வலைப்பூக்களில் 70 வயதுக்கு மேல் நிறைய இளைஞர்கள் வலம் வருகிறார்கள். அப்படிப்பட்ட இளைஞரில் ஒருவர்தான், எல்லாரும் G.M.B. என்று அன்போடு அழைக்கப்படும் மதிப்பிற்குரிய ஐயா திரு. G.M. பாலசுப்ரமணியம் அவர்கள். தனது இத்தனை வருடகால வாழ்க்கை அனுபவத்தில் கண்டு, கேட்டு நினைவில் நிறுத்திய செய்திகளை வைத்து அழகான சிறுகதைத் தொகுப்பைக் கொடுத்துள்ளார். எழுத்துக்கு வயது ஒரு தடை அல்ல என்பதை அவரின் சிறுகதைகள் அழகாய்ப் பிரதிபலிக்கின்றன.
இந்தப் புத்தகம் என் கைக்குக் கிடைத்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். அண்ணன் கில்லர்ஜி அவர்கள் மதுரை வலைப்பதிவர் மாநாட்டுக்குச் சென்று வந்து சில நாட்களில் கரந்தை ஜெயக்குமார் ஐயா அவர்களின் கரந்தை மாமனிதர்கள் என்ற நூலோடு ஐயாவின் தொகுப்பையும் என்னிடம் கொடுத்தார். கரந்தை மாமனிதர்களை வாசித்து மனதில் பட்டதைச் சொன்ன எனக்கு இதை வாசிக்க சரியான சமயம் அமையவில்லை.
காரணம்... எங்களைப் போன்ற சாதாரணமானவர்களின் கதைகள் என்றால் வாசித்துப் போவது சுலபமாக இருக்கும். ஆனால் இதை ஆழ்ந்து வேறு எதுவும் இடையூறு கொடுக்காத நிலையில் வாசிக்க வேண்டும் என்பதை முதல் கதையின் மூன்று பக்கத்தைப் படிக்கும் போதே புரிந்து கொண்டேன். அந்தச் சூழல் அதற்கு மேல் என்னைத் தொடர விடவில்லை. அனுபவித்து வாசிக்க வேண்டிய கதைகள் இவை... சும்மா வாசித்துச் சென்றால் அந்தக் கதை பேசும் வாழ்வியல் கதை நமக்கு புரியாது என்பதை அறிந்ததால் அப்படியே வைத்து விட்டேன்.
நேற்று அலுவலகத்தில் பணி இல்லை.... எட்டு மணி நேரம் சும்மா இருப்பதா? என்ன செய்யலாம் என பேக்கை எடுத்தால் அபுதாபி போகும் போது வாசிக்கலாம் என எடுத்து வைத்து வாசிக்காமலே வைத்திருந்த வாழ்வின் விளிம்பில் என் கண்ணில் பட பொறுமையாக வாசிக்க ஆரம்பித்தேன். முடிவில் ஐயாவைப் பற்றி பெருமைப்பட வைத்தது. இவைகள் சாதாரண சிறுகதை போல் பேசிச் செல்லவில்லை... மாறாக ஒற்றயடிப் பாதையில் வளைந்து நெளிந்து போவது போல் பயணித்து நம் கண் முன்னே விருட்சமாய் காட்சியைத் தாங்கி நிற்கின்றன.
ஐயாவின் கதைகளைப் பற்றிச் சொல்லி அதை விமர்சிக்கும் அளவுக்கு எனக்கு வயசும் இல்லை... இந்த அளவுக்கு எழுதும் திறமையும் இல்லை.... வளைந்த வெள்ளை மீசைக்குள் சிரிக்கும் அவரின் சிந்தையில் விளைந்த வாழ்வின் விளம்பில் என்ன சொல்லியிருக்கிறதோ அதை இங்கு அப்படியே பார்ப்போம்....
பின்னட்டையில் ஐயாவைப் பற்றி இந்த நூலை வெளியிட்ட தேவகோட்டை மண்ணின் மைந்தர் திரு. தமிழ்வாணன் அவர்களின் மணிமேகலைப் பிரசுரம் "தன்னுடைய அறுபதாவது வயதைக் கடந்தபின் கண்ணாடி ஓவியங்களும் தஞ்சாவூர் ஓவியங்களும் வரையக் கற்றுக் கொண்டவர், அதில் தான் ஒரு ஏகலைவன் என்று பெருமைப்படுகிறார்" என்று சொல்லியிருக்கிறது. இந்த வயதில் இவ்வளவு சிறப்பாக எழுதும் ஐயா ஓவியத்தில் ஏகலைவன் என்றால் எழுத்தில் வள்ளுவன் என்றே சொல்லலாம்.
அணிந்துரையில் திரு. தஞ்சாவூர் கவிராயர் சொல்லியிருப்பதைப் பாருங்கள். "இக்கதைகள் எந்தப் பத்திரிக்கையிலும் பிரசுரமானவை அல்ல... ஆகக்கூடியவையும் அல்ல. பத்திரிக்கை கதைக்கான இலக்கணமோ உத்தியோ இன்றி எழுதப்பட்ட கதைகள் இவை." ஆம் இவர் சொல்லியிருப்பது உண்மைதான். பெரும்பாலான கதைகள் வாழ்வியலைப் பேசுவதால் கதையா கட்டுரையா என்றே எண்ணத் தோன்றுகிறது. மிகச் சிறப்பாக ஒவ்வொரு கருவும் எடுத்தாளப்பட்டிருக்கிறது.
மேலும் அவர், "ஜி.எம்.பி. எழுத எடுத்துக் கொண்டிருக்கும் விஷயங்களில் நினைப்பதைச் சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால் அவை சிறுகதை என்ற வடிவத்துக்குள் அடங்க மறுக்கின்றன. ஏன் அடங்க வேண்டும்? பத்திரிக்கைக் கதைகளைப் படித்துப் படித்து மழுங்கி விட்ட வாசக ரசனைக்கு இக்கதைகள் உரியவை அல்ல. வாழ்க்கையின் ரகசியங்களை அதன் ஆழ அகல பரிமாணங்களைக் கூர்ந்து பார்த்து திகைத்து நிற்கும் மனிதனுடன் இக்கதைகள் பேசுகின்றன." என்கிறார். முற்றிலும் உண்மையே. சிறுகதை என்ற நினைப்போடு வாசிப்பவருக்கு இவை முற்றிலும் வித்தியாசமாகத் தெரியும்... வாழ்வியல் கதையை கட்டுரை போல் அழகாய் சொல்லியிருக்காரே என வாசிப்பவருக்கு நிச்சயமாக இது வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை.
வாழ்த்துரையில் எழுத்தாளர் ஹரணி அவர்கள், "ஒவ்வொரு கதையும் வாழ்வின் ஒவ்வொரு சுவையை உணர்த்துபவை. சில கதைகள் இயல்பாய் இருக்கின்றன. சில கதைகள் அதிர்ச்சியூட்டுகின்றன. சில கதைகள் நம்மை கசிய வைக்கின்றன. சில கதைகள் வலியேற்படுத்துகின்றன" என்று குறிப்பிடுகிறார். அனுபவித்துப் படிக்கும் போது இவர் கூறிய அத்தனை சுவைகளையும் அறியலாம்.
மொத்தம் 16 கதைகள், ஊரில் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ் என்று வாழ்த்துவார்களே அப்படி முத்தான பெருவாழ்வை அளிக்கும் அழகிய கதைகள் பதினாறை வாழ்வின் விளிம்பில் என்ற தலைப்பின் கீழ் கொடுத்திருக்கிறார்கள். இனி கதைகள் பேசும் வாழ்க்கையில் இருந்து சில வரிகள் நீங்க வாசிக்க.
வாழ்வின் விளிம்பில்... புத்தகத்தின் தலைப்புத்தான் முதல் கதை. இது சாவைப் பற்றி பேசும் கதை... இதை படிக்கும் போது இதற்குள் வரும் கதைகள் எதுவுமே சிறுகதை என்னும் குறுகிய வட்டத்துக்குள் வராது என்பதை அறிந்து கொள்ள முடியும். அதில் உங்கள் பார்வைக்காக சில வரிகள்...
"சாக பயமாக இருக்கிறதா?"
"பயமா... நிச்சயமாகத் தெரியவில்லை. இறந்து போனால் மறுபடியும் என் மனைவி மக்கள் உற்றார் சுற்றார் இவர்களை எல்லாம் பார்க்க முடியாதே. அவர்கள் அன்பினைக் கொடுத்து அன்பினைப் பெற முடியாதே.... அட... நீ இருந்தால் அல்லவா கொடுக்கவோ பெறவோ முடியும்... நீயே இல்லாவிட்டால் என்னாகும்... இருந்து என்ன சாதிக்கப் போகிறாய்...?" தொடர்ந்து வாசிக்கும் போது அவன் இறப்பைக் கண்டு பயந்தானா இல்லை இறந்தானா என்பதை அறியலாம்.
"கண்ணா, படித்தவன் நீ. குழந்தை பெறுவதோ முடியாமல் போவதோ, உடல் சார்ந்த விஷயங்கள். இன்று மருத்துவம் வளர்ந்திருக்கும் நிலைக்கு, காரணங்களை எளிதில் தெரிந்து கொள்ளலாம். அம்மாஜியும் அப்பாஜியும் ஏதுவும் செய்ய முடியாது." என குழந்தைப் வேண்டி போலிச் சாமிகளின் அடியொற்றிப் போகும் மூடர்களைப் பற்றி கேள்விகளே பதிலாய் என்னும் கதை பேசிக் கொண்டு போகிறது.
ஏறி வந்த ஏணியோ கஷ்டப்பட்டு குடும்பத்துக்காக உழைத்த மனிதனைப் பற்றி நினைக்காத மனைவி, மக்களைப் பற்றி பேசுகிறது. அதில் "ஒரு பஸ்ஸில் ஏற வேண்டியது. அது போகாத இடத்துக்கு டிக்கெட் கேட்பது, கண்டக்டரிடம் திட்டு வாங்கி அடுத்த நிறுத்தத்தில் இறங்கி விடுவது, இப்படியே இவ்வளவு தூரம் வந்து விட்டதாகச் சொல்லி சிரித்தான். எனக்குப் பாவமாக இருந்தது" என இல்லாமையைப் பேசுகிறது.
மனசாட்சியிலோ, "மாலதி, விரும்பியோ விரும்பாமலோ நாம் மணந்து இதுவரை சேர்ந்தும் வாழ்ந்தாகிவிட்டது. உனக்கு என்மேல் வெறுப்பு ஏற்பட்டுப் பலனில்லை. ஒரு சமயம் நாம் விவாகரத்து செய்து கொள்ளலாம். இந்த சமுதாயத்தில் நாம் விரும்பினால் பிறகு மறுமணம் செய்து வாழலாம்." என ஆண்மையற்ற கணவன் சொல்லி, அதன் பின்னான வாழ்வில் அவர்கள் இழப்பது எதை என்பதை ஆணித்தரமாகச் சொல்கிறது.
அனுபவி ராஜா அனுபவியோ வேறு மாதிரி வாழ்க்கையை கண் முன் காட்டுகிறது. "சுந்தா, கஷ்டத்திலும் இல்லாமையிலும் இருந்தே பழகிவிட்ட எனக்கு, நான் சம்பாதிக்கும் காசை செலவு பண்ண மனசு வரமாட்டேங்குது. ஐயோ... எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதிச்சது, இதை செலவு செய்யலாமா, நமக்குத் தேவைதான் என்ன... உடுக்க ஏதோ துணியும் உயிர் வாழ உணவும் போதாதா..?" என்கிறார் சிறுவயதில் அப்படி வாழணும் இப்படி வாழணும் என்று ஆசைப்பட்ட சதாசிவம்.
வாழ்ந்து கெட்ட சித்தப்பாவின் குடும்பத்தைப் பற்றி பேசுகிறது வாழ்க்கை ஒரு சக்கரம், அதில் கதை சொல்லிப் போகும்போது,
"யார் அந்தப் பையன்? தெரிஞ்சவனா?"
"என் சித்தப்பா சேதுமாதவன் பிள்ளை அவன், 'ஆஹா... ஓஹோ'ன்னு இருந்தவர் அவர். இப்ப என்ன்டான்னா பிள்ளைகள் பீச்சில் சுண்டல் விக்கிறார்கள்." என விரிகிறது.
"புடவை கொடுப்பவர் என் தங்கையை அவர் வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போவாரா?"
"ஏஏஏய்ய்ய், அதெல்லாம் பதுவில்லை (வழக்கமில்லை). அவர் நம் வீட்டில் சம்பந்தம் வைப்பதே பெருமை அல்லவா." எனப் பணம் படைத்தவர்களின் உடல் பசிக்கு ஏழைகள் உணவாவதைச் சொல்லி அதற்கான முடிவையும் கண் முன்னே நிறுத்துகிறது இப்படியும் ஒரு கதை.
கணவன் மனைவி உறவில் திருப்தி கிடைக்காத மனைவி, கணவன் அவளின் நச்சரிப்பால் ஊரை விட்டே ஓடிவிட அண்ணன் நண்பனின் மூலம் வடிகால் தேடுகிறாள். அந்த வாழ்க்கையும் நீடிக்கவில்லை. இதற்கு காரணம் என்ன... எங்கே தவறு நடந்தது என நம்மைக் கேள்வி கேட்கிறது எங்கே ஒரு தவறு என்ற சிறுகதை.
இப்படி ஒவ்வொரு கதையைப் பற்றியும் பேசிக்கொண்டே போகலாம். அப்புறம் பதிவின் நீளம் பல பக்கங்களைத் தாண்டிவிடும் என்பதால் மேலே சொன்ன கதைகள் பேசியதைப் போலத்தான் 'விபரீத உறவுகள்', 'சௌத்வி க சாந்த் ஹோ', 'லட்சுமி கல்யாண வைபோகம்', 'அரண்டவன் கண்ணுக்கு', 'பார்வையும் மௌனமும்', 'விளிம்புகளில் தொடரும் கதை', 'கண்டவனெல்லாம்...', 'நதி மூலம் ரிஷி மூலம்' என்ற மற்ற கதைகளும் பேசிச் செல்கின்றன.
"உள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளால் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்" என இந்தத் தொகுப்பின் ஆசிரியர் ஐயா. திரு. G.M. பாலசுப்ரமணியம் அவர்கள் தனது என்னுரையில் கூறியிருக்கிறார். இது முற்றிலும் உண்மையே என்பதை ஒரு கருவை... தன் உள்ளத்துக்குள் உதித்த வார்த்தைகளால் சிறுகச் சிறுக உயிர் கொடுக்கும் போது ஒரு எழுத்தாளன் அதன் ஜூவாலையை உணர முடியும்.
சகோதரர் ரூபன் அவர்களின் சிறுகதைப் போட்டிக்காக ஒரு கதை எழுதிய போது அவரக்ள் சொன்ன 350 வார்த்தைகளையும் மீறி 800 வார்த்தைகளுக்கு மேல் செல்ல, அதை அங்கும் இங்கும் குறைத்து 400 வார்த்தையாக்கி வாசித்த போது அதன் முழுமை முற்றிலும் இல்லை... இங்கே ஐயா சொன்னது போல் என் கதையில் நான் கொடுத்த உயிரை அங்கும் இங்கும் எடுத்ததால் அதில் உணர்வுகள் இன்றி தவித்தது. அதை எப்படி யோசித்தேனோ அப்படியே எழுதலாம் என வைத்து விட்டு மற்றொரு கருவை உருவாக்கி முடிந்தளவு ஜொலிக்க வைத்து அனுப்பியிருக்கிறேன்.
ஐயாவின் இந்தத் தொகுப்பை யாருக்கேனும் புத்தகம் பரிசளிக்க நினைக்கும் பட்சத்தில் நினைவில் கொள்ளலாம். அனைவரும் ஆழ்ந்து வாசிக்க வேண்டிய மிகச் சிறப்பானதொரு சிறுகதைத் தொகுப்பு. ஐயாவின் சிறுகதைகள் இன்னும் பல புத்தகங்களாக வேண்டும் என வாழ்த்தி, இந்த வயதிலும் இளைஞனாய் திகழ்ந்து இணையில்லாப் படைப்புக்களை வழங்கும் அவரை வணங்குகிறேன்.
புத்தகம் கிடைக்கும் இடம்:
சிறுகதைகள் : வாழ்வின் விளிம்பில்
ஆசிரியர் : G.M. பாலசுப்ரமணியம்
பதிப்பகம் : மணிமேகலைப் பிரசுரம்
தி.நகர், சென்னை -17.
இணையதளம் : www.tamilvanan.com
மின்னஞ்சல் : manimekalai1@dataone.in
புத்தகத்தின் விலை : 60 ரூபாய் மட்டுமே.
மீண்டும் ஒரு தலைப்பில் அடுத்த வாரம் பேசுவோம்.
-பரிவை' சே.குமார்.
வணக்கம்
பதிலளிநீக்குபடிக்க வேண்டிய புத்தகம் பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்... பகிர்வுக்கு நன்றி.த.ம2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க ரூபன்...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நானும் படித்திருக்கிறேன் நண்பரே....
பதிலளிநீக்குதமிழ் மணம் 3
வாங்க அண்ணா....
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நானும் படித்து விட்டேன்.உண்மையில் அவரது நடை வித்தியாசமானதுதான்.
பதிலளிநீக்குவாங்க முரளிதரன் சார்....
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நானும் படித்து ஒரு பதிவு எழுதியுள்ளேன். தங்களின் வித்தியாசமான மதிப்புரை ஐயாவின் எழுத்திற்குப் பெருமை சேர்க்கிறது. நன்றி.
பதிலளிநீக்குவாங்க ஐயா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அருமையான வாழ்வியல் புத்தகம் என்பதை விட, அனைவரும் அறிய வேண்டிய அனுபவ பொக்கிசம்...
பதிலளிநீக்குவாங்க அண்ணா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாசிக்கும் பட்டியலில் இருக்கின்றது. அருமையான விமர்சனம். கையில் இருப்பவை முடித்ததும் வாங்க வேண்டும்.
பதிலளிநீக்குவாங்க துளசி சார் / கீதா மேடம்...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சிறப்பான விமரிசனம்.படிக்கத்தூண்டுகிறது
பதிலளிநீக்குதம 8
வாங்க ஐயா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
என் சிறுகதைத் தொகுப்பினை நண்பர் கில்லர்ஜி மூலம் பெற்று படித்து விமரிசனம் எழுதியதற்கு நன்றி. பலரும் கருத்துக்கள் எழுதி விட்டார்கள். பலர் படித்துக் கருத்து ஏதும் எழுதாமலேயே இருக்கிறார்கள். நான் தொழில்முறை எழுத்தாளன் அல்ல. என் எழுத்துக்கள் பெரும்பாலும் உளவியல் சம்பந்தப் பட்டவையாக இருக்கும். தற்சமயம் படித்து நகைத்து விட்டுப் போகும் நகைச் சுவை எழுதுவது எனக்கு கை வராத கலை. கூடவே கனமான விஷயங்கள் கொண்ட எழுத்துக்கள் பெரும்பாலோரை ஈர்க்காது என்பதும் தெரியும்.இருந்தாலும் என் எழுத்துக்கள் பரவலாகப் படிக்கப் பட வேண்டும் என்று எண்ணும் மிகச் சாதாரணன் நான். உங்கள் விமரிசனம் அதற்குத் துணையாய் இருக்கும் என்னும் நம்பிக்கையுடன் நன்றி தெரிவிக்கிறேன். நேரம் கிடைக்கும் போது என் பதிவுகளையும் படியுங்கள் எல்லாத் தலைப்புகளிலும் அநேகமாகஎழுதி வருகிறேன். மீண்டும் நன்றி.
பதிலளிநீக்குவாங்க ஐயா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ரொம்ப சந்தோஷம் அய்யா.... வாழ்வியல் உண்மை பேசிய கதைகள் அத்தனையும் அருமை... நானும் தங்கள் தளத்தை வாசித்து வருகிறேன் ஐயா....
படிக்க வேண்டிய புத்தகம்,தங்கள் விமர்சனம் மிக அழகு..புத்தகம் எழுதிய ஐயாவுக்கு வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்குவாங்க சகோதரி...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
vaalthukal.
பதிலளிநீக்கு