முந்தைய பகுதிகள் :
ஏழாவது பகுதியின் இறுதியில்...
"உனக்கென்ன அறிவு கிறிவு கெட்டுப் போச்சா... மாமனாருக்கிட்ட வாங்கிக் கொடுடான்னு நா எப்படி கேக்குறது...?"
"கேளுங்கன்னா கேளுங்க... இப்படி பேசிப் பேசித்தான் எதுவுமில்லாம நிக்கிறோம்... எம்புட்டு நாளைக்குத்தான் இப்படியே இருக்கது... வாங்குறது வாய்க்கும் கைக்கும் பத்தல... கேட்டா என்ன கொறஞ்சா போயிடுவீக... இது வேண்டான்டா இந்த வருச வெவசாயம் முடிஞ்சதும் இருக்க சொத்த பங்கு வைக்க சொல்லுங்க... இப்ப கடன ஒடன வாங்கி எடத்தை வாங்கிட்டு அப்புறம் ஊர்ல எடத்தை வித்துட்டு கடனைக் கட்டிக்கலாம்... " என்று மூக்கைச் சிந்தியபடி பாகப்பிரிவினைக்கு அடிப்போட்டவளுக்கு என்ன பதில்சொல்வது என்று தெரியாமல் விழித்தான் மணி.
இனி...
தம்பியிடம் கேளுங்க இல்லாட்டி அவரது மாமனாரிடம் வாங்கித் தரச் சொல்லுங்க என்ற சித்ரா, இல்லைன்னா சொத்த பங்கு வைக்கச் சொல்லுங்க என்று சொன்னதும் அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் தவித்தான் மணி.
"என்ன நாஞ் சொல்லிக்கிட்டு இருக்கேன்... நீங்க என்னடான்னா எரும மாட்டு மேல மழ பேஞ்ச மாதிரி இருக்குறீக..." கடுப்பாகச் சொன்னாள்.
"என்னய என்ன சொல்லச் சொல்றே?"
"உங்கள ஒண்ணுஞ் செய்யச் சொல்லல சாமி... உங்க தம்பிக்கிட்ட கொஞ்சம் காசு கேளுங்கன்னு சொன்னேன்..."
"என்னடி புரியாம பேசுறே... அவனே இப்பத்தான் லோனைக் கீனைப் போட்டு வீடு கட்டியிருக்கான்... அவனுக்கிட்ட காசு இருக்குமா என்ன... மகா படிப்புக்கு அவந்தான் அப்ப அப்ப பணம் கொடுக்கிறான்... அவனே மாமனார்கிட்ட கேப்பானான்னு தெரியல... நமக்காக கேக்கச் சொன்னா என்ன நினைப்பான்... அப்புறம் அப்பா அம்மா காலத்து வரைக்கும் சொத்த பிரிக்க வேண்டாம்... அது பாட்டுக்கு கிடக்கட்டும்... அவரால முடிஞ்ச வரைக்கும் பாக்கட்டும்... நாம பிரிச்சி என்ன அங்க போயா வெவசாயம் பண்ணப் போறோமுன்னு நானும் அவனும் பேசியிருக்கோம். இப்ப சொத்த பிரிப்போமுடான்னு சொன்னா..."
"என்ன ஐயாவுக்கு மானம் போயிருமோ... எல்லாத்துக்கும் நீங்களே பதில் சொல்லிருங்க... நமக்கு உங்க பூர்வீக சொத்து வேணாம். அதையெல்லாம் அவரே எடுத்துக்கிட்டு இன்னைக்கி வெல என்னவோ அதை நாலு பேர வச்சி முடிவு பண்ணி கொடுக்கட்டும்.. நாம அண்ண வீட்டுகிட்ட இருக்க எடத்தை வாங்கி வீட்டைக் கட்டிப்போம்... இங்க பாருங்க... கல்லெறிஞ்சாத்தான் காய் விழும்... அதுக்காக காத்துக்கிட்டு இருக்க முடியாது. அவருக்கிட்ட நீங்க பேசுறியளா... இல்ல நா பேசவா?"
"ஆத்தா... நீ ஒண்ணும் பேச வேணாம்... நா அவங்க்கிட்ட நாளைக்கி பேசுறேன்..."
"நல்ல நாள் பாத்துத்தான் பேசுவிகளோ... இன்னைக்கி பேசுங்க... அதுவும் இப்ப பேசுங்க..."
"ராத்திரியில அவனுக்கிட்ட இதைப் பத்தி பேசணுமா?"
"பேசப் போற காரியத்துக்கு ராத்திரி என்ன பகலென்ன... பேசுங்கன்னா... எனக்குன்னு வந்து நல்லா வாச்சிருக்கு பாரு... ஒண்ணத்துக்கு லாயக்கில்லாம... அன்னைக்கே தேரையூர் ராசுக்கு கேட்டானுங்க... எங்கப்பன் நொக்கா வீட்டுலதான் கட்டுவேன்னு நின்னு இப்புடி ஒண்ணத்துக்கும் லயக்கில்லாத ஒருத்தருக்கு கட்டி வச்சி என்னைய காலம் பூராம் கஷ்டப்பட விட்டுட்டாரு... அந்த மனுசன் நல்ல சாவே சாவ மாட்டாரு.... இன்னைக்கி அந்த ராசு கோடிக்கணக்குல சம்பாரிச்சி பெரிய லெவல்ல இருக்காரு..."
"ம்... அந்தாளுக்கு வந்தவ மகராசியா இருக்கா... நீ போயிருந்தியன்னா அங்கயும் நக்கிக்கிட்டுத்தான் இருக்கணும்... பேச்சைப்பாரு பேச்சை... பொண்ணைக் கட்டிக்கொடுக்கப் போற வயசுல அவனுக்கு கேட்டாக இவனுக்கு கேட்டாகன்னு... இத்தனை வருசத்துல உன்னைய என்னடி கஷ்டப்பட வச்சிருக்கேன்... ஏதோ நா வாங்குற சம்பளத்துல நம்ம பொழப்பு நல்லாத்தான் போயிக்கிட்டு இருக்கு... ராஜகோபுரத்துல உன்னைய ஏத்தி உக்கார வைக்கலைன்னாலும் கோயிலுக்குள்ளதானே இருக்க வச்சிருக்கேன்... சும்மா வாய்க்கு வந்ததை பேசி என்னைய டென்சனாக்காதே... இப்ப என்ன குமரேசங்கிட்ட பணம் கேக்கணும் அதானே... கேட்டுத் தொலைக்கிறேன்.."
'ஆத்தாடி இந்தாளுக்கு இம்புட்டுக் கோபம் வருது... என்னைய அங்க கேட்டாக இங்க கேட்டாகன்னு ஒரு பிட்டைப் போட்டா எப்பவும் சிரிச்சிட்டு போற மனுசனா இப்படி கத்துறாரு... வயசானா கோபம் கூடும் போல' என்று நினைத்துக் கொண்டு கோபமாக இருப்பது போல் பேசாமல் இருந்தாள்.
"அம்மா... அப்பாவுக்கு ஆபீசிலும் டென்சன்... வீட்லயும் டென்சன்னா எப்படிம்மா... எப்பவுமே எதாவது பேசி அப்பாவை ஏம்மா டென்சனாக்குறே... இப்ப உங்கண்ணன் வீட்டுக்கிட்ட இடம் வாங்கி வீடு கட்டலைன்னா என்ன... சும்மா அவரைப் போட்டு படுத்திக்கிட்டு..." இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த மகா கத்தினாள்.
"ஏய்... பெரியவுக பேசயில உனக்கென்ன வேல... நீ படிக்கிறதை மட்டும் பாரு.. எனக்கு புத்திமதியெல்லாம் சொல்ல வேண்டாம்..."
"ஆமா... எல்லாத்துக்கும் கத்துறதை எப்பத்தான் நிறுத்தப் போறீகளோ...?" என்றபடி அங்கிருந்து எழுந்தாள்.
"மகா... நீ சும்மா இருடா... அப்புறம் உங்கிட்டயும் கத்த ஆரம்பிச்சிருவா..." என்று சொல்லிச் சிரித்தான். மகாவும் சிரித்துக் கொண்டே தனது அறைக்குச் செல்ல தம்பிக்கு போன் பண்ண மொபைலை எடுத்தான்.
"என்னங்க... " கணவனின் நெஞ்சில் தலைவைத்துக் படுத்திருந்த அபியின் அழைப்புக்கு 'ம்' என்றான் குமரேசன்.
"லீவு வருதுல்ல... கருதறுப்புக்கு ஊர்ல போயி இருந்தா அவங்களுக்கும் உதவியா இருக்கும். நானும் பிள்ளைகளும் அங்க் போயி ஒரு பத்து நாள் இருந்திட்டு வர்றோம். அப்புறம் பொங்கலுக்கு எல்லாரும் போகலாம்... சரியா?"
"கருதறுப்புக்கு நீயும் உன்னோட பிள்ளைகளும் உதவியா... அதுசரி நீங்க போனா அவங்களுக்கு உபத்திரவம்தான்... பேசாம உங்கப்பா வீட்டுக்கு பொயிட்டு வாங்க... அவரு ஆளுகள வச்சி கருதறுத்துக்குவாரு..."
"நா போனா வயலுக்குப் போகாட்டியும் அடுப்புல போட்டு எறக்குறதெல்லாம் செய்வேனுல்ல... அத்தைக்கு உதவியா..."
"டீச்சருக்கு ஏன் இந்த வேல... கல்யாணம் முடிஞ்சி ஊருக்கு வந்தவ நெல்லுக் காக்கிற மரத்தைக் காமிங்கன்னு சொன்னே... நீ கருதறுக்க..." சிரித்தான்.
"ம்... சிட்டிக்குள்ள இருந்தவங்க நாங்க... உங்கள மாதிரி எருமை மாட்டுப் பின்னாடியா திரிஞ்சோம்.. எல்லாந் தெரிய..." அவனது நெஞ்சில் கோலம் போட்டவள் முடியைப் பிடித்து இழுத்தாள்.
"ஏய்... வலிக்குதுடி... சரி... சரி... போங்க... என்ன நம்ம நாலு பேருக்கு சமைக்கவே தரிகிணத்தோம் போடுற நீ... முப்பது நாப்பது பேருக்கு சமைச்சிப் போடுறேன்னு சொல்லுறே... அத நினைச்சாத்தான் பாவமா இருக்கு..."
"யாரு பாவம்... நானா?"
"நீ சமைச்சிப் போட்டு சாப்பிடப் போற வேலையாட்கள்தான் பாவம்..."
"ஐயாவுக்கு கொழுப்பு அதிகமாயிருச்சு.... கொஞ்ச நாளைக்கு சாப்பாட்டை குறைக்கணும்.."
"எந்தச் சாப்பாட்டை..?"
"ம்... எல்லாச் சாப்பாட்டையுந்தான்..." என்று அவள் முறைக்க அவனின் போன் அழைத்தது.
"அந்த போனை எடுடி... இந்த நேரத்துல யாரு... அபீசில இருந்தா..." என்று சொல்ல, போனை எடுக்க எழுந்த அபி "சிவ பூஜையில மொபைல் கரடியா?" என்று சிரித்தபடி எடுத்து "மணி மாமா" என்றபடி கொடுத்தாள்.
"என்ன இந்த நேரத்துல கூப்பிடுது?" என்றபடி ஆன் செய்து "என்னண்ணே... என்ன இந்த நேரத்துல கூப்பிடுறே... எதாவது பிரச்சினையா?"
"ஏய் அதெல்லாம் ஒண்ணுமில்லடா... உங்கிட்ட கொஞ்சம் பேசணும்... படுத்திட்டியோ?"
"இல்ல... சொல்லு.,.."
"அது... எனக்கு..." எப்படி கேட்பது என யோசனையில் இழுத்தான்.
"என்ன எதாவது காசுப் பிரச்சினையா?"
"ம்... ஒரு எடம் ஒண்ணு கொறச்ச வெலக்ககி வருது... வாங்கிப் போட்டா பின்னாடி வீடு கட்டிக்கலாம்... "
"ம்.. எங்கே... திருச்சியிலயா?"
"இல்ல காரைக்குடியில... மச்சினன் வீட்டுக்குப் பக்கத்துல... இங்க வாங்கி சரியா வராது... ஊருப்பக்கம்தான் சரியா வரும்... அதான்..."
"சரி... அதுக்கு நா என்ன பண்ணனும்..?"
"இல்ல பணம் இருந்தா..."
"எம்புட்டுண்ணே?"
"ஒரு மூணு லெட்சம்..."
"மூணா... என்னண்ணே வெளையாடுறியா... வீட்டைக் கட்ட லோனப் போட்டு ரெண்டு பேரும் கட்டிக்கிட்டு வாறோம்... என்னால முடிஞ்சதை பிரட்டித்தாறேன்.... நீ எதிர் பாக்குறதெல்லாம் கஷ்டம்ண்ணே..."
"இதை விட்டா அப்புறம் வாங்குறது கஷ்டம்... இது நல்ல சான்ஸ்... நானும் நகை கிகையை வச்சி பணம் புரட்டிக்கிறேன்... லோனுக்கும் கேட்டுப் பாக்குறேன்.. அது கொஞ்சம் லேட்டாகும்.. இப்பக் கொடு லோன் வந்ததும் திருப்பிக் கொடுத்துடுறேன்..."
"அண்ணே நீ திருப்பிக் கொடுப்பே இல்லேன்னு சொல்லலை... அம்புட்டுப் பணத்துக்கு நா எங்க போவேன்..."
"உன்னோட மா... மாம...னா...ர் கிட்ட கே...கேட்...டு...ப் பா....க்...கி...றி...யா?" மெதுவாக இழுத்தான்.
"என்ன? இங்க பாருண்ணே... நா வீடு கட்டும் போதே அவருக்கிட்ட கேக்கலை... உனக்கே தெரியும் எங்க மேரேஜ்க்கு எல்லாரும் எதிர்த்துத்தான் பின்னால ஒத்துக்கிட்டீங்க... அதனால அவருக்கிட்ட நா அதிகம் பேசுறதில்லை... இப்பவும் அபிக்கிட்டயும் பேரன் பேத்திக்கிட்டயும் பேசுவாரு.. எங்கிட்ட எதுவும் பேச மாட்டாரு... அவருக்கிட்ட போயி..." என்று குமரேசன் சொல்ல என்ன என்பது போல் அபி புருவத்தை உயர்த்த, ஒண்ணுமில்ல என சைகை செய்தான்.
"ம்... எனக்கும் தெரியிது.. எனக்கு உன்னை விட்டா ஆளில்ல... அவ அண்ணனும் கொஞ்சம் பணம் தர்றேன்னு இருக்காரு... பேசாம நம்ம சொத்துப்பத்து வீடுவாசல் எல்லாத்தையும் நீயே எடுத்துக்கிட்டு எனக்கு ஒரு வெல வச்சிக் கொடுத்துடு... " மனைவி சொன்னதை அப்படியே சொல்லி முடித்தான் மணி.
"என்னது நம்ம பரம்பரை சொத்துக்கு ஒரு வெல வச்சிக் கொடுக்கவா...?" அதிர்ச்சியாய் கேட்டான் குமரேசன்.
(வேரும் விழுதுகளும் வளரும்)
-'பரிவை' சே.குமார்.
சுவாரஸ்யம் கூடுகிறது! தொடர்கிறேன்! நன்றி!
பதிலளிநீக்குவாழ்வியல் நெருக்கடிக்கு கடி பூர்வீக சொத்து என ஆகிவருகிறது. பூர்வீகத்தின் மணம் தெரியாமல் அழிக்கவே நினைக்கிறார்கள்...நிதர்சனமாய் நடை போடுகிறது கதை.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குநன்றாக போகிறது நண்பரே...
பரம்பரை சொத்துக்கு ஒரு வெல வச்சிக் கொடுக்கவா...?" /
பதிலளிநீக்குஎத்தனை சுலபமாக வார்த்தை வந்துவிட்டது..!
நெருக்கடி வரும் போது எல்லோருக்கும் பூர்விக சொத்து நினைவுக்கு வந்து விடுகிறது.(அது இல்லையென்றால் என்ன செய்வார்கள்)
பதிலளிநீக்குபெற்றோர் வருத்தபடுவார்களே, என்ற எண்ணம் வந்தாலும் அவர்களால் தவிர்க்க முடியாத சூழ்நிலையை சொல்கிறீர்கள்.
கதையை தொடர்கிறேன்.
ம்ம்மிது போன்ற ஒருனிகழ்வு எங்கள் உறவினர் வீட்டிலும்....னெருக்கடிகள் வரும்போது பூர்வீக வீட்டை, சொத்தை பங்கு போட வைப்பது.....என்னவோ தெரிய வில்லை மனம் என்னவோ செய்கிறது இது போன்றவற்றைப் படிக்ககும் போது! வீட்டுக்க் வீடு வாசப்படியொ?!! கோமதி மேடம் சொல்வது போல் அது இல்லையென்றால் என்ன செய்வார்கள்?!!! ம்ம்ம் சரியான கேள்வி இதுதான் எங்கள் மனதிலும் எழுந்தது எங்கள் வீட்டின் நிகழ்வின் போது!
பதிலளிநீக்குயதார்த்த னிகழ்வுகளுடன் கதை....தொடர்கின்றோம்!
பதிலளிநீக்கு