வெள்ளி, 12 டிசம்பர், 2014

சொக்கா... எனக்கு முதல் பரிசு (தமிழ்க்குடில் போட்டி)

மிழ்க்குடில் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற மகாகவி பாரதி பிறந்ததின போட்டி கவிதை, கட்டுரை போட்டிகளின் முடிவு நேற்று அறிவிக்கப்பட்டது.  கட்டுரைப் போட்டியில் எனது கட்டுரை முதல் பரிசுக்குரிய கட்டுரையாக நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. எனது கட்டுரையைத் தேர்ந்தெடுத்த நடுவர்கள்  திரு. இராஜ.தியாகராஜன்,  முனைவர் அண்ணாகண்ணன் ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் போட்டியினை மிகச் சிறப்பாக நடத்திய தமிழ்க்குடில் தோழமைகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் உரித்தாக்குகிறேன்.

இந்தப் போட்டியில் நான் கலந்து கொள்ள நினைக்கவேயில்லை... நட்புக்களுக்காக எனது பக்கத்தில் கூட நான் போட்டி விவரங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தேன். எனது பாசத்திற்குரிய காயத்ரி அக்காதான் தம்பி எழுது... தம்பி எழுதுன்னு முகநூல் அரட்டையில் திட்டிக் கொண்டேயிருந்தார்கள். அவர்களின் திட்டுதலுக்குப் பயந்தே (பரிசு கிடைத்ததும் இவனை திட்டித் திட்டியே எழுத வைச்சா ஜெயிச்சிட்டானேன்னு அதுக்கும் சொன்னா கேக்க மாட்டேன்னேன்னு திட்டு விழுந்தது தனிக்கதை)  இறுதி நாள் இரவு எழுதி 10: 20 மணிக்கு (இந்திய நேரம் :  11 : 50)  அனுப்பினேன்.  எப்பவுமே கடைசி நேரத்தில் எழுதுவதே வாடிக்கை. அதற்குப் பரிசு கிடைத்திருக்கிறது. இன்னும் பட்டை தீட்ட வேண்டிய கட்டுரைதான் என்றாலும் நடுவர்களைக் கவர்ந்தது என்பதில் சந்தோஷமே... 

போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து எழுத்தாள நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

-------------------------------------------------

வெளிநாட்டு வாழ்க்கை 

வெளிநாட்டு வாழ்க்கை என்பது இன்று பெரும்பாலானோருக்கு வாய்த்திருக்கும் வாழ்க்கை. குடும்பம், குழந்தைகள் என எல்லாம் விட்டு ஒரு அறைக்குள் நான்கைந்து ஆண்களாய் தங்கும் இந்த வாழ்க்கை ஊரிலிருந்து பார்ப்பவர்களுக்கு பகட்டாய்த்தான் தெரியும். எல்லோருமே கொட்டிக் கிடப்பதை அள்ளி வருவதாய் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் வெளிநாட்டு வாழ்க்கை சிறப்பானதா அல்லது சீரழிக்கிறதா என்பதை கொஞ்சம் பார்க்கலாம்.

குறிப்பாக தென் தமிழகத்து ஊர்களில் இருந்து பெரும்பாலானோர் சிங்கப்பூர், மலேசியா என சம்பாதிக்கப் போவார்கள். அவர்கள் எல்லாம் வெளிநாடு செல்ல ஏஜெண்டிடம் லட்சங்களைக் கட்டி காத்திருப்பார்கள். ஒரு நாள் ஏஜெண்டிடம் இருந்து அழைப்பு வர கிளம்பிச் செல்வார்கள். இரண்டு வருடங்கள் ஊருக்கே வர முடியாத வாழ்க்கை வாழ்வார்கள். மாத மாதம் அவர்கள் அனுப்பும் ஆயிரங்கள் வீட்டில் இருப்பவர்கள் மனதில் சந்தோஷத்தைக் கொடுத்தது என்றாலும் அவர்கள் சந்தோஷமாக இருந்தார்களா என்பதை யாரும் தெரிந்து கொள்ளவில்லை. அவர்கள் கொடுத்து விடும் சோப்பும் டிரஸ்சும் கொடுத்த சந்தோஷம் எல்லாம் அவர்களின் வலி நிறைந்த வாழ்க்கையைச் சொல்லத் தவறியதை இப்போது உணர முடிகிறது.

இப்போது போல் அப்போது தினமும் பேசுவதற்கு இணைய வசதியோ, செல்போன் வசதியோ இல்லை. ஏன் பெரும்பாலான கிராமங்களில் தொலைபேசி வசதி கூட இருக்கவில்லை. அருகில் இருக்கும் டவுனிலோ அல்லது உறவினர் வீட்டிலோ இருக்கும் தொலைபேசிக்கோ வாரம் ஒருமுறை பேசுவதென்பதே அரிது. பெரும்பாலும் சுமைகளையும் துக்கங்களையும் தூக்கிச் சுமக்கும் புறாவாய் கடிதம் மட்டுமே இங்கும் அங்கும் அடிக்கடி பறந்து கொண்டிருந்தது. அதிலும் ஊரிலிருந்து செல்லும் கடிதம் பணத்தேவையைச் சுமந்தும் அங்கிருந்து வரும் கடிதம் பாசத்தையும் அன்பையும் அள்ளி எடுத்து அதனுடன் போட்டோவையும் சுமந்து வரும். இதுதான் அன்றைய வாழ்க்கையாக இருந்தது.

இப்போது நிலமை மாறிவிட்டது... வெளிநாடு என்பது என்னவோ வெளியூரில் வேலை பார்ப்பது போலத்தான். படித்தவர்களின் நிலை படிக்காதவர்களுக்கு இல்லை என்றாலும் நல்ல வேலையில் இருந்தால் நினைத்த போது ஊருக்குப் போகலாம்... ஊருக்குப் பேசலாம்... நல்ல சம்பளமாக இருந்தால் குடும்பத்தையும் கொண்டு வந்து வைத்துக் கொள்ளலாம். தென் தமிழகத்தில் இருந்த வெளிநாட்டு மோகம் இப்போது தமிழகம் எங்கும் பரவிவிட்டது. பரவாயில்லையே வெளிநாட்டு வாழ்க்கை முன்பு போல் கஷ்டமாக இருப்பதில்லையே என்று நினைப்போமேயானால் அது மிகத் தவறு என்பதை இங்கு ஆணித்தரமாக சுட்டிக் காட்டலாம்.

சில நாட்களுக்கு முன்னர் ஒரு தொலைக்காட்சியில் வந்த செய்தியினை முகநூலில் பார்க்க நேர்ந்தது. ஏஜெண்ட் சொல்லிக் கூட்டியாந்தது ஒண்ணு...  கிடைக்கிற சம்பளம் ஒண்ணு... என்ற வேதனையை பலர் பகிர்ந்தார்கள். அவர்கள் எல்லாம் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று இணைய வசதி இருப்பதால் வெளிநாட்டு வாழ்க்கை என்பதை கவிதையாகவும் கதையாகவும் காணொளியாகவும் காட்சிப்படுத்துகிறார்கள். வேதனைப்படுகிறோம்... செத்து மடிகிறோம் அப்படின்னு வசனங்களை அள்ளி வீசுகிறார்கள். ஆனால் இந்த வாழ்க்கையை ஏற்றுக் கொண்டுதானே வந்தோம். அவர்களா நம்மை கட்டி இழுத்து வந்தார்கள்... இல்லையே... கடனும் கற்பனைகளும்தானே நம்மை இழுத்து வந்தன என்ற உண்மையை யாருமே கவிதையாகவோ கதையாகவோ காணொளியாகவோ வடிப்பதில்லையே ஏன்.?

பகட்டாகவும் பக்கத்து வீட்டுக்காரனுக்கு பணம் காய்க்கும் மரமாகவும் தெரியும் வெளிநாட்டு வாழ்க்கை பகட்டையும் பணத்தையும் தருகிறதா என்றால்... ஒரு சிலருக்கே அதைத் தருகிறது எனலாம். பெரும்பாலானவர்களின் பேச்சிலர் வாழ்க்கை என்பது பத்துக்குப் பத்து அறைக்குள்தான் கழிகிறது என்பதுதான் உண்மை. ஒரு பத்துக்குப் பத்து அறைக்குள் அடுக்குக் கட்டில்கள் போட்டு நாலைந்து பேராக வாழ்வதும்... அந்த ஒற்றைக் கட்டில்தான் தான் வாழும் இடம் என்பதும் அனுபவிப்பவனுக்கு மட்டுமே தெரியும்.

குறிப்பாக கிளினீங் வேலைக்கும் கட்டிட வேலைக்கும் வருபவர்களை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கும். காரணம் ஊர்க்காசுக்கு பத்தாயிரம் கூட கிடைக்காத ஒரு வேலைதான் கிளினீங் கம்பெனி வேலை... கேம்ப்பில் மொத்தமாக தங்கி... அதிகாலையில் எழுந்து வரிசையில் நின்று கழிவறை, குளியல் வேலைகள் முடித்து பிளாஸ்டிக் கவர்களில் கட்டிய சாப்பாடுகளை எடுத்துக் கொண்டு தயாராக நிற்கும் வாகனத்தில் ஏறி வேலை செய்யுமிடம் செல்ல வேண்டும். இரவு திரும்பி துணி துவைத்து குளித்து (இப்பவும் அதே வரிசைதான்) அப்பாடா என்று படுக்கும் போது பதினோரு மணியோ பனிரெண்டு மணியோ ஆகும்... மறுநாள் காலையும் இதே நிலை... கையில் வாங்கும் காசோ கொஞ்சம்... அதில் ஊருக்கு அனுப்பி... போன் மற்றும் மற்றவற்றிற்கும் பயன்படுத்தி வாழும் வாழ்க்கையில் சந்தோஷம் ஏது..?

இதேநிலைதான் கடைகளில் வேலைக்கு வருபவர்களுக்கும்... ஒரு வாரம் முன்பு ஆந்திர நண்பர் ஒருவர் சொல்லக் கேட்டது. அவர் சென்ற சூப்பர் மார்க்கெட்டில் ஒரு பையன் அவர் தெலுங்கில் பேசுவதைப் பார்த்து 'அண்ணா நீங்க தெலுங்கா... எனக்கொரு உதவி செய்யுங்க... என்னை எப்படியாச்சும் ஊருக்கு அனுப்பி வையுங்க... 1200 திர்காம் சம்பளமுன்னு சொல்லிக் கூட்டியாந்து500 திர்காம்தான் தர்றாங்க... கடனை வாங்கித்தான் வந்தேன்... காலையில 8 மணியிலிருந்து இரவு11 மணி வரை வேலை... அதுவும் நின்னுக்கிட்டே இருக்கணும்... எப்படியாச்சும் என்னை ஊருக்கு அனுப்பி வைங்கண்ணேன்னு சொன்னானாம். இதுதான் ஆசைப்பட்டு வந்து அவதிப்படுவோரின் நிலை.

ஊரில் இருந்து நல்ல செய்தியோ கெட்ட செய்தியோ எது வந்தாலும் அந்தச் சந்தோஷத்தையும் துக்கத்தையும் பகிர்ந்து கொள்ள நல்லதொரு நட்பு நாமிருக்கும் அறையில் கிடைத்தால் அது நாம் செய்த பிறவிப்பயனே. இல்லையே மடிசாய அன்னையோ... தோள் கொடுக்க நண்பனோ... ஆறுதலாய் அணைத்துக் கொள்ள மனைவியோ இல்லாமல் சுமையை இறக்குமிடமாக கழிவறை மட்டுமே காத்திருக்கும்.

எத்தனை கஷ்டங்கள்.... எத்தனை கவலைகள்... எத்தனை பிரச்சினைகள்... எத்தனை வருத்தங்கள்... என எத்தனை எத்தனையோ இருந்தாலும் ஊரில் இருந்து வரும் அழைப்புக்கு குரல் கொடுக்கும் போது கிடைக்கும் சந்தோஷம் மட்டுமே வெளிநாட்டு வாழ்க்கையில் வெகுமதி. இதெல்லாம் தெரியாமல் பணம்... பணம்... என்று பணங்காச்சி மரமாக நினைக்கும் உறவுகளுக்கு தெரிவதில்லை இங்கிருக்கும் உடல்கள் உயிரை அங்கு வைத்து விட்டு வந்திருப்பது. சரியான சாப்பாடு... நல்ல துணி என்பதெல்லாம் மறந்து வாழும் வாழ்க்கைத்தான் வெளிநாட்டு வாழ்க்கை... ஊர் நினைப்போடும் உறவுகள் நினைப்போடும் வாழும் வாழ்க்கைதான் வெளிநாட்டு வாழ்க்கை... தலையணைகள் நனையும் இரவுகளில் கழியும் வாழ்க்கைதான் வெளிநாட்டு வாழ்க்கை...

வெளியில் இருந்து பார்க்க அழகான கண்ணாடி மாளிகையாகத்தான் தெரியும்... உள்ளே நுழைந்து பார்த்தால்தான் உடைந்த சில்லுகள் ஆயிரங்கதைகள் சொல்லும்.
-”பரிவை" சே.குமார்

32 கருத்துகள்:

  1. ஆஹா வாழ்த்துகள் நண்பரே... மென்மேலும் இதுபோல் பரிசுகள் பலபெற மனதார வாழ்த்துகிறேன் இன்னும் கதையை படிக்கவில்லை காலையில் படிக்கிறேன் நன்றி.
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  2. முதல் பரிசு வென்றமைக்கு வாழ்த்துக்கள் சகோ :)..

    உங்கள் ஆதங்கம் உண்மைதான் சகோ ..இதேபோலத்தான் இந்தியாவிலுள்ள சில நிறுவனங்கள் படிச்சிட்டே வேலை செய்யலாம் மாதம் பவுண்சில் சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டுறாங்க ..அங்குள்ள பெற்றோர் பாவம் நிலத்தை வித்து பொருள் சேர்த்து இங்கே படிக்க அனுப்பறாங்க ..இங்கோ நிலை வேறு ..சிலருக்கு லக் பலருக்கு பாவம் பணம் வீண் :( படிப்பை முடிச்சி ஊருக்கு போறாங்க வெறுங்கையுடன்

    பதிலளிநீக்கு
  3. முதல் பரிசு வென்றமைக்கு வாழ்த்துக்கள்! நண்பரே! தூரத்துப் பச்சைக் கண்ணுக்குக் குளுமை போலத்தானோ....அருமையாக எழுதியுள்ளீர்கள் நண்பரே! வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  4. போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து எழுத்தாள நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    முதல் பரிசு வென்ற தங்களுக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    முதல் பரிசு பெற்றமைக்கு பாராட்டுக்கள் மேலும் பல பரிசுகள் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள் த.ம4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. முதல் பரிசு வென்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே
    வெளி நாட்டு வாழ்க்கை பற்றி ,அறியாதோர் பேசுவதைப் பற்றி கவலை கொள்ள வேண்டாம்.
    வாழ்ந்து பார்த்தால் தானே தெரியும் வாழ்க்கை என்னவென்று

    பதிலளிநீக்கு
  7. பரிசுபெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
    துயரங்கள் அடங்கிய வெளிநாட்டு வாழ்க்கை பற்றிய சிறப்பான கட்டுரை

    பதிலளிநீக்கு
  8. முதல் பரிசு வென்றமைக்கு நல்வாழ்த்துக்கள்!..

    பதிலளிநீக்கு
  9. முதல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே!

    போட்டியில் வெற்றிபெற்றதோடல்லாமல் முதற் பரிசை எட்டிப் பிடித்துள்ளீர்கள்!
    உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

    உங்கள் கட்டுரையும் அருமை! வெளிநாட்டு வாழ்க்கை வெறும் முலாம்பூசிய ஒரு குடுவை! வெளியிற் பார்த்தால் தகதகன்னு ஜொலிக்கும்.
    உள்ளே பாருங்கள் கொத்தும் குரடுமாகக் கைவிரலைக்கூடக் கிழிக்கும்..:(
    மனம் கனத்துப் போனது உங்கள் கட்டுரை! அருமை!
    உணர்வுகளை ஊரில்விட்டு உடல்களை மட்டும் காவிக்கொண்டு
    வந்து வாழுதல் கொடுமை!..
    உணர்வுகளைக் கூறிய விதம் அருமை! வாழ்த்துக்கள்!

    சகோதரரே!..

    ஒரே ஒரு இடத்தில் உங்கள் கருத்தை..
    // இந்த வாழ்க்கையை ஏற்றுக் கொண்டுதானே வந்தோம். அவர்களா நம்மை கட்டி இழுத்து வந்தார்கள்... இல்லையே... கடனும் கற்பனைகளும்தானே நம்மை இழுத்து வந்தன என்ற உண்மையை ....//

    நான் ஈழத்தவள் என்னும் கோணத்திற் பார்க்கும்போது வேறுபடுகிறேன்!!!

    நூற்றுக்கு 80 வீதமான ஈழத்தவர் பொருளாதாரத்திற்காக மட்டும் வெளிநாட்டை நோக்கி ஓடிவரவில்லை. எங்காவது ஓடினாற்தான் உயிரைக் காக்கலாம் எனும் நிலையில் வெளிநாட்டுக்கு அப்போது ஓடிவந்து (இதோ இந்த ஐரோப்பாவில் குளிர் கொல்லுகிறது. இப்போதைய காலநிலை -8 எப்படியிருக்கும்.. கற்பனை பண்ணிப் பாருங்கள்) இன்றும் பிச்சையெடுக்காத குறையாக ஒவ்வொரு சததிற்கும் அநேக ஈழத்தவர்படும் சிரமம் சொல்லில் அடங்காது!
    நான் வேறு யாரையும் பார்ததைச் இங்கு சொல்லவில்லை.. நானும் என் கணவர், மகனுடன் வாழ்ந்த ஈழத்தின் கிழக்குப் பகுதியில் என் கணவர் 2 தடவை அதிகாரவர்க்கத்தின் கூலிகளிடம் கழுத்துவரை வந்த வெட்டுக்குத் தப்பி 1 மாதத்திற்கு மேலாகக் காட்டுப்பகுதியில் பச்சைக் குழந்தையுடன் திரிந்தலைந்து ஈற்றில் உயிர் காக்க ஓடிவந்தோம் இங்கு!
    அங்கு என் கணவர் மின்னியற் பொறியியலாளர். கைநிறைந்த சம்பளம். ஆயினும் மனம் நிறைந்த வாழ்க்கை தொடரமுடியாமல் உயிரை மட்டும் கொண்டு வந்தோம்.
    வந்த இடத்திற் பார்த்த முதல் வேலை வயோதிபர்கள் வாழுமிடத்து துப்பரவுத் தொழிலாளி. நானோ எஞ்சினியர் கழிவுத்தொட்டி கழுவ மாட்டேன் என்றா கூறமுடியும்?.. கிடைத்தது அதுவெனிலும் மகிழ்வென செய்தார்.
    கடுங்குளிர் காலம் -1 டிலிருந்து -15 வரை போகின்ற கால நிலையிலும் வீடுவீடாக விளம்பரத்தாள் விநியோக வேலை. ..இப்படி எத்தனையோ வேலைகள்.. பார்க்கவேண்டிவந்து பார்த்தோம். நானிருக்கும் ஜேர்மனியில் இவர்கள் மொழியைப் படித்து சான்றிதள் பெற்று அதன்பின் தொழிற்கல்வி கற்று அதன் சான்றிதளும் பெற்றாலொழிய மதிப்பான உயர்தர வேலைகள் பெறமுடியாது!!
    இது கசப்பான உண்மை! குடும்பப் பாரவண்டி இழுக்கும் நிலைக் கணவனோ மனைவியோ படித்து முடித்துச் சான்றிதழ் பெற்று வேலைக்குப் போவதற்குள் ஆயுளே முடிந்திடும், வாழ்க்கைத் தரமும் சிதைந்திடும். வேண்டியது பணம் மட்டுமே எனும் நிலை!
    கிடைத்த வேலையைச் செய்து வந்தோம். இப்போ எமது சந்ததிகள் இங்கேயே கல்லூரி, பல்கலைக்கழகம் என்று நல்ல முறையிற் படித்து வெளியேறி நல்ல வேலைகளில் இருக்கிறனர் அது வேறு விடயம்!

    ஆக... உயிர் காக்க ஓடி வந்து மனதில் நாட்டு நினைவுகள் அழுத்த அழுது புலம்புவதை எல்லோருடனும் ஒப்பிடாதீர்கள் என்பதற்காக இவ்வளவும் எழுதிவிட்டேன்!

    கருத்துப் பகுதியில் அதிகமாக எழுதியமை தவறே! நிலையை என் ஆதங்கத்தைத் தெரிவிக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை... பொறுத்திடுக!!! நன்றி சகோதரரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புச் சகோதரிக்கு...
      வணக்கம்.
      நான் உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். உங்கள் கருத்தைப் படிக்கும் போது கண்கள் கலங்கின. இன்று உலக நாடுகள் எல்லாவற்றிலும் வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்லும் நிலைதான் இருக்கிறது. ஆனால் நான் இந்தக் கட்டுரை முழுக்க முழுக்க இந்தியர்கள் குறிப்பாக தென் இந்தியாவில் இருக்கும் இந்தியர்களை வைத்துத்தான் இந்தக் கட்டுரையை எழுதினேனே தவிர மற்ற நாட்டினரைப் பற்றி எழுதவில்லை.

      ஏன் கேரளாக்காரர்களோ, பிலிப்பைனிகளோ தங்கள் குடும்ப கஷ்டத்திற்காக அதிகம் வருவதில்லை. எல்லாருமே பகட்டான வாழ்க்கைக்காகத்தான் வருகிறார்கள்.

      எனக்கும் ஈழச் சகோதர சகோதரிகளின் வாழ்க்கை நிலை தெரியும். ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து என தங்கள் வாழ்வாதாரத்தைத் தொலைத்து விட்டு தஞ்சமடைந்து வாழும் தவிப்பான வாழ்க்கையை நானும் அறிவேன். எனக்கும் உங்களைப் போன்ற முகம் தெரியாத ஈழ உறவுகள் அதிகம் இருக்கிறார்கள்.

      அவர்கள் இப்படியான வாழ்க்கைக்காக வந்தார்கள் என நான் எனது கட்டுரையில் சொல்லவில்லை. தமிழ்நாட்டில் இருந்து வரும் நாங்கள் எல்லாம் பெரும்பாலும் கடனையும், குடும்பநிலையையும் சுமந்துதான் வருகிறோம்.

      கட்டுரையில் ஒரு போதும் வேற்று நாட்டில் இருந்து வந்தவரைக் குறிக்கவில்லை என்பதை தெளிவு படுத்த விரும்புகிறேன்.

      உங்கள் வாழ்க்கையை இந்தக் கட்டுரையில் மற்றவர்களுடன் ஒப்பிடவும் இல்லை... அப்படி ஒப்பிடும் அறுகதையும் எனக்கு இல்லை என்பதையும் தெளிவாகச் சொல்லிக் கொள்கிறேன்.

      நான் யாருக்கும் பதில் கருத்து இந்தளவுக்கு எழுதுவதில்லை... தாங்கள் கருத்தின் வலி என்னை எழுத வைத்தது.

      கருத்துக்கு நன்றி சகோதரி.

      தவறாக நினைக்க வேண்டாம்... என்றும் தொடரட்டும் நம் நட்பு.

      நேசத்துடன்,
      சே.குமார்.

      நீக்கு
    2. அன்புச் சகோதரருக்கு!

      தங்கள் பதிற் கருத்துக் கண்டு மிக்க மகிழ்ந்தேன்!
      நன்றி சகோதரரே!

      தவறாக என்னை எண்ண வேண்டாம்! சில தெளிவு படுத்துதலுக்காகக் தொடர்கின்றேன்!..
      பொறுத்திடுக!..

      பரிசிற்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தங்கள் படைப்பில் எந்தக் குறையோ குற்றமோ இல்லை! அப்படிப் பார்க்கும் மனோ நிலையும் எனக்கில்லை சகோதரரே!

      கட்டுரையிற் பொதுவாகக் குறிப்பிடப்பட்டிருந்த இந்த இடமே,
      // இந்த வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு....//

      எம் நாட்டவர் எல்லோருக்கும் இது பொருந்தாதே என நினைக்கவைத்து
      கருத்துப் பகிர்தலுடன் இதனை எழுதும்படி நேர்ந்துவிட்டது...

      சகோதரரே!.. இன்றும் என் மனத்திலும், என் படைப்புக்களிலும் வலியாகவும் ஏக்கமாகவும் நாட்டின் நிகழ்வும் உறவுகளின் பிரிவும் என்னையும் அறியாமல் இன்னும் தொடர்ந்திடம் பிடிக்கின்றது.
      அதுவே இயல்பாகவும் ஆகிவிட்டது.

      அவ்வகையில் இங்கு உங்கள் கட்டுரையில் பொதுவாகத் தமிழர் என்றவுடன், நாடு வேறானாலும் நமெல்லோரும் இரே இனம் என்ற கருத்தினால்,
      என்னுள் ஏற்பட்ட ஒரு தாக்கத்தினால் இப்படி இனொரு கோணமாகப் பார்த்து எழுதும்படியாகிவிட்டது!

      அதுதவிர உங்கள் எழுத்திற் குறைகண்டோ, எம் உணர்வுகளை நீங்கள் அவமதித்ததாகவோ, புரியவே இல்லை என்றோ கூறவில்லை!

      என் கருத்தினால் தங்கள் மனம் புண்ணபட்டிருப்பின் மன்னிக்கவேண்டித் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்!

      தொடரட்டும் என்றும் நம் வலையுலக நட்பு!..
      மிக்க நன்றி சகோதரரே!

      நீக்கு
    3. அன்புச் சகோதரிக்கு...
      வணக்கம்.

      இம்மாதிரியான கருத்துக்களால்தான் எழுத்தை மெருகேற்றவும் தவறைத் திருத்திக் கொள்ளவும் முடியும்.

      தங்கள் ஆதங்கம், வலி எல்லாம் கருத்தாய் வந்ததில் மகிழ்ச்சியே...

      எதற்காக மன்னிக்க வேண்டும்... நான் தமிழகத்தில் குறிப்பாக தென் தமிழகத்தில் வெளிநாட்டு வாழ்க்கை வாழும் மனிதர்களை சிறுவயதில் உறவாய் பெற்றிருந்தேன்... அப்போது அவர்களின் வலியும் வாழ்க்கையும் எனக்கு புரியாத வயது... புரிந்தபோது வலித்தது... இன்று நானும் வாழ்க்கை என்னும் சுழலில் குடும்பம் விட்டு குழந்தைகள் விட்டு இங்கு தவிக்கும் போது பார்க்கும் தமிழர்கள் சொல்லும் கருத்துக்கள் எல்லாம்தான் இந்தக் கட்டுரை...

      மற்றபடி நாடிழந்து வீடிழந்து உறவுகள் இழந்து வாழ்க்கையை நகர்த்த இடம் பெயர்ந்த எம் ஈழத்துச் சொந்தங்களை இதில் சொல்லவில்லை என்பதை மறுபடியும் சொல்லிக் கொள்கிறேன்.

      தங்கள் கருத்து உண்மையானது... உணர்வுப்பூர்வமானது... தமிழன் என்றதும் எல்லோரும் ஒன்றுதானே என்ற எண்ணத்தினாலானது அதில் தவறு என்று சொல்வது என்ன நியாயம்?

      இந்தக் கருத்தை வாசித்து நீக்கியிருக்கலாம்... எனக்கு அப்படிப்பட்ட எண்ணமெல்லாம் இல்லை... இது எல்லோரையும் சென்றடைய வேண்டிய உண்மையான கருத்து. இதனால் எனது மனம் புண்படவில்லை மேலாக பண்பட்டுத்தான் இருக்கிறது.

      மன்னிப்பெல்லாம் வேண்டாம் சகோதரி... மன்னிப்பதற்கு நான் பெரியவன் அல்ல...

      மன்னிப்பெல்லம் எதற்கு சகோதரி...

      உங்கள் வலிகள் எனக்கும்தான்...

      நன்றி சகோதரி.

      நீக்கு
  11. வாழ்த்துக்கள்! வெளிநாட்டு வாழ்க்கையை சிறப்பாக அலசியுள்ளீர்கள்! பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  12. அண்ணா,
    உங்களுக்கு பரிசுகிடைத்தது குறித்து மகிழ்ச்சியோடு தான் வந்தேன், ஆனால் கட்டுரையை நீங்கள் முடிதிருந்தவிதம் கண்கலங்க செய்துவிட்டது. வயதை தொலைத்து வருமானம் தேடி வீடு திரும்பும் பல சகோதரர்கள், அதற்கு பின் பிள்ளைகள் கல்யாணம் தான் பார்க்கமுடிகிறது. தனக்கான ஒரு அழகான குடும்ப வாழ்கையை அடகு வைக்கவேண்டிய அந்த நிலை உண்மையிலேயே கொடுமையானது. இதில் இளமதி யின் கடிதம் வேறு படித்து கலங்கி போய் இருக்கிறேன். ஈழமக்களின் இந்த நிலைக்கு சுயநலமாய் கள்ள மௌனம் பூசிக்கொண்ட தமிழர்களும் அதாவது, என்னை போன்ற தனிமனிதர்களும் காரணம் என்கிற குற்ற உணர்வு என்னிடம் என்றும் உண்டு. இளமதி அவர்களின் வீரர் நாள் கவிதைக்கு நான் கருத்திடக்கூட இல்லை. அவர்கள் முகத்தில் விழிக்கவே வெட்கமாய் இருக்கிறது:((( இந்த காசையும், போரையும் கண்டுபிடிச்சவன் எவனா இருப்பான்:((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோதரி...
      தங்களின் நீண்ட கருத்துரைக்கு நன்றி.
      உண்மைதான் காசும் போருமே நம்மை எல்லாம் இழக்கச் செய்கிறது.

      நீக்கு
  13. மறந்தே விட்டேன்:))) வாழ்த்துகள் அண்ணா!

    பதிலளிநீக்கு
  14. முதல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அண்ணா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  15. உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வந்த உண்மையான வலிக்கு பரிசு கிடைத்துள்ளது ,வாழ்த்துகள்!
    த ம 8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி...

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  16. மகிழ்ச்சி. தொடர்ந்து மென்மேலும் சாதனை புரிய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா...
      தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

      நீக்கு
  17. வாழ்த்துகள் குமார். எழுத்தின் மேல் உங்கள் ஆர்வத்தைப் பார்த்து பல முறை வியந்துள்ளேன். அதுவும் நீங்க என்ன எழுத வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து அனுபவம் சார்ந்த உங்கள் கட்டுரைகளைக் கண்டு பல முறை மகிழ்ந்துள்ளேன். மேலும் தொடர்ந்து பல பரிசுகள் பெற வாழ்த்துகிறேன் குமார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அண்ணா...
      தங்கள் கருத்துக்கு நன்றி.
      தாங்கள் எழுதும் கட்டுரைகளைப் பார்த்து படித்து வியந்து வாசிப்பேன்...
      தங்கள் வாழ்த்துக்கு நன்றி அண்ணா.

      நீக்கு
  18. முதல் பரிசு கிடைத்திருப்பது அறிந்து மகிழ்ச்சி. நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அக்கா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு

  19. வெற்றி பெற்றமைக்கு எனது வாழ்த்துகள்.
    தங்கள் சிறந்த படைப்பாற்றலுக்குக் கிடைத்த பரிசு.
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி