சனி, 21 ஏப்ரல், 2018

எங்கள் வண்ணத் தமிழ்த்தாயே... யுகா கலக்கல்....

மீரத்தின் நேற்றைய மாலையை அபுதாபி பாரதி நட்புக்காக அமைப்பு தமிழ் அருவியில் நனையும் மாலையாக ஆக்கியது. முதலில் அவ்வமைப்புக்கும் சிறப்பாக வழிநடத்தும் திரு.இராமகிருஷ்ணன் மற்றும் திரு. கலீல் அவர்களுக்கு நன்றி.

Image may contain: 4 people, people smiling, people standing

மாலைதான் நிகழ்வு என்றாலும் மதியமே நெருடாவிடம் இருந்து அழைப்பு, நாங்கள் இலக்கியவாதிகள் எல்லாம் தலைமை இலக்கியவாதியுடன் இணைந்து உங்க பக்கமாக காளியின் காதலனைத் தேடி வருகிறோம்... நீங்களும் இணைந்து கொள்ள வேண்டுமென... இலக்கியவாதிகள் சந்திப்பில் எளக்கியவாதிக்கென்ன வேலை என முயற்சிக்கிறேன் என்று சொல்லி முடித்துக் கொள்ள நினைத்தால் தொடர்ந்து அழைத்து... பின்னர் தலைமை இலக்கியவாதி சொன்னால்தான் வருவான் என முடிவு செய்து அவரிடம் போட்டுக் கொடுக்க, 'நாங்க வர்றோம்... நீ கீழே நிக்கிறே' என்பதாய்  தலைமை முடித்துக் கொள்ள, சரி தலைமை அலைனில் இருந்து வந்திருக்கிறாரே ஒரு எட்டு பார்த்து விட்டு வந்துவிடலாம் என படுத்திருந்தவன் எழுந்து ஓட காரில் அள்ளிப் போட்டுக் கொண்டு போய்ட்டாங்க சாப்பாட்டுக் கடைக்கு... அறையில் வைத்த பிரியாணி, இந்த வாரமும் ஓடிட்டியாடான்னு கேட்டது எனக்கு நல்லாவே கேட்டது.

பின்னர் ஒரு பெரிய இலக்கியக் கும்பலுடன் எளக்கியவாதியாய் ஒரு ஓரமாக நின்று அவர்கள் அடித்து ஆட, பார்த்துக் கொண்டிருந்தேன். இலக்கியமாப் பேசியதால் பசிக்க, அப்படியே கடைக்குள் நுழைய நல்லதொரு சாப்பாடு... அதன் பின் கனவு அண்ணன் இல்லத்தில் ஒரு சிறிய தூக்கம்... மாலை காபி முடித்து விழா நடந்த சூடான் கலாச்சார மய்யத்துக்குச் செல்லும் முன்னரே இடம் பிடித்து வைத்திருப்பதாக நண்பர் நந்தா மெஜேச்சியிருந்தார். அங்கு சென்றால் நிறைய நட்புக்களைக் காண முடிந்தது. இந்த துபாய் மக்களில் பாதிப்பேருக்கு நம்மளைத் தெரியலை... இலக்கியவாதிகளை மட்டுமே தெரிந்தது. சசிக்குமார் அவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கிறேன் போல அருகில் வந்து கை கொடுத்தார். ஆர்.ஜே. நாகா பேசினார். 

எப்பவும் சரியான நேரத்துக்கு ஆரம்பிக்கும் பாரதி அமைப்பினர் நேற்றைய விழாவை 7 மணி வாக்கில்தான் ஆரம்பித்தார்கள். தமிழ்தாய் வாழ்த்து, வரவேற்புரை என எல்லாம் முடிந்து எப்பவும் போல் ஆஷா நாயர் அவர்களின் திறமையான பயிற்சியில் பாரதியாரின் இரண்டு பாடலுக்கு மிகச் சிறப்பான நடன நிகழ்வுடன் விழா விரிய ஆரம்பித்தது.

விழா நாயகர்களை அறிமுகம் செய்தவர் வசீகரா பாட்டை யுகபாரதி எழுதியதாகச் சொன்னதும் அதெப்படி அது தாமரையாச்சேன்னு யோசிக்க பக்கத்தில் இருந்த இலக்கியவாதி ராஜாராம் அவர்கள் வசியக்காரி பாடல், புதிய கீதை படத்துக்கு எழுதியது என விளக்கினார். விளக்கமாய்ச் சொல்லும் பால்கரசு, நௌஷாத், ராஜாராம் போன்றோர் அருகிலிருந்ததால் விபரங்களை அறிய முடிந்தது.

அதன்பின் சில மரியாதைகள் செய்யப்பட்டு மேடை கவிஞர் யுகபாரதியின் கையில் கொடுக்கப்பட்டது... சிறப்புரை அவர்தானே.... அதனால் அவர்தானே முதலில் இறங்க வேண்டிய மட்டையாளர்... கவிஞர், ஆயிரம் பாடலுக்கு மேல் எழுதியவர் என்பதால் 'என் தமிழ்த்தாயே... பாரதியே.... ' என்றெல்லாம் பேசுவாரோ என்ற பய யோசனை தோன்றினால் நம்ம பக்கத்துல உக்காந்து இந்தருய்யா... நான் இப்படித்தான் எனப் பேசுவது மாதிரி பேச்சை ஆரம்பித்தார் கவிஞர்.

முதலில் பாரதியின் பாடலைப் பாடி... எல்லா மேடையிலும் இந்தப் பாடலைத்தான் பாடுவேன்... மேடை அலங்காரப் பேச்செல்லாம் பேசுவதில்லை என்று நகைச்சுவையாய் தொடங்கியவர், பல்லாங்குழியின் வட்டம் பாடலை சிநேகா தொலைக்காட்சிகளில் ஆடி ஆடி கோடிகளில் சம்பாதிக்க பாட்டெழுதிய தனக்கு அடுத்த பாட்டு வரவேயில்லையே என்ற ஏக்கம் கொண்டு புலம்பியதைச் சொன்னபோது அரங்கம் சிரிப்பொலியுடன் கலந்த கைதட்டலில் அதிர்ந்தது. 

லிங்குச்சாமி இவரிடம் பிரபலமான பாட்டை எழுதினே... அடுத்த பாட்டுக்கான சான்ஸ் உனக்கு வரவேயில்லை என்றபோது நீங்க கூடத்தான் நல்ல படமெடுத்தீங்க... எட்டு மாசமா சும்மாதானே இருக்கீக என்று இவர் சொன்னதும் உனக்கு ஏன் பாட்டெழுத வாய்ப்பு வரலைன்னு இப்பத்தான்யா தெரியுதுன்னு அவர் சொன்னதை நகைச்சுவையோடு சொல்லி சிரிப்பைத் தொடர வைத்தார்.

 

இவருக்கும் வித்யாசாகருக்குமான முதல் சந்திப்பைச் சொன்னபோது அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்தது. மனுசனுக்குள்ள ரெண்டு மூணு வடிவேலு இருக்கானுகய்யா... பேசப் பேச சிரிப்பு... இவரு பாட்டெழுதுறதோட சிரிப்பு நடிகர்களுக்கு வசனமும் எழுதலாம். இப்ப அதுதானே ரொம்ப பஞ்சமா இருக்கு... வறட்டுச் சிரிப்பை வச்சி நம்மளைக் கொல்லுறானுங்க.

லிங்குச்சாமியின் அடுத்த படத்தில் பாட்டெழுத, அதாவது தனது இரண்டாவது பாட்டு வாய்ப்புக்காக இசையமைப்பாளர் வித்யாசாகர் முன் நிறுத்தப்பட்டிருக்கிறார் கவிஞர். வித்யாசாகர் ஆர்மோனியப் பெட்டியோடு காதல் செய்து கொண்டு தலைவரை ஒரு பொருட்டாகவே மதிக்கலையாம்... இவரும் ரெண்டு மூணு கவிதை தொகுப்பு போட்டவரு... ரெண்டு தொகுப்புக்கு தமிழக அரசு விருது பெற்றவரு... (இதையெல்லாம் அவரு திரும்பத் திரும்ப சொல்லும்போது அரங்கெங்கும் நிறைந்திருந்தது சிரிப்பலை.) அப்படியிருந்தும் மனுசன் மதிக்கலை. இவரு செருமிப் பார்த்து சார் எனக் கூப்பிட்டு தன்னுடைய கவிதை தொகுப்பைக் கொடுத்தப்போ இடது கையால் வாங்கி தூக்கிப் போட்டுட்டாராம். பதினெட்டு வருசத்துக்கு முன்னே இன்னைக்கு சிரிச்சிச் சிரிச்சிப் பேசுறவருக்கு அன்னைக்கு முறுக்கிக்கிட்டு நிக்கிற வயசுல்ல... கோபம் கடுமையா வந்திருக்கு இருந்தாலும் அடக்கிக்கிக்கிட்டு மீண்டும் சார் போட, வித்யாசாகர் பேசியிருக்கிறார். என்ன சொன்னாராம் தெரியுமா..?

உம்பாட்டே தப்பாயிருக்கேய்யா... அதென்ன பல்லாங்குழியின் வட்டம்... பல்லாங்குழி வட்டமாய்யா... அது குழிவட்டம்... எதோ எழுதணுமின்னு எழுதக் கூடாதுன்னு சொன்னாராம். இவருதான் ஒரு பாட்டுல பேமஸான மகாகவியாச்சே.... ரெண்டு மூணு புத்தகம் வேற போட்டவரு... அதுல தமிழக அரசு விருது வேற... இதெல்லாம் இருந்தும் மதிக்காம பேசுனா... அதுபோக கொடுத்த புத்தகத்தை இடது கையால தூக்கிப் போட்டுட்டு பாட்டுல பிழை கண்டுபிடிச்சா... இவருக்கு கோபம் வந்து தாமரைக் கன்னம், நிலா முகம்ன்னு எல்லாம் எழுதுறோம்... தாமரைக் கன்னமா சார்... நிலா முகமா சார்ன்னு கேட்டதும் இசையமைப்பாளருக்கு கோபமாயிருச்சாம். லிங்குச் சாமி சாரைக் கூப்பிட்டு இந்தப் படத்துக்கு இந்தப் பையன் எழுதணுமான்னு கேட்டாராம்.

அப்ப லிங்குச்சாமி சென்டிமெண்டா இவர் எழுதினா நல்லாயிருக்குன்னு நினைக்கிறேன்னு சொன்னாராம்... அப்பத்தான் நம்ம பாட்டுமேல நம்பிக்கை வச்சி எழுதச் சொல்லலை... சென்டிமெண்ட் மேலதான் நம்பிக்கை வச்சிருக்காங்கன்னு தோணுச்சாம் இவருக்கு.... பின்னர் இது ஒரு காதல் கடிதம் எழுதுவது போலான பாட்டு அன்புள்ளன்னு எல்லாம் எழுதக்கூடாதுன்னு ஏகப்பட்ட விதி முறைகள் சொல்ல, கடைசியில் இவர் லிங்குச்சாமியிடம் உங்க படத்துக்கு இவர் இசையமைக்கணுமான்னு யோசிச்சிக்கங்க சார்ன்னு சொல்லிட்டு வந்துட்டாராம்.

பின்னர் லிங்குச்சாமி உன்னோட திறமைமேல அவருக்கு இருக்கும் எண்ணத்தை மாற்ற நல்ல பாட்டா எழுதி காலையில கொண்டு வான்னு சொல்ல இரவெல்லாம் உக்காந்து இலக்கியங்கள் வாசித்து 'காதல் பிசாசே'ங்கிற வார்த்தையை எழுதிட்டு அதுக்கு மேல என்ன எழுதன்னு தெரியாம தூங்கிட்டாராம்... பின்னர் காலையில் நண்பருடன் பேசிய போது கிடைத்த வார்த்தை அடுத்த வரியாக, பயணப்பட்ட போது ஸ்கூட்டர் விபத்துக்குள்ளாக ஓட்டிய நண்பருக்கு அடிபட்ட போதிலும் நீ போய் பாட்டைக் காட்டு என்று நண்பர் சொல்லிய போது சில வரி உதயமாக, பாட்டை எழுதிக் கொண்டு போய் லிங்குச்சாமி முன்னர் நின்றார். இந்தப் பாடலில் முதல் இரண்டு வரி போக மீதமெல்லாம் வித்யாசாகரை திட்டியதுதான் என்றும் சொன்னார்.

லிங்குச்சாமி பாட்டை பார்க்காமலே என்னய்யா ஒரு பக்கம் மட்டும் எழுதியாந்திருக்கே என்றபோது இதுக்கு மேல் எழுத முடியாது சார் என்று சொன்னதும் இவரை வித்யாசாகரிடம் அனுப்பி வைக்க, அவரோ முதல் நாள் போல் ஆர்மோனியப் பெட்டியுடனான காதலில் இருக்க, பாட்டைக் கொடுக்க எழுதிட்டிக்கிட்டு வந்துட்டியா என கேட்டபடி வாசித்தவர் , இவரை அருகழைத்து எழுந்து அருமையா இருக்கு என கட்டிக் கொண்டாராம். மேலும் உன்னோட முதல் பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும்... அதை நேற்றே சொல்லியிருந்தால் பெரிய கவிஞன் என்ற மிதப்பில் இப்படி எழுதியிருக்கமாட்டாய். அதான் அப்படிப் பேசினேன் என்று தட்டிக் கொடுத்தார். அவருக்கு முன்னூறு பாடலுக்கு மேல் எழுதியதாய்ச் சொன்னார்.

மேலும் பாரதியின் அக்கினிக் குஞ்சொன்று கண்டேனையும்... கண்ணதாசனயும் வியந்து பேசினார். பாரதி மீதான தன் காதலையெல்லாம் வார்த்தைகளாக்கி வசீகரிக்க விட்டார். கண்ணம்மா பாடல் எழுதியதைக் குறித்து சிலாகித்துப் பேசினார். அந்தப் பாடலை தன் மகளை மனதில் வைத்து அவளுக்காக எழுதிய பாடலே என்றார். கண்ணம்மா பாடல் தாமரை எழுதியதென நினைத்துக் கொண்டிருந்த திருமதி. பர்வீன் சுல்தானா அவர்களுக்கு இன்றுதான் நான் எழுதியது என்பது தெரியும் என்றவர், பாரதி நட்புக்காக அமைப்பு ஐந்தாவது முறையாக பர்வீன் அவர்களை அழைத்திருப்பது நன்றாக பேசினார் என்பதாலா அல்லது இந்த முறையாவது நன்றாக பேசிவிடுவார் என்பதாலா என கிண்டலாய் இடைச் செருகினார்.

மன்மத ராசா போன்ற பாடல்களை எழுதினாலும் முடிந்தளவு நல்ல பாடல்களை எழுதுவதாகச் சொன்னார். இசையமைப்பாளர் இமானுக்கு முன்னூற்றம்பது பாட்டுக்கு மேல் எழுதியிருப்பதாகவும் இதுவரை அவரும் இவர் நல்ல பாடலை எழுதிவிடுவார் என்று வாய்ப்புக் கொடுப்பதாகவும் இவரும் அவர் நல்ல டியூனாகப் போட்டு விடுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் சிரிப்போடு சொல்லிவிட்டு இதெல்லாம் யூடிப்புல போடும் போது எடிட் பண்ணிருங்க... நாளை மறுநாள் விசுவாசம் கம்போசிங் இருக்கு என்றார்.

நிறைய விஷயங்கள் பேசினார்... நிறைவாய்ப் பேசினார்... ஒரு கவிஞன் இவ்வளவு நகைச்சுவையாய்... அவையை அதிர வைக்கும் சிரிப்பொலியையும் கைதட்டலையும் தொடர வைத்தபடி பேசுதல் என்பது எல்லாருக்கும் வாய்ப்பதில்லை. சிறப்பான பேச்சு... இடையில் வண்ணங்கள் பற்றி பேசும் போது கருப்பு அரசியலும் எட்டிப் பார்த்தது. மனைவிக்கு சமையலில் உதவி செய்வேன் என கவிதை சொன்னது... இதுவரை அவருக்கு உதவாதது... அதை அவர் கேட்டபோது நீ என்னைக்கு நல்லா சமைக்கிறியோ அன்னை உதவுறேன்னு சொன்னது என்ன இவரின் பேச்சின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை சிரிப்புக்கும் சிந்தனைக்கும் பஞ்சமில்லை.

இவரின் பேச்சுக்குப் பின்னே கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசு கொடுக்கப்பட்ட போது சொதப்பி விட்டார்கள். சரியான முறையில் பரிசுக்குறியவர்களின் பெயர்களை எழுதி வைக்காமல் பரிசு பெறாத மூவருக்கு பரிசு கொடுத்து விட்டார்கள். முதலாமர் பரிசு வாங்க மேடையில் நிற்கும் போது பரிசு பெற்ற கவிதையில் கவர்ந்த வரிகள் என கவிஞர் சொன்னபோதுதான் விவரம் வெளிச்சமானது.

இரண்டாவது பரிசு பெற்றவர் அரசியல்வாதிபோல் கூட்டத்தில் இருந்து மேடைக்குப் போகும் போதே கையெல்லாம் தூக்கிக் கும்பிட்டு அலப்பறை கொடுத்துச் சென்றார். ஐந்து நிமிடத்தில் அது திரும்பப் பெறப்பட அவரின் முகத்தில் மகிழ்ச்சி மறைந்து சோகம் குடி கொண்டது. மூன்றாம் பரிசு எனச் சொல்லி மேடைக்கு அழைத்து பரிசு கொடுத்த போதே சுதாரித்திருக்கலாம். பாவம் மூவருக்குமே மிகுந்த வருத்தம். இனி வரும் விழாக்களில் இப்படியான நிகழ்வு இல்லாதிருக்கட்டும்.

இதன் பின் மேடை திரு. தமிழருவி மணியன், ஐயா மோகன சுந்தரம், ஐயா ரமணன், திருமதி. பர்வீன் சுல்தானா வசம் ஒப்படைக்கப்பட்ட போது மணி 8.30க்கு மேல்.... 

தமிழ் மொழியின் அடையாளமாக இன்றும் நிலைத்து நிற்பது என்ற தலைப்பில் தலைவராக தமிழருவி வீற்றிருக்க, பழஞ்சுவை இலக்கியங்களே என பர்வீன் அவர்களும் பண்பாட்டின் வெளிப்பாடே என மோகன சுந்தரம் அவர்களும் திரைக்கவிஞர்களின் ஆளுமையே என இசைக்கவி ரமணன் அவர்களும் பேச ஆரம்பித்தார்கள். கவிதை போட்டி சொதப்பல் மறந்து பேச்சை ரசிக்க அரங்கம் அமைதியானது.

(தொடரும்)

படங்கள் (நன்றி) : சுபஹான் அண்ணன்.
-'பரிவை' சே.குமார்.

7 கருத்துகள்:

  1. இத இத இதைத்தான எதிர்பார்த்தேன்...

    அருமை அண்ணா!

    பதிலளிநீக்கு
  2. நிகழ்வு பற்றிய விவரங்கள் சிறப்பு. கவிஞரின் நகைச்சுவை - நன்று!

    பதிலளிநீக்கு
  3. அருமை அண்ணா!தொடரும் விமர்சனங்களுக்காக உம்மை தொடர்ந்து கொண்டு!

    பதிலளிநீக்கு
  4. நிகழ்ச்சித் தொகுப்பு அருமை
    சுவைக்கச் சுவையான பதிவு

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

    உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

    நன்றி..
    தமிழ்US

    பதிலளிநீக்கு
  6. நிகழ்ச்சி பற்றி விரிவான பதிவு.

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி