ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

எங்கள் வண்ணத் தமிழ்த்தாயே... அருவியும் நகைச்சுவையும்

யுகாவின் பேச்சுக்குப் பின்னர் கவிதைப் போட்டி பரிசளிப்பு நேரம் என்பது சினிமாவில் இடைவேளை விட்டது போல் இருக்கைகள் எல்லாம் காலியாக, பார்வையாளர்கள் எல்லாம் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு திரும்பலாமென வெளியில் சென்றிருந்தார்கள். அரங்குக்கு வெளியே மணிமேகலைப் பிரசுரம் புத்தக விற்பனை செய்து கொண்டிருந்து. நாமெல்லாம் பிடிஎப் வாசிப்பாளன் என்பதால் அந்தப் பக்கம் செல்லவில்லை என்பதையும் சொல்லிவிடுகிறேன்.

பேச்சாளர்கள் ஒவ்வொருவராக திருமதி. சித்ரா அவர்களின் அழகிய சிறிய அறிமுகத்துடன் மேடை ஏற, தமிழ் மொழியின் அடையாளமாக இன்றும் நிலைத்து நிற்பது பழஞ்சுவை இலக்கியம், பண்பாட்டின் வெளிப்பாடு, திரைக்கவிஞர்களின் ஆளுமை என்ற தலைப்பிலான விவாத அரங்கம் ஆரம்பித்த போது மணி 8.30க்கு மேல்.


விழாத் தலைவர் தமிழருவி மணியன் அவர்கள் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார் மூவரையும் பேச விட்டு, அவர்கள் பேசியதில் இதுதான் சரியென்ற முடிவை நான் சொல்லப் போவதில்லை. ஒவ்வொருவரின் பேச்சும் ஒவ்வொரு விதமானது... அதை நீங்கள் ரசிக்க வேண்டும்... இதில் இவர்தான் பெரியவர் அவர்தான் பெரியவர் என்றெல்லாம் என்னால் சொல்ல முடியாது என்றவர் மோகன சுந்தரம் ஐயா, பர்வீன் சுல்தானா மேடத்துடன் நிறைய நிகழ்ச்சிகளில் பேசியிருப்பதாகவும் இசைக்கவி ஐயாவுடன் பேசியதில்லை இதுதான் முதல் மேடை என்பதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் செய்திருக்கும் அவரின் பேச்சைக் கேட்க ஆவலாக இருப்பதாகச் சொன்னார்.

நான் இப்போதே பேசிவிடுகிறேன் முடிவில் பேசப் போவதில்லை என்றவர், நம்ம ஊரில் இருந்து இங்கு ஆட்களைக் கூட்டி வரும்போது அவர்களைப் பேச விட்டுக் கேட்க வேண்டும். அவர்களின் தமிழைப் பருக வேண்டும். பத்து நிமிடம் பதினைந்து நிமிடம் என பேச விடுவது சரியல்ல. இந்த நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெறுவதால் ஐந்து மணிக்கே ஆரம்பிக்கலாம் தவறில்லை என்றார். அவர் சொன்னது உண்மையே ஒவ்வொருவருக்கும் 15 நிமிடங்களே ஒதுக்கப்பட்டிருந்தது. மணி ஒலித்தபின்னர் கொஞ்சம் இழுத்து 20 நிமிடங்கள் ஆக்கினார்கள்.

பர்வீன் சுல்தானா அவர்களுக்கு மட்டுமே சற்று நேரம் கூடுதலாக கொடுக்கப்பட்டது என்றாலும் அவர் நிறைவாய் பேச முடியாத சூழல். குற்றாலக் குறவஞ்சிக்குள் மழையாய் நுழைந்தவர் காற்றுக் கலைத்த மேகம் போல வெளியேற, நேரம் கருதி முடித்தது சரியே எனக் கிளம்பினாலும் மனசு மட்டும் அவர் அதிக நேரம் பேசவில்லையே என்று வருந்தியது. அவருக்காக மட்டுமல்ல மோகன சுந்தரம் ஐயா சிரிப்பொலியோடு இன்னும் கொஞ்சம் இருக்க முடியவில்லை... ரமணன் ஐயாவின் கம்பீரக் குரலிலான தமிழை கொஞ்சம் கூடுதலாக சுவைக்க முடியவில்லை. ஆம் பேசிய நால்வருக்குமே நேரச் சிக்கல் பேச்சைக் குறைக்க வைத்துவிட்டது.

தமிழன் மட்டுமே தான் வாழும் நிலத்தை ஐந்து வகையாகப் பிரித்து வைத்திருக்கிறான். உலகில் வேறு எங்கும் பிரிக்கப்படவில்லை என்று சொன்ன தமிழருவி அவர்கள், காற்றை நான்கு வகையாக அதாவது வடக்கே இருந்து வருவது வாடை, தெற்கே இருந்து வருவது தென்றல், கிழக்கே இருந்து வருவது கொண்டல், மேற்கே இருந்து வருவது கோடை எனப் பிரித்து வைத்திருக்கிறோம் என்று சொன்னவர் பேசும் மொழியை இயல், இசை, நாடகமென மூன்று வகையாகப் பிரித்தவன் வாழ்வை அகம், புறம் என இரண்டாகவும் ஒழுக்கத்தை மட்டும் ஒன்றாகவும் பார்த்தவன் நம் தமிழன் என்றார்.

அகநானூறு புறநானுறு குறித்து விரிவாகப் பேசினார். புறநானுற்றில் 398 பாடல்கள் மட்டுமே இருக்கு. 267, 268 எண் கொண்ட இரண்டு பாடல் இல்லை... காணாமல் போச்சு.. நம்ம குழந்தைகளுக்கு பழந்தமிழ் இலக்கியங்களைச் சொல்லிக் கொடுக்கணும்... இல்லேன்னா ரெண்டு போனது மாதிரி நாம எல்லாத்தையும் தொலச்சிட்டு நிப்போம் என்று வருத்தப்பட்டார்.

Image may contain: 1 person, smiling, sitting and hat

கண்ணதாசனைப் பற்றி வாலி 'வாலிப வாலி' என்னும் புத்தகத்தில் எழுதியிப்பதைச் சொல்லி, தனக்குப் போட்டியாளராய் இருந்தவரைப் பற்றிச் சிலாகித்துப் பேச பெரிய மனசு வேண்டும் என்றார். கண்ணதாசனுடனான மோதலுக்குப் பின்னே எம்.ஜி.ஆர்.தான் வாலியை வளர்த்து விட்டவர் என்பதையும் நினைவு கூர்ந்தார்.

பேசிக் கொண்டிருக்கும் போது முன்வரிசை வி.ஐ.பி. களுக்கு சாப்பிட எதோ கொடுக்கப்பட மைக்கில் தட்டி கூப்பிட்டு நான் பேசும் போது எந்தச் சத்தமும் இருக்கக்கூடாது என்று நினைப்பவன்... இப்படிக் கொடுப்பதெல்லாம் எனக்குப் பிடிக்காது என அவர்களைப் போகச் சொன்னார். அரங்கம் கைதட்டலால் நிறைந்தது என்றாலும் கொடுத்தவர்கள் ஒரு ஓரமாக ஒதுங்கி கொடுத்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

இனி வரும் காலங்களில் மேடைகளில் சங்க இலக்கியங்களைப் பற்றி மட்டுமே பேசப்போவதாகச் சொன்னார். பாரதியின் கண்ணம்மா பற்றி பேசினார். கண்ணம்மா காதலி அல்ல அவள் குழந்தை என்பதை இசைக்கவி பேசும் போது சொன்னார். மயக்கமா கலக்கமா பாடல் பற்றிய பேச்சு இசைக்கவியின் பேச்சில் எழுந்தபோது அதை எழுதியவர் கண்ணதாசன் என்றவர் அந்தப் பாடலை எப்போது கேட்டாலும் அழுதுவிடுவேன் என்றார்.

யுகபாரதியின் பேச்சைச் சிலாகித்தார்.   இன்னும் இன்னுமாய் நிறையப் பேசினார் ஒரிடம் தவிர அரசியலுக்குள்ளேயே போகவில்லை அவர். இது இலக்கிய மேடை என்பதில் துளியும் பிசகாது அரை மணி நேரத்தில் இலக்கிய மழை பொழிந்தார். அதனால்தானே அவர் தமிழருவி ஆனார்.

அவரைத் தொடர்ந்து பேச வந்தவர் நகைச்சுவை அரசர் மோகன சுந்தரம் ஐயா அவர்கள். இந்த மனுசன் வாயைத் திறந்தாலே சிரிப்புத்தான். தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் சொன்னவர் உங்களுக்கு கவலையில்லை நீங்க சித்திரை ஒண்ணு கொண்டாடிட்டீங்க... எங்களுக்குத்தான் பிரச்சினையே... சித்திரை ஒண்ணுன்னு இவன் சொன்னான். அடுத்த ஆட்சி மாறினப்போ தை ஒண்ணுன்னான்... அப்புறம் மறுபடியும் சித்திரை ஒண்ணுன்னான்... இனி ஆட்சி மாறி வேற யாராச்சும் வந்து டிசம்பர் 12-ன்னு சொன்னாலும் நாங்க ஏத்துப்போம்... இல்லே மஹாளய அமாவாசைதான் தமிழ் வருடப்பிறப்புன்னு சொன்னாலும் நாங்க ஏத்துப்போம். எங்களுக்குத் தேவை ஒரு நாள் விடுமுறை... சாயந்தரம் இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாய் புதுப்படம் விளம்பரங்களுக்கு இடையே அவ்வளவுதான் என்றார்.

டாய்லெட்டை இப்ப நாம ரெஸ்ட் ரூம் என மாற்றி வைத்திருப்பதை வைத்து அவர் நகைச்சுவையாகப் பேசிய போது சிரிப்பொலி அடங்கவே இல்லை. அலுவலக செகரெட்டரி காலையில் வந்தவுடன் டாய்லெட் போக, மேனேஜர் வந்தவர் அவள் எங்கே எனக் கேட்க, மற்றொருவர் ரெஸ்ட் ரூம் போய்விட்டதாகச் சொன்னதும் என்ன வேலைக்கு வந்த உடனேயே ரெஸ்ட் ரூமா என்று திட்டிய போது சார் ரெஸ்ட் ரூம்ன்னா டாய்லெட் என்று சொல்ல வேண்டியிருந்ததைச் சொல்லி, டாய்லெட்டை ரெஸ்ட் ரூம் ஆக்கிட்டீங்க... அப்ப மத்தியானம் சாப்பிட்டு உட்காந்திருக்க ரூமுக்கு என்ன பேர் என்றார்.

ஆங்கிலம் பேச முடியாமல் தவிப்பதைச் சொல்லி, அப்படிப் பேச வேண்டும் என்றால் மனசுக்குள் வார்த்தைகளைக் கோர்த்து  அட்சர சுத்தமாகப் பேச, மனசுக்குள் பேசிப் பார்த்து பேச வேண்டியிருப்பதை நகைச்சுவையாய் சொன்னவர் தன்னிடம் மேலதிகாரி, நீ வெளியில பட்டிமன்றமெல்லாம் பேசுறியாமே இங்க அதெல்லாம் பேசக்கூடாது என்று சொன்னதாகவும், ஒரு முறை குட்டியானையில் மோதி ஸ்கூட்டர் பழுதானபோது மேனேஜருக்கு போனில் கூப்பிட்டு ஆங்கிலத்தில் பேச சார் குட்டியானை என ஆரம்பித்து அடுத்தடுத்த என்ன வரி போடுவது என்ற சிக்கலில் எப்பவும் சொல்லும் சார் ஐ ஆம் நாட் பீலிங் வெல் எனச் சொல்லி வைத்ததாய்ச் சொன்னார்.

திருமணத்துக்கு தன்னை மனைவி அனுப்பி வைப்பதையும் அங்கிருப்பவர்கள் தன்னை விடுத்து வீட்டில் கூட்டிவரலையா என்று கேட்பதையும் அப்ப நான் வீடில்லையாடா என அவர் மனசு கேட்பதையும் வீட்டுக்கு வந்ததும் உங்க சித்தப்பா என்னைக் கேட்டாரா...? உங்க அத்தை என்னைக் கேட்டாரா என மனைவி கேட்பதையும் நகைச்சுவையுடன் சொன்னார்.

இடையில் தமிழனாய் இருந்தால் ஷேர் பண்ணு என்பதையும் திருவள்ளுவருக்கே தாடி வச்சவனுங்க நாம என்பதையும் சாமியார்கள்தான் வாழ்கிறார்கள் என்பதையும் அவருக்கே உரிய நகைச்சுவையில் சொல்லி சிரிப்புக் கடலில் ஆழ்த்தினார். அவர் பேசும் போது சிரிப்பொலி தொடர்ந்து எழுந்து கொண்டே இருந்தது. அன்றைய பண்பாடு, இன்றைய பண்பாடு குறித்தெல்லாம் பேசினார்.

அவர் பேசிய பின்னர் பலர் மேடைகளில் நகைச்சுவையை வலிந்து திணிப்பார்கள். அது நமக்கு சிரிப்பைக் கொடுக்காது ஆனால் சண்முக சுந்தரம் அவர்கள் பேசுவது எல்லாமே நகைச்சுவையாய்... நம்மை சிரிப்புக் கடலில் ஆழ்த்தும் என்று சொன்ன தமிழருவி அவர்கள் இசைக்கவி ரமணன் ஐயா அவர்களை அழைக்க, கம்பீரமாய் எழுந்து வந்தார் அந்த மீசைக்காரர். அவரது வெண்மை நிற மீசையும் உயரமும் நடையும் திரு.பொன்னீலன் ஐயாவை கண் முன் நிறுத்த, தன் பேச்சை ஆரம்பித்தார்.

சென்ற பதிவில் போட்டிருந்த நடனப் போட்டோவில் இருக்கும் பையன் குறித்து கனவுப்பிரியன் அண்ணன் முகநூலில் சிலாகித்து எழுதி எனக்குக் கற்றுக்கொடுத்த ஆசானே நன்றி என முடித்திருந்தார். உண்மைதான்... தன் எதிரே ஒரு கூட்டம் இருக்கு... தன்னைச் சுற்றி சில பெண் குழந்தைகள் ஆடுகிறார்கள் என்பதெல்லாம் பற்றி கவலை கொள்ளாது பாடலில் மட்டுமே கவனம் கொண்டு மிகச் சிறப்பாக ஆடினான். பாரதி மேடைகளில் தொடர்ந்து ஆடுபவன்... பரதம் அவனிடம் பரவசப்பட்டு நின்றது. வாழ்த்துக்கள் சகோதரா.

(தொடரும்)

படங்கள் உதவி : சுபஹான் அண்ணன்.
-'பரிவை' சே.குமார்.


5 கருத்துகள்:

  1. நல்லதொரு நிகழ்வு பற்றி உங்கள் வழி தெரிந்து கொள்வதில் மகிழ்ச்சி.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான விமர்சனம்! அருமை!

    பதிலளிநீக்கு
  3. நன்கு ரசித்து எழுதி இருக்கிறீர்கள்;தமிழருவி அவர்கள் பேச்சை கேட்டதில்ல. ஆனால் அவருடைய ஊருக்கு நல்லது சொல்வெண் என்ற தொடரை படித்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. நிகழ்ச்சி பற்றிய சிறப்பான பதிவு

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி