99ம் நாள் காலை 'மரண மாஸ்' பாடலுடன் விடிந்தது.
சிவப்புக் கேட்டுக்கு அந்தப் பக்கமிருந்து மூணு பேரு வந்து குதிச்சிக் குதிச்சி ஆடுனாங்க... நாங்கூட பிக்பாஸ் இல்லம் அலங்கரிக்கப்பட்டிருந்ததால் நூறாவது நாள் கொண்டாட்டம் போலன்னு நினைச்சேன். இது பிறந்தநாளை நாலஞ்சி நாள் கொண்டாடும் அரசியல்வாதிகளைப் போல நூறாவது நாளுக்கு முந்தின நாள் கொண்டாட்டம் போல... அதுவும் இல்லைன்னா ஆட ஆளில்லைன்னு அனுப்பியிருப்பானுங்க போல.
வந்தவனுக ஆடுனானுங்க... இருக்கவனுங்க மெல்ல எழுந்து வந்து சேர்ந்துக்கின்னானுங்க... அதுக்காகவே பிக்பாஸ் கொஞ்ச நேரம் பாட்டை நீடிச்சாரு.. பின்னே என்ன இருக்கு அங்க... தொகுத்து ஒரு மணி நேரத்துக்கு ஓட்டுறதுக்கு... ஆடிக்களைத்து அமரப் பொயிட்டானுங்க... ஒண்ணுமில்லை சமைக்கிறதையாச்சும் காட்டுவோம்ன்னா இவனுகளுக்குச் சமைக்கவும் தெரியாது. நாமதான் சாப்பாடே அனுப்புறோம்... என்னத்தைக் காட்டுறதுன்னு பிக்பாஸ்க்கு ஒரே குழப்பம்.
அந்த நேரத்துல நம்ம சாண்டிக்கு ஒரு ஆசை... அதாவது பிள்ளையில்லாத வீட்டுல கெழம் துள்ளி விளையாடுதுன்னு சொல்ற மாதிரி தர்ஷன் இல்லாத வீட்டுல... தர்ஷன் போனப்போ பிக்பாஸ் இது தப்பு... டேய் என்ன நினைச்சிக்கிட்டே... அப்படின்னு எல்லாம் சீனைப் போட்ட சாண்டியோட கண்ணில் அப்பாடா தொலைஞ்சான்டா அப்படிங்கிற நிம்மதி தெரிந்ததை எத்தனை பேர் கவனித்தீர்கள்..? சரி கதைக்கு வருவோம்... வாங்க...
அதாகப்பட்டது பிள்ளை இல்லாத வீட்டுல கெழம் துள்ளி விளையாடுற மாதிரி, ஷெரினோட கெவுனைப் போட்டுக்கிட்டு, தலையில ஹேர்பின்னெல்லாம் குத்தி, லிப்ஸ்டிக் போட்டு சாண்டி 'ஆண்ட்டி' ஆனாரு... ஆண்டியில்லங்க... உடனே பிக்பாஸ்க்கு குதூகலம் கூத்தாடுச்சு போல... சந்தியா... சாண்டிக்குப் பெண்பால் சந்தியாவாம்.... என்ன அருமையான கண்டுபிடிப்பு... சந்தியா உங்க மைக்கைப் போடுங்கன்னு சொன்னதும் எப்பவும் போல காணாதவன் கஞ்சியைக் கண்டதுபோல, நகைச்சுவை இல்லாத நரகத்தில் இதுவும் நகைச்சுவையே என வாய்விட்டுச் சிரித்து மகிழ்ந்தார்கள்.
முகன் பாட, லாஸ் கை தட்ட, ஷெரின் உற்சாகமூட்ட சாண்டி ஆடினார்... ஒரு படத்துல வடிவேலு எங்கப்பா வாசிக்க, எங்கண்ணன் இசைக்க, எங்கம்மா ஆட, நான் பார்த்துக்கிட்டு இருப்பேன்னு சொல்வாரே... அப்படி ஒரு கண்கொள்ளாக் காட்சி அது... சாண்டியைப் பார்க்க கரகாட்டத்துல குறத்தி வேசம் போடுற கணபதி மாதிரியே இருந்துச்சு... அதுவும் ஷெரின் எப்படி ஆடுவார்ன்னு செஞ்சி காட்டியதெல்லாம் மரண மாஸ்.
என்ன டாஸ்க்குடா கொடுக்கிறது என்பது இந்த சீசன் ஆரம்பத்துல இருந்தே பிக்பாஸ்க்குப் பிடிபடாத ஒன்றாகிப் போய்விட்டது... மொக்கையான டாஸ்க்குள்... மொத்தமாய் நல்லா விளையாண்டவர்களின் வெளியேற்றம் என பிக்பாஸ் சகதிக்குள் சிக்கிய கொக்கு மாதிரி தையத்தக்கா போட வேண்டிய நிலை... காரை அறிமுகப்படுத்து... ஸ்டூலை அறிமுகப்படுத்துன்னு அவரும் கம்பெனிக்காரனுக்கிட்ட காசு வாங்கி கல்லாக்கட்டிக்கிட்டு இருக்காரு... பின்னே இவனுக திங்கிற தீனிக்கி அந்தாளு தனியாச் சம்பாதிக்கணும்.
ஏய் எல்லாரும் இங்க வா... வரிசையில நில்லுன்னு பருத்தி வீரன் கார்த்தி மாதிரி எல்லாரையும் கூப்பிட்டு நூறாவது நாளுக்கிட்ட நெருங்கிட்டீங்க... இப்ப வரைக்கும் ஒண்ணுமே பண்ணாத உங்களைக் கரம் பிடித்து இழுத்தாரும் மக்களுக்கு (மக்கள் எங்கய்யா இழுத்தாங்க) என்ன சொல்ல விரும்புறீங்க... பிளாஸ்மா முன்னால ஒவ்வொருத்தரா வந்து நின்னு சொல்லுங்கன்னு சொன்ன பிக்பாஸ் சுவராஸ்யத்துக்காக அங்கங்கே மானே... தேனே... பொன்மானே... எல்லாம் போட்டுக்கங்கன்னு சொன்னார்.
எல்லாப் பயலும் சொல்லி வச்சி நாமினேசன் பண்ணுன மாதிரி நாங்க இந்த இடத்துக்கு வருவோம்ன்னோ... இறுதிப் போட்டிக்குப் போவோம்ன்னோ நினைக்கலைன்னு சொன்னானுங்க... நாங்களும்தான் நினைக்கலை... விஜய் டிவிதானேடா உங்களைப் பொறுக்கி பொறுக்கித்தனம் பண்ணினான். இல்லேன்னா நல்லா விளையாண்ட தர்ஷனுமில்ல இங்க உக்காந்திருப்பான்னு நாம கத்தினாலும் அவனுகளுக்காக் கேக்கப் போவுது. பிக்பாஸ் சொல்லிக் கொடுத்த மாதிரி மானே... தேனே... பொன்மானேல்லாம் மறக்காம போட்டு... அரச்சிச் சேர்த்த மசாலா போட்டு நாட்டுக்கோழி குழம்பு வச்ச மாதிரி கும்முன்னு மக்கள் மனசுல பாசம் என்னும் வாசனையை பக்குவமா ஏத்துனானுங்க.
இங்கே சகோதரி லாஸ்லியாவைப் பற்றிச் சொல்லணும்... கவின் போன பின்னே தான் கலகலப்பாக இருப்பதாய் காட்டிக் கொள்ள இவர் படும் பாடு... அப்பப்பா சொல்லி மாளாது.... அவனோட நட்புத்தான்டான்னு எல்லாரையும் நம்ப வைக்க எதுக்கு இத்தனை பிரயத்தனம் பண்றாங்கன்னுதான் தெரியலை... அவன்தான் ஐயாம் வெயிட்டிங்க்ன்னு சொல்லிட்டானே... கமலும் தேங்காய் பழத்துடன் சம்மந்தம் பேசத் தயாரா இருக்கார்... விஜய் டிவிகாரன் நம்ம வீட்டுக் கல்யாணம்ன்னு மண்டபமெல்லாம் புக் பண்ணி வச்சிட்டான்... பின்னே என்ன நட்பு... சீப்புன்னுக்கிட்டு.... இது ஊரை ஏமாத்தும் வேலை பெண்ணே...
சொல்ல வந்ததை விட்டுட்டேன் பாருங்க... பேசும் போது 'ஈஈஈஈஈ' அப்புறம் புல்லாக் குடிச்சிட்டு வாந்தியெடுக்கிறவன் மாதிரி 'ஊவ்வா'... பின்னே எட்டுக்கால் பூச்சி மாதிரி காலைக் கையை ஆட்டுறதுன்னு யாருக்குமே பிடிக்காத ஒன்றைச் செய்கிறார். இதெல்லாம் எதுக்கு..? எவனாச்சும் இப்படிப் பண்றது நல்லாயிருக்குன்னு சொல்லித் தொலஞ்சிட்டானுங்களா..?
இதெல்லாம் நீயூஸ் வாசிக்கிறேன்னு வேற சொல்லுது... 'ஈழத்தில் தமிழர்கள் ஈஈஈஈஈ வாழும் பகுதிகளில் ஊவ்வே இன்னும் பாதுகாப்பின்மைதான் ஈஈஈஈ' அப்படின்னு கையைக் காலை ஆட்டி வாசித்தால் எப்படியிருக்கும்...? பார்க்கிறவன் என்ன நினைப்பான்...? ஆத்தா அகிலாண்டேஸ்வரி நல்லாயிருப்பே இந்த 'ஈ', 'ஊ' எல்லாத்தையும் இன்னும் ஒரு வாரத்துக்கு தூக்கி பிக்பாஸ் வீட்டுக்கு வெளியே வீசிரு... பார்க்க சகிக்கலை... பார்க்க முடியலை.
அடுத்து சொமோட்டோ டாஸ்க்... சாண்டி, ஷெரின் மற்றும் லாஸ்லியா,முகன் என இரு அணி... இவர்கள் தங்களுக்கு வேண்டிய சொமோட்டோ உணவுகளை ஆர்டர் செய்ய வேண்டும்... அதுக்கப்புறம் அதை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வண்ணம் அதைப்பற்றி ஆஹா ஓஹோன்னு பேசணும். சாண்டி மட்டும்தான் நம்ம பய... கொத்துப் புரோட்டா வேணும்ன்னு சொன்னார்... மத்தவங்கள்ல்லாம் என்னமோ பேர் சொன்னாங்க... எதுவுமே புரியலை...
ஒவ்வொரு அணிக்கும் 'ZOMFORKS' மற்றும் 'ZOMSPOONS' அப்படின்னு ஒரு கோடு வேற கொடுத்தாங்க... இந்தக் கோடைப் பயன்படுத்தி நாம சொமோட்டோ உணவுகளை வாங்கினால் அவங்களுக்கு அவங்க ஆர்டர் பண்ணுன உணவு கொடுக்கப்படும்... இதுக்குப் பேர்தான் பிச்சைங்கிறது இல்லையா... யப்பா நீங்க அதை வாங்கினாத்தான் எனக்குச் சாப்பாடு கிடைக்கும்ன்னு நாலு பேரும் நாயாக் கத்துனாங்க... இதுவும் ஒரு டாஸ்க்கே என்று நம்புங்கள் நண்பர்களே...
ஆரம்பமே அதிரடின்னு பாட்டப் போட்டு பாத்திமா பாபு, மீரா, ரேஷ்மா, மோகன் வைத்யாவை வீட்டுக்குள் அனுப்புனானுங்க... கை நிறைய பரிசுப் பொருட்களுடன் உள்ள வந்தாங்க...
ரேஷ்மாவுக்கு இந்த உடைகள் எல்லாம் எங்க இருந்து கிடைக்குதுன்னு தெரியலை... கண்றாவி.
பிரிந்தவர் கூடினால்.... ஆமா அதேதான்... பார்த்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்கள். பரிசுப் பொருட்களைப் பார்த்ததும் வந்தவங்களை மறந்துட்டானுங்க உள்ள இருக்கவனுங்க... சோத்தைப் பார்த்த சொறிநாய் மாதிரி... மீரா முகனுக்கு ஒரு சட்டையைக் கொடுத்துட்டு அட்டை போடாத அரைக்குயர் நோட்டுல எழுதுனதை வாசிக்க ஆரம்பிச்சிருச்சு. சாண்டிக்கு ஒரு கோட் கொடுத்தானுங்க... அப்படியே எல்லாருக்கும்.
சரி சொந்தமெல்லாம் வந்திருக்காக... பரிசுப் பொருட்கள் எல்லாம் கொண்டாந்திருக்காக... சும்மாவே பேசிக்கிட்டு இருந்தா எப்படி... வாங்க... பேசலாம்... அழலாம்... ஆனந்தக் கூத்தாடலாம்ன்னு பிக்பாஸ் கூப்பிட்டாப்புல... செயல்பாட்டுப் பகுதிக்கு... புரியலையோ... அதாங்க ACTIVITY AREAவுக்கு வரச்சொல்லி, இவங்க போகுமுன்னே எப்பப்போ அழுகாச்சிக் காவியம் நிகழ்த்தப்பட்டதோ அதையெல்லாம் போட்டாவா மாற்றி மாட்டி வச்சிருந்தாரு பிக்பாஸ்.
எல்லாரும் கண்ணீர்க் கண்காட்சியை ஒரு முறை பார்த்துடுங்க... பின்னே கண்ணுல கண்ணீரைத் தேக்கி வச்சிக்கங்க... ஒவ்வொருவராத் தங்களைப் பாதித்த படத்தைப் பற்றிப் பேசுங்கன்னு மக்களோட உணர்ச்சியைத் தட்டிவிடுற ஒரு செமையான டாஸ்க்கைக் கொடுத்தார்.
பாத்திமாபாபு லாஸ்லியா அப்பாவின் கோபத்தையும் லாஸ்லியாவின் மனநிலையையும் பற்றிப் பேசினார். ரேஷ்மா 'என் மகனே... என் மகனே'ன்னு முகன் தனக்காக அழுவதையும், அவனே என் முன்ஜென்ம மகன் என்றும் பேசினார்.
ரேஷ்மாவோட உடையில மயங்கிட்டாரு போல நைனா, அவரும் முகன் அழுதா நான் கக்கூஸ்ல போயி அழுவேன்னு சொன்னார். ஆமாமா இருக்கும்போது சாக்சி, ஷெரின், அபி, மீரா, வனிதா, ரேஷ்மான்னு கடிப்பிடிச்சி அழுததெல்லாம் முகனுக்காகத்தான்னு நாம பார்த்தோமே.
சேரன் தன் இடுப்பைக் கிள்ளினார் எனச் சொன்ன நொடியில் சேரனின் அழுகையையும் நான் அப்போது கொஞ்சம் யோசித்துப் பேசியிருந்தால் அந்தப் பிரச்சினை இப்படியாகி இருக்காது என்பதையும் மீரா சொன்னார்.
ஷெரின், சாண்டி, முகன், லாஸ்லியாவெல்லாம் பேசினாங்க... முகன் தர்ஷனின் அதிரடி வெளியேற்றம் பற்றிப் பேசினான்... கவின் போனதைப் பற்றிப் பேசினான்... உடனே லாஸ்லியாவுக்கு கேமரா வர, கண்ணுக்குள் நூறு நிலவு.
லாஸ்லியா 'ஈஈஈஈ', 'ஊவ்வே' போட்டு பொம்மைக்கு அழும் பிள்ளை மாதிரி கைகால் ஆட்டி மனசு சொல்றதைத்தான் நான் பண்ணுவேன்னு பேசுச்சு... அதான் பார்த்தோமே... அப்பனுக்காகத்தான் என்னை மாற்றி விளையாண்டேன்னும் சொன்னுச்சு... ஆமா அப்படி என்ன விளையாண்டுச்சுன்னு நேத்துல இருந்தே யோசிக்கிறேன்.. கவினுடனான காதல் தவிர வேறொன்னும் கண்ணுக்குள்ள வரலை... உங்களுக்குத் தெரிஞ்சாச் சொல்லுங்க.
இன்னொன்னும் சொல்லணும் முகனைப் பார்த்து நீ அநாதையில்லை... இந்த உலகம் உனக்கானது... அங்கே உனக்கு ஆயிரமாயிரம் உறவுகள் இருக்குன்னு ரேஷ்மா சொன்னாங்க... முகன் அநாதை இல்லத்தில் வளர்ந்தவனா..? அப்படியிருந்தால் எப்படி பிக்பாஸ் வீட்டில் அவனுக்கு இடம் கிடைத்திருக்கும்..? அப்ப அவனைப் பார்க்க வந்த அம்மா, தங்கச்சியெல்லாம் அநாதை இல்லத்தைச் சேர்ந்தவங்களா..?
அட லூசுப் பக்கி நீ அவனை அநாதை... அநாதையின்னு சொல்றே... அதைப் பார்த்து பாத்திமா, மோகன் என எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க... அவனுக்கு அப்பன், ஆத்தா, தங்கச்சி, தம்பியின்னு ஒரு அழகான குடும்பம் இருக்கு... மலேசியா தமிழ் பத்திரிக்கையில பிக்பாஸ் வெற்றியாளன் முகன்னு போட்டோ போட்டு போன வாரமே செய்தி போட்டுட்டானுங்க... நீ என்னடான்னா அவனை அநாதையின்னு சொல்லிகிட்டுத் திரியிறே... உங்க பாசத்துக்கு அளவேயில்லையா... கொஞ்சமாச்சும் வெளி உலகம் தெரிஞ்சி பேசுங்க... அன்புக்கு ஏங்கியவன்னு சொன்னாலும் ஓகே... ஒரேயடியா அநாதையின்னு சொல்லிட்டீங்களே..
ஒரு வழியா இந்த அருமையான... பொறுமையான... மிகவும் கடினமான டாஸ்க்கை முடித்து வெளியில் வந்தால் ஆடல் பாடல் நடக்க இருப்பது போல் ஒரு மேடை, எதிரே விருந்துண்ண பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் போடப்பட்டிருக்கும் நாற்காலி, விளக்குகள் என அருமையான செட்டிங்... சும்மா சொல்லக் கூடாது... பிக்பாஸ் போட்டியாளர்களை வேலை வாங்க முடியலைன்னாலும் தன்னோட குழுவை மிகச் சிறப்பாக வேலை வாங்குகிறார். அருமையாக இருந்தது.
எல்லாருக்கும் புதிய உடைகள் கொடுக்கப்பட, மேடையில் ஆடல்பாடல் இருக்கும்... திண்டுக்கல் ரீட்டாவைக் கொண்டாந்து ஆட விடுவானுங்கன்னு பார்த்தா.... காலையில கையைக் காலை ஆட்டுற மாதிரி இந்தப் பக்கிகதான் ஆடுச்சுக... பிக்பாஸ் வேற ரொம்பச் சிரத்தையுடன் பாடல்களை மாற்றி மாற்றிப் போட்டுக்கிட்டு இருந்தார்.
அப்புறம் சாப்பாட்டைக் கொண்டாந்து வைக்கவும் எல்லாரும் பிரியாணிச் சட்டியைப் பார்த்துக் கொண்டிருக்கும் வெள்ளிக்கிழமை தண்ணியடிக்காத அமீரகவாசியைப் போல காத்திருந்தார்கள். எங்கே எடுத்துச் சாப்பிட்டா உங்களை யார் எடுக்கச் சொன்னதுன்னு பிக்பாஸ் கட்டையைப் போடுவாரோன்னு பயத்துல உக்கார்ந்திருந்தார்கள்.
'என்ன எல்லாரும் டயட்ல இருக்கீகளா..?'ன்னு பிக்பாஸ் கேட்க, நோ பிக்பாஸ்ன்னு சொன்னானுங்க... அப்புறம் என்ன மூதேவிகளா... டாஸ்க்கா வச்சிருக்கேன்.... விளையாடாம யோசிக்கிறதுக்கு... தின்னுட்டுப் போயித் தூங்குங்கன்னு சொல்ல, அடிச்சித் துவைக்க ஆரம்பித்தார்கள்.
ஆடல் பாடல் மேடை அநாதையாய் இருந்தது...
100வது நாள் அன்னைக்காச்சும் ரீட்டாவோட ஆட்டமோ அல்லது தஞ்சை சத்யாவோட கரகாட்டமோ இருக்கும்ன்னு நம்புவோம்.
அடுத்த சீசனுக்கு நாமளும் முட்டி மோதிப் பார்த்துட வேண்டியதுதான்... இந்த முறையே பாதிநாள் சாப்பாடு போட்ட மகராஜா, அடுத்த முறை எல்லா நாளும் சாப்பாடு போட மாட்டாரா என்ன... பேர் தெரியாததையெல்லாம் ஒரு கை பார்க்கலாம்தானே... இப்பவே பிக்பாஸ்க்கு ஒரு லெட்டர் போட்டு இடத்தைப் புடிச்சி வச்சிக்க வேண்டியதுதான்.
பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.
பிடிக்காத மருமகள் கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம்
பதிலளிநீக்கு