5. ஞாயிறு மதியமும் கம்மாய்க்கரையும்....
முன்கதைச் சுருக்கம்...
ஏழைக் குடும்பத்தில் பிறந்து தந்தையில்லாமல் தாயின் அரவணைப்பில் வாழும் ராமகிருஷ்ணன் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்கிறான். முதல் நாள் கல்லூரிக்கு செல்லும் அவனை அவனது தாயார் அக்கம் பக்கம் பார்த்து அனுப்பி வைக்கிறாள். ராக்கிங் அதன் பின்னான நட்பு வட்டம் என கல்லூரி வாழ்க்கை இனிமையாக கழிய ஆரம்பிக்கிறது.
தொடர்கதையின் முந்தைய பகுதிகளைப் படிக்க
---------------------------
இனி...
கல்லூரி வாழ்க்கை சுமூகமாகப் போய்க்கொண்டிருந்தது. ராக்கிங் எல்லாம் முடிந்து எல்லாரும் நண்பர்களாகி, கல்லூரி ஸ்ட்ரைக் அது இது என்று பள்ளி வாழ்க்கைக்கு முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கைக்கு மாறியிருந்தார்கள் ராம்கியும் அவனது நண்பர்களும்...
கல்லூரி விடுமுறை தினமான சனிக்கிழமை மதியவேளை, ராம்கியும் சேகரும் கண்மாய்க்கரை வேப்ப மரத்தில் அமர்ந்திருந்தனர். விடுமுறை என்றாலே வீட்டில் இருப்பது என்பது அரிது. விவசாய சமயம் என்றால் மாடு மேய்க்கப் போவார்கள். மற்ற நேரங்களில் மாடுகளை அவிழ்த்து விட்டால் மேய்ந்து விட்டு தானே வீட்டுக்கு வந்துவிடும். அதனால் மாரியம்மன் கோவிலில் நண்பர்களுடன் அரட்டை இல்லை என்றால் கண்மாய் மடையின் பின்புறமோ வேப்ப மரமோதான் அவர்கள் கதை பேசும் இடமாக இருக்கும். எல்லாரும் ஒன்றாக கூடிவிட்டால் அவர்களுக்குள் நடக்கும் விளையாட்டுக்கு அளவே இருக்காது. எல்லார் தோளிலும் குத்தாலம் துண்டு இருக்கும். கபடி, மரக்கொரங்கு போன்ற விளையாட்டுக்களின் போது எல்லார் இடுப்பிலும் அந்தத் துண்டு இருக்கும். கோவிலிலோ வேப்ப மரத்திலோ படுக்கும் போது அதை விரித்துத்தான் படுப்பார்கள். அவர்களுடைய விளையாட்டில் முக்கியமானதும் சிறுபிள்ளைத்தனமானதுமான விளையாட்டு துண்டு போர்த்துதல்தான். எல்லாரும் அமர்ந்து சீரியஸாக பேசிக்கொண்டிருக்கும் போது எவனையாவது துண்டால் போர்த்திவிடுவார்கள். அவ்வளவுதான் எல்லாரும் அவனுக்கு தர்ம அடி கொடுப்பார்கள். யார் அடித்தார்கள் என்பது தெரியாது. ஆனால் ஒருவர் மாற்றி ஒருவர் என எல்லாருக்கும் எப்படியும் அடி விழுந்துவிடும்.
மற்றவர்களைவிட ராம்கி மிகவும் நெருங்குவது சேகரிடம்தான்... சேகர், ராம்கிக்கு மச்சான் முறை... ஒரே வயது... பத்தாவது படித்ததோட ராயவரம் பாலிடெக்னிக்கில் படிக்கிறான். இருவருக்குள்ளும் எந்த ஒளிவு மறைவும் இருக்காது. இன்று எவனையும் காணோம் என்பதாலும் இருவரும் மனம் விட்டுப் பேசி ரொம்ப நாளாச்சு என்பதாலும் இந்தப் பக்கம் வந்திருந்தார்கள்.
“என்ன மச்சான்... காலேசு எப்படிடா போகுது?”
“நல்லா போகுதுடா... ஸ்கூல் லைப்புக்கு அப்படியே நேர்மாறா இருக்குடா... ஒரே அடிதடி சண்டையின்னு இது வேற உலகண்டா...”
“நம்ம காலேசுல எப்பவுமே சாதிப்பிரச்சினை இருக்குமேடா... அது தெரிஞ்சதுதானேடா...”
“சாதிப்பிரச்சினைங்கிறதுகூட ரொம்ப இல்லடா... தேவகோட்டையா திருவாடனையான்னு அடிச்சிக்கிறாங்கடா... பாடம் நடத்தும் போது கூட வாத்தியார் ‘டி’ன்னு சொன்னா நாம குச்சி டியா குண்டு டியான்னுதானே கேப்போம்... ஆனா இங்க வாத்தியாரே ‘டி’ன்னு சொல்லிட்டு உடனே திருவாடானை டி, தேவகோட்டை டின்னு சொல்றாங்கன்னா பாரேன்...”
“எல்லா இடத்துலயும் ரெண்டு பிரிவு இருக்குடா... எங்க பாலிடெக்னில என்ன வாழுதுங்கிறே... பஸ்ல போற நாங்க எல்லாம் ஒரு குரூப்பு... அங்கிட்டு பக்கத்து ஊர்ல இருந்து வாறவங்க ஒரு குரூப்பு அவங்க ஸ்ட்ரைக்குன்னா நாங்க உள்ள போவோம்... நாங்க நிப்பாட்டுன்னா அவங்க போவாங்க... அப்புறம் அடிதடி ரகளைதான்... ஆமா இப்போ நீ கோ-எட்டுல்ல... உங்க கிளாஸ்ல எத்தனை பொண்ணுங்கடா...?”
“ம்... எட்டுப் பொண்ணுங்கடா... நா... யார்கிட்டயும் பேசுறது இல்லை...”
“உனக்கு பேசுறதுக்கு என்னடா... அவனவன் அலையுறாங்க... காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளுன்னு சும்மாவா சொல்லியிருக்காங்க... கிளாஸ்ல பொண்ணுங்களை வச்சிக்கிட்டு பேசமாட்டியா... எனக்கு எல்லாம் காலேசுல பொண்ணுக இல்லைன்னு பேருதான்... ஆனா பஸ்ல வாற பள்ளத்தூர் காலேசுப் புள்ளைங்க எல்லாம் ரொம்ப குளோஸ்... காரைக்குடியில எத்தனை படம் பார்த்திருக்கோம் தெரியுமா?”
“உனக்கு சரியா வரும்... எனக்கு சரிப்படாதுடா... வேற பேச்சுப் பேசுடா... பொண்ணுகளைப் பத்தி நமக்கு என்ன பேச்சு... விடு... எங்க காலேசுல தேர்ட் இயர்ல வைரவன்னு ஒருத்தர் இருக்காருடா... பெரிய ரவுடி... அடிதடிக்கு அஞ்சமாட்டார்... புரபஸரெல்லாம் பயப்படுறாங்க... தண்ணி தம்முன்னு ஆளு வித்தியாசமான வட்டத்துக்குள்ள இருக்காருடா... அவரை சுத்தி பத்துப் பேரு திரியிறாங்கடா... எங்களை முதல்ல ராக்கிங் பண்ணுனதே அவரு குரூப்தான்டா...”
“என்னடா காலேசு ரவுடிக்கு இம்புட்டு மரியாதை... அவரு இவருன்னு பேசுறே...?”
“அவரு ரவுடிதான்டா... ஆனா பசங்களுக்கு நல்லா ஹெல்ப் பண்ணுவாரு... பொண்ணுககிட்ட பேசவும் மாட்டாரு... சும்மா அலம்பல் பண்ணவும் மாட்டாருடா...”
“உன்னைய மாதிரி சாமியாரா? அதான் இம்புட்டு மரியாதை... காலேசு ரவுடின்னாலே ரெண்டு மூணு பொண்ணுங்க பிரண்டா இருப்பாளுங்களே.... அப்ப இவன் உதார் பேர்வழி போற... இவனையெல்லாம் தூக்கி வச்சிப் பேசாத...” என்றதும் சிறிது அமைதி நிலவியது.
இவர்களது பேச்சு... எல்லாப்பக்கமும் சுத்தி வந்தபோது இருட்டத் தொடங்கியதால் எழுந்து நடக்கலானார். பேசிக் கொண்டே நடக்கும் போது பின்னால் சைக்கிள் மணியின் சப்தம் கேட்டு இருவரும் விலகித் திரும்ப ‘என்னங்கடா... வெட்டிப் பேச்சா...?’ என்றபடி இருவருக்கும் இடையில் சைக்கிளை ஓட்டிக் கொண்டு போனாள் காவேரி.
“திமிர் பிடிச்சவ... ஞாயித்துகிழமையும் டியூசன் போறா... பிளஸ் டூவுல ஸ்டேட்டு பர்ஸ்ட் வரப்போற மாதிரி... பந்தாவுக்கு கொறச்சலில்லாத குந்தானி... இவளைக் கட்டிக்கிட்டு எவன் கஷ்டப்படப் போறனோ...” ஒரு கெட்ட வார்த்தையை சத்தமாக சொல்லி திட்டினான் சேகர்.
“உனக்கு அவளைப் பார்த்த ஏன் இம்புட்டுக் கோவம் வருது... தங்கச்சி உறவு விட்டுப் போயிடக்கூடாதுன்னு உங்கப்பா உனக்கே கட்டி வச்சாலும் வச்சிருவாரு பாத்துக்க... அப்புறம் இப்ப திட்டுனதுக்கு ரொம்ப வருத்தப்படுவே...”
“இவுகளத்தான் கட்டுறாக... எத்தனையோ பேர் பஸ்ஸூல பழகுறாளுங்க... அதுல ஒருத்திய கட்டுனாலும் கட்டுவேன் இந்தக் குந்தானியைக் கட்ட மாட்டேன்...” என்றான் வேகமாக.
ராம்கி சிரித்தான். இருவரும் தோள்மீது கை போட்டபடி நடக்கலாயினர்.
காலம் என்ன கோலம் செய்யும் என்பது யாருக்குத்தான் தெரியுமா? சேகரின் மனைவியாக காவேரி வரவேண்டும் என்று இருந்தால் யாரால் தடுக்க முடியும். நடப்பது நடந்துதானே ஆகும் என மனசுக்குள் நினைத்த ராம்கி, சேகரைப் பார்த்து லேசாக சிரித்தான்.
(தொடரும்...)
நல்லாருக்கு!///யார் தலைல என்ன எழுதியிருக்கோ,அதான் நடக்கும்,
பதிலளிநீக்குகாலம் என்ன கோலம் செய்யும் என்பது யாருக்குத்தான் தெரியுமா? சேகரின் மனைவியாக காவேரி வரவேண்டும் என்று இருந்தால் யாரால் தடுக்க முடியும். நடப்பது நடந்துதானே ஆகும்
பதிலளிநீக்குநல்லதுதான் ..!