருப்பதாகவும் சொன்னார். சௌதி குறித்து தமிழில் எழுதப்பட்ட மூன்றாவது நாவல் மபூகா என்றார். பயணக் கட்டுரைகள் எழுதிய மாலன் கூட சௌதி பற்றி எழுத மாட்டேன் என்று சொன்னார் என்பதையும் சொன்னார். இன்னும் விரிவாய், விளக்கமாய்ப் பேசினார். அவரின் முழுப் பேச்சையும் வாசிக்க அவரின்
முகநூல் பதிவைப் பாருங்க.
நூருல் அமீன் எழுதிய புத்தகத்தை வாசித்து கருத்தைச் சொல்லுங்க என இலவசமாகக் கொடுத்தார். அவர் எடுங்க... எடுங்க... என நிற்க, எல்லாரும் பிரியாணி வாசத்தில் மயங்கிக் கிடந்தார்கள்... புத்தகமா... சோறா... என்றபோது சோறுதான் முக்கியமென பிரியாணிக்குள் புகுந்துவிட்டாலும் விழா முடிவில் பலர் புத்தகத்தைப் பெற்றுச் சென்றார்கள்.
பர்னிச்சரை யாருமே உடைக்கலையே எனக் கவலைப்படும் அண்ணாச்சி ஏனோ நேற்று அப்படியான கவலைக்குள் போகவே இல்லை... ஒவ்வொருவரின் பேச்சுக்குப் பின்னரும் நீண்ட விளக்கம் கொடுத்தது புதுமையாய் இருந்தது... மபூகாவுக்காக மட்டுமில்லாமல் இந்த முறையை எல்லா விமர்சனக் கூட்டத்திலும் தொடர்ந்தால் நலம்... கம்பெடுத்துக் கொடுக்கும் அண்ணாச்சி இறுதியில் இறங்கி ஆசிரியர் சார்பாய் கம்பு சுற்றியது ஏனோ என எல்லாருக்குமே ஒரு கேள்வி மனசுக்குள்... மற்றபடி எப்பவும் போல் அண்ணாச்சியின் அன்பும்... அணைப்பும்... குறிப்பாய் அந்த அழகு தமிழும் எல்லாருக்கும் கிடைத்தது. எப்பவும் போலவே புத்தகங்களைப் பாதுகாத்துக் கொண்டார்.
ஒரு தடவை கை கொடுத்ததுடன் ஓடிப்போங்கடா என பாலாஜி விரட்டியதால் நீண்ட நேரம் நிற்காது சற்று முன்னதாகவே அபுதாபியை அடைந்தோம். வரலை என்று சொன்னாலும் நீ வந்துதான் ஆகவேண்டுமென என் இருப்பிடம் வந்து அழைத்துச் செல்லும் பால்கரசு என்றும் நன்றிக்குரியவர். போகும் போதும் வரும்போது பல விஷயங்களைப் பேசிக் கொண்டு செல்ல இந்த முறை இராஜாராம், நௌஷாத், தங்கை சுடர்விழி என பயணமும் பண்பட்டதாகவே அமைந்தது.
தன் புத்தகங்களைக் கொண்டு வர, லட்சங்களைத் தொலைத்து எழுத்தில் சாதிக்க நினைக்கும் நௌஷாத்தின் கதை உண்மையிலேயே மனசுக்கு வலியைக் கொடுத்தது. எதற்காக இவ்வளவு பணம் கொடுத்து ஏமாற வேண்டும்... ஹிட்ஸும் சர்டிபிகேட்டுக்களுமே நம் எழுத்தின் பாதையைத் தீர்மானித்து விடும் என நினைத்து பணத்தைச் செலவழித்து நிற்பது எத்தனை அபத்தமானது... எழுத்துக்கான இடத்தை அந்த எழுத்தே பெற வேண்டுமேயொழிய குடும்பச் சூழலில் இப்படியான செலவு என்பது எதற்காக என்ற வருத்தம் என்னுள் இன்னும் நிறைந்தே நிற்கிறது. அவன் நினைத்த இடத்தைச் ஜெயிக்க வேண்டும் என்பதே பிரார்த்தனையாகவும் இருக்கிறது.
குறிப்பு எடுக்காமல் இவ்வளவு விவரமா எழுதுறீங்களே... என என்னை ஆரத்தழுவி, உங்க விமர்சனத்தை நான் விரும்பிப் படிப்பேன்.... எழுதுங்க எனச் சொன்ன சசி அண்ணனுக்கு நன்றி. என் எழுத்துக்கான இடத்தை அது பிடித்து வைத்திருப்பதால்தான் இப்படியான உறவுகள் எனக்குக் கிடைத்திருக்கின்றன என்பதில் மிகுந்த மகிழ்ச்சி.
மபூகா விமர்சனக் கூட்டம் குறித்து எழுதும் மனநிலை இல்லை என்பதே உண்மை... நௌஷாத் எழுதியதைப் பார்த்ததும் இனி நாமும் எதற்கு இதையே திரும்ப எழுத வேண்டும் என யோசித்தவனை நச்சரித்து எழுத வைத்தவர் இராஜாராம்... அவருக்கும் அவர் போட்ட பதிவில் வந்து எழுதச் சொன்ன நட்புக்களுக்கும் நன்றி.
அண்ணன் தம்பிகளுக்குள் புரிதலில் எப்போதேனும் சின்னச் சின்ன இடைவெளி வருதல் சகஜமே... அப்படியான இடைவெளி ஆரத் தழுவுதலில் சில நேரம் காணாமல் போய் விடுவதுண்டு... அப்படியான தழுவல் கிடைத்தது என்பதை இதயப் பூர்வமாக உணர்ந்தேன்... இடைவெளி உடைபடும் என நான் நம்புகிறேன். யூசுஃப் என்று எனக்கு எழுத வருவதில்லை... கனவு என்றேதான் வருகிறது... இங்கு யூசுஃபை நுழைக்க நிறைய சிரமப்பட்டேன்... இந்தக் குழுமத்துக்குள் வந்ததால் வந்த உறவில்லை இது.... கனவாய் போனில் ஆரம்பித்த உறவு... எனக்கு கனவுப்பிரியனாய்தான் தெரியும்... அப்படித்தான் இன்றும் அழைக்கிறேன்... அண்ணே... நீ இன்னும் எழுதணும்ண்ணே... சிகரம் தொடணும்... உன் வெற்றியில் நாங்கள் மகிழணும்... உன் மனதில் எப்போதும் நாங்கள் இருக்கணும்... செய்திகள் இல்லாது எழுதாதே... ஆனாலும் குறைத்துக் கொள்... மபூகா 300 பக்கத்துக்கு மேல் எல்லாருக்குமே அயற்சியைக் கொடுத்திருக்கும் என்பதே உண்மை.
விழாவைச் சிறப்பாக நடத்த உறுதுணையாக நின்ற அண்ணாச்சி, பாலாஜி இருவரும் போற்றுதலுக்கு உரியவர்கள். பாராட்டுவோம்.
சுபான் அண்ணாச்சி இல்லாத நிகழ்வு என்றாலும் அந்தக் குறை தெரியாமல் தமிழ்செல்வன் அவர்களும் கிங்க்ஸ்லி அவர்களும் மிகச் சிறப்பாக தங்கள் பணியைச் செய்தார்கள். அவர்களுக்கும் வாழ்த்துக்கள்... தமிழண்ணே உங்க பொண்ணு எம்பொண்ணை ஞாபகப் படுத்திக்கிட்டே இருந்துச்சுண்ணே...
மபூகா விமர்சனக் கூட்டம் மிகச் சிறப்பான நிகழ்வாய் அமைந்தது. நீண்டதொரு நிகழ்வில் எந்தச் சோர்வுமில்லாமல் பேசிய, கவனித்த அனைவருக்கும் நன்றி.
பேசியவர்களில் பெரும்பாலனோர் மூத்தவர்கள் என்றாலும் பதிவில் அண்ணன்... அண்ணன் என வருவதைத் தவிர்க்கவே பெயரை மட்டும் போட்டிருக்கிறேன். தவறாக நினைக்க வேண்டாம்...
பதிவு மிகப் பெரியது... பொறுமையாய் வாசித்ததற்கு நன்றி.
-'பரிவை' சே.குமார்.