வெள்ளி, 2 ஜனவரி, 2015

மனசு பேசுகிறது : 2014-ல் இருந்து 2015


2014...

ழக்கம் போல் கடந்து செல்லும் நாளாகவே 2014 மறைந்து 2015 பிறந்தது என்றாலும் கடந்து சென்ற ஆண்டில் கற்றதும் பெற்றதும் என்ன என்று பார்த்தால் 2013 கொடுத்த சந்தோஷத்தில் பாதியைத்தான் 2014 கொடுத்தது. செலவுகளைப் பெருக்கி வருவாய்க்கான வழியை நீர்வரத்து இல்லாத வாய்க்கால் போல் வாடிக் கிடக்கத்தான் வைத்தது.

2013-ல் கடன் பெற்றாலும் எங்களுக்கு என ஒரு வீட்டை உருவாக்கிக் கொண்டோம்... 2014-ல் அதற்கான கடன்கள்  அடைபடாமலேயே 2015க்குள் அடி எடுத்து வைத்திருக்கிறோம். 2014-ல் நிறைய சின்னச் சின்ன ஆசைகள் எல்லாம் நிராசையாகவே கழிந்து விட்டது என்றே சொல்லலாம்.

2013-ல் தோன்றிய ஆசை சிறுகதைத் தொகுப்போ கவிதைத் தொகுப்போ கொண்டு வர வேண்டும் என்பது... ஆனால் அந்த ஆசை 2014லிலும் தொடரத்தான் செய்ததே ஒழிய வாழ்க்கைச் சிக்கல்கள் அதை கொண்டு வருவதற்கான வழியை அடைத்தே வைத்து விட்டது.

குடும்பத்தை ஒரு முறையாவது இங்கு கொண்டு வர வேண்டும் என குழந்தைகளுக்கு 2013-ல் பாஸ்போர்ட் வாங்கினேன். 2014-ல் இப்பக் கொண்டு வரலாம்... அப்புறம் கொண்டு வரலாம் என நினைவில் நீந்தியே கடந்து சென்று விட்டது.

அரசாங்க அலுவலக வேலைக்கான அழைப்பு வருட தொடக்கத்தில் வந்தது. ஆனால் எனது சான்றிதழ்களுக்கு இணையான அரபிச் சான்றிதழ் பெற வேண்டும் எனச் சொல்லி விட, அதற்கான அலைச்சலில் பணத்தைச் செலவழித்து 80% பணிகள் நிறைவுடன் 2014 கடக்க, அரசு வேலையும் எட்டாக்கனியாகவே தள்ளி நிற்கிறது.

2014-ல் அலுவலகத்தில் கூடுதல் பணிச்சுமை, குறைந்த சம்பளம், கூடுதல் நேரத்துக்கு சம்பளம் இன்மை, அவர்களுடன் பனிப் போர் எனக் கடந்து சென்றது.


இத்தனை நிகழ்வுகள் இனிப்பில்லாமல் இருந்தாலும் சில இனிப்பான நிகழ்வுகளையும் கொடுக்கத் தவறவில்லை 2014... அவை...

வலைப்பூ மூலமாக நிறைய... நிறைவான நட்புக்களைக் கொடுத்தது 2014.

வருடத்தின் இறுதியில் எனது சான்றிதழ் பணிகளைத் தீவிரப்படுத்தும் முயற்சிகளுக்கான முட்டுக்கட்டைகளைத் தகர்த்தி அரபிச் சான்றிதழ் பெறும் நாளை அருகில் காட்டிச் சென்றது 2014.

சிறுகதைத் தொகுப்புக்கான முயற்சியை வருடத்தின் கடைசி நாளில் எனக்குள் நுழைத்து அதற்கான பேச்சு வார்த்தை, கதைகள் தேர்வு என ஆரம்பக் கட்ட பணிகளில் இறக்கிச் சென்றுள்ளது 2014.

ஆண்டின் தொடக்கத்தில் வெட்டி பிளாக்கர்ஸ் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, இடையில் சிங்கப்பூர் கிளிஷேயில் சிறுகதை, ஆண்டின் இறுதியில் தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்திய கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு என எனது எழுத்துக்கான அங்கீகாரத்தை வழங்கிச் சென்றது 2014.

திடீரென சீனா ஐயாவால் அழைக்கப்பட்டு மதுரையில் பதிவர் மாநாடு நடந்த தினங்களில் வலைச்சர ஆசிரியனாய் மூன்றாம் முறை பணியாற்ற வைத்தது 2014. நிறையப் பகிர்வர்களால் வலைச்சரத்தில் எனது அறிமுகம் பெற வைத்தது.

தேனக்காவின் சாட்டர்டே ஜாலிகார்னரில் எனக்கும் ஒரு இடம் கிடைக்க வைத்தது 2014.

சீனா ஐயா மட்டுமே வீட்டுக்கு வந்திருக்க, வலைப்பூவின் மூலமாக இங்கு அண்ணன்கள் கில்லர்ஜி மற்றும் மகேந்திரன் இருவரையும் சந்திக்கவும்... உறவு தொடரவும் வைத்தது 2014.

வலைப்பூவில் வாசம் செய்யும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஐயாக்கள், அம்மாக்கள், சகோதரர்கள், சகோதரிகள், நண்பர்கள் என நிறையத் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தது 2014.

அஞ்சு பைசா கூட வாங்க முடியாத எங்கள் அலுவலகத்தில் ஒரு மாதம் அலைன் செல்ல இருப்பதால் சண்டையிட்டு நம்ம ஊர் பண மதிப்பில் ரூ15,000 வாங்கிய சாதனையையும் வருடத்தின் கடைசி நாள் கொடுத்துச் சென்றது.  அபுதாபியிலும் அறை வாடகை, அலைனிலும் அறை வாடகை என்பதால் பெற்ற பணத்தில் மிச்சமிருக்க வாய்ப்பில்லை என்றாலும் வாங்கியதே சந்தோஷம்தானே.

மனிதர்களின் பல நிறங்களைக் காண வைத்தது. பலரைச் சேர்க்கவும் சிலரை ஒதுக்கி வைக்கவும் வைத்தது 2014.

சில போராட்டங்களுக்கு வெற்றியைக் கொடுத்தது 2014.

2015... 

வியாழனில் பிறந்த 2015 பிறக்கும் போதே சில சந்தோஷங்களைக் கொடுத்தது...

எனக்கு எட்டு என்பது மிகவும் பிடித்த நம்பர், கெட்டவனுக்கு எட்டு என்பார்கள்... எனக்கு எட்டுத்தான் ராசி... சந்தோஷம் எல்லாம். எனது செல்லங்கள் பிறந்த தினம் 26, 17. எனது சந்தோஷங்களே அவர்கள்தான்... எனது பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகம் என நம்பர்கள் எல்லாம் கூட்டுத் தொகை எட்டுத்தான். எங்கள் இல்லத்திற்கான பணிகள் ஆரம்பித்தது, நிலை தூக்கி விட்டது, குடி போனது எல்லாமே எட்டுத்தான்... இப்படி வாழ்வில் நாம் எதிர்பார்த்து அமைக்காமலே அதுவாகவே அமைந்த எனது சந்தோஷ நிகழ்வுகள் எல்லாமே கூட்டுத் தொகை எட்டில் முடியும் நாட்களே...


2014 கடைசியில் ஆரம்பித்த சில பணிகளை எனக்கு நிறைவேற்றித் தரும் வருடமாக 2015 இருக்கும் என பிறக்கும் போதே மனசுக்குள் எதோ ஒரு சந்தோஷம்.

இந்த வருடத்தில் எழுத்தில் இன்னும் கூடுதலாக கவனம் செலுத்தி மேலும் மெருகேற்ற வேண்டும்.

நிறைய உறவுகளைச் சந்திக்க வேண்டும்.. அவர்களின் உறவை வாழ்நாளெல்லாம் கொண்டு செல்ல வேண்டும்.

சிறுகதைத் தொகுப்பும் முடிந்தால் கவிதையோ அல்லது கிராமத்து நினைவுகளையோ புத்தகமாகக் கொண்டு வரவேண்டும்.

முயற்சிக்கும் வேலையில் அமர்ந்து எனை வாட்டும் கடன்களை எல்லாம் கட்டி முடிக்க வேண்டும்.

ஒரு மாதமோ அல்லது இரண்டு மாதமோ குடும்பத்தை இங்கு கொண்டு வந்து வைத்திருக்க வேண்டும். நல்லவேலை(ளை) அமைந்து விட்டால் இங்கே வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறந்த ஊரில் நமக்கென ஒரு வீடு கட்ட வேண்டும்.

இப்படி நிறைய வேண்டும்களை எல்லாம் தாங்கி நிற்கும் 2015 எனக்கு சாதிக்கும் ஆண்டாக அமையும் என்பதில் அதிக நம்பிக்கை  இருக்கிறது.

2015 அனைவருக்கும் சிறப்பான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.

-'பரிவை' சே.குமார்.

13 கருத்துகள்:

  1. அனைத்தும் நலமாக நல்வாழ்த்துக்கள்!..

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே!

    மனந்திறந்த பேச்சு மகிழ்வைத் தருதே!
    தினம்வரட்டும் சீரும் சிறந்து!

    மகிழ்வான வருடமாக அமைய உளமார வாழ்த்துகிறேன்!
    வெற்றிகள் தேடி வரட்டும்!

    பதிலளிநீக்கு
  3. உங்களின் எண்ணங்கள் விரைவில் பூர்த்தியடைய வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் குமார் தங்களின் எழுத்து முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு
  5. உங்கள் எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துக்கள். மண்வாசனை அடிக்கும் கிராமத்து நினைவுகளை புத்தகமாய் கொண்டு வாருங்கள்.
    குழந்தைகளுடன் சந்தோஷமாய் இருக்க ஆண்டவன் அருள்புரிவார்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. 2015 கூட்டினால் 8 நண்பரே! எனவே உங்கள் ராசிப்படி இந்த வருடம் தங்களுக்கு எல்லா நன்மைகளையும், சந்தோஷங்களையும், நீங்கள் விரும்பும், கனவு காணும் அனைத்தும் நிறைவேற எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும்.!!! வாழ்த்துக்கள் நண்பரெ!

    பதிலளிநீக்கு
  7. இனி எட்டுத்திக்கும் சந்தோசம் சூழ, எனது மனமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  8. உங்கள் ஆசைகள் எல்லாம் இந்த ஆண்டு நிறைவேறட்டும் அண்ணா:)

    பதிலளிநீக்கு
  9. தாங்கள், எல்லா நலனும் இவ்வருடத்தில் பெற இறைவனிடம் பிராத்திக்கிறேன் நண்பரே.... என்னையும் மனதில் வைத்திருப்பது மகிழ்சியே நண்பரே
    எமது புதிய பதிவு எ.எ.எ.
    த.ம 6

    பதிலளிநீக்கு
  10. வணக்கம்
    தங்களின் எண்ணம் வெற்றியடைய வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  11. உங்கள் எண்ணங்கள் நிறைவேற எனது வாழ்த்துகள் குமார்.

    பதிலளிநீக்கு
  12. உங்கள் ஆசைகள் யாவும் நிறைவேறட்டும்.சந்தோஷங்கள் பெருகட்டும். வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்தும் அன்பு அன்னை கலாகார்த்திக் (கார்த்திக் அம்மா )

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி