புதன், 19 செப்டம்பர், 2018

சினிமா விமர்சனம் : தீவண்டி (மலையாளம்)

Image result for theevandi

தீவண்டி...

மலையாளத்தில் தீவண்டி என்றால் இரயில் என்பதை அறிவோம்... நம்ம ஊர்ல சிகரெட் இருந்தாத்தான் வேலை ஆகும் என எழுந்தது முதல் கக்கூஸ்  முதல் படுக்கைக்குச் செல்லும் வரை ஊதித் தள்ளுபவரை  சுத்த தமிழ்ல 'செயின் சுமோக்கர்'ன்னு சொல்லுவோம்ல அப்படிப்பட்ட ஆளைச் சுற்றிப் பிண்ணப்பட்ட கதை என்பதால் படத்தின் பெயரே 'தீவண்டி' என்பதாய்.

பினீஸ் தாமோதரன் என்ற பெயர் இருந்தாலும் படம் முழுவதும் 'தீவண்டி'யாய் டொவினோ தாமஸ். கர்ணனும் கவச குண்டலமும் மாதிரி டொவினோவும் சிகரெட்டுமாய்... அதனால் திரையெங்கும் புகை... அம்மன் படத்துக்கு நம்மூரு தியேட்டர்ல சாம்பிராணி போட்ட மாதிரி.

காலையில் எழும்போதே காபி எங்கே என்று எழுபவர்களைப் போல் சிகரெட் பாக்கெட்டைத் தேடியபடியே எழுகிறார் டொவினோ. 150 சிகரெட் பிடித்து ஒருவன் சாதனை பண்ணியிருக்கிறான் என்பதை நண்பன் சொல்ல, காதலி மேல் உள்ள கோபத்தில் அந்த சாதனையை நான் முறியடிக்கிறேன் என பதினாறு பாக்கெட் சிகரெட்டை ஓரே சமயத்தில் பிடித்து நண்பர்கள் மத்தியில் சாதனையாளராகிறார். 

அடித்துப் பெய்யும் மழை நாளில் மருத்துவமனை செல்லாமல் வீட்டிலேயே பிறந்து, செத்துப் போயிருச்சு என வெள்ளைத் துணியில் சுற்றி பெஞ்சின் மீது வைத்து விட்டுப் போக, மாமன் பிடிக்கும் சிகரெட் புகையினால் முகத்தில் லேசான மாற்றம் தெரிகிறது. மனசுக்குள் மகிழ்ச்சி மழை அடிக்க மழலையின் முகத்தில் புகையை ஊதுகிறார் மாமா... குழந்தை அதை உள்வாங்கி மெல்ல அழ ஆரம்பிக்கிறது.

அந்தக் காட்சியின் பின்புலத்தில் உலகத்தில் சிகரெட் வாசனையில் உயிர் பெற்ற இரண்டாவது குழந்தை இது என்று சொல்கிறார்கள். முதலாவது ஆளான பாப்லோ பிக்காசோ, தன் மாமா ஊதிய சிகரெட்டால்தான் உயிர் பெற்றாராம். அதை அப்படியே உருவி வைத்து விட்டார் இயக்குநர். இனி நம்மாளுக பிறந்த குழந்தை அழலையே என்றதும் சிகரெட் வாங்கி வாங்க என்று சொல்லாமல் இருந்தால் சரி.

வளர் பருவத்தில் பிடித்துத் தூக்கிப் போட்ட சிகரெட்டை எடுத்து சுவைத்துப் பார்க்கிறான். பின்னர் மாமாவுக்கு சிகரெட் வாங்குகிறான்... அது தனக்குமானதாய்.... இரண்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதாய் ஆகிவிட... பள்ளிப் பருவத்தில் பாழடைந்த வீட்டுக்குள் சிகரெட் சுவையை அனுபவிக்க ஆரம்பிக்கிறார்கள்.

இரவில் வெளியில் வந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கும் போது போலீஸில் மாட்டி, காவல் நிலையத்தில் வைத்து வீட்டார் முன் உண்மை வெளிப்பட, சிகரெட் பிடித்துக் கொள் என்ற அனுமதி கிடைக்கிறது. பின்னர் சிகரெட்டும் கையுமாய் அலைய ஆரம்பிக்கிறான்.

படத்தின் ஆரம்பத்தில் சிகரெட் குடிப்பது உடல் நலத்துக்கு தீங்கென்றார்கள். டோரண்டில் பார்க்கும் போது டொவினோ சிகரெட் பிடிக்கும் போதெல்லாம்.... அதுவும் பதினாறு பாக்கெட் சிகரெட்டை அடுக்கி வைத்து மொத்தமாய் வாயில் வைத்து புகையை கப்...கப்பென விடும் போது பெண்களின் சத்தம் காதை பிளக்கிறது... அப்ப சிகரெட் பிடிப்பதை பெண்கள் விரும்புகிறார்கள் என்கிற போது நாயகி மட்டும் முத்தம் கொடுக்க வேண்டும் என்றால் சிகரெட்டை நிறுத்து என்கிறாளே ஏன்..?

சரி விடுங்க... தீவண்டியினாலே பிடிக்காத சூரஜ் வெஞ்சரமூடுவின் மகள் சம்யுக்தாவிற்கு சின்ன வயது முதலே அவன் மீது காதல்... அந்தக் காதலைச் சொல்லி, அது திருமணம் நிச்சயம் வரை செல்கிறது. முத்தம் கொடுக்க முயலும் போது முதல் சிகரெட்டை நிறுத்து என்கிறாள் மனைவி ஆகப்போகும் காதலி... நிறுத்திடலாமே முத்தத்தை என்கிறான் தீவண்டி. அப்படிப்பட்டவன் தாலியை சிகரெட் பாக்கெட்டில் வைத்து மாமனார் வீட்டில் காட்டக் கொண்டு செல்ல, மங்களகரமான பொருளை எதில் வைத்து எடுத்து வருகிறாய் என மூளும் கோபத் தீயில் திருமணம் தடைபடுகிறது.

Related image

இதற்கிடையே அரசியல் ஒரு பக்கமாகப் பயணித்து வருகிறது, இடைவேளைக்குப் பின் அது தீவண்டியோடு பயணப்பட ஆரம்பிக்கிறது.

ப்ளூவேல் விளையாட்டு அடிமை டிரைவரால் விபத்துக்குள்ளாகிறார் எம்.எல்.ஏ, அவர் பிழைக்க மாட்டாரென அந்த இடத்துக்கான போட்டியில் பொண்ணு கொடுக்க இருந்த மாமனும் அக்காவின் கணவனும்... அந்த இடத்தில் அக்காவின் கணவனுக்காக பேசுகிறான் தீவண்டி... 

வார்த்தை முற்றி பெண் கொடுக்க இருந்த மாமன் நீ சிகரெட் பிடிக்காமல் இத்தனை நாள் இருந்தால் நான் விட்டுக் கொடுக்கிறேன் என்கிறார். அவர் மனசுக்குள் இப்படியேனும் தீவண்டி மாறினால் மகளின் திருமணத்தை நடத்தலாம் என்ற நப்பாசையும் இருக்கிறது. உதட்டு முத்தம் கூட வேண்டாம் சிகரெட்டை முத்தமிடுவேன் என்றவன் அக்காவின் கணவனுக்காக முடியாத சவாலுக்கு ஒத்துக் கொள்கிறான். அந்த சவாலை சமாளிக்க அவன் படும்பாடு... அதைப் பார்த்தால் ரசிக்கலாம்.

தான் எப்படியும் தேர்தலில் சீட் வாங்க வேண்டும் என்பதால் ஒரு தீவில் அவனை கொண்டு போய் இறக்கி விடுகிறான் அக்கா கணவன்... அங்கு சிகரெட் இல்லை... இரண்டு தடியர்கள் கிடாருடன் உட்கார்ந்து 'தீவண்டி...' 'தீவண்டி...' எனப் பாடுகிறார்கள். அங்கிருந்து அவனை வெளியில் கொண்டு வர காதலியின் தகப்பன் ஆட்களை அமர்த்துகிறான். அவனுக்கும் எப்படியும் தானே சீட் வாங்கி விட வேண்டும் என்ற ஆசையும் இருக்கத்தான் செய்கிறது. பின்னே கோடிகளில் மிதக்க யாருக்குத்தான் ஆசையிருக்காது.

அக்கா கணவன்... காதலியின் அப்பா... ஜெயிக்கப் போவது யார்..? என்ற கேள்வியோடு இறுதிக் காட்சிகள் நகர்கிறது. இவர்களின் எண்ணத்தில் மண்ணைப் போட்டானா... இல்லை சிகரெட் வேண்டான்டாங்கிற எண்ணம் கொண்டானாங்கிறதுதான் படத்தின் முடிவு.

மிகச் சிறந்த படமெல்லாம் கிடையாது... நகைச்சுவை, காதல், கொஞ்சம் அரசியல் என பயணிக்கும் படம் சிகரெட் புகையால் நிரம்பி நிற்கிறது. ஒரு தடவை ஜாலியாப் பாக்கலாம். தீவண்டியாய் ஜொலித்திருக்கும் டொவினோ, அவருக்கு இணையாய் முதல் படம் என்பது தெரியாமல் நடத்திருக்கும் சம்யுக்தா, நகைச்சுவை மட்டுமல்ல குணசித்திரம், வில்லன் என எதுவாகினும் நான் சிறந்த நடிகனே என்பதை நடிப்பால் சொல்லும் சூரஜ், மாமாவாக வருபவர், நண்பர்கள் என எல்லாருக்காகவும் பார்க்கலாம்.

நம்ம கமல் என்னய்யா கமல்... சம்யுக்தா உதட்டை இங்கிலீஸ் படத்துல மாதிரி உருஞ்சி எடுத்துடறான் டொவினோ... அப்ப இந்த பொம்பளப் புள்ளங்கதாய்யா அந்தக் கத்துக் கத்துக... நல்ல வளர்ச்சி... இதைச் சொன்னா ஆணாதிக்கவாதின்னு சொல்லுவாங்க...

இயக்குநர் பெல்லினிக்கு முதல் படம் என்றார்கள். தோல்விப் படமாக இல்லாமல் கொடுத்திருக்கிறார். அடுத்த படத்தில் இன்னும் ஜொலிப்பார் என நம்பலாம். இசை படத்துக்கு வலு சேர்க்கிறது.

தீவண்டி... வேகமாகப் போகவில்லை என்றாலும் மெதுவாகவும் போகவில்லை.

ஒரு முறை பார்க்கலாம்.
-'பரிவை' சே.குமார்.

5 கருத்துகள்:

  1. தமிழ்ப்படங்களே பார்க்க வேண்டி கணினியில் வரிசையாகக் காத்திருக்கின்றன.. நான் எங்கே இதைப் பார்க்கப் போகிறேன்?!!

    பதிலளிநீக்கு
  2. கதையே வித்தியாசமாக இருக்கிறது...!

    பதிலளிநீக்கு
  3. வித்தியாசமான கதை தான். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. நல்ல படம் நல்ல விமர்சனம்

    பதிலளிநீக்கு
  5. வித்தியாசமான படத்தைப் பற்றிய பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி