ஞாயிறு, 11 ஜனவரி, 2015

மனசு பேசுகிறது : ஒரு கோப்பை மனிதம்

புதாபியில் இருக்கும் தேவகோட்டை கில்லர்ஜி அண்ணன் அவர்கள் மூலமாக THENDRAL வலைப்பூவின் ஆசிரியை கவிதாயினி மு.கீதா (தேவதா தமிழ்) அக்கா அவர்களின் கவிதைத் தொகுப்பான 'ஒரு கோப்பை மனிதம்' வாசிக்க கிடைத்தது. அந்த வாசிப்பனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். இது ஒரு விமர்சனப் பகிர்வு அல்ல. கவிதைகளை விமர்சிக்கும் அளவு நான் பெரிய எழுத்தாளனோ கவிஞனோ அல்ல. என்னைக் கவர்ந்த கவிதைகளைப் பற்றி பகிர்ந்து கொள்ள போகிறேன் அவ்வளவுதான். 

ஒரு கோப்பை மனிதம்... புத்தகத்தின் தலைப்பே கவிதையாய்... ஒரு காபிக் கோப்பையில் சூடான காபியை நிரப்பிக் கொண்டு சன்னலோரமாக வெளியில் இருந்து வீட்டுக்குள் வரும் தென்றலின் சுகானுபவத்தை அனுபவித்தபடி ஒரே மூச்சில் வாசித்து இதன் சுவையை அறியலாம். இந்த அனுபவம் இங்கு கிடைக்கவில்லை என்றாலும் வாசித்த கவிதைகள் சில நேரம் தென்றலையும்... சில நேரம் புயலையும்... அனுபவிக்க வைத்தன என்பதே உண்மை.


"எப்போது ஒரு கலை சமகால நிகழ்வுகளைப் பதிவு செய்கிறதோ அப்போதுதான் அது உண்மையான படைப்பாகிறது" என நந்தலாலா.காம் இணைய இதழ் ஆசிரியர் திரு. வைகறை அவர்கள் தனது மதிப்புரையில் குறிப்பிட்டு இருக்கிறார். கீதா அக்காவின் கவிதைகளைப் படிக்கும் போது அது உண்மைதான் என்று தோன்றுகிறது. பெரும்பாலான கவிதைகள் சமகால நிகழ்வுகளை வலியோடு சொல்லிச் செல்கின்றன.

"மகிழ்ச்சி, பரிதவிப்பு, ஆதங்கம், ஆக்ரோஷம், வேதனை என ரசித்து ருசித்து அறுசுவையுடன் படைத்திருக்கிறார்" என இலங்கையில் பிறந்து கனடாவில் வாழும் வலைப்பதிவரான சகோதரி இனியா அவர்கள் தனது அணிந்துரையில் சொல்லியிருக்கிறார். உண்மைதான் ஒவ்வொரு கவிதையையும் ரசித்து ருசித்துப் படைத்திருக்கிறார். சிலகவிதைகள் மகிழ்ச்சி தாங்கி வந்தால் மற்றவையெல்லாம் பரிதவிப்பு, ஆதங்கம், ஆக்ரோஷம் மற்றும் வேதனை சுமந்து நம்மையும் அதனுள் அமிழ்த்தி கண்களை நனைய வைக்கின்றன.

"இந்தக் கவிதைகளைப் படைத்த உங்களுக்குள் இருவேறு கீதாக்கள் இருக்கிறார்களோ?" என தனது முன்னுரையில் சகோதரி மைதிலி ஐயப்பட்டிருக்கிறார். அதற்குக் காரணமும் இருக்கிறது சில கவிதைகள் தென்றலாய் வரும் போது சாதாரணமாகத் தெரியும் கீதாக்கா, புயலென கவிதைகளை பூக்க விடும் போது எங்கள் சீமையின் வீரமங்கை வேலுநாச்சியாராகவும் தெரிகிறார். அப்படிப் பார்க்கையில் இவருக்குள் இரண்டு விதமான முகங்கள் இருக்கத்தானே செய்கிறது.

"எனை வார்த்த கவிதைகளும் என்னால் வார்க்கப்பட்ட கவிதைகளும் தொகுப்பாய் மலர்ந்துள்ளன" என்று சொல்லும் கீதாக்கா, புதுக்கவிதைகளையும் ஹைக்கூக்களையும் தொகுத்து ஒரு கோப்பை மனிதம் ஆக்கியிருக்கிறார். வாசித்து முடிக்கும் போது நம்முள் ஒரு கோப்பை மனித நேயம் வருகிறதோ இல்லையோ இதயத்தின் ஒரு ஓரத்தில் சிறிதளவு மனிதநேயம் எட்டிப் பார்க்கும் என்பது உண்மை.

பருவத்தின் வாசலில் என்றொரு கவிதை, பட்டாம்பூச்சியாய் பறந்து திரிந்த வெகுளிச் சிறுமி, பூப்பெய்திய பின் வெட்கம் சுமந்து வந்து தனது சிறகுகள் வெட்டப்பட்டதை கண்ணீரோடு கூறியதைச் சொல்கிறது. வாசிக்கும் போது இன்றைய உலகில் விவரம் அறியுமுன்னே பூப்பெய்தி கட்டுப்பாட்டுக்குள் வரும் சிறுமிகளை நினைத்து வருந்த வைத்தது.

தன் கையில் ஒட்டிய பன்றியின் கழிவை சோப்புப் போட்டு அக்கா திரும்பத்திரும்ப கழுவ, ஊரார் கழிவை எல்லாம் அள்ளும் தோட்டிச்சி பாட்டிக்கு யாரம்மா சோப்பு வாங்கிக் கொடுப்பா என்று கேட்கும் தோட்டிச்சி பாட்டி கவிதையில் மனித மலத்தை மனிதரே அள்ளும் அவல நிலையைச் சொல்லியிருக்கிறார்.

அம்மாவை முதியோர் இல்லத்துக்கு அனுப்பி விட்டான். அவளோ தன் மகன் இருந்த கருவறையை அடிக்கடி தடவிப் பார்க்கிறாள் என்று சொல்லும் வருடல் என்னும் ஹைக்கூ பெற்ற வயிறு தவிப்பதை அழகாய் படம் பிடித்துக் காட்டுகிறது.

முதிர்கன்னியின் கனவு கூட அவளுக்கு முழுவதுமாக காணக்கிடைப்பதில்லை என்பதை கானல் நீராய் என்னும் கவிதையும், திருநங்கையாக மாறியவனின் நிலையை மூன்றாம் இனம் என்னும் கவிதையும் சுகாதாரத்துறை அதிகாரியின் இல்லத் திருமண விழாவில் செயற்கை வாழை இலையில் விருந்து வைத்ததை சூழலின் வருத்தம் என்னும் கவிதையும் அழகாய் படம் பிடித்துக் காட்டுகின்றன.

சென்றாயன் பாளையத்தில் சிறுமியை வன்புணர்வு செய்து தூக்கிட்டுச் சென்ற கொடுமையை விவரிக்கும் கதவு இல்லா குடிசையில் தூங்கிய சிறுமியின் கதறலாய் என்னும் கவிதையை வாசிக்கும் போது தில்லி நிகழ்வுக்காக எத்தனை எத்தனையோ போராட்டங்களை நடத்திய நாம் நம் தமிழகத்தில் நடக்கும் இது போன்ற நிகழ்வுகளைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறோமே என்ற வேதனை எழுகிறது.

பெரிய படிப்பு படிக்க போன மகளை ஈவ் டீசிங் கொன்றதா, பாலியல் பலாத்காரம் கொன்றதா என்பது தெரியாமல் கடுதாசி வரக்காணலியே மச்சான் என கணவனிடம் கேட்கும் கிராமத்து மனைவியின் கவிதை வாசிக்கும் போது நம்மையும் அறியாமல் கண்கள் குளமாவதைத் தடுக்க முடியாது. 

எதிரிகளை எதிர்த்து வீர மரணம் அடைந்த மேஜர் முகந்தனின் மகள் போய் வா அப்பா என அவரை இடுகாட்டிற்கு அனுப்பியதை கவிதை ஆக்கியிருக்கிறார். பிஞ்சு மனம் போய் வா அப்பா என்று சொல்வதாய் முடியும் கவிதை மனதைப் பிழிகிறது.

கடனால் விஷம் அருந்தி மறைந்த தோழி, இறுதி மூச்சை விடும்போது என்ன நினைத்தாளோ என விடம் என்னும் கவிதையில் கேட்கிறார். திருமணத்தில் மணமக்களைப் பார்க்காமல் வீடியோ எடுப்பவரின் முதுகைத்தான் பார்க்கும் இன்றைய நிலையை கிராமத்துக்காரியின் பார்வையில் கவிதையாக்கியிருக்கிறார். 

வேப்பம் பூக்களை வலையில் விழுந்த விண்மீண்களாகவும் புங்கைப் பூக்களை பொரியரிசிப் பூக்களாகவும் பார்க்கிறார். மேலும் நிலவுத்தாய் படும் பாட்டை தமிழ்நாட்டுப் பெண்ணோடு ஒப்பிட்டு வியக்கிறார் கவிதாயினி கீதாக்கா.

பால்யங்களின் புதையல்கள் என்னும் கவிதையில் நாம் அனுபவித்து நமது வாரிசுகள் இழந்த பால்ய கால வாழ்க்கையை... பல்லாங்குழி, மரப்பாச்சி என அனைத்தையும் நினைவில் கொண்டு வந்து நிறுத்திச் செல்கிறார்.

இப்படிச் சொல்லிக் கொண்டே போனால் இரண்டு மூன்று பதிவுகள் எழுத வேண்டி வரும். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். இங்கே தித்திப்பான பொங்கலில் கொஞ்சமே எடுத்து சுவைக்கக் கொடுத்துள்ளேன்.  நீங்களும் சுவைத்துப் பாருங்கள். அதன் தித்திப்பை அறிவீர்கள்.

நிறைய ஹைக்கூக்களை எழுதியிக்கிறார். எனக்கு ஹைக்கூக்கள் நிறையப் பிடிக்கும். கல்லூரியில் படிக்கும் போது இரண்டு டைரி நிறைய ஹைக்கூக்களை எழுதியிக்கிறேன். வலைப்பூவில் கூட முதலில் ஆரம்பித்தது ஹைக்கூ கவிதைகளுக்கான கிறுக்கல்கள் என்னும் தளம்தான். எல்லாவற்றையும்  இங்கு எழுத ஆரம்பித்ததும் அந்தத் தளமெல்லாம் அப்படியே இருக்கிறது.

கீதாக்காவின் எழுத்தில் என்னைக் கவர்ந்த ஹைக்கூ...

என்ன வெட்கம்
தேநீருக்கு..?
அவசரமாய் மேலாடை...

எப்படிப்பட்ட பார்வை பாருங்கள்... ரசிக்க வைக்கிறதல்லவா?

இந்த கவிதைத் தொகுப்பை வாசித்த போது நிறைய கவிதைகளை ரசிக்க முடிந்தது. புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து கீழே வைக்கும் போது 'ஏன் புதுக்கவிதைகளையும் ஹைக்கூவையும் ஒரே புத்தகத்தில் கலவையாய் கொடுத்திருக்கிறார்... புதுக்கவிதைகளை ஒரு தொகுப்பாகவும் ஹைக்கூக்களை மற்றொரு தொகுப்பாகவும் கொண்டு வந்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்குமே..' என என் மனதில் தோன்றியது. இது  என் மனசின் கருத்துத்தான்... வாசிப்பவர்களுக்கும் ஆசிரியருக்கும் தவறாகக் கூட தெரியலாம்... இருப்பினும் ஒரு கோப்பை மனிதம் (சு)வாசிக்க வேண்டிய புத்தகம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இந்த நூலை வெளியிட்டிருக்கும் எங்கள் ஆசிரியரின் வழித் தோன்றல் கீதம் பதிப்பகம் சகோதரர் சிங்காரம் ஞானசம்பந்தன் (ஞானசி) அவர்கள் மிக நேர்த்தியாக பதிப்பித்திருக்கிறார்.

கவிதைத் தொகுப்பின் ஆசிரியரான திருமதி. கீதா அக்காவுக்கு வாழ்த்துக்கள். மேலும் இது போல் நிறைய தொகுப்புகள் கொண்டு வரவும் வாழ்த்துக்கள். 

புத்தகத்தின் விலை : 60 ரூபாய் மட்டுமே.
ஆசிரியர்                      : கவிதாயினி மு.கீதா (தேவதா தமிழ்)
கிடைக்குமிடம்         : கீதம் பப்ளிகேஷன்ஸ்
                    3/3, பத்மாவதி அவென்யூ
                   திருமலை நகர் அனெக்ஸ்
                  பெருங்குடி, சென்னை -96
                   www.geethampublications.com
நன்றி. 

மனசு தொடர்ந்து பேசும்...
-'பரிவை' சே.குமார்.

26 கருத்துகள்:

  1. பதிவர் திருவிழாவின்போது இந்தக் தொகுப்பின் சிறப்பை கேட்டேன். இன்னும் படிக்கவில்லை. நல்லமதிப்புரை. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா...
      வணக்கம்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  2. மதுரையில் வெளியீட்டு விழாவின் போதே, நூலினைப் பெற்று படித்துவிட்டேன் நண்பரே
    அருமையான விமர்சனம்
    நன்றி நண்பரே
    தம 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா...
      வணக்கம்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  3. ஆஹா வணக்கம் சகோ ...அருமையான பார்வையில் விமர்சித்துள்ளீர்கள்...முதலில் உங்களுக்கு எனது புத்தகத்தை தந்த கில்லர்ஜி சகோ விற்கு என் மனம்நிறைந்த நன்றி....
    எனக்கே என் நூலை பிடிக்க வைக்கின்றது உங்களின் எழுத்து வன்மை மிக்க நன்றி சகோ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அக்கா
      வணக்கம்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
      முகநூலில் பகிர்ந்தமைக்கும் நன்றி.
      இன்னும் நிறைய புத்தகங்கள் வெளியிட வாழ்த்துக்கள்.

      நீக்கு
  4. த.ம.4 மற்றும் எனது [தேவதா தமிழ்] முகநூலில் பகிர்ந்துள்ளேன் சகோ..நன்றி

    பதிலளிநீக்கு
  5. ரசிக்க வைக்கும் அழகிய ஆழ்ந்த விமர்சனம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா
      வணக்கம்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. வாங்க ஐயா...
      வணக்கம்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  7. இந்த ஆண்டில் புதுக்கோட்டையில் சந்திக்கிறோம்...!

    பதிலளிநீக்கு
  8. வாங்க அண்ணா..
    வணக்கம்.
    கண்டிப்பாக சந்திப்போம் அண்ணா...

    பதிலளிநீக்கு
  9. சிறப்பான மதிப்புரை. மு. கீதா அவர்களுக்கு வாழ்த்துகள். பகிர்ந்த தங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வாங்க அக்கா...
    வணக்கம்.
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. நல்ல அறிமுகம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா...
      வணக்கம்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  12. அருமையான புத்தகப்பகிர்வு! வாங்க வேண்டும்! புத்தகச்சந்தையில் கிடைக்குமா என்று பார்க்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோதரா...
      வணக்கம்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  13. அருமையான அலசல் நண்பரே.... என்னையும் குறிப்பிடமைக்கு நன்றி
    த.ம.6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா...
      வணக்கம்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  14. வாசித்ததின் ரசனை, பகிர்ந்ததில் தெரிகிறது. கீதா அவர்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா...
      வணக்கம்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  15. நம்ம கீதா அக்காவின் நூலை அறிமுகம் செய்திருகிறீர்கள். முதலில் அதுக்கு நன்றி அண்ணா! அப்புறம் அதில் என்னையும் சகோ வைகறையையும், தோழி இனியாவையும் குறிப்பிட்டிருகிரீர்கள். அதற்கு மிக்க நன்றி ! நூல் விமர்சனம் உங்களுக்குள் இருக்கும் கவிஞனின் முகத்தை காட்டுவதாக அமைந்திருப்பது மிக மிக சிறப்பு:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோதரி...
      வணக்கம்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி