முனைவர் நௌஷாத்கான்...
எழுத்தில் சிகரம் தொட வேண்டுமென தொடர்ந்து பறந்து கொண்டிருப்பவர்...
இதுவரை 18 புத்தகங்கள் போட்டிருக்கிறார். அதில் 11 புத்தகங்கள் மணிமேகலைப் பிரசுரம் மூலமாக. இன்னும் 4 புத்தகங்கள் அச்சில் இருக்கிறது. 40 புத்தகங்கள் போடுவதற்கான கதையும், கவிதையும் இவரிடம் இருக்கிறது.
தினமும் கதைகளும், கவிதைகளுமாக எழுதிக் கொண்டேயிருப்பவர். எழுத்தே மூச்சாய்... எழுத்தே உயிராய்... எழுத்தே உணர்வாய்... தினமும் எழுத வேண்டும் என்ற நினைப்புடனே வலம் வருபவர்.
ஒவ்வொருவரின் நியாயப் பக்கங்கள்
நிறம் மாறும் மனிதர்கள்!
நாளைய பொழுதும் உன்னோடுதான்!
என்ற தனது மூன்று புத்தகங்களை வாசிக்கச் சொல்லி என்னிடம் கொடுத்தார்.
ஓவ்வொருவரின் நியாயப் பக்கங்களை மட்டும் முழுவதுமாக வாசித்தேன்... மற்ற இரண்டும் இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை.
நல்ல கதைகள் மூலம் நல்லதை விதைக்க முடியும் என்கிற எண்ணத்தோடான கருக்களையே கதையாக்க முயற்சித்திருக்கிறார். அதற்காகவே அவரைப் பாராட்டலாம்.
ஒவ்வொருவரின் எழுத்துப் பாணியும் ஒவ்வொரு விதமாக இருக்கும்... ஒருவரைப் போல் மற்றவர் எழுத முடியாது... அப்படி எழுத நினைத்துத் தோற்றவர்களே அதிகம். சிலர் வரலாறுகளை கதைக்குள் லாவகமாகச் சொருகுபவர்களாகவும், சிலர் செய்திகளைக் கதைக்குள் சொருகுபவர்களாகவும் சிலர் வெறும் கதை சொல்லிகளாகவும் இன்னும் இன்னுமாய் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாய்... நௌஷாத்தோ கருத்துச் சொல்வதைக் களமாகக் கொண்டிருக்கிறார்.
இப்படிக் கருத்துச் சொல்லுதல் என்பது... அதாவது ஒவ்வொரு கதையின் முடிவிலும் நீதி சொல்லுதல் என்பது குமுதம், ஆவியில் வரும் ஒரு பக்கக் கதைகளில் காணலாம். அப்படித்தான் இவரின் ஒவ்வொரு கதைக்குப் பின்னும் கட்டாய நீதி சொல்லுதல் இருக்கிறது.
பெரும்பாலும் பார்த்த... கேட்ட... வாசித்த... விஷயங்களைத்தான் கதையாக எழுதியிருக்கிறார். சில உண்மைச் சம்பவங்களையும் கதையாக்கியிருக்கிறார். அவற்றைப் படிக்கும் போது நமக்கு அது கதையாகத் தெரியவில்லை... அப்பட்டமாக அந்த உண்மைச் சம்பவத்தை நினைவில் நிறுத்துகிறது. இது சமீபத்தில் அவர் எழுதிய டிக்-டாக் பரிதாபங்கள் என்ற கதை வரை தொடர்கிறது என்றே சொல்லலாம்.
வாசித்த கதைகளில் கருத்துச் சொல்லுதல் என்பது சில கதைகளின் ஆரம்பத்திலேயே ஆரம்பித்து விடுவது அலுப்பைத் தருகிறது. இது இப்போது எழுதும் கதைகளில் இல்லை எனலாம். நெருடா போன்றோர் திட்டிக் கொண்டே இருப்பது கூட மாற்றத்துக்கான வழிதான்... இந்தப் புத்தகங்களில் இருக்கும் கதைகளுக்கும் தற்போதைய எழுத்துக்கும் மாறுதல் இருக்கிறது... இன்னும் மாற வேண்டும்... மாற்றங்கள் மட்டுமே எழுத்தை கொண்டு செல்ல வேண்டிய இடத்துக்கு கொண்டு செல்லும்.
இந்தப் புத்தகங்களில் இருக்கும் கதைகளுக்கான களம் சிறப்பானது... சொல்லியிருக்கும் விதமும் ஆங்காங்கே கருத்துப் புகுத்தலுமே கதையோடு ஒன்ற முடியாத நிலைக்குத் தள்ளிவிடுகிறது என்பதே உண்மை. இந்தக் குறையும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக களைக்கப்பட்டு வருவதை சமீபத்திய கதைகள் காட்டுகின்றன. அந்த வகையில் பாராட்டலாம்.
எழுத்தில் சாதிக்கணும்... புகழ் பெற வேண்டும்... குறிப்பாக சினிமாவில் காலூன்ற வேண்டும் என்ற ஆவல், வலி, வாழ்க்கை, கனவு என எல்லாவற்றையும் எழுத்தாக்கச் சொல்கிறது. இந்த எண்ணமும் வேகமுமே கருவில் இருக்கும் அடர்த்தியைக் கதையில் கொண்டு வரமுடியாமல் செய்துவிடுகிறது என்பதையே இக்கதைகள் காட்டுகின்றன...
நௌஷாத்கான்... இங்கு பனிரெண்டு மணி நேரம் வேலை செய்துவிட்டு இரவில் கிடைக்கும் சொற்ப நேரத்தில்தான் தன் எழுத்தை உயிர்ப்பிக்கிறார். இந்த நாட்டில் பனிரெண்டு மணி நேரம் வேலை செய்துவிட்டு, அதன் பிறகு அறைக்கு வந்து குளித்துச் சாப்பிட்டு மற்ற நண்பர்களுக்குத் தொந்தரவில்லாமல் கதை, கவிதை எழுதுதல் என்பது எல்லாருக்கும் சாத்தியமாவதில்லை... அதைச் சாத்தியமாக்கி நிறைய எழுதும் இவர் அதற்காக தன் தூக்கத்தைத் தொலைத்து இருக்கிறார் என்பதுதான் உண்மை... தொலைத்தவைகளைத் தேடும் கதைகளே அதிகமாய் வருவதும் தனிமை கொடுக்கும் வலியால்தான் என்பதுதான் நிதர்சனம்.
பேசும் போது உங்களிடம் பேசியதில் எனக்குச் சில கதைகளுக்கான 'நாட்' கிடைத்து விட்டது என்று சொல்லும் இவர் அவற்றை எல்லாம் கதையாக்கி விடுவதில் திறமைசாலிதான் என்றாலும் கதையிலும் யாருடன் பேசினாரோ அவர்களையே கதாபாத்திரமாக அலைய விடுவது அவ்வளவு சிறப்பானதாக இருப்பதில்லை... பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பதை பலமுறை நாங்கள் சொல்லியிருக்கிறோம்... சொல்லிக் கொண்டேதான் இருக்கிறோம்... ஏனோ அவ்வப்போது அப்படியான கதைகள் வந்து கொண்டுதான் இருக்கிறது.
வெளிநாட்டுக் காசு ஒன்றும் அட்சய பாத்திரம் மூலமாக வருவதில்லை என்பதை யாரும் உணர்வதில்லை... தகப்பன் இல்லாமல் தானே கையூன்றி... இங்கு கிடைக்கும் சொற்ப சம்பளத்தில் குடும்பத்தையும் பார்த்து... தன் கனவையும் நிறைவேற்றிக் கொள்ளத் துடிக்கும் நௌஷாத்தை, பணத்துக்காக அழகாகப் பயன்படுத்தியிருக்கின்றன பிரசுரங்கள்... எத்தனை அபத்தமான புத்தக வடிவமைப்பு... மிகப்பெரிய பிரசுரம்... அட்டைப்படமாய் நடிகர்களின் படங்களைப் போட்டு... சாமர்த்தியமாக தங்களின் பெயரை வெளியட்டையில் போடாமல்... பல லட்சங்களைச் சுருட்டியிருக்கிறார்கள். ஒருவனை ஏமாற்றிப் பிழைத்தல் எத்தனை கேவலமானது. அதுவும் கனவுகளோடு அலைபவனின் கனவைக் காசாக்கிப் பார்க்கும் எண்ணம் எப்படி அவர்களுக்கு வந்தது..? இதில் யார் தவறு அதிகம் என்று பார்க்க முடியவில்லை... தானே தேடி விளக்கில் விழுந்த விட்டில் கதைதான் ஞாபகத்துக்கு வருகிறது. தூண்டில்காரனின் புழுவின் வாசத்தில் சிக்கிய மீனாய்த்தான் தெரிகிறார்.
தங்களிடம் புத்தகமாக்கலாம் எனக் கொடுத்த கதைகளில் இவை இவை நல்ல கதைகள்.... இவற்றை இப்படி மாற்றினால் இன்னும் சிறப்பாகும் எனச் சொல்லி, அப்படிச் செய்திருந்தால் அவர் வெளியிட்ட புத்தகங்களின் எண்ணிக்கையில் சில குறைந்திருக்கலாம்... ஆனால் சிறப்பான கதைகளை எழுதி, எழுத்தாளனாய் தனக்கான இடத்தை எப்போதோ அடைந்திருக்க முடியும். இனியேனும் இத்தவறுகள் நிகழாது பார்த்துக் கொண்டார் என்றால் நிச்சயம் சிறப்பான இடத்தை அடைவார் என்பது என் நம்பிக்கை. பார்த்துக் கொள்வாரா என்பதை அவர்தானே தீர்மானிக்க வேண்டும்.
கதைகளைக் கொடுங்கள் புத்தகமாக்கலாம் என்றவுடன் ஏதோ நம்பிக்கையில் கொடுத்துவிட்டு அதற்கான பணத்தையும் கொடுத்துவிட்டு வருடக் கணக்கில் காத்திருத்தல் என்பது வேதனை... சும்மா வந்து விடுவதில்லை இந்தப் பணம்... வாழ்க்கையையும் நிம்மதியையும் தொலைத்து, எல்லாவற்றையும் இழந்து வாடும் வாழ்க்கையின் வலிகளை நிறைத்துத்தான் வருகிறது என்பதை ஏனோ அவர்கள் புரிந்து கொள்ளவில்லை... இவரும் அவர்களின் கைப்பாவையாய்... தலையாட்டிப் பொம்மையாய் இருந்துவிட்டது அவர்களுக்கு மேலும் சுலபமாகிவிட்டது... பணம் காய்க்கும் பேரிச்சையாகிவிட்டார்... முடிந்தவரை அறுவடை செய்திருக்கிறார்கள்.
நல்ல கதையை எழுதி தலைப்பை ஆபாசமாக வைக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும்... அதுதான் நிறையப் பேரை வாசிக்க வைக்கிறது என்று சொல்வது எல்லாம் ஏற்க முடிவதில்லை. நல்ல கதையாக, ஈர்க்கும் எழுதாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக வாசகர்களைச் சென்றடையும் என்பதை மனதில் நிறுத்த வேண்டும். ஆபாசத் தலைப்புக்களே பலரை உள் நுழைய யோசிக்க வைக்கும் என்பதே உண்மை.
பிரதிலிபி போன்ற தளங்கள் இவரை நட்சத்திர எழுத்தாளர்களில் ஒருவராய் வைத்திருக்கின்றன...வாழ்த்துக்கள். ஆனால் அந்த ஹிட்ஸ்க்கள் என்னவோ தன்னை உயரத்தில் நிறுத்தியிருப்பதாக நினைப்பது அறியாமை. ஹிட்ஸ் மட்டுமே எழுத்தை முன்னிறுத்தும் என்ற நம்பிக்கையை மனசுக்குள் மிகப் பெரிதாய் அவருக்கு இருக்கிறது. ஹிட்ஸ்கள் அந்தத் தளங்களை வாழ வைக்குமே ஒழிய... எழுதுபவனை அல்ல என்பதை உணர வேண்டும். அதிலிருந்து முதலில் வெளிவரவேண்டும்... எழுத்துத்தான் தன்னைப் பற்றி பேச வைக்க வேண்டும் என்பதை அவர் மனதில் நிறுத்த வேண்டும் என்பதே என் ஆவா.
முதல் கதையே நிறையக் கருத்துக்களுடன் கட்டுரையாகப் பயணித்தால் அடுத்த கதைகளுக்கும் யாரும் பயணிக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து புத்தகங்களை வடிவமைக்க வேண்டும்... இன்னும் சிறப்பான கதைகளுடன் நல்ல புத்தகங்கள் எழுதி, தன் ஆசையை... கனவை... அவர் அடைய வேண்டும் என்பதே என் ஆசையும் பிரார்த்தனையும்...
இப்போது நான்கு புத்தகங்கள் அச்சில் இருக்கின்றன... அதிலிருக்கும் கதைகள் எல்லாம் பேசப்பட வேண்டும். பேசப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கைதானே வாழ்க்கை.
இழப்புக்களை மனதில் நிறுத்தி, புகழ் மாயையில் இருந்து விடுபட்டு நல்ல கதைகளை எழுத வாழ்த்துக்கள்.
என்னடா இவன் புத்தகம் குறித்து எழுதச் சொன்னா... இப்படி எழுதியிருக்கிறான்னு தோன்றலாம்... மனதில்பட்டதைச் சொல்வதில் என்னிடம் எப்போதும் தயக்கம் இருப்பதில்லை... அப்படித்தான் இதுவும்... இந்த மனநிலைதான் பலருக்குப் பிடிக்காமல் போகக் காரணமாகவும் இருக்கிறது என்றாலும் என் எண்ணம் எப்போது மாற்றுப் பாதையிலோ... முகமலர்ச்சிக்காக வாழ்த்தி எழுதவோ முயல்வதில்லை என்பதை என்னை அண்ணனாய் நினைத்து எல்லாம் சொல்லும் தம்பி நௌஷாத் அறிவார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
ஒன்றே ஒன்றுதான் புகழை மட்டும் விரும்பாதே... எவ்விதமான விமர்சனம் என்றாலும் ஏற்றுக் கொள்... கதையை அரதப் பழசு... கேவலம் என்று திட்டினாலும் அதை உரமாக எடுத்துக் கொள்... நான் எழுதினேன்... நீ எப்படிப் பேசலாம் என்ற மனநிலைக்குள் வந்துவிடாதே... விமர்சனங்களே உன் எழுத்தைப் பட்டை தீட்டும் என்பதை மறக்காதே... உன் எழுத்தை விமர்சகர்கள் முன் வை... விமர்சகர்கள் எப்படிப் பேசலாம் என எதிர் விவாதம் செய்யாதே... விமர்சனத்தால் நீ பட்டை தீட்டப்படுவாய்... இதிலிருக்கும் தவறுகளை அடுத்த கதையில் திருத்திக் கொள்ள அது வாய்ப்பாக அமையும்.
கடந்தவை கடந்தவையாகவே இருக்கட்டும்... இனி நடக்க இருப்பவை நல்லதாய் அமையட்டும்.
சிகரம் தொட வாழ்த்துக்கள் நௌஷாத்...
-'பரிவை' சே.குமார்.
நல்ல பகிர்வு.
பதிலளிநீக்குநிறைகளை மட்டும் சொல்லாமல் குறைகளையும் சொன்னது சிறப்பு.
பாராட்டுகள். முனைவர் நௌஷாத் அவர்களுக்கு வாழ்த்துகள்.
ஆம் அண்ணா... இன்னும் நிறைய மாறவேண்டும் என்பதாலேயே இப்பகிர்வு.
நீக்குநன்றி.
நல்லதொரு அறிமுகம். மனதில்பட்ட விஷயங்களை நண்பர் என்பதால் வெளிப்படையாகவே சொல்லி விட்டீர்கள்.
பதிலளிநீக்குஒரு தகவல்.
வரும் செவ்வாய்க்கிழமை இவரது கதைதான் எங்கள் தளத்தில் வெளிவருகிறது....
ஆம் அண்ணா... இன்னும் நிறைய மாறவேண்டும் என்பதாலேயே இப்பகிர்வு.
நீக்குசெவ்வாய் வருமென்று சொன்னார்... வாழ்த்துக்கள்.
நன்றி.
நௌஷாத்கான் அவர்களுக்கு வாழ்த்துகள்...
பதிலளிநீக்குநன்றி அண்ணா
பதிலளிநீக்குகுமார் நல்ல வெளிப்படையான கருத்துகள். உண்மை குறைகள் நம்ம பட்டை தீட்டும். எழுத்தாளர் அவர்களுக்கு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குதுளசிதரன், கீதா
நன்றி அண்ணா...
நீக்குஅன்பின் குமார்...
பதிலளிநீக்குநல் வாழ்த்துகளுடன்...
நாற்பது ஆண்டுகளுக்கு முன் என் நெஞ்சில் எழுந்தவை - தங்கள் பதிவில் வரி வடிவங்களாக....
வார இதழ்கள், பதிப்பகம், பிரசுரம், ஆகா, ஓகோ!...
நல்லவேளை.. இதையெல்லாம் கடந்து வந்து விட்டேன்...
திரு நௌஷாத் அவர்களது கதையினை இன்று எங்கள் தளத்தில் வாசித்தேன்..
அவருக்கு எனது பாராட்டினைச் சொல்லவும்...
விரைவில் செய்தி ஒன்று..
அது தங்களுக்கு ம்கிழ்ச்சியளிக்கும்..
வாழ்க நலம்...
வாங்க அய்யா...
நீக்குவணக்கம்.
மகிழ்வான செய்தி எதாக இருக்கும் என யூகிக்க முடிகிறது...
அதற்க்காக காத்திருக்கிறேன் அய்யா...