சனி, 12 அக்டோபர், 2019

சினிமா : அசுரன்

Image result for asuran hd images

சுரன்...

கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பில்....

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம்... 

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியிருக்கும் படம்... 

என எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். இருவரும் இணைந்தால் மிகச் சிறப்பான படத்தைக் கொடுப்பார்கள் என்பதைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். வெற்றிமாறன் படமென்றாலே தனுஷால் தனிப்பட்ட நடிப்பைக் கொடுக்க முடிகிறது. தனக்கான பாதையை மாஸ், மண்ணாங்கட்டி என்ற வட்டத்தை விட்டு மிகச் சரியாகச் செதுக்கும் பட்சத்தில் தமிழ்ச் சினிமா சிவாஜி, கமல் வரிசையில் இவரையும் நிறுத்தும்.

தமிழ்ச் சினிமா நாயகர்கள் எத்தனை வயசானாலும் காதல் பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருக்கும் போது தங்கள் வயதுக்கு மீறிய வேடங்களை ஏற்று நடிப்பதைச் சில நடிகர்கள் மட்டுமே செய்கிறார்கள். அந்த வகையில் திருமண வயதில் இருக்கும் பையனுக்கு அப்பனாய் நடித்திருக்கும் தனுஷைப் பாராட்டலாம். அதுவும் சிவசாமி என்னும் மனிதராகத்தான் தெரிகிறாரே ஒழிய தனுஷாகத் தெரியவில்லை... (இளம் வயது கதை தவிர்த்துப் பார்த்தால்...)

வயதான மனிதனின் கதாபாத்திரத்துக்கு ஒல்லியான தனுஷைப் பொறுத்திப் பார்க்கும் சிக்கல் ஆரம்பத்தில் மட்டுமே இருந்தது. கதையோடு ஒன்றிய போது சின்ன வயதில் முயல் பிடிக்க வேல்கம்புடன் வரும் வெள்ளச்சாமி அண்ணனும் இப்படித்தானே இருப்பார்... நரைமுடியும் கரை படிந்த பற்களுமாய், ஒல்லியாய் எனத் தோன்றியது... வெள்ளச்சாமி அண்ணன் உருவில் தனுஷ் மனசுக்குள் வந்து அமர்ந்து கொண்டார்.

தமிழ்ச் சினிமாவின் பிரதான களமான இடப்பிரச்சினைதான் இதிலும்...  கொலையில் ஆரம்பித்து பழிக்குப் பழியாய் தொடர்ந்து பல உயிர்களைக் காவு வாங்கி முடிகிறது. ஏழ்மையான ஒருவனின் இடத்தை அபகரிக்கத் திட்டமிடும் பெரும் கூட்டம் எல்லா இடத்திலும் எல்லாச் சாதியிலும் இருக்கத்தான் செய்கிறது. இவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டார்கள் மற்றவர்கள் எல்லாமே ஆண்ட பரம்பரை என்று சொல்வதெல்லாம் வாய் வார்த்தைகள்தான்... எல்லா இடத்திலும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது... இல்லாமல் இல்லை.  

படத்தில் இன்ன சாதி எனச் சொல்லவில்லை என்றாலும் தியேட்டருக்கு வெளியே கொடி பிடிப்பதை வைத்தே நாம் புரிந்து கொள்ள முடிகிறது. வெக்கை எழுதிய எழுத்தாளர் பூமணியையும் அவருக்குச் சாதீயத்தின் பேரில் வைக்கப்படும் பேனர்களையும் பார்க்கும் போது எத்தனை ஆண்டுகளானாலும் நாமெல்லாம் இப்படித்தான் என்றே தோன்றுகிறது. சாதியை வைத்துக் கல்லாக்கட்டும் திறனைத் தமிழ்ச் சினிமா சமீபமாய் மிகச் சிறப்பாகவே செய்து கொண்டிருக்கிறது.

எங்க ஊர் கொல்லக்காட்டுப் பகுதியில் எல்லா இடங்களையும் ஒருவர் வாங்கி மிகப்பெரிய தோட்டம் ஆக்கினார். கொடுக்காதவர்கள் மிரட்டப்பட்டார்கள்... ஆரம்பத்தில் இடம் கொடுத்தவர்கள் கேட்ட பணம் கொடுக்கப்பட்டது... பின்னாளில் இடத்துக்கு இதுதான் என நிர்ணயிக்கப்பட்ட பணமே கொடுக்கப்பட்டது. கேட்கப் பயந்து வந்த விலைக்குப் பலர் கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார்கள்.

Image result for asuran movie review

ஒரு கைம்பெண் என் இடத்தைத் தரமாட்டேன் என்று சொன்னபோது அவரின் இடத்தைச் சுற்றிலும் இருக்கும் இடங்கள் வாங்கப்பட்டுவிட, சுற்றி வேலி போடப்பட்டு விட்டது. நீ உன்னோட இடத்தில் என்ன வேண்டுமானாலும் பண்ணிக்க என்ற சவடால் பேச்சு வேறு... எப்படி என் வேலியைத் தாண்டிச் செல்வாய் என்ற எகத்தாளப் பேச்சு... பண பலமோ ஆள் பலமோ இல்லாத அவர் என்ன செய்வார்... போராடிப் பார்த்தார்... போலீசில் சொல்ல அவர்களோ ஐயா குடுக்கிறதை வாங்கிட்டுப் போம்மான்னு சொன்னாங்க... முடிவில் அவர்களாய்ப் பார்த்து முடிவு பண்ணிக் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு இடத்தை எழுதிக் கொடுத்து விட்டார்.

இதுபோல் இடத்தை அபகரித்த கதைகள் எங்கள் ஊரில் மட்டுமின்றி தமிழகமெங்கும் நிறையவே நிறைந்து கிடக்கிறது. அப்படித்தான் இந்தப் படத்திலும் சிமெண்ட் தொழிற்சாலை வைக்க இடம் கையகப்படுத்தும் போது நாயகனின் மனைவி வழிச் சொத்துக்குப் பிரச்சினை வருகிறது. அதன் பின்னான நிகழ்வுகளே கதையாகும் போது நாயகனின் முன் கதையும் காட்டப்படுகிறது. நடப்புக் கதையில் இடப் பிரச்சினையும் கொலையும் என்றால் முன் கதையில் அடக்கி ஆளுதலும் கொலைகளும்... முன் கதையே படத்தின் வேகத்துக்கு முட்டுக்கட்டையாகவும் இருக்கிறது.

அப்பன் ஒரு பயந்தாங்கொள்ளி... அண்ணன் வீரன் என்று நினைத்திருக்கும் பையனின் முன் அப்பனின் ருத்ரதாண்டவம் அரங்கேறும் போது அவனின் கண்முன்னே அப்பன் ஆடும் ருத்ரதாண்டவம் மகனின் கண்களுக்குள் மட்டும் ஆச்சர்யத்தைக் கொடுக்கவில்லை... நமக்குள்ளும் அதே ஆச்சர்யத்தை... அந்த வேகத்தைப் பாய்ச்சுகிறது... அதற்கு முக்கியக் காரணம் பின்னணியில் பிண்ணிப் பெடலெடுக்கும் ஜி.வி.பிரகாஷ். இவர் நாயகனாக இல்லாமல் இசைநாயகனாகவே தொடர்ந்தால் சிறப்பு.

மகனுக்காக ஊரில் ஒவ்வொருவர் காலிலும் விழுந்து எந்திரித்து வரும்போது மனசொடிந்த ஒரு மனிதனின் நிலையை அப்படியே தன் நடிப்பில் கொண்டு வந்திருக்கும் தனுஷ்... படத்தை தன் நடிப்பால் இழுத்துச் செல்கிறார். அவருக்காய்... மாஸ் நாயகன் என்ற போர்வைக்குள் காட்சிகள் வரும்போது படம் தனுஷை இழுத்துக் 'கொல்'கிறது.

வட்டார வழக்குப் பேச்சு வெற்றிமாறன் படங்களில் மிகச் சிறப்பாகக் கையாளப்படும். அது அசுரனிலும் அட்சர சுத்தமாய் கையாளப்பட்டிருக்கிறது. யாருடைய பேச்சிலும் எந்த உறுத்தலும் இல்லை. 

மகனின் கொலைக்காக,  சின்னவன் அரிவாளை எடுக்க, அவனைக் காப்பாற்ற காட்டுக்குள் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனின் மனநிலையை மிக அழகாகக் காட்டியிருக்கிறார்கள்.  தனுஷ் அப்படி ஒரு தகப்பனாய் வாழ்ந்திருக்கிறார். மூர்க்க குணம் கொண்ட மகனின் மனநிலையும் சிறப்பாகவே காட்டப்படுகிறது.

மூத்தவனாய் வரும் டீஜே அருணாச்சலம் வாலிப முறுக்கை... வேகத்தை மிக அழகாகக் காட்டியிருக்கிறார். சின்னவனாய் வரும் கென் கருணாஸ்தான் படத்தை முக்கியக் கட்டத்துக்கு நகர்த்துக்கிறான். ஆரம்பம் முதலே அப்பாவுக்கு ரொம்ப நெருக்கமானவனாய் மூத்தவனும் அப்பாவிடம் அடி வாங்குபவனாக, அப்பாவை எதிர்த்து எதிர்த்துப் பேசுபவனாக சின்னவனும் வருகிறார்கள்.

மனைவியாக வரும் மஞ்சு வாரியர் கிராமத்துப் பச்சையம்மாளாகவே மாறியிருக்கிறார்... வாழ்ந்திருக்கிறார். எந்த இடத்திலும் தன் நடிப்பில் சோடை போகவேயில்லை.  வில்லன்களுடன் மோதுவதாகட்டும்... மகனின் இறப்புக்குப் பின் அவன் நினைவால் வாடுவதாகட்டும்... காட்டுக்குள் ஓடித் திரியும் போதாகட்டும்... வட்டார வழக்குப் பேச்சிலாகட்டும்... நமக்கு பச்சையம்மாளாக மட்டுமே தெரிகிறார்... மஞ்சு வாரியராய் கண்ணுக்குள் நிற்கவே இல்லை. சிறப்பான நடிப்பு... தமிழ்த் திரையுலகம் அவரை இனியேனும் கண்டு கொள்ளலாம்.

தனுசின் அக்கா மகளாக, கட்டிக்கப் போகும் பெண்ணாக அம்மு அபிராமி... சிறப்பான நடிப்பு... செருப்பைத் தலையில் சுமக்கும் காட்சியில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். 

பசுபதி... எப்படிப்பட்ட நடிகன், தமிழ்ச்சினிமா தொலைத்த நல்ல நடிகர்களில் இவரும் ஒருவர்... தனுஷின் மச்சினனாக, மஞ்சுவின் அண்ணனாக, மாப்பிள்ளைகளுக்குச் செல்லம் கொடுக்கும் மாமனாக வாழ்ந்திருக்கிறார். பிரகாஷ் ராஜ் ஏழைகளுக்காக வாதாடும் வக்கீலாய் வருகிறார். 

வடக்கூரானாக ஆடுகளம் நரேன், அவரின் தம்பியாக பவன்,  கள்ளச்சாராய முதலாளியாக இயக்குநர் ஏ. வெங்கடேஷ்,  போலீஸ் இன்ஸ்பெக்டராக இயக்குநர் பாலாஜி சக்திவேல், தனுசின் அண்ணனாக இயக்குநர் சுப்ரமண்யம் சிவா, சாதிப் பிரச்சினையைத் தூக்கிச் சுமக்கும் இளைஞனாக நிதிஷ் வீரா என அவரவர் தங்கள் கதாபாத்திரத்துக்கு வலு சேர்த்திருக்கிறார்கள். 

Image result for asuran movie stills

எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலைத் தன் பாணியில் சினிமா ஆக்கியிருக்கிறார் வெற்றிமாறன். செருப்புப் பிரச்சினை, பஞ்சமி நிலமெல்லாம் படத்துக்கான சேர்ப்பு... 

இதை வைத்து அரசியல்வாதிகள் பல்லக்குத் தூக்க ஆரம்பித்திருக்கிறார்கள். தன் சாதியில் இருக்கும் தவறைச் சுட்டிக் காட்டினால் படம் வெளியாகக் கூடாதென கதறுவார்கள். அதுவே தான் செய்வதைச் சரியெனச் சொல்லும் படமாக இருக்கும்பட்சத்தில் தலையில் தூக்கி வைத்துக் கரகம் ஆடுவார்கள். அதுதான் அசுரனுக்கு நடக்கிறது.

சினிமாவை வாழ்வியலோடு மட்டும் பார்க்காமல் சாதீய அரசியலோடு அணுகுவதுதான் நம் தமிழக அரசியல்வாதிகளின் வேலை. அதைச் சரிவரச் செய்கிறார்கள் என்பதை நண்பர்களின் பதிவின் மூலமும் செய்திகளின் மூலமும் அறிந்து கொள்ள முடிகிறது. 

மறுபடியும் சொல்ல நினைப்பது என்னவென்றால் ஆண்ட, அடிமை என்பது எல்லா இடத்திலும் எல்லாச் சாதியிலும் இருக்கத்தான் செய்கிறது. இவர்கள் மட்டும்தான் இப்படி எனத் தரம் பிரித்தல் பிரச்சினைகளுக்கான தீர்வாகாது. இங்கு காட்டப்படும் சிவசாமியும் வடக்கூரானும் எல்லாச் சாதியிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதற்கான தீர்வு வெட்டுக் குத்து என்பதாய் மட்டும் சொல்லுதல் சரியல்ல. தேவர்மகனில் ஆரம்பம் முதல் இறுதிவரை இதே வெட்டுக்குத்துத்தான்,,, இறுதியில் புள்ள குட்டிகளைப் படிக்க வைங்கன்னு சொல்வார்கள். அதேதான் இதிலும் முடிந்தளவுக்கு வெட்டிச் சரித்துவிட்டு இறுதியில் படிப்புத்தான் முக்கியம் என்கிறார்கள்.

இசையில் ஜி.வி.பிரகாஷ் விளையாடியிருக்கிறார்... சண்டைக் காட்சிகளுக்கான பின்னணி, பாடல்கள் என அருமையான இசை... ஒளிப்பதிவு வேல்ராஜ், கலை ஜாக்கி, படம் முழுக்க இவர்களின் உழைப்புத் தெரிகிறது.

சுகா, வெற்றிமாறன், மணிமாறன் கூட்டணி வசனங்களை அருமையாக எழுதியிருக்கிறார்கள். நமக்கிட்ட காசிருந்தா புடிக்குவானுங்க... நிலமிருந்தா எடுத்துக்குவானுங்க... படிப்ப மட்டும்தான் அவனுக ஒண்ணும் செய்ய முடியாது... அதனால நீ படிச்சி, அதிகாரத்து வா... அந்த அதிகாரத்துக்கு வந்ததும் அவனுக உனக்குச் செஞ்சத நீ யாருக்கும் செய்யாதே'ன்னு சொல்லும் வசனம் படத்தின் இறுதியில் வந்தாலும் அருமை.

மொத்தத்தில் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணிக்கு இன்னுமொரு வெற்றிப்படம்.

சாதியைத் தூக்கிச் சொமக்காமல் சிவசாமி என்னும் மனிதனின் வலியை மட்டுமே சுமந்து வருவதாய் இருந்தால் பார்க்கலாம்... அருமையான படம். 

Image result for asuran movie poster

படம் வெளியான அன்றே தியேட்டரில் போய்ப் பார்த்தோம்.... இரவுக் காட்சிக்கு அரங்கு நிறைந்திருந்தது. அடுத்த நாளே எழுதி வைத்தேன் என்றாலும் பகிரும் எண்ணமில்லாமலேயே பகிரவில்லை... இன்று ஒரு பதிவாய் மட்டுமே பகிர்ந்திருக்கிறேன்.... விமர்சனமாய் அல்ல.

-'பரிவை' சே.குமார்.

5 கருத்துகள்:

  1. விமர்சனம் அழகாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
  2. அருமையான விமர்சனம் குமார். ஊடே உங்கள் கருத்துகளும் சேர்த்திருப்பது நல்லாருக்கு கருத்துகளும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. அசுரன் படம் பற்றி சாதீய விமர்சனங்கள் வருவது பற்றி நான் படிக்கவில்லை.   படம் நன்றாயிருக்கிறது என்று சொன்னார்கள்.

    பதிலளிநீக்கு
  4. அருமையான கண்ணோட்டம்

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி