புதன், 14 ஆகஸ்ட், 2013

சுதந்திர தினம் சில நினைவுகள்


independence day photo IndianWavingFlagAnimation28229.gif


***********************

முதலில் எல்லோருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

பள்ளியில் படிக்கும் போது சுதந்திரதினம் என்பது கொடியேற்றி மிட்டாய் கொடுக்கும் தினமாகத்தான் இருந்தது. அன்று ஒருநாள் விடுமுறை. புத்தக மூட்டைக்குள் சத்துணவுக்கான தட்டை வட்டவடிவமாக வைத்து தோளில் சுமந்து சென்று படிக்கும் எங்களுக்கு புத்தக மூட்டை சுமக்காமல் சந்தோஷமாக பள்ளிக்குச் செல்லும் ஒரு சில விடுமுறை நாட்களில் இதுவும் ஒன்று. அவ்வளவுதான்.

பள்ளியில் சுந்தர வாத்தியாருக்கு முன்னால எல்லாருக்கும் சுதந்திரம் பறி போயிடும்... எத்தனை சத்தமாக இருந்தாலும் மனுசன் அந்தப்பக்கம் வந்தா குண்டூசி போட்டாக்கூட கிணிங்குன்னு சத்தம் கேட்கும். அந்தளவுக்கு அந்த இடம் அமைதியாயிடும். எல்லாரையும் அவரு வகுப்பவாரியா வரிசையா நிக்கச் சொல்வாரு... எல்லாரும் நின்னதும் தலைமை ஆசிரியர் காகிதப்பூக்களை சுமந்த கொடியை ஏற்றி இழுத்துவிட பூக்கள் அவர் தலைமீதே விழும். அப்படி இப்படின்னு அதிக நேரம் எடுக்காமல் சுதந்திர தின கொடியேற்றம் முடிந்துவிடும். எப்படா மிட்டாய் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்து வாங்கியதும் எங்கள் குழு ஒரே ஓட்டமாக அருகில் இருக்கும் தீயணைப்புத் துறை அலுவலகத்துக்கு விரையும். அங்கும் கொடியேற்றி சாக்லெட் கொடுப்பார்கள். அதையும் வாங்கிக் கொண்டு அரட்டை கச்சேரியோடு வீடு வந்து சேர்வோம்.

எட்டாவது படிக்கும் போது விஜி டீச்சர் நாடகமெல்லாம் தயார் பண்ணி கொஞ்சம் புதுமையா நடத்துனாங்க. டேய் கண்ணந்தம்பி நீயும் நடிக்கிறேன்னு சொன்னுச்சு... என்னைய கண்ணந்தம்பின்னுதான் கூப்பிடும் எங்க அண்ணன் கூட படிச்சதாம். எட்டாப்பு வரைக்கும்தான் அப்புறம் எங்கண்ணன் தேபிரித்தோ பொயிட்டாரு. இருந்தும் ஞாபகத்துல வச்சிருந்து பள்ளிக்கூடத்துல ஆசிரியையானதும் என்னையப் பார்த்த முதல் நாளிலே டேய் நீ கண்ணன் தம்பிதானேன்னு கேட்டுச்சு... ஆமான்னு சொல்லியதும் எப்பவும் கண்ணந்தம்பிதான். எங்க பிச்சைக்குட்டி வாத்தியார் என்னைய குமார்ன்னு கூப்பிட்டதே இல்லை... கண்ணாதான். எங்க அண்ணன் அம்புட்டு நல்ல பேர் எடுத்திருந்திருப்பார் போல... நாங்களும் எடுத்தோமுல்ல... சரி வேற பக்கமா பொயிட்டோமே... ஆமா எங்க விட்டேன்... ம்... நாடகத்துலதான... சரி நடிக்கிறேன்னு சொல்லிட்டேன்...

அரசர், மந்திரியின்னு கதை சொன்னுச்சு... சரி நாம அரசனா இல்லாட்டியும் மந்திரியாவது இருப்போமுன்னு நினைச்சு கனவோட உக்காந்திருந்தா... சரவணன் மந்திரி, ராமநாதன் அரசன், சிவபாலன் மக்கள் கூட்டத்தில் இருந்து பேசுறவன் அப்படின்னு ஒண்ணு ஒண்ணா சொல்லிக்கிட்டே வந்து குமாரும் துரைமாணிக்கமும் காவலர்கள்ன்னு சொல்லிச்சு... கொக்காமக்கா நாடகத்துல ரெண்டு பேரையும் கல்யாணத்துல வாழைமரம் கட்டி வைக்கிறமாதிரி தலையில கொஞ்சம் பவுடரை அடித்து வெள்ளை முடியாக்கி வேஷ்டியை கட்டிவிட்டு நிக்கவச்சிட்டாங்க... நாடகத்துல கடைசி வரை இருந்தோம்... இல்ல நின்னோம்... வசனமே பேசாமல்... 

தே பிரித்தோவில் படிக்கும் போதெல்லாம் கொடியேற்றத்துக்கு எல்லாம் போறதில்லை... விடுமுறை என்பது பசங்களுடன் சுற்றும் நாளாக ஆகியது. பின்னாளில் சுதந்திரதின விடுமுறை தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளோடு ஒன்றிக் கழிந்தது. எப்படியும் சிம்ரன் சுதந்திரதினத்தன்று முக்கியமான பேட்டியை சுதந்திரமாகக் கொடுப்பார். எல்லாத் தொலைக்காட்சிகளிலும் சுதந்திரதின பட்டிமன்றம் நாட்டுக்குத் தேவையான தலைப்பில் நடைபெறும். சாலமன் பாப்பையாவும் திண்டுக்கல் லியோனியும் கருத்துச் செறிவுள்ள தகவல்களைப் பகிர்வார்கள். சுதந்திரப் போராட்டத்தை எடுத்துச் சொல்லும் படங்களுக்கும் குறைவிருக்காது. அப்படியே ரசித்துப் பார்த்து லயித்துவிடுவோம். 

கல்லூரியில் படிக்கும்போது எல்லா நாளும் சுதந்திரதினம்தானே... அதுனால அதுக்குன்னு தனியா கொடி ஏத்தி கொண்டாடுறதை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை... அன்றைக்கு எங்களது குழு பழனி ஐயா வீட்டில் கூடி அரட்டை அடிக்கும். அன்றைய மதிய சாப்பாடு எல்லாருக்கும் அங்குதான். அம்மா கையால் வடை பாயாசத்தோடு வயிறு முட்டச் சாப்பாடு... அப்புறம் அரட்டை... அப்புறம் காபியோடு கடிச்சிக்க எதாவது... அப்புறம் அரட்டை என அன்றைய பொழுது கழியும்.

கல்லூரியில் வேலை பார்க்கும் போது சுதந்திரதினத்தன்று சில பள்ளிகளுக்கு நானும் நண்பன் முருகனும் அழைப்பின் பேரில் செல்வது உண்டு. அப்படி ஒரு முறை கணேசன் சார் அழைத்து என்.எஸ்.எம்.வி.பி.எஸ் சென்றோம். மாணவர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர்.  மோசமான பள்ளி என்று பெயரெடுத்திருந்த பள்ளியை அவர் தலைமை ஆசிரியரானதும் கட்டுக்கோப்பான நல்ல பள்ளி என்று மாற்றியவர். அன்றைய விழாவில் எங்கள் கல்லூரித் தமிழாசிரியர் மாணவர்கள் மத்தியில் தலைமைப் பண்புகள் குறித்துப் பேசினார். 

மேடையில் தலைமையாசிரியரும், மற்றொரு ஆசிரியரும் அமர்ந்திருந்தனர். நாங்களெல்லாம் விஐபி வரிசையில் அமர்ந்திருந்தோம். பசங்க பேசியவரை விட்டுவிட்டு தலைமை ஆசிரியருக்கு அருகில் இருந்த மற்றொரு ஆசிரியரையே பார்த்துக் கொண்டிருந்தனர். எங்களுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. பசங்க மொத்தமாக பல முறை கைதட்டியதும் சந்தேகம் வந்து பார்த்தால் அந்த ஆசிரியர் பேசுபவர் எதாவது முக்கியமாக சொன்னால் யாருக்கும் தெரியாமல் மேசை மீது வைத்திருந்த தனது இரண்டு ஆள்காட்டி விரலையும் தட்டுகிறார் உடனே பசங்க கைதட்டலில் அரங்கம் அதிர்கிறது. அப்புறம்தான் புரிந்தது அவர்களின் பார்வையின் காரணம்.

அப்புறம் ராமகிருஷ்ணா பள்ளி இலக்கிய மேகம் அண்ணாவின் அழைப்பில் அங்கும் சென்றிருக்கிறோம். அப்புறம் நான் படித்த பள்ளிக்கு... நாடகத்தில் காவலன் வேடம் போட்ட பள்ளிக்கு... யாரைக் கண்டு பயப்படுவோமோ அதே சுந்தரவாத்தியாரின் அழைப்பின் பேரில் சென்றோம். இவர்கள் இருவரும் எங்கள் மாணவர்கள்.... இங்கு படித்தவர்கள்... இன்று கணிப்பொறி மையம் வைத்திருக்கிறார்கள்... கல்லூரியில் வேலை செய்கிறார்கள் என ஒரே பாராட்டு மழைதான் போங்க... அரட்டி உருட்டுற சுந்தரவாத்தியார் அன்பா எங்களை மேடையில் வைத்துப் பேசிய அன்னைக்குத்தான் மிட்டாய் கொடுக்காமலே சுதந்திரதினம் இனித்தது.

இப்பல்லாம் தமிழினத் தலைவர் தொலைகாட்சியில் சொல்வது போல் விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள் கூட பார்க்க வழி இல்லாமல் எப்பவும் போல் சுதந்திர தினத்தன்று வேலைக்குச் சென்று விடுகிறோம். இன்று மலையாளி நண்பனிடம் நாளை சுதந்திரதினம் என்றதும் அவன் ரொம்ப யோசித்து ஆமால்ல... ஒரு விடுமுறை தினம் போச்சேன்னு சொல்லிட்டு வேலையைப் பார்க்க ஆரம்பிச்சிட்டான்...

நம்ம நாட்டோட சுதந்திர தினத்தை கொண்டாடுவதில் எல்லாருக்கும் மகிழ்ச்சிதான்... ஆனால் சுதந்திரம் அடைந்து அறுபது வருடங்களுக்கு மேலானாலும் இன்னும் குண்டு துளைக்காத கூண்டுக்குள் நின்று கொடி ஏற்றும் பிரதமர், வாரம் ஒரு முறை கூடும் பெட்ரோல் விலை, விலைவாசி ஏற்றம், கூடங்குளம் பிரச்சினை, மின்சாரப் பற்றாக்குறை, தண்ணீர்ப்பிரச்சினை, தலைவா படப் பிரச்சினை, அம்மாவை முட்டிய யானை, அவதூறு வழக்கில் அலையும் கேப்டன், அறிக்கைப் போர் நடத்தும் கலைஞர், அம்மா காலில் விழக்காத்திருக்கும் எம்.எல்.ஏக்கள், கட்சி மாறி இன்னோவா வாங்கியவர்கள் என ஆளாளுக்கு பிரச்சினைகளால் சூழ்ந்து சுதந்திரமற்றவர்களாகத்தான் இருக்கிறோம். 

சரியாப்போச்சு இம்புட்டுப் பேசிட்டு ஒண்ணு சொல்ல மறந்துட்டேனே... நம்ம சிங்கம் விஷால் நாளை பள்ளி விழாவில் பாரதியார் வேடமணிந்து 'அச்சமில்லை... அச்சமில்லை... அச்சம் என்பதில்லையே...' என்று பாடுகிறாராம். வீட்டில் உக்கிரமாக பாடுகிறார்... பள்ளியில் மேடையில் பயம் வந்துவிடுகிறதாம்... நாளை எப்படி செய்யப் போகிறாரோ தெரியவில்லை...

அப்புறம் எங்க வீட்டு சின்னப்பயலுக்கு (மனைவியின் சகோதரி மகன்) நாளைக்கு முதல் பிறந்ததினம்.... குட்டிப்பய எந்நாளும் நலமுடன் சந்தோஷமாய் வாழ வாழ்த்துங்கள்.

எங்கள் தேசம் இந்தியா....


-'பரிவை' சே.குமார்.

3 கருத்துகள்:

  1. உறவுகள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!(நமக்கு எப்பவோ,ஹூம்!)

    பதிலளிநீக்கு
  2. இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. நினைவுகள்......

    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் சே. குமார்.

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி