'தாயே கருமாரி... எங்கள் தாயே கருமாரி...
தேவி கருமாரி... துணை நீயே மகமாயி...'
- என்ற பாடல் வரிகளை
எப்போது கேட்டாலும் பக்தி பரவசம் அடையச் செய்துவிடும். அம்மன் கோவில் விழாக்களில் எல்லாம் திருமதி. எல்.ஆர். ஈஸ்வரி அவர்களின் கம்பீரக் குரலில் இந்தப் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கு. குறிப்பாக பங்குனி மாதம் முதல் ஆடி மாதம் வரை எங்கள் ஏரியாவில் எந்தப் பக்க்ம் சென்றாலும் இந்தப் பாடல்களைக் கேட்கலாம். எனக்கு இந்த அம்மன் பாடல்களை கேட்பதில் அவ்வளவு ஆனந்தம். நானும் அப்போது ஒரு பாடகனாகி வரிகளோடு வசியப்பட்டு பாட ஆரம்பித்து விடுவேன். ஆனா எனக்கு மட்டுமே கேட்கும்படி ஏன்னா நான் பாத்ரூம் பாடகன் கூட கிடையாது.
எத்தனையோ பேர் அம்மன் பாடல்களைப் பாடியிருந்தாலும் திருவிழாக்களில் கரகம் எடுத்து வரும் போதோ அல்லது பூக்குழியின் போதே இந்தப் பாடல்கள் ஒலித்தால் போதும் சாமி ஆடுபவர்கள் மட்டுமின்றி பார்வையாளராக வந்தவர்களும் ஆட ஆரம்பித்து விடுவார்கள். எல்லோரையும் ஆட வைக்கும் பாடல்களாக இவை இன்றும் தொடர்கின்றன. சாமி வந்தவரை பிடித்துக் கொண்டு வரும்போது பக்கத்தில் வருபவர் 'ஏய்ய்ய்ய்... ஆத்தா...' என ஆட ஆரம்பித்து விடுவார். அந்தளவுக்கு இந்தப் பாடல்கள் ஒரு ஈர்ப்பு உடையவை.
'செல்லாத்தா... செல்ல மாரியாத்தா...
எங்கள் சிந்தையிலே வந்து நில்லாத்தா'
- என்று ஈஸ்வரி
அவர்களின் குரல் ஒலித்தால் அந்த அம்மனே செல்லமாக சிரித்து எழுந்து வந்து விடுவாள். ஊரில் திருவிழாவின் போது மைக் செட் போட வரும் முருகனிடம் அம்மன் பாடல்கள் இருக்குமே தவிர எல்.ஆர். ஈஸ்வரி பாடல்கள் இருக்காது. எப்போது என்னிடம் இருக்கும் அம்மன் காசெட்டைத்தான் கொடுப்பது வழக்கம். இந்த முறை கூட அவன் போட்ட பாடல் சாமி வருவதற்கான அறிகுறி காட்டாத பாடல்தான். என்னிடம் அந்த கேசெட்டும் இல்லை... அவனும் இப்போ சிடி/பென்டிரைவுக்கு மாறியாச்சு.
தேவகோட்டை அருணகிரிப்பட்டினம் மாரியம்மன் கோவில் திருவிழா மிகவும் சிறப்பானது. பூக்குழி அன்று கோவில் வளாகத்துக்குள் 'மாரியம்மா.. எங்கள் மாரியம்மா...', என எல். ஆர். ஈஸ்வரியின் கணீர்க் குரல் ஒலித்துக் கொண்டிருக்கும். பால் குடம் எடுத்து வருபவர்களும் வேல் போட்டவர்களும் அதுவரை சாமி ஆடி வந்திருந்தாலும் அந்தப் பாடல்களைக் கேட்டதும் ஆட்டம் போட ஆரம்பித்து விடுவார்கள். அவர்களை பிடித்துக் கொண்டு போய் சேர்ப்பது அவ்வளவு சுலபமில்லை. அதிலும் சாமி வருபவர்கள் பால் குடம் எடுப்பவர்களைப் பிடித்திருந்தால் அவ்வளவுதான் பிடித்திருந்தவரை விட்டுவிட்டு அவரும் ஆட ஆரம்பித்து விடுவார். இது எங்க ஊர் பால்குடத்தின் போதும் நடக்கும்.
கோவில் திருவிழாக்களில் எத்தனை பாடல்கள் ஒலித்தாலும் பெரிய பெரிய ஸ்பீக்கர் வைத்து இன்று வந்த அம்மன் பாடல்களை எல்லாம் 'கும்..கும்' என்ற இசையுடன் ஒலிக்க விட்டாலும் அன்றைய இசையில் சுத்தமான தமிழ் உச்சரிப்பில் கணீர்க்குரலில் ஈஸ்வரி அம்மாவின் குரலில் 'வேற்காடு வாழ்ந்திருக்கும்...' என்றோ 'கருணை வடிவானவளே...' என்றோ 'தாயே கருமாரி... எங்கள் தாயே கருமாரி...' 'கற்பூர நாயகியே கனகவல்லி' , என்றோ பாடல்கள் ஒலித்தால் கோவில் வாசலில் கூடி இருக்கும் ஜனங்களில் பெரும்பாலானோருக்கு சாமி வரும் என்பதில் சந்தேகமே இல்லை.
எங்கள் ஊரில் அம்மன் கரகம் எடுத்து வரும்போது 'ஏப்பா... நல்லா சாமி வர்றமாதிரி எல்.ஆர்.ஈஸ்வரி பாட்டை போடச்சொல்லுங்கப்பா' என்று சொல்வார்கள். நான் முன்னமே சொன்னேனே எங்கள் ஊர் மைக்செட்காரரிடம் அந்தப் பாடல்கள் மட்டும் இருக்காது என்று... இருக்காதா அல்லது எங்க ஊருக்கு கொண்டு வரமாட்டாரா தெரியாது. எப்பவும் திட்டுத்தான் வாங்குவார். நாம கேசெட் கொடுத்தாலும் மற்ற நேரங்களில் அதைப் போடுவார். சரியாக கரகம் எடுத்து வரும் போது எதாவது கேட்காத பாடலாகப் போடுவார். அப்புறம் எப்படிங்க ஒரு மிகச் சிறப்பான ஆட்டத்தைப் பார்ப்பது. எல்லா இடங்களிலுமே ஈஸ்வரி அம்மாவின் பாடல்களால்தான் அந்த ஈஸ்வரி இறங்கி வருகிறாள் என்பதை கோவில் விழாக்களில் முழங்கும் அவரின் பாடல்கள் சொல்லும். ஆனால் எங்க ஊரில் எப்போதும் எதாவது ஒரு பாடலைப் போட்டு திட்டு வாங்குவார். அம்மன் கரகம் வரும்போதுதான் பிள்ளையார் பட்டி பிள்ளையாருக்கும் மகாநதி ஷோபனா பாடிய பாடலைப் போடுவார்.
'கண்ணபுர நாயகியே மாரியம்மா
நாங்க கரகம் ஏந்தி ஆட வந்தோம் பாருமம்மா..'
- என்று தங்களை
உந்தன் கடைக்கண்ணால் பாருமம்மா என்று கேட்கும் ஈஸ்வரி அம்மா சினிமாவில் 'வாராயோ தோழி வாராயோ', 'எலந்தப் பழம்... எலந்தப் பழம்','காதோடுதான் நான் பேசுவேன்' 'பட்டத்து ராணி பார்க்கும் பார்வை' என இன்றும் ரசித்துக் கேட்கும் பல பாடல்களை ஜானகி அம்மா. சுசிலாம்மாவுக்கு இணையாகப் பாடியிருக்கிறார். அவர்கள் கோலோச்சியிருந்த காலத்தில் இவரும் தனக்கென தனி இடத்தைப் பிடித்து வைத்திருந்தார். இளையான்குடியை பூர்வீகமாகக் கொண்ட கிறிஸ்தவக் குடுபத்தில் பிறந்திருந்தாலும் என்றென்றும் சாகவரம் பெற்று தமிழக கோவில்களில் எல்லாம் கணீர் குரலில் ஒலிக்கும் அம்மன் பாடல்கள் அவரை காலங்கள் கடந்தும் எல்லோர் மனதிலும் மதிப்புமிக்க இடத்தில் வைத்திருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன. சிறந்த குரலுக்குச் சொந்தக்காரரான அம்மன் பாடல்களின் நாயகி இன்னும் நிறைய பாடல்களை கருமாரிக்கு பாட வேண்டும்.
* படங்கள் மற்றும் பாடல்களுக்கு நன்றி இணையத்திற்கு...
மனசு தொடர்ந்து பேசும்.
முந்தைய பகிர்வான கிராமத்து நடையில் வளரும் தொடர்கதை 'வேரும் விழுதுகளும் படிக்காதவங்க இங்கு சொடுக்குங்கள்...
முந்தைய பகிர்வான கிராமத்து நடையில் வளரும் தொடர்கதை 'வேரும் விழுதுகளும் படிக்காதவங்க இங்கு சொடுக்குங்கள்...
-'பரிவை சே.குமார்.
புதிய தகவல் இவர் கிறிஸ்தவர் வம்சம் என்பது!
பதிலளிநீக்குaஅருமையான பாடல்களின் தொகுப்பு.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஎல்.ஆர்.ஈஸ்வரி பற்றிய உண்மைத் தகவல் நிறைவைத் தருகிறது.
சிறந்த பதிவு
தொடருங்கள்
நீங்கள் குறிபிட்ட பாடல்கள் எல்லாம் எனக்கும் மிக பிடிக்கும்.
பதிலளிநீக்குசிறு வயதில் ஈஸ்வரி அவர்களின் கச்சேரிகளை நேரில் மூன்று முறை கேட்டு மகிழ்ந்து இருக்கிறேன். விருதுநகர், சிவகாசி, தேனி இந்த ஊர்களில் இருந்த போது.
அருமையான பாடல் பகிர்வு.
நன்றி.
எல் ஆர் ஈஸ்வரியின் பாடல்கள் இன்னும் கூட இருக்கின்றன. அது சரி, எல்லாவற்றையும் சொல்ல பதிவில் இடமேது? :))))))
பதிலளிநீக்குதிருவிழா காலங்களில் இவர் குரல் கேட்காத கிராமத்து வீதிகளே இல்லை எனும் அளவு அருமையாக பாடக்கூடியவர் இல்லையா!! அருமை அண்ணா!
பதிலளிநீக்குஆஹ! எல் ஆர் ஈஸ்வரியின் பாடல்கள் ஒலிக்காத் கிராமங்களே இருக்க முடியாதே! அதுவும் அம்மன் விழா என்றால் கேட்கவும் வேண்டுமா!
பதிலளிநீக்குஅவர் பாடும் விதமும் அழகாய் இருக்கும்! நீங்கள் சொல்லியிருப்பது போல்1 அருமை
எல்.ஆர் ஈஸ்வரியின் பாடல்கள் காலத்தை வென்றவை! எனக்கும் மிகவும் பிடிக்கும் அவரது அம்மன் பக்திப்பாடல்கள்!நன்றி!
பதிலளிநீக்குஅவருடைய பாடல்கள் கேட்க கேட்க நம்மை கட்டிப்போட்டார் போல் செய்து விடும். கணீர் குரல்...மேலும் பாடவேணும் ...
பதிலளிநீக்குஈஸ்வரி கிறித்தவரா
பதிலளிநீக்குஅறியாத செய்தி நண்பரே
ஈஸ்வரியின் குரல் என்றென்றம் நினைவில் நிற்கும்
நன்றி நண்பரே
தம +1
நமது கலாச்சார அடையாளங்களில் ஓருவர் ஈஸ்வரி அம்மா...
பதிலளிநீக்குநல்ல பதிவு
படிக்கும் பொழுதே பாடல்கள் காதில் எதிரொலித்தன
த.ம ஐந்து
பதிலளிநீக்குதேவகோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டதுபோல் இருந்தது நண்பரே,,,