ஞாயிறு, 7 அக்டோபர், 2018

மனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...



ன்பின் ராம்...

நலம்தானே..?

இதென்ன கேள்வி என்று நீ சிரிக்கக் கூடும்... ஆனாலும் இப்படித்தானே ஆரம்பிக்க வேண்டும் இல்லையா..?

சரி... சரி... நல விசாரிப்பு நம்முள் எதற்கு...

எத்தனை அன்பை... நேசத்தை... பாசத்தை... பரிவைக் கண்டேன் அந்த இரவில் உன்னிடத்தில்... 

அந்த ஒற்றை இரவு போதுமே இனிமேலான வாழ்க்கையை மழைச்சாரலாய் மகிழ்விக்க...  

அந்த இரவு நீண்டு கொண்டே போகக்கூடாதா என்று ஏங்கிக் கொண்டேதான் உன்னருகில் நானிருந்தேன்... காலத்துக்குத் தெரியாதே நம் கண்ணீரூம் காதலும்...

ஆமா... நீ இவ்வ்வ்வளவு பேசுவாயா ராம்..? ஆச்சர்யத்தில் பூத்துப் போனேன் தெரியுமா?

ரீயூனியனுக்கு வா என்று சுபாவும் பிரண்ட்சும் கூப்பிட்டப்போ வரும் எண்ணமில்லை எனக்கு... நீ வரக்கூடும்.. உன்னைப் பார்த்து ஏன் என்னிடம் சொல்லாமல் தஞ்சாவூரை விட்டுப் போனாய்..? உனக்கு என் நினைப்பே இல்லாமல் போனதெப்படி..? என்றெல்லாம் கேட்டு உன்னிடம் உரிமையுடன் சண்டை போட வேண்டும் என்றுதான் கனெக்சன் ப்ளைட் பிடித்து ஓடி வந்தேன்.

உன்னைக் கண்ட அந்த நிமிடம்... அப்பப்பா... என் வாழ்வின் அற்புத தருணம்... உன்னைக் கண் தேட, நீ ஒளிந்திருக்கிறாய் என்றார்கள்.. என் முன்னே என் உள்ளம் உன்னருகே ஓடிவந்ததை நீ அறிவாயா..?

பத்தாம் வகுப்பில் கருவாயனாய்.. என்னைப் பைத்தியமாய்க் காதலித்தாலும் சொல்லத் தயங்கி படபடக்கும் இதயத்துடன் வலம் வந்தவனா இவன் என தாடி மீசையுடன் ஆஜானுபாகுவாய் உன்னைப் பார்த்து யோசித்தேன்.... இருப்பினும் இன்னும் படபடப்பில் பத்தாம் வகுப்பு பையனாய் நீ என்பதை உணர்ந்த போது யோசனை காற்றுப் போன பலூன் ஆனது... நீ கையில் பலூன் வைத்திருந்தாய்தானே அப்போது....

ஆமா என்னைப் பார்த்ததும் அன்று போல் இப்பொழுதும் ஏன் மயங்கினாய்...?

என்னடி செய்தாயென நட்புக்கள் கேட்டார்கள்... என்ன பதில் சொல்ல... இன்னும் அவன் காதல் கோழை என்றா..? உன்னைப் பார்த்தே சிரித்து மழுப்பினேன்.

உன்னைப் பார்த்து கேட்க நினைத்த கேள்வியை எல்லாம் மறக்கடித்து விட்டது நீ ஓடிச் சென்று எடுத்து வந்து கொடுத்த சாப்பாடு... நீ சாப்பிடு எனக் கொடுத்ததும் என் எச்சில் என்பதால் எத்தனை சந்தோஷம் உனக்கு... விட்டால் ஸ்பூனைக் கூட சாப்பிட்டிருப்பாய் போல....

அந்த இரவு.... 

கார்... இரயில்.. பைக் என மாறி மாறிப் பயணம்... 

வயசானால் என்ன... அந்த மணித்துளிகள் எத்தனை இளமையாக இருந்தது தெரியுமா..?

என்னை நினைத்தபடி நீ... உன்னைப் பருகியபடி நான்.... ஆஹா... சொர்க்கம்...

நீ இறக்கிவிட்ட தருணத்தில் நான் இறந்து விட்டதாய் நினைத்தேன்...

'என்னை விட்டு ரொம்பத் தூரம் பொயிட்டியா ராம்..?' என்று அழுகையுனூடே நான் கேட்ட போது 'இறக்கிவிட்ட இடத்தில்தான் நிற்கிறேன்' என்று நீ சொன்னதும் எப்படி இறங்கி வந்தேனென்றெல்லாம் தெரியாது... வந்தேன் உன்னிடம்... அந்த அன்பு... பிரிதலின் வலி எல்லாமாய் சேர்ந்ததில்தான் உன்னை அடித்தேன்... ஒரு பெண் குழந்தைக்கு அம்மா என்பதை மறந்து... அதில் எனக்கு குற்ற உணர்வில்லை ராம்... நீ என் குழந்தை...

உனது கரடிக்குட்டி தாடியை எடுத்து உன்னை பத்தாம் வகுப்பு ராமாக பார்க்க ஆசைப்பட்டேன்... ஆமா முடிவெட்டியவர் எல்லாம் தெரியும் எனச் சிரித்தாரே... எல்லாவற்றையும் எல்லாரிடமுமா சொல்லியிருக்கிறார்...?

தாடி... மீசை... இல்லாத ராம் எத்தனை அழகு தெரியுமா... அதை நான் மட்டுமே பருகினேன் ஆசை தீர அந்த இரவில்...

ஆம்பளை நாட்டுக்கட்டைடா நீ என்றதும் உனக்கென்ன அத்தனை வெட்கம்... நாட்டுக்கட்டை பெண்களுக்கு மட்டுமான வாசகமா என்ன..? நீ நாட்டுக்கட்டைதான்... அதிலும் கடைந்தெடுக்கப்பட்ட கருவேலங்கட்டை.

அந்த இரவு இரயில் பயணம் மறக்கக் கூடியதா சொல்... எத்தனை இன்பத்தை அந்தப் பயணம் அள்ளிக் கொடுத்தது... திகட்டத் திகட்டக் கிடைக்கவில்லை என்றாலும் தித்திப்பாய் கிடைத்ததே..

உன் மாணவிகளில் அவள் ரொம்பச் சூட்டிகை.... அவள் தயங்கி நின்றதைப் பார்த்ததும் எங்கே சார் மேல எனக்கு கிரஷ் இருந்துச்சுன்னு சொல்லி விடுவாளோ என்று நினைத்தேன்.. நல்லவேளை உன்னை ரொம்ப நல்லவன் என்பதோடு நிறுத்திக் கொண்டாள். நீ நல்லவன் என்பதை அவள் சொல்லித்தான் அறிய வேண்டுமா என்ன..?

நான் அவர்களிடம் நம் காதல் குறித்தும் திருமணம் குறித்தும் சொன்ன பொய் தப்பென்று மற்றவர்களைப் போல் நீயும் நினைத்தாயா ராம்..? நான் வாழ நினைத்த வாழ்க்கையை... வாழாத வாழ்க்கையை அந்த நள்ளிரவில் சில நிமிடங்களேனும் வாழ்ந்து பார்த்தேன்... அது தவறா..? 

நீ அதை தவறாய் நினைக்கவில்லை என்பதை உன் சிரிப்புச் சொன்னதில் அறிந்தேன்... எனக்குத் தெரியாதா என் ராமை. ராம்... நீ வெள்ளந்தி... இப்படி இருக்காதே இந்த உலகம் உன்னை வஞ்சித்து விடும்.

ரம்பை... ஊர்வசி பற்றியெல்லாம் பேசும் போது எத்தனை வெட்கம் உனக்கு... இதையெல்லாம் எங்கே வைத்திருந்தாய்... 37 வயது ஆம்பிள்ளைக்குள் இத்தனை வெட்கத்தை அந்த இரவில்தான் பார்த்தேன்.

உன் வீட்டில் என் சமையல்.... சுமாராய்த்தான் சமைப்பேன்... சூப்பர் என்றாய்.. என் வீட்டில் சமைக்க ஆளுண்டு... என் கணவருக்கு ஒரு முறை கூட என் சமையல் இல்லை தெரியுமா...? .

நண்பர்கள் மூலமாக எத்தனை முறை கேட்டிருப்பாய் 'யமுனை ஆற்றிலே' பாடச் சொல்லி... ஏன் பாடவில்லை தெரியுமா...? உன் தவிப்பை... உன் மகிழ்வை... நான் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்ற சுயநலமே.. அந்த இரவில் மின்சாரம் போன நேரத்தில் நான் பாடியதே உன் தவிப்பையும் மகிழ்வையும் ஒரு சேர நீ கொண்டு வரும் விளக்கொளியில் அனுபவிக்க வேண்டும் என்பதாலேயே... அனுபவித்தேன் ஆயுசுக்கும் சேர்த்து.

ராம்... உனக்கொன்று தெரியுமா...?

என் தனிமையில் இந்த 'யமுனை ஆற்றிலே' பாடலை எத்தனை முறை பாடியிருக்கிறேன் தெரியுமா ... அப்போதெல்லாம் என் எதிரே நீ இருப்பாய்...?

என் துப்பட்டாவும்... தலையில் வைத்த பூவும் உன் டிரங்குப் பெட்டிக்குள்... உன் நினைவுகள் எல்லாம் என் மனசுக்குள்...

என் மஞ்சள் குர்தாவும்... ஜீன்ஸ் பேண்டும் இனி உன் டிரங்குப் பெட்டிக்குள் பத்திரமாகும் என்பது எனக்குத் தெரியும்... உனது சட்டையின் வாசம் என் மனமெங்கும் நிரம்பியிருப்பது உனக்குத் தெரியுமா..?

நீ எவ்வளவு பேசினாய்..? என்னைப் பின்தொடர்ந்த பையனை அடித்து போலீஸ் கேஸ் ஆனது.... என்னைத் தேடி கல்லூரி வந்தது... என நிறையப் பேசினாய் ராம்...  

அந்த மழை இரவு எத்தனை சுகமாய் இருந்தது தெரியுமா..? 

உனக்கு பெண் பார்க்க வேண்டும் என நான் சொன்ன போது ஏன் நீ அப்படி மறுத்தாய்... உனக்கும் ஒரு வாழ்க்கை வேண்டும் ராம்... அதை நான் பார்த்து ரசிக்க வேண்டும்.

என் மகளின் போட்டோ பார்த்ததும் எத்தனை மகிழ்வு உனக்கு... அப்படி ஒரு மகிழ்வு உன் மகளைப் பார்க்கும்போது எனக்கும் வேண்டும் ராம்...

என் திருமணத்தில் ஒரு ஓரமாய் ஓளிந்து நின்றாயா நீ.... வலித்தது ராம்.... உண்மையில் வலித்தது. இதற்காக எத்தனை முறை அழப்போகிறேனோ தெரியவில்லை.

என்னை முதன் முதலில் சேலையில் பார்த்தபோது தூக்கிக் கொண்டு போய் கோவிலில் வைத்துத் தாலி கட்டணும் போல் இருந்ததென்றாயே... திருமணத்தன்றே சினிமா ஹீரோவாய் தூக்கிச் சென்றிருக்கலாமே... ஏன் ராம் கோழையாய் இருந்தாய்...? நீ வந்து என் ஜானு எனக்குத்தான் என கேட்பாய் எனக் காத்திருந்தேன் என்று உன்னிடம் சொன்னேன்தானே அந்நள்ளிரவில்...

அந்த வசந்தி உன் பெயரைச் சொல்லியிருந்தால் வாழ்க்கை நமக்கு வசப்பட்டிருக்கும்... ஆனால் இந்த நள்ளிரவு வசமாகியிருக்குமா..?

கேட்க நினைத்தேன் ராம்... எங்கே உன் பெற்றோர் என... அவர்களும் என்னைப் போல் உன்னை விட்டுப் போய்விட்டார்களா..? 

ராம்... உன் நெஞ்சில் சாய்ந்து அழத்தான் ஆசை எனக்கு... ஒரு குழந்தையின் தாய் என்பதைவிட இந்த சமூகத்தின் பார்வை நம் மீது சேற்றை வாரி வீசுமே என்ற பயமே தடுத்தது... மாதர் சங்கங்கள் உன்னை மாறி மாறி வசைபாடுமே... திருமணம் ஆனவளை நீ எப்படித் தொடலாமென... 

ஆமா... காரின் கியரில் என் கை வைத்தழுத போது உன் கையும் கியர் பிடித்ததே... அத்தனை அழுத்தம் ஏன் உனக்குள்... கை வலிக்கிறது தெரியுமா...?

உன் முகம் மூடி அழுதேனே அந்த ஒரு நிமிடம் போதுமெனக்கு வாழ்நாளெல்லாம் வாழ.... 

அந்த இரவு போதும் ராம் இனி வரும் இரவுகளில் இனிமையைச் சுமக்க...

திருச்சி வரைக்கும் வந்த நீ சிங்கப்பூர் வரைக்கும் வந்திருக்கலாமே என்று தோன்றியது ராம்... விமானத்தில் நீயில்லா வெறுமையை உணர்ந்தேன்.

இனி 'யமுனை ஆற்றிலே...' பாடலை எங்கும் எப்போதும்  பாடவே மாட்டேன் ராம்... சேர்க்க வேண்டிய இடத்தில் அதைச் சேர்த்துவிட்டேன்... பத்திரமாக வைத்துக் கொள்... அந்த பரபரப்பான முகத்தை பத்திரமாய் வைத்துக் கொள்வேன் என்னுள் எப்போதும்...

அடுத்த சந்திப்பு எப்போது... எப்படி நிகழும்..? 

தெரியாது... நிகழாது போனாலும் போகலாம். 

அதுவரை மீட்ட என்னிடம் ஏராளமான நினைவுகளைக் கொடுத்திருக்கிறாய் ராம்.

மறக்காமல் நீ மீண்டும் தாடி வளர்த்துக் கொள் ராம்... 

பத்தாம்வகுப்பு ராமை நான் மட்டும்தான் பார்க்க வேண்டும்... அது எனக்கே எனக்கான ராம்... இது சுயநலம்தான்... என்ன செய்ய... என் ஆசையில் இதுவும் கூட...

என்னைப் போல் காதலித்த பெண்கள் எல்லாம் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருப்பதாக மற்றவர் போல் நீயும் நினைக்கமாட்டாய் என்று தெரியும்... என் வலி எத்தகையது என்பதை உணர்ந்தாய்தானே...

ராம்களின் உணர்ச்சி சொல்ல மாளாதாம்... அப்ப ஜானுக்களின் வலி...?

சரி விடு... நீ அப்படிச் சொல்லவில்லைதானே...

மீண்டும் பார்ப்பேன் என்ற நம்பிக்கையில்...

உன்....

ஜானு (மு.ஜானகி)
-'பரிவை' சே.குமார்.

11 கருத்துகள்:

  1. இப்படியொரு ஜானு உங்களுக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் நண்பரே! நலம்தானா? சில மாதங்களுக்குப் பிறகு தங்கள் தளத்திற்கு வருகிறேன். கோபித்துக்கொள்ள மாட்டீர்களே?
    -இராய செல்லப்பா சென்னை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அய்யா
      நலமா?

      கோபித்துக் கொள்வதா? தாங்கள் வருவதே சிறப்பு.

      நானும் அதிகம் எழுதுவதில்லை அய்யா.

      வலைப்பூ இப்போ காத்தாடத்தான் செய்யுது.

      இது படம் பார்த்து எழுதியதுதான்.

      நன்றி.

      நீக்கு
  2. குமார்...

    படத்தில் இந்த வரிகள் வரவில்லை என்று நினைக்கிறேன். இது உங்கள் கற்பனை என்று யூகிக்கிறேன். நான் இன்னும் படம்பார்க்கவில்லை. ஆனால் உணர்வுக்குவியல்... ஜானகியின் மனம் பேசுவது மிக மிக் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அண்ணா...

      ஆமாம் ஜானுவின் மனா வெளிப்பாடுதான் அது...

      எல்லாமே படத்தின் வாசனைகளும் அதன் பின்னே அவள் எழுதுவதுமாய்...

      நன்றி அண்ணா.

      நீக்கு
    2. ஆமாம், மிகவும் அருமையான உணர்வுக்குவியலாய் ஜானுவின் மன் உணர்விலிருந்து எழுதி இருக்கின்றார்.

      நீக்கு
  3. நம்மவர் நம்மைவிட்டுப் பிரிந்தபோது நம்முடன் அவர்கள் இருந்த நாள்கள் என்றும் வந்து பாடாய்ப்படுத்தும். அதன் வலியை நான் உணர்ந்துள்ளேன். இவ்வாறாக நினைவுகளை அசைபோடும்போது கிடைக்கும் சுகத்திற்கு இணை எதுவுமேயில்லை.

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி