சனி, 22 செப்டம்பர், 2018

நாட்குறிப்பு : அவளும் கவிதையும் கூட அரியரும்

கல் மின்னிதழ் 'நாட்குறிப்பு' போட்டிக்கு எழுதியது. எழுதிய போதே சத்யாவிடம் இது நாட்குறிப்பு மாதிரியில்ல ஜி... சிறுகதை மாதிரி இருக்குன்னு சொன்னாலும் சும்மா அனுப்புங்க என்றார். அது தேர்வாகாது என்பது தெரியும்... ஏன்னா முன்னப் பின்ன செத்தாத்தானே சுடுகாடு தெரியும்ன்னு ஊரில் சொல்வது போல் முன்னப் பின்ன டைரி எழுதியிருந்தா எப்படி எழுதுறதுன்னு தெரியும்... நாம அதெல்லாம் எழுதுவதே இல்லை.... பின்ன எப்படி...? சரி விடுங்க வெற்றி பெற்றவர்களை வாழ்த்தும் அதே நேரத்தில் அந்த நாட்குறிப்பில் நிறைய மாறுதல் செய்து சிறுகதையாகவும் இல்லாமல் நாட்குறிப்பாகவும் இல்லமால் கதைக்குறிப்பாக இங்கு பகிர்ந்தாச்சு. இனி படிச்சி திட்டவோ... கொட்டவோ வேண்டியது உங்க கடமை...


வம்பர்-25, 1996

கல்லூரி விடுமுறை என்றாலும் வீட்டிலும் இருந்த நாள் எப்போதும் இல்லை. இன்றைய நாள் காலையும் அப்படித்தான் கிளம்பினேன் எனது அட்லஸ் சைக்கிளில். வயல்ல பூச்சி மருந்து அடிக்கணும்... வெயில்ல அடிச்சாத்தான் பயிருல சாரும் என்ற அப்பாவின் கத்தலைக் காதில் வாங்காமல்.

நண்பர்கள் சங்கமிக்கும் ஓடியன் சலூன் வாசலில் சைக்கிளை நிறுத்தி பேருந்து நிலையத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் போது நண்பர்கள் நவநீ, திருநா, ஆதி, அண்ணாத்துரை, சேவியர் என ஒவ்வொருவராய் பேருந்தில் வந்து இறங்கிச் சங்கமித்தார்கள், ராம்கி என்னைப் போல் அவனது புதிய ஹெர்குலிஸ் சைக்கிளில் வந்து சேர்ந்தான்.

“மாப்ள இன்னைக்கு ரிசல்ட் வருதுல்ல...” என்றான் நவநீ.

“ஆமாடா... இதுவரைக்கும் அரியர்ஸ் இல்லை... இது பிப்த் செமஸ்டர்... இதுல மேஜர் பேப்பர் வேற... அரியர் விழுந்தா சிக்ஸ்த்ல எடுத்துட முடியுமான்னு பயமாயிருக்குடா” என்றான் ராம்கி.

“ரிசல்ட் மத்தியானந்தான் வரும்... படத்துக்குப் பொயிட்டு மத்தியானம் காலேஜ்க்குப் போகலாம்” என்றான் ஆதி.

“படத்துக்கா... நா வரல பங்காளி... எனக்கு வேல இருக்கு.... வரும் போது அப்பா வேற மருந்தடிக்கணும்ன்னு சொன்னார்” வேகமாக மறுத்தேன்.

“மாப்ள... நீ மருந்தடிச்சிட்டாலும் இன்னேரம் கருப்பையா உன்னையத் திட்டமுடியாம அம்மாவை நாலு வாங்கு வாங்கிட்டு மருந்தடிக்கிற மிஷினைத் தூக்கிக்கிட்டு கிளம்பியிருப்பாரு... ஏலே நீ எங்க போவேன்னு எனக்குத் தெரியும்... சுப்ரமணி வாத்தியார் வீடு போவே... அவரு இந்நேரம் காலேஜ்ல இருப்பாரு.... அங்க உன்னக்கென்ன வேலைன்னு எங்களுக்குத் தெரியும்... இன்னைக்கி நீ எங்க கூட வர்றே... மவனே இல்லேன்னா காலேஜ் திறந்ததும் உன்னோட மேட்டரை ஓபன் பண்ணி நாறடிச்சிருவோம்...”  என்றான் நவநீ.

“வரலைன்னா விடு மாப்ள... சுப்ரமணி சாருதானே காலேஜ்க்குப் போயிருப்பாரு... அம்மா  வீட்டுலதானே இருப்பாங்க... ரெண்டு மூணு நாளா அவங்களைப் பாக்கலை... அதான் பாத்துட்டு அப்படியே காலேஜ் வந்துடுறேன்...”

“இங்கேருடி... நீ எந்த அம்மாவைப் பாக்கப் போவேன்னு தெரியும்... சுப்ரமணி சாரு வீட்டு அம்மாவை சாயந்தரம் போய் பாத்துக்கலாம்... இப்ப நாம சினிமாப் போறோம்... காலேஜ் அப்பத்தான் வகுப்பைக் கட் அடிக்க மாட்டேன்னு நீயும் ராம்கியும் முறுக்குவீங்க... இப்ப என்ன... லீவுதானே... எங்க கூட படம் பாக்க வந்தா என்ன...” சிகரெட்டைப் பற்ற வைத்தபடி பேசினான் சேவியர்.

“அட ஏன் பங்காளி நீ வேற... அப்படியெல்லாம் இல்ல... சாயந்தரம் போ முடியாது... வீட்டுக்கு லேட்டாப் போனா அப்பா கத்துவாரு... சும்மாவே கோவத்துல இருப்பாரு... அதான் இப்பவே பொயிட்டு வரலாமுன்னு...” இழுத்து மழுப்பினேன்.

“சரி... பங்காளி நீங்க போங்க... விடுங்கடா... அவராவது வாழ்ந்துட்டுப் போறாரு...” என்றான் திருநா.

“இது நல்லாயிருக்கே... எப்பப் பார்த்தாலும் நம்மளவிட இவனுக்கு சுப்ரமணி சாரு வீடுதான் பெரிசாப் போச்சு...” குதித்தான் அண்ணாத்துரை.

“அவரு வீட்டுலதான் ரெண்டு பேரும் சந்திக்கிறது மாப்ள... அப்பத்தானே யாருக்கும் சந்தேகம் வராது...’ நக்கலாய்ச் சொன்னான் ராம்கி.

“நீ இன்னைக்கு எங்க கூட வர்றே... படம் பாக்குறோம்... தங்கச்சியை நாளைக்குப் பார்த்துக்கலாம்...” தோளில் கை போட்டு இறுக்கினான் நவநீ.

இதற்கு மேல் இவர்களுடன் சண்டை போட்டு ஒன்றும் ஆகப் போவதில்லை என்பதை உணர்ந்து மனசே இல்லாமல் அவர்களுடன் சரஸ்வதி தியேட்டருக்குள் நுழைந்தேன்.

கல்லூரி வாழ்வில் முதல் இரண்டு ஆண்டை விட மூன்றாம் ஆண்டு வந்த போது நிறைய சினிமா பார்க்கிறோம் வீட்டுக்குத் தெரியாமல். பெரும்பாலும் மதிய வகுப்புக்கள் இருப்பதில்லை... எங்களுக்கான இருக்கைகள் லெட்சுமி, அருணா, சரஸ்வதி என மூன்று தியேட்டர்கள் காத்திருக்க ஆரம்பித்தன. சில நேரங்களில் சித்தப்பா, அண்ணன் என சிலரைப் பார்த்து நாற்காலிக்குள் பதுங்கியதும் உண்டு என்றாலும் ஊருக்குள் நம்மைக் கடந்து போகும் போது ‘என்ன படம் நல்லாயிருந்துச்சா’ என்று கேட்கவும் செய்வார்கள்.

டிக்கெட் வாங்கி உள்ளே சென்று அமர, அதிக கூட்டமில்லை. எங்கள் வகுப்புத் தோழி மல்லிகா அம்மாவுடன் வந்திருந்தாள். எல்லாரும் சொல்லி வச்சி வருவீங்களோ... இன்னைக்கு ரிசல்ட் மத்தியானம் காலேஜ் வருவீங்கதானே என்றபடி அம்மாவுடன் கடந்து சென்றாள்.

திரையில் ரொம்ப நாளா பார்க்கணும்ன்னு நினைத்த ரத்தக் கண்ணீர் ஓட்த் தொடங்கியது.

இடைவேளையில் ராம்கி இரண்டு ஐஸ்கிரீமை வாங்கிக் கொண்டு மல்லிகா இருக்கைக்கு ஓடினான். அவர்கள் இருவரும் காதலிப்பது போல் தோன்றினாலும் இதுவரை சொல்லிக் கொள்ளவில்லை. ராம்கியின் நோட்டில் மல்லிகா என்ற பெயர் பல இடங்களில் ஆக்கிரமித்திருந்தது. ஒருமுறை மல்லிகாவின் நோட்டை வாங்கியபோது அதில் ‘ராமல்லி’ என்று பல இடங்களில் எழுதியிருந்தாள்.

எம்.ஆர். ராதா அள்ளி அள்ளி கொடுத்தேனடி காந்தா என கதறிக் கொண்டிருக்க, சுப்ரமணி சார் வீட்டுக்கு வந்து காத்திருந்து திரும்பிச் சென்றிருப்பாளே என்ற நினைப்பு என் மனசுக்குள் கதறிக் கொண்டிருந்தது.

மதியம் கல்லூரிக்குச் செல்லும் போதே எதிர்பட்ட நண்பன் ரிசல்ட் வந்திருச்சு... கேவிஎஸ் மட்டும்தான் இருக்காரு எனச் சொல்லிச் சென்றான்.

நாம இதுவரை வகுப்பில் முதல் மாணவன் என்ற மிதப்பும் எல்லாத்திலும் பாஸாகி இருப்போம் என்ற செருக்கும் ஒருங்கே எனக்குள். மற்றவர்கள் பயந்து கொண்டிருப்பதைப் பார்த்து கேலி செய்தேன்.

கேவிஎஸ் சாரைப் பார்க்க தமிழ், ஆங்கிலம் மற்றும் எங்கள் துறை ஆசிரியர்கள் இருக்கும் அறைக்குள் நுழைந்த போது எதிர்ப்பட்ட சுப்ரமணி சார், ‘என்னங்கய்யா ரிசல்ட் பாக்கவா... பாத்துட்டு வாங்க... உங்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி வச்சிருக்கேன்...’ என்றபடி அலுவலகம் பக்கம் சென்றார்.

‘என்ன சந்தோஷமான செய்தி...?’ என்ற கேள்வி யோசனையில் முளை விட, அதே சிந்தனை மெல்ல வளர ஆரம்பித்தது.

“என்ன மாப்ள... உனக்கும் தங்கச்சிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கப் போறாரா..?”  காதுகடித்தான் நவநீ.

“ஆளைப்பாரு... மூதேவி... ரிசல்ட் என்னன்னு முதல்ல பார்ப்போம்...” என அவனை முதுகில் செல்லமாய் அடித்தேன்.

"வாங்க... எங்கடா உங்க குரூப்பைக் காணோமேன்னு பார்த்தேன்" என்ற கேவிஎஸ் ‘ஆமா என்னாச்சு ஏன் இப்படி எனக் கேட்டார்’ என்னைப் பார்த்து.

எனக்கு என்ன என்று விளங்காமல் முழித்தேன். மார்க்கைச் சொல்லச் சொல்ல குறித்துக் கொண்டே வந்தேன். மேஜர் பேப்பரில் ஒன்றில் பெயிலாகியிருந்தேன். எனக்கு ஒன்றுமே புரியலை... இது எப்படி ஆச்சு... ஆங்கிலத்தில் எல்லாம் அரியர் விழலை.. எப்படி... அதுவும் ஏ.வி.சார் சப்ஜெக்ட்டில்.

"ஏன் ஒழுங்கா எழுதலையா..?" என்றவரிடம் "நல்லாத்தான் சார் எழுதினேன்"என்றேன் கண்களில் தழும்பும் நீருடன்.

"சரி... விடுங்க... ரீவால்யூவேசன் போடுவோம்... என்ன இந்த முறை உங்க இடத்தை மல்லிகா பிடிச்சாச்சு... சிக்ஸ்த்ல மீண்டும் முதலிடம் பிடித்தால் டிபார்ட்மெண்ட் சர்டிபிகேட்டும் பணமும் கிடைக்கும்... சரி விடுங்க... எது நடக்கணுமோ அது நடக்கத்தானே செய்யும்" என்றார் ஆறுதலாய்.

மற்றவர்களுக்கு மார்க் சொல்லி முடித்தவுடன் "நாளைக்கு வாங்க... ரீவால்யூவேசனுக்கு பணம் கட்டிருவோம்" என்றார்.

அப்போது அங்கு வந்த சுப்ரமணி சார், "தம்பி எப்படி மார்க் வாங்கியிருக்காக..." என்றார்.

"ஒரு பேப்பர் போச்சு... அதான் எப்படின்னு எனக்கு குழப்பமா இருக்கு... படிப்பு விஷயத்துல தப்புச் சொல்ல முடியாது... ஏதோ தவறு நடந்திருக்கு... அதான் நாளைக்கு ரீவால்யூவேசன் போடுவோம்ன்னு சொல்லியிருக்கேன்" என்றார்.

"ம்... தம்பிக்கு மார்க் போச்சுன்னு கவலையிருக்கும்... அதே சமயம் அவர் எழுதின கவிதை தாமரையில வந்திருக்கு...  சந்தோஷமான செய்தியில்லையா..." என புத்தகத்தை கேவிஎஸ் சாரிடம் கொடுத்தார் சுப்ரமணி சார்.

"அது சரி... கவிதை வந்திருக்கா... எங்களுக்கு ரொம்ப நாளைக்கு இவங்க ஒரு நல்ல செட்... படிப்பு... இலக்கியம்... விளையாட்டுன்னு எல்லாத்துலயும்... இவரும் இவரோட மற்ற துறை நண்பர்களும் நடத்துற கையெழுத்துப் பிரதி அருமையில்லீங்களா..." என்ற கேவிஎஸ் சார் வாங்கி வாசித்து விட்டு "அருமை... அருமை..." என்றபடி சுப்ரமணி சாரிடம் கொடுக்க, அவரோ  என்னிடம் புத்தகத்தைக் கொடுத்துவிட்டு "சாயந்தரம் வீட்டுக்கு வாங்க... நேத்தே அம்மா உங்களக் காணுமின்னு கேட்டுக்கிட்டு இருந்தாக" என்றார்.

வெளியில் வந்ததும் நண்பர்கள் பாராட்டியபடி, "உனக்கென்ன அரியர் விழுந்தா வாத்தியாரே ரீவால்யூவேசன் போடுறேன்னு சொல்றார். எங்க மார்க்கை சொல்லும் போது எதாவது சொன்னாரா பாத்தியா..?’ என்று நவநீ சொல்ல, ‘எப்பவுமே பங்காளி மேல கேவிஎஸ்க்கு அதிக பாசம்... எனக்கும்தான் அரியர் விழுந்திருக்கு... பணம் கட்டுறேன்னு சொல்ல வேண்டாம்... ரீவால்யூவேசன் போடுங்கன்னு கூட சொல்லலை..." என்றான் திருநா.

"கேவிஎஸ்க்கு மட்டுமா இன்னொரு எஸ்க்கும் பாசம்தானே மாப்ள மேல" சிரித்தான் நவநீ.

"அட ஏண்டா... இப்ப அரியர் விழுந்திருக்கேன்னு எனக்கு வருத்தமா இருக்கு... நீங்க வேற..."

"அதெல்லாம் பாஸ் பண்ணிடலாம்... நீ வேணா பாரேன் ரீவால்யூவேசன்லயே பாஸ் பண்ணிருவா... விடு... உன்னோட கவிதை புத்தகத்துல வந்திருக்கு... அதுவும் தாமரையில... பின்ன என்ன... மகிழ்ச்சியா இரு பங்காளி" என்றான் ஆதி.

நண்பர்களுடன் சாப்பிட்டு அரட்டை அடித்து விட்டு சுப்ரமணி சார் வீடு சென்ற போது எனக்கு முன்னே வந்திருந்த அவள் முறைத்தாள்.

சாரி சொல்லி சமாதானப்படுத்தி கவிதை வந்ததைச் சொன்னபோது அந்த கண்ணில் அவ்வளவு மகிழ்ச்சி... கவிதை வந்ததற்கு என்னைவிட அவளே அதிகம் சந்தோஷப்பட்டாள்... குதித்தாள்... குதூகலித்தாள்... கை பிடித்துக் குலுக்கினாள்.

மெல்லச் சொன்னேன் அரியர் விவரத்தை...

“எப்படி இப்படி...? நல்லாத்தானே எழுதியிருப்பே... சரி விடு... ரீவால்யூவேசன்ல பாத்துக்கலாம்” என ஆறுதல் சொன்னாள்.

நான் ஒன்றும் பேசாமல் இருக்க, என்னருகே நெருக்கமாய் அமர்ந்து ‘சும்மா மனசைப் போட்டு அலட்டிக்காதே... விடு... உன்னோட கவிதையை அச்சில் பாக்கயிலே எம்புட்டு சந்தோஷம் தெரியுமா...?’. உண்மையான மகிழ்வோடு சொன்னவள் எதிர்பாராத தருணத்தில் என் கன்னத்தில் முத்தமிட்டாள். அவளிடமிருந்து கிடைத்த முதல் முத்தம்.

வாசலில் சுப்ரமணி சார் சைக்கிளை நிறுத்தும் சப்தம் கேட்டு சற்றே தள்ளி அமர்ந்தோம்.

அவருடனும் அங்கு வந்த வேறு நண்பர்களுடனும்ம் பேசிக் கொண்டிருந்து விட்டு வேலைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் போது இரவு எட்டு மணி. அப்பா எடுத்துவிடுவது போல் பார்த்தார். அம்மாவோ ஊரைச் சுத்திட்டு வா... வீடு தங்காதே... என்று கத்தினார்.

‘என்ன படம் பார்த்தே..?’ மெல்லக் கேட்டபடி கடந்தான் தம்பி.

அவனுக்குப் பதில் சொல்லாது அரிக்கேன் விளக்கொளியில் கவிதையை வாசிக்க ஆரம்பித்தேன். கவிதை முழுவதும் அவளே தெரிந்தாள்.

இதோ அவள் குறித்தும் இன்றைய நாள் குறித்தும் டைரியில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இன்றைய தினம் கவிதை வந்ததற்கு மகிழ்வதா...? அரியர்ஸ் விழுந்ததற்கு வருந்துவதா..?  கேள்விக்குறியோடு முடித்து டைரியை மூடுகிறேன். வெளியில் மழை பெய்வதற்கான மின்னலும் இடியும் பலமாய்.

முத்த ஈரம் காய்ந்த கன்னத்தைத் தடவிக் கொண்டேன். மழை இரவு மகிழ்வாய்...

-'பரிவை' சே.குமார்.



8 கருத்துகள்:

  1. முத்த மின்னல் கவிதை மழை காதல் கதை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா.... செம கவிதை...
      கருத்துக்கு நன்றி அண்ணா.

      நீக்கு
  2. அருமையான பதிவு
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    நாட்குறிப்பு கதை மிகவும் அருமை. ஒரு சந்தோஸம். அதனிடையே ஒரு கவலை. வாழ்க்கை போராட்டங்களே இப்படித்தானே.. அருமை.. வாழ்த்துகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி