தமிழக காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒரு பிளவை சந்திக்கும் நிலையை உருவாக்கி வைத்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான ராகுல் காந்தி. மத்திய அமைச்சர் ஜி.கே. வாசனை முழுமையாக ராகுல் காந்தி ஓரம் கட்டுவதால் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து அரை நூற்றாண்டுகாலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி வைத்து அந்தக் கட்சி உயிர் பிழைத்துக் கொண்டிருக்கிறது. கணிசமான லோக்சபா தொகுதிகளை பெற்றுக் கொண்டு முக்கிய கட்சியாக வெளிப்படுத்தி வருகிறது.
இந்த அரை நூற்றாண்டு காலத்தில் காங்கிரஸ் கட்சி பலமுறை உடைந்தும் போய் இருக்கிறது. பின்னர் பிரிந்து போனவர்கள் இணைந்தும் இருக்கின்றனர். இதில் தற்போதைய மத்திய அமைச்சரான ஜி.கே.வாசனின் தந்தை ஜி.கே. மூப்பனாரின் பிரிவுதான் காங்கிரஸை கதிகலங்க வைத்தது. 1996-ம் ஆண்டு அதிமுக- காங்கிரஸ் இடையே சட்டசபை தேர்தலில் கூட்டணி வைத்ததை எதிர்த்து உதயமானது ஜி.கே. மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ்.
1996-ல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, திமுகவுடன் கூட்டணி வைத்து 39 இடங்களையும் கைப்பற்றி சட்டசபையில் எதிர்க்கட்சியானது. தொடர்ந்தும் திமுகவுடன் கூட்டணி வைத்தது. ஆனால் 2001-ல் அதிமுகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி வைத்து 23 இடங்களில் வென்றது. பின்னர் 2001- ல் மூப்பனார் மறை கட்சித் தலைவராக ஜி.கே.வாசன் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற சிறிதுகாலத்திலேயே அப்படியே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தாய்க் கட்சியான காங்கிரஸுடன் ஐக்கியமாகிவிட்டது.
காலச் சக்கரம் இப்போது மீண்டும் சுழலத் தொடங்கியுள்ளது! தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் ஜி.கே.வாசன் செயல்பாடுகள் மீது காங்கிரஸ் துணைத் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி கடுமையான அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் உச்சகட்டமாகத்தான் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஜி.கே.வாசனின் ஆதரவாளரான யுவராஜாவை நீக்கச் சொல்லியிருக்கிறார். ஆனால் ராகுலுடன் மல்லுக் கட்டிய ஜி.கே.வாசன், யுவராஜா மீது சொல்லப்படும் புகார்களுக்கு போதுமானா ஆதாரம் இல்லை.. அப்படி இருந்தால் நானே ராஜினாமா செய்ய சொல்வேன் என்று கூறியிருக்கிறார். இதில் ராகுல் கடுப்பாகிப் போய்த்தான் ஒற்றை வரி அறிக்கையில் யுவராஜா சஸ்பென்ட் என்று அறிவித்திருக்கின்றனர்.
ஒரு மத்திய அமைச்சராக இருக்கும் தாம் சொல்லியும் ராகுல் காந்தி கேட்கவில்லை என்ற கோபம் ஜி.கே.வாசனுக்கு இருந்து வந்தது. அத்துடன் மட்டுமின்றி மற்றவர்களைப் போல் தாம் தனிநபர் அல்ல... தனிக் கட்சியோடு காங்கிரஸுக்கு வந்தவன் என்றும் டெல்லியில் எகிறிய கையோடு சென்னை வந்தார் வாசன்.
இன்று காலை சென்னையில் உள்ள ஜி.கே. வாசனின் வீடு முன்பாக அவரது ஆதரவாளர்கள் ஒன்று திரண்டனர். அப்போது உருவாக்குவோம் உருவாக்குவோம்! தமிழ் மாநில காங்கிரஸை மீண்டும் உருவாக்குவோம்! என்று ஜி.கே. வாசனின் ஆதரவாளர்கள் முழக்கமிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.
ஜி.கே.வாசனும் தமக்கு எதிராக நடக்கும் உட்கட்சி சதிகளைப் பற்றி தமது ஆதரவாளர்களிடம் விவரித்திருக்கிறார். மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்குவது பற்றி அவரது ஆதரவாளர்கள் பலரும் வலியுறுத்தி இருக்கின்றனர். ஆனால் ஜி.கே.வாசன் தமது கருத்து எதையும் தெரிவிக்காமல் பொறுமையாக இருக்குமாறு கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மீது கடுமையான அதிருப்தி அலை இருக்கிறது. ஆனால் ஜி.கே.வாசன் தொடர்ந்தும் இலங்கைத் தமிழருக்கு ஆதரவாகவும் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராகவும் பேசி வருகிறார். மத்திய அமைச்சராக இருந்தும் கூட ராஜபக்சேவின் வருகை விஷயத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த முடியாது என்று அறிவித்த தமிழக முதல்வரின் அறிவிப்பை வரவேற்றும் இருக்கிறார். இதைச் சுட்டிக்காட்டி பேசும் அவரது ஆதரவாளர்கள், காங்கிரஸ் கட்சியிலிருந்து தேர்தலுக்கு முன்பாகவே கழன்று கொண்டால் நல்லதாக இருக்கும்.. தனிக் கட்சி தொடங்கிவிடலாம் என்றும் வலியுறுத்தியிருக்கின்றனர். ஆனாலும் பொறுமையாக இருங்கள் என்று மட்டுமே ஜி.கே.வாசன் பதிலாகக் கூறி வருகிறார்.
ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியை திமுக கழற்றிவிட இருக்கும் நிலையில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியே இரண்டாக உடைந்துவிடும் நிலை இருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நன்றி : தட்ஸ் தமிழ் இணையம்
-'பரிவை' சே.குமார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...
நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி