வியாழன், 11 டிசம்பர், 2014

முண்டாசுக் கவிஞன் பார-'தீ'

"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்."
-'மகாகவி' சுப்பிரமணிய பாரதி


பாரதி...
இவன் முரட்டுக்காளையாய் வலம் வந்த முண்டாசுக் கவிஞன்... முறுக்கிய மீசைக்குள் நறுக்கென சுதந்திரத் தீ வளர்த்த சுதேசிக் கவிஞன்... எமக்குத் தொழில் கவிதை என அனல் தெறிக்கும் கவிதைகளை வார்த்த கவிஞன்.

எட்டயபுரம் கொடுத்த கொடை அவன்... எட்டாத உயரத்திற்கு தமிழால் உயர்ந்தவன். கவிதையை காசாக்கும் வியாபாரியாக இருக்க நினைக்காமல் வேள்வித் தீயை பற்ற வைக்கும் கருவியாக நினைத்தவன். சிறுவயதில் தாயை இழந்தாலும் தாய்த் தமிழை இழக்காமல் கவி பாடி 'பாரதி' என்ற பட்டம் பெற்றவன்.

பெண்ணுரிமை போற்றிய பாரதிக்கு செல்லம்மா சிறுமியாக இருக்கும் போதே மனைவியானாள். பாரதியோ கட்டவிழ்ந்து ஓடும் காட்டாறு... செல்லம்மாவோ மெல்லிய தென்றல்... அவனின் போக்கோடு செல்லம்மாவால் இணைந்து செல்ல முடியவில்லை என்றாலும் இயைந்துதான் வாழ்ந்தாள்.

பாட்டுக்கோர் புலவன் பாரதிக்கோ செல்லம்மா இருக்க கற்பனையான கண்ணம்மா மீது காதல். செல்லம்மா இருக்க இந்தக் கிறுக்கன் கண்ணம்மா... கண்ணம்மான்னு உருகி உருகிப் பாடியிருக்கானே என்று நம்மில் பலர் நினைக்கலாம். செல்லம்மா கட்டுப்பெட்டியாக இல்லாமல் அவன் விரும்பிய வண்ணம் இருக்க வேண்டும் என்று நினைத்து அவன் மனதுக்குள் செல்லம்மாவைச் சமைத்து உருவாக்கிய கற்பனைப் பாத்திரமே கண்ணம்மாவாக இருக்கலாம் அல்லவா? அருகே இருக்கும் மனைவி செல்லம்மாவை காதலிக்கத் தெரியாத பாரதி கற்பனையில் அவளை ஆசை தீர காதலித்திருக்கலாம் அல்லவா?

மீசை வைத்தான்... குடுமி கலைந்தான்.... தெருவிற்குள் மனைவி தோளில் கை போட்டபடி நடை பழகினான்... அவன் பெண்ணடிமைத்தனத்தையும் உடைத்தான்... சாதீய நெறிகளையும் தகர்த்தான். நான் இப்படித்தான்... இதுதான் என் பாதை... இதில்தான் என் பயணம்... நான் வேங்கை... அதிலும் வெறி கொண்ட வேங்கை... சுதந்திர வெறியை காற்றுவெளி எங்கும் பரப்பும் சூறாவளி... சுடும் நெருப்பு... என்று எகத்தாளமாய் முழக்கமிட்டு அவன் வடித்த கவிதைகளில் எல்லாம் சுதந்திரம் என்னும் ஒற்றைச் சொல்லை அள்ளித் தெளித்தான். ஒவ்வொருவருக்குள்ளும் சுதந்திரம் எனது பிறப்புரிமை என்னும் உணர்வை ஊட்டி வளர்த்தவன் அவன்...

கவிஞனாய்... ஆசிரியனாய்... பத்திரிக்கையாளனாய்... சுதந்திர போராட்டக்காரனாய்... பன்முகங்கொண்ட  பாரதி தனது வறுமை நிலையிலும் காக்கை குருவி எங்கள் சாதி என வீட்டில் இருந்த அரிசியை அள்ளிப் போட்டு உயிரினத்தின் சந்தோஷம் கண்டு மகிழ்ந்தவன்... நல்ல குடும்பத் தலைவனாக இருந்தானா என்பதை பெரும்பாலும் வரலாறு பேசுவதில்லை... நாடு... மக்கள்... உயிரினங்கள் என தன் போக்கில் காசி வரை பயணித்தவனுக்கு குடும்ப வாழ்க்கை எப்படி சந்தோஷமாக இருந்திருக்கும்... கண்ணம்மாவான செல்லம்மாவோ 'இந்தக் கிறுக்கனைக் கட்டி வாழ்க்கை போச்சே' அப்படின்னு கண்டிப்பாக மனசுக்குள் நினைத்திருப்பாள். இருந்தாலும் கிறுக்கன் எனக்கானவன் மட்டுமல்ல மக்களுக்கானவன் என வாழப் பழகிக் கொண்டிருப்பாள்.

எது எப்படியோ... இன்று முண்டாசுக் கவிஞனை பெண்ணுரிமை போற்றியவன் என்றும் தீர்க்கதரிசி என்றும் தமிழின் தந்தை என்றும் மக்கள் கவி என்றும்  மகாகவி என்றும் நாம் தலையில் வைத்து ஆடுகிறோம்... கொண்டாடுகிறோம்... ஆனால் அன்று யானை சாய்த்த கவிதைக்காரனின் இறுதிச் சடங்கில் சொற்ப மனிதர்களே கலந்து கொண்டார்கள் என்று வாசிக்கும் போது இன்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் தமிழன் அன்று அவனைக் தூக்கக் கூட கூடவில்லையே என்ற வருத்தம் நெஞ்சுக்குள் தொக்கி நிற்கத்தான் செய்கிறது.

"ஆடுவோமே பள்ளு பாடுவோமே... ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென.." சுதந்திரம் பெற்று விடுவோம் என நெஞ்சில் உரத்துடன் சுதந்திரத்துக்கு முன்னே பாடியவன்... சுதந்திரம் அடைந்து நாம் ஆனந்தக் கூத்தாடியதைக் காணாமலே மறைந்தவன் பாரதி. அவன் விதைத்த வீரியமிக்க கவிதைகள் உலகம் இருக்கும் வரை அவன் புகழ் பரப்பிக் கொண்டே இருக்கும். நமது பார-'தீ' இறவாக் கவிஞன்தான் என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. அவனது கவிதைகள் இறவாக் கவிதைகள்... உலகத்தின் கடைசி உயிர் இருக்கும் வரை பாரதி உன் பெயர் நிலைத்திருக்கும்.

'தேடி சோறு நிதம் தின்று 
பல சின்னசிறு கதைகள் பேசி 
மனம் வாடி துன்பமிகு உழன்று 
பிறர் வாட பல செயல்கள் செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடுன்கூற்றுக்கு இரையென பின் மாயும்
பல வேடிக்கை மனிதரை போல
யானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ?'

நம் தமிழ்க் கவிஞன் பாரதியின் பிறந்தநாளில் அவனை நினைவில் கொள்வோம்.... வாழ்க பாரதி.
-'பரிவை' சே.குமார்.

34 கருத்துகள்:

  1. வெட்டிப்பயல்களுக்கு பிறந்தநாள் கொண்டாடிக்கொண்டு இருக்கும் இந்த சமூகத்தில் வெற்றி வீரனுக்கு நாம் பிறந்தநாள் கொண்டாடுவோம் அருமை நண்பரே....

    த.ம.2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அண்ணா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
    2. ஐயா! சரியாகக் கூறினீர்கள். ' தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..என்பதை தமிழன் என்று சொல்லடா.. தலை குனிந்து நில்லடா.... என்று சொல்ல வேண்டிய நிலையில் தமிழகம் அரிதாரம் பூசிய வேடதாரிகள் பின்னால் சென்றது, செல்கிறது.

      நீக்கு
  2. பாரதி நினைவஞ்சலி அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அம்மா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  3. மகா கவி பாரதியாரின்...பிறந்த நாள்...நினைவு பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  4. வணக்கம்
    அண்ணா.

    பாரதியை நினைவு கூர்ந்த விதம் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ரூபன்...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
      தங்கள் தளம் எனக்கு திறக்கவில்லை... கண் சிமிட்டுகிறது.
      உங்கள் படைப்புக்களை வாசிக்க இயலவில்லை.
      எனக்கு மட்டுதானா இல்லை மற்ற நண்பர்களுக்குமா...?

      நீக்கு
  5. கட்டுரையின் முடிவில் தாங்கள் கொடுத்துள்ள பாரதி பாடல் எவரும் தன்னை உற்சாகப்படுத்திக்கொள்ள சிறந்த பாடல்.அருமை அண்ணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  6. பாரதி போற்றுவோம்
    பாரதி போற்றுவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  7. அனல் பறக்கும் நினைவஞ்சலி
    அருமை சில பகுதிகளை எடுத்து வகுப்பில் படிக்க கொடுக்கலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மது சார்...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
      தங்கள் கருத்து ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது... இப்படியான எழுத்துக்களைக் பகிரத்தான் முயற்சி செய்கிறேன்... 10% கூட இன்னும் எட்டவில்லை என்பதே வருத்தம்...

      நீக்கு
  8. பதில்கள்
    1. வணக்கம் அண்ணா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
      இந்தப் பார்மெட்டில் பதிலளிக்கும் படி மாற்றிக் கொடுத்ததற்கும் நன்றி.

      நீக்கு
  9. அருமையாக நினைவு கூர்ந்திருக்கிறீர்கள். நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அக்கா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  10. மகாகவி பாரதியாரின் பிறந்த நாளில் அவரைப் பற்றிப் படிக்கப் படிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது. வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  11. எப்போது சொன்னாலும் பொருந்தும். எவ்வாறு பாராட்டினாலும் தகும். அதுதான் பாரதி மீதான நம் ஈடுபாடு. நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  12. அருமையான நினைவஞ்சலி! அழகிய தமிழ்! சிங்க நடை! பாரதியைப் போல்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் உறவுகளே...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  13. நண்பர் மலரன்பனுக்கு...
    வணக்கம்.
    ஏதோ எனக்குத் தெரிந்த வகையில் அந்தப் பாடலுக்கான விளக்கத்தைத் தருகிறேன்...

    ஒரு சிறிய நெருப்பைப் பார்த்தேன்... அதை எடுத்து காட்டில் இருந்த ஒரு மரத்தின் பொந்தில் வைத்தேன்... காடு முழுவதும் எரிந்து போனது என்பதாகத்தான் முதல் இரண்டு வரிகள் படிக்கும் போது நமக்குத் தோன்றும்.

    மூன்றாவது வரியைப் பாருங்கள். அது பாட்டின் போக்கை மாற்றுகிறதல்லவா?
    நாட்டில் நடக்கும் அடம் அக்கிரமங்களை எல்லாம் அளிக்க வீரம் வேண்டும் அந்த வீரம் சிறியவர் பெரியவர் என்ற போதத்தில்லை... நான் சின்ன சிந்தனை நெருப்பை சிலரிடம் கொண்டு சென்றேன்... அது பற்றி எரிந்தது என்பதாக வரும்.

    கடைசி வரியில் அவன் தத்திர தரிகிடத்தோம் என சந்தோஷக் கூத்தாடுகிறான். இன்றைக்கு நாம் எழுதும் எல்லாவற்றிற்கும் விளக்கஉரையும் போட்டு விடுகிறோம்... அன்றைய கவிஞர்கள் என்ன எழுதினார்கள் என்பதை விளக்க உரை எதுவும் போடவில்லை...

    அவர் மனதில் சுதந்திர தாகம்... அதற்கான கவிதைகளை கனலாகக் கக்கினார்...
    இதுதான் எனது விளக்கம் நண்பரே...
    நன்றி.

