சனி, 14 நவம்பர், 2015

கடவுளைக் கண்டேன் (12வது ஆளாய்)


டவுளைக் கண்டேன் அப்படின்னு ஒரு தொடர்பதிவு ஒண்ணு இப்போ சென்னை மழை மாதிரி எல்லாப் பக்கமும் அடிச்சி விளையாடுது. வலையுலகிற்கு வந்த புதிதில் வாரம் ஒரு தொடர்பதிவு வரும். அதன்பின் மெல்ல மெல்ல தொடர்பதிவுக் கலாச்சாரம் குறைந்து விட்டது. பெரும்பாலும் தொடர்பதிவில் ஒரு சிக்கல் என்னவென்றால் இதற்கு எழுதுங்கள் என்று சொல்லும் போது எழுதுவது சிரமம். அதைவிட மிகப்பெரிய சிரமம் என்னவென்றால் பத்துப் பேரை எழுதச் சொல்லுங்கள், ஐந்து பேரை எழுதச் சொல்லுங்கள் என்பதுதான். ஆரம்பத்தில் எழுதுபவர்கள் ஆட்களை பிடித்து விடுவார்கள். மெதுவாக எழுதுவோமே என்றிருந்தால் விவசாயி இப்போது களை எடுக்க ஆள் தேடுவது போல்தான்...   

கடைசியாக வந்த தொடர்பதிவு கில்லஜி அண்ணாவின் கனவில் வந்த காந்தியின்னு நினைக்கிறேன். ஆளு கோர்த்து விட்டுட்டு வேடிக்கை பார்க்கிறதில் கில்லாடி.... காந்தி கூட சுத்தி சுத்தி அடிச்சி ஆடி அரை சதம் போட்டதாக நினைவு.  இந்த முறை கடவுளைப் பார்த்து நம்ம ஆசையைச் சொல்லணுமாம். என்னங்க ஆசையிருக்கு... முதல்ல இந்த ஊரில் இருந்து கிளம்பி பொண்டாட்டி, பிள்ளைகளோட சந்தோஷமாக இருக்கணும்ங்கிற பெரிய ஆசைதான் ரொம்ப நாளா ஓடுது. ஆனா கடவுள் கண்டுக்கவே இல்லை. அப்படியிருக்கு... அது வேண்டும் இது வேண்டுமென பதிவிற்காக பந்தலிடலாம்.  எல்லாம் கிடைக்குமா..?

நான் ஒருநாளைக்கு நூறு தடவைக்கு மேல் (நல்லா கவனிங்க ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி இல்லை... உண்மையிலேயே நூறு தடவை) 'ஸ்ஸ்ஸ்... அப்பா... முருகா என்னை மட்டும் காப்பாத்துன்னு சொல்வேன்' இது பல வருடங்களாக தொடரும் சொல். எங்க வீட்டில், நட்பில் எல்லாம் 'சாமிக்கிட்ட எல்லாரும் நல்லாயிருக்கணுமின்னுதானே வேண்டுவாங்க நீ என்னடான்னா உன்னையை மட்டும் காப்பாத்தச் சொல்றே..?' அப்படின்னு கேப்பாங்க. நான் சிரித்துக் கொண்டே 'என்னையை கடவுள் காப்பாத்தினா... நான் பத்துப் பேருக்காச்சும் நல்லது(?) செய்வேன்.... அந்தப் பத்துப் பேரு நூறு பேருக்கு.... நூறு பேர் ஆயிரம் பேருக்கு.... இப்படி போகும்ல்ல.... அதை விட்டுட்டு எல்லாரையும் காப்பாத்துப்பான்னு சொன்னா... அவரு இவனைப் பார்ப்போமா... அவனைப் பார்ப்போமான்னு மாறி மாறி பாத்து அம்புட்டுப் பேரையுமே காப்பாத்தாம விட்டுவாருல்ல...' என்று சொல்வேன். 'அடேங்கப்பா... என்ன ஒரு வில்லத்தனம்...' என்று சிரிப்பார்கள். அப்படிப்பட்ட நான் கடவுளிடம் என்னோட ஆசைகளைச் சொல்றேன். அவரு நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையோடு....

அதுக்கும் முன்னால கில்லர்'ஜி' அண்ணா நகச்சுத்திக்காக ஆஸ்பிடல் போய் ஆபரேசன் தியேட்டருக்குள்ளே போனதும் மேலோகத்துக்கு போயி இறைவனிடம் தனது ஆசைகளை அடுக்குகிறார்... அதெல்லாம் மிகப் பெரிய ஆசைகள்... அங்கிட்டு கீதா அக்கா, சகோதரி தேன் மதுரத்தமிழ் கிரேஸ், அன்பு ஐயா செல்வராஜூ, திண்டுக்கல் தனபாலன் அண்ணா, பழனி கந்தசாமி ஐயா என பலரும் கடவுளைப் பார்த்து தங்கள் ஆசைகளைச் சொல்லியிருக்கிறார்கள்... நானும் அடுக்குகிறேன்... அதற்கு முன்னர் நேற்றிரவு கடவுளுடன் நடந்த உரையாடலைச் சொல்லி விடுகிறேன்.  தூக்கம் வராமல் இணையத்தில் உலாவிக் கொண்டிருந்தேன். அப்போது அறையெங்கும் ஒரு பிரகாசம்... 'லைட்டெல்லாம் அமர்த்தியாச்சே... என்ன வெளிச்சம்...?' என யோசிக்கும் போதே....

"என்னப்பா... அறையில் தனியாக இருக்கிறாய்..?" என்றொரு குரல். இரவு 1.30 மணிக்கு திடீரென கேள்விக்கணையை தனி ஒருவனாய் இருந்த என்னிடம் கேட்டால் நான் என்ன செய்வேன்... ஆம் பயந்து அலறிவிட்டேன்... அறை பூட்டியிருக்கு... நான் மட்டுமே இருக்கிறேன்... எப்படி இன்னொரு குரல் வியர்வை என்னை நனைக்க...  எனக்கு கைகால் எல்லாம் டைப் அடிக்க ஆரம்பித்துவிட்டது.

"ஏனப்பா பயப்படுகிறாய்..? நாந்தான் கடவுள்..." என்றார்.

"என்னது...!? கடவுளா...? " பயம் மறைந்து சிரிப்பு வந்தது. பின்னே சிரிப்பு வராம ராத்திரி 1.30 மணிக்கு எந்தக் கடவுளய்யா வரும்... கனவா இருந்தாக்கூட பரவாயில்லை... கில்லர்ஜி அண்ணா தொடுத்த கடவுளைக் கண்டேன் தொடர்பதிவுகளை வாசித்துக் கொண்டிருந்தேன்... அப்பத்தான் யோசித்தேன்... ஆங்... அட நம்ம ஆசையைக் கேட்க வந்திருக்காரு போல என்றெண்ணி "அமருங்கள்" என்றேன். சிரித்துக் கொண்டே என் கட்டிலில் எனக்கருகே அமர்ந்தார்.

"கில்லர்ஜி என்னைப் பார்த்து ஆசைகளைக் கேட்டதோடு இல்லாமல் சுத்தி விட்டுட்டாப்ல... இப்ப நாந்தான் தூக்கமில்லாமல் அங்கிட்டும் இங்கிட்டும் ஓடுறேன்... இந்தப் பதிவர்கள் எல்லாமே தூங்கவே மாட்டானுங்களா... ராத்திரியெல்லாம் கடவுளைக் கண்டேன்னு எழுதிக்கிட்டே இருக்காப்ல... இனி கொஞ்ச நாளைக்கு எனக்கு தூக்கம் கூட கனவுதாம்ப்பல... சரி உங்க  ஆசைகளை சொல்லுங்க..."

"ம்... என்னோட ஆசைகள்..? எல்லாருக்கும் சொந்த ஆசைகளும் இருக்கும்... அது இப்படி இருக்கணும்... இது அப்படியிருக்கணும் எனக் கேட்கும் போது எனக்கும் எனக்கே எனக்கென சில ஆசைகள் இருக்கும் அதனால் எல்லாந்தான் கேப்பேன்... சரியா..?" என்றேன்.

"ஓகே... " என்றபடி நன்றாக அமர்ந்து கொண்டார்.

முதலில் எனக்கே எனக்கான ஆசைகள் சில என்றபடி ஆசைகளை அடுக்க ஆரம்பித்தேன்.

ஆசை...1 : 'எங்க வீடு இருக்கும் பகுதியில் இன்னும் சரியான ரோடு இல்லை... மழை நேரத்தில் குழந்தைகளைப் பள்ளிக்குக் கூட்டிப்போக என் மனைவி மிகவும் சிரமப்படுகிறார். வண்டியை அந்த தொறுத்தொறு சகதியில் ஓட்டிச் செல்வது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. முதலில் எங்க கவுன்சிலருக்கு மனசு வந்து அந்த ரோடைப் போட வேண்டும்.'

ஆசை...2 : 'நான் இனிமேலா பிறக்கப் போகிறோம் என எல்லோருடனும் பகையில்லாமல் வாழ நினைப்பவன்... என் மனைவியும் அப்படியே... ஆனால் உறவுகள் நடக்கும் விதங்கள் எல்லாம் மனக்காயங்களையே ஏற்படுத்துகின்றன. இந்த உறவே வேண்டாம் என ஓதுங்க வைத்து விடுகின்றன... இப்படிப்பட்ட சூழலிலும் சண்டையோ, சமாதானமோ அவரவர் அவரவர் பாதையில் பயணிக்க வேண்டும். அவன் நல்லாயிருக்கக் கூடாது... இவன் நல்லாயிருக்கக் கூடாதென நினைக்காமல் இருக்க வேண்டும்.'

கடவுள் : 'ஆஹா... ஆஹா... ஆசம்...' என்றார். 

"நீங்க வேதாளம் படம் பாத்தீங்களா...? சூரி சொல்ற மாதிரி ஆசம் சொல்றீங்க...?"

கடவுள் : 'ஆமா... பின்ன எவன்டா என்னைக் காண்பான்னு காத்திருக்கும் போது... வைகுண்ட ஏகாதசிக்கு நீங்களெல்லாம் ராத்திரி எல்லாம் படம் பார்த்து கண் முழிக்கிற மாதிரி நானும் படம் பார்த்துத்தான் கண் விழிக்கிக்றேன்..."

"ஆசம்... ஆசம்... சரி அடுத்த ஆசைகள் ஊருக்கானது..." என்றபடி தொடர்ந்தேன்.

ஆசை...3 : 'கருவை மரங்களால் சூழப்பட்டிருக்கும் எங்க ஊர் 42 ஏக்கர் நிலத்திலும், நான் படிக்கும் காலத்தில் இருந்தது போல பச்சை மெத்தை விரித்தது போல்... நெல் மணிகள் தலையாட்ட வேண்டும். சலசலவென நீர் ஓடி, அருகம்புற்கள் அலையோடு ஆடிப்பாடிய அந்த நாட்கள் மீண்டும் வர வேண்டும்.'

ஆசை...4 : 'நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது ஏன் சில ஆண்டுகள் வரை கம்பீரமாக, எங்களுக்கு முன்னோடிகளாக இருந்த எங்கள் ஊர் மனிதர்களில் சிலர் மறைந்து விட்டார்கள்... இருக்கும் சிலரும் வயோதிகத்துக்குள் வசப்பட்டு விட்டார்கள். எங்களை அறிவுரைகளாலும் அன்பாலும் வளர்த்த அந்த மனிதர்கள் இன்னும் சில காலமேனும் கஷ்டப்படாமல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்.'

கடவுள் : "சூப்பர்ய்யா... நல்ல ஆசைகள்... ஆசம்... ஆசம்..."

"நன்றி... இனி எங்க மாவட்டத்துகான ஆசைகள் சிலவற்றைச் சொல்றேன்"

ஆசை...5 : 'இந்தியாவுக்கு நிதியமைச்சரை பலமுறை கொடுத்த எங்கள் மாவட்டத்தில் எந்த ஓரு தொழில்துறையும்... முன்னேற்றங்களும் இல்லை... மாவட்டத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல, மக்களின் 'பசி' நீக்க, நல்லதொரு எம்.பியும் எம்.எல்.ஏவும் கிடைக்க வேண்டும். இது நிறைவேறாத ஆசைதான் என்பது தெரியும். இருந்தாலும் நிறைவேறினால் நல்லா இருக்கும்...'

ஆசை...6 : 'சென்னை எங்கும் மழை நீரில் தத்தளித்தாலும் எங்கள் மாவட்டம் வறட்சியில்தான் வாடிக்கொண்டிருக்கிறது. அதைப் போக்கும் விதமாக, விவசாயிகளை வாழ வைக்கும் விதமாக மாதம் மும்மாரி பொழிய வேண்டாம்... விவசாயம் பொய்த்துப் போகாமல் வருடா வருடம் விளைச்சல் பெருகும் வண்ணம் மழை பெய்ய வேண்டும்' (இதை எழுதி முடித்துவிட்டு ஊருக்குப் பேசும்போது மழை கொட்டித் தீர்ப்பதாய் கேள்வி - அப்பா ஒரு ஆசை கொஞ்சம் நிறைவேறிடுச்சுன்னு நினைக்கிறேன்)

கடவுள் : "முதல் ஆசை... ரொம்பக் கஷ்டம்ய்யா... நானே தேர்தல்ல நின்னாக்கூட என்னையும் மாத்திருவானுங்க... ரொம்பக் கஷ்டம்... ரெண்டாவது ஆசை.... ரொம்ப நல்ல ஆசை... விவசாயம் பொய்த்துப் போகக்கூடாதுதான்... ஆசம்... ஆசம்..."

"அதான் நானே சொல்லிட்டேனே... அந்த ஆசை கொஞ்சமல்ல... ரொம்ப அதிகப்படியானதுதான்... சரி அடுத்த ஆசைக்கு வாங்க... இது என் தமிழகத்துக்கானது..." 

ஆசை...7 : 'மக்கள் முதல்வர் என்று சொல்லிக் கொண்டு மக்கள் சிந்தனையே இல்லாமல் இருக்கும் முதல்வரும்... கேலித்தனமான அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகளும் எங்களை முட்டாளாக்கி கோடிகளில் புரள்கிறார்கள். எங்கள் மக்களுக்கு மக்கள் முதல்வராய் இல்லாமல் மக்களுக்கான முதல்வர் கிடைக்க வேண்டும். வளர்ந்த தமிழகத்தை காலொடித்துப் போட்டிருக்கும் கயவர்கள் கூண்டோடு அழிய... மன்னிக்கவும் நாடு கடத்தப்பட வேண்டும்.'

ஆசை...8 : 'சாராயத்தில் சிக்கி சாகும் என் தமிழன் டாஸ்மார்க் என்னும் வட்டத்துக்குள் இருந்து வெளியே வரணும்... ரோட்டில் விழுந்து கிடப்பவனும் கூத்தடிப்பவனும் குறைய வேண்டும்... கோடி வசூல் என்று மார்தட்டும் அரசுக்கு நாமம் போட வேண்டும்... அதற்கு குடி..குடி என்ற எண்ணம் எம் தமிழனின் சிந்தையில் இருந்து அகல வேண்டும்.'

கடவுள் : "இது ரெண்டுமே ரொம்பச் சிக்கலானது... மக்களின் முதல்வர் வருவதெல்லாம் இனி கேள்விக்குறிதான்... டாஸ்மார்க் வேண்டான்னு தமிழன் சொல்லணுமா... நல்ல கதை போ... முன்னெல்லாம் காலையில குளிச்சி எங்களைப் பார்க்க கோவிலுக்கு வருவாங்க... இப்போ ஆம்பளை, பொம்பளை, ஸ்கூல் பசங்கன்னு ரொம்பபேரு காலையிலயே கட்டிங் போடப் போறானுங்க... உங்க மக்கள் முதல்வர் 500 கோடி நிர்ணயம் பண்ணினா நீங்க 600 கோடிக்கு குடிக்கிறீங்களேப்பா... ஆசம்... ஆசம்..."

"ஆமா... ஆமாம்... நாங்களெல்லாம் அரசை வாழ வைக்கும் சாமிகள்... இந்த விஷயத்துல மட்டும் அரசியல்வாதிகள் எங்களை கடவுளாகப் பார்ப்பார்கள்... சரி என் நாட்டுக்கான ஆசைகளைப் பார்ப்போமா..?"

ஆசை...9 : 'எல்லாரும் ஓர் இனம்... எல்லோரும் ஓர் குலம்... எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்.. என்று வாழ்ந்து வருகிறோம். நாங்கள் மன்னர்களாக வேண்டாம்...  சாதியும் மதமும் எங்களைப் பிரிக்காமல் இருக்கட்டும்... எங்கள் சகோதரத்துவ உறவு ஒரு சில கயவர்களால் பிரிக்கப்படாமல் இருக்க வேண்டும்... எப்போதும் எல்லாரும் அன்போடும் உறவோடும் வாழ வேண்டும்... தீவிரவாதங்கள் திசைக்கொன்றாய் ஓடவேண்டும்...'

ஆசை...10 : ' எங்காவது ஒருவன் பெரிய பதவிக்கு வந்தால்... அவன் நாட்டை விட்டே போயி நாலைந்து தலைமுறைகள் ஆயிருந்தாலும் தமிழன் என்றும் இந்தியன் என்றும் மார்தட்டிக் கொள்ளும் நாங்கள் திருந்த வேண்டும். எங்கள் இந்தியா... எங்கள் இந்தியன்... உலக அரங்கில் உயரத்தில் வலம் வர வேண்டும்...'

கடவுள் : "ஆசம்... ஆசம்..."

"நீங்க ரொம்ப மோசம் போங்க..."

கடவுள் : "என்னய்யா... டப்புன்னு திட்டிப்புட்டே..."

"பின்ன என்னங்க... எத்தனை வருசமா உங்ககிட்ட கேட்டுக்கிட்டு இருக்கேன்... என்னை என் மனைவி மக்களோட வாழ வையுங்க... இந்த வாழ்க்கை போதும்ன்னு... காது கொடுத்தே கேட்கமாட்டேங்கிறீங்க... எப்படியாச்சும் என்னோட எழுத்துக்களை புத்தகமாக்கி எல்லோரையும் கஷ்டப்பட வைக்கணுமின்னு கேட்கிறேன்... அதுக்கும் இன்னும் செவி சாய்க்கலை... இந்தப் பத்தும் நீங்க செய்யிறதுக்குள்ள... நீங்க இங்க உக்காந்திருக்க மாதிரி நான் அங்கே வந்து உக்காந்திருப்பேன்" என்று மேலே கையைக் காட்ட கடவுள் சிரித்தார்.

"என்ன சிரிக்கிறீங்க...?"

"உன்னோட ஆசைகள் எல்லாம் நடக்கும்ய்யா... ஆனா அரசியல் சம்பந்தமான ஆசைகள் ரொம்பக் கஷ்டம்..." என்றவர் "சரிய்யா... கீழே டாக்ஸி கிடைக்குமா.... நான் அப்படியே முரூர் போயி கில்லர்ஜிக்கிட்ட உன்னோட ஆசைகள் எல்லாத்தையும் சொல்லிட்டு கிளம்புறேன்... ஏன்னா அவருதான் புத்தகம் போட்டு எழுதுறாப்ல.. அடுத்து எந்த ஊரோ... ? எந்த நாடோ...? " என்று எழுந்தார்.

"ரொம்ப டயர்டா இருக்காப்ல தெரியுது.... அந்தப் பெட்டுல படுத்து கொஞ்சம் கண் அயர்ந்துட்டுப் போங்க..."

"தூக்கமா... அதெல்லாம் வேண்டாம்ய்யா... கிளம்புறேன்... உன் ஆசைகள் எல்லாம் சீக்கிரம் நிறைவேற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்..."

"அடப்பாவி... அப்ப நீங்க யாரு...?"

"நான் கடவுள்..." என்றபடி மறைந்தார். வராத தூக்கம் என்னை ஆட்கொள்ள, ஆழ்ந்து உறங்கினேன்.

அட மறந்துட்டேனே... யான் பெற்ற இன்பம் பெறுக இப்பதிவுலகம்ன்னு பத்துப்பேரை சந்திக்கு... சாரி பந்திக்கு இழுக்கணுமாமே... இதோ அந்தப் பத்து...

1. சிறந்த எழுத்துக்களை கருத்துக்களாய் பகிர்ந்து வலையுலகிற்குள் காலெடி எடுத்து வைத்திருக்கும் எனதருமை 'ஆல்ப்ஸ் தென்றல்' நிஷா அக்கா. 

2. குறும்படங்களில் ஜெயித்து வெள்ளித்திரை இயக்குநராகக் காத்திருக்கும் எனதன்பு 'குடந்தையூர்' ஆர்.வி.சரவணன் அண்ணன் 

3. நாம் அவர் தளம் செல்லாவிட்டாலும் உரிமையுடன் வந்து கருத்துச் சொல்லும்  பாசமிகு 'கனவும் கமலாவும்' கமலா ஹரிகரன் அக்கா. 

4. கவிதையில் ஆழ்ந்த கருத்தை வைத்து நம்மை ஆராய வைக்கும் என் தம்பி 'கலியுகம்' தினேஷ் குமார்

5. சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும்  கவிதாயினி  எனதருமை 'தூரிகைச் சிறதல்' காயத்ரி அக்கா.

6. தனது பயணக் கட்டுரைகளால் நம்மையும் பயணிக்க வைக்கும் நேசமிகு 'சந்தித்ததும் சிந்தித்ததும்' வெங்கட் நாகராஜ் அண்ணா.

7. சமையல் குறிப்புக்களில் அசத்தும் அன்பின் 'சமைத்து அசத்தலாம்' ஆசியா அக்கா 

8. அருமையான எழுத்துக்குச் சொந்தக்காரரும்... சிறந்த சிந்தனைவாதியுமான எனது பாசத்துக்குரிய, எங்கள் மண்ணின் 'தேவியர் இல்லம்' ஜோதிஜி அண்ணா. 

9. சிறப்பான எழுத்துக்குச் சொந்தக்காரரான அன்பின் 'அருணா செல்வம்' அருணா அக்கா

10. படிக்கும் போதே வசியம் செய்யும் எழுத்துக்குச் சொந்தக்காரரான, எங்கள் மண்ணின் பாசமிகு 'வாரியர்' தேவா சுப்பையா அண்ணா.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... ஷப்பா.... நாம விரும்பு அம்புட்டுப் பேரையும் எழுதச் சொல்லணுமின்னு ஆசையிருந்தும் பத்து பேருங்கிற குறீயீட்டுக்குள் இருக்க வேண்டிய சூழலில் இவரா அவரா என தேடித்தேடியே ரெண்டு பதிவு எழுதுற நேரம் போச்சு. மேலே சொன்னவர்கள் தவிர எல்லாரும் எழுதலாம்.... சொன்னவர்களும் கட்டாயம் எழுத வேண்டும் இல்லையென்றால்... அப்படி மிரட்டல் எல்லாம் இல்லை. முடிந்தால்... முடியும் போது எழுதுங்கள்.

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

50 கருத்துகள்:

  1. நல்லாத்தான் கனவு கண்டு கொண்டிருக்கொன்றிர்கள் குமார். இவையெல்லாம் நிறைவேறும் கனவுகள் தானோ?

    தொடர்பதிவு எனும் பெயரில் என்னை இணைத்திருக்கின்றீர்கள். எப்படியோ என்னை எழுத வைக்க நினைக்கும் உங்கள் நல்ல எண்ணத்துக்கு சல்யூட். இன்றே எழுதி விடுகின்றேன்.. என் தளத்தில் தானே பதிய வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அக்கா...
      கனவுகல் எல்லாம் நிறைவேறுமா என்ன...?
      நாம் கனவு கண்டு கொண்டே இருப்போம்... நடக்கும் என்ற நம்பிக்கையோடு...

      உங்க பகிர்வும் பார்த்தேன் அருமை...

      நீக்கு
  2. பதில்கள்
    1. வாங்க ஐயா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  3. ம்ம்ம்ம்.... உங்க பார்ட்டை முடிச்சிடிங்க... நானும் பாக்கி!
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா...
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
      விரைவில் எழுதுங்க... ஆவலுடன் இருக்கிறோம்...

      நீக்கு
  4. ஒரு குறும்படமே எடுக்கலாம் போலிருக்கே... கனவுகள் எல்லாம் நனவாகட்டும்... வாழ்த்துகள்...

    அழைத்த பத்து பதிவர்களின் அறிமுகங்கள் பலே பலே... அருமை...
    (அனைவருக்கும் தகவல் சொல்லி விடுங்கள்...)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா...
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
      நேற்றிரவே அனைவருக்கும் சொல்லியாச்சு அண்ணா....
      அது சரி குறும்படம் எடுக்கலாமா...? அப்ப சரவணன் அண்ணனைத்தான் கூப்பிடணும்...

      நீக்கு
  5. அழைப்பிற்கு மிக்க நன்றி. இவ்வளவு அருமையாக எழுத வருமான்னு யோசிக்கிறேன். நேரம் கிடைக்கும் பொழுது எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அக்கா...
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
      நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள்... கண்டிப்பாக வாசிக்க காத்திருக்கிறோம்...

      நீக்கு
  6. அடடா !! கடவுளைப் பார்த்தப்ப்ரம் கூட சரியான வாய்ப்பை நழுவ விட்டுடீகளே !!
    எங்கிட்ட மாட்டி இருந்தார் அப்படின்னா
    இரண்டு ஆசை மட்டும் சொல்வேன்ல்
    முதல் ஆசை. நீங்க ஒரு வலைபதிவு துவங்கணும்.
    தமிழ் மொழி லே .
    ஆளாளுக்கு பின்னூட்டம் போடுவாக . என்னையும் சேர்த்துத் தான்.
    பொறுமையா எல்லாத்துக்கும் பதில் போடனும். சும்மா நன்றின்னு சொல்லிட்டு ஓடிடக்கூடாது.

    இரண்டாவது அடுத்த பதிவர் மா நாட்டுக்கு வந்து, ஒரு மணி நேரம், பதிவர கேள்விக்கெல்லாம் பதில் சொல்லணும்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா...
      ஹா... ஹா... ரொம்ப நல்ல ஆசை...
      எனக்குத் தோணாமல் போச்சு பாருங்க...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  7. என்னங்க சகோ, உங்க ஆசைகளை வட்டம், மாவட்டம்ன்னு ரகம் வாரியாய் பிரிச்சிருக்கீங்க!!??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அக்கா...
      ஆமா... ஆசையின்னு சொல்றோம்... அப்படியே எல்லாத்தையும் பிரிச்சிக் கேட்கலாமேன்னுதான்...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  8. முத்தான பத்தும்
    நல்ல சிந்தனைக்கே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கவிஞரே..
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  9. அண்ணா! உங்கள் எழுத்து ஒரு வித்யாசமான எழுத்து. இயல்பாய், எளிமையாய், டச்சிங்கா, அதேநேரம் கொஞ்சம் ஹுமர்!! அட்டகாசம் அண்ணா! ஆசைகள் நிறைவேறட்டும். அட்லீஸ்ட் அந்த கௌன்சிலருக்கு மனசுவந்து அண்ணி போகிற ரோடு சரியாகட்டும்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தங்கை...
      எனது எழுத்தைப் பற்றிச் சொன்னமைக்கு நன்றி.
      நானும் அப்படித்தான் நினைக்கிறேன்... இப்ப எங்க வீட்டுக்கு முன்னால எல்லாம் வீடு இருக்கு... பின்னாலையும் சைடுலயும் இல்லை.... மழை நீரில் மூன்று பக்கம் தண்ணீர் ஒரு பக்கம் நிலப்பரப்பாய்... தீபகற்ப்பமாய் இருக்கிறதாம்... ராஜராஜேஸ்வரிக்கு (சொந்தக்கார கவுன்சிலர்) மனசு வரணும்... அடுத்த வருட மழைக்குள்ளாவது ரோடு போட்டா உங்க அண்ணியோட வண்டி ஸ்பீடாப் போகும்... இப்பவே அப்படித்தான்...

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  10. தொடர்பதிவு - பதிவுலகில் நாம் ஆரம்பித்த நாட்களை தான் ஞாபகப்படுத்தி செல்கிறது. எத்தனை தொடர்பதிவுகள் எத்தனை போட்டிகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயந்த்////
      ம்... அப்போது பதிவுலகம் ரொம்ப பரபரப்பா இருந்ததுல்ல...
      ரொம்ப நாளாச்சு.. உங்களைப் பார்த்து... மீண்டும் எழுதுங்க...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  11. வணக்கம் நண்பரே நேற்று தாங்கள் அழைப்பேசியில் எனது வரிசை எண் எத்தனை ? என்று கேட்ட பிறகு நானும் இரவு 12.00 மணிவரை டாஷ்போர்டை திறந்து... திறந்து... திறந்து.. திறந்து... பார்த்துக்கொண்டு இருந்தேன் சாவியே தேய்ந்து விட்டது பிறகு இனி தூங்க வேண்டுமே காரணம் இந்த நாட்டில் காலையில் வேலைக்கு போய் ஆக வேண்டுமாமே..
    இன்று இல்லை போல என்று நினைத்து விட்டு தூங்கி விட்டேன் காலையில் டேஷ்போர்டில் நிஷா அவர்களின் பதிவு வந்து கிடந்தது அதைப்போய் படித்தால் தங்களது அழைப்பின் காரணமாக அவர் எழுதியது தெரிய வந்தது அந்த இணைப்பின் வழியே வந்து பார்த்தால் நீங்கள் நேற்று இரவு 10.19 க்கே பதிவைப் போட்டு விட்டீர்கள் ஆகவே எனது கருத்துரை தாமதம்.

    நல்ல பொதுநலமும், சுயநலமும் கலந்த ஆசைகள்தான் நிறைவேறட்டும் என்பதே எமது ஆசை

    ஏதோ நீங்களும், அன்பின் ஜி துரை செல்வராஜூ அவர்களும் அன்று அபுதாபி மதினா ஸையித்தில் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது நான் கேட்டுக்கொண்டே உட்கார்ந்து இருந்தேனே அதைப் போலவே இருந்தது எல்லாம் சரி கடைசியில் வந்தவர் கடவுள் இல்லையா ? போகும் போது வேலு பிரபாகரன் மாதிரி நான்தான் கடவுள் என்று மறைந்து விட்டாரே...

    இப்படி அவரையே டாவடிச்சா... எனது நகச்சுத்தி விரலைச்சுத்திதான் பரவுமே தவிற குணமாகாது போலயே... நீங்களும் சரி நீங்க சிபாரிசு செய்த நிஷா அவர்களும் சரி அவரைப் போட்டு டாவடிச்சு என்னைப் பழிவாங்கி பலி கொடுத்துவீங்களோனு பயமாத்தான் இருக்கு...

    ம்..... பார்ப்போம் நல்லபடியா குணமான திருப்பதி ஏழுமலையானுக்கு ஏழு கிலோவுல விரலு செய்து உண்டியல் போடுறதா நேர்த்திக்கடன் வைக்கிறேன் வேறவழி எனக்கு வேணும்... எனக்கு வேணும்.... என் விரல் போச்சு.

    அருமை நண்பரே எனது வார்த்தைக்கு மதிப்பளித்து பதிவிட்டமைக்கு நன்றி
    தமிழ் மணம் 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா....
      ரொம்ப நீளமான கருத்து...
      சமைக்காமல் கடையில் சாப்பிடுவோம் என்று போனால் நண்பர் ஒருவர் சாப்பாடு, கூட்டு, பொரியல், புளிக்குழம்பு என எல்லாம் கொண்டு வாறேன் கீழே வெயிட் பண்ணுங்கன்னு சொன்னார்.

      பின்னர் அவர் வந்ததும் கொஞ்சம் சாமான்கள் வாங்கிக்கொண்டு வந்து சேர்ந்தோம். சாப்பிட்டு விட்டு பதிவை போடலாம் என்று பிழை சரி பார்த்தேன்.

      ஆரம்பத்தில் பத்து பேரையெல்லாம் தேர்ந்தெடுக்கலை... எல்லாரும் எழுதுங்கன்னு சொல்லியிருந்தேன்... பின்னர் தாங்கள் திட்டுவீர்களே என்று தேடித்தேடி பிடித்தேன்... பெரும்பாலானவர்களை பலர் சொல்லிவிட்டார்கள்... சிலரோ எழுதுவார்களா மாட்டார்களா என்ற சிந்தனை... அதில் தேடி முத்துக்களை எடுத்ததில் கால தாமதம்.

      நல்லாக் கவனிங்க... நான் அவரை டாவடித்தாலும் அவர் என்ன சொல்றார்... "நான் கடவுள்" அப்படின்னுதானே... உங்க நகச்சுத்தி பூரண குணமடையும் அண்ணா....

      நீண்ட கருத்துக்கு நன்றி அண்ணா.

      நீக்கு
    2. நான் சும்மா நகைச்சுவைக்காகத்தான் எழுதினேன் கில்லர்ஜி சார். மன்னிக்கவும். ஸாரி குமார்.

      நீக்கு
    3. அக்கா...
      எதுக்கு மன்னிப்பு... ஸாரியெல்லாம் கேட்டுக்கிட்டு...
      அவரும் ஜாலிக்காகத்தான் சொல்லியிருக்கார்.
      கில்லர்ஜி அண்ணா கோபமெல்லம் படுவதில்லை...

      நீக்கு
  12. நல்ல நல்ல ஆசைகள் குமார். அனைத்தும் நிறைவேறட்டும்......

    என்னையும் எழுதச் சொல்லி இருக்கீங்க.... விரைவில் எழுத முயற்சிக்கிறேன்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா...
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
      கண்டிப்பாக எழுதுங்கள்.. வாசிக்க காத்திருக்கிறோம்...

      நீக்கு
  13. சிறப்பான ஆசைகள்! நிறைவேறட்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோதரா...
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  14. கனவுகள் நனவாகட்டும் நண்பரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா...
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  15. வணக்கம்

    வித்தியாசமான ஆசைகள்... எல்லாம் நனவாக அமையும் பதிவுலகம் ஒரு உச்சாகமாக உள்ளது.. த.ம 6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  16. வீட்டில் கிளம்பி, தெருவில் இறங்கி, மாவட்டத்தில் நடந்து, நாட்டை வலம்வந்த உங்கள் ஆசைகள் எதார்த்தமும் சத்தியமும் நிரம்பியவை குமார். (உங்கள் நூல் வெளியீடு தாமதத்துக்கு நானும் ஒரு காரணமாகிவிட்டேனோ என்னும் உறுத்தல் வந்துவிட்டது) நிறைவேற அந்தக் கடவுள் அருள்பாலிக்க மாட்டார் நாம்தான் இந்தக் கயிற்றைக் கட்டி அந்த மலையை இழுக்க வேண்டும். இழுப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா...
      தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
      நான்தான் முதல் காரணம்... தாங்கள் அல்ல... உங்களின் வேலைப்பளூ எனக்குத் தெரியும் ஐயா... நான் தீவிரமாக இறங்கவில்லை... அவ்வளவே...
      விரைவில் இழுப்போம் ஐயா...

      நீக்கு
  17. உங்கள் ஆசைகள் நிறைவேற நல்வாழ்த்துகள்!

    புத்தகம் எப்ப ரிலீஸ்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க முஹம்மது...
      தங்கள் வாழ்த்திற்கும் வருகைக்கும் நன்றி.
      புத்தகம்... விரைவில் கொண்டு வருவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது...

      நீக்கு
  18. ஆசைகள் அத்தனையையும் நிறைவேற்றுவேன் நான் கடவுளாக இருந்தால் ...ஹூம்..என்னதம்பி செய்வது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அக்கா...
      ஹா.. ஹா....
      எங்க கவுன்சிலர் முதல் ஆசையை நிறைவேற்றினால் போதும் என்றிருக்கிறது இப்போது... தீபகற்பத்துக்குள் எங்க வீடு... மூன்று பக்கமும் தண்ணீர்... தண்ணீர்... தண்ணீர்... ரோடு வசதியில்லாமல் ரொம்ப சிரமம்...

      நீக்கு
  19. அன்பின் குமார், எனது பக்கத்திலும் இன்று கடவுளைக் கண்டேன் பதிவு.... முடிந்தால் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா...
      பார்த்துவிட்டேன்... ஆசைகள் அருமை...

      நீக்கு
  20. அண்ணே ஏன்னே என்ன கைய புடிச்சி இழுத்தீங்க ....

    யாருகிட்ட கேட்கறீங்க கடவுள்கிட்ட தானே கேட்கறீங்க இதோ உள்ள தான் இருக்கார் கேட்டுச் சொல்லிடுறேன் ஆனா ஒன்னு கொஞ்சம் சமயம் ஆகும் மனம்விட்டு பேசனும் இல்லையா ... ஆர அமர வந்து உட்காரட்டும் கேட்டுடுறேன் இப்ப தண்ணிக்கு வழி தேடிட்டு போயிருக்கார் வரட்டும்ணே ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தினேஷ்...
      யார் கையைப் புடிச்சி இழுத்தா...
      ஹா...ஹா... விரைவில் எழுதுங்க... ஆவலாய்
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      நீக்கு
  21. உங்க ஆசைகள் எல்லாம் நிறைவேறட்டும்...ஆனா உங்ககிட்ட வந்தவரே கடவுள்கிட்ட சொல்லறேன்னு சொல்லிட்டுப் போயிட்டாரே!! டுப்பா....இல்ல வேற்று கிரக வாசியா இந்தியாவைப் போல/பூமியைப் போல அவங்க ஊரையும் மாத்தணும்னு குறிப்பெடுத்துட்டு எஸ்ஸாகிட்டாரா.....சரி என்னவோ...கில்லர்ஜி எல்லோரது ஆசைக்ளையும் எடுத்துக்கொண்டு இந்தியாவை வல்லரசாக்கிட ஓட்டு கேட்டுக் கொண்டிருக்கின்றார்....ஹஹஹ்

    இடையே நகைச்சுவை விரவிட....நல்லாருந்துச்சு குமார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துளசி சார்...
      அவருதான் நாந்தான் கடவுள்ன்னு சொன்னாலும் ஆரம்பிச்சவரு நோட்டோட இருக்கதால அங்க பொயிட்டாரு.... காந்தி போட்ட நோட்டுன்னு நினைச்சிறாதீங்க.. இது ஒரு பக்க அன் ரூல்ட் நோட்டு.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      நீக்கு
  22. என்ன நண்பரே, எல்லா ஆசைகளும் வெளிப்படையான ஆசைகளாகவே உள்ளன! இரகசியமான சிலவற்றை எழுதினால் அல்லவா சுவாரஸ்யமாக இருக்கும்? எனவே, இலவட்டங்களுக்குப் பிடித்தமானதாக இன்னொரு பத்து ஆசைகளைப் பட்டியல் போடுங்களேன். - இராய செல்லப்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா...
      ஆஹா.. இப்படியும் ஆசைகளா,,,?நிறைய் இருக்கே ஐயா... போட்டுத் தாக்கிருவோமா..?

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      நீக்கு
  23. விரைவில் எழுத முயற்சிக்கிறேன் நன்றி

    பதிலளிநீக்கு
  24. அம்மாடியோவ் மூச்சுப் புடிச்சி எல்லா வற்றையும் படித்து முடித்து விட்டேன் ம்கூகூ மீண்டும் கண்ணைக் கட்டுதே நீங்கள் கடவுளிடம் வேண்டிய அனைத்தும் அருமையாக உள்ளது அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் ஒன்றைத் தவிர அது என்னவென்று இறுதியில் சொல்கிறேன் அது வரை

    நீங்கள் கடவுளிடம் வைக்கும் விண்ணப்பம் அனைத்திலும் அரசியல் என்று வரும் போது கடவுள் மறுப்பது சுவாரசியமாக உள்ளது அவற்றைப் படிக்கும் போது கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரஜனி காந்த் சொன்ன ஒரு டயலாக் அடுத்த வருடம் அம்மா ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட தமிழ் நாட்டைக் காப்பாற்ற முடியாதுன்னு ஹா ஹா அது இன்று உங்கள் பதிவைப் படிக்கும் போது நினைவுக்கு வந்தது மட்டுமில்லை நிஜம் என்றும் புரியுது
    ஹா ஹா கடவுள்தான் கஸ்டம் என்று சொல்லி விட்டாரே..!

    மற்றவைகளைப் கேட்டுக்கொண்டிருந்த கடவுள் கிளம்பும் போது சொன்னது சரிப்பா கிளம்புறேன்... உன் ஆசைகள் எல்லாம் சீக்கிரம் நிறைவேற இறைவனைப் பிரார்த்திக்கிறேன் அவர் சொன்னதும்
    அப்போ நீ யாருய்யா என்று கேட்டதும் நான் கடவுள் எனறு சொன்னதும் சூப்பர் உண்மையில் சிரித்தேன் ரொம்ப அருமையாக இருந்தது அண்ணா

    முக்கியமான விடயத்திற்கு வருகிறேன் இந்த முறை கடவுளைப் பார்த்து நம்ம ஆசையைச் சொல்லணுமாம். என்னங்க ஆசையிருக்கு... முதல்ல இந்த ஊரில் இருந்து கிளம்பி பொண்டாட்டி, பிள்ளைகளோட சந்தோஷமாக இருக்கணும்ங்கிற பெரிய ஆசைதான் ரொம்ப நாளா ஓடுது. ஆனா கடவுள் கண்டுக்கவே இல்லை எப்படி கண்டுப்பாரு ஊருக்கு போனால் அவருக்கிட்டதானே வேண்டினிங்க முதல்ல இந்த ஊரை விட்டு வெளி நாட்டுக்கு போகனும்னு

    ஒருவருக்கு ஒரு வேண்டுதல்தான் வெளி நாட்டுக்கு போகனும் பணம் அதிகமாக சம்பாதிக்கனும் என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டுதானே இங்க வந்திங்க அப்றம் என்ன? மீண்டும் கடவுளை நொந்துக்கிறிங்க இது அநியாயம் அண்ணா உங்க மனசாட்சியிடம் கேட்டுப் பாருங்க அதுவே பதில் சொல்லும் ஹா ஹா
    நான் நகைச்சுவையாக பதில் சொல்லி இருக்கிறேன் காரணம் நானும் கடவுளிடம் இதையே வேண்டியவனாக உள்ளேன்

    உங்கள் கடவுளைக் கண்டேன் அருமை
    நன்றியுடன் நண்பன் MUSAMMIL

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான கருத்து... அடிச்சி ஆடிட்டீங்க...
      உங்க கேள்விக்கான பதிலை சேனையில் சொல்லியிருக்கேன்...
      எனக்கு வந்த கருத்துலயே ரொம்பப் பெரிசு இதுதான்னு நினைக்கிறேன்...
      நன்றி.

      நீக்கு
  25. ஆஹா! ஆஹா!

    குமாரோட முழுப்பதிவின் விளக்கமே இப்பத்தான் முழுமையாக எனக்கு புரியிது. கடவுளே கடவுளிடம் வேண்டும் நிலையில் தான் நாம் இருக்கோம் எனும் உண்மையை நச்சுன்னு போட்டுடைத்திருக்கார்னால் அதை அத்தனை நுணுக்கமாக படித்து பின்னூட்டம் இட்ட எங்க வீட்டு தங்கத்தும்பிக்கு பெரீய்ய்ய்ய்ய்ய்ய்யா சல்யூட்.

    சூப்பரா அசத்தலா இருக்கு கண்ணா உங்க பின்னூட்டம்.. நல்ல பிள்ளை மாதிரி இந்த பின்னூட்டத்தினை குமார் பதிவில் மனசு தளத்திலும் செண்ட் செய்தால் அவர் சந்தோஷப்படுவார்ல.. ரெம்ப ரெம்ப கிரேட்பா நீங்க.. ஒரு எழுத்தாளருக்கு இதை விட என்ன வேண்டும்.

    ரெம்ப ரெம்ப நன்றிப்பா! அதானே நானும் தான் கேட்கின்றேன் மனைவி பிள்ளையோட இருக்கணும் என கேட்க முன்னாடி வெளி நாடு போய் வேலை செய்யணும் காசு வேண்டும் என கேட்டது யாராம்? அப்படி கடவுளிடம் கேட்கும் போதே என் மனைவி பிள்ளையோட போய் காசு சம்பாதிக்கணும் என கேட்கலையாம் என என் வீட்டில் என் கூட இருக்கும் கடவுள் சொல்லிட்டார். தனக்கு பணம் சம்பாதிக்க ஒரு வேலை வேண்டும் என மட்டும் தான் கேட்டாராம் தும்பியோவ். என்கிட்ட ரகசியமாக கடவுள் சொல்லிட்டார்.

    குமார் இப்ப பேச்சு மாத்தக்கூடாது. ஒரு தடவை கேட்டதை தான் கடவுள் தருவாராம். ஹாஹா..!

    அப்புறம் பாவம் ரெம்ப கேட்கிறாரேன்னு அவரை ஊருக்கு அனுப்பிட்டால் போயிட்டு ஆறு மாதத்தில் கடவுளே என்னை வெளி நாட்டுக்கு அனுப்பு என கேட்க மாட்டேன் என அக்ரிமெண்டில் கையெழுத்து போட்டு நிஷாவிடம் கொடுத்தால் கடவுள் குமாரின் வேண்டுதலை மறு பரிசீலனை செய்ய நிஷா கேட்டுப்பார்க்குமாம். ஆமாம் நாங்க கூடி பேசி முடிவெடுப்ப்போமாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஒரே பரிசீலனை போதும்...
      மறு பரிசீலனையே வேண்டாம்...
      ஊருக்குப் போன அப்புறம் மறுபடியும் இங்க வா...வான்னாலும் வரமாட்டேன்...
      நன்றி அக்கா கருத்துக்கு..

      நீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி