வெள்ளி, 2 ஜனவரி, 2015

வறுத்தாடு

"ஏத்தா... ஆட்டுக் கசாலையை கூட்டி அள்ளி போட்டுட்டு தட்டப்பயறும் கருவாடும் போட்டு வெஞ்சனம் வக்கிறியா... வெயில்ல ஆடு மேச்ச்சிட்டு வர்ற ஆம்பளகளுக்கு கவிச்சி இருந்தாத்தான் கொஞ்சமாச்சும் கஞ்சி இறங்கும்... நா வேணா மெதுவாப் போயி தண்ணி எடுத்துக்கிட்டு வாறேன்..." என்றாள் கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த கமலம்.

"ஆத்தா... உனக்குத்தான் உடம்புக்கு முடியலைல்ல... பேசாமா படுத்துக்க... அப்பனுகிட்ட மாத்தரை சொல்லி விட்டேன்... மறந்துட்டு வந்திருச்சி... சாயந்தரம் அண்ண போகும் போது நீயும் போயி டவுனுல ஒரு ஊசி போட்டுக்கிட்டு வா... சும்மா எம்புட்டு நாளைக்கித்தான் நோவு  நோவுன்னு கெடக்கது... நானும் அத்தாச்சியும் போயி தண்ணி எடுத்துக்கிட்டு வாறோம்..." குட்டிக்கிடாப்புக்குள் கிடந்த செம்மறி ஆட்டுக் குட்டிகளுக்கு வேப்பங்கொலைகளை கட்டி வைத்தபடி பேசினாள் சுசிலா.

"ஆமா... டாக்டருக்கிட்ட போனா குண்டியில ரெண்டு ஊசிய குத்தி மாத்தரை எழுதிக் கொடுப்பாரு... ரெண்டு நாளைக்கு சரியா இருக்கும்.. மறுபடியும் தலவலி வர ஆரம்பிச்சிருது... மண்டை மண்ணுக்குள்ள போற வரைக்கும் இந்த வலி இருக்கத்தான் போகுது... விட்டுட்டு வேலையைப் பாக்க வேண்டியதுதான்..."

"ஆமா எப்பப் பாத்தாலும் சாவப் பத்தியே பேசு... நீ பொயிட்டா இங்க எல்லாரும் ஆளாப் பறக்க வேண்டியதுதான்..." சொல்லியபடி பக்கத்தில் வேயப்பட்டிருந்த பனை ஓலைக் குடிசைக்குள் இருந்து வந்தாள் கொழுந்தன் பொண்டாட்டி செல்வி.

"ஆமா... அதுக்காக இப்படி நோவு நோவுன்னு உங்களுக்கு பாரமா கெடக்கச் சொல்றியாக்கும்... ஆட்டை மேச்சிட்டு வர்ற ஆம்பளைக்கு ஒரு அணுசரனையா இருக்காம எப்பவும் முடியலைன்னு கெடக்கிறதுக்கு சாவலாமுல்ல...?"

"இப்ப நீ எதுக்கு இப்படி பொலம்புறே... சுசி வா தண்ணி எடுத்துக்கிட்டு வருவோம்... கதிரு பொண்டாட்டி வெஞ்சனத்துக்கு வெட்டி வைக்கட்டும்..."

"என்ன சின்னத்தா வெட்ட இருக்கு... நானும் அத்தாச்சியும் பொயிட்டு வாறோம்.. நீ உலையில அரிசியைப் போடு... வந்து தட்டப்பயறும் கருவாடும் போட்டு வச்சிப்போம்... நேத்தே அப்பாவும் சித்தப்பாவும் வூட்ல இருக்க பொம்பளைக வாங்காந்து போட்டு வச்சிருக்கத வச்சி எறக்கிப் போட செரமப்படுறீகன்னு சத்தம் போட்டாக... நாளக்கி நீ போயி மீனு வாங்கிக்கிட்டு வா... இன்னைக்கி கருவாடைப் போடுவோம்..."

"ஆமா... நம்ம வீட்டு ஆம்பளகளுக்கு சாம்பாருன்னா நாய்க்கி வந்த மாதிரியில்ல வருது... சரி நீங்க போயி தண்ணி எடுத்துக்கிட்டு வாங்க... நா ஆட்டுக் கெடையை கூட்டி அள்ளுறேன்..."

"செரி..." என்ற சுசிலா "ஏய்... அத்தாச்சியோவ்... உள்ளுக்குள்ள என்ன பண்ணுறே... வெளிய வெயிலு பின்னி எடுக்குது... வெளிய வாஞ்சி..." என்று கத்தினாள்.

"ஆமா... இந்த பய நய்யி நய்யின்னு பிடிங்கி எடுக்கிறான்... பனி ஒத்துக்காம சளி வந்திருச்சி..." என்றபடி வெளியே வந்தாள் சுந்தரி, பின்னால் மூக்கு ஒழுக டவுசரை ஒரு கையால் பிடித்துக் கொண்டு மறு கையின் கட்டை விரலை வாய்க்குள் வைத்தபடி வந்தான் சுந்தரம்.

"அவனுக்கு மூக்கைத் தொடச்சி விட்டா என்ன... அது வடிஞ்சி சூப்புற வெரலு வழியா வாய்க்குள்ள போவுது.. வ்வ்வே..."

"எத்தனை தடவைதான் சிந்துறது... " என்றபடி சேலை முந்தானையில் சிந்தினாள்.

"நீதான் ஊருக்குப் போயி இருந்துட்டு அப்பறமா வரவேண்டியதுதானே... அப்பாதான் போயிட்டு வான்னு சொன்னாருல்ல..."

"ஆமா... மாமா போன்னு சொல்லுவாரு... உங்கண்ணன் குடிச்சிட்டு வந்து அடிப்பாரு... என்ன பண்ணச் சொல்லுறே...? நீங்க இங்க இருக்கதால இந்தாளு குடிச்சாலும் கொஞ்சமாச்சும் அடங்கி இருக்காரு..."

"சரி... புலம்பாம அவன இங்கன விட்டுட்டு வா... சமைக்க தண்ணி எடுத்துக்கிட்டு வருவோம்..."

"சத்த இரு வாறேன்..." என்றபடி உள்ளே சென்றாள்.

சுசிலாவும் சுந்தரியும் பேசிய படி தண்ணி எடுக்க குடத்துடன் அருகே கிடந்த கண்மாய்க்குச் சென்றார்கள். அங்கே அந்த ஊர் முத்துச்சாமி மகன் குமரேசன் குளித்துக் கொண்டிருந்தான்.

"ஆளுக புதுசா தெரியிறிய... ஆட்டுக்காரிகளாக்கும்... ஆமா... எங்க கெட போட்டிருக்கீங்க...?"

"ம்... எங்க கெட போட்டிருக்கீங்கன்னு கேக்க வேண்டியதுதானே... அது என்ன ஆட்டுக்காரிகளாக்கும்ன்னு நக்கலா ஒரு கேள்வி... ஆட்டுக்காரிகன்னா அம்புட்டு கேவலாமா என்ன..." சுசிலா நறுக்கென்று கேட்டாள்.

"ஏய் சும்மா இருடி... உள்ளூருக்காரங்கக்கிட்ட நமக்கு எதுக்கு பொல்லாப்பு..." என்று அவளின் காதைக் கடித்தாள் சுந்தரி.

"என்ன புள்ளைகளா... கேட்டதுக்கு பதிலைக் காணோம்... ரெண்டு பேரும் குசுகுசுன்னு பேசுறீக..." சிரித்துக் கொண்டே கேட்டான்.

"ம்... ஆட்டுக்காரிக இல்ல எடச்சிக... முத்துச்சாமி ஐயா கொள்ளையிலதான் கெட போட்டிருக்கோம்... ஏன் கெட போட்டதை நோட்டீஸ் அடிச்சி ஓட்டணுமாக்கும்..."

"திமிருதான்... எங்க கொள்ளையில போட்டுக்கிட்டு எனக்கிட்டயே எகத்தாளமா... ஆமா பச்சைச் சேலை கம்முன்னு நிக்கும் போது செவப்புச் சேலை துடுக்காப் பேசுதே... எந்தூருக்காரிக நீங்க...?"

"அவ கொணம் அப்படித்தாங்க... எதாயிருந்தாலும் படக்குன்னு பேசுவா... நாங்க காளையார்கோயிலுப் பக்கம் கணக்கன் கம்மாய்ங்க..." சுந்தரி சிரித்தபடி சொன்னாள்.

"நீ எப்படி தன்மையாப் பேசுறே... ஆம்பளைக்கிட்ட பேசுறோம்ங்கிற மட்டு மருவாதியில்லாம பேசுது பாத்தியா..." என்றான் குனிந்து தண்ணி தூக்கும் போது தெரிந்த மஞ்சள் கயிறைப் பார்த்தபடி.

"அத்தாச்சி மாராப்பை சரியாப் போடு அவனோட பார்வை போற எடஞ் சரியில்லை..." அவனுக்கு கேக்காதவாறு மெதுவாகச் சொன்னாள்.

சுந்தரி குடத்தை தண்ணிக்குள்ளயே மெதுவாக நகர்த்தி அவன் பார்வையில் இருந்து மாறினாள்.

"ம்க்கும்... என்ன ஆடு மிரளுதோ..?" என்றவன் சுசிலாவின் கருத்த இடுப்பைப் பார்த்தபடி "கருப்பா இருந்தாலும் கலையாத்தான் இருக்கே?" என்றான்.

"கட்டையில போறவன் கண்ணு போற போக்கைப் பாரு..." என்று முணுமுணுத்தாள்.

"என்ன முணுமுணுப்பு... ஆமா... வயசுப்புள்ளைகளையும் கூட்டிக்கிட்டுதான் ஊரு ஊரா போவானுங்களா... பொண்டு புள்ளைகளை ஊருல விட்டுட்டு வர மாட்டானுங்களா..?" என்றான்.

"எங்களுக்கு இதுதான் வாழ்க்கை... எங்க பாதுகாப்பே இதுதான்..." என்றாள் சுந்தரி.

"ஊருல விட்டுட்டு வந்து எந்த நாயி என்ன பண்ணுச்சோன்னு நெருப்பக் கட்டிக்கிட்டில்ல வாழணும்.." படக்கென்று சொன்னாள் சுசிலா.

"ஏய் சும்மா... வாடி... நாங்க வாறோங்க..." என்று அவளை அதட்டினாள் சுந்தரி.

"ஏன்டி... முன்னப் பின்ன தெரியாத ஆம்பளைக்கிட்ட எதுக்கு வாயிக்கு வாயி பேசிக்கிட்டு... உனக்கு ரொம்பத்தாண்டி வாய்த்துடுக்கு..." நடந்து கொண்டே பேசினாள்.

"ஆமா அத்தாச்சி... அவனுக்கும் நமக்கும் என்ன தொடர்பு இருக்கு... அவம்பாட்டுக்கு குளிக்க வேண்டியதுதானே... ஆட்டுக்காரிக... புள்ள... அப்படியெல்லாம் பேசினா கோவம் வருமா வராதா... உன்னோட மாரைப் பாக்குறான்... என்னோட இடுப்பைப் பாக்குறான்... அவனோட பார்வையே சரியில்லை... அவனுக்கிட்ட என்ன சிரிச்சிப் பேசிக்கிட்டு... நம்ம பொழப்பு... ஊரு ஊரா சுத்துறோம்... கருவாப்பய அவனுக்கென்ன... கெட கொண்டாந்து இறக்குறப்ப வந்த இவனோட அப்பனும் நாக்கைத் தொங்கப் போட்டுக்கிட்டுத்தான் பாத்தான்... அப்பனோட புத்தி..."

"இப்ப எதுக்கு அந்தாள இழுக்கிறே... வயசுப்பய அப்படித்தான் குதர்க்கமாப் பேசுவான்... நாமதான் ஒதுங்கிப் போகணும்... வந்த இடத்துல வாய்ச் சவடாலெல்லாம் வேலைக்கு ஆகாது...."

"ம்க்கும்... நீ வேற... பேசாம வாத்தாச்சி..."

"சுசிலா... ஏய் சுசிலா..."

"என்னத்தாச்சி...?"

"இங்க வா... கொஞ்சம் எந்தலையைப் பாத்துவிடேன்... பேனு கெடக்கு போல அரிக்கிது..." தலையைச் சொறிந்தபடி சுந்தரி சொன்னாள்.

"இந்தா வாரேன்..."  என்றவள் சிறிது நேரத்தில் வந்து அவளுக்கு பேன் பார்த்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தாள்.

"அந்தக் குமரேசங்கிட்ட நீ ரொம்பப் பேசுறே... வயசுப்பயகிட்ட உனக்கெதுக்குப் பேச்சு... சிரிக்க சிரிக்க பேசி சீரழிச்சிருவானுங்க..."

"அட நீ வேற அத்தாச்சி... நம்ம போற நேரத்துல குளிக்க வாறான்... அவனும் பேசுறான்... நாமளும் பேசுறோம்..."

"இருந்தாலும் அவனுக்கு உம்மேல ஒரு இது போல... ஒதுங்கி இரு..."

"ஆமா... எம்மேல இது... சும்மா கடுப்பக் கெளப்பதே... அவனோட பார்வை உன்னைத்தான் மேயுது... நீயும் அவங்கிட்ட வழிஞ்சி பேசுறே...?" கடுப்போடு சொன்னாள்.

"ஆமா... குடிகாரனுக்கிட்ட கெடந்து சாகுறதைவிட குடியானவனோட போயிடலாம்ன்னு பாக்கிறேன்... சும்மா போடி... என்னை மேயுறானா... உன்னை மேயுறானான்னு பாரு... புரியும்..."

"சும்மா போ நீயி எதாச்சும் சொல்லிக்கிட்டு... வறுத்தாட்டை இழுத்துக்கிட்டு போயி என்ன செய்யப் போறான்... வேணுமின்னா சொல்லு ரெண்டு பேரும் சேந்தே ஓடுவோம்..." என்று சொல்லிச் சிரித்தாள்.

"பேச்சைப் பாரு... நா உனக்கு அண்ண பொண்டாட்டி..." என்று அவளது தலையில் கொட்டினாள்.

திகாலை நேரம்...

"சுந்தரி... சுந்தரி..." என கத்திக் கொண்டே வெளியே வந்தான் கதிர்.

"ஏத்தா... உங்கத்தாச்சி எங்கிட்டுப் போனா... கதிரு கத்திக்கிட்டு இருக்கான் பாரு..." மகளிடம் கேட்டாள் கமலம்.

காபி போட்டுக் கொண்டிருந்த சுசிலா "ஏண்ணே கத்துறே... வெளிய கிளிய போயிருக்கும்... மொகத்தைக் கழுவிட்டு வந்து காபியைக் குடி..." என்றாள்.

"இல்லத்தா... அவ வெளிய போயி ரொம்ப நேரமாச்சு... திரும்பி வந்து படுக்கலை... வெளிய உங்கூட வேல பாத்துக்கிட்டு இருப்பான்னு நெனச்சித்தான் கூப்பிட்டேன்... நீ அவகூட போகலையா..?"

"இல்லையே... செரி... இரு... வந்துரும்... சுந்தரம் தூங்குறானுல்ல... வெளிய போனது... சுப்பி கிப்பி ஓடிச்சிக்கிட்டு வரும்..."

"தம்பி... அந்த குட்டித்தா ஆடு காலு தாங்குது பாரு... புடிச்சி முள்ளிருக்கான்னு பாரு..." கட்டிலில் அமர்ந்திருந்த அப்பா சொல்ல, கையிலிருந்த காபியை வைத்துவிட்டு குட்டித்தா ஆட்டைப் பிடித்துப் பார்க்கப் போனான்.

தே நேரம்...

"உம்மவன் செய்யிறது நல்லா இல்லைடி... மூணு மணிக்கெல்லாம் வண்டியை எடுத்துக்கிட்டு இந்தப் பனியில போக வேண்டிய முக்கிய வேலை என்ன இருக்கு... சொன்னா நீயும் சேந்து பேசுவே... என்னமோ செய்யிங்க... அவம் போக்கு சரியில்லை அம்புட்டுத்தான்..." கத்திக் கொண்டே காபியை உறிஞ்சினார் முத்துச்சாமி.
-'பரிவை' சே.குமார்.

20 கருத்துகள்:

  1. தமிழ் மணம் 1 கருத்துரை நாளை.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அண்ணா...
      தங்கள் வருகைக்கும் வாக்குக்கும் நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. வணக்கம் சகோதரி...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  3. "ஆமா... எம்மேல இது... சும்மா கடுப்பக் கெளப்பதே... அவனோட பார்வை உன்னைத்தான் மேயுது... நீயும் அவங்கிட்ட வழிஞ்சி பேசுறே...?" கடுப்போடு சொன்னாள்.....

    ஹா ஹா ஹா....
    “சும்மா இருந்த சங்கை....“ கதையா?

    வித்தியாசம் என்று சொல்ல முடியாது. உண்மை. அருமை.


    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் குமார்.

    த.ம.4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  4. அருமை நண்பரே
    ஊர் விட் ஊர் சென்று பிழைப்பு நடத்துவோரின்
    நிலையினை படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள்
    தம 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  5. கதை அடுத்து என்ன என்று நினைக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அம்மா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  6. அருமை.. அருமை..
    கிராமிய மணம் கமழ்கின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  7. கிராமிய நடைமுறை அருமை நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அண்ணா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  8. பாஸ் என்ன இப்படி எழுதுறீங்க ..
    ரொம்ப நேர்த்தியாக இருக்கு ..
    தொடர்வோம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. வணக்கம் சகோதரா...
      தங்கள் வாக்கிற்கும் நன்றி.

      நீக்கு
  10. வறுத்தாடு என்றால் என்ன நண்பரே? கதை புரிந்தது! நீங்கள் வட்டார வழக்கில் மிகவும் நேர்த்தியாகச் சொல்லும் விதம் அருமை! சில இடங்களில் வழக்குச் சொல் புரியவில்லை என்றாலும் திரும்பவும் வாசித்துப் புரிந்து கொண்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துளசி சார்...
      செம்மறி ஆடுகள் வைத்திருப்பவர்கள் ஊர் ஊராகச் சென்று பணம் பெற்றுக் கொண்டு கொல்லைகளிலும் வயல்களிலும் கிடை போடுவார்கள். அப்படி ஊர் ஊராக வருபவர்களை வரத்து ஆட்டுக்காரர்கள் என்று சொல்வார்கள். அதுவே பேச்சு வழக்கில் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வறுத்தாட்டுக்காரன், வறுத்தாடு என ஆகிவிட்டது.

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி