சனி, 6 அக்டோபர், 2018

சினிமா விமர்சனம் : 96

96 ரீயூனியன்...

ராம் - ஜானுவின் காதலுடன் பயணிக்கும் ஓர் இரவு....



'யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணனோடுதான் ஆட...
பார்வை பூத்திட பாதை பார்த்திட...
பாவை ராதையோ  வாட...'

இந்தப் பாடலை  பாடச் சொல்லும் போதெல்லம் வேறொரு பாடலைப் பாடி ஏங்க வைப்பவள், எப்போது பாடப் போகிறாள்... அவளின் குரலில் அவன் இதை எப்போது கேட்பான் என ஏங்க வைத்து மின்சாரம் போன அந்த மணித்துளியில் விளக்குத் தேடி அவன் போக, மனக்குமுறலாய் இந்த யமுனை ஆறு வழிகிறது அவள் குரலில்... அடித்துப் பிடித்து ஓடிவரும் அவனுக்கு முன்னே நாம் ஜானுவின் முன்னால் ஆஜராகி விடுகிறோம் காதலோடு.

ஒற்றைப் பார்வையும் உதிர்த்த சில சிரிப்புக்களும்... என்னைக்கும் மறக்கக்கூடாதென அடிக்கப்பட்ட இறுதி பள்ளி நாள் பேனா மையுமாய் காதல் ஊறிக்கிடக்க, அவள் நினைவுகளால் திருமணம் செய்யாமல் முதிர் கண்ணனாய் நிற்கிறானா... இல்லை குடும்ப உறவுகள் அற்ற வாழ்க்கையாலா... எது எப்படியோ அவனுக்குள் ஜானு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாள். அவளுக்குள்ளும் ராம்...

ஒற்றை இரவு... எத்தனை நினைவுகளை வருடிச் செல்கிறது... பெய்யும் மழையும் பேசும் பயணங்களுமாய்...

அழகன் படத்தில் பானுப்பிரியாவும் மம்முட்டியும் 'சங்கீத ஸ்வரங்கள்... ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்... என் வீட்டில் இரவு அங்கே இரவா இல்லே பகலா எனக்கும் மயக்கம்...' அப்படின்னு இரவெல்லாம் பாடிய பாடல் எத்தனை பேரின் தூக்கதைக் கெடுத்ததோ அதே போல்தான் ஜானுவின் தவிப்பும்... ராமின் பூட்டி வைக்கப்பட்ட நினைவுகளும்....

நீண்ட நாட்களுக்குப் பிறகு சொந்த ஊருக்குப் போகும் போது எதைப் பார்த்தாலும் நமக்குள் ஒரு பிரியம் பூப்பூக்கும்... அப்படியான பிரியத்தில் அவன் படித்த பள்ளியும் காதல் நினைவுகளும் பள்ளி வாட்ச்மேன் ஜனகாராஜை காரை வைத்து மோதுவது போல் செய்யும் இடத்தில் பூக்கிறது.

பள்ளிக்குள் ஓடும் அவன் பின்னே இசையும் ஓடுகிறது காதல் குழந்தையாய்... தான் படித்த வகுப்பறையில் அவள் அமர்ந்த இடத்தில் முதலில் அமர்கிறான். பின் தன் இருக்கை போய் அமர்கிறான். அதன் தொடர்ச்சியாய் நண்பர்களின் வாட்ஸ் அப் குழுமத்தில் இணைந்து 22 வருடங்களுக்குப் பிறகு நண்பர்களின் கூடலுக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.

இது போன்றொரு கூடலை எங்கள் கல்லூரியில் சென்ற ஆண்டு எங்களுக்கு முன்னே படித்தவர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு நிகழ்ந்த வீடியோ மூலம் பார்க்க நேர்ந்தது. நம் நட்புக்களையும் சந்திக்கலாமே என்ற ஆவல்... பாலையில் இருந்து ஏற்பாடு செய்து அந்த நாளில் ஓடிச் செல்லும்படியான கம்பெனியில் நமக்கு வேலை இல்லையே... பெரும்பாலும் என் பள்ளி நட்புக்கள் தொடர்பில் இல்லை... கல்லூரி நட்பில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாமே வாழ்வின் நிமித்தம் வெளிநாடுகளில்... பின் எப்படி...? அதனால் அது நினைவாய் மக்கிப் போனது.

அந்த தினம் நண்பர்கள் எல்லாம் குடும்பத்தோடும் தனியாகவும் வந்து சேர, ராமும் வருகிறான். ஜானு வரமாட்டாள் என்பதாய் சொல்லப்பட்டிருக்க, அவள் சிங்கப்பூரில் இருந்து வருகிறாள் என்பது அறிய வரும் போது பள்ளியில் அவள் காதலுக்காக ஏங்கித் தவித்த நினைவில் தனியே நிற்கிறான்... அவளைப் பார்க்க முடியாதென ஒளிந்திருக்கிறான் என்பதே உண்மை.

படம் ஆரம்பித்து முதல் அம்பது நிமிடங்கள் பள்ளிக்கால வாழ்க்கையாக விரிகிறது... அந்தக் காதலை அவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார்கள்... அதில் நடித்த அனைவரும் மிகச் சிறப்பு... யாருமே சோடை போகவில்லை.... ராமாக எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யா, ஜானகி தேவியாக கௌரி கிருஷ்ணன், தோழியாக வரும் தேவதர்ஷினியின் மகள் (தேவதர்ஷினியின் சிறுவயது கதாபாத்திரம்), நண்பர்களாக வருபவர்கள் (ஆடுகள் முருகதாஸ் மற்றும் பகவதி பெருமாளுக்கான கதாபாத்திரம்) என எல்லாருமே அந்தக் காதலுக்குள்... காலகட்டத்துக்குள் நம்மை இழுத்துச் செல்கிறார்கள்.

எங்கே இவர்களின் காதல் மீண்டும் பற்றிக் கொள்ளுமோ என்று நினைக்கும் நண்பர்கள் சுபாவை (தேவதர்ஷினி) இவர்களுடனே அனுப்பி அவளை ஹோட்டலில் விட்டதும் நீ வீட்டில் போய் இறங்கு என்று சொல்லி அனுப்ப, ஆனால் ராமோ அவளை முதலில் இறக்கிவிட, அவள் இவனைக் கிள்ளி அவளை விட்டுட்டு வீடு போய்ச் சேரு என்று சொல்லிச் சென்றாலும் என்னாச்சோ என்ற பயத்தில் இருவருக்கும் மாறி மாறி போன் செய்கிறாள். இருவருமே பொய் சொல்கிறார்கள். பற்றிக் கொள்ளாத காதல் தென்றலாய் அந்த இரவு முழுவதும் பயணிக்கிறது... நம்மைப் படுத்தி எடுக்கிறது.



விஜய் சேதுபதி நடிப்பு அரக்கன்... சின்னச் சின்ன முகபாவங்களைக் கூட மிக அருமையாகச் செய்திருக்கிறார். ஜானு முன்னால் அமர்ந்து கவிதை வாசிக்கும் போது.... அவள் தூங்கியதும் அவளுக்கு திட்டி சுற்றி நெட்டி முறிப்பது... தாலியைத் தொட்டுக் கும்பிடுவது... பெட்டின் மேலே ஏறி வா என்றதும் யோசித்து மழுப்புவது... யமுனை ஆற்றிலே பாடலுக்கு விழுந்தடித்து ஓடிவந்து அவள் முகம் பார்ப்பது...  ஆம்பள நாட்டுக் கட்டடா நீ என்று சொல்லும் இடத்தில் முகத்தில் வரும் நாணம்... என மனிதன் கலக்கல் சேதுபதி... இந்தக் கதாபாத்திரத்துக்கு இவர்தான் பொருத்தமானவர்.

த்ரிஷா... இதுவரை கமலா காமேஷ் என்று அறியப்பட்டவர் முகநூலெங்கும் ஜானுவாய் நிரம்பி வழிகிறார். ஜெஸ்ஸிக்குப் பிறகு ஒரு ஆத்மார்த்தமான கதாபாத்திரம்... ஜானுவாய் வாழ்ந்திருக்கிறார் என்பதைவிட அந்த வேதனை, மகிழ்ச்சி, உருகுதல், காதல் என மனுஷி அடித்து ஆடியிருக்க்கிறார். 52 நிமிடத்தில் கதைக்குள் வரும் த்ரிஷா, இடைவேளைக்குப் பின்னான பொழுதுகளை ஓர் இரவாய் விஜய் சேதுபதியுடன் பகிர்ந்து கொள்ள திரையில் விரியும் கதையின் பின்னே நம்மையும் நகர்த்துகிறார்... ஜானு... ஜானு... என நம் ஜானுக்களை நினைத்தபடி.

அவருக்கு குரலும் அவ்வளவு அழகாய் பொருந்திப் போகிறது... ஜானுவின் குரலாய் வாழ்ந்தவர் சின்மயியாம்... அருமை.

இறுதிக் காட்சியில் அவரின் தவிப்பும்... வேதனையும்... அப்பப்பா... செம.. அதுவும் தான் அழுவதை அவன் பார்க்கக் கூடாது என்பதற்காய் அவன் முகம் மறைத்து அழுது... விலகி... நம்மையும் அழ வைத்து விடுகிறார்.

இது 96க்கான படம் மட்டுமல்ல... அதற்கு முந்தைய இன்றைய கூடாமல் போன காதலுக்கான படம்தான்... மெல்லத்தான் நகர்கிறது இடைவேளைக்குப் பின்... நகரட்டுமே அதனால் என்ன... அவர்கள் எவ்வளவு பேசுகிறார்கள்... நாம் கடந்த காலத்துக்குள் பயணிக்கிறோம்... இன்னும் கொஞ்ச நேரம் ஜானு இருக்க மாட்டாளா... என்ற ஏக்கத்தோடுதானோ விமானத்தில் பறக்கும் ஜானுவைப் பார்க்கிறோம்... பின் என்ன மெதுவாக நகர்கிறது என்ற பொய்யைத் தூக்கிச் சுமக்கிறோம்.

விஜய் சேதுபதி என்னய்யா நடிக்கிறான்... டெம்ப்ளட் வசனம் பேசிக்கிட்டு... இதெல்லாம் ஒரு காதல் கதையா... அவளுக்காக 37 வயசு வரைக்கும் காத்திருந்தானாக்கும்... கடுப்பாகுது என்று சொல்லும்  உலக சினிமா ரசிகர்களுக்கான படமில்லை இது... உள்ளூரில் ஒருத்தியைப் பார்த்துச் சிரித்து அவ என்னைப் பார்த்து சிரித்தாடா என்று குதூகலித்து கொண்டாடி... பின் காணாமல் போன பாமரக் காதலர்களுக்கான படம் இது.

சொல்ல மறந்துட்டேனே... விஜய் சேதுபதியின் மாணவியாய் வந்து... எங்க சாரை நல்லாப் பாத்துங்கங்க மேடம் என காபி ஷாப்பில் சொல்லிச் சொல்லும் அந்தச் இளைஞியும் மிகச் சிறப்பாய் நடித்திருக்கிறார்.

நள்ளிரவில் ஒரு நடுத்தர வயதுப் பெண்ணுடன் நம்ம சார் காபி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாரே என்ற எண்ணம் வரக்கூடாது என்பதற்காக சேராத காதலை சேர்ந்ததாய் ஜானு விவரிக்கும் கல்லூரிக் காட்சிகள் எத்தனை உணர்ச்சிகரமானவை.... ஜானு ஏன் பொய் சொன்னாள் என்று கேட்பவர்களுக்கு வாழாத அந்த வாழ்க்கையை... அவள் அந்த நிமிடத்தில் வாழ்ந்து முடித்து விடுகிறாள். இதில் என்ன பொய் இருக்கிறது.

படத்துக்கு  இசையும் (கோவிந்த்) ஒளிப்பதிவும் (சண்முக சுந்தரம்) மிகப்பெரிய பலம்.

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் பட ஒளிப்பதிவாளரான பிரேம் குமார் இயக்குநராய் மாறி இருக்கும் படம் இது. இப்படியான ஒரு வாழ்க்கையை அவர் வாழ்ந்திருப்பாரோ என்று தோன்ற வைக்கிறது. ஒரு சில படத்தில் தனது சரக்கை முழுவதுமாக இறக்கி வைத்து விட்டு அடுத்த படத்தில் கோட்டை விடும் இயக்குநர்கள் நிறைந்த தமிழ் சினிமாவில் இதுபோல் இன்னும் சிறப்பான படங்களைக் கொடுக்க வாழ்த்துக்கள்.

96 - சேராத காதலை காதலாய்ச் சொல்லும் படம்.
-'பரிவை' சே.குமார்.

6 கருத்துகள்:

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி