சனி, 30 செப்டம்பர், 2017

மனசு பேசுகிறது : பிக்பாஸ் வெல்லப் போவது யாரு..?

பிக்பாஸ்...

எத்தனை முரண்கள் இருந்தாலும் அவ்வப்போது பார்க்கும்படிதான் இருந்தது. அவர்கள் அப்படிச் செய்கிறார்கள்... இவர்கள் இப்படிச் செய்கிறார்கள் என்று சொன்னாலும் பத்திரிக்கைகளில் பெரும்பாலானவை குறிப்பாக இணைய இதழ்கள் பிக்பாஸை வைத்து இந்த நூறுநாள் பொழப்பை ஓட்டின என்றால் மிகையில்லை. அதைவிட ஓவியா ஓ.எம்.ஆர். போனதை எல்லாம் தனது தனிப்பட்ட தளத்தில் விஜய் டிவி அவர்களது நிகழ்ச்சி போல பகிர்ந்து கொண்டார்கள். எது எப்படியோ ஆரம்பத்தில் ஆரவாரமாக இருந்த பிக்பாஸ் இல்லம் இப்போது நால்வர் வாழும் வீடாக இருக்கிறது. அதுவும் இன்று கடைசி என்று நினைக்கிறேன்.

சரி இந்த நால்வரில் யார் வெல்வார்...? இந்தக் கேள்வி ஓவியா இருந்திருந்தால் வந்திருக்காது என்று நினைக்கிறேன். இப்ப இருக்கும் நால்வருமே ஆண்கள்தான்... எத்தனையொ பெண்கள் போட்டியில் இருந்திருந்தாலும் யாராலும் ஓவியா போல் இருக்கவும் முடியவில்லை.. அவரைக் காப்பியடித்து நடிக்கவும் முடியவில்லை. சுஜாவைப் பொறுத்தவரை ஆண்களுக்கு நிகராக எல்லாப் போட்டிகளிலும் விளையாண்டாலும் ஓவியா போல் நடித்தும்... குடும்பச் சூழலைச் சொல்லி பச்சாதாபம் வாங்க நினைத்தும்... குறிப்பாக சுயநலவாதியாகவும் இருந்ததால்தான் இறுதி வரை வரமுடியாமல் போய்விட்டார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிந்து இரண்டு நாட்கள் இருக்க வெளியேற்றப்பட்டது மிகவும் வருத்தமான செயலே... மக்கள் ஓட்டுக் கிடைக்கவில்லை என்பதாய் அவர் நீக்கப்பட்டார்... ஆரம்ப நாட்களில் எதிலும் ஆர்வம் காட்டாதவரார் இருந்தவர் இறுதி வாரங்களில் உண்மையிலேயே ரொம்ப ஈடுபாடாய் இருந்தார். சரி போனவர்கள் பற்றி பேசுவதில் பயனென்ன இருக்கிறது. இருப்பவர்களைப் பார்ப்போம்.

இருக்கும் நால்வரில் கணேஷ்... ரொம்பத் திறமையாக காய் நகர்த்துபவர்.... யாரிடமும் கோபம் கொள்ளமாட்டார். எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொண்டு சிரிப்பார்... போட்டிகளில் கூட அவருக்கு கோபமே வராது... டெலிபோனில் கூப்பிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் எல்லாம் தனக்குச் சாதகமாக இருந்தால் மட்டுமே விளையாடுவார். இல்லையென்றால் ஏதேனும் சாக்குச் சொல்லி விலகிக் கொள்வார். சுஜாவை உள் நிறுத்த அவரை பெரும்பாலான போட்டிகளில் தன்னுடன் நிறுத்திக் கொண்டார் என்றாலும் எல்லாருக்கும் நல்லபிள்ளையாகவே நூறு நாட்களை ஓட்டிவிட்டார். சாப்பாடு விஷயத்தை மற்றவர்கள் பெரிது படுத்த வேண்டியதில்லை... ஆனாலும் பலர் இவரை சாப்பாட்டு விஷயத்தை வைத்துத்தான் காயப்படுத்தினார்கள். குறிப்பாக வையாபுரி அதிகம் பேசினார். நல்லவனாக இருப்பதைவிட நடிப்பது கடினம் அதை இவர் திறம்பட செய்தார் என்றே சொல்லலாம். மக்களின் ஒட்டுப்படிப் பார்த்தால் இவருக்கான வாய்ப்பு ரொம்பக் கம்மிதான்.

ஹரீஷ்... ரொம்ப நல்ல பையன்... மனசு என்ன சொல்லுதோ அதன்படி நடக்க வேண்டும் என்று நினைப்பவர்... நடப்பவர்... யார் செய்தது தப்பு என்றாலும் நேரிடையாகச் சொல்ல யோசிப்பவரில்லை... மனசாட்சிக்கு விரோதமாக விளையாட முடியாது என சில போட்டிகளில் விளையாட மறுத்தவர். போதுமடா சாமி இவனுககிட்ட மனுசனா இருக்க முடியாது என்னை விட்டுவிடுங்கள் என இடையில் ஓட நினைத்தவர்... இந்த வாரம் ஒருவர் வெளியேற வேண்டிய சூழலில் வரிசையாக விளக்கொளிக்கு நின்ற போது... அதுவும் சிநேகன், கணேஷ். ஆரவ் தங்கள் இடங்களைத் தக்க வைத்துக் கொள்ள பிந்துவுடன் நீயா... நானா... போட்ட போது வெற்றியின் விளிம்பில் எங்கே தனக்கான வாய்ப்பு நழுவி விடுமோ என்ற பரிதவிப்பை அவரின் கண்களில் காண முடிந்தது. வலிக்கவே இல்லையே என்று சொன்னாலும் எல்லாருடைய முகத்திலும் வலியின் வலி தெரியத்தான் செய்தது. இவருக்கு கூடுதலாகத் தெரிந்தது. நூறு நாட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்திருந்தால் ஒருவேளை இவர் போட்டியில் வெல்லக்கூட வாய்ப்பிருந்திருக்கலாம். இப்போது இவருக்கான வாய்ப்பு அவ்வளவு பிரகாசமில்லை.

ஆரவ்... ஆரம்பத்தில் பிடிக்காமல் இருந்தாலும் இப்போது இவரை பலருக்குப் பிடிக்க ஆரம்பித்துவிட்டது என்பதே உண்மை. எந்தப் போட்டி என்றாலும் இவரிடம் முழு ஆர்வம் இருக்கும். சகபோட்டியாளர்களை சிரிக்க வைப்பதில் இவர்தான் முன்னோடி... ஓவியாவைக் காதலிக்க மறுத்தது அவரின் சொந்த விருப்பம்... நீ ஏன் அவளை வேண்டாம் என்று சொன்னாய் என்று கேட்பதெல்லாம் அபத்தம்... அந்தப் பெண் மனதில் ஆசையை வளர்த்த விதத்தில் வேண்டுமானால் அவர் தவறு செய்திருக்கலாம். மற்றபடி நல்ல நண்பனாய் அவர் இருக்க நினைத்ததில் தவறில்லை. காயத்ரி, சக்தி கையில் மாட்டி தங்கள் சுயம் இழந்தவர்கள் ஜூலியும் ஆரவும்... ஜூலி திருந்தவே இல்லை.... ஆரவ் தன்னைத் திருத்திக்கொள்ள நேரமும் காலமும் கிடைக்க அதைச் சரியாகச் செய்து தன்னை திருத்திக் கொண்டார்.  புறம் பேசுதல் என்பது எல்லாரிடமும் இருக்கும் ஒன்றுதான்... நான் புறம் பேசவே மாட்டேன் என்பவர்கள் அரிது... பிக்பாஸ் வீட்டைப் பொறுத்தவரை அப்படி யாருமே இல்லை. ஆரவ்வும் அந்த வகைதான்... ஓவியாவைவிட இவர் பிந்து மீது அதிக பற்றுதல் கொண்டிருந்தார். அடிக்கடி கட்டிப்பிடி வைத்தியமும் செய்தார். ஆரவ் போல் ஆட்கள்தான் உலகில் அதிகம்... இது தவறில்லை... இப்படியான வாழ்க்கைதான் எல்லாருக்குமே அமைகிறது. ஆரவ் வெல்ல வாய்ப்பு இருக்குமா...? இல்லையா...? என்பதை அடுத்த ஒருவரைப் பார்த்துவிட்டுப் பேசலாமே...

சிநேகன்... எல்லாவற்றுக்கும் உணர்ச்சி வசப்பட்டு பொசுக்கென்று அழுது விடும் மனம் படைத்தவர்... விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவர்... கிராமத்தான் என்பதால் இவருக்குள் மற்றவர்கள் மீது நேசம் கொள்ளும் மனம் சாதாரணமாகவே வந்து விட்டது. இந்த வீட்டைப் பொறுத்தவரை எல்லா வேலைகளிலும்... போட்டிகளிலும்.... தன்னால் முடிந்தவரை சிறப்பாகச் செய்ய நினைப்பவர். கட்டிப்பிடி வைத்தியம் நடத்துபவர்... பெண்களைக் கண்டால் கட்டிப் பிடிப்பவர் என்றெல்லாம் சொன்னாலும்... அவர் எல்லாரையும் கட்டித்தான் பிடிக்கிறார்... மற்றவர்களும் பெண்களைக் கட்டித்தான் பிடிக்கிறார்கள்... அவர்கள் இருக்கும் துறையில் இதெல்லாம் பெரிதில்லைதானே... மேடையில் கட்டிப் பிடிப்பது சகஜம்தானே... இதை வைத்து மட்டும் சிநேகனை தவறானவராக சித்தரிப்பது தவறு... சுஜாவைப் பொறுத்தவரை சிநேகந்தான் நிறைய உதவிகள் செய்தார்... ஆனால் சுஜாவைப் பொறுத்தவரை தனக்கான மிகப்பெரிய சவாலே சிநேகன்தான் என்பதால்தான் அவருடன் மோதி, அவரைப் பற்றி தவறுதலாகப் பேசி மக்களிடம் அனுதாபம் பெற விரும்பினார். ஆரவ் கூட சிநேகனை கேவலமாகப் பேசியிருந்தாலும் பின்னர் அவருடன் இணக்கமானார். எல்லாருக்கும் உதவும் மனமும் பிறருக்காக வருந்தும் குணமும் கொண்டவரை கட்டிப்பிடி வைத்தியர் என்ற ஒரு காரணத்தை வைத்து திட்டுவது என்பது தவறானதே. கவிஞர் சிநேகன் நல்லாத்தான் கவிதை எழுதுறார்... கேட்ட உடனே கவிதை எழுதும் திறன் இருப்பது பாராட்டுதலுக்குரியது.

இந்த நால்வரில் என்னைப் பொறுத்தவரை சிநேகனுக்கும் ஆரவ்வுக்கும்தான் போட்டியாக இருக்கும் என்றே கடந்த வாரத்தில் நினைத்தேன். அப்படித்தான் இதுவரை இருக்கிறது. இந்தப் பொட்டியில் சிநேகனுக்குத்தான் அதிக வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. எனக்கும் சிநேகந்தான் வெல்ல வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. பிக்பாஸ் வாக்களிப்பைப் பொறுத்தவரை கூட சிநேகனைதான் முன்னணியில் இருக்கார். சிநேகனா ஆரவ்வா முதல் போட்டியின் வெற்றியாளர் என்பதை இன்று இரவு பார்க்கலாம்... 



-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 29 செப்டம்பர், 2017

வசமாக்கிய வட்டத்துக்குள் சதுரம்

Related image

டங்கள் பார்ப்பதில் எனக்கு எப்போதும் விருப்பம் உண்டு. தற்போது அது மலையாளப் படங்களில் மையம் கொண்டுள்ளது. தமிழ்ப் படங்களை விட மலையாளப் படங்கள் மீதான விருப்பத்திற்கு காரணம் கதையோடு பயணிக்க முடியும் என்பதுதான். பழைய தமிழ்ப் படங்களை எப்போதேனும் விருப்பத்தின் பேரில் பார்ப்பதுண்டு.  இரண்டு நாள் முன்னர் ஒரு நண்பர் 'வட்டத்துக்குள் சதுரம்' படம் நேற்றுப் பார்த்தேன்... என்ன ஒரு அருமையான படம் தெரியுமா..? கடைசிக் காட்சிகளில் கண்ணீர் விட்டு அழுதேன் என்றார்... அவர் மனது இளகிய மனசு போலும்... நானும் சில படங்களைப் பார்க்கும் போது அழுதிருக்கிறேன்... அழுத கதையா முக்கியம்... அவர் சொன்ன வட்டத்துக்குள் சதுரத்தை பார்த்தேனா இல்லையா என்பதுதானே முக்கியம்.

பேரைக் கேட்டாலே நாமெல்லாம் பிறக்கும் முன்னர் வந்திருக்குமோ என்று நினைத்தால் நான் பிறந்த வருடத்திற்குப் பிறகுதான் வந்திருக்கிறது. கருப்பு வெள்ளைப் படம்... பஞ்சு அருணாசலத்தின் கதை வசனத்தில் முத்துராமன் இயக்கியது... இசைஞானியின் இசையில் லதா, சுமித்ரா, ஸ்ரீகாந்த், சரத்பாபு நடித்தது... 'இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்...' என்ற பாடல் ராஜாவின் முத்திரைகளில் ஒன்று.... அவர் சொன்னதற்காக படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். இரண்டு சின்னக் குழந்தைகளின் நட்பில் விரிகிறது கதை.

கமலஹாசனின் நட்புச் சொல்லும் படங்களையும் ரஜினிகாந்தின் நட்புச் சொல்லும் படங்களையும் நிறையப் பாத்திருக்கிறோம்... ஏன் இணைந்த கைகள் சொன்ன நட்பையும் பார்த்திருக்கிறோம். இதுவும் நட்புச் சொல்லும் கதைதான். நட்பு என்பது எத்தனை ஆத்மார்த்தமானது. என் நண்பனுக்காக... என் தோழிக்காக... இதை நான் செய்தேன் என்று சொல்வதில் எத்தனை இறுமாப்பு இருக்கும். அப்படியான நட்பு அமைவது சிறப்பு... அது எல்லா நட்பிலும் கிடைத்துவிடுவதில்லை. அந்த மாதிரியான நட்புக்குள் பிணக்குகள் வரும் போது அது பூத்துக்... காய்த்துக்... கனியாகும் வரை நீடிப்பதில்லை... மொட்டாய் இருக்கும் போதே காய்ந்து நட்பு என்னும் கிளை மீண்டும் அழகாய் விரிய ஆரம்பிக்கும்.

சொத்துக்காகவும் பதவிக்காகவும் தோழியைச் துவம்சம் செய்த நட்பைப் பார்த்தோம்... அதன் பலனை அவர் அறுபடை செய்ய ஆரம்பித்தாலும் அதன் பின்னான அரசியல் எத்தனை கேவலாமாய்ப் பயணிக்கிறது என்பதை தமிழகம் தற்போது அனுபவித்து வருகிறது. எதிரிக்கும் இப்படியான ஒரு அரசு அமைந்து விடக்கூடாது. ஆம் தண்ணி தர மறுக்கும் கர்நாடாவுக்கோ... பரம்பரை எதிரியான பாகிஸ்தானுக்கோ.... இங்க ஒண்ணு சொல்லணும்.... இங்கு பாகிஸ்தானிகள் நம்மோடு நல்ல நட்பில் இருக்கிறார்கள்.... தமிழனா என மலையாளியும் வடநாட்டானும் பார்ப்பதைப் போல் கூட இவர்கள் பார்ப்பதில்லை... நல்லாயிருக்கியா என அவர்கள் கேட்பதில் நேசமும் கலந்திருக்கும். என்ன சொல்ல வந்தேன்... ஆங்... கர்நாடகாவுக்கோ பாகிஸ்தானுக்கோ நம் தமிழக அரசு போல் ஒன்று அமைந்து விடக்கூடாது. நம்மைப் போல் அவர்களால் தர்மயுத்தம் செய்வதெல்லாம் கடினம்... ஆனால் பாகிஸ்தானி துப்பாக்கி தூக்கிருவான்... அதை நாம் தூக்காததால்தான் இட்லி தின்ன கதையையே மாடுலேசன் மாத்தி மாத்திச் சொல்றானுங்க... நாமளும் கேட்டுக்கிட்டு இருக்கோம் வாங்கின இருநூறுக்கு வஞ்சகமில்லாமல்...

சின்னக் குழந்தைகளின் நட்பில் ஒருத்திக்கோ ஒருவேளை கூட நல்ல சாப்பாடு சாப்பிட முடியாத நிலை... ஆனால் படிப்பில் அவள் கெட்டி... பள்ளியில் முதல் மாணவி... வசதியில்லை என்றாலும் வானம் தொட்ட அனிதா போல் அவள்... ஆம் அனிதா வானம்தானே தொட்டுவிட்டாள்... அவளையும் வைத்து அரசியல் பண்ணுகிறார்களே என்ன மனிதர்கள் இவர்கள்... சுயமாய் சிந்திக்க இயலாத மனமுடவர்கள்... முடவர்கள் என்ற பதத்துக்கு மன்னிக்க. மற்றொருத்தியோ பணம், சாப்பாட்டுக்கு குறைவில்லாத குடும்பத்தவள்... அவளின் குறையோ படிப்பும் அப்பா யார் என்று தெரியாத நிலையும்தான். அப்பா பேர் தெரியாததால்... அம்மா நேரம் வரும் போது சொல்கிறேன் என்று எல்லாத் தாயையும் போல் சொல்வதால்...  அவளின் அம்மாவுக்கு கேடுகெட்டவள் என்ற பட்டப் பெயரும்... இவளுக்கு கேடு கெட்டவளின் மகள் என்ற பட்டப்பெயரும் கிடைக்கிறது. இப்படியான பெயர்கள் வைப்பது ஆண்டாண்டு காலமாய் நம்மில் தொடர்வதுதானே...  அதனால் அவளுடன் பழகக் கூடாதென கெட்டிக்காரியின் அண்ணனும் அம்மாவும் குட்டிக்கர்ணம் அடிக்கிறார்கள் ஆனால் இந்த நட்பு துரோகம் அறியாதது என்பதால் குட்டிக்கர்ணத்தை குப்புறப்போட்டு தொடர்ந்து பயணிக்கிறது.

வாலிபம் வந்த பின்னும் அடக்குமுறையினால் அன்பில் பிரிவு என்ற ஒன்று வரவில்லை.. அதற்குப் பதிலாக இன்னும் இறுக்கம் ஏற்படுகிறது. அப்பன் பெயர் தெரியாதவளுக்கு காதல் வரக்கூடாதா என்ன... அவளுக்குள்ளும் காதல் பூக்கிறது... இன்றைய படங்களில் ரவுடி மீது படித்த, பணக்காரப் பெண்ணுக்குப் பூப்பது போல தன் தோழியின் அண்ணனும் தன்னை கண்டாலே 'கழுதை' என்று சொல்லிக் கடிந்து கொள்ளுபவனும் விலகிச் செல்பவனும் மூணு வேலை சோறு எப்போது கிடைக்குமென ஏங்கித் தவிப்பவனுமான ஸ்ரீகாந்த் மீது... கரும்புக் காட்டுக்கு வாடா உன்னுடன் கதைக்க வேண்டுமென கடுதாசி கொடுத்துவிட்டு இரவில் கரும்புக் காட்டில் 'காதல் என்னும் காவியம்... கன்னி நெஞ்சின் ஓவியம்...' என பாடிக் கொண்டிருக்கிறாள் அவனின் வரவுக்காக... அங்கு ஊரோடு வருகிறாள் அவனின் அம்மா... அடித்துத் துவைத்துச் செல்ல, தான் கற்பிழந்த கதையை முன்னரே மகளிடம் சொல்லிவிட்ட அம்மாவோ மகளின் நிலை காணப் பொறுக்காது மரிக்கிறாள். கெட்டிக்காரியின் அண்ணனோ மூணு வேலை சாப்பிடும் ஆசையில் தன்னுடன் வேலை செய்யும் குடிகாரனுக்கு தங்கையைக் கட்டிக் கொடுக்க நினைக்கிறான். அவளின் படிப்பை அதற்காக காவு வாங்க நினைக்கிறான்... இதன் பின்னர் தோழிகள் சந்திப்பில் உன்னை நான் படிக்க வைக்கிறேன்டி... உனக்காகத்தான் இனி நான் உயிர் வாழப்போறேன் என்ற வரிகள் அவர்களை சென்னை நோக்கி இரயில் ஏற வைக்கிறது.

சென்னையில் நடிகையாக இருக்கும் சித்தி உதவுவார் என்ற நினைப்போடு பயணிக்க... அங்கோ சித்தி தன் வாழ்க்கைக்கே கஷ்டப்படுகிறாள். சினிமா உலகம் இப்படியானதுதான் என்று அவர் ஒரு வரியில் சொல்லிவிட, தோழிக்காக ஹோட்டலில் டான்ஸ் ஆட ஒப்பந்தம் செய்கிறாள்... அத்துடன் அவளின் கற்பும் ஒப்பந்தம் இன்றி அரசியல் செல்வாக்கால் ஆறுகளில் மண்ணள்ளுவது போல் ஹோட்டல் முதலாளிகளாலும் பெரும் தலைகளாலும் எடுத்துக் கொள்ளப்படுகிறது... எல்லாம் தோழிக்காக எனப் பொறுத்துக் கொண்டு பெங்களூரில் இருந்து கொண்டு தோழிக்குத் தெரியாது அவளைச் சென்னையில்  படிக்க வைத்து வருகிறாள்.  தன் உலகமே தோழிதான் என அவளுக்காகவே வாழ்கிறாள். அவளுக்கு நாளை நல்ல வாழ்க்கை அமைந்து செல்லும் போது அவளின் கணவன் உன்னை அவளுடன் தங்க அனுமதிக்கவில்லை என்றால் என்ன செய்வாய்... உனக்காகவும் வாழக் கற்றுக் கொள் என்ற போதனைகளை எல்லாம் கொல்லுகிறாள்... அவளின் மனசுக்குள் முழுவதுமாய் தோழிதான்... அவள் அவளின் தாயாய் மாறி நிற்கிறாள். அப்படி ஆக்கிரமித்ததால்தான் உறவுகளை எல்லாம் உதறிவிட்டு இட்லி தின்றாரா... இல்லையா... என்று நீதிமன்றத்தில் வழக்காட விட்டுவிட்டு மெரினாவில் தூங்குகிறாள் ஒரு தோழி... தர்மயுத்தம் என அவள் தலையில் அடித்து தூங்கவும் விடமாட்டேன் என்கிறார்கள்.., பரபரப்புச் செய்தியை பற்ற வைத்துச் சென்றவள் அவள்... இவளோ பாசத்துக்காக பரத்தை ஆனவள்.

தோழிக்காக நான் என்பவளை விடுத்து அந்தத் தோழிக்கென ஒருவன் வந்து உட்கார்கிறான். அவனுடனான பழக்கம் பீச்சுக்குப் போக வைக்க, அண்ணனையும் பார்க்க நேர்கிறது காதலனின் டிரைவராக... அண்ணன் மற்றும் காதலனின் பேச்சுக்குள் இவளுக்காக தன்னையே அழித்துக் கொண்டிருப்பவளை முற்றிலும் துறந்து வர வேண்டும் என்பதே பிரதானமாய் இருக்கிறது. அது தொடரும் பட்சத்தில் திருமணம் கேள்விக்குறி ஆகும் என்பது முடிவாக, இவள் மறுக்க... இறுதியில் அவள் நடத்தை கெட்டவள் என்பதை இவளையே அவளுக்குத் தெரியாமல் அவள் இல்லம் சென்று பார்த்து வரச் சொல்கிறார்கள்... போகிறாள்.. பார்க்கிறாள்... அவளின் படுக்கை அறைச் சிரிப்புக்களையும் கேட்கிறாள்... அத்துடன் உறவை அத்துக் கொண்டு வருகிறாள் நீ இப்படி சம்பாதித்து நான் படித்த படிப்பை இனித் தொடர மாட்டேன் என்ற வைராக்கிய சபதத்துடன்... யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டோமோ அவளுக்குத் தெரிந்து, எதற்காக இதைச் செய்தோமோ அதை செய்ய மாட்டேன் என்று சொல்லியதை நினைத்து அவளின் மனசுக்குள் அனல் மூட்ட, காய்ச்சலில் விழுந்தவளைக் காண வருகிறாள் சித்தி... அதே நேரம் தோழியின் அண்ணனும் வருகிறான்.

('இதோ இதோ என் நெஞ்சிலே...' கேட்டு ரசிக்கலாமே..!)

தோழிக்காக தன்னையே இழந்தவள் அந்தத் தோழியுடனான உறவைத் திரும்பப் பெற்றாளா..?

கேடு கெட்ட காசில் ஒரு படிப்பா... அதைத் தூக்கி எறிகிறேன் பார் என்றவள் படிப்பைத் துறந்தாளா..?

அவள் இல்லை என்றால்தான் நான் உனக்கு என்ற காதலன் அதில் உடும்பாய் நின்றானா..?

கரும்புக் காட்டில் அடி வாங்க வைத்தவன் இறுதியிலாவது 'காதல் என்னும் காவியம்' வாசித்தானா..?

தோழிக்கு அம்மாவாய் இருந்தவள் அவளின் வாழ்வுக்காக என்ன செய்தாள்..?

இப்படியான அடுக்கிச் செல்லும் கேள்விகளுக்கு இறுதிக்காட்சிகள் விடையாய் நிற்கின்றன.

விருப்பமுள்ளவர்கள் பார்க்கலாம்... அருமையான படம்... நட்பின் ஆழத்தை அவ்வளவு அழகாகச் சொல்லும் படம்.

நண்பர் அழுதேன் என்றார்.... எனக்கு அழுகை வரவில்லை... ஆனாலும் முடிவு இதுவாகத்தான் இருக்கும் எனத் தெரிந்ததால் படம் முடிந்த போது மனம் முழுவதும் வேதனை நிரம்பி நின்றது.

-'பரிவை' சே.குமார்.

புதன், 27 செப்டம்பர், 2017

ராசாத்தி உன்ன எண்ணி...

ன்னோட வலை திறப்பதில் பிரச்சினை இருக்கிறது என்பதை திரு.இராமானுஜம் ஐயா உள்ளிட்ட பலர் சொன்னார்கள். நானும் என்னால் முடிந்தளவுக்கு முயற்சி செய்தும் சரியானது  பொல் தெரியவில்லை. என்னால் யாருக்கும் கருத்திடவோ, வந்திருக்கும் கருத்துக்கு மறுமொழி இடவோ இயலவில்லை. தமிழ்மணம் ஓட்டுப்பட்டையைக் காணவில்லை. தனபாலன் அண்ணன் தன் தொழிலில் பிஸியாக இருப்பதால் அவராலும் சரி செய்ய இயலவில்லை. நண்பர் தமிழ்வாசி சரி செய்வதாகச் சொல்லியிருக்கிறார். சரியாகும் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.

'மன்னவன் பேரைச் சொல்லி' என ஆரம்பித்த சென்ற பதிவை வலைப் பிரச்சினையால் அதிகம் பேர் வாசிக்கவில்லை என்றாலும் பலர் முகநூல் அரட்டையில் பதிவு அருமை என்று சொன்னார்கள்... பாடல்கள் குறித்து எழுதியிருந்தாலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கிராமத்துப் பதிவு எழுதிய மகிழ்ச்சி. சினிமாப் பாடல்கள்... குறிப்பாக 90-க்கு முந்தைய பாடல்கள் குறித்து எழுதினால் எவ்வளவு சந்தோஷம் மனசுக்குள் பூக்குமோ அப்படித்தான் நாட்டுப்புறப் பாடல்களைப் பற்றி எழுதினாலும் பேசினாலும் மனசுக்குள் மகிழ்ச்சிப்பூ பூக்கும். கிராமியப் பாடல்கள் அதாங்க நாட்டுப்புறப் பாடல்கள் பாடுபவர்கள் எத்தனையோ பேர் இருந்தாலும் சின்ன வயதில் இருந்து கேட்கும் விஜயலெட்சுமி நவநீதகிருஷ்ணன், புஷ்பவனம் குப்புச்சாமி, கோட்டைச்சாமி ஆறுமுகம், தேக்கம்பட்டி சுந்தரராஜன், கே.ஏ.குணசேகரன், சிங்கம்புணரி தங்கராசு, பரவை முனியம்மா, கொல்லங்குடி கருப்பாயி வரிசையில் தஞ்சை சின்னப்பொண்ணு, பாடகர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் இப்போ நாட்டுப்புறப் பாடல்கள் பாடுறாங்க... நிறைய இளைஞர்கள் சொல்லிக் கொள்ளும்படியாக நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுறாங்க... கிராமங்களில் திருவிழாக்களில் நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. 

கிராமங்களில் நடத்தப்படும் நாட்டுப்புறப் பாடல்கள் நிகழ்ச்சிகள் மற்ற நிகழ்ச்சிகளோடு போட்டியிடும் நோக்கோடு மட்டுமின்றி மக்களை அந்த நான்கு மணி நேரத்துக்கு அமர வைக்கவும் ஒவ்வொரு பாடலுக்கும் சிலரை நடனம் ஆட வைப்பது... அதாவது ஆடல்பாடல் நிகழ்ச்சி போல... என்ன அதில் படப்பாடலை ஒலிக்க வைத்து ஆடுவார்கள்... அது கேவலத்தின் உச்ச நிகழ்ச்சியாகி பெரும்பாலான இடங்களில் தடை விதிக்கப்பட்டுவிட்டது. எங்கள் பகுதியில் எல்லாம் அதற்கு அனுமதியில்லை. நாட்டுப்புறப் பாடலைப் மேடையில் பாடும் போது குத்தாட்டம் போட விடுகிறார்கள்... இதில் ஆபாசம் இல்லாதிருக்கிறது என்றாலும் இதிலும் குறவன் குறத்தி என்ற நகைச்சுவை பகுதியை இணைத்து ஆபாசமாக பேச ஆரம்பித்து விட்டார்கள் என்பது வருத்தத்திற்குரிய விஷயம்தான். கண்காணிக்க வரும் காவல்துறையும் பார்த்து ரசித்துவிட்டுத்தான் போகிறது. எங்க பகுதியில் திருப்பத்தூரைச் சேர்ந்த சேவியர் அவர்களின் திருப்பத்தூரான் இசை நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு உண்டு. தற்போது கிராமியப் பாடல்களில் இளையராஜா என்பவர் இனிமையாகப் பாட ஆரம்பித்திருக்கிறார்.

விஜயலெட்சுமி நவநீதகிருஷ்ணனின் 'செந்தில் வடிவேலவரே சிந்து கவி பாட...', 'தோட்டுக்கடை ஓரத்திலே...' 'ஓண்ணாம் படி எடுத்து...' போன்ற பல பாடல்களைத் திரும்பத் திரும்ப கேட்டிருந்தாலும் புஷ்வனத்தின் பாடல்கள் மீது ஏதோ ஒரு காதல்... எப்பவும் இப்பவும் உண்டு. குறிப்பாக 'ராசாத்தி உன்னை எண்ணி' பாடல் கேட்கும் போது மனசுக்குள் ஒரு மகிழ்ச்சி வந்து உக்கார்ந்து கொள்ளும்... அதுவும் அவர் 'மஞ்ச செவ்வந்திப்பூவாம்... மன்னார்குடி பூத்தபூவாம்... மன்னார்குடிக்கு போயிவந்தேன்... மரிக்கொழுந்து வாங்கி வந்தேன்...' என்ற வரிகளைத் தொடர்ந்து பாடும் ஒவ்வொரு வரிகளும் அருமையாக இருக்கும். இந்தப் பாடல் என்னோட ஆல்டைம் பேவரைட். எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை. புஷ்பவனம் குப்புச்சாமியும் அனிதா குப்புச்சாமியும் பாடிய பாடல்களை எப்போது கேட்டாலும் சோர்ந்து கிடக்கும் மனசுக்குள் ஒரு துள்ளல் ஏற்படும்.

அதே மாதிரி தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடி பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைந்து எந்தக் கோவில் திருவிழா என்றாலும் பூக்குழி இறங்குதல், பால்குடம் எடுத்தல் நிகழ்வுகளில் தவறாது ஒலிபரப்பப்படும் பாடல் 'அங்கே இடி முழங்குது கருப்பசாமி தங்க கரகம் மின்னுது' என்ற பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் பாடல் சாமி வராதவர்களையும் வரவைக்கும் பாடல். கிராமிய இசையில் இருக்கும் சாமிப்பாடல்களில் இந்தப் பாடல் மீது எப்பவும் ஒரு காதல். அதென்ன கருப்பர் மீது காதல்... கிருஷ்ணன் மீது காதல் வந்தால் கூட பரவாயில்லை என்று தோன்றலாம். எங்க குலதெய்வம் அழகர்கோவிலில் காவல் தெய்வம் பதினெட்டம்படிக் கருப்பன் என்பதால் இந்தப் பாடல் மீது காதல் வந்திருக்கலாம்... இந்தக் காதல் வழி வழியாகத் தொடருமா என்ன... எங்க விஷால் மொபைலில் சேமித்து வைத்து அடிக்கடி கேட்கும் பாடல் இதுதான் என்றால் விசித்திரமாக இருக்கும்... ஆனால் அதுதான் உண்மை. அதுவும்  சப்தமாகக் கேட்டுக் கொண்டிருப்பது அவனுக்குப் பிடித்தமானது.

இப்படியே பல பாடல்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்... சின்னப்பொண்ணு அவர்கள் நாக்கமுக்க பாடல் மூலம் பிரபலமாகினார் என்றாலும் அவர் படித்த 'மரிக்கொழுந்தே.. என் மல்லிகைப் பூவே' கிராமங்களில் மட்டுமின்றி சந்துபொந்தெல்லாம் அடித்து ஆடவில்லையா... நம்மைக் கடந்து செல்லும் எத்தனையோ பேரின் செல்போன்களில் ரிங்க்டோனே அதாகத்தானே இருந்தது. அவரின் மரிக்கொழுந்தைவிட 'அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்' எப்போது கேட்டாலும் கண்ணீரை வரவைக்கும் அல்லவா? நம்ம பரவை முனியம்மா பாடிய 'மஞ்சு மலை நரிக்குறவர் நாங்கயில்லை சாமி' பாடல் கேட்டிருக்கிறீர்களா? அதேபோல் கே.ஏ.குணசேகரன் அவர்களின் 'நாடு சும்மா கிடந்தாலும் கிடக்கும்' பாடலைப் பலர் பாடியிருக்கிறார்கள். அதில் பரவை முனியம்மாவின் குரலில் கேட்டு ரசியுங்கள். அப்படியே கோட்டைச்சாமி ஆறுமுகம் அவர்களின் 'பச்சரிச்சி கொத்தமல்லி கீரையோடவே' பாடலையும் கேட்டுப்பாருங்கள் கொல்லங்குடி கருப்பாயி தன் கிராமியப் பாடல்களை ஆண்பாவம் படத்தில் பாடி நடித்துக் கலக்கியிருப்பதை எத்தனை முறை வேண்டுமானாலும் ரசிக்கலாம் அல்லவா.

'அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு' பாடல் எப்படி வறுமையைச் சொன்னதோ அதேபோல் ஆக்காட்டி  'ஆக்காட்டி எத்தனை முட்டை இட்டே...' பாடல் ஒரு சோக வரலாற்றைச் சொல்லிச் செல்லும். 'மொச்சைக் கொட்டப் பல்லழகி...' பாடலை கேட்டு ஆடாதோர் யாருண்டு... இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம் பல பாடல்களை... எவ்வளவோ பாடல்கள்... பல கிராமியப் பாடல்கள் வாழ்க்கைக் கதை பேசும்... வயிற்றெரிச்சலைச் சொல்லும்... வயக்காட்டு வாழ்க்கையையும் வலிகளையும் சொல்லும்... ஆடு, மாடு, கோழி... ஏன் குருவிகளின் கதைகளையும் பாடும்... தாலாட்டில் ஆயிரம் கதை சொல்லும்... களையெடுப்பில்... நாற்று நடவில்... கருதறுப்பில்... திருவிழாவில் என எத்தனை பாடல்கள்.  இந்தப் பாடல்கள் எல்லாமே வாய் வழியாக சொல்லிச் செல்லும் பாடல்களாய் இருந்ததால் பல பாடல்கள் அழிந்து போய்விட்டன என்பதே உண்மை என்றாலும் இன்று பாடல்கள் டிஜிட்டல் மீடியாவால் பட்டிதொட்டி மற்றும் இன்றி பார் முழுவதும் கொண்டு செல்லப்படுவதால் இனி எழுதப்படும் கிராமியப்பாடல்கள் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பலாம்.

அட ஆமால்ல... இளையராசாவின் பாடல்களைப் பற்றிச் சொல்லலையில்ல... சரி விடுங்க அடுத்த பதிவு தேத்திக்கலாம். அதுவரைக்கும் எங்க கொல்லங்குடியில் பிறந்த கருப்பாயி அவர்களின் குரலில் கிராமியப் பாடலைக் கேட்டு மகிழுங்கள். கொல்லங்குடி கேள்விப்பட்டிருக்கிறீர்களா... கொல்லங்குடி வெட்டுடையாள் காளி கோவில்... காசு வெட்டிப் போட்டால் நினைத்ததை நடத்திக் கொடுக்கும் தெய்வம்... இந்த வெட்டுடையாள்தான் வெள்ளையனிடம் நம்ம வேலுநாச்சியாரைக் காட்டிக் கொடுக்க முடியாது என்று சொன்னதற்காக வெட்டுப்பட்ட உடையாள்.... அங்க பிறந்த கிராமத்து அழகி கருப்பாயியின் பாட்டைக் கேட்டு ரசிங்க....


இன்னும் பேசுவோம்....
-'பரிவை' சே.குமார்.

சனி, 23 செப்டம்பர், 2017

மனசு பேசுகிறது : மன்னவன் பேரைச் சொல்லி...

'மன்னவன் பேரைச் சொல்லி
மல்லிகை சூடிக் கொண்டேன்....'

இந்த வரிகள் எந்தப் பாட்டின் வரிகள் என்பது தெரியும்தானே...? ஆம் மௌன ராகம் படத்தில் வரும் 'சின்னச் சின்ன வண்ணக்குயில்...' பாடல் வரிகள்தான் இவை. என்னமோ தெரியவில்லை இந்த வரிகள் கடந்த ஒரு வார காலமாக அடிக்கடி முணுமுணுக்கும் வரிகளாக மாறியிருக்கின்றன. பணி நேரத்தில் கூட அடிக்கடி என்னை அறியாமல் இந்த வரிகளைப் பாடுகிறேன். காலையில் எழும்போது ஒரு பாடலைக் கேட்டு அது நம் மனதில் தொக்கிக் கொண்டால் அந்தப் பாடலின் முதல் வரிகள் நாள் முழுவதும் நம் உதடுகளில் உட்கார்ந்திருக்கும் என்பதை எல்லாருமே உணர்ந்திருப்போம். அப்படிக் கேட்காத  ஒரு பாடலின் வரிகள்... அதுவும் பாடலின் இடையில் வரும் வரிகள் தொடர்ந்து முணுமுணுத்தல் என்பது வித்தியாசமான அனுபவம்தானே.

மௌன ராகம் படத்தைப் பொறுத்தவரை எனக்கு ரொம்பப் பிடிக்காத பாடலே இதுதான்... அதற்கான காரணம் என்னெவென்று எல்லாம் சொல்லத் தெரியவில்லை... நிலாவே வாவும் மஞ்சம் வந்த தென்றலும் என்னுள் ஆக்கிரமித்ததை வைத்துப் பார்க்கும் போது இந்தப்பாடல் அதிகம் ஆக்கிரமிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியிருக்க இந்த வரிகள் என்னை எப்படி ஆக்கிரமித்தன என்பதை ஆச்சர்யக்குறி அல்ல கேள்விக்குறி இட்டே யோசிக்கிறேன்... விடைதான் கிடைக்கவில்லை. இங்கு அலுவலக நேரத்தில் வேலை அலுப்புத் தெரியாமல் இருக்க அதிகம் இளையராஜா பாடல்களைக் கேட்பதுண்டு. அரக்கப்பறக்க எழுந்து குளித்து... பஸ் பிடித்து... அந்த அரை மணி நேரத்தில் கொஞ்சமேனும் வாசித்து அலுவலகம் வந்து சேரும் போது எட்டு மணி அலுவலகத்துக்கு 8.15க்கு மேலாகியிருக்கும். நம்ம ஊர் மாதிரி பஸ்ல பாட்டுப் போட்டானுங்கனாலும் இந்த வரிகள் தொத்திக்கிச்சுன்னு சொல்லலாம். இங்க கதவைச் சாத்த உள்ள வா... உள்ள வான்னு மைக்குல டிரைவர் கத்துறது மட்டுமே... அப்படியே பாட்டுப் போட்டாலும் ராச கானங்களா போடப் போறானுங்க... அரபிக் கானங்களை அல்லவா போடுவானுங்க... அப்புறம் எப்படி இந்தப் பாடல் அடிக்கடி பாடும் பாடலாய்..?

சின்ன வயசுல இருந்தே பாட்டுக் கேக்குறதுன்னா ஒரு சந்தோஷம்... மகிழ்ச்சி...  அதுக்காக நல்லாப் பாடுவியான்னு மட்டும் கேட்டுடாதீங்க.. பப்ளிக் பாடகனும் இல்லை... பாத்ரூம் பாடகனும் இல்லை... பாடல் ஒலிக்கும் போது அந்த வரிகளுடன் ஒன்றிப் பாடும் பாடகனாய் மட்டுமே நான். கல்லூரியில் படிக்கும் காலத்தில் நண்பனின் வாக்மேனில் சுந்தரகாண்டம் படப் பாடல்களை கேசட் தேயுமளவுக்கு சுழலச் சுழல கேட்டவர்கள் நாங்கள்... எங்க வீட்டில் ஒரு அசெம்பிள் டேப்ரெக்கார்டர்... கொஞ்சம் பெரியதாய் செய்து வாங்கிய  இரண்டு ஸ்பீக்கர்... எங்க வீட்டு உத்திரத்தில் தூக்கி வைத்துக் கட்டப்பட்டிருக்கும்... அப்புறம் சனி மூலைக்கு எதிர் மூலையில் ஒரு மண் பாணை மீது வைக்கப்பட்ட ஸ்பீக்கர், அதன் மீது தூசி அடையாமல் கட்டப்பட்ட துணி... எத்தனை ஸ்பீக்கர் வைத்து அடித்தாலும் பானையில் ஸ்பீக்கர் வைத்து பாட்டுக் கேட்பதற்கு இணையாய் இருப்பதில்லை என்பதே என் எண்ணம். கல்லூரி விட்டு வந்ததும் பாட்டுப் போட்டா, தம்பி வந்துருச்சா... இனி கத்த விட்டுடுமேன்னு அம்மா கத்த, அதைப் பற்றி எல்லாம் கவலைப்படும் வயதா அது... விதவிதமாய் பாடல்கள்... அதுவும் 80-90-யில் வந்த படப்பாடல்கள் விதவிதமான தேர்வில் பதியப்பட்ட 90 கேசட்டுக்கள்... ஒரு கேசட்டில் ஒரே பாடல் இரண்டு பக்கமும் பதியப்பட்டிருக்கும்.. ஒரு கேசட்டில் ஒரு புதிய பாடல், ஒரு பழைய பாடல் என மாற்றி மாற்றி... மற்றொன்றில் ஒரு சோகம், ஒரு காதல்... ஒன்றில் கமல் மட்டும்... மற்றொன்றில் ராமராஜன்... இப்படியாக எத்தனை கேசெட்டுக்கள். அது ஒரு ரம்மியமான காலம் அல்லவா..?

என்னை எப்பவுமே தாலாட்டும் இசைக்குச் சொந்தக்காரர் ராசாதான்... அதுவும் குறிப்பாக கார்த்திக் மற்றும் இராமராஜன் படப்பாடல்கள் என்றால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கேட்கலாம். இதில் பிரபுவையும் முரளியையும்  உள்ளிழுத்துக் கொள்ளலாம். நேரம் போவதே தெரியாது. அது ஏன்னு தெரியலை... எத்தனையோ நல்ல இசைக்கலைஞர்களை தமிழ்த் திரையுலகம் கொண்டு வந்தாலும் ராசாவின் மீதான மோகம் மட்டும் இன்னும் கொஞ்சம் கூட குறையவில்லை. அதற்கு கிராமிய மணம் நிறைந்த அந்த இசையாய்க்கூட இருக்கலாம்... திருவிழாக்களில் தப்பு அடிக்கும் போது மனம் குதூகலிப்பதுடன் கால்கள் லேசான ஆட்டம் காட்ட வளர்ந்த வாழ்க்கையை அந்த இசையை வெறித்தனமாக ரசிக்கலாம். ரஹ்மானின் சின்னச் சின்ன ஆசையும் புதுவெள்ளை மழையும் இப்போது கேட்டாலும் சுகமாய் என்றாலும் ரஹ்மானின் மெலோடிகள் தவிர பல பாடல்களை இப்போது கேட்பதே இல்லை... தமனின்... யுவனின்... அழகிய பாடல்கள் கூட தொடர்ந்து கேட்க வைப்பதில்லை. அனிருத் நல்ல பாடல்களைக் கொடுத்தாலும் அதிரடி இரைச்சல் இசையை ரசிக்க வைப்பதில்லை. எது எப்படி என்றாலும் எண்ணம் எல்லாம் ராஜகீதம் இருப்பதால் மற்றவர்களின் பாடல்களின் மீது ஒரு ஆர்வம் ஏற்படாமல் போய்விட்டது போலும். அதுவும் ராசா பாடும் டூயட்... சிலருக்கு அந்தக் குரல் பிடிக்காமல் இருக்கலாம்... ஏனோ அந்தக் குரல் என்னை வசீகரித்தது... இன்னும் வசீகரித்துக் கொண்டிருக்கிறது.

கார்த்திக் - மோனிஷா நடித்த 'உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன்' படத்தில் வரும் 'என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் யாரடி...' பாடல்தான். இதுவரை எத்தனை முறை கேட்டேன் என்பதெல்லாம் கணக்கில் இல்லை. தோணும் போதெல்லாம் கேட்கும் பாடல்கள் சில உண்டு... அப்படியான பாடல்களில்... அதிகம் விரும்பும் பாடல்களில்... இதுவும் ஒன்று. இதே போல் கரகாட்டக்காரனில் வரும் 'இந்தமான் உந்தன் சொந்தமான்...' பாடலும் ஓருவர் வாழும் ஆலயம் படத்தில் வரும் 'மலையோரம் மயிலு விளையாடு குயிலு...' நானே ராஜா நானே மந்திரி படத்தில் வரும் 'மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்...' என நிறையப் பாடல்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்... அப்படிப் போனால் ஆயிரம் பாடல்களாவது நான் விரும்பும் பாடல்களாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. இந்தப் பாடல்களை எல்லாம் யாருமற்ற ஒரு இடத்தில், எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் தனியே அமர்ந்து கேட்டோமென்றால் இது கொடுக்கும் சுகமே தனிதான்... மழை நேரத்தில் சூடான காபியோடு மழையை ரசித்தபடி கேட்க்கும் சுகமும் தனிதான்... மழைக்கெல்லாம் இந்தப் பாலையில் வேலை இல்லை என்பதால் இரவு அறையில் எல்லாரும் தூங்கும் போது கணிப்பொறியில் பாடலை ஓட விட்டு, ஹெட்செட்டை மாட்டிப் படுத்துக் கொண்டு மணிக்கணக்கில் ரசிப்பதும் சுகமாய்... 

எனக்கு படிக்கவோ எழுதவோ செய்ய வேண்டும் என்றால் பாட்டுக் கேட்க வேண்டும்... காது வழிப் புகும் பாடல் வரிகள் வாய்வழி வெளியாகிக் கொண்டிருக்கும் போது எனது படிப்பும் எழுத்தும் பக்காவாக நகர்ந்து கொண்டிருக்கும். பள்ளியில் படிக்கும் போது ரேடியோ ஓடினால்தான் படிப்பேன்... அப்புறம் டேப்ரெக்கார்டர்... பின்னர் டிவி... என மாறி வந்தாலும் என் வாசிக்கும் எழுதும் பழக்கத்தில் இன்றுவரை பாடல் கேட்கும் முறையில் மட்டும் எந்த மாற்றமும் வரவில்லை... என் வேலை நடக்க எனக்கு பாட்டு வேண்டும்... அலுவலகத்தில் அடித்து நொறுக்கும் வேலை என்றால் எட்டு மணி நேரத்துக்கும் ராசாவின் ஏகாந்தம்தான்.... எங்கம்மா இப்போது கூட என் மகளிடம் உங்கப்பனுக்குத்தான்  படிக்கும் போது பாட்டு ஓடிக்கிட்டே இருக்கணும்... நீயும் அப்படியே வர்றே என்று அடிக்கடி சொல்வதுண்டு. ஆம் எங்க ஸ்ருதிக்கும் இந்த நோய் தொற்றிக் கொண்டுள்ளது... டிவி ஓடிக்கொன்டிருக்கும் போதுதான் படிப்பும் எழுத்தும். 

பாருங்க 'மன்னவன் பேரைச் சொல்லி'யில் ஆரம்பித்து மனம் போன போக்கில் பயணித்து எங்கெங்கோ போயாச்சு. சில பாடல்கள் நெருக்கமான சிலருக்குப் பிடிக்கும் என்பதால் நமக்குப் பிடித்துப் போவதும் உண்டு. சில பாடல்கள் நாம் கேட்டதுமே மனசுக்குள் சிம்மாசனம் இடும். வைரமுத்துவின் வைரவரிகளை எல்லாம் ரெண்டாயிரத்துக்கு முன்னாலயே கொடுத்துட்டார் என்றே சொல்ல வேண்டும்... அன்று சிம்மாசனமிட்ட வரிகள் இன்றும் மனதிலிருந்து அகலாமல்... அதே போல் நா.முத்துக்குமாரின் பாடல் வரிகளைக் கேட்கும் போது பட்டுக்கோட்டையைப் போல் ஒரு நல்ல கவிஞனை இழந்து விட்டோமே என்று தோன்றும்.. கவிதைகளில் பழனிபாரதியின் காதல் கவிதைகள் வாசித்தல் ஒரு சுகமே... முகநூலில் இவரின்  கவிதையும் அதற்கான படங்களும் அசத்தலாக இருக்கும். இவர் எழுதிய 'காற்றே காற்றே' பாடலை வைக்கம் விஜயலெட்சுமி அவ்வளவு அழகாகப் பாடியிருப்பார். அவரைத் தவிர வேறெவராலும் அப்படி ஒரு ரசனையோடு அந்தப் பாடலை பாட முடியாது என்பதே என் கருத்து. இதேபோல் ராசா இல்லாது நிறையப் பாடல்கள் ரசனைத் தொகுப்பில் இருந்தாலும் எல்லாவற்றுக்கும் முன்பாக ராசாவின் கீதங்களே என்னைத் தாலாட்டிக் கொண்டிருக்கின்றன. எனது சந்தோஷம், துக்கம், சோகம் என எல்லாவற்றிலும் எனக்கு உறுதுணை ராசாவின் ராகங்களே.  என் மனசுக்குள் இன்னும் அடித்து ஆடிக்கொண்டிருக்கின்றன....

'மன்னவன் பேரைச் சொல்லி
மல்லிகை சூடிக் கொண்டாள்...'

எப்போது இந்த வரிகள் என்னுள் இறந்து இறங்கும் என்று தெரியாது. அப்படி இறங்கும் பட்சத்தில் வேறொரு பாடல் வரிகள் விக்ரமாதித்தனிடம் கதை சொல்லும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்வது போல என்னுள் ஏறிக் கொள்ளலாம்... அது 

'பூமரக் காத்து சாமரம்தான்
வீசுது இங்கே வாசனதான்...'

என்ற வரிகளாகவும் இருக்கலாம். இல்லையேல் எந்த நேரத்திலும் கேட்கக் கூடிய விருப்பப் பாடல்களான கிராமத்து நாயகன் ராமராஜனின் பாடலில் இருந்து

'உன் முகம் பார்த்து நிம்மதி ஆச்சு
என் மனம் தானா பாடிடலாச்சு...'

என்ற வரிகள் கூட வந்து உட்கார்ந்து கொள்ளலாம்... சரி அதுவுமில்லை... இதுவுமில்லை என்றால் நவரச நாயகன் கார்த்திக்கின் பாடல் வரிகளில் இருந்து

'வண்ணமா வானவில்லில் நூலெடுத்து வாரேன்
விண்ணுல மீன் புடிச்சு சேல தெச்சுத் தாரேன்'

என்ற வரிகளோ என்னை ஆட்கொள்ளலாம். 

இதையெல்லாம் தாண்டி அதாவது இந்த இசைராஜாவைத் தாண்டி அந்த இளையராஜாவின் வரிகள்... அட இது எந்த இளையராஜான்னுதானே நினைக்கிறீங்க... அது தனிப்பதிவா வரும்... அவரின் பாடலான 

'அத்தமக உன்ன நெனச்சு அழகுக் 
கவிதை ஒண்ணு வடிச்சேன்...
அத்தனயும் மறந்துபுட்டேன் 
அழகே உன்னப் பாக்கயில...' 

என்ற வரிகளும் வந்து உக்காரலாம்...

இந்த வரிகளை யூடிப்பில் அடித்து தேடிப்பாருங்கள்...  நல்ல நல்ல கிராமியப் பாடல்களைக் கேட்கலாம்.

சரி எழுத்து எங்கெங்கயோ சுற்றி ஒரு முடிவுக்கு வந்திருக்கு... எழுத்து ரசனையா இருந்துச்சான்னு தெரியாது... ஆனா ராசாவின் பாடல்கள் ரசனையானவை.... காலத்துக்கும் நம்மை இசை என்னும் வலைக்குள் இழுத்துப் பிடித்து வைப்பவை என்பது மட்டும் உண்மை. போதும் இதுக்கு மேல அறுக்காதேன்னு குரல்கள் எழும் முன்னே என்னை முணுமுணுக்க வைத்த பாடல் வரிகளுடன் முடிச்சிடுறேன்...

'மன்னவன் பேரைச் சொல்லி 
மல்லிகை சூடிக் கொண்டேன்.. 

மன்மதன் பாடல் ஒன்று 
நெஞ்சுக்குள் பாடிக் கொண்டேன்.. 

சொல்லத்தான் எண்ணியும் 
இல்லையே பாசைகள்... 

என்னமோ ஆசைகள் 
நெஞ்சத்தின் ஓசைகள்... 

மாலை சூடி.. மஞ்சம் தேடி..

காதல் தேவன் சந்நிதி 
காண... காணக் காண.. 

சின்னச் சின்ன வண்ணக் குயில்... சூப்பர் சிங்கர் பிரியங்காவின் குரலில்... மன்னவன் பேரைச் சொல்லி... வரியை பிரியங்காவின் குரலில் கேளுங்கள்.... நடுவர்களை ஒன்ஸ்மோர் கேட்க வைத்த குரல்


சரிங்க கடையை அடைக்கிறதுக்கு முன்னால நம்ம கதை ஒண்ணு பிரதிலிபி போட்டியில் இருக்கு... வாசிக்கதவர்கள் ஒருமுறை வாசிக்கலாமே...



-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 19 செப்டம்பர், 2017

ஊர்க்குழம்பின் ஊடாக...

Related image

ரு பதிவு என்ன செய்து விடமுடியும்?

சமுதாயத்தை மாற்றி அமைத்துவிட முடியுமா..?

தமிழை உலகமே கொண்டாடச் செய்து விட முடியுமா..?

இலக்கியவாதிகளுக்குள்ளான சண்டை சச்சரவுகளைத் தீர்த்து வைத்துவிட முடியுமா..?

இப்படி நிறைய முடியுமாக்களை எல்லாம் முடித்து வைக்க இயலாதுதான்... ஆனால் எது முடிகிறதோ இல்லையோ நம் மனக்கிடங்குக்குள் ஆழ்ந்து கிடக்கும் நினைவுகளைத் தட்டி எழுப்பி அதை அசைபோட வைக்க முடியும். அப்படியான ஒரு பதிவை சமீபத்தில் வாசித்தேன். என் கிராமத்து வாழ்வினை அடிக்கடி அசைபோடுபவன் என்பதால் தூசிபடியாமல்தான் வைத்திருக்கிறேன். இருப்பினும் அந்தப் பதிவு கருவாட்டுக் குழம்பின் வாசத்தையும் வாஞ்சையான மனிதர்களின் நேசத்தையும் மனசுக்குள் மலரச் செய்துவிட்டது. 

என் கணிப்பொறியில் இருந்து கருத்துப் பதிய முடிவதில்லை. ஏதோ ஒரு பிரச்சினை... அலுவலகத்தில் நேரம் கிட்டும்போது வாசித்த பதிவுகளுக்கு கருத்து இட்டு விடுகிறேன். என்னைச் சுவாசிக்க வைத்த பதிவின் தொடர்ச்சியாக... அல்லது நீட்சியாக... அவர் பாணியில் எழுதுவது என்பது முடியாத காரியம் என்பதால் என் பாணி எழுத்தே எனக்குப் போதுமானதாகப்படுகிறது.

கருவாட்டுக் குழம்பை வாயில் நீர் ஊறவைக்கும் எழுத்தாக மாற்றியிருக்கும் கவிஞர் என் அன்பு அண்ணன் மீரா செல்வக்குமார் அவர்களின் வீட்டுச்சோறும் ஊர்க்குழம்பும் வாசிக்க வாசிக்கச் சுவை. அந்தச் சுவை எனக்குள் கிடக்கும் கிராமத்தானையும் தட்டியெழுப்பி எழுத வைத்தது என்றால் மிகையில்லை. மீரா செல்வக்குமார் அண்ணனைப் பொறுத்தவரை அவரின் ஒவ்வொரு பகிர்வும் அழகியலை மட்டுமல்ல அழகிய வாழ்க்கையைப் பேசும். அவரின் 'பிங்க் நிறத்திலொரு பட்டாம்பூச்சி' மனங்களில் பறந்து மகிழ வைக்கவில்லையா... அப்படித்தான் இந்தக் குழம்பும் அதன் வாசத்தினை நாசியில் இறக்கி பசியை வயிற்றில் பூக்க வைத்தது.

எவ்வளவுதான் சொல்லுங்கங்க பட்டும் படாமலும் நட்பு பாராட்டும் நகர வாழ்க்கையைவிட பாசமும் நேசமும் பற்றிக்கொள்ள உறவு முறைகளோடு ஒன்றிக் கேலியும் கிண்டலுமாய் நகரும் கிராமத்து வாழ்க்கைதாங்க சிறந்தது. பள்ளியில் படிக்கும் போது விவசாய சமயங்களில் பச்சை பூத்திருக்கும் வயல்களின் வரப்பில் காலைப் பனித்துளியைச் சுமந்து சிரிக்கும் அருகம்புல்லின் மீது கால் வைத்து நடப்பது ஒரு சுகம் என்றால்... புல்லில் இருக்கும் பனித்துளி பாதத்தில் கொடுக்கும் சில்லிப்பை அனுபவித்தல் ஆத்ம சுகம். 

அப்படிப்பட்ட கிராமத்து வாழ்க்கையை... அதை அனுபவித்த நாம் பெற்ற சந்தோஷங்களை... நம் வாரிசுகள் இழந்துவிட்டு நகரத்து வாழ்க்கையில் வளர்ந்துவிட்ட தொழில்நுட்பங்களை மட்டுமே வாழ்க்கையாக்கி, அதன் பின்னே பயணித்து புளுவேல் என்னும் அரக்கர்களிடம் மாட்டிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது வருத்தமாகத்தான் இருக்கிறது. இன்று கிராமங்களும் விவசாயமற்று... தண்ணீர் இழந்து... ஏன் மனிதர்களையும் நகரங்களுக்கு அனுப்பிவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக சுயமிழந்து அழிவை நோக்கிப் பயணிப்பதைப் கிராமத்தில் தவழ்ந்த நம்மால் ஜீரணிக்க முடியவில்லை என்பதே உண்மை.

'நாம் இருவர் நமக்கிருவர்' என்று சொன்ன காலம் போய் 'நாம் இருவர் நமக்கு ஒருவர்' என்று வந்து 'நாம் இருவர் நமக்கெதற்கு இன்னொருவர்' என நவீனம் பாட ஆரம்பிக்கும் காலங்களுக்கு முன்னர் கிராமங்களில் இந்த இருவர் ஒருவர் எல்லாம் இல்லை. வீட்டுக்கு குறைந்தது ஐந்து... அதிகபட்சமாக எங்கள் ஊரில் எல்லாம் ஒரு டஜனைத் தொட்ட குடும்பங்களும் உண்டு. நாங்கள் ஏழு பேர்... இன்று உறவுமுறைகள் தெரியாது... அண்ணன் தம்பி பாசம் அறியாது வளரும் குழந்தைகள் போல் அல்லாமல் எல்லாரும் ஒன்றாக உண்டு, உறங்கி சண்டையிட்டு மகிழ்ந்து... ம்... நினைத்தாலே இனிக்கும் நாட்கள் அவை. எத்தனை சந்தோஷங்கள்... அந்தச் சந்தோஷங்கள் எல்லாம் எங்கே போச்சு? காலம் கொண்டு போய் விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இனி எத்தனை கோடி கொடுத்தாலும் அந்தக் காலம் நமக்கு மட்டுமல்ல இனி வரும் தலைமுறைகளுக்கும் கிடைக்கப் போவதில்லை.

இன்னைக்கு பக்கத்து வீட்டுல என்ன குழம்புன்னு தெரிஞ்சிக்கக் கூட முடியாத வாழ்க்கைதான் நம்மால் வாழ முடிகிறது. காரணம் பெரும்பாலான வீடுகளில் சமையல் என்பது அரிதாகி பாஸ்புட் கலாச்சாரம் பலமாக ஆட்கொண்டுவிட்டது. இன்று பொங்கல் கூட கேஸ் அடுப்பில் வைத்து விடும் சம்பிரதாய காலமாகிவிட்டது. விழாக்கள் கொடுத்த சந்தோஷங்களை எல்லாம் தொலைக்காட்சிப் பெட்டிகள் பறித்துக் கொண்டு விட்டன. கிராமங்களில் இன்றும் கூட பொங்கல் கேஸ் அடுப்புக்குப் போகாமல் எல்லாரும் கூடிக் கொண்டாடுவது தொடர்வதில் மகிழ்ச்சியே. இருப்பினும் எங்க காலத்துக்குப் பின்னே திருவிழாக்கள் எல்லாம் எவன் நின்னு பாக்கப் போறான் என்ற பெரிசுகளின் ஆதங்கம் எத்தனை உண்மையானது என்பதையும் கொஞ்சம் கொஞ்சமாக உணர முடிகிறது.

கிராமங்களில் இரவுச் சாப்பாடு என்பது ரொம்ப மகிழ்வான தருணத்தைக் கொடுத்ததை அனுபவித்தவன் நான்... அந்த ஓட்டு வீட்டுக்குள் டைனிங் ஹால் இல்லை... டைனிங் டேபிள் இல்லை... பெரும்பாலான நேரங்களில் சாப்பாடு அடுப்படியில்தான். எல்லாரும் அடுப்புக்கு அருகில் சுற்றி அமர, அம்மா சாப்பாடு போடுவார்கள். எட்டாவதுக்கு மேல்தான் மின்சாரம் வீட்டிற்குள் தலைகாட்டியது. அதுவரை லண்டியந்தான் (அரிக்கேன் விளக்கு) வெளிச்சப் பூக்களை விதைக்கும் கருவி. அதைச் சுற்றி அமர்ந்துதான் படிப்பும் இரவுச் சாப்பாடும். 

நிலா தேயும் நாட்கள் கொடுத்த சந்தோஷத்தைவிட வளரும் நாட்களே அதிக சந்தோஷத்தைக் கொடுத்தன. காரணம் என்னவெனில் அரிக்கேன் விளக்குத் தவிர்த்து நிலா வெளிச்சத்தில் சாப்பிடும் தினங்கள் சுகமானவை... நிலாச்சோறு சாப்பிட ஆத்தங்கரைக்கோ பீச்சுக்கோ போகமால் வீட்டு முற்றத்தில் அல்லது வாசலில் அமர்ந்து சாப்பிடுவது கூட சுகமானதுதான் என்பதை உணர வைத்த நாட்கள் அவை. நிலாச்சோறு மட்டுமல்ல நிலா உறக்கமும் நிகழ்வதுண்டு. வரிசையாக பாய் போட்டு நிலாவெளிச்சத்தில் படுக்க, நட்சத்திரத்தை எண்ணிக் கொண்டே அம்மா சொல்லும் கதைகளைக் கேட்டபடி உறங்குவது ஒரு சுகமே.

பக்கத்து வீட்டில் இன்று என்ன குழம்பு என்பதை வாசனை காட்டிக் கொடுக்க வாயில் எச்சில் ஊறியதை இல்லை என்று சொல்ல மனமில்லை... எச்சில் ஊறத்தான் செய்தது. மீன் குழம்பா, கருவாட்டுக் குழம்பா என்பதை கலந்தடிக்கும் மனம் நாசிக்குச் சொல்லி வயிற்றுக்குள் பசியை வளர்த்துச் சிரிக்கும். வெஞ்சனம் எதுவும் வைக்கலையா என்றால் எங்கே நேரமிருந்துச்சு... அங்க இங்க பொயிட்டு வரவே சரியாப்போச்சு... தயிர ஊத்தி வெங்காயத்தை வெட்டிப் போட்டுச் சாப்பிடுங்க, சுண்டக்குழம்பு கிடக்கு... வேணுமின்னா ஊறுகாய் எடுத்துக்க என்ற வரிகள் அடிக்கடி எல்லாருடைய வீட்டிலும் கேட்க்கும் வரிகள்தான். சில வேளைகளில் அயித்தக்கிட்ட என்ன கொழம்புன்னு கேட்டு வாங்கிட்டு வா... ஆயாக்கிட்ட வாங்கிட்டு வான்னு கிண்ணத்தைக் கொடுத்து அனுப்புவதும் உண்டு. பல நேரங்களில் அண்ணம்பொண்டி (அண்ணன் மனைவி, இப்போ அண்ணி) அவுக ஆட்டுக்கறி வாங்கிட்டு வந்தாங்க... அரச்சி ஊத்தி சேந்தாப்புல வச்சேன் இந்தாங்க கொஞ்சம் பிள்ளகளுக்கு கொடுங்கன்னு வந்ததும்...  அவ என்ன வச்சாலும் தூக்கிட்டு ஓடியாருவா... இந்தா இதைக் கொண்டு போய் கொடுத்துட்டு வா எனப் போனதும்... உண்டு. பல நேரங்களில் இங்கன சாப்புடு... இப்ப ஒன்ன இங்க யாரு ஒன்னச் சாப்புடக்கூடாதுன்னு சொன்னா என உரிமையாய் திட்டி சாப்பிட வைப்பதும் உண்டு. இதெல்லாம் இன்னைக்கு போன இடம் தெரியலை. பாலில் உறை ஊற்ற கொஞ்சூண்டு தயிர் பக்கத்து வீட்டில் வாங்குவதற்கு கூட யோசனையான காலமாகிவிட்டது. அன்று காய்கறிகள் கூட மாற்றிக் கொள்ளப்பட்டது.

சுண்ட வைக்க... சுண்ட வைக்கத்தான் நல்லாயிருக்கும் என சில குழம்புகளை சூடு பண்ணி சூடு பண்ணியே மூன்று நான்கு நாட்கள் வைத்துச் சாப்பிட்ட அனுபவமெல்லாம் இருக்கு... மீன் குழம்பும் கருவாட்டுக் குழம்பும் சுண்ட வைத்துச் சாப்பிட்டால் தேவாமிர்தமே... இன்னைக்கு சுண்டக் குழம்பு என்பது அரிதாகிவிட, குளிர்சாதனப் பெட்டிகள் புளித்த மாவை பக்குவமாய்ச் சுமக்கின்றன. 

எனக்குத் தயிர் ஊற்றி, ஊறுகாய் சேர்த்துப் பிசைந்த பழைய கஞ்சிக்கு சின்ன வெங்காயத்தைக் கடித்துக் கொண்டு சாப்பிடுவதென்றால் கொள்ளைப் பிரியம்... அப்போ வீட்டில் எருமை மாடுகளும் அதன்பின் பசு மாடுகளும் ஆக்கிரமித்திருந்த காலம்... பால் தயிருக்குப் பஞ்சமில்லை... பழைய கஞ்சியில் தயிர் கணக்கு வழக்கில்லாமல் ஊற்றப்பட்டது. இன்று தயிர்ப் பாக்கெட் பத்து ரூபாய்க்கு வாங்கி கொஞ்சம் கொஞ்சம் ஊற்றி கஞ்சி குடிப்பது தேவாமிர்தம் சாப்பிட்ட இடத்தில் கொஞ்சூண்டு தேனை நக்குவது போல்தான் இருக்கிறது. அதன் காரணமாகவே இந்த முறை ஊருக்குப் போனபோது காலிட்டர் அரைலிட்டர் பால் பாக்கெட் வாங்கி வீட்டில் உறை ஊற்றி வைத்து வேணுங்கிற அளவுக்கு தயிரிட்டு கஞ்சி சாப்பிட்டேன். நமக்கு மூணு வேளையும் கஞ்சி என்றாலும் ஓகேதான்... ஏன்னா நான் கிராமத்தான் என்பதைவிட பழையசோற்றுப் பிரியன். 

எப்போதாவது அரிதாகப் போடப்படும் பலகாரம் நாளை என்றால் முதல்நாள் இரவு சோறு வைக்கும் போது சேர்த்து வைத்துத் தண்ணீர் ஊற்றி வைக்கச் சொல்வார் அம்மா. ஏனென்று யாராவது கேட்டால் அவனுக்கு பலகாரம் புடிக்காது கஞ்சிதான் குடிப்பான் என்று சொல்வார். நானும் அம்மாவும் மட்டுமே இருந்த திருமணத்துக்கு முந்தைய நாட்களில் கூட எனக்காக பலகாரமே செய்யாமல் சோறு வடித்தவர் அம்மா என்பதையும் இங்கு சொல்ல வேண்டும். இப்போ பலகாரம் மட்டுமே இங்கு வாழ்க்கையாகிப் போச்சு... பழைய கஞ்சி வைத்தால் மாடும் குடிக்காது... அதுலயும் புடிக்கவே புடிக்காதுன்னு சொன்ன உப்புமா, பொங்கல், இட்லியை அறையில் செய்து... ஏன் நானே பலநேரம் செய்து சாப்பிடுவது என்பது ரணத்தின் உச்சம்.

அப்புறம் குழம்பை மட்டும் பாக்கெட்டில் கட்டிக் கொடுப்பதாக அண்ணனின் பதிவில் இருந்தது. உண்மையிலேயே கிராமிய மணத்தில் அம்மியில் அரைத்து வைக்கப்பட்ட குழம்புக்கு ஒரு மனம் இருக்கும். எங்க வீட்டிலும் அம்மி, ஆட்டுக்கல் எல்லாம் கிடக்கு... சில வேளைகளில் மனைவி அரைத்துச் சேர்த்துச் சமைப்பார். குழம்பு மட்டும் செய்து கொடுப்பதை ஒரு தொழிலாக்கும் பட்சத்தில் கண்டிப்பாக ஜெயிக்கலாம்... அவர்கள் ஜெயிப்பார்கள். இங்கு மலையாளி வைக்கும் மண் போன்ற குழம்பு, குணம் மணம் திடம் ஏதுமில்லாமல் இருப்பதுதான் சிறப்பு. 

பக்கத்து வீட்டுக் குழம்பு வாசத்தை இங்கு நுகர முடியாது என்றில்லை... நாங்களும் நுகர்கிறோம்.. பல மாநில, தேச உணவுகளின் வாசத்தை நுகர ஒரு அடுப்படியே போதுமானது. ஆம் எங்கள் பிளாட்டில் நாங்க, மலையாளிங்க, பெங்காலிங்கன்னு இருப்பதால் வித்தியாசமான வாசனையை நுகரமுடிகிறது. என்ன மாட்டுக்கறியை அடிக்கடி மலையாளிங்க வைப்பதும் சிக்கனையும் காய்கறிகளையும் அதனுடன் பருப்பையும் இட்டு பெங்காலி செய்வதும் உருளைக்கிழங்கை வேகவைத்து எண்ணெயில் பொறித்துச் செய்யும் பிரியாணி வாசமும் நமக்கு வித்தியாசமானவையே. மாட்டுக்கறிக்கு எங்க அறையில் அனுமதியில்லை... உடனே நான் தடை விதிப்பதாக எண்ணிடாதீங்க... எனக்குப் பிடிக்காது.... உங்களுக்கு வேணுமின்னா செஞ்சிக்கங்கன்னு சொல்லியாச்சு... யாரும் செய்வதில்லை. 

எங்க அறை நண்பர் ஒருவருக்கு மாட்டுக்கறி செய்து சாப்பிட ரொம்ப ஆசைதான்... சமைப்பது என்பது அவருக்கு மிகுந்த கஷ்டத்தைக் கொடுக்கும் வேலை என்பதால் யாரேனும் செய்து தருவார்கள் என்ற எண்ணம் அவருக்குள்... மற்றவர்களுக்கு மாட்டுக்கறியில் அவ்வளவாக ஈடுபாடு இல்லை என்பதால் அவரின் ஆசை நிராசையாக இருக்கிறது. அவரைப் பொறுத்தவரை பிலிப்பைனிகள் பூனையைச் சாப்பிடுவது போல் பன்னி, நாய், மாடு எல்லாவற்றையும் ஊரில் இருக்கும் போது சாப்பிட்டவர் என்பதால் எதற்கும் இப்போதும் விலக்கு இல்லை. எது செய்து கொடுத்தாலும் சாப்பிடுவார் என்பதைச் சொல்வதுடன் அவர் தீவிர ஆர்.எஸ்.எஸ். அன்பர் என்பதையும் சொல்ல வேண்டும்.

மீரா செல்வக்குமார் அண்ணனின் பதிவு என்னை இந்தப் பதிவை எழுத வைத்தது. அதற்கு அண்ணனுக்கு என் நன்றி.
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

சினிமா : கோதா (ഗോദ - மலையாளம்)

Image result for godha malayalam movie images

நாம இன்னமும் கொலையும் கொள்ளையும் வைத்துத்தான் அதிகமாகப் படமெடுத்துக் கொண்டிருக்கிறோம்... கேட்டா மாஸ் அப்படின்னு ஒரு வார்த்தையைச் சொல்லிடுறோம்... மாஸ்... மாஸ்ன்னு சொல்லி மரண அடி வாங்கிய படங்கள் வந்தாலும் மாஸ் வட்டத்துக்குள் இருந்து நாம் வரப்போவதில்லை. அவ்வப்போது சிலர் நல்ல கதைகளுடன் வந்தாலும் அடுத்தடுத்த படங்களில் அவர்கள் ஜொலிக்கும் விதமாக நல்ல கதையம்சம் கொண்ட படங்களை ஓட விடுவதுமில்லை... நாம் பார்க்க விரும்புவதும் இல்லை. புளூ சட்டைகள் கூட மாஸ் படங்களுக்குத்தான் அடித்துப் பிடித்து விமர்சனம் செய்கிறார்கள். அதுவும் எதிர்மறை விமர்சனங்களால் தங்கள் சேனலுக்கு மவுசு கூடும் என்ற எதிர்பார்ப்பில் படத்தை விடுத்து நாயகர்களை நையாண்டி செய்து பிழைப்பு நடத்துகிறார்கள். ஜிமிக்கி கம்மல் பாடல் மூலம் புகழ் பெற்ற புரபஸர் ஷெர்லியைத் தேடி மலையாளக் கரைக்குப்  போய் ஆளாளுக்கு பேட்டி எடுப்பார்கள். நம் பிரச்சினைகளுக்காக பிள்ளைகள் களம் இறங்கினால் கூட கண்டு கொள்ளாமல் தர்மயுத்தத்தின் தலைமகன்களுக்கு சாமரம் வீசுவார்கள்.  

மலையாளத்தின் நல்ல படங்களின் கதைகளை இங்கு கொண்டு வந்து ஏகத்துக்கும் நாயகர் புகழ்பாடி அந்தப் படத்தின் சிறப்புத் தன்மையை சீரழித்து விடுவதைப் பார்க்கும்போது அந்தக் கதைகளை அங்கே விட்டு விடுதல் நலம் என்றே தோன்றுகிறது. மலையாளத்தில் ஒரு சின்ன விஷயத்தை வைத்து மிகச் சிறந்த படங்களை எடுத்து விடுகிறார்கள் அப்படித்தான் செருப்பு போடுவதில்லை என்பதை வைத்து 'மகேஷிண்டே பிரதிகாரம்' என்ற படத்தை எடுத்தார்கள். நம்மால் அப்படி எல்லாம் படமெடுக்க இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். சமீபத்தில் ஒரு நண்பர் சொன்னார் என கோதா (மல்யுத்தம்) என்ற படம் பார்த்தேன். இந்த படம் குறித்து ஒரு இணையதள வீடியோ விமர்சகர் விமர்சனம் செய்திருந்ததையும் பார்த்தேன். அவர் இது தங்கல் படத்தின் காப்பிதான் என்பது போல் சொல்லியிருப்பார்.  ஒரு படம் குறித்து விமர்சிக்கும் முன்னர் அது எப்போது எடுக்க ஆரம்பித்தார்கள். அது இதோட காப்பிதானா என்று பார்த்துச் சொல்வதே சிறந்தது என்பதை அவரின் இந்த விமர்சனம் காட்டியது. காரணம் என்னவெனில் இந்தப் படம் தங்கலுக்கு முன்னர் எடுக்கப்பட்டு ஒரு சில பிரச்சினைகளால் விஜய் சேதுபதியின் புரியாத புதிர் போல கிடப்பில் கிடந்து வெளியிடப்பட்ட படம். புரியாத புதிர் கூட ஒரு முக்கியப் பிரச்சினையை மையமாக்கிய கதைதான் என்றாலும் அப்போதே வந்திருந்தால் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் என்பதே என் எண்ணம். கோதாவின் கதை தங்கல், சுல்தான் போன்று இருந்தாலும் அவற்றில் இருந்து மாறுபட்ட மற்றொரு வெர்ஷன் என்று சொல்லலாம்... அதற்காக அதன் காப்பி என்பது போல் சொல்வது சரியல்லவே.

மலையாளத்தில் கோதா என்பது தமிழில் மல்யுத்தம், இந்தியில் குஸ்தி என்பது  தானே... மல்யுத்தத்தில் உலகப் புகழ் பெற நினைக்கும் ஒரு பஞ்சாபிப் பெண்... அவளின் ஆசையை  ஊக்குவிக்கும் அவளின் தந்தை சிறுவயது முதலே அதற்கான பயிற்சி கொடுத்து போட்டிகளில் களமிறக்கி வருகிறார். அவரின் மறைவுக்குப் பின் அவளின் அண்ணன் ரூபத்தில் பிரச்சினை வருகிறது. பொட்டப்புள்ள படிச்சாப் போதும் விளையாட்டெல்லாம் வேண்டாம் எனச் சொல்லி அவளை படிப்பில் மட்டும் கவனம் செலுத்தச் சொல்கிறான். போட்டிகளுக்கு போகக்கூடாது என்பது அவனது கட்டளை... அதுவே அவனது சாசனம்... அட இது பாகுபலி பாதிப்புங்க... இன்னைக்கு விஷால் அழகாக படம் வரையும் அவங்க சித்தியைக் கூட்டியாந்து வீட்டில் பெரிதாக பாகுபலி படம் வரையணும்ன்னு சொன்னான். நான் பாகுபலியில அனுஷ்காவா இல்ல பிரபாஸாடான்னு கேட்டதும் ராஜமாதா சிவகாமின்னு சொல்லிட்டு நான் உங்கம்மாவைச் சொல்லலை என்றான் மெதுவாக. அந்தப் பாதிப்புல இங்க எழுதும்போது சாசனம்ன்னு வந்திருச்சு.


பஞ்சாபி பெண்ணின் ஆசையில் அண்ணனால் மண் விழுவது போல் கேரளத்தில் ஒரு அப்பனின் ஆசையில் மண்ணள்ளிப் போடுகிறான் மகன். ஆம் அப்பாவும் அவர் வயதொத்தவர்களும் அந்தக் கிராமத்தில் தங்களின் வயசுக்காலத்தில் குஸ்தியில் (கோதா) ஜொலித்தவர்கள்... அவர்களுக்கு தங்கள் ஊரில் ஒரு சிறந்த  வீரனைத் தயார் செய்ய நினைக்கிறார்கள். சிறு வயதில் குஸ்தியில் கோப்பைகளை வெல்லும் மகன் அதன் பின் அதைத் துறந்து நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் பக்கம் போய் விடுகிறான். இவர்கள் குஸ்தி நடத்திய மைதானம் அந்த இளைஞர்களின் கிரிக்கெட் விளையாடும் இடமாக இருப்பது பிடிக்காமல் பிரச்சினை பண்ணுகிறார்கள். அந்த இடத்துக்காக தனிப்பட்ட முறையில் மற்றொருவரின் வழக்கும் இருக்கு. 

தறுதலையாக திரியும், ஏதோ படிக்கும் மகனை மிரட்டி பஞ்சாபில் இருக்கும் கல்லூரிக்கு அனுப்பி விடுகிறார். அங்குதான் நாயகியும் படிக்கிறாள். இருவருக்கும் மோதலாகி, பின் சில நாட்களில் நட்பாக மாற அவளுடன் பஞ்சாபி கல்யாணம் பார்க்கப் போகிறான். அப்போது தனக்கு அவசரமாக திருமண ஏற்பாடு நடப்பதாகச் சொல்கிறாள். திருமண வீட்டில் இருக்கும் போது அருகில் தான் நேசிக்கும் மல்யுத்தம் நடக்க இருப்பதை அறிந்து அந்த இடத்துக்கு அவள் செல்ல, இவனும் போக, அங்கு போலீஸ்காரனான அண்ணன் வந்து அவளை விளையாட விடாது தடுக்க, அவனை இவன் தாக்க.... அப்புறம் என்ன பஞ்சாபி போலீஸ் அடியில் இருந்து தப்பிக்க படிப்பை பாதியில் விட்டு ஊருக்கு வந்துவிடுகிறான். திருமணம் செய்துகொள்ள விரும்பாத நாயகியும் சில நாளில் வீட்டுக்குத் தெரியாமல் அவனைத் தேடி கேரளா வந்து சேர்கிறாள்.

அதன் பின் அவளிடம் இருக்கும் திறமை நாயகனின் அப்பாவுக்குத் தெரியவர, அவளுக்குப் பயிற்சி அளித்து உள்ளூர் போட்டிகளில் ஜெயிக்க வைக்கிறார். தில்லிக்காரியான ஒரு மல்யுத்த வீராங்கனைக்கும் இவளுக்கும் ஆரம்பத்திலேயே வாய்க்கால் தகராறுன்னு காட்டிடுறாங்க... அந்தக் கிராமத்து மக்கள் எல்லாம் நாயகி மேல் வைத்திருக்கும் அன்பால் நேஷனல் லெவல் போட்டியில் கேரளா சார்பாக கலந்து கொள்பவள் பஞ்சாபிக்காரி என்று டில்லியால் போட்டுக் கொடுக்கப்பட, விளையாட முடியாமல் போகிறது. தங்கம் வெல்லும் தில்லி வாய்க்கால் தகராறை இன்னும் தீவிரமாக்கி நாயகியை வம்புக்கு இழுக்கிறது. இதன் பின் திறமையிருக்கவங்க ஜெயிச்சிக் காமிங்கன்னு  இருவருக்கும் இடையில் கேரளாவில் நாயகனின் அப்பனின் கனவு மைதானத்தில்  போட்டி என்று முடிவாகிறது. போட்டி ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது... தில்லிக்காரியும் வருகிறாள்... நாயகியின் அண்ணனும் வருகிறான்... தன் கனவில் நாயகி வெற்றி பெற்றாளா...? நாயகியை விரும்புவதாய் சொல்லி அவள் என்னோட கனவு மல்யுத்தம் மட்டுமே... காதலுக்கெல்லாம் இடமில்லை என்று சொல்ல, மீண்டும் மல்யுத்தத்தில் நாயகன் இறங்கினானா...? காதலில் ஜெயித்தானா...? என்பதை மிக அழகான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பஷில் ஜோசப்.

Image result for godha malayalam movie images

நாயகியை மையப்படுத்தி நகரும் கதைக்களம் என்பதால் நாயகியின் நடிப்புக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நாயகியாக வாமிகா, இவர் செல்வராகவனின் 'மாலை நேரத்து மயக்கம்' படத்தில் நடித்தவராம். அதில் எப்படி நடித்தார் என்பது தெரியாது. நான் அந்தப்படம் பார்க்கவில்லை.... இதில் அடித்து ஆடியிருப்பார்... இறுதிச் சுற்று படத்தில் ரித்திகா சிங் நடித்தது போல் மிகச் சிறப்பாக காட்சிக்கு காட்சி கலக்கியிருக்கிறார். நாயகன் டொவினோ தாமஸ் தனக்கான இடத்தை சிறப்பாக செய்திருக்கிறார். அவரின் அப்பாவாக, மல்யுத்தத்தை உயிராக நினைக்கும் கேப்டனாக ரெஞ்சி பணிக்கர் நடித்திருக்கிறார் என்பதை விட வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். கிராமத்து நண்பர்களாக வரும் அஜூ வர்கீஸ் உள்ளிட்ட அனைவரும் சிறப்பு. பஞ்சாபில் நாயகனின் நண்பனாக, தமிழன் முத்துப் பாண்டியாக பாலசரவணன், கொஞ்ச நேரமே என்றாலும் தமிழ் நகைச்சுவையில் கலக்கியிருப்பார். 

கோதா ஒரு வித்தியாசமான படம்.... ரசித்துப் பார்க்கலாம்.
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 12 செப்டம்பர், 2017

மனசின் பக்கம் : மகிழ்வான தருணங்கள்

'என்னடா வாழ்க்கை இது?' என்ற வேதனை வரிகளுக்கு இடையே நகரும் வாழ்வில் எப்போதேனும் பாலையில் பெய்யும் மழை போல் சந்தோஷங்களும் நிகழ்வதுண்டு. அப்போதெல்லாம் 'மகிழ்ச்சி' என்னும் மகிழம்பூ மனசுக்குள் பூத்துச் சிரிக்கத்தானே செய்யும்... அப்படிப் பூத்த தருணங்கள் சிலவற்றின் பின்னே...

ந்த மாத கொலுசு மின்னிதழில் எனது 'வாழ்வின் அர்த்தம்' என்ற சிறுகதை வெளியாகியிருக்கிறது. கதையைத் தேர்ந்தெடுத்து வெளியிட்ட கொலுசு ஆசிரியர் குழுவுக்கு நன்றி.

(போட்டோவை கிளிக் செய்தும் வாசிக்கலாம்)

டந்த மூன்றாண்டுகளாக தொடர்ந்து (இடையில் ஒரு சில வாரங்கள் மட்டும் விதிவிலக்கு) பாக்யா மக்கள் மனசுப் பகுதியில் கருத்துப் பதியும் வாய்ப்புக் கிடைத்து வருகிறது. அதன் தொகுப்பாளர் திரு.எஸ்.எஸ்.பூங்கதிர் சாருக்கு நன்றி.



ங்கு வேலை செய்யும் அண்ணன் ஒருவர் Red Rose 2.0 'Dileep is back' என்ற குறும்படத்தை இயக்கி Youtube-ல் ஏற்றியிருப்பதை முன்னர் பகிர்ந்திருந்தேன். அதில் சில எடிட்டிங் குறைபாடுகள் நண்பர்களின் கருத்தாக முன் வைக்கப்பட, பட்டி பார்த்து மீண்டும் வெளியிடுகிறோம் என Youtube-ல் இருந்து எடுத்து விட்டார். அவரின் இரண்டாவது குறும்படம் கடத்தல் சம்பந்தமானது. அதன் ஒன்லைன் சொல்லி என்னிடம் தலைப்புக் கேட்க, நான் சொன்ன தலைப்பையே படத்தின் தலைப்பாக்கியிருக்கிறார் என்று சென்ற பதிவில் சொல்லியிருந்தேன் அல்லவா? சென்ற வெள்ளி குறும்படம் வெளியானது. படத்தின் ஆரம்பத்தில் போடப்படும் நன்றியில்... முதலாவதாய் என் பெயரும்... படம் எடுக்கிறோமோ இல்லையோ நம்ம பெயரும் சின்னத்திரையில் வந்துருச்சில்ல... வெளியில் சென்று படம் எடுப்பது என்பது இங்கு பிரச்சினையே என்பதால் அறைக்குள் நகரும் கதையான இந்தப் படத்திலும் சில குறைகள் இருக்கு... இதை நிவர்த்தி செய்து அவரது மூன்றாவது படைப்பான 'மீனவன்' முழுமையடையும் என்ற நம்பிக்கை இருக்கிறது.


படம் பார்க்க  'பண(ய)ம்'

பிரதிலிபி போட்டியில் எனது சிறுகதையான 'என்னுயிர் நீதானே..' கலந்து கொண்டிருப்பதை அறிவீர்கள்... பலர் வாசித்தும் இருப்பீர்கள்... ஆயிரக்களில் வாசிக்கப்பட்ட கதைகளின் நடுவே நூறைத் தாண்டிய வாசிப்பு பார்வை இதுவரை கிடைத்திருக்கிறது. கருத்து இடவோ மதிப்பெண் அளிக்கவோ முடியவில்லை என்று சில நண்பர்கள் சொன்னார்கள். நானும் சில கதைகளுக்கு முயற்சித்து முடியாமல் பிரதிலிபி குழுவுக்கு மின்னஞ்சல் செய்தேன். அவர்களும் சரி செய்து விட்டதாக பதில் அனுப்பியிருந்தார்கள். இருப்பினும் இன்னும் 'சிறிய தொழில்நுட்பக் கோளாறு' என்றுதான் சொல்கிறது. எனக்கென இருக்கும் பாணியில் இருந்து மாறுபட்டு எழுதிய கதை, சிலரிடம் கதை குறித்தான கருத்துக் கேட்டேன். சிலர் விவாதித்தார்கள்... சிலரிடம் உரிமையுடன் திட்டும் வாங்கினேன்....  அதில் குறிப்பாக மீரா செல்வக்குமார் அண்ணனுடன் நீண்ட நேரம் முகநூல் அரட்டையில் பேச முடிந்தது. அதேபோல் தம்பி கரூர் பூபகீதன் ரொம்ப நேரம் அரட்டையில் விவாதித்தார். ஏதோ ஒரு நிகழ்வைத் தன் கதைக்குள் புகுத்தி எழுதும் அண்ணன் கனவுப்பிரியன் அவர்கள், உங்களுக்கு எழுத நல்ல நல்ல களமெல்லாம் இருக்கு அவற்றில் இருந்து எடுத்து எழுதுங்க என்றார். நண்பன் தமிழ்க்காதலன் உடன் நீண்ட நேர தொலைபேசி விவாதம்... அவனுக்கு என் பாணியில் இருந்து மாறுவதில் விருப்பம் இல்லை. காயத்ரி அக்காவோ கனவுப் பிரியனின் கருத்தைப் பின்பற்றச் சொன்னார்.  நண்பன் மோ.கணேசன் நல்லாயிருக்கு நண்பா என்றான். வெற்றி தோல்வி முக்கியமல்ல... நம் கதைக்களம் மாற்றுப் பாதையில் செல்லும்போது அது சரியான பாதையா இல்லையா என்பதைக் குறித்து அறிதல் சிறப்புத்தானே... முடிந்தால் வாசிங்க. அப்படியே என்னிடம் விமர்சனக் கருத்தையும் சொல்லுங்க...

(போட்டோவை கிளிக் செய்தும் வாசிக்கலாம்)
கதைக்கான இணைப்பு : என்னுயிர் நீதானே... 

'எங்கள் பிளாக்' ஸ்ரீராம் அண்ணா, கேட்டு வாங்கிப் போடும் கதையில் 'சீதை ராமனை மன்னித்தாள்' என்ற வரிகளை முடிவாகக் கொண்ட கதைகளைப் பகிர்ந்து வருவதை எல்லாரும் அறிவோம். என்னிடம் கதை வாங்கி, மே மாதம் நான் ஊரில் இருக்கும் போது பகிர்ந்திருந்தார். ஊரில் இருக்கும் போது இணையம் வருவதென்பது இயலாத ஒன்று... கதைக்கு வந்த கருத்துக்களைக் கூட ஒழுங்காக வாசிக்கவில்லை. கருத்துச் சொன்னவர்களுக்கு பதில் கூட சொல்லவில்லை. பலர் அழகாக அடித்து ஆடும் கதைக் களத்தில் நான் defence ஆடியிருப்பதாகவே தோன்றுகிறது. என் கதை பிடித்ததா... பிடிக்கலையா... நான் எடுத்த களம் சரியா... தவறா... என்றெல்லாம் யாருடனும் விவாதிக்கவில்லை. முடிந்தால் அங்கு கருத்துச் சொன்னவர்களுக்கு இங்கு ஒரு பதிவில் பதில் சொல்லலாம். கே.வா.போ.க-வில் என் கதை வாசிக்காதவர்கள் வாசிக்க....

சில நாட்களுக்கு முன்னர் எங்கம்மா வீட்டிற்கு வந்திருந்தார்கள். போன் பேசும்போது பாப்பாவிடம் 'எங்கடா எங்கம்மா?' என்று கேட்டதும் 'இந்தப் பக்கம் எங்கம்மா... அந்தப் பக்கம் உங்கம்மா' என்று ரைமிங்காகச் சொன்னது. உடனே விஷால் ' இந்தப் பக்கம் எங்கம்மா... அந்தப் பக்கம் உங்கம்மா.. மேலயிருக்கு ஜெயலலிதாம்மா... ஜெயில்ல இருக்கு சின்னம்மா... நம்மூருல இருக்கு பெரியம்மா...' அப்படின்னு டி.ஆர் போல வசனமாகப் பேச, எங்கம்மா முதல் அனைவரும் சிரித்த சப்தம் இங்கு கேட்க, நானும் ஜோதியில் ஐக்கியமானேன். நக்கல், நையாண்டி என சின்னச் சின்ன ஜோக்குகளில் தூள் கிளப்புவதில் தலைவர் ஜொலிக்கிறார். நேற்றுப் பேசும்போது பிக்பாஸ் பார்த்துக் கொண்டிருந்தான். 'என்னடா... இன்னுமாடா இதைப் பாக்குறே... பிக்பாஸ் என்ன சொல்றார்..?' அப்படின்னு கேட்டேன். உடனே 'ம்... எல்லாரும் பொயிட்டாங்களாம்... ஆள் இல்லையாம்... கவிஞர் குமாரை உடனே வரச்சொல்லுங்கன்னு சொன்னார்' என்றபடி எழுந்தவனிடம் 'என்னைக் கவிஞன்னு ஒத்துக்கிட்ட முத ஆள் நீதாண்டா' என்றதும் 'கருமத்துல... ஏம்மா நா எப்ப அவரைக் கவிஞன்'னு சொன்னேன்னு திருப்பி அடிச்சிட்டான்.

-'பரிவை' சே.குமார்.

வியாழன், 7 செப்டம்பர், 2017

தரமணி - தரமான மணியா?

Image result for தரமணி

ரமணி...

தமிழ்ச் சினிமாவில் இப்படி ஒரு படம் எடுப்பது என்பதே அபூர்வம். அவர் சொல்ல வந்ததைச் சொன்னாரா... தொட்டுச் சென்றாரா... இது சரிதானா... என்றெல்லாம் பட்டிமன்றம் நடத்துவதை விட்டுவிட்டு இப்படியான ஒரு படத்தை எடுத்திருக்கிறாரே என்று பாராட்டக்கூடச் செய்யலாம்... ஆனால் அடுத்தவனைப் பாராட்டுவது என்பது நமக்கு ரொம்பச் சிரமமான விஷயம் இல்லையா... தமிழ்ச் சினிமா உலக மக்கள் கூட புளூ சட்டை போல் இப்படி எடுக்கலாமா..? இது தகுமா..? பெண் தண்ணியடிக்கலாமா..? என ஆளாளுக்கு ஏகப்பட்ட கேள்விகளை விமர்சனமாக முன்னிருத்தினார்கள். தங்கர்பச்சன் படம் நல்லாயிருக்கு என்று சொல்லப்போக அவரையும் போட்டு ஆளாளுக்கு காய்ச்சி எடுத்தார்கள். நல்லாயிருக்கு நல்லாயில்லை என்பதைப் பற்றி நிறையப் பேர் நிறையப் பேசியிருக்கிறார்கள். எனக்குப் படம் பிடித்திருந்தது அவ்வளவே.

பீப் பாடல் பாடிய சிம்புவுக்கு எதிராக பொங்கி எழுந்த மகளிர் அமைப்புக்கள் முக்கியமான விஷயங்களுக்குப் பொங்கவில்லை என்றாலும் சினிமாவில் ஏதேனும் கிடைத்தால் அதைப் பிடித்துக் கொண்டு தொங்கு தொங்கு என்று தொங்குவார்கள் என்பதை ராம் மட்டுமல்ல நாமும் அறிந்திருக்கிறோம். சகோதரி வளர்மதி, கக்கூஸ் பட இயக்குநர் இவர்கள் மீதெல்லாம் பொய் வழக்குகள் பாய்ந்தபோது பொங்குவதற்குப் பதில் பதுங்கியவர்கள் இவர்கள் என்பதை நாம் அறிவோமே. ஏன் மாவட்டத்தில் முதல் மதிப்பெண் எடுத்தும் 'நீட்'டால் மருத்துவம் படிக்க முடியாது போய் விட்டதே என தன்னையே மாய்த்துக் கொண்ட அனிதாவுக்காக இவர்கள் பொங்கவில்லையே... இவர்களுக்கு ஆதாயமும் விளம்பரமும் கிடைத்தால் மட்டுமே வீதிக்கு வருவார்கள். இதை எழுதும்போது நேற்று பெண் போலீசிடம் தவறாக நடந்து கொண்டு போலீஸூக்கு எதிராக பொங்கியிருக்கிறார்கள். எல்லாம் சுய விளம்பத்துக்குத்தான் என்பதை நாடே அறிந்திருக்கும் போது ராம் அறியமாட்டாரா..? அதனால் தன் நாயகியை எங்கே தமிழ்ப் பெண்ணாக அடையாளம் காட்டினால் தமிழகத்தில் மகளிர் அமைப்புக்கள் மல்லுக்கு நிற்பார்களோ என்ற பயத்தில் ஆங்கிலோ இந்தியன் ஆக்கிவிட்டார்... இதிலேயே இந்த கலாச்சாரம், பண்பாடெல்லாம் காணாமல் போய்விடுகிறது அல்லவா..? கலாச்சார பாதுகாவலர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடுகிறதல்லவா..?

அப்படியிருக்க நாம் களப்போராளிகளிடம் போய் என்ன அவ குடிக்கிறா... தம் அடிக்கிறா... குட்டைப் பாவாடை போடுறா... செக்ஸ் வச்சிக்கிறா... பீப்புக்கே அம்புட்டு சவுண்ட் விட்டீங்க அப்ப இதுக்கு எவ்வளவு கூவணும் என்று கேட்டோமேயானால் ஆமா எதுக்கு கூவணும்... எல்லாம் செய்யுறாதான் அதுக்கென்ன பண்ணனும்... அவ ஆங்கிலோ இந்தியன் அப்படித்தான் இருப்பா என்ற அபத்தமான பதில் வரும். காரணம் அவர்கள் அப்படித்தான் என்ற பார்வை... அவர்களுக்குள்ளும் பெண்மை, தாய்மை எல்லாம் இருக்கும் என்பதைப் பற்றி நாம் யோசிப்பதில்லை.  தமிழ்ப் பெண்கள் மது, சிகரெட் எல்லாம் தொடுவதில்லையா என்ன... லிவிங்க் டூகெதர் என்பதெல்லாம் நம் தமிழகத்திற்குள் வரவில்லையா..? எப்போவோ எல்லாம் வந்தாச்சு.. பள்ளிக்கூடப் பெண்ணொருத்தி தண்ணியடித்து விட்டு நடுவீதியில் ஆட்டம் போடவில்லையா..? இதையெல்லாம் இணையம் இப்போது சுட்டிக்காட்ட ஆரம்பித்திருந்தாலும் இன்னும் வெளியில் தெரியாமல் பல விஷயங்கள் இலைமறை காயாக மறைந்து இருக்கிறது... அதை வெளிக்காட்ட விரும்பாமல் நாம் இன்னும் கலாச்சார பண்பாட்டுப் போர்வையை போர்த்தியே வைத்திருக்கிறோம்... இதெல்லாம் யோசித்து ராம், ஆல்தியா (ஆண்ட்ரியா) என்ற கதாபாத்திரத்தை ஆங்கிலோ இந்தியன் ஆக்கிவிட்டிருக்கிறார்.

தனித்திருக்கும் ஒரு பெண்... அதுவும் திருமணமாகி கணவனைப் பிரிந்து குழந்தையுடன் இருக்கும் ஒரு பெண்... அவள் எங்கிருந்தாலும் இந்தச் சமூகம் அவளை எப்படிப் பார்க்கும் என்பது நாம் அறிந்ததுதான்.  தனித்திருக்கும் பெண் என்றில்லை இதுதான் காரணம் இதற்காகத்தான் இறந்தாள் என்று தெரிந்திருந்தாலும் கள்ளக்காதல் அதான் இறந்துவிட்டாள் என்று கூசாமல் சொல்லும் உலகம் இது. அப்படியிருக்க, அவள் சந்திக்கும் ஆண்களெல்லாம் படுக்கையை பகிர்ந்து கொள்ளத்தான் நினைக்கிறார்கள். அவளால் மிரட்டப்படும் போது எனக்கு குழந்தை இருக்கு... குடும்பம் இருக்குன்னு புலம்புறாங்க... அப்ப அவளுக்கு குழந்தையில்லையா... குடும்பம் இல்லையா... சேர்ந்து குடித்து, சிரித்துப் பேசும் தனித்துவாழும் பெண், தன்னை ஒழுக்க சீலியாக காட்டிக் கொள்ளவில்லை என்றபோது அவள் எதற்கும் தயாரானவள் என தீர்மானிக்கதானே செய்கிறது இந்தச் சமூகம்.

கணவன் மீதுள்ள குறையை மறைத்து தானே காரணம் என விலகி வாழும் பெண்ணை பெத்தவளே 'பிட்ச்' என்று சொல்வது சில இடங்களில் நடக்கத்தான் செய்கிறது.  அதுவும் யாருக்காக அவள் வாழ வேண்டும் என்று நினைக்கிறாளோ அந்த பச்சைக் குழந்தையிடமே உன்னோட அம்மா ஒரு 'பிட்ச்' எனச் சொல்வது என்பது வேதனைக்குரியது.  அம்மாவிடம் இருந்து விலகி இருக்க நினைப்பவளுக்கு துணையாகிறான் ஒரு மழைநாளில் சந்தித்து நட்பான, வேலை வெட்டியில்லாத எம்.ஏ., பட்டாதாரி. இந்தப் பெண்கள் அழுக்கு உடையுடன் தாடியும் மீசையுமாக இருப்பவன் மீது காதல் கொள்வது என்பது தமிழ் சினிமாவில் எப்போதுதான் நிறுத்தப்படுமோ தெரியவில்லை.

நாயகன் பிரபுநாத் (வசந்த் ரவி)... தான் காதலித்த பெண் சௌம்யா (அஞ்சலி) கலாச்சார பாண்பாடு சூழலில் சரோஜாதேவியாகவும் அஞ்சலிதேவியாக இருந்தவள், இவனிடம் பணம் பெற்று அமெரிக்கா சென்றதும் மர்லின் மன்றோவாக மாறுவதை விரும்பவில்லை... அவளைக் கேள்வியால் துளைக்க ஆரம்பிக்க, ஒரு கட்டத்தில் அவளோ இவனை விடுத்து வேறு வாழ்க்கை தேடிச் செல்கிறாள். அதன்பின்தான் ஆல்தியாவுடன் சந்திப்பு, ஒரு கட்டத்தில் தரமணி இரயில் நிலையக் காவலராக வரும் அழகம்பெருமாளிடம் நீங்க மட்டும் நல்ல பொண்ணாக் கட்டுவீங்க நாங்க மட்டும் சென்னைப் பொண்ணு அதுவும் ஒரு பையனோட இருக்கவளைக் கட்டணுமோ என்று கேட்கும் போதே நாயகனின் குணம் இன்னும் அப்படித்தான் இருக்கு என்பதை அறிய முடிகிறது. அப்படியிருக்க மாடர்ன் டிரஸ் போடாதே என்று காதலியிடம் சொல்பவன், முட்டி தெரிய உடையணியும் ஆல்தியாவுடன் ஓட்டிக் கொள்வது முரண்.

ஆல்தியா சம்பந்தப்பட்ட காட்சிகளில் ஆண்கள் எல்லாமே மோசமானவர்களாகவும் பிரபுநாத் பணம் சம்பாதிக்க தேர்ந்தெடுக்கும் வழியில் பெண்களை மோசமானவர்களாகவும் சித்தரிப்பது சினிமாத்தனம் என்றே சொல்ல வேண்டும். அதேபோல் சிங்கம்பெருமாளின் மனைவி மீது முக்கால்வாசிப் படம் வரை பெயரை வைத்தே நம் முன்னே மரியாதையாக நிறுத்திவிட்டு அவரும் இப்படியானவர்தான் என்று காட்டுவது ஏற்புடையதல்ல, இருப்பினும் அதன் பின்னான காட்சியில் சிங்கம்பெருமாளின் புரிதலான பேச்சு அவள் செய்தது சரியாகக் கூட இருக்கலாமோ என்று யோசிக்க வைக்கிறது. 'அவன் கூட படுத்தியா...', 'அவன் உன்னை எதுக்கு கூப்பிட்டான்...','நீ பிட்ச்தாண்டி' என்றெல்லாம் சண்டை பிடிக்கும் பிரபுநாத், ஒரு நீண்ட சண்டைக்குப் பின் ஆல்தியாவால் துரத்தப்பட, அந்தச சமயத்தில் வாழ்க்கை நொந்து திரும்பும் முன்னாள் காதலி அவனை அழைக்க, தனக்குத் தர வேண்டிய பணத்துக்காக அவளை படுக்கைக்கு அழைக்கிறான்... அதன்பின் பணமும் பெறுகிறான். பின்னான நாட்களில் அவனின் பாதை அப்படியே பயணிக்கிறது... பெண்களின் போன் நம்பரைத் திருடி, அவர்களுடன் பேசி... அதன் பின் போட்டோவை வைத்து மிரட்டி பணம், நகைகளைப் பறிக்கிறான். இரயில் நிலையக் காவலர் மற்றும் இன்ஸ்பெக்டரின் மனைவிகளுடான நிகழ்வுக்குப் பின் நடக்கும் நிகழ்ச்சிகள் பிரபுநாத்தின் பயணத்தை தவறான பாதையில் இருந்து மீண்டும் சரியான பாதைக்கு மாற காரணிகளாகின்றன. 

தன்னை 'பிட்ச்' என்று சொன்ன தாயை உதறி விட்டு வெளியே வந்தவள், அதே பிள்ளை முன் தன்னை அதே வார்த்தையால் திட்டி, சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேற்றப்படவனை, வெளியேறிய பின்னும் போனில் அதே வார்த்தைகளால் கொல்பவனை எந்த ஒரு பெண்ணும் ஏற்றுக் கொள்ளமாட்டாள். ஆனால் இங்கு ஆல்தியா  மீண்டும் அவனை ஏற்றுக் கொள்வதென்பது சுபம் போடும் சினிமாத்தனம்... இதுதானே எப்படிப் புரட்சி செய்தாலும் இறுதியில் தமிழ்சினிமா கொண்டாடும் வழக்கம்... இல்லையா...?

இதே ஆல்தியா, கை நிறைய சம்பாதிப்பவள்... தன் மேனேஜர், இரவில் தன்னிடம் தகராறு செய்யும் இளைஞர்கள் எனப் பலரை தூக்கி வீசிவிட்டு தன்னம்பிக்கையோடு மகனுக்காக வாழ்பவள்... தன்னைக் கேவலமாக நடத்தி... வக்கிரமாகப் பேசி... தாலி கட்டாது குடித்தனம் நடத்திச் சென்றவனை மீண்டும் தன்னோட சேர்க்காமல் வாழ்ந்திருந்தால் 'ஆல்தியா ஈஸ் கிரேட்டு'ன்னு சத்தமாச் சொல்லலாம். மற்ற விஷயங்களில் ஆங்கிலோ இந்தியனாக இருக்கும் அவள், அவன் விஷயத்தில் மட்டும் தனக்கும்  தன் பிள்ளைக்கும் ஆண் துணை வேண்டுமென பத்தாம்பசலியாக யோசிக்கும் சாதாரண தமிழ்ப்பெண்ணாக  மாறிவிடுவதால் ஏனோ கிரேட்டுன்னு சொல்ல மனம் வரவில்லை... அவளும் வாழத்தெரியாத சராசரியே என்றுதான் தோன்றுகிறது.

ஆல்தியாவாக வாழும் ஆண்ட்ரியாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும்... ஆண்ட்ரியாவின் அழகான நடிப்பைப் பார்க்கணும்ன்னா இந்தப் படமே போதும்... அவ்வளவு பாந்தமான நடிப்பு... அவர் இதைவிட நல்லா நடிச்ச படங்களும் இருக்கு... அதுக்காக விஸ்வரூபம் பாருங்கன்னு சொல்லமாட்டேன்.... முடிஞ்சா மலையாளத்துல பஹத்பாசிலோட ஆண்ட்ரியா நடிச்ச முதல் படம்... 'அன்னாவும் ரசூலும்' பாருங்க... அப்புறம் நீங்களும் ஆண்ட்ரியா... ஆண்ட்ரியான்னு சொன்னாலும் சொல்லுவீங்க.

வசந்த் ரவிக்கு முதல் படம் மாதிரி தெரியவில்லை... தேர்ந்த நடிப்பு... ஆண்ட்ரியாவின் மகனாக வரும் சிறுவன், சிங்கம்பெருமாள். அஞ்சலி, இன்ஸ்பெக்டராக வரும் படத்தின் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார், அவரின் மனைவியாக வரும் பெண் என எல்லாருமே மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மொட்டத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிப் போடும் படத்தில் இடையிடையே இயக்குநர் ராம்  டுவிட்டரில் கீச்சுக்கள், முகநூலில் ஸ்டேட்டஸ் போடுவது போல் பேசுவது விவேகம் படத்தில் அஜீத்தைப் பற்றி வில்லனும் வில்லனைப் பற்றி அஜீத்தும் பேசிக் கொள்(ல்)வது போல் இருந்தாலும் ரசிக்க வைக்கிறது. தான் திருடிய பணத்தால்தான் அந்த முஸ்லீம் பெரியவர் இறந்தார் என்று எண்ணி படம் முழுவதும் வருந்தித் திரியும் பிரபுநாத், நாகூரில் இருக்கும் அவர் இல்லம் சென்று கொடுக்கும்போது ஆயிரம், ஐநூறு செல்லாதுன்னு சொன்னதை வைத்து ஒரு நக்கல்... கிளாசிக். உலகமயமாக்களால் மனித மனத்தில் என்ன நிகழ்ந்துள்ளது என்பதைச் சொல்லாமல் சொல்கிறது தரமணி.

யுவன் சங்கர் ராஜாவின் இசையும் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் மிகவும் அருமை. நாகூர் தர்ஹாவின் பின்னணியில் பாடப்படும் பாடல் அருமை... நா.முத்துக்குமாரின் பாடல் வரிகளைக் கேட்கும் போது ஒரு அழகிய கவிஞனை காலம் கொண்டு சென்று விட்டதே என்ற வருத்தம் ஏற்படுகிறது.

Image result for தரமணி

சொல்ல மறந்துட்டேனே... ரொம்பப் பேர் படத்தைக் காய்ச்சி ஊத்துனாங்க... விவேகம் அளவுக்கு ஊத்தலைன்னாலும் முடிஞ்சளவுக்கு ஊத்தினாங்க... எங்க அறை நண்பர் ஒருவர் படம் பார்த்ததும் படம் எப்படி என்றேன்... இதெல்லாம் ஒரு படமா... எவனெவன் கருத்துச் சொல்றதுன்னு இல்லையா... இவனையெல்லாம் யார் கருத்துச் சொல்லச் சொன்னா... என்று ஏகமாய்க் கடுப்படித்தார். என்னடா இவருக்கு ராம் மேல இம்புட்டுக் கோபம் என்று யோசித்தேன். படம் பார்க்கும் போதுதான் தெரிந்தது ஆயிரம் ஐநூறு மேட்டருன்னு... அதனாலதான் அவருக்கு அம்புட்டுக்கு கோபம்... ஏன்னா அவரு தீவிர........ ஆமா... ஆமா... முழுசாச் சொன்னா சண்டைக்கு வந்துருவாங்க... 

இயக்குநர் ராமுக்காக இல்லைன்னாலும் ஆல்தியாவுக்காக பாருங்கள்... கண்டிப்பாக வித்தியாசமான முயற்சியின்னு பாராட்டுவீங்க...

 நிறைய உறுத்துதல்கள் இருந்தாலும் தரமணி தரமான மணியாய்...

-'பரிவை' சே.குமார்.

திங்கள், 4 செப்டம்பர், 2017

மனசின் பக்கம் : கொஞ்சம் பேசுவோம்

னிதா... கனவுகளைச் சுமந்து கொண்டு பறந்து சென்றவள்... லட்சியச் சுமையோடு அரசின் அலட்சியப் போக்கால் மறைந்து போனவள்... அனிதாவின் மரணம் குறித்து விரிவாக எழுத எண்ணம்... எனவே டாக்டராகும் கனவு சிதைந்து... தீக்கங்குகள் தீண்ட சாம்பலாகிப் போனவளுக்கு 'RIP' போட மனம் வரவில்லை. இழப்பின் வலி சுமக்கும் அந்தத் தந்தைக்கு வலி நிவாராணியாய் வார்த்தைகளை அள்ளிவிடத் தெரியவில்லை. இப்படி செய்திருக்கலாமே... அப்படிச் செய்திருக்கலாமே என இறப்புக்குப் பின் அறிவுரை சொல்லத் தெரியவில்லை... இதை வைத்து அரசியலாக்கும் முகநூல் சண்டைக்குள் முகம் கொடுக்க விரும்பவில்லை... அவளுக்கு எதற்கு டாக்டர் படிப்பு என்னும் சில மனித மாடுகளின் வரிகளைச் சுமந்து, இழப்பின் வேதனையையும் சுமக்கு மனம் வலிக்கிறது.... கண்ணீர் நனைக்கிறது... ஏனம்மா இந்த முடிவு..?

னசு தளத்தில் எழுதுவது மட்டுமல்ல பொதுவாக எழுதுவது என்பதே குறைந்து விட்டது... எங்கும் எதிலும் ஒட்டாத மனநிலையில் பயணித்துக் கொண்டிருக்கிறது வாழ்க்கை. மூன்று நாள் விடுமுறை... போட்ட திட்டங்கள் எல்லாம் ஓடாத படம் போல மூலையில் கிடக்கிறது. நெருஞ்சியும் குறிஞ்சியும் எப்படியும் எழுதி முடித்து விட வேண்டும்... புதிதாய் ஆரம்பிக்கும் நாவலின் அடுத்தடுத்த பகுதிகளை எழுத ஆரம்பிக்க வேண்டும்... இரண்டு சிறுகதைகளாவது எழுத வேண்டும்... என்ற எண்ணம் எல்லாம் அழகாய் பூத்தது சென்ற வாரத்தில்... அதாவது விடுமுறைக்கு முதல் நாள்... விடுமுறை தினங்களில் எப்பவும் போல் மனம் போராட்டக்களத்துக்குள் இறங்கி உட்கார, எழுதும் எண்ணம் போய் வாழ்க்கைச் சிந்தனைகள் வாட்டி வதைத்துவிட, எப்பவும் போல் சமையல், சாப்பாடு, ஊருக்குப் பேசுதல் என பத்துக்குப் பத்து அறைக்குள் பாந்தமாய் நகர்ந்தது அந்த மூன்று நாட்கள்... என் கணிப்பொறியில் வாசித்தாலும் கருத்துப் போட முடியாத நிலை... எழுத நினைத்தும் எழுத முடியாத நிலை... இப்படியான சூழலில் வேதனைகளும் வலிகளும் மனசு முழுவதும் நிறைந்து நிற்க, மனசு வலைப்பூவுக்கு நீண்ட விடுமுறை கொடுத்துவிடலாம் எனத் தோன்றுகிறது... செயல்படுத்திவிடலாம என்ற சிந்தனை மெல்லப் பூக்கிறது.

னவுப்பிரியன் அண்ணன் அவர்களின் 'சுமையா' புத்தக வெளியீடு அரபுதேசத்தில் சனிக்கிழமை நடப்பதாக இருந்தது... கூட்டிக் கழித்துப் பார் கணக்கு சரியா வரும் என அண்ணாமலையில் அடிக்கடி ராதாரவி சொல்வார்... ஆனால் வாழ்க்கைக் கணக்கு கூட்டிக் கழித்துப் பார்த்தால் எப்பவும் சரியாக வருவதில்லை. சிறு விழாவுக்கான ஏற்பாடு லட்சங்களை விழுங்கும் என்ற நிலையில் லட்சங்கள் செலவில் லட்சியம் வென்றாலும் அதனால் இழப்புத்தான் அதிகம் இருக்கும் என்பதைக் கணக்கில் கொண்டு விழாவை ஏதாவது ஒரு மாலை வேளையில் ஏதாவது ஒரு பூங்காவில் அமர்ந்து இலங்கியங்கள் அற்ற இலக்கில்லாப் பேச்சுக்களோடு மகிழ்வுடன் நடத்தலாம் எனத் தள்ளிப் போடப்பட்டுவிட்டது. விரைவில் ஒரு சங்கமம் இருக்கு என்பதைச் சொல்வதில் மகிழ்ச்சி எனக்கு.

வெள்ளிகிழமைக் காலை அடுக்குப் பிரியாணி செய்யும் வேலையில் பரபரப்பாக நானும் அறைத் தோழரான அண்ணனும் அடுப்படியில் இருக்க, துபையில் இருந்து தேவா அண்ணா, தம்பி நான் அங்க வர்றேன்... அப்படியே உன்னையும் பார்த்துட்டு வரலாம்ன்னு நினைக்கிறேன்... பழைய அறையில்தானே இருக்கிறாய் எனப் போனில் கேட்க, புதிய அறையின் இருப்பிட முகவரி கூகிள் ஆண்டவரின்... கவனிக்க பிக்பாஸ் ஆண்டவரில்லை... உதவியுடன் வாட்ஸப்பில் அனுப்பிக் கொடுக்க மதியம் இரண்டு மணிக்கு மேல் வந்தார். அவருடன் பிரபலக் கவிஞர் ஒருவரும் வந்தார். அண்ணனின் காரில் அமர்ந்து பேசினோம்... பேசினோம்... பேசிக் கொண்டேயிருந்தோம். இலக்கியவாதிகள் போல் இலக்கியமெல்லாம் பேசத் தெரியாது... ரெண்டு ஊருக்காரப் பயலுக சேர்ந்தா என்ன பேசுவானுங்க... அப்படி இதுதானென்று இல்லாமல் எல்லாமுமாய் அடித்து ஆடி, தேவா அண்ணன் ரசனையான பேச்சுக்குச் சொந்தக்காரர், வந்த கவிஞரோ நிறைய விஷயங்களை உள்வாங்கி வைத்திருப்பார் போலும்... பேச்சில் இலக்கிய ரசனை... ஆனந்தவிகடனில் தொடர்ந்து கவிதை எழுதுகிறாராம். அவருடன் எனக்கு முதல் சந்திப்பு... இவர் வலையுலகம் பக்கம் வராதவர் என்பதை அறிந்தேன். இரண்டு மணிக்கு ஆரம்பித்த பேச்சு நான்கரை மணி வரைச் சென்று, பெங்காளி கடை டீயுடன் முடிவுக்கு வர, நிறையப் பேசி அன்றைய தினத்தை மகிழ்வான தினமாக மாற்றிச் சென்றார் எழுத்தாளர்... அண்ணன் தேவா சுப்பையா.

பிரதிலிபி போட்டிகள் எல்லாம் வாசகர் தேர்வாய் அமைவதால் போட்டிக்கு அனுப்பப்படும் சிறந்த படைப்புக்கள் (சத்தியமாக என் படைப்பல்ல) அங்கீகாரம் பெறுவதில்லை என்பதை அவர்களுக்குச் சொன்னதுடன் போட்டிகளிலும் கலந்து கொள்வதைத் தவிர்த்து வந்தேன். இந்த முறை வாசகர் தேர்வு மட்டுமின்றி, பிரதிலிபி ஆசிரியர் குழுவும் தேர்ந்தெடுக்கும் என 'கதை கதையாம்' என்ற சிறுகதைப் போட்டி அறிவித்திருந்தார்கள். அதாவது இரண்டு கதைகளை வாசகர் தேர்வின் அடிப்படையிலும் இரண்டு கதைகள் ஆசிரியர் தேர்வின் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்க போவதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் எழுதும் எண்ணம் இல்லை... பின்னர் எழுதி இருப்பதை அனுப்பலாமே என முடிவெடுத்து இறுதி நாளில் அனுப்பினேன். இப்போது ஜாம்பவான்களின் கதைகளுடன் என் கதையும் களத்தில் இருக்கு. பிரதிலிபி தளத்தில் என் கதைக்கான இணைப்புச் சுட்டி கீழே கொடுத்திருக்கிறேன்... சொடுக்கி வாசியுங்கள்... தங்களுக்குப் கதை பிடித்திருந்தால் தங்கள் மதிப்பெண்ணை அளியுங்கள்... அத்துடன் உங்களின் மனசுக்குள் தோன்றும் கருத்தையும் சிலவரி சொல்லுங்கள்... என் கதைகளை பட்டை தீட்டும் காரணியாக உங்கள் கருத்து அமையும் என்று நினைக்கிறேன். வெற்றி மட்டும் குறிக்கோளல்ல... ஏனென்றால் இதைவிட நல்ல கதையாக நான் நினைத்த 'நேசம் சுமந்த வானம்பாடி' கூட பிரதிலிபி போட்டியில் ஆயிரம் லைக்குகளைக்கூட வாங்கவில்லை என்பதை நான் அறிவேன்... 

புதாபியில் இருக்கும் அண்ணன் ஒருவர், தனது நட்பு வட்டத்துடன் சேர்ந்து குறும்படங்கள் இயக்கிக் கொண்டிருக்கிறார். சிவப்பு ரோஜாக்கள் 2.0 'DILEEP IS BACK' என்ற முதல் படத்தை இணையத்தில் இருவாரம் முன்னர் பகிர்ந்திருந்தார். 20 நிமிடம் ஓடக்கூடிய அந்தக் குறும்படத்தின் கதையும் இசையும் செம... நடித்தவர்கள் புதியவர்கள் என்பதால் சின்னச் சின்ன காட்சி சொதப்பல்கள்... அதை படத்தொகுப்பிலும் சரி பண்ணாமல் விட்டுவிட, விறுவிறுப்பான படம்... சிறு  தொய்வலுடன் பயணிப்பதாய் நட்புக்களின் விமர்சனம்... அதை ஏற்று இன்னும் பட்டி பார்த்து வெளியிடலாம் என இணையத்தில் இருந்து நீக்கியிருக்கிறார்கள்... இன்னும் சிறப்பான படத்தொகுப்போடு மீண்டும் வரும். அப்போது முடிந்தால் விரிவாக எழுதுகிறேன்... ஒரு விமர்சனப் பார்வையாக... (அதற்குள் மனசு தளத்துக்கு மூடுவிழா செய்யாமல் இருந்தால்) அடுத்தடுத்து படங்கள் என அடித்து ஆடிக் கொண்டிருப்பவரின் ஒரு படத்துக்கான ஒன்லைன் சொல்லி, தலைப்புக் கேட்டார்... நானும் ஏதேதோ யோசித்து முகநூல் அரட்டையில் சொல்ல, அவருக்கு எதிலும் விருப்பம் இல்லை... இன்னும் நல்லதாப் பாருங்க குமார்ன்னு சொல்லிட்டார்... வீட்டுக்குப் பேசிக் கொண்டிருக்கும் போது நாலெழுத்தில் ஒரு பெயரைத் தட்டிவிட்டேன். அவருக்கும் அது ரொம்பப் பிடித்துப் போக, அந்தக் குறும்படத்துக்கான சிறிய போஸ்டர் தயார் செய்துவிட்டார்... எனக்குத் தோன்றிய தலைப்பை ஒரு குறும்படத்தின் போஸ்டராக பார்க்கும் போது மகிழ்ச்சி... என்னோட கதைகளுக்கு சரியான தலைப்பை வைப்பதில் எனக்கு எப்பவுமே குளறுபடி இருக்கும்... அப்பல்லாம் என் நண்பன் தமிழ்க்காதலனை நாடுவேன்... இந்த முறை மற்றொருவரின் படத்துக்கு நான் ஒரு பெயர் சொல்லி... அதுவே படத்தின் பெயராகி... சரி... சரி... மகிழ்ச்சிதானே... சொல்ல மறந்துட்டேன்... அவரின் நடிப்பு... குறிப்பாக இறுதிக்காட்சியில் வரும் பெண் வேடம் மிக அருமை... விரைவில் வெட்டி,ஒட்டி இன்னும் சிறப்பாக இணையத்தில் பகிர்வார். (தலைப்புக் குறித்து இங்கு அவர் பகிரச் சொன்னதால்தான் பகிர்ந்து கொண்டுள்ளேன்... இல்லையேல் அது குறித்தான தகவலுக்கு இங்கு வாய்ப்பில்லை என்பதையும் சொல்லிவிடுகிறேன்)


-'பரிவை' சே.குமார்.