    பதிலளிநீக்கு
  14. மகா கவியின் பாதம் பணிந்து வணங்குகிறோம்

    பதிலளிநீக்கு
  15. எனக்கு குழப்பமே மிஞ்சுகிறது. தமிழாசிரியர் ஒருவரிடம் கேட்பதுதான் நன்று. பாரதி பித்தர்கள் தமிழ் வல்லுனர்கள் அல்ல.

    வீரத்தில்....என்ற வரி பாட்டின் போக்கை மாற்றுகிறது என்கிறீர்கள். அப்படி மாற்றியதாக எனக்குத் தோன்றவில்லை. போக்கை ஏன் கவிஞன் மாற்ற வேண்டும் என்ற கேள்வியை நீங்களே கேட்டுக்கொள்வது நன்று.

    ஒரு சிறு தீப்பொறி ஒரு பெருங்காட்டை அழிக்க வல்லது. முதல் மூவரிகளின் உட்கருத்து இதுவே. அக்காட்டை நாம் - அதாவது நீங்கள் சொல்லியவண்ணம் நாட்டில் நடக்கும் அடங்கவொண்ணா தீச்செயல்களின் மொத்தவுருவாக‌ எடுத்து அதை நாம் அழிக்க முடியும். நமக்கு வேண்டியது வீரம். அதாவது ஒரு தனிமனிதனிடம் சிறிதளவு இருந்தால் போதும்; அனைவரும் சேரும் போது பெரும் அசக்கவியலா சக்தியாக மாறும். அதை வைத்து எதிரிகளின் கூட்டத்தை விரட்டியடிக்கமுடியும். ஆகவே, இவர், அவர் என்ற வேறுபாடில்லாமல், (சிறியோர், பெரியோர் என்கிறார்) அனைவரும் இவ்வேள்வி வெற்றியடைய ஒன்றுபட்டுச் செயலாற்ற வேண்டும் என்கிறார்.

    பாட்டின் முதல் மூவரிகளை ஒரு கருத்தைச்சொல்ல, நான்காவது வரியை வைத்து முதல் மூவரிகளின் கருத்தைக் கடாசி விட்டால் அது வெறும் வெட்டிக்கவிதையாகும், சொல்லவந்து கருத்து நசித்துப்போகும்.

    இது சுதந்திர வேட்கையையும் அதை அடைய அந்நிய சக்திகளை விரட்ட ஒன்று படவேண்டுமென்ற உணர்ச்சியை ஊட்டவும் எழுதப்பட்ட கவிதை.

    சுதந்திரப்போராட்டக்காலத்தில் இருவகை மாந்தர்கள் உருவானார்கள்: ஒருவர்: தீவிரவாதிகள். தீவிரமும் வன்முறையும் வைத்தே வெள்ளையரை விரட்ட முடியும் என்று நம்பி மக்களை தம் தீவிரப்பேச்சுக்களினால் எழுப்பினர்; அதன் விளைவுகளின் ஒன்றே வாஞ்சிநாதன் ஆஷை அவர் மனைவி குழந்தைகள் முன்னாலே சுட்டுக்கொன்றது. இன்னொருவர்: மிதவாதிகள். பேச்சுவார்த்தைகள். ச்த்யாக்கிரஹம், தொடர் வன்முறையற்றப் போராட்டத்தினால் வெள்ளையரை விரட்ட முடியும் என்ற கொள்கையைப் போதித்தனர். காந்தி போன்றோர்.

    பாரதியார் இவ்விருவரின் முதல்வகையினர் என்பதை இக்கவிதை காட்டுகிறது.

    பதிலளிநீக்கு
  16. பாரதியின் நினைவஞ்சலிக்கு அழகான உங்கள் எழுத்தால் மகுடம் சூட்டியிருக்கிறீர்கள்!!

    இதே அருமையான எழுத்திற்கு அதனால்தான் தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்திய கட்டுரைப்போட்டியில் முதல் பரிசு கிடைத்திருக்கிறது! மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  17. முண்டாசுக் கவிஞனுக்கு முத்தான அஞ்சலி !
    த ம 7

    பதிலளிநீக்கு
  18. அருமையான நினைவஞ்லி பாரதியாருக்கு.
    வாழ்த்துக்கள் குமார்.

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி