வியாழன், 10 அக்டோபர், 2019

என்னைக் கவர்ந்த பாடல்கள் - 1

Image result for ilaiyaraja

பிக்பாஸ் பற்றி எழுதிய கட்டுரைகள் மிகப்பெரிய தாக்கத்தைக் கொடுத்தன என்பது உண்மை... நிகழ்வை மட்டுமே தொகுக்காமல் விமர்சனப் பார்வையில் நானும் நிறையப் பேசியிருக்கிறேன்னுதான் நினைக்கிறேன். 86 கட்டுரைகளையும் ஒன்றாய் தொகுத்து வைத்து மீண்டும் வாசிக்க வேண்டும். எல்லாமே அலுவலகத்தில் கிடைத்த நேரத்தில் எழுதியவைதான் என்பதால் கண்டிப்பாக பிழைகள் இருக்கும்... மீண்டும் ஒரு முறை பிழை திருத்தித் தொகுத்து வைக்க வேண்டும். 

நகைச்சுவை, கோபம், மகிழ்ச்சி, எதிர்ப்பு என பல விதமாய் எழுதிப் பார்த்திருக்கிறேன். சில பதிவுகளில் அவர்களின் உரையாடலை விடுத்து நானே உரையாடல் எழுதியிருக்கிறேன்... எப்படிப் பார்த்தாலும் இந்த 86 பதிவும் எனக்கொரு புதிய எழுத்து அனுபவம்தான். வாரம் ஒரு பதிவென எழுதலாம் என ஆரம்பித்து பின் தினம் எழுதலாமே என ஆகிப் போகக் காரணம் நான் முன்பே சொன்னது போல் பிரதிலிபி உறவுகள் கொடுத்த உற்சாகமே... 

பிக்பாஸ் முடிஞ்சிருச்சின்னு விட்டுடாம எதாவது எழுதுங்க என அவர்கள் உரிமையுடன் கேட்டார்கள் என்றால் என் பதிவு வாசிக்க ஏதோ ஒரு விதத்தில் சுவராஸ்யமாகவோ அல்லது சுவையாகவோ இருந்திருக்கக் கூடும் அல்லவா..? 

பெரும்பாலும் வலையில் பகிரும் எல்லாவற்றையும் பிரதிலிபியில் பகிர்வதில்லை... இது என் வலை நட்புக்களுக்குத் தெரியும்... தொடர்ந்து இல்லையென்றாலும் எப்போதேனும் இங்கு ஏதாவது கிறுக்கி வைப்பேன்... என்னை உயிர்ப்பாய் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே. அப்படித்தான் இந்தத் தொடரையும் இங்கு ஆரம்பிக்கிறேன்... அங்கும் பகிர்வேன். 

பிறந்தது முதல் இதுவரை எத்தனையோ பாடல்களைக் கேட்டிருப்போம்... கேட்டதில் நம்மைக் கவர்ந்த பாடல்கள் குறித்து, அது தொடர்பாக நாம் அனுபவித்ததைக் குறித்து இங்கு பகிரலாம் என்று நினைக்கிறேன். 

பாடல் பிறந்த கதை, எழுத அமைந்த சூழல் என்றெல்லாம் எழுத நம்மால் இயலாது. அதற்காக இணையத்தில் நிறைய மேய வேண்டும்... நாலு பேர் நாலு விதமான எழுதி வைத்திருப்பார்கள்... அதையெல்லாம் மொத்தமாக எடுத்து அதிலிருந்து கலவையாய் ஒரு பாரா எழுதி நான் எழுதியதே சரியெனச் சாதிக்க என்னால் முடியாது. அது தேவையும் இல்லை. 

எனவே பாடல் குறித்தான கருத்தை, எனக்கு அது ஏன் பிடித்த பாடல் என்ற காரணத்தை என் மனசு சொல்வதுபடி இங்கு பகிர்வேன். எல்லாமே என்னோடு தொடர்புடைய நிகழ்வுகளாகவே இருக்கும் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.

இது தினம் தோறும் வரும் பகிர்வா... அல்லது தோன்றும் போது எழுதும் பகிர்வா... என்பதெல்லாம் இன்னும் முடிவு செய்யவில்லை.... ஆனால் தொடர்ந்து சில பல பதிவுகளாவது வரும் என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும். என்னால் முடிந்தளவு தொடர்ந்து எழுதுவேன்.

குடந்தையூர் சரவணன் அண்ணன் பாக்கியராஜ் அவர்கள் திரைத்துறைக்கு வந்து 40 ஆண்டுகள் ஆனதையொட்டி இது நம்ம பாக்யராஜ்ன்னு முகநூலில் எழுதி வருகிறார். எனவே அதை அறிந்த நட்புக்கள் அவரைப் பார்த்துத்தான் இந்தக் கட்டுரையை நான் ஆரம்பித்திருக்கிறேன் என்று நினைத்து விடாதீர்கள். இது பல வருடங்களுக்கு முன்னே யோசித்தது.

மேலும் பிக்பாஸ் - 'கக்கூஸ்' கவின் சொன்னது மாதிரி அது வேற 'ZONE' இது வேற ''ZONE. அவர் எழுதுவது ரசனையானது... ரகளையானது... ரம்மியமானது... வாசிக்காதவர்கள் வாசிக்க ஆரம்பிங்க... அருமையாக எழுதுகிறார். புத்தகமாகவோ / பாக்யாவில் தொடராகவோ வரும்பட்சத்தில் அதற்கான இடத்தை அது கண்டிப்பாகத் தக்க வைத்துக் கொள்ளும். வாழ்த்துக்கள் அண்ணா.

சரி நம்ம கதைக்கு வருவோம்... 

என்னுடைய சிறுவயதில் திரையிசையில் ராஜாவின் ஆட்சி என்பதால் அதிகம் விரும்பிக் கேட்கும் பாடலாய் இளையராஜாவின் பாடல்களே இருக்கும். அதன் பின்னே ஏ.ஆர். ரஹ்மான், தேவா, யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், சிற்பி, எஸ்.ஏ.ராஜ்குமார், தமன் இன்னும் பலர். 

நாம் கேட்ட, ரசித்த பாடல்களில் நமக்கு மிகவும் பிடித்த பாடல்கள், நம்மைப் பாதித்த பாடல்கள் என தனிப்பட்ட பாடல்கள் நிறைய இருக்கும் அல்லவா. அப்படி எனக்குள் இருக்கும் பாடல்களைப் பற்றித்  தொடர் பதிவாய்ப் பார்க்கலாம்.

எப்பவுமே நம் மனநிலையை மாற்றுவதில் இசைக்குப் பெரும் பங்குண்டு. அதுவும் கிராமத்துத் திருவிழாக்கள், இறப்பு, திருமணம் உள்ளிட்ட சடங்குகளில் வாசிக்கப்படும் மேளம், நாதஸ்வரம், தப்பு, உறுமி போன்றவை நம்மை இடம் மறந்து ஆட வைக்கும். அடக்கி வைத்தாலும் தலையோ, கையோ, காலோ தானாக ஆட்டம் போடும்...  அப்படிப்பட்ட இசையை சினிமாப் பாடல்களுக்குள் நிறைத்தவர் என்றால் அது இளையராஜாதான். நானே பெரியவன் என்ற அவரின் பேச்சுக்களும் அதற்கான எதிர்ப்புக்களும் ஒரு பக்கம் இருக்கத்தான் செய்கிறது என்றாலும் பாட்டை ரசிக்கும் நமக்கு அது தேவையில்லாதது. நம்மைத் தாலாட்டும் இசைத் தகப்பன் அவர் என்பது மட்டுமே அவரைக் கொண்டாடப் போதுமானது. நாம் 80,90 களின் ராஜாவோடு பயணிப்போம். இப்போதைய மேடைகளில் ராஜாவுடன் நிற்கவேண்டாம்.

எத்தனை பாடல்கள்... எத்தனை ராகங்கள்.... எத்தனை ரகங்கள்... 

அதிலும் குறிப்பாய் சில கூட்டணிகளைச் சொல்லலாம். என்றும் அழியாத ஜீவனுள்ள பாடல்களைக் கொடுத்த இணை இவர்கள்...

இளையராஜா - மோகன்... 

இளையராஜா - முரளி... 

இளையராஜா - சத்யராஜ்...

இளையராஜா - கார்த்திக்... 

இளையராஜா - பிரபு...

இளையராஜா - இராமராஜன்...

இப்படியான  கூட்டணி கொடுத்த பாடல்களை இப்போதும் ரசிக்காமல் இருக்க முடியுமா..? 

இளையராஜா - ரஜினி, இளையராஜா - கமல் கூட்டணியைவிட மேலே சொன்ன கூட்டணிகள்தான் மிகவும் சிறப்பான பாடல்களைக் கொடுத்திருக்கின்றன என்பது என் எண்ணம். ஒரு மேடையில் கமலுக்குத்தான் நல்ல பாடல்களைக் கொடுத்தார் ராஜா என ரஜினி சொல்லியிருப்பார்... அப்படி எதுவும் தெரியவில்லை... இருவருக்குமே சிறப்பான பாடல்கள்தான் கொடுத்திருக்கிறார்.

பட்டிதொட்டியெல்லாம் டீக்கடை, பேருந்துக்கள் என இப்போதும் அவை மக்களைத் தாலாட்டிக் கொண்டுதானே இருக்கின்றன. இரவுப் பயணமென்றால் ராஜா மட்டும் போதும் என்பதாய்த்தான் மனம் விரும்புகிறது இல்லையா...? இதில் 2000க்கு அப்புறம் பிறந்தவர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம்...அவர்கள் எல்லாம் 'ஆராமலே...' கேட்பவர்கள்.  அறுபதுகளின் பாடல் நமக்கு சற்றே தள்ளித் தெரிவது போல்தான் தொன்னூறுகளின் பாடல்கள் அவர்களுக்குத் தள்ளியே தெரியும் என்றாலும் எல்லாத் தலைமுறைக்கும் பிடித்த பாடல்கள்தானே அவை.

ரஹ்மான் வித்தியாசனமான இசையைக் கொடுத்தார். ரஹ்மானின் மெலோடிகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதேபோல் தேவாவின் கானாக்கள்... கேட்டாலே உற்சாகம் கொடுக்கும் பாடல்கள் அவை... தேவாவுக்குப் பின் யார் கொடுத்த கானா கவர்ந்தது என்று யோசித்தால் என்னைப் பொறுத்தவரை தேவா இடத்திற்கு யாரும் நகரவில்லை என்றே சொல்லலாம்.

எனக்குப் பிடித்த பாடல்கள் என்ற வரிசையில் முதல் பாடலை அடுத்த பகிர்வில் பார்க்கலாம் என்பதால் எல்லாருக்கும் பிடித்த தாலாட்டுப் பாடல் பற்றிய என் நினைவுகளைக் கொஞ்சம் இந்தப் பதிவில் பார்க்கலாமே. 

தாலாட்டுப் பாடல்கள், நடவுப் பாடல்கள் குறித்தெல்லாம் தனிப்பதிவு எழுதியிருக்கிறேன். நாட்டுப்புறப் பாடல்கள் குறித்து விரிவாய் எழுத வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அந்தப் பதிவுகளை இங்கு ஆரம்பித்தேன்... ஆனாலும் வெளிநாட்டு வாழ்க்கையில் தேடல் என்றால் அது இணைய வழிதான் என்பதால் தேடும் முயற்சியில் ஒரு தொய்வு. அதை அப்படியே கிடப்பில் போட்டிருப்பதால் பதிவு எழுதும் எண்ணம் கனவாய்த்தான் இருக்கிறது. 

தாலாட்டுப் பாடல்கள் எப்பவுமே இனிமையானவை... அதைக் கேட்கும் போது ஏதோ ஒரு உணர்வு நமக்குள் எழும். அதனால்தான் சினிமாக்களில் வரும் தாலாட்டுப் பாடல்களைக் கொண்டாடுகிறோம்... ஏஞ்சாமின்னு உச்சி மோர்ந்து கண்ணான கண்ணேன்னு நாமும் பாடித் திரிகிறோம்.

இன்று தாலாட்டுப் பாடல்களை பெரும்பாலான வீடுகளில் கேட்கமுடிவதில்லை... அழும் பிள்ளையின் கையில் செல்போன் கொடுக்கப்பட்டு ரொம்ப நாளாகிவிட்டது. செல்போனைப் பிடிங்கினால் அவன் அழுவான் எனச் சொல்லும் சொந்தங்களையே அதிகம் பார்க்க முடிகிறது. அந்தச் செல்போனால் குழந்தைக்கு விளையப் போகும் கேடு என்ன என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை. பட்டால்தானே புத்தி வரும். படும் வரை கொடுத்துக் கொண்டே இருப்போம்.

அவன் யூடியுப் எடுத்து அதுல பாட்டு ஓட விடுவான் தெரியுமான்னு மலர்ந்த முகத்துடன் சொல்வதில் நமக்கு அவ்வளவு பெருமை... அறியாத வயதில் யூடியுப் எடுக்கத் தெரிந்தவன் பத்து போவதுக்குள் பலதும் கற்று காதலுக்குள்ளும் காமத்துக்குள்ளும் போய்விடுகிறான். சமீபத்தில் நான் பார்த்த மலையாளப் படங்களில் நாலு படங்கள் பள்ளிக் காதல் கதைகள்தான்... சினிமாவும் இப்போ அப்படியான இடத்தை நோக்கி நகர்வதால்தான் பள்ளிச் சீருடையுடன் ரோட்டில் முத்தமிட்டுக் கொள்வதைக் காண முடிகிறது. 

எங்க அம்மா பாடும் தாலாட்டுப் பாடல்கள் அவ்வளவு இனிமையாக இருக்கும். அதற்காகவே பாடச் சொல்வோம். ஏழு பேர் பிறந்த பெருங் குடும்பம் எங்களது... எங்க வீட்டில் அக்காள்கள் அண்ணன்களின் குழந்தைகளைத்  (இப்ப அவங்க எல்லாம் திருமணம் ஆகி குழந்தைகளுக்குத் தாய் தந்தை ஆகிவிட்டார்கள்) தொட்டியில் இட்டு அம்மா தாலாட்டுப் பாடுவார்கள். அழுகையை நிறுத்தவில்லை என்றால் இடையிடையே பூச்சாண்டி வர்றான், பூனை வருது, மியாவ்... மியாவ்.... என்ற மிரட்டல்களும் இருக்கும்.

'ரே.... ரே.... ரே....' என ஆரம்பித்து 'ஆராரோ.... ஆரிராரோ..' என அழகாய் ராகமெடுத்துப் பாட ஆரம்பிப்பார். நிசப்தமான இரவில் தாலாட்டும் அந்தக் குரலும் ராகமும் கேட்டுக் கொண்டே இருக்கச் சொல்லும்.

'மாமன் அடிச்சாரோ மல்லிகைப்பூப் பந்தாலே...
அத்தை அடிச்சாரோ அரளிப்பூச் செண்டாலே...'

எனவரிகளில் மாமா, அத்தை, அப்பா என எல்லாருமே வருவார்கள். அவர்களை அடிச்சிடலாம், அவதாரம் போட்டிடலாம் என்றெல்லாம் வரிகளில் வரும். பாடலின் ராகத்தில் பக்குவமாய்க் குழந்தை தூங்கியிருக்கும். சில வேளைகளில் பாட்டு நின்றால் அழ ஆரம்பித்து விடுவார்கள். அவர்களுக்கு உடல் நலமில்லாத தினங்களில் அம்மா இரவெல்லாம் தூங்காமல் தாலாட்டிக் கொண்டிருப்பார்.

அம்மா இல்லாத நாட்களில் நாங்களும் பாடிப் பார்த்திருக்கிறோம்.... என் குழந்தைகளுக்கு அவ்வப்போது நானும் தாலாட்டுப் பாடலுடன் படப்பாடல்கள் கலந்து கலவையான பாடலைக் கொடுத்திருக்கிறேன்.

அப்போதெல்லாம் கிராமங்களில் வீட்டுக்கு வீடு தாலாட்டுப் பாடல் கேட்கும்... ஒவ்வொன்றும் வெவ்வேறு ராகத்தில் இருக்கும்... வரிகள் கூட வித்தியாசப்படும். இப்பல்லாம் தாலாட்டுப் பாடல்களும் இல்லை... பாடியவர்களில் பெரும்பாலானவர்களும் இல்லை... குறிப்பாக கிராமத்து வாழ்க்கையும் கூட்டுக் குடும்பமும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது.

பிறந்த குழந்தைக்கு காலையில் கண்ணில் நல்லெண்ணெய் ஊற்றி, இளம் வெயிலில் போட்டு வைப்பது என்பது இப்போது எங்கும் இல்லை... கண்ணில் எண்ணெய் விட்டால் ஒத்துக்காது... வெயில் ஒத்துக்காது... தூதுவளை, வேப்பிலை போன்ற மருந்துகள் ஒத்துக்காது... குறிப்பாக மண்ணுக்குள் விளையாடவே கூடாது என நாம் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டோம்.... ஒதுங்கி வந்து விட்டோம்.

இங்கு பிலிப்பைனிகள் அந்த வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். பிறந்த குழந்தைக்கு கண்ணில் எண்ணெய் விட்டு கட்டிடத்துக்குக் கீழே கொண்டு வந்து வெயிலில் வைத்திருப்பதைத் தினமும் கடமையாகச் செய்கிறார்கள். அவர்களைப் பார்க்கும் போது ஆச்சர்யமாக இருக்கும். இங்கிருக்கும் நம்மவர்கள் தமனா டவுசர் போட்டுப் பெண் பிள்ளைகளை வெளியில் கூட்டிச் செல்வதைப் பெருமையாக நினைக்கிறார்கள்.

நாம் பீட்ஸா, பர்கர்ன்னு பாஸ்ட்புட் அயிட்டத்துக்குள்ள நின்னுக்கிட்டு இருக்கோம்... இங்க பழைய சோற்றையும், நுங்கையும், சப்பாத்திக் கள்ளிப் பழத்தையும், புளியம்பளத்தையும், மிளகு தக்காளிப் பழத்தையும் பாக்கெட்டுல போட்டு வித்துக்கிட்டிருக்கானுங்க... நாம் மண்ணின் மனத்தை மட்டுமல்ல உடல் நலத்தையும் மெல்ல மெல்ல இழந்து கொண்டுதான் இருக்கிறோம்.... தமிழன்டா என்பதை மட்டும் விடாப்பிடியாய் பிடித்துக் கொண்டு...

கண்மாயில் மடை வழி தண்ணீர் வயலுக்குப் போகாத நிலையில் எரவாமரம் கட்டி தண்ணீர் இறைக்க வேண்டும். பெரும்பாலான வருடங்களில் கதிர் அறுப்புக்கு முன் ஒரு தண்ணியோ அல்லது இரண்டு தண்ணியோ தேவைப்படும் போது இது போலாகிவிடும் அப்போது உடல்வலி தெரியாமல் இருக்கவும் வயலுக்கு இத்தனை மாத்து என்ற கணக்கு இருப்பதால் எவ்வளவு இறைத்திருக்கிறோம் என்பது தெரிந்து கொள்ளவும் பாட்டுப் பாடுவார்கள். ஒன்றிலிருந்து 110 வரை போய் திரும்ப ஒன்றுக்கு வரவேண்டும். 

இப்படிப் பாடுவதில் எங்கய்யா... அதாவது அப்பாவின் அப்பா.... பாடும் பாடலைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்... நம்மைக் கவரும் விதமாக, அதே நேரத்தில் நேர்த்தியான ராகத்தோடு, ஏற்ற இறக்கத்தோடு பாடுவார். இரவில் அவர் தண்ணீர் இறைக்கிறார் என்றால் தூரத்தில் போகும் போதே நமக்குத் தெரிந்துவிடும்... எங்கப்பாவும் பாடுவார்.... நாங்கள்ல்லாம்... ஹி.. ஹி... முயற்சித்திருக்கிறோம். எரவா மரம் புடிச்சி தண்ணீர் இறைக்கக் கத்து வைத்திருந்தோமே அது போதாதா..? இரட்டை மரம் போட்டு இறைக்கும் போது அப்பாவுக்குத் துணை மரமாய் நாங்கள் இறைப்போம்.

இதே மாதிரித்தான் நடவுப்பாடல், குலவைப்பாடல், ஒப்பாரிப்பாடல் என எல்லாவற்றுக்கும் பாடல்கள் இருந்தன, பாடினார்கள்... எல்லாமே வாய்வழிப் பாடல்கள் என்பதால் வாழ்வின் இறுதியை நோக்கிப் பயணிக்கும் அந்தத் தலைமுறைக்குப் பின் அந்தப் பாடல்களைப் பாடவும் ஆளில்லை... கேட்கவும் ஆளில்லை... குறிப்பாக பாடலின் வரிகள் முழுமையாத் தெரிந்தவர்கள் இப்போதைய தலைமுறையில் யாருமில்லை. 

இசையுடன் பாடலைக் கேட்பதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது... இல்லையா..?

அடுத்த பதிவில் இருந்து ஒவ்வொரு பாடலாக, அது தொடர்பான செய்திகளுடன் பார்ப்போம்.

பாடல் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

3 கருத்துகள்:

  1. கதம்பமாக அலசிய விடயங்கள் ரசிக்க வைத்தன... தொடரலாம்...

    பதிலளிநீக்கு
  2. குமார் எனக்குமே பாடலின் வரிகள் முழுமையாகத் தெரியாது. அதிகம் கேட்டதுமில்லை. திருமணத்திற்கு முன் வீட்டில் சினிமா பாட்டு எதுவும் அனுமதி கிடையாது. அப்ப சிலோன் ரேடியோவுல போடுஅதை நாங்க கஸின்ஸ் (பெரிய கூட்டுக் குடும்பம்) எல்லாரும் பெரியவங்க இல்லாதப்ப கேட்டதுதான். ஸ்கூல், காலேஜ் போறப்ப பஸ்டான்ட், ஸ்கூல் விழா காலேஜ் விழால போடுவாங்க. அப்ப்டிக் கேட்டதுதான்.

    கறுப்பு வெள்ளைப் படப் பாடல்களும் பிடிக்கும் குமார். கேட்டவரையில்...

    நல்லா சொல்லிருக்கீங்க. என்ன பாடல் பகிரப் போறீங்கனு எதிர்பார்ப்பில். தொடருங்க...
    ஸ்ரீராம் வந்தார்னா நிறைய சொல்லுவார்...

    (முன்பு உங்க தளத்துல பாடல்கள் பகிர்ந்த நினைவு. உங்கள் தளம் அறிந்ததே ஏதோ ஒரு பாடல் தேடப் போக வந்ததுதான்னு நினைவு)

    கீதா

    பதிலளிநீக்கு
  3. இளையராஜா பற்றி எல்லோரும் இரண்டு மாதிரியும் பேசுவார்கள்.  ஆனால் எனக்கு மிகவும் பிடித்த இசை அமைப்பாளர்.  அவர் பாடல்களில் நீங்கள் கேட்கும்போது அதன் இசையையைக் கேட்கும்போது வரும் மனா உணர்வுகள் அற்புதமானவை.  எழுதுங்கள்.   படிப்போம், பேசுவோம்.

    நான் நடிகர்களோடு சம்பந்தப்படுத்தி இளையராஜாவைப் பார்ப்பதில்லை.  பாடல்கள்தான்.  நிறைய படங்கள் நான் பார்த்திருக்கவே மாட்டேன்.

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி