டீக்கடை, இட்லிக்கடை மட்டுமே இருந்த அந்தப் பகுதியில் புதிதாக முளைத்தது 'முருகன் சவுண்ட் சர்வீஸ்'. அது ஒரு சிறிய கடைதான் கடைக்கு உள்ளே சில குழாய்கள், மைக்குகள், வயர்கள் எல்லாம் நிறைந்து கிடக்க, வெளியே சிறிய ஜெனரேட்டர் ஒண்ணு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
கடை முதலாளி முருகன் உள்ளூர்க்காரந்தான்... இதுவரை திருமயத்தில் இருக்கும் மைக் செட் கடையில் வேலை பார்த்தான். அவன் கடையில் வேலையில்லாத நேரத்தில் அவனும் அவன் முதலாளியும் பெரிய அளவில் தொழில் நடத்தும் முத்துச் செட்டியார் அழைப்பின் பேரில் அவரிடம் வேலைகளுக்கு செல்வதுண்டு. சம்பளமும் சாப்பாடும் கிடைக்கும்.
அப்படி சில நாட்களுக்கு முன்னர் நேமத்தான்பட்டி சுப்பையா செட்டியாரின் சாந்திக்கு மைக் செட், விளக்குகள் கட்ட போகணும் வாரீங்களான்னு முத்து செட்டியார் கேட்க அவருடன் கிளம்பினர்.
வேலையில் மும்மரமாக ஈடுபட்டிருந்த முருகனை கூப்பிட்ட முத்து செட்டியார், முருகா... வெளியில பாக்ஸ்தான் வைக்கப்போறோம். சீரியல் நல்லா இருக்கணும் ... நல்லா மேல ஏறிப் போடுன்னுனார்.
"சரிண்ணே... அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்.... டியூப் லைட்டை வேகமாக கட்டிட்டு வரச் சொல்லுங்க..." என்றான்.
முத்து செட்டியாருக்கு எப்பவும் முருகன் மேல தனி மரியாதை உண்டு. வேலையில இறங்கிட்டா சோறு தண்ணி எதிர்பார்க்க மாட்டான். எடுத்த வேலைய சிரத்தையோடு முடிக்கணும்... அதுக்குப் பிறகுதான் எல்லாம் என்பது அவன் எண்ணம். அது போல செய்யும் வேலையில் ஒரு நேர்த்தியிருக்கும். அதனால் அவர் அவனை நம்பி விட்டுவிட்டு எங்கு வேண்டுமானாலும் செல்வார்.
எல்லா பணிகளும் முடித்து அமர்ந்து சாப்பிட்டனர். அப்போது முருகனோட முதலாளி, "ஏண்டா... முருகா... ரெண்டு மூணு நாளைக்கு பெரிசு எப்படியும் ஒரு தொகை பாத்திருக்கும் இல்லையா?" என்றான்.
"பின்னே... சும்மாவா... எவ்வளவு லைட்டு.... சீரியல்லயே பாத்தியளா... அள்ளித் தெளிச்சிருக்கு....சும்மா நிப்பாட்டியிருக்க பாக்ஸப் பாருங்கா.... ஊரே அதிருமில்ல... முத்து அண்ணனுக்கு பேரு இருக்குன்னா சும்மாவா? நல்ல காசு பேசியிருப்பாரு."
"நீதான் அவர்கிட்ட நல்லா பேசுவியல்ல... லைட்டா அமௌண்ட் எவ்வளவுன்னு கேட்டுப் பாருவே..."
"ஏண்ணே... நாம வந்த வேலைய பாத்துட்டு துட்ட வாங்கிக்கிட்டு போறதை விட்டுட்டு வேண்டாத வேலை எதுக்கு..."
"சும்மா தெரிஞ்சுக்கத்தான்..."
"தெரிஞ்சு என்ன பண்ணப் போறீங்க... அடுத்த கான்ட்ராக்டை நீங்க புடிக்க போறீங்களா... சேந்தாப்புல நூறு லைட் கட்டின ஜெனரேட்டருக்கு அவருகிட்டதான் போகணும்... இதுல அவரு கான்ட்ராக்டைப்பத்தி கேட்டு என்னாகப் போகுது...."
"நாமளும் ஒரு நாள் அவரு மாதிரி வராமலா போயிடுவோம்..."
"வாரப்ப அவருகிட்ட கேக்கலாம்.... இப்ப பேசாம சாப்பிடுங்க..." என்றதும் மற்றவர்கள் சிரித்தனர்.
'முத்தண்ணன் மாதிரி நம்ம முதலாளி வாறாரோ இல்லையோ நாம ஒரு நாள் பெரியா ஆளா இருக்கணும்' மனதிற்குள் நினைத்துக் கொண்டான் முருகன்.
***
"என்ன முருகா... என்ன சிந்தனை..." என்றபடி அவனருகில் வந்து அமர்ந்தார் முத்து.
"ஒண்ணுமில்லேண்ணே... சும்மா உக்காந்திருந்தேன்..."
"சரி நான் கேக்குறேன்னு தப்பா நினைக்காதே... உன் மேல உள்ள அன்பாலதான் கேக்குறேன்... இதுல வர்ற வருமானம் உனக்குப் போதுமா... இதுவரைக்கும் சின்னப் பையனா இருந்தே... இனி அப்படியில்லையில்ல வயசு ஏறிக்கிட்டே போகுதுல்ல.... கல்யாணம் காச்சி பண்ண வேண்டாமா... ஒண்ணு வேற ஒரு நல்ல வேலையா பாரு... இல்ல இதுதான் தலையில எழுதுனதுன்னா நீயே ஒரு கடை ஆரம்பி...."
"என்னண்ணே சொல்றீங்க... நான் கடை ஆரம்பிக்கிறதா.... அட ஏண்ணே... அம்புட்டு பணத்துக்கு நான் எங்க போறது...? "
"இங்கபாரு எதையுமே மலைப்பா நினைச்சா மலப்பாத்தான் இருக்கும்... நான் வருஷா வருஷம் பழைய சாமாங்களை எதாவது ஒரு மைக்செட் காரனுக்கு பாதி விலைக்கு கொடுப்பேன்... அது மாதிரி உனக்கு வேணுங்கிறதை தாரேன்... இப்ப இருக்கதை கொடு... பின்னால பாக்கியத்தா..."
"அது சரிண்ணே... கடையெல்லாம் பாத்து வாடகை கொடுத்து...நடக்கிற காரியமா?"
"என்னப்பா உங்க ஊரு வெளக்குலதான் நாகமணி கடை கட்டிவிட்டிருக்கான்ல.... எம்புட்டு வாடகை கேக்கப்போறான்... உள்ளூர்காரன் நீயி... அதுவுமில்லா அவனுக்கு நெருங்கிய சொந்தம் அட்வான்ஸ் இல்லாம பேசிப்பாரு.... இந்த வேலையை உடனே ஆரம்பி..."
"எங்க விளக்குலயா... ஏண்ணே நீங்க..." சிரித்தான்.
"ஏன் சிரிக்கிறே... உங்க விளக்குல இருந்து திருமயம் பத்து கிலோமீட்டர்... அந்தப் பக்கமும் பெரிய சிட்டியெல்லாம் இல்ல.... சுத்துப்பட்டு கிராமங்கள்ல உன்னைய தெரிஞ்சவங்க நிறையப் பேரு... அப்புறம் என்ன நம்பிக்கையோட ஆரம்பி..."
"எங்க முதலாளி சுந்தரண்ணன் சிட்டிக்குள்ள ஆரம்பிச்சு... தட்டுத்தடுமாறி கொஞ்சம் கொஞ்சமா வளர்றாரு... நான் கிராமத்துல போயி ஈதான் ஓட்டணும்...."
"அட... போடா பைத்தியக்காரா... நான் முதன் முதல்ல ரெண்டே ரெண்டு குழாயோட ஆரம்பிக்கும் போது இந்த திருமயம் எந்த வசதியும் இல்லாத கிராமாமாத்தான் இருந்துச்சு... இப்ப அதுவும் வளர்ந்தாச்சு... நானும் வளர்ந்தாச்சு... பேரை சம்பாதிச்சா அப்புறம் பணம் தேடி வருமுடா...."
"சரிண்ணே... கேட்டுச் சொல்றேன்..." என்றவனை கடந்த ஒரு வாரகாலமாக முத்து செட்டியாரின் பேச்சு ஆட்டிப் படைத்தது... இறுதியில் தைரியத்துடன் கடை ஆரம்பித்துவிட்டான்.
***
ஒரு வாரத்திற்கும் மேலாகி யாரும் அவனை நாடவில்லை... அவர்கள் ஊருக்கு அருகில் இருக்கும் சமத்துவபுரத்தில் நேற்று நடந்த திருவிழாவிற்கு கூட முத்து செட்டியார்தான் மைக் செட் கட்டினார். இந்த முறை அவரும் அழைக்கவில்லை அவனும் செல்லவில்லை.
தினமும் கடையை திறப்பதும் சாமி பாட்டில் ஆரம்பித்து விதி கதை வசனம் வரை அந்தப் பகுதி மக்களுக்கு இலவசமாக வழங்கிவிட்டு இடையில் நாலைந்து டீயை குடித்துவிட்டு இரவு வீட்டிற்கு செல்வது வாடிக்கையானது.
தேவையில்லாம கடைய ஆரம்பிச்சிட்டோமோன்னு தோணுது... மாசாமாசம் எதோ செலவுக்கு கொடுத்தே... இப்ப அதுவும் போயி வாடகை, கரண்ட்பில்லு எல்லாம் கையில இருந்து கொடுக்கணுமேப்பான்னு அப்பா வருத்தப்பட்ட போது இல்லப்பா எல்லாம் சரியாகும்ப்பா என்றான் நம்பிக்கையோடு.
***
அன்று காலை வழக்கம் போல் கடையை திறந்து கூட்டி சாமி கும்பிட்டுவிட்டு சாமி பாடலை ஓடவிட்டுவிட்டு பக்கத்து டீக்கடையில் டீயை வாங்கிக் கொண்டு தினத்தந்தியை பிரித்தபோது ஒருவர் அவன் கடை முன் வந்து வண்டியை நிறுத்தி உள்ளே பார்க்கவும் டீயை வைத்து விட்டு ஓடினான்.
"வாங்கண்ணே... உள்ள வாங்க..." அவரை அழைத்தபடி உள்ளே நுழைந்து ரேடியோவை ஆப் செய்து அமர்ந்தான்.
"தம்பி நம்ம வீட்ல விசேசம்..."
"சந்தோஷமுன்னே... என்ன விசேசம்?"
"பொண்ணுக்கு சடங்கு..."
"ம்..."
"ரேடியோ கட்டணும்... அப்புறம் ரெண்டு மூணு லைட் போடணும்"
"போட்டுறலாமுண்ணே..."
"அப்புறம் எங்க ஊர்ல கரண்ட் கம்மியாத்தான் வரும்..."
"லோ வோல்டேஜா... எல்லா இடத்துலயும் அப்படித்தாண்ணே... இங்கயும் ஆறு மணிக்கு மேல டீப்லைட் எடுக்காது...ஜெனரேட்டர் வச்சிக்கலாம்..."
"எவ்வளவு தம்பி..."
"குழாய் போதுமா... பாக்ஸ் வேணுமா...?"
"குழாய் வேண்டாந்தம்பி... பாக்ஸே போதும்... பாத்துச் சொல்லுங்க... டவுனுக்குப் போக வந்தேன்... அப்பத்தான் சொன்னாங்க நீங்க இங்க வச்சிருக்கிறதா... நீங்க நம்ம ராமசாமி அண்ண புள்ளதானாமே... நா வெளி நாட்டுல இருக்கிறதால சின்ன வயசுப் புள்ளைங்களை தெரியலை அதான்..."
"ம்... உங்ககிட்ட அப்படி என்னத்தண்ணே கூட கேட்கப் போறேன்... எல்லா இடத்திலயும் ஜெனரேட்டர் கொண்டு வந்தாலே நூறு ரூபாய் சார்ஜ் பண்றாங்க... நைட் ஓடினா தனிக்காசு... இப்ப டீசல் ரேட் உங்களுக்கே தெரியும்..."
"அது சரி தம்பி நமக்கு நைட் ரொம்ப நேரம் ஓட்ட வேண்டியதில்லை... மாமக்காரளுக்கு சாப்பாடு போட்டோடணே அப்புறம் தேவையில்லை விடியக்காலைல சமைக்கத்தான் லைட் வேணும்.... அப்பக்கூட டீப் எடுக்கும்... ஜெனரேட்டர் தேவையில்லை..."
"சரிண்ணே எல்லாத்துக்கும் சேர்த்து ஆயிரத்தைனூறு கொடுங்க..."
"என்ன தம்பி ஒண்ணுக்குள்ள ஒண்ணு பாத்துக் கேளுங்க..."
"இல்லண்ண வேன் வாடகை இருக்கு... மத்த செலவும் இருக்கு... இதுல லாபம் பாக்க ஒண்ணும் இல்லேண்ணே... நல்லா பண்ணிக் கொடுக்கிறேன்..."
"சரி ஆயிரத்தெரனூறு வாங்கிக்கங்க..."
"கரெக்ட்டாத்தான் சொன்னேன்... முன்னூறு கொறச்சா எப்படிண்ணே..."
"சரி முன்னூறா வாங்கிக்கங்க..."
"என்னண்ணே..." தலையை சொறிந்தான்.
"புடிங்க.... நல்லா வருவீங்க... டீ சாப்பிடலாமா.?"
"சரிண்ணே... பக்கத்துல எதாவது விசேசமுன்னா நம்ம கடையை சொல்லுங்க... இந்தா நான் டீ சொல்றேன்..."
"கண்டிப்பா தம்பி நீங்க நம்ம புள்ளையாயிட்டிங்க... இருங்க நான் வடை கிடை வாங்கிக்கிட்டு டீ சொல்லிட்டு வாரேன்" என்றபடி அவர் டீக்கடைக்கு செல்ல....
அட்வான்ஸ் பணத்தை சாமி போட்டோ முன் வைத்து கும்பிட்டான். இந்த கிராக்கிக்கு நல்லா பண்ணி பேரை வாங்கிட்டா போதும்... அப்புறம் எல்லா பக்கமும் நமக்கு அழைப்பு வரும் என்று மனதிற்குள் நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டான்.
-'பரிவை' சே.குமார்.
போட்டோ வழங்கிய www.jackiesekar.com தளத்துக்கு நன்றி
நம்பிக்கைதான் வாழ்க்கை அருமையாக இருக்கு.
பதிலளிநீக்குஉள்ளம் கொள்ளை போகுதே....
பதிலளிநீக்குஅழகிய அர்ததமுள்ள கதை
நபிக்கையே வாழ்க்கை..
பதிலளிநீக்குஅர்த்தமுள்ள கதை..
பாராட்டுகள்..
நம்பிக்கையில் தான் வாழ்க்கைச் சக்கரம் சுழன்றுகொண்டிருக்கிறது என்பதை மிக அழகாகச் சொல்லியிருக்கீங்க நண்பா.
பதிலளிநீக்குகதை சொன்ன நடை விரும்பத்தக்கதாக இருந்தது நண்பா.
“அட்வான்ஸ் பணத்தை சாமி போட்டோ முன் வைத்து கும்பிட்டான்.“
பதிலளிநீக்குதன்னம்பிக்கை தளர்ந்த நேரத்தில் துணை நிற்கும் கடவுள் என்னும் குறியீடு பலர் வாழ்வில் ஒளிதருவதாக இருக்கிறது.
“அட்வான்ஸ் பணத்தை சாமி போட்டோ முன் வைத்து கும்பிட்டான்.“
பதிலளிநீக்குதன்னம்பிக்கை தளர்ந்த நேரத்தில் துணை நிற்கும் கடவுள் என்னும் குறியீடு பலர் வாழ்வில் ஒளிதருவதாக இருக்கிறது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தரமான ஒரு கதை படித்த நிறைவு நண்பா.
பதிலளிநீக்குநீண்ட நாட்களுக்குப் பிறகு தரமான ஒரு கதை படித்த நிறைவு நண்பா.
பதிலளிநீக்குநல்லா எழுதி இருக்கீங்க.
பதிலளிநீக்குமனசுக்கு நிறைவான நம்பிக்கையான கதை!!
பதிலளிநீக்குஉங்க கதைகள் எப்பொழுதும் ஸ்பெஷல் தான்.... casual எழுத்து நடை, மற்றும் வட்டார பேச்சு வழக்குடன் எதார்த்தமாக இருக்கும்.
பதிலளிநீக்குஎதார்த்தமான அருமையான கதை
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
நம்பிக்கையே வாழ்க்கை யதார்த்தமாய் சொல்லிய விதம் நன்று குமார்
பதிலளிநீக்குகதையின் நேர்த்தி மனசுக்கு நிறைவை தருகிறது நன்று...
பதிலளிநீக்கு////இப்ப அதுவும் போயி வாடகை, கரண்ட்பில்லு எல்லாம் கையில இருந்து கொடுக்கணுமேப்பான்னு////
பதிலளிநீக்குஇடையிடையே உணர்வை மொத்தமாக கிளறிச் செல்கிறது சகோதரா..
நன்றாக இருக்குசார்..கதை நடை அருமை...
பதிலளிநீக்குவாழக் வளமுடன்.
வேலன்.
வாங்க ரமா அக்கா...
பதிலளிநீக்குவாங்க சௌந்தர்..
வாங்க கருன்...
வாங்க முனைவரே...
வாங்க சுசி அக்கா...
வாங்க மேனகாக்கா...
வாங்க சித்ரா அக்கா...
வாங்க சகோதரி ஆமினா...
வாங்க சரவணன்...
வாங்க பிரகாஷ்...
வாங்க ம.தி. சுதா...
வாங்க வேலன்...
உங்கள் அனைவரின் பின்னூட்டக் கருத்துக்கு நன்றிகள் பல.
எனது பதிவுகளை மேம்படுத்த உதவும் உங்கள் பின்னூட்டங்கள் தொய்வில்லாமல் தொடரட்டும்.