'மன்னவன் பேரைச் சொல்லி
மல்லிகை சூடிக் கொண்டேன்....'
இந்த வரிகள் எந்தப் பாட்டின் வரிகள் என்பது தெரியும்தானே...? ஆம் மௌன ராகம் படத்தில் வரும் 'சின்னச் சின்ன வண்ணக்குயில்...' பாடல் வரிகள்தான் இவை. என்னமோ தெரியவில்லை இந்த வரிகள் கடந்த ஒரு வார காலமாக அடிக்கடி முணுமுணுக்கும் வரிகளாக மாறியிருக்கின்றன. பணி நேரத்தில் கூட அடிக்கடி என்னை அறியாமல் இந்த வரிகளைப் பாடுகிறேன். காலையில் எழும்போது ஒரு பாடலைக் கேட்டு அது நம் மனதில் தொக்கிக் கொண்டால் அந்தப் பாடலின் முதல் வரிகள் நாள் முழுவதும் நம் உதடுகளில் உட்கார்ந்திருக்கும் என்பதை எல்லாருமே உணர்ந்திருப்போம். அப்படிக் கேட்காத ஒரு பாடலின் வரிகள்... அதுவும் பாடலின் இடையில் வரும் வரிகள் தொடர்ந்து முணுமுணுத்தல் என்பது வித்தியாசமான அனுபவம்தானே.
மௌன ராகம் படத்தைப் பொறுத்தவரை எனக்கு ரொம்பப் பிடிக்காத பாடலே இதுதான்... அதற்கான காரணம் என்னெவென்று எல்லாம் சொல்லத் தெரியவில்லை... நிலாவே வாவும் மஞ்சம் வந்த தென்றலும் என்னுள் ஆக்கிரமித்ததை வைத்துப் பார்க்கும் போது இந்தப்பாடல் அதிகம் ஆக்கிரமிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியிருக்க இந்த வரிகள் என்னை எப்படி ஆக்கிரமித்தன என்பதை ஆச்சர்யக்குறி அல்ல கேள்விக்குறி இட்டே யோசிக்கிறேன்... விடைதான் கிடைக்கவில்லை. இங்கு அலுவலக நேரத்தில் வேலை அலுப்புத் தெரியாமல் இருக்க அதிகம் இளையராஜா பாடல்களைக் கேட்பதுண்டு. அரக்கப்பறக்க எழுந்து குளித்து... பஸ் பிடித்து... அந்த அரை மணி நேரத்தில் கொஞ்சமேனும் வாசித்து அலுவலகம் வந்து சேரும் போது எட்டு மணி அலுவலகத்துக்கு 8.15க்கு மேலாகியிருக்கும். நம்ம ஊர் மாதிரி பஸ்ல பாட்டுப் போட்டானுங்கனாலும் இந்த வரிகள் தொத்திக்கிச்சுன்னு சொல்லலாம். இங்க கதவைச் சாத்த உள்ள வா... உள்ள வான்னு மைக்குல டிரைவர் கத்துறது மட்டுமே... அப்படியே பாட்டுப் போட்டாலும் ராச கானங்களா போடப் போறானுங்க... அரபிக் கானங்களை அல்லவா போடுவானுங்க... அப்புறம் எப்படி இந்தப் பாடல் அடிக்கடி பாடும் பாடலாய்..?
சின்ன வயசுல இருந்தே பாட்டுக் கேக்குறதுன்னா ஒரு சந்தோஷம்... மகிழ்ச்சி... அதுக்காக நல்லாப் பாடுவியான்னு மட்டும் கேட்டுடாதீங்க.. பப்ளிக் பாடகனும் இல்லை... பாத்ரூம் பாடகனும் இல்லை... பாடல் ஒலிக்கும் போது அந்த வரிகளுடன் ஒன்றிப் பாடும் பாடகனாய் மட்டுமே நான். கல்லூரியில் படிக்கும் காலத்தில் நண்பனின் வாக்மேனில் சுந்தரகாண்டம் படப் பாடல்களை கேசட் தேயுமளவுக்கு சுழலச் சுழல கேட்டவர்கள் நாங்கள்... எங்க வீட்டில் ஒரு அசெம்பிள் டேப்ரெக்கார்டர்... கொஞ்சம் பெரியதாய் செய்து வாங்கிய இரண்டு ஸ்பீக்கர்... எங்க வீட்டு உத்திரத்தில் தூக்கி வைத்துக் கட்டப்பட்டிருக்கும்... அப்புறம் சனி மூலைக்கு எதிர் மூலையில் ஒரு மண் பாணை மீது வைக்கப்பட்ட ஸ்பீக்கர், அதன் மீது தூசி அடையாமல் கட்டப்பட்ட துணி... எத்தனை ஸ்பீக்கர் வைத்து அடித்தாலும் பானையில் ஸ்பீக்கர் வைத்து பாட்டுக் கேட்பதற்கு இணையாய் இருப்பதில்லை என்பதே என் எண்ணம். கல்லூரி விட்டு வந்ததும் பாட்டுப் போட்டா, தம்பி வந்துருச்சா... இனி கத்த விட்டுடுமேன்னு அம்மா கத்த, அதைப் பற்றி எல்லாம் கவலைப்படும் வயதா அது... விதவிதமாய் பாடல்கள்... அதுவும் 80-90-யில் வந்த படப்பாடல்கள் விதவிதமான தேர்வில் பதியப்பட்ட 90 கேசட்டுக்கள்... ஒரு கேசட்டில் ஒரே பாடல் இரண்டு பக்கமும் பதியப்பட்டிருக்கும்.. ஒரு கேசட்டில் ஒரு புதிய பாடல், ஒரு பழைய பாடல் என மாற்றி மாற்றி... மற்றொன்றில் ஒரு சோகம், ஒரு காதல்... ஒன்றில் கமல் மட்டும்... மற்றொன்றில் ராமராஜன்... இப்படியாக எத்தனை கேசெட்டுக்கள். அது ஒரு ரம்மியமான காலம் அல்லவா..?
என்னை எப்பவுமே தாலாட்டும் இசைக்குச் சொந்தக்காரர் ராசாதான்... அதுவும் குறிப்பாக கார்த்திக் மற்றும் இராமராஜன் படப்பாடல்கள் என்றால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கேட்கலாம். இதில் பிரபுவையும் முரளியையும் உள்ளிழுத்துக் கொள்ளலாம். நேரம் போவதே தெரியாது. அது ஏன்னு தெரியலை... எத்தனையோ நல்ல இசைக்கலைஞர்களை தமிழ்த் திரையுலகம் கொண்டு வந்தாலும் ராசாவின் மீதான மோகம் மட்டும் இன்னும் கொஞ்சம் கூட குறையவில்லை. அதற்கு கிராமிய மணம் நிறைந்த அந்த இசையாய்க்கூட இருக்கலாம்... திருவிழாக்களில் தப்பு அடிக்கும் போது மனம் குதூகலிப்பதுடன் கால்கள் லேசான ஆட்டம் காட்ட வளர்ந்த வாழ்க்கையை அந்த இசையை வெறித்தனமாக ரசிக்கலாம். ரஹ்மானின் சின்னச் சின்ன ஆசையும் புதுவெள்ளை மழையும் இப்போது கேட்டாலும் சுகமாய் என்றாலும் ரஹ்மானின் மெலோடிகள் தவிர பல பாடல்களை இப்போது கேட்பதே இல்லை... தமனின்... யுவனின்... அழகிய பாடல்கள் கூட தொடர்ந்து கேட்க வைப்பதில்லை. அனிருத் நல்ல பாடல்களைக் கொடுத்தாலும் அதிரடி இரைச்சல் இசையை ரசிக்க வைப்பதில்லை. எது எப்படி என்றாலும் எண்ணம் எல்லாம் ராஜகீதம் இருப்பதால் மற்றவர்களின் பாடல்களின் மீது ஒரு ஆர்வம் ஏற்படாமல் போய்விட்டது போலும். அதுவும் ராசா பாடும் டூயட்... சிலருக்கு அந்தக் குரல் பிடிக்காமல் இருக்கலாம்... ஏனோ அந்தக் குரல் என்னை வசீகரித்தது... இன்னும் வசீகரித்துக் கொண்டிருக்கிறது.
கார்த்திக் - மோனிஷா நடித்த 'உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன்' படத்தில் வரும் 'என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் யாரடி...' பாடல்தான். இதுவரை எத்தனை முறை கேட்டேன் என்பதெல்லாம் கணக்கில் இல்லை. தோணும் போதெல்லாம் கேட்கும் பாடல்கள் சில உண்டு... அப்படியான பாடல்களில்... அதிகம் விரும்பும் பாடல்களில்... இதுவும் ஒன்று. இதே போல் கரகாட்டக்காரனில் வரும் 'இந்தமான் உந்தன் சொந்தமான்...' பாடலும் ஓருவர் வாழும் ஆலயம் படத்தில் வரும் 'மலையோரம் மயிலு விளையாடு குயிலு...' நானே ராஜா நானே மந்திரி படத்தில் வரும் 'மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்...' என நிறையப் பாடல்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்... அப்படிப் போனால் ஆயிரம் பாடல்களாவது நான் விரும்பும் பாடல்களாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. இந்தப் பாடல்களை எல்லாம் யாருமற்ற ஒரு இடத்தில், எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் தனியே அமர்ந்து கேட்டோமென்றால் இது கொடுக்கும் சுகமே தனிதான்... மழை நேரத்தில் சூடான காபியோடு மழையை ரசித்தபடி கேட்க்கும் சுகமும் தனிதான்... மழைக்கெல்லாம் இந்தப் பாலையில் வேலை இல்லை என்பதால் இரவு அறையில் எல்லாரும் தூங்கும் போது கணிப்பொறியில் பாடலை ஓட விட்டு, ஹெட்செட்டை மாட்டிப் படுத்துக் கொண்டு மணிக்கணக்கில் ரசிப்பதும் சுகமாய்...
எனக்கு படிக்கவோ எழுதவோ செய்ய வேண்டும் என்றால் பாட்டுக் கேட்க வேண்டும்... காது வழிப் புகும் பாடல் வரிகள் வாய்வழி வெளியாகிக் கொண்டிருக்கும் போது எனது படிப்பும் எழுத்தும் பக்காவாக நகர்ந்து கொண்டிருக்கும். பள்ளியில் படிக்கும் போது ரேடியோ ஓடினால்தான் படிப்பேன்... அப்புறம் டேப்ரெக்கார்டர்... பின்னர் டிவி... என மாறி வந்தாலும் என் வாசிக்கும் எழுதும் பழக்கத்தில் இன்றுவரை பாடல் கேட்கும் முறையில் மட்டும் எந்த மாற்றமும் வரவில்லை... என் வேலை நடக்க எனக்கு பாட்டு வேண்டும்... அலுவலகத்தில் அடித்து நொறுக்கும் வேலை என்றால் எட்டு மணி நேரத்துக்கும் ராசாவின் ஏகாந்தம்தான்.... எங்கம்மா இப்போது கூட என் மகளிடம் உங்கப்பனுக்குத்தான் படிக்கும் போது பாட்டு ஓடிக்கிட்டே இருக்கணும்... நீயும் அப்படியே வர்றே என்று அடிக்கடி சொல்வதுண்டு. ஆம் எங்க ஸ்ருதிக்கும் இந்த நோய் தொற்றிக் கொண்டுள்ளது... டிவி ஓடிக்கொன்டிருக்கும் போதுதான் படிப்பும் எழுத்தும்.
பாருங்க 'மன்னவன் பேரைச் சொல்லி'யில் ஆரம்பித்து மனம் போன போக்கில் பயணித்து எங்கெங்கோ போயாச்சு. சில பாடல்கள் நெருக்கமான சிலருக்குப் பிடிக்கும் என்பதால் நமக்குப் பிடித்துப் போவதும் உண்டு. சில பாடல்கள் நாம் கேட்டதுமே மனசுக்குள் சிம்மாசனம் இடும். வைரமுத்துவின் வைரவரிகளை எல்லாம் ரெண்டாயிரத்துக்கு முன்னாலயே கொடுத்துட்டார் என்றே சொல்ல வேண்டும்... அன்று சிம்மாசனமிட்ட வரிகள் இன்றும் மனதிலிருந்து அகலாமல்... அதே போல் நா.முத்துக்குமாரின் பாடல் வரிகளைக் கேட்கும் போது பட்டுக்கோட்டையைப் போல் ஒரு நல்ல கவிஞனை இழந்து விட்டோமே என்று தோன்றும்.. கவிதைகளில் பழனிபாரதியின் காதல் கவிதைகள் வாசித்தல் ஒரு சுகமே... முகநூலில் இவரின் கவிதையும் அதற்கான படங்களும் அசத்தலாக இருக்கும். இவர் எழுதிய 'காற்றே காற்றே' பாடலை வைக்கம் விஜயலெட்சுமி அவ்வளவு அழகாகப் பாடியிருப்பார். அவரைத் தவிர வேறெவராலும் அப்படி ஒரு ரசனையோடு அந்தப் பாடலை பாட முடியாது என்பதே என் கருத்து. இதேபோல் ராசா இல்லாது நிறையப் பாடல்கள் ரசனைத் தொகுப்பில் இருந்தாலும் எல்லாவற்றுக்கும் முன்பாக ராசாவின் கீதங்களே என்னைத் தாலாட்டிக் கொண்டிருக்கின்றன. எனது சந்தோஷம், துக்கம், சோகம் என எல்லாவற்றிலும் எனக்கு உறுதுணை ராசாவின் ராகங்களே. என் மனசுக்குள் இன்னும் அடித்து ஆடிக்கொண்டிருக்கின்றன....
'மன்னவன் பேரைச் சொல்லி
மல்லிகை சூடிக் கொண்டாள்...'
எப்போது இந்த வரிகள் என்னுள் இறந்து இறங்கும் என்று தெரியாது. அப்படி இறங்கும் பட்சத்தில் வேறொரு பாடல் வரிகள் விக்ரமாதித்தனிடம் கதை சொல்லும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்வது போல என்னுள் ஏறிக் கொள்ளலாம்... அது
'பூமரக் காத்து சாமரம்தான்
வீசுது இங்கே வாசனதான்...'
என்ற வரிகளாகவும் இருக்கலாம். இல்லையேல் எந்த நேரத்திலும் கேட்கக் கூடிய விருப்பப் பாடல்களான கிராமத்து நாயகன் ராமராஜனின் பாடலில் இருந்து
'உன் முகம் பார்த்து நிம்மதி ஆச்சு
என் மனம் தானா பாடிடலாச்சு...'
என்ற வரிகள் கூட வந்து உட்கார்ந்து கொள்ளலாம்... சரி அதுவுமில்லை... இதுவுமில்லை என்றால் நவரச நாயகன் கார்த்திக்கின் பாடல் வரிகளில் இருந்து
'வண்ணமா வானவில்லில் நூலெடுத்து வாரேன்
விண்ணுல மீன் புடிச்சு சேல தெச்சுத் தாரேன்'
என்ற வரிகளோ என்னை ஆட்கொள்ளலாம்.
இதையெல்லாம் தாண்டி அதாவது இந்த இசைராஜாவைத் தாண்டி அந்த இளையராஜாவின் வரிகள்... அட இது எந்த இளையராஜான்னுதானே நினைக்கிறீங்க... அது தனிப்பதிவா வரும்... அவரின் பாடலான
'அத்தமக உன்ன நெனச்சு அழகுக்
கவிதை ஒண்ணு வடிச்சேன்...
அத்தனயும் மறந்துபுட்டேன்
அழகே உன்னப் பாக்கயில...'
என்ற வரிகளும் வந்து உக்காரலாம்...
இந்த வரிகளை யூடிப்பில் அடித்து தேடிப்பாருங்கள்... நல்ல நல்ல கிராமியப் பாடல்களைக் கேட்கலாம்.
சரி எழுத்து எங்கெங்கயோ சுற்றி ஒரு முடிவுக்கு வந்திருக்கு... எழுத்து ரசனையா இருந்துச்சான்னு தெரியாது... ஆனா ராசாவின் பாடல்கள் ரசனையானவை.... காலத்துக்கும் நம்மை இசை என்னும் வலைக்குள் இழுத்துப் பிடித்து வைப்பவை என்பது மட்டும் உண்மை. போதும் இதுக்கு மேல அறுக்காதேன்னு குரல்கள் எழும் முன்னே என்னை முணுமுணுக்க வைத்த பாடல் வரிகளுடன் முடிச்சிடுறேன்...
'மன்னவன் பேரைச் சொல்லி
மல்லிகை சூடிக் கொண்டேன்..
மன்மதன் பாடல் ஒன்று
நெஞ்சுக்குள் பாடிக் கொண்டேன்..
சொல்லத்தான் எண்ணியும்
இல்லையே பாசைகள்...
என்னமோ ஆசைகள்
நெஞ்சத்தின் ஓசைகள்...
மாலை சூடி.. மஞ்சம் தேடி..
காதல் தேவன் சந்நிதி
காண... காணக் காண..
சின்னச் சின்ன வண்ணக் குயில்... சூப்பர் சிங்கர் பிரியங்காவின் குரலில்... மன்னவன் பேரைச் சொல்லி... வரியை பிரியங்காவின் குரலில் கேளுங்கள்.... நடுவர்களை ஒன்ஸ்மோர் கேட்க வைத்த குரல்
சரிங்க கடையை அடைக்கிறதுக்கு முன்னால நம்ம கதை ஒண்ணு பிரதிலிபி போட்டியில் இருக்கு... வாசிக்கதவர்கள் ஒருமுறை வாசிக்கலாமே...
-'பரிவை' சே.குமார்.
தங்கள் வலை நீண் நேரம் வர ,திறக்க ஆகிறது கவனிக்கவும்
பதிலளிநீக்குகுமார் தளம் திறக்க எனக்கும் எப்பவுமே நேரம் எடுக்கும்!
பதிலளிநீக்குஇளையராஜா பாடல்வரிகளை ரசித்தேன். எங்கள் தளத்தில் வெள்ளியன்று வெளியாகும் வீடியோ பதிவுகளில் இளையராஜா பாடல்களும், அவரது பழைய பேட்டி ஒன்றும்வெளியிட்டு வருகிறேன்.பார்க்கிறீர்களோ?
ப்ரதிலிபி பக்கம் நான் போவதில்லை!
அருமையான பாடல் இந்தப்பாடல் எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும் குமார். ராஜா பாடல்களைச் சொல்லணுமா என்ன...பிரியங்காவின் குரலும் இனிமை.
பதிலளிநீக்குஎதுவோ ஒன்று பதிவெழுத வைத்து விடுகிறதே
பதிலளிநீக்குஎக்காலத்திற்கும் பொருந்துகின்ற அருமையான பாடல்.
பதிலளிநீக்குமனசு தளம் திறக்க பின்னூட்டமிட நிரம்ப காத்திருக்க வேண்டி இருக்கின்றது குமார். ஏன் என கவனியுங்கள்.
பதிலளிநீக்குபாடல்கள் அனைத்தும் அருமை குமார்
இனிய பாடல்களின் தொகுப்பாக பதிவு..
பதிலளிநீக்குமௌன ராகம் படத்தின் சின்னச் சின்ன வண்ணக் குயில் - பாடல் தான் எனக்கு மிகவும் பிடிக்கும்..
என்னைக் கடந்து என் மகளைக் கடந்து - என் பேத்தியையும் கவர்ந்திருக்கின்றது அந்தப் பாடல்..
அதன் முதல் நான்கு வரிகளைப் பிறழாது பாடுகின்றாள்..
என்னே விந்தை!..
எங்க வீட்டிலும் பானை ஸ்பீக்கர் இருந்துச்சு.
பதிலளிநீக்குகார்த்திக், இளையராஜா காம்பினேஷன்?!
அடடா! சொர்க்கலோகம்.. பாண்டி நாட்டு தங்கம், சின்ன கண்ணம்மா, நாடோடி பாட்டுக்காரன், நாடோடி தென்றல், பொன்னுமணி, இது நம்ம பூமி...... இதுலாம் சான்சே இல்ல