திங்கள், 30 செப்டம்பர், 2019

பிக்பாஸ் : இது மக்களின் தீர்ப்பு

'எதிர்பாராததை எதிர்பாருங்கள்...'

'இது மக்களின் தீர்ப்பு...'

'அங்க என்ன முடிவோ அதுதான்...'

'இது மக்களின் தீர்ப்பு...'

'நான் மக்கள் பிரதிநிதியே...'

'இது மக்களின் தீர்ப்பு...'

'அவங்க நீங்க இருந்தது போதும்ன்னு நினைச்சிட்டாங்க...'

'இது மக்களின் தீர்ப்பு...'

'மக்கள் மனசை வென்றுவிட்டாய்...'

'இது மக்களின் தீர்ப்பு...'

'வெற்றியாளனாக வேண்டியவன் நீ...'

'இது மக்களின் தீர்ப்பு...'

'எனக்கே அதிர்ச்சியாய்த்தான் இருக்கு...'

'இது மக்களின் தீர்ப்பு...'

'அவங்களோட முடிவு எப்பவும் எப்படியும் மாறலாம்...'

'இது மக்களின் தீர்ப்பு...'

'ஆமாம் இது மக்களின் தீர்ப்பு...'

'ஆமாம்... ஆமாம்... இது மக்களின் தீர்ப்பு மட்டுமே....

'ஆமாங்க... ஆமா... இது மக்கள் தீர்ப்பு... நான் மக்களின் பிரதிநிதி...'

'மாற்றம் ஒன்றே மாறாதது... மக்கள் தீர்ப்பு மாறும்...'

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், மேடையில் உள்ளார்
மல் நல்ல நடிகன் சினிமாவில் மட்டும் அல்ல... பிக்பாஸ் மேடையிலும் சிறந்த நடிகனே. மரியாதை மிகுந்த கமலஹாசன் மக்கள் மீது பலி போட்டுத் தப்பிப்பதை இம்முறை மிகச் சிறப்பாகக் கையாளுகிறார். மய்யம் ஆரம்பித்தவர் மய்யமாக நிற்க முடியாமல் இடதும் வலதுமாக இறங்கி ஏறிக் கொண்டிருப்பதில் தான் சிறந்த அரசியல்வாதி என்பதை அழகாக நிரூபித்திருக்கிறார்.

எல்லா இடங்களிலும் பலிகடா மக்கள்தான்... தர்ஷனுக்குப் பதக்கத்தைப் போடாமல் லாஸ்லியாவுக்குப் போடச் சொன்ன போதும் நீயே போட்டக்கண்ணு ஷெரினிடம் சொன்ன போதும் பார்வையாளர்கள் வரிசையில் இருந்தவர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தார்கள். உடனே கமல் பேச, விஜய் டிவி ஏற்பாடு செய்திருக்கும் ஆட்கள் கைதட்டினார்கள்... பின்னர் கொஞ்சமே கொஞ்சமாக ஒரு கைதட்டல் அரங்கேறியது... மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்த வெளியேற்றம் இது.

ஒவ்வொரு முறையும் மக்கள் வாக்குக்கு எதிரான முடிவை விஜய் தொலைக்காட்சி எடுக்கும் போதெல்லாம் கமல் எடுப்பது மக்களின் தீர்ப்பு இது என்ற வரிகளைத்தான். அதை அடிக்கடி சொல்லிக் கொண்டேயிருப்பார்... மக்களுக்காக நான்... மக்களாலயே நான் என ஜெயலலிதா சொல்லிச் சொல்லி மக்குகளின் தலையில் நம்மைக் கட்டிச் சென்றதைப் போல.

இந்த பிக்பாஸ் வீட்டில் ஆரம்பம் முதல் போட்டிகளில் திறமையாக விளையாண்டவனும் ஓரளவுக்கு நேர்மையாய் இருந்தவனும் தர்ஷன் மட்டுமே. இந்த வாரத்தில் கூட எல்லாப் போட்டிகளிலும் வெற்றியாளன் அவனே. மக்களின் ஓட்டு ஒருக்காலும் அவனுக்கு எதிராய் இருந்திருக்க வாய்ப்பே இல்லை.

கவின் வேளியே போக வேண்டிய சூழல் இருந்ததை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட பிக்பாஸ், லாஸ்லியாவை இறுதிப் போட்டிக்கு... ஏன் வெற்றியாளராகக் கூட கொண்டு வருகிறேன் என என ஒப்பந்தம் போட்டிருக்கக் கூடும் என்றே தோன்றுகிறது. யோசித்துப் பாருங்கள்... திறமையாளர்கள் எல்லாம் வெளியில் போக லாஸ்லியா அம்பது லட்சத்தை வாங்கி வின்னர் என அழுது நிற்பதையும் கவின் அணைத்து நிற்பதையும்.. எத்தனை மோசமான நொடிகளாய் இருக்கும் அவை.

தன் திறமையை எல்லாம் வெளிப்படுத்தி, ஆரம்பம் முதலே நல்லா விளையாண்டவனுக்கு வெற்றி நோக்கிச் செல்ல இடமில்லை... வாக்களிக்கவில்லையாம்... கவின் ஆர்மி லாஸ்லியாவுக்கு ஓட்டுப் போட்டுவிட்டார்களாம். லாஸ்லியா கவினுடன் பேசுவதை சேரனைப் போல் தர்ஷனும் எதிர்த்தானம்... அதனால்தான் அவனுக்கு வாக்கு இல்லையாம்... தமிழகமெங்கும் கவின் ஆர்மி மட்டுமே இருக்கு போல... அது சரி ஒரு ரியாலிட்டி ஷோவில் நல்லவனுக்கு வாக்களிக்காமல் காதல் களியாட்டம் நடத்தியவர்களுக்கு வாக்களிக்கும் நாம்தானா நாட்டுக்கு உருப்படியான தலைவரைக் கொடுத்து விடப்போகிறோம்..? எத்தனை வருடம் ஆனாலும் நமக்கெல்லாம் எடப்பாடிகளே வாய்க்கும்.

தன்னளவில் எல்லாருக்கும் நல்லவனாக இருந்தவனை வெளியேற்றி மக்களுக்கு காதல் செய்வது எப்படி..? அதுவும் இரவு பகலாக கார்த்திகை மாசத்து நாய்களாக வெயிலில் கிடந்து காதலிப்பது எப்படி..? மைக்கை அமத்திவிட்டு இருட்டுக்குள் இருந்து பேசுவது மற்றவர்களுக்குக் கேட்காமல் காதலிப்பது எப்படி..? கக்கூஸில் காதல் செய்வது எப்படி..? பெத்தவங்களுக்குப் பெப்பே காட்டிட்டு காதலிப்பது எப்படி..? அடுத்தவள் காதலித்தவனை தன்னவனாக்கிக் கொள்ளுதல் எப்படி..? எனக் கலாச்சார வகுப்பெடுத்து, காதல் செய்வீர்... கண்ணியம் காப்பீர் எனச் சொன்ன கலாச்சார காவலாளி லாஸ்லியாவை உள்ளே வைத்திருத்திருக்கும் விஜய் டிவிக்கு சம்பாத்தியமும் டிஆர்பியுமே முக்கியம்.

கவின் வெளியேறியதால் லாஸ்லியாவுக்கு அவனின் வாக்குகளும் கிடைக்க, இறுதிக்குத் தேர்வாகியிருக்கிறார் என்றே வைத்துக் கொண்டாலும், ஷெரினும் இப்போது மக்கள் செல்வாக்கில் உயர்ந்து நிற்கிறார் என்றாலும் ஆரம்பம் முதல் மக்கள் செல்வாக்குப் பெற்றவன், இவன்தான் வெல்வான் என உறுதியாய் நம்பியவனை... என் கணிப்பு தர்ஷன் என்பதாகவே இருந்தது... தான் போகமாட்டோம் என தெள்ளத் தெளிவாய் மனதில் நினைத்திருந்தவனை வெளியேற்றியது விஜய் டிவியின் சாணக்கியத்தனம்... அதையும் ஏற்று மக்கள் தீர்ப்பு... மகேசன் தீர்ப்பு... என கமல் பேசியது கோமாளித்தனம்... எதிர்பாராததை எதிர்பார்ப்போம்... லாஸ்லியாவே வெற்றியாளர்.

தன் மனவருத்தத்தை மறைத்து அழுது நின்ற ஷெரினுக்கு ஆறுதல் சொன்னதும்... எப்பவும் பேசும் நாந்தான் போகணும் வசனத்தை வாராவாரம் அழகாய் மெருகேற்றி ஒவ்வொரு முறையும் அறுபது தடவை சொல்லும் லாஸ்லியாவுக்கு ஆறுதல் சொன்னதும் அழுத முகினுக்கு... முடியாதென பிக்பாஸிடம் கேள்வி கேட்ட சாண்டிக்கு என ஆறுதல் சொல்லி, போலியாய் சிரித்து... பொய்யாய் மகிழ்ந்து... மனச்சுக்குள் பெரும் சுமையுடன்... பெரும் குழப்பத்துடன்... நல்லா விளையாடாமல் இருந்திருந்தால் ஒருவேளை இறுதிக்குச் சென்றிருக்கலாமோ என்ற எதிர்மறை எண்ணத்துடன் வெளியேறிய தர்ஷனின் கண்ணாடிக்குள் இருந்த கண்ணில் சிரிப்பில்லை... மகிழ்ச்சியில்லை... கண்ணீர் இல்லை... ஆனால் வேதனையும் வலியும் விரவிக்கிடந்தது.

கவின் போட்ட திட்டப்படியே நடக்கிறது என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே தர்ஷனுக்குச் சங்கு ஊதியிருக்கிறார்கள். ஏன் லாஸ்லியாவுக்கு ஊதியிருக்கலாமேன்னு நமக்குத் தோணலாம்... ஆனாலும் ஊதமாட்டோமே... லாஸ்லியாதானே மிகச் சிறப்பாக டிஆர்பியை உயர்த்தியவர்... அவரில்லையேல் காதல் கண்றாவிகள் ஏது..? ஆர்மிகள் ஏது..? குடுமிபிடி சண்டைகள் ஏது..? மரியாதைக்குரிய நபர்களை சந்தேகித்த கணங்கள் ஏது..? அப்பனின் ஆக்ரோஷம் ஏது...? அம்மாவின் கண்ணீர் ஏது...? கவினின் தியாகம் ஏது..? (தியாகம்ன்னு சொல்றானுக... எனக்கெல்லாம் அதில் நம்பிக்கையில்லை)... இத்தனை ஏதுகளுக்காக மொய்க்கு மொய் திரும்பி வைக்க வேண்டாமா...?

ஷெரினைப் போகச் சொல்லியிருக்கலாமே... இருக்கலாம்தான்... அப்படி அவரைப் போகச் சொன்னால் கவின் நான் போட்ட திட்டப்படியே அவெஞ்சர்ஸ் அணி இறுதிப் போட்டியில் என இறுமாப்புடன் பேட்டி கொடுத்திருப்பான்... ஆரம்பம் முதலே இவர்களின் திட்டங்களைத் தட்டிக் கேட்காமல் தட்டிக் கொடுத்தவர்கள், இதே இறுதிப்போட்டி என்றாகும் போது தங்கள் தொலைக்காட்சிக்குப் பேர் கெட்டுப் போகலாமென முடிவெடுத்தே... கோவிலுக்கு வெட்ட வேண்டிய ஆட்டுக்குப் பதிலாக பக்கத்தில் படுத்திருந்த ஆட்டைப் பிடித்து வெட்டியிருக்கிறார்கள். எல்லாமே சுயநலக் கணக்குத்தான்.... கூட்டிக் கழிச்சிப் பார்த்தா நமக்கு தப்பான விடை வரலாம்... ஆனால் விஜய் டிவிக்கு அதுவே சரியான விடையாகத் தெரியும்.

வெளி வந்தவனின் மனநிலைக்கு கமல் மருந்திடுவது போல் பேசினாலும் புண்ணாகியதே அவர்தானே... பின்னே என்ன மருந்திட்டு என்ன பயன்..? தனக்காக அழுத உண்மையான ரசிகர்களையும், வாக்களித்த உண்மையான மனிதர்களையும் பெற்று தர்ஷன் மனநிறைவோடுதான் வெளியேறியிருக்கிறான்... மேடையில் நின்று இவனே வெற்றியாளன் என கமல் கைபிடித்துத் தூக்கி, அம்பது லட்சத்தைக் கொடுப்பதைவிட, மக்களின் மனங்களை வென்று, தனது வெளியேற்றத்துக்காக கண்ணீர் சிந்துபவர்களைப் பார்த்து வெளியேறிய தருணமே வெற்றி பெற்றா தருணம். தர்ஷன் வென்றுவிட்டான்... அவனின் ஆசைப்படி தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் அமரும் நாயகனாய் மாற வாழ்த்துக்கள்.

ஊருக்கு உபதேசம் சொல்லும் கமல், இதைத் தட்டிக் கேட்க முடியாத நிலையில் இருக்கக் காரணம் வாங்கும் பணமே... லாஸ்லியாவுக்குச் சாமரம் வீசுவதையும் கவினுக்கு கால் அமுக்கி விடுவதையும், சாண்டிக்குச் சாதம் ஊட்டி விடுவதையும் தவிர கமல் வேறொன்றும் பெரிதாய்ச் செய்துவிடவில்லை இந்தச் சீசனில்... தர்ஷனின் வெளியேற்றம் எனக்கே அதிர்ச்சியாய்த்தான் இருக்கு... எல்லாமே மக்கள்தான் என அசால்டாக மக்கள் மீது பலி சுமத்த ஆரம்பித்திருக்கும் கமல், மக்கள் மாற வேண்டும்... ஊழல் அரசியல்வாதிகளைத் தூக்கி வீச வேண்டும் என்று பேசுவதெல்லாம் அபத்தம்... முதலில் வாங்கும் பணத்துக்காக சுயம் இழக்காமல் இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள் கமல். பின்னர் வீசலாம் மக்களுக்கு அறிவுரைகளை...

கமல் ரசிகனாய் அவர் மீது மிகப்பெரிய கோபம் கொள்ள வைத்த நிகழ்வு தர்ஷனின் வெளியேற்றம்... இனி என்னதான் பொங்கிப் பொங்கல் வைத்தாலும் வேகாத அரிசி வேகாததுதான்... விஜய் டிவிக்காரன் என்ன செய்யப் போகிறான்...? லாஸ்லியாவுக்குத் தூக்கிக் கொடுத்து கவினை அழைத்து அருகமர்த்தி, இலங்கையில் இருந்து வந்திருக்கும் மரியதாஸிடம் உங்ககிட்ட சொன்னமாதிரி உங்க மக ஜெயிச்சிட்டா, அவ விரும்பின மாதிரி இவரை உங்க மாப்பிள்ளையாக்கிக்கங்க என கமல் வாயால் சொல்ல வைத்து மேடையிலேயே சம்பந்தம் பேசி முடித்து விடுவார்கள்.

அதன் பிறகு விஜய் டிவியில் எந்த ஒரு போட்டி நிகழ்ச்சியென்றாலும் சிறப்பு நிகழ்ச்சி என்றாலும் கவினும் லாஸ்லியாவும் தவறாமல் கலந்து கொண்டு நம் கழுத்தை அறுப்பார்கள். 

நேற்று அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு இன்னைக்கு சிக்கன் பிரியாணி வேணும்ன்னு பிக்பாஸ்கிட்ட கேட்டுக்கிட்டு நிப்பானுங்க... எஞ்சியிருக்கும் மிகச் சிறந்த போட்டியாளர்கள்.

முகனே வெல்ல வேண்டும் என்று மனசு நினைக்கிறது... ஷெரினும் வரலாம்... நம்ம நினைக்கிறதா நடக்கும்... எதிர்பாராததை அல்லவா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அடுத்த வாரமும் கமல் கவனமாய்ச் சொல்வார்...

இது மக்கள் தீர்ப்பு என்பதை.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

1 கருத்து:

  1. வெற்றி பெறுபவர்களுக்கு ஐம்பது லட்சமா?   சொல்லி விட்டார்களா?

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி