செவ்வாய், 19 செப்டம்பர், 2017

ஊர்க்குழம்பின் ஊடாக...

Related image

ரு பதிவு என்ன செய்து விடமுடியும்?

சமுதாயத்தை மாற்றி அமைத்துவிட முடியுமா..?

தமிழை உலகமே கொண்டாடச் செய்து விட முடியுமா..?

இலக்கியவாதிகளுக்குள்ளான சண்டை சச்சரவுகளைத் தீர்த்து வைத்துவிட முடியுமா..?

இப்படி நிறைய முடியுமாக்களை எல்லாம் முடித்து வைக்க இயலாதுதான்... ஆனால் எது முடிகிறதோ இல்லையோ நம் மனக்கிடங்குக்குள் ஆழ்ந்து கிடக்கும் நினைவுகளைத் தட்டி எழுப்பி அதை அசைபோட வைக்க முடியும். அப்படியான ஒரு பதிவை சமீபத்தில் வாசித்தேன். என் கிராமத்து வாழ்வினை அடிக்கடி அசைபோடுபவன் என்பதால் தூசிபடியாமல்தான் வைத்திருக்கிறேன். இருப்பினும் அந்தப் பதிவு கருவாட்டுக் குழம்பின் வாசத்தையும் வாஞ்சையான மனிதர்களின் நேசத்தையும் மனசுக்குள் மலரச் செய்துவிட்டது. 

என் கணிப்பொறியில் இருந்து கருத்துப் பதிய முடிவதில்லை. ஏதோ ஒரு பிரச்சினை... அலுவலகத்தில் நேரம் கிட்டும்போது வாசித்த பதிவுகளுக்கு கருத்து இட்டு விடுகிறேன். என்னைச் சுவாசிக்க வைத்த பதிவின் தொடர்ச்சியாக... அல்லது நீட்சியாக... அவர் பாணியில் எழுதுவது என்பது முடியாத காரியம் என்பதால் என் பாணி எழுத்தே எனக்குப் போதுமானதாகப்படுகிறது.

கருவாட்டுக் குழம்பை வாயில் நீர் ஊறவைக்கும் எழுத்தாக மாற்றியிருக்கும் கவிஞர் என் அன்பு அண்ணன் மீரா செல்வக்குமார் அவர்களின் வீட்டுச்சோறும் ஊர்க்குழம்பும் வாசிக்க வாசிக்கச் சுவை. அந்தச் சுவை எனக்குள் கிடக்கும் கிராமத்தானையும் தட்டியெழுப்பி எழுத வைத்தது என்றால் மிகையில்லை. மீரா செல்வக்குமார் அண்ணனைப் பொறுத்தவரை அவரின் ஒவ்வொரு பகிர்வும் அழகியலை மட்டுமல்ல அழகிய வாழ்க்கையைப் பேசும். அவரின் 'பிங்க் நிறத்திலொரு பட்டாம்பூச்சி' மனங்களில் பறந்து மகிழ வைக்கவில்லையா... அப்படித்தான் இந்தக் குழம்பும் அதன் வாசத்தினை நாசியில் இறக்கி பசியை வயிற்றில் பூக்க வைத்தது.

எவ்வளவுதான் சொல்லுங்கங்க பட்டும் படாமலும் நட்பு பாராட்டும் நகர வாழ்க்கையைவிட பாசமும் நேசமும் பற்றிக்கொள்ள உறவு முறைகளோடு ஒன்றிக் கேலியும் கிண்டலுமாய் நகரும் கிராமத்து வாழ்க்கைதாங்க சிறந்தது. பள்ளியில் படிக்கும் போது விவசாய சமயங்களில் பச்சை பூத்திருக்கும் வயல்களின் வரப்பில் காலைப் பனித்துளியைச் சுமந்து சிரிக்கும் அருகம்புல்லின் மீது கால் வைத்து நடப்பது ஒரு சுகம் என்றால்... புல்லில் இருக்கும் பனித்துளி பாதத்தில் கொடுக்கும் சில்லிப்பை அனுபவித்தல் ஆத்ம சுகம். 

அப்படிப்பட்ட கிராமத்து வாழ்க்கையை... அதை அனுபவித்த நாம் பெற்ற சந்தோஷங்களை... நம் வாரிசுகள் இழந்துவிட்டு நகரத்து வாழ்க்கையில் வளர்ந்துவிட்ட தொழில்நுட்பங்களை மட்டுமே வாழ்க்கையாக்கி, அதன் பின்னே பயணித்து புளுவேல் என்னும் அரக்கர்களிடம் மாட்டிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது வருத்தமாகத்தான் இருக்கிறது. இன்று கிராமங்களும் விவசாயமற்று... தண்ணீர் இழந்து... ஏன் மனிதர்களையும் நகரங்களுக்கு அனுப்பிவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக சுயமிழந்து அழிவை நோக்கிப் பயணிப்பதைப் கிராமத்தில் தவழ்ந்த நம்மால் ஜீரணிக்க முடியவில்லை என்பதே உண்மை.

'நாம் இருவர் நமக்கிருவர்' என்று சொன்ன காலம் போய் 'நாம் இருவர் நமக்கு ஒருவர்' என்று வந்து 'நாம் இருவர் நமக்கெதற்கு இன்னொருவர்' என நவீனம் பாட ஆரம்பிக்கும் காலங்களுக்கு முன்னர் கிராமங்களில் இந்த இருவர் ஒருவர் எல்லாம் இல்லை. வீட்டுக்கு குறைந்தது ஐந்து... அதிகபட்சமாக எங்கள் ஊரில் எல்லாம் ஒரு டஜனைத் தொட்ட குடும்பங்களும் உண்டு. நாங்கள் ஏழு பேர்... இன்று உறவுமுறைகள் தெரியாது... அண்ணன் தம்பி பாசம் அறியாது வளரும் குழந்தைகள் போல் அல்லாமல் எல்லாரும் ஒன்றாக உண்டு, உறங்கி சண்டையிட்டு மகிழ்ந்து... ம்... நினைத்தாலே இனிக்கும் நாட்கள் அவை. எத்தனை சந்தோஷங்கள்... அந்தச் சந்தோஷங்கள் எல்லாம் எங்கே போச்சு? காலம் கொண்டு போய் விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இனி எத்தனை கோடி கொடுத்தாலும் அந்தக் காலம் நமக்கு மட்டுமல்ல இனி வரும் தலைமுறைகளுக்கும் கிடைக்கப் போவதில்லை.

இன்னைக்கு பக்கத்து வீட்டுல என்ன குழம்புன்னு தெரிஞ்சிக்கக் கூட முடியாத வாழ்க்கைதான் நம்மால் வாழ முடிகிறது. காரணம் பெரும்பாலான வீடுகளில் சமையல் என்பது அரிதாகி பாஸ்புட் கலாச்சாரம் பலமாக ஆட்கொண்டுவிட்டது. இன்று பொங்கல் கூட கேஸ் அடுப்பில் வைத்து விடும் சம்பிரதாய காலமாகிவிட்டது. விழாக்கள் கொடுத்த சந்தோஷங்களை எல்லாம் தொலைக்காட்சிப் பெட்டிகள் பறித்துக் கொண்டு விட்டன. கிராமங்களில் இன்றும் கூட பொங்கல் கேஸ் அடுப்புக்குப் போகாமல் எல்லாரும் கூடிக் கொண்டாடுவது தொடர்வதில் மகிழ்ச்சியே. இருப்பினும் எங்க காலத்துக்குப் பின்னே திருவிழாக்கள் எல்லாம் எவன் நின்னு பாக்கப் போறான் என்ற பெரிசுகளின் ஆதங்கம் எத்தனை உண்மையானது என்பதையும் கொஞ்சம் கொஞ்சமாக உணர முடிகிறது.

கிராமங்களில் இரவுச் சாப்பாடு என்பது ரொம்ப மகிழ்வான தருணத்தைக் கொடுத்ததை அனுபவித்தவன் நான்... அந்த ஓட்டு வீட்டுக்குள் டைனிங் ஹால் இல்லை... டைனிங் டேபிள் இல்லை... பெரும்பாலான நேரங்களில் சாப்பாடு அடுப்படியில்தான். எல்லாரும் அடுப்புக்கு அருகில் சுற்றி அமர, அம்மா சாப்பாடு போடுவார்கள். எட்டாவதுக்கு மேல்தான் மின்சாரம் வீட்டிற்குள் தலைகாட்டியது. அதுவரை லண்டியந்தான் (அரிக்கேன் விளக்கு) வெளிச்சப் பூக்களை விதைக்கும் கருவி. அதைச் சுற்றி அமர்ந்துதான் படிப்பும் இரவுச் சாப்பாடும். 

நிலா தேயும் நாட்கள் கொடுத்த சந்தோஷத்தைவிட வளரும் நாட்களே அதிக சந்தோஷத்தைக் கொடுத்தன. காரணம் என்னவெனில் அரிக்கேன் விளக்குத் தவிர்த்து நிலா வெளிச்சத்தில் சாப்பிடும் தினங்கள் சுகமானவை... நிலாச்சோறு சாப்பிட ஆத்தங்கரைக்கோ பீச்சுக்கோ போகமால் வீட்டு முற்றத்தில் அல்லது வாசலில் அமர்ந்து சாப்பிடுவது கூட சுகமானதுதான் என்பதை உணர வைத்த நாட்கள் அவை. நிலாச்சோறு மட்டுமல்ல நிலா உறக்கமும் நிகழ்வதுண்டு. வரிசையாக பாய் போட்டு நிலாவெளிச்சத்தில் படுக்க, நட்சத்திரத்தை எண்ணிக் கொண்டே அம்மா சொல்லும் கதைகளைக் கேட்டபடி உறங்குவது ஒரு சுகமே.

பக்கத்து வீட்டில் இன்று என்ன குழம்பு என்பதை வாசனை காட்டிக் கொடுக்க வாயில் எச்சில் ஊறியதை இல்லை என்று சொல்ல மனமில்லை... எச்சில் ஊறத்தான் செய்தது. மீன் குழம்பா, கருவாட்டுக் குழம்பா என்பதை கலந்தடிக்கும் மனம் நாசிக்குச் சொல்லி வயிற்றுக்குள் பசியை வளர்த்துச் சிரிக்கும். வெஞ்சனம் எதுவும் வைக்கலையா என்றால் எங்கே நேரமிருந்துச்சு... அங்க இங்க பொயிட்டு வரவே சரியாப்போச்சு... தயிர ஊத்தி வெங்காயத்தை வெட்டிப் போட்டுச் சாப்பிடுங்க, சுண்டக்குழம்பு கிடக்கு... வேணுமின்னா ஊறுகாய் எடுத்துக்க என்ற வரிகள் அடிக்கடி எல்லாருடைய வீட்டிலும் கேட்க்கும் வரிகள்தான். சில வேளைகளில் அயித்தக்கிட்ட என்ன கொழம்புன்னு கேட்டு வாங்கிட்டு வா... ஆயாக்கிட்ட வாங்கிட்டு வான்னு கிண்ணத்தைக் கொடுத்து அனுப்புவதும் உண்டு. பல நேரங்களில் அண்ணம்பொண்டி (அண்ணன் மனைவி, இப்போ அண்ணி) அவுக ஆட்டுக்கறி வாங்கிட்டு வந்தாங்க... அரச்சி ஊத்தி சேந்தாப்புல வச்சேன் இந்தாங்க கொஞ்சம் பிள்ளகளுக்கு கொடுங்கன்னு வந்ததும்...  அவ என்ன வச்சாலும் தூக்கிட்டு ஓடியாருவா... இந்தா இதைக் கொண்டு போய் கொடுத்துட்டு வா எனப் போனதும்... உண்டு. பல நேரங்களில் இங்கன சாப்புடு... இப்ப ஒன்ன இங்க யாரு ஒன்னச் சாப்புடக்கூடாதுன்னு சொன்னா என உரிமையாய் திட்டி சாப்பிட வைப்பதும் உண்டு. இதெல்லாம் இன்னைக்கு போன இடம் தெரியலை. பாலில் உறை ஊற்ற கொஞ்சூண்டு தயிர் பக்கத்து வீட்டில் வாங்குவதற்கு கூட யோசனையான காலமாகிவிட்டது. அன்று காய்கறிகள் கூட மாற்றிக் கொள்ளப்பட்டது.

சுண்ட வைக்க... சுண்ட வைக்கத்தான் நல்லாயிருக்கும் என சில குழம்புகளை சூடு பண்ணி சூடு பண்ணியே மூன்று நான்கு நாட்கள் வைத்துச் சாப்பிட்ட அனுபவமெல்லாம் இருக்கு... மீன் குழம்பும் கருவாட்டுக் குழம்பும் சுண்ட வைத்துச் சாப்பிட்டால் தேவாமிர்தமே... இன்னைக்கு சுண்டக் குழம்பு என்பது அரிதாகிவிட, குளிர்சாதனப் பெட்டிகள் புளித்த மாவை பக்குவமாய்ச் சுமக்கின்றன. 

எனக்குத் தயிர் ஊற்றி, ஊறுகாய் சேர்த்துப் பிசைந்த பழைய கஞ்சிக்கு சின்ன வெங்காயத்தைக் கடித்துக் கொண்டு சாப்பிடுவதென்றால் கொள்ளைப் பிரியம்... அப்போ வீட்டில் எருமை மாடுகளும் அதன்பின் பசு மாடுகளும் ஆக்கிரமித்திருந்த காலம்... பால் தயிருக்குப் பஞ்சமில்லை... பழைய கஞ்சியில் தயிர் கணக்கு வழக்கில்லாமல் ஊற்றப்பட்டது. இன்று தயிர்ப் பாக்கெட் பத்து ரூபாய்க்கு வாங்கி கொஞ்சம் கொஞ்சம் ஊற்றி கஞ்சி குடிப்பது தேவாமிர்தம் சாப்பிட்ட இடத்தில் கொஞ்சூண்டு தேனை நக்குவது போல்தான் இருக்கிறது. அதன் காரணமாகவே இந்த முறை ஊருக்குப் போனபோது காலிட்டர் அரைலிட்டர் பால் பாக்கெட் வாங்கி வீட்டில் உறை ஊற்றி வைத்து வேணுங்கிற அளவுக்கு தயிரிட்டு கஞ்சி சாப்பிட்டேன். நமக்கு மூணு வேளையும் கஞ்சி என்றாலும் ஓகேதான்... ஏன்னா நான் கிராமத்தான் என்பதைவிட பழையசோற்றுப் பிரியன். 

எப்போதாவது அரிதாகப் போடப்படும் பலகாரம் நாளை என்றால் முதல்நாள் இரவு சோறு வைக்கும் போது சேர்த்து வைத்துத் தண்ணீர் ஊற்றி வைக்கச் சொல்வார் அம்மா. ஏனென்று யாராவது கேட்டால் அவனுக்கு பலகாரம் புடிக்காது கஞ்சிதான் குடிப்பான் என்று சொல்வார். நானும் அம்மாவும் மட்டுமே இருந்த திருமணத்துக்கு முந்தைய நாட்களில் கூட எனக்காக பலகாரமே செய்யாமல் சோறு வடித்தவர் அம்மா என்பதையும் இங்கு சொல்ல வேண்டும். இப்போ பலகாரம் மட்டுமே இங்கு வாழ்க்கையாகிப் போச்சு... பழைய கஞ்சி வைத்தால் மாடும் குடிக்காது... அதுலயும் புடிக்கவே புடிக்காதுன்னு சொன்ன உப்புமா, பொங்கல், இட்லியை அறையில் செய்து... ஏன் நானே பலநேரம் செய்து சாப்பிடுவது என்பது ரணத்தின் உச்சம்.

அப்புறம் குழம்பை மட்டும் பாக்கெட்டில் கட்டிக் கொடுப்பதாக அண்ணனின் பதிவில் இருந்தது. உண்மையிலேயே கிராமிய மணத்தில் அம்மியில் அரைத்து வைக்கப்பட்ட குழம்புக்கு ஒரு மனம் இருக்கும். எங்க வீட்டிலும் அம்மி, ஆட்டுக்கல் எல்லாம் கிடக்கு... சில வேளைகளில் மனைவி அரைத்துச் சேர்த்துச் சமைப்பார். குழம்பு மட்டும் செய்து கொடுப்பதை ஒரு தொழிலாக்கும் பட்சத்தில் கண்டிப்பாக ஜெயிக்கலாம்... அவர்கள் ஜெயிப்பார்கள். இங்கு மலையாளி வைக்கும் மண் போன்ற குழம்பு, குணம் மணம் திடம் ஏதுமில்லாமல் இருப்பதுதான் சிறப்பு. 

பக்கத்து வீட்டுக் குழம்பு வாசத்தை இங்கு நுகர முடியாது என்றில்லை... நாங்களும் நுகர்கிறோம்.. பல மாநில, தேச உணவுகளின் வாசத்தை நுகர ஒரு அடுப்படியே போதுமானது. ஆம் எங்கள் பிளாட்டில் நாங்க, மலையாளிங்க, பெங்காலிங்கன்னு இருப்பதால் வித்தியாசமான வாசனையை நுகரமுடிகிறது. என்ன மாட்டுக்கறியை அடிக்கடி மலையாளிங்க வைப்பதும் சிக்கனையும் காய்கறிகளையும் அதனுடன் பருப்பையும் இட்டு பெங்காலி செய்வதும் உருளைக்கிழங்கை வேகவைத்து எண்ணெயில் பொறித்துச் செய்யும் பிரியாணி வாசமும் நமக்கு வித்தியாசமானவையே. மாட்டுக்கறிக்கு எங்க அறையில் அனுமதியில்லை... உடனே நான் தடை விதிப்பதாக எண்ணிடாதீங்க... எனக்குப் பிடிக்காது.... உங்களுக்கு வேணுமின்னா செஞ்சிக்கங்கன்னு சொல்லியாச்சு... யாரும் செய்வதில்லை. 

எங்க அறை நண்பர் ஒருவருக்கு மாட்டுக்கறி செய்து சாப்பிட ரொம்ப ஆசைதான்... சமைப்பது என்பது அவருக்கு மிகுந்த கஷ்டத்தைக் கொடுக்கும் வேலை என்பதால் யாரேனும் செய்து தருவார்கள் என்ற எண்ணம் அவருக்குள்... மற்றவர்களுக்கு மாட்டுக்கறியில் அவ்வளவாக ஈடுபாடு இல்லை என்பதால் அவரின் ஆசை நிராசையாக இருக்கிறது. அவரைப் பொறுத்தவரை பிலிப்பைனிகள் பூனையைச் சாப்பிடுவது போல் பன்னி, நாய், மாடு எல்லாவற்றையும் ஊரில் இருக்கும் போது சாப்பிட்டவர் என்பதால் எதற்கும் இப்போதும் விலக்கு இல்லை. எது செய்து கொடுத்தாலும் சாப்பிடுவார் என்பதைச் சொல்வதுடன் அவர் தீவிர ஆர்.எஸ்.எஸ். அன்பர் என்பதையும் சொல்ல வேண்டும்.

மீரா செல்வக்குமார் அண்ணனின் பதிவு என்னை இந்தப் பதிவை எழுத வைத்தது. அதற்கு அண்ணனுக்கு என் நன்றி.
-'பரிவை' சே.குமார்.

12 கருத்துகள்:

  1. சுண்ட சுண்டத்தான் குழம்பு ருசி! உண்மை. அந்தக் காலத்தில் அடுப்படியில் அமர்ந்து அம்மா கதையால் சாப்பிட்ட காலம் இன்றைய பிள்ளைகளுக்கு வராது. அவர்கள் வேறு ருசியியலை பிற்காலத்தில் சொல்லக் கூடும். அவரவர்களுக்கு அவரவர் ருசி! ருசியான பதிவு.

    பதிலளிநீக்கு
  2. *அம்மா கையால் என்று வாசிக்கவும்!

    பதிலளிநீக்கு
  3. பழைய சாதத்துக்கு ஈடு இணை எதுமில்லை. அம்மி, ஆட்டுக்கல்லில் அரைச்சாலும் அப்பத்திய ருசி வருவதில்ல. எல்லாமே விசமாகிட்டுது சகோ

    பதிலளிநீக்கு
  4. பழைய சாதத்திற்கும் அம்மி உரலில் அரைத்துச் செய்யும் பதார்த்தங்களிற்கும் எல்லாவற்றையும் விட அம்மா கையால் சாப்பிடுவது என்பது எனக்கு என் பாட்டி கையால் கிடைத்தது அத்தனை ருசி அதற்கு ஈடு எதுவும் இல்லை.... ஆனால் என் மகன் இப்போதும் சொல்லுகிறான் அம்மா உன் கையால் எப்போ சாப்பிடப் போறேன்...என்று ...அருமையான பதிவு!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. அம்மியும் உரலும் அரிக்கன் லாம்பும் இருந்த காலத்தில் அந்த வாழ்வின் வசந்தம் நமக்குப்புரியவே இல்லை. இன்றைய நிலையில் அதை நினைத்து பார்த்து ஏங்குகின்றோம். சமைத்து பகிர்ந்துண்ணுதல் அக்காலங்களில் எல்லா இடத்திலும் பரவி இருந்தது. இக்காலத்தில் எல்லாமே நான்கு சுவருக்குள் சுருங்கி போனது. அன்பும் குழம்பைப்போல் சுண்டினால் சுவைக்கும் காலம் வருமா குமார்?

    பதிலளிநீக்கு
  6. அதெல்லாம் ஒரு காலம் என்றாயிற்று!..

    பதிலளிநீக்கு
  7. கிராமம் என்பதே பல இடங்களில் பலவாறாகப் புரிந்து கொள்ளப் படுகிறது எனக்கு நினைவுக்கு வரும் கிராமம் எங்கள் ஊர் அக்கிரகாரம்தான் அங்கும் சுவையான மனிதர்களும் நிகழ்வுகளும் இருக்கும் ஆனால் அவை எல்லாம் நான் படித்தவற்றில் இருந்து வித்தியாசமாய் இருக்கும்

    பதிலளிநீக்கு
  8. பெரியம்மா பெரிய குண்டானில் சோற்றைப்போட்டு குழம்பை ஊற்றி பிசைந்து உருட்டி தர நண்டு சிண்டுலேர்ந்து பெரியவர்கள் வரை வட்டமாக உட்கார்ந்து வாங்கி மகிழ்ந்த காலங்கள் சொர்க்கம் தான்.... அருமை

    பதிலளிநீக்கு
  9. அது ஒரு கனாக்காலம்

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி