சனி, 6 ஏப்ரல், 2019

அம்புயாதனத்துக் காளி - விமர்சனக் கூட்டம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: Prabu Gangatharan, புன்னகை, உட்புறம்
ம்புயாதனத்துக் காளி புத்தக விமர்சனக் கூட்டம் அமீரக எழுத்தாளர் மற்றும் வாசிப்பாளர் குழுமத்தின் முன்னெடுப்பில் எழுத்தாளர், கவிஞர் பிரபு அவர்களின் 'காளி பேரவை'த் தம்பிகளால் துபை ஸம்மிட் ஹோட்டலில் வெள்ளியன்று நடைபெற்றது.

அமீரக எழுத்தாளர் மற்றும் வாசகர் குழும விழாக்கள் எப்போதும் சோடை போவதில்லை... சொற்போர்களுக்குப் பஞ்சமிருப்பதில்லை... அதெல்லாம் இல்லாமல் காளிக்கு புகழாரமே அதிகம் சாத்தப்பட்டதால் சாத்தி வைக்கப்பட்டிருந்த மூங்கில் கம்புகளுக்கு வேலையில்லாமல் போய்விட்டது. எதிர்க் கருத்துக்கள் அதிகம் வைக்கப்படாதது எழுத்துக்குக் கிடைத்த வெற்றியே என்றாலும் அவ்விதமான கருத்துக்கள் இல்லாத மூன்று மணி நேரக்கூட்டம்  கொஞ்சம் அயற்சியாகவே இருந்தது. இந்தக் குறை அடுத்து வரும் மணல் பூத்த காடு, பழி போன்றவற்றில் சரி செய்யப்படும் என்பதாய் எடுத்துக் கொள்ளலாம்.

ஆசீப் அண்ணனின் குரலுக்கு ஒரு தனி அழகும் அமர்ந்திருப்பவரை வசீகரிக்கும் தன்மையும் உணடு. அது எல்லாக் கூட்டத்திலும் தொடரும் பாங்கு... இதிலும் அப்படியே... கோட்டெல்லாம் போட்டு வருவார் என்று எதிர் பார்த்தால்...  காளி கவிதைகள் என்பதாலோ என்னவோ... டீ சர்ட்டில் கலக்கலாய்...

ஆசிப் அண்ணன் விழாவினை எப்போதும் போல் தமிழ்த்தாய் வாழ்த்துடன்  தொடங்க, ஆசிரியை சோபியா வரவேற்ப்புரைக்காக வந்து பிரபுவை ஆபாசக் கவிஞனே என்றார்.  அம்புயாதனத்துக் காளியை ரொம்ப நேரமாகத் தேடி, சரியாகப் பிடித்துக் கொண்டார். அவருக்குப் பின்னே காளி குறித்தான தங்கள் விமர்சனப் பார்வையை ஒவ்வொருவராய் முன்வைத்தார்கள்.

எப்பவும் போல் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சசிக்குமார்  அடித்து ஆடினார்.  நிறைவான பேச்சாய் அமைந்தது. எல்லாக் கூட்டங்களிலும் நானே துவக்க ஆட்டக்காரன் என்பதால் என்னால் பின்னால் பேசுபவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை அறிந்து அதை வைத்து அடித்தோ அல்லது தடுத்தோ ஆட முடியாது போகிறது  என்பதை முன் வைத்தார். அடுத்த ஆட்டத்தில் துவக்க ஆட்டக்காரராக தான் களமிறங்குகிறேன் என நெருடா முன் வந்திருப்பதில் அவருக்கு மகிழ்ச்சியே.

பால்கரசு பேசும் போது இது வாழ்வியலோடு தொடர்புடையது என்றும் காளி கவிதைகளில் இருக்கும் நொச்சி,மஞ்சணத்தி, வேப்பம் பழம் என எல்லாவற்றையும் பற்றிச் சிலாகித்தார். ஓரிதழ்பூவில் அடித்து ஆடிய இவர், இங்கும் அடித்து ஆடுவார் என்ற நம்பிக்கையில் இரண்டாவதாக களமிறக்கி விடப்பட, இவரின் மிகச்சிறந்த தடுப்பாட்டத்தால் அண்ணாச்சிக்கு ஏமாற்றமே. மூக்கில் கம்புகளுக்கு வேலையில்லாது போனதே என்ற தனது வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டார்.

கனவுப்பிரியன் (யூசுப்)   பேச ஆரம்பிக்கும் போதே பந்த் அன்னைக்கு பஸ் ஸ்டாண்ட் போயி பார்த்திருக்கீங்களா... என ஆரம்பித்து, காளியின் அட்டைப் படத்தில் இருந்தே கொண்டாட வேண்டும் என்று சொல்லி ஒரு அழகிய கதையை காளி கவிதைகளுடன் சொல்ல ஆரம்பித்து பிரபுவை ஒருமையில் விளித்து பின்னர் மாகவியை அப்படி விளித்தல் அழகல்ல என்பதால் கவிஞர் எனப்பேசி வாழ்த்தி அமர்ந்தார்.

ஜெசிலா பேசும்போது சின்னப் புத்தகமாய் இருந்ததால் வாசிக்க எளிதாய் இருந்தது என்றும் தனக்கு கவிதைகள் பிடித்திருந்தது என்றும் பிரபு தன் பார்வையில் காளி குறித்து எழுதியதைப் போல் காளியின் பார்வையில் இருந்து எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

'கரும்புனல்' சுரேஷ் தனக்கு இந்த கவிதை வடிவமும் கவிதையும் பிடிக்கவில்லை என்பதை ஆணித்தரமாக முன் வைத்தார். காளி கவிதைகளை ஏற்றுக் கொள்ள இயலாது என்று தன் கருத்துக்களை முன் வைத்து வெளிப்படையாகப் பேசினார். அதற்காக டீ சர்ட்டைக் கூட தேர்வு செய்து போட்டு வந்திருந்தார்.

நெருடா காளி கவிதைகள் குறித்து அதிகம் பேசாமல், எழுத்தாளனின் வேலை எழுதியதும் முடிந்து விட்டது. அதன் பின் விமர்சனம் எப்படி வேண்டுமானாலும் வைக்கும் உரிமை வாசகனுக்கு இருக்கு... அதை இப்படி எழுதாதே... அப்படி எழுதாதே... பதிவைத் தூக்கு... என்று சொல்லும் உரிமை எழுத்தாளனுக்கு இல்லை... வாசகன் காசு கொடுத்து வாங்கிப் படிக்கிறான்... அவனுக்குத் தோன்றுவதை எழுதுவான் என்று பேசியதுடன் பிரபுவுக்கான தளம் சிறுகதையே என்பதால் அடுத்த புத்தகம் சிறுகதை நூலாக வரவேண்டும் என்றார்.

அவரின் பேச்சுக்குப் பின்னே ஆசிப் அண்ணன் நாற்காலிகள் நொறுக்குமா என்ற ஆவலுடன் தூபம் போட்டுப் பார்த்தார். யூசுப், அய்யனார், தேவா என விவாதத்தில் குதித்த போது விமர்சனத்துக்கும் ஒரு அழகியல் இருக்கு... அது குறித்து தனியாகப் பேசுவோம்... என முடித்துக் கொள்ள இப்போதும் மூங்கில் கம்புகள் முனை முறியாமல் காத்திருக்கும்படி ஆகிவிட்டது. என்ன கொடுமை காளி இது என அண்ணாச்சி விழாவைத் தொடர ஆரம்பித்தார்.

பின் வந்தவர்களில் திவ்யா காளியைப் படிக்கவில்லை என்று சொல்லி, பேசச் சொன்னதால் ஒரு சில கவிதைகளை இப்போதுதான் வாசித்தேன் என்றதுடன் ஒட்டக மனிதர்கள் குறித்தும் யூமாவாசுகிக்கு அனுப்பி வைத்ததையும் பற்றிப் பேசினார். ஒட்டக மனிதர்களுக்கு நாங்கள் மார்க்கெட்டிங் ஆட்கள் யாரையும் வைக்கவில்லை என்றாலும் யூமாவாசுகி வரை போய் இருக்கிறது என்பதே அதற்கான வெற்றிதான் என அண்ணாச்சி சொன்னார்.

தெரிசை சிவா காளி எப்படி உருவானாள் என்பதையும் தனக்கு அமீரகத்தில் முதல் விமர்சன மேடை என்றும் இந்த அட்டைப்படம் உன்னோட அடுத்த புத்தகத்துக்கானது என்றும் பேசினார்.  கௌசர் பேசும் போது காளியில் இருக்கும் அழகான, ஆழமான வார்த்தைகள் குறித்துப் பேசியதுடன் சாணி மிதிக்கும் போது கால் கொலுசின் முத்துக்கள் நட்சத்திரமாய் மின்னிதாய் எழுதியிருப்பதைச் சிலாகித்தார்.  

'காளி... தக்காளி' என ஆரம்பித்து இந்தப் புத்தகத்தை எங்கே என் தம்பி எடுத்துப் படித்துவிடுவானோ என்று மறைத்து வைத்தும் அவன் எடுத்து முதல் கவிதையை வாசித்து விட்டு ஒன்னும் புரியலை என்று சொல்லி வைத்து விட்டதாகச் சொன்னார் முஹம்மது பாட்சா.

சான்யோ பேசும் போது காளியைப் புகழ்ந்தாலும் என் 21 வயது அக்கா மகள் எடுத்துப் படித்து விட்டு இதற்கென்ன விளக்கம்... அதற்கென்ன விளக்கம் என்று கேட்டு விடுவாளோ என்று பயந்து என் வீட்டு லைப்ரரியில் வைக்கவில்லை என்றார். கவிமதி பேசும் போது பால்கரசு சொன்னது போல் அந்த வாசனை, பூக்கள், காய்களை வியந்தார். காளியை ரொம்பவே புகழவும் செய்தார். 

பாலாஜி எப்பவும் மதுரை மண்ணின் மனத்துடன் பேசி பார்வையாளர்களைச் சிரிக்க வைப்பார். அவர் பேச அழைக்கப்பட்டபோது ஆஹா சரவெடி காத்திருக்கு என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே என்றாலும் மதுரமாகத்தான் பேசினார்.

காளி புத்தகம் உருவாகக் காரணமாக பலர் இருந்தாலும் சாரு அமீரகம் வந்திருந்த போது அவருடன் தங்கிய இரவில் வாசித்துக் காட்டிய பிரபுவின் கவிதைகளை மீண்டும் அதிகாலையில் வாசிக்கச் சொல்லிக் கேட்டு இதை உடனே புத்தகமாக்க வேண்டும் என்று சொன்னதாய்ச் சொல்லி, அய்யனார் எழுதிய அணிந்துரையை வாசித்து, இதை ஆன்மீகக் கவிதை நூல் என்றும் சொல்லிச் சென்றார் தேவா.

அய்யனாரோ பாருங்க பக்கத்துல எப்படி பிறந்தநாள் விழாக் கொண்டாடுறாங்க... நாம இப்படிக் கொண்டாடுறோமா... தமிழ் கலாச்சாரம்ன்னு அதுக்குள்ளயே நிற்கிறோம் என்றார், காளி குறித்துப் பேசுவார் என்று பார்த்தால் அதான் அணிந்துரையிலேயே எல்லாம் சொல்லிட்டேனே இன்னும் சொல்ல என்ன இருக்கு என்பதாய் சிறு புகழாரத்துடன் முடித்துக் கொண்டார்.

பிரபு அண்ணனின் எழுத்து அருமை என்று சொல்லிய சுடர்விழி, இக்கவிதைகள் குறித்து தன் கணவனிடம் கூட விவாதிக்க எனக்குச் சங்கோஜமாக இருந்தது என்று சொன்னார். என்னதான் பெண்ணீயம், பெண்ணுரிமை பேசினாலும் கட்டுப்பெட்டித்தனம் என்று சொல்லப்படும் வட்டத்தை விட்டு என்னால் வெளிவர முடியவில்லை... அப்படித்தான் வளர்க்கப்பட்டிருக்கிறேன். என் பிள்ளைகளையும் அப்படித்தான் வளர்த்து வருகிறேன் என்றார்.

இவரின் பேச்சால் ஆஹா மூங்கில் கம்புக்கு வேலை வந்தாச்சுடா என மகிழ்ந்த அண்ணாச்சி, கம்பை எடுத்து நீட்ட, பிரபு அண்ணவோட எழுத்தை நான் குற்றம் சொல்லவில்லை... நடைமுறையைச் சொல்கிறேன் என அவர் ஜாகா வாங்கிவிட, கம்புக்கு வேலையில்லாது போச்சே என அண்ணாச்சியும் என்னைப் போல் பார்வையாளர்கள் சிலரும் வருத்தப்பட்டோம் என்பதே உண்மை.

காளி என்பவள் இப்போது உயிருடன் இருந்து இதை வாசிக்க நேரும் போது எனது உடலை இப்படி வர்ணித்திருக்கிறாரே... நியாயமா எனக் கேட்டால் உங்கள் பதில் என்னவாய் இருக்கும் என்ற கேள்வியையும் முன்வைத்தார் சுடர்விழி.

ஆசிப் அண்ணன் பேசும் போது குறுந்தொகையை மேற்கோள் காட்டி, சில வார்த்தைகளை விட்டுவிட்டு நம்மவர்கள் உரையெழுதியிருப்பதைச் சொல்லியதுடன் காமத்தை எழுதுவதில் பலருக்கு இருக்கும் தயக்கதை அய்யனாரும் பிரபுவும் உடைத்து எழுதி வருவது பாராட்டுக்குரியது என்றார். அத்துடன் பழியையும் காளியையும் கொண்டாட வேண்டும் என்றார்.

பிரபுவின் ஏற்புரையின் போது எல்லாருக்கும் நன்றி சொன்னதும் எல்லாரும் பேசிட்டீங்க... இதுக்கு மேல நான் என்ன பேச என்றவர், சுடர்விழியின் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை என்பதே உண்மை என்றார். 

சுடர்விழியின் பேச்சு சிலருக்கு நாங்களெல்லாம் அப்படியில்லை என்பதாய்த் தோன்றியிருக்கலாம். கிராமத்துக் கட்டுப்பெட்டி நீங்கள் மட்டுமே என்றும் நினைத்திருக்கலாம். அப்படி நினைப்பவர்கள் 21 வயதுப் பெண் படித்து விடுவாளோ என்ற அச்சத்திலிருந்தும் தம்பி வாசித்து விடுவானோ என்ற எண்ணத்திலிருந்தும் வெளிவந்து விட்டேன் என்றும்... என் குழந்தைகளை எல்லாம் வட்டத்துக்குள் வைக்கவில்லை... என் வீட்டில் காளி எல்லாராலும் வாசிக்கப்படுகிறது என்றும் ஒத்துக் கொள்வார்களேயானால் இதைக்கூட ஒரு விவாதப் பொருளாக்கலாம்.

எந்த ஒரு நிகழ்வு என்றாலும் சுபான் அண்ணாச்சியின் போட்டோ இல்லாமல் நிறைவடையாது. என்னையெல்லாம் எடுக்க மாட்டீங்களே என்று சண்டை போடுவேன் என்பதாலேயே நேற்று நிறைய போட்டோக்கள் எடுத்திருக்கிறார். காலையில் எழுந்து பார்த்தால் எல்லாருடைய முகநூல் போட்டோவும் மைக்கோடதான் இருக்கு. எல்லாப் படங்களும் அருமை. அவரின் உழைப்புத்தான் விழாவைச் சிறப்பாக்குகிறது. ஒரு மேடையிலேனும் கண்டிப்பாக இவர் பாராட்டப்பட வேண்டும்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 10 பேர், Jazeela Banu, Sudarvizhi Sethupathi Raja, Sanyo Daphne Pallikar, Dheva Subbiah, Prabu Gangatharan மற்றும் Nowsath Khan உட்பட, புன்னகைப்பவர்கள், கூட்டம், திருமணம் மற்றும் உட்புறம்

விழா நிகழ்விடத்தின் அருகில் நடந்த பிலிப்பைனிகளின் பிறந்தநாள் கொண்டாட்டமும் கைதட்டலும் காளி குறித்துப் பேசியவர்களுக்கு உற்சாகம் அளிப்பதாய் இருந்தது என்பதையும் சொல்ல வேண்டும்.

இன்னும் பலர் பேசியிருக்கலாம்... சிலரின் பேரும் தெரியவில்லை... புகழாரமே அரங்கை நிறைத்ததால் பாலுமகேந்திராவின் வீடு படம் பார்ப்பதைப் போல விறுவிறுப்பு இல்லாமல் இருந்ததால் பின்னால் போய் அமர்ந்துவிட்டேன்... பலரின் பேச்சை சரியாகக் கேட்கவும் இல்லை என்பதே உண்மை.

பிரபுவின்  காளி பாசறைத் தம்பிகள் ஏற்பாட்டில் இரவு உணவு சிறப்பு.... 

காளி புத்தகத்துக்கு அட்டைப்படம் வரைந்த கார்த்திகேயனை பலர் சிலாகித்துப் பாராட்டினர்.

முனைவர் நௌஷாத் காரில் வரும் போது கவிதைகளைக் குறித்துக் கொண்டதைப் பார்த்து விரிவாய்ப் பேசுவார் என்று நினைத்தால் பிரபுவுடன் தனியாகப் பேசிவிட்டதாகவும் இனி எழுத்தில் பேசுவேன் என்று சொன்னதும், அசோக் மற்றும் மகி போன்ற ஆளுமைகள் பேசாததும் வருத்தமே.

அடே யப்பா நாலஞ்சி வாட்டி கை கொடுத்துட்டேன்டா... கெளம்புங்கடா என பாலாஜி விரட்ட, நாங்கள் அபுதாபி நோக்கி புறப்பட்டோம்.

விழா சிறப்பாக முடிவடைந்தது. 

காளிக்கு கொண்டாட்டமாய் அமைந்தது. 

சமீபத்திய எழுத்துக்கள் மன வருத்தத்தைக் கொடுக்கும்படி அமைந்து விட்டதால் எழுதுவதில்லை என்றிருந்த என்னை ஏன் எழுதலை... எப்ப எழுதுவே என்ற பிரபுவின் கேள்வியே இப்போது எழுத வைத்தது. என் கவிதையை ஏன் வீட்டில் எல்லார் பார்வையிலும் படும்படி, எல்லாரும் படிக்கும்படி வைக்க முடியவில்லை என்று சொல்கிறார்கள் என்ற அவரின் கேள்வியும் என்னை இப்போதும் சுற்றிக் கொண்டேயிருக்கிறது.

-'பரிவை' சே.குமார்.

6 கருத்துகள்:

  1. சிறப்புப் பார்வை
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  2. மிகச்சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பு....எப்படி எல்லாத்தையும் எந்த குறிப்புப் எடுக்காமல் உங்களால் எழுதமுடிகிறது? வாழ்த்துகள் நித்யா...

    பதிலளிநீக்கு
  3. நல்லதொரு நிகழ்வு பற்றிய சிறப்பான தொகுப்பு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  4. இவ்வளவு தூரத்தில் இருந்துகொண்டு, நண்பர்கள் தமிழ்க்கவிதை நூலொன்றைப் பற்றி ஒன்றுகூடிப் பேசியதற்கும், அதை விரிாவாகத் தனது தளத்தில் எழுதியதற்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்.
    கவிதைகளில் முக்கியமானவற்றைச் சேர்த்துப் போட்டிருந்தால் நாங்களும் விழாவில் கலந்துகொண்ட முழுமை கிடைத்திருக்கும்.
    அடுத்த நிகழ்வுபற்றிய பதிவுகளில் இதைச் செய்ய வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. நல்லதொரு ஸ்வாரஸ்யமான நிகழ்வு. நீங்கள் தொகுத்த விதமும் சிறப்பு, குமார்.

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி