சனி, 13 ஜூலை, 2013

சிங்கம் - II கர்ஜனை


சிங்கம் II  பற்றி விமர்சனங்கள் எல்லாம் வந்து முடிந்துவிட்டன. படம் ஆஹா ஒஹோ என்று பலரும், அப்படியெல்லாம் இல்லை பார்க்கலாம் என்று சிலரும், இது ஒரு படமா என்று சொற்பமான ஒருசில விமர்சனங்களும் என கலந்து கட்டி விமர்சனங்களை இணையத்தில் படிக்க முடிந்தது. படத்தின் வசூல் கோடிகளைத் தாண்டியது என பத்திரிக்கைகளும் பக்க வாத்தியம் ஊதின. சரி என்னதான் இருக்கிறது பார்க்கலாம் என்று நேற்று இரவு பார்த்தோம். படம் குறித்தான விமர்சனமாக இல்லாமல் எங்களுக்குள் தோன்றியவற்றை இங்கே பகிரலாம் என்று நினைத்து எழுதியிருக்கும் பதிவுதான் இது.

* படம் 2 மணி நேரம் 41 நிமிடம் 29 வினாடிகள் ஓடுகிறது. சமீபத்தில் பார்த்த நிறைய படங்கள் 2 மணி நேரத்தை ஒட்டியே இருந்ததால் இந்தப்படம் பார்க்கும் போது டுவெண்டி 20 கிரிக்கெட் பார்க்கும் போது திடீரென ஒருதின போட்டி பார்ப்பது போல் சற்று அயர்ச்சியாக இருந்தது.

* படத்தில் அனுஷ்கா, ஹன்சிகா என இருவரும் இருந்தும் கேமரா படம் முழுவதும் சூர்யா பின்னாடியே சுற்றி வருகிறது.

* விஸ்வரும் கொடுத்த பயத்தினால் தனிப்பட்ட எந்த ஒரு மதத்தினரை வில்லனாக வைத்துப் படமெடுத்தாலும் பிரச்சினை வரும் என்பதை இயக்குநர் ஹரி உணர்ந்து லோக்கல் வில்லங்களை சகாயம், பாய், தங்கராசு என மூன்று மதத்திலும் ஆட்களை வைத்து எனக்கு மும்மதமும் ஒன்றுதான் இப்ப போராடுங்கடா பார்ப்போம் என இயக்குநர் ஹரி சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

* படத்தில் ஹன்சிகா கதாபாத்திரமே தேவையில்லாததுதான் என்பது படம் பார்க்கும் எல்லாருக்கும் தெரியும். ஆஹா அனுஷ்காவோட ஹன்சிகாவும் இருக்காடான்னு ரசிகப்பயலுக ரசிச்சி வருவாங்க படத்துக்கு டபுள் புரமோஷன் என திட்டமிட்டு செயல்பட்டிருக்கிறார்கள்.

* ஹன்சிகாவை பிளஸ் டூ மாணவியாக பார்க்க சத்தியமாக முடியவில்லை... நல்லா படிக்கிறபிள்ளைன்னு சொல்லிட்டாங்க... இல்லைன்னா ரெண்டு மூணு வருசம் பெயிலாகி இப்போத்தான் பிளஸ் டூ வந்திருக்கும் போலன்னு மனசைத் தேத்திக்கலாம்.



* ஹன்சிகா ஆசிரியரைக் காதலிக்கும் போது எனக்கு ஒரு காதலி  முதல் பாகத்திலிருந்தே இருக்கிறாள் என்பதை ஆசிரியர் சொல்லவே இல்லை. சொல்லியிருந்தால் ஹன்சிகா அப்பவே செத்திருப்பார். 

* தனது காதல் தோல்வியில் முடிந்ததும் தான் காதலித்தவனுக்கு உதவி அதனால் சாவது என்பது தமிழ் சினிமா ஆரம்பகாலம் தொட்டே பார்த்து வருவதுதான்.... இதில் எந்தப் புதுமையும் இல்லை. எப்படியும் இரண்டாவது நாயகியைக் கொல்லணும் அதற்காக இதில் கௌரவக் கொலை ஆக்கியிருக்கிறார்கள்.

* அனுஷ்கா முதல் பாகத்தில் இருந்தார் என்பதற்காகவே இதில் சில இடங்களில் வந்து நெஞ்சை நக்கும் வசனங்கள் பேசி தன் காதல் எவ்வளவு புரிதல் தன்மை கொண்டது என்பதை நிரூபிக்கிறார்.



* அனுஷ்கா முகத்தில் எப்பவும் இருக்கும் உற்சாகம் இல்லாமல் சோர்வாய் இருக்கிறார்,. இதையும் நிறையப் பேர் சொல்லியிருந்தார்கள் . அதற்கான பதிலாக வெயிலில் தொடர்ந்து நடித்ததால் சோர்வாய் இருந்ததாக அம்மணியும் பேட்டியிருக்கிறார்.

* அனுஷ்கா. பாடல் காட்சிகளில் துள்ளலாய் ஆடியதுடன் ஹன்சிகாவுடன் ஒரு குழாயடி சண்டை போடுகிறார். அது பத்தாது என பாவம் சந்தானத்துடன் வேறு ஆட வைத்துவிட்டார்கள். பாவம் அனுஷ்கா.

* முதல் பாகத்தில் இருந்த ராதாரவி, நாசர் என எல்லாரும் வந்து போகிறார்கள். எல்லாருமே படத்திற்கு வேண்டும் என்பதால் ரெண்டு மூணு இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.


* விவேக் அதே எரிமலையாக, பதவி உயர்வு பெற்ற போலீசாக வந்து சிரிக்க வைக்க முயன்று தோற்றிருக்கிறார். சந்தானம் இப்போதைய மார்க்கெட் நிலவரத்தின் படி உச்சாணிக் கொம்பில் இருப்பதால் அவரை இறுக்கிப் பிடித்து அவருக்காக காட்சிகள் அமைத்திருக்கிறார்கள். ஆனால் அவர் ஒரு சில காட்சிகள் தவிர மற்ற இடங்களில் ஒட்டவே இல்லை.

* சகாயமாக வரும் நான் கடவுள் மொட்டை ராஜேந்திரன் கரகர குரலில் பேசிக்கொண்டு கடத்தலுக்கு உதவியாக இருந்து உயிரை விடுகிறார், சொல்லிக் கொள்ளும்படி நடிப்பில்லை.

* தங்கராசா வரும் ரகுமான் மலையாளம் கலந்த தமிழ் பேசியே கொல்கிறார். பாயாக வரும் வில்லனும் பாயவில்லை. தங்கராசுக்கும் பாய்க்கும் மோதல் இருப்பது போல் காட்டும்போதே தமிழ் சினிமா வழக்கப்படி எல்லா மொள்ளமாரி வேலைகளும் ரெண்டு பேர் கூட்டணியில்தான் நடக்கும் என்பது ரசிகனுக்கு விளங்கிவிடுவதால் இருவரும் சந்திக்கும் போது எதிர்பார்ப்பு ஏற்படுவதற்குப் பதில் சலிப்புத்தான் வருகிறது.


* படத்தின் முக்கிய வில்லனாக வரும் டேனி நல்ல தேர்வு. மிரட்டலான நடிப்பு... ஆனால் அவருக்கு நடிப்பதற்கான வாய்ப்பு அதிகமில்லை, பெரிய வில்லனாக மட்டும் காட்டப்பட்டிருக்கிறார். சிவப்பா இருக்கவங்க பொய் பேசமாட்டாங்கன்னு ரொம்ப பேரு சொல்லிக்கிட்டு திரியிறாங்க... அது இயக்குநருக்கும் தெரிஞ்சிருக்கும் போல இங்க கருப்பா இருக்கவன் தப்பு செய்வான்னு காட்ட ஒரு கருப்பரை வில்லனாக்கி இருப்பார் போல.

* சூர்யா... படத்தை தன் தோளில் சுமந்திருக்கிறார். படம் முழுவதும் சூர்யா... சூர்யா.... சூர்யாதான். நரம்பு புடைக்க சிங்கமாய் கர்ஜிக்கிறார். அதற்கா சண்டையின் போதும், பாடலின் போது சிங்கம் போல் கிராபிக்ஸில் காட்டுவது ரொம்ப ஓவர்.

* சூர்யா... பாடல் காட்சிகளில் தனது திறமையை நிரூபித்து டி.ஆர். அளவுக்கு பட்டையைக் கிளப்பவில்லை என்றாலும் மற்ற படங்களுக்கு இதில் நன்றாக ஆடியிருக்கிறார். 


* சூர்யா... சண்டைக் காட்சிகளில் தூள் பறத்துகிறார். போலீஸாரை ஏசுவதாகட்டும் வில்லன்களை மிரட்டுவதாகட்டும் கலக்கியிருக்கிறார்.

* சூர்யா... அனுஷ்காவிடம் காதலராகவும் ஹன்சிகாவிடம் கண்டிப்பான ஆசிரியராகவும் சந்தானத்தை பக்கி என்று சொல்லி கலாய்ப்பவராகவும் தன்னால் எவ்வளவு அருமையாக நடிக்க முடியுமோ அவ்வளவு அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

* சூர்யா... கர்ஜித்தாலும் போலீசுக்கே உரிய மிடுக்கோடு பரபரவென்று திரிகிறார். சுறுசுறுப்பாக நடித்திருக்கிறார்.


* மன்சூர் அலிகான் கொடுத்த கதாபாத்திரத்தில் குறையில்லாமல் செய்திருக்கிறார். போலீஸ்காரர்களில் பெரும்பாலோர் வில்லனுக்கு உதவியாக இருப்பதாக காட்டுவதை எப்போது  நிறுத்தப் போகிறார்கள்.

* படம் முழுவதும் ஒரே கர்ஜனையாக, கத்திப் பேசுகிறார்கள்... இதில் இந்த DSP வேற, இது போலீஸ் DSP இல்லங்க நம்ம தேவி ஸ்ரீ பிரசாத்த்துங்க.... பின்னணி இசையில இம்புட்டு இரைச்சலாவா போட்டுத தாக்குவார். தலைவலியைவிட காது ஜவ்வு கிழிந்து வலி வந்துவிடுகிறது.

* பெரிய வில்லனைத் தேடி தென் ஆப்பிரிக்கா செல்வதும் பல வருடங்களாக தண்ணிக்குள்ளேயே இருக்கும் அவனை அங்கிருக்கும் போலீசுக்கு எல்லாம் பாடமெடுத்து தனியாளாய் அவருடன் மோதி பிடித்து வருவது என்பது எல்லாம் சாத்தியமா என்று பார்க்காமல் படத்தை மட்டும் பார்த்தால் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத சிங்கம் -II  விறுவிறுப்பான படம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.


* பாவம் இந்த அனுஷ்கா, இதுலயும் கல்யாணம் பண்ணாம விட்டுட்டாங்க... அனுஷ்கா ரசிகரான நண்பர் ஒருவர், ஒருவேளை சிங்கம் III எடுத்தால் அனுஷ்காவை வில்லன்கள் கொல்வது போல் வைத்தாலும் வைத்து விடுவார்களோ என்று இப்பவே வருத்தத்தில் இருக்கிறார்.

* படம் அஞ்சலியின் முதுகில் இருந்து ஆரம்பிப்பதால் அஞ்சலி பற்றியும் சொல்ல வேண்டுமல்லவா... ஒரே ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார். படம் ஆரம்பிக்கும் போதே போனால் அஞ்சலியின் ஆட்டத்தை பார்த்து மோட்சம் அடையலாம்.

* மொத்தத்தில் கதையைப் பற்றியும் நம் காதைப் பற்றியும் கவலைப் படாமல் பார்த்தால் சிங்கம் I விட சிங்கம் II நிச்சயமாக நம்மைக் கவரும் என்பதே உண்மை. இயக்குநர் ஹரிக்கு கதை இருக்கோ இல்லையோ விறுவிறுப்பாக கதையை நகர்த்தும் திறமை இருக்கிறது. இதில் விறுவிறுப்புடன் சூர்யாவின் நடிப்பையும் சேர்த்து வெற்றி பெற்று பெருமளவில் கல்லாவும் கட்டிவிட்டார். 


* சூர்யாவின் கடின உழைப்புக்கு  கிடைத்த பரிசுதான் கதையே இல்லாமல் ரசிகர் மனதில் இடம்பிடித்திருக்கும் சிங்கம்-II வின் வெற்றி.

* சூர்யாவுக்கு சூப்பர்ஸ்டார் இடத்தை பிடித்துக் கொடுக்கும் படம் என்ற செய்திகளை எல்லாம் பற்றி கவலைப்படாமல் அடுத்த படத்தில் கவனம் செலுத்தினால் இன்னும் சாதிக்கலாம்....

* இரண்டு சிங்கம் என்பதால் கர்ஜனை அதிகமாகத்தான் இருக்கிறது.

படங்களுக்கு நன்றி : கூகிள் இணையம்
-'பரிவை' சே.குமார்.

1 கருத்து:

  1. என்னவோ எனக்கு இது ஒட்டவே இல்லீங்க!சும்மா டைம் பாஸ்சிங்,அம்புட்டுத்தேன்!

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி