சனி, 7 செப்டம்பர், 2019

பிக்பாஸ் : 'பச்சோந்தி' லாஸ்லியா

Image result for bigg boss-3 74th day images hd
முந்தைய நாளின் தொடர்ச்சியாய் சாண்டி அன் கோ படுக்கை அறையில் ஜாலியாய்ப் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஷெரினுக்கிட்ட நான் தனியாப் பேசணும்ன்னு போய் சொல்லு என கவினிடம் தர்ஷன் சொல்ல, அடேய் இங்க சேரனைத் தொடர்ந்து குத்திக்கிட்டு இருக்கேன்... அந்தாளு கூட அருவாளைத் தூக்கலை... ஆனா இவ வெட்டியே ஆவேன்னு வீராவேசமாத் திரியிறா... இதுல வனிதா வேற ஏத்திவிட்டிருக்கு... இப்ப எரிஞ்சிக்கிட்டு வேற இருக்கா என்னைய எரிச்சிருவாடா... என நினைத்தபடி அதெல்லாம் சரியாகும்டா... கவலைப்படாதே எனத் தேற்றினான்.

அந்த நேரத்தில் சாண்டி மீண்டும் பள்ளிக்குப் போகலாம் என பள்ளிக்கூட டாஸ்க் மூணாம் வகுப்பு மாணவனாய் மாறி 'இங்க மொத்தத்துல மனுசனா இருக்கக் கூடாதுடா' எனத் சொன்னது செம. கவின் சோகமாயிருக்க தாடியே ப்ளஸ் பாயிண்டாக இருந்தது அதையும் லாஸ்லியா எடுக்கச் சொல்லிருச்சு போல... தாடியெடுத்துட்டு தனுஷ் மாதிரியிருந்தான்.

ஷெரினுடன் தர்ஷன் பேசிப் பிரச்சினையையும் ஷெரினின் அழுகையையும் முடிவுக்கு கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருந்தான். தன்னை முதுகில் குத்தியது நண்பன் என்பதால் மன்னித்து விட்டுட்டுப் போக நானொன்றும் சசிக்குமார் இல்லை ஷெரின் எனப் பேசினார். அவரைப் பொறுத்தவரை வேறு யார் இப்படிப் பேசியிருந்தாலும் கடந்து போயிருப்பார் ஆனால் சொன்னது உயிர்த்தோழி வனிதா, தோழியாக இருந்த போதிலும் அவர் பேசிய வார்த்தை ஷெரினை ரொம்பத் தாக்கியிருக்கிறது. இதில் நான்தான் முடிவெடுக்கணும்.. இது உன்னையோ அவளையோ (காதலி) பாதிக்கப் போறதில்லைன்னு தர்ஷன் முழு விளக்கம் கொடுத்தான் என்றாலும் ஷெரின் சொன்னது தோழி அந்த வலி உனக்குப் புரியலையாங்கிறதுலயே நின்னாங்க.

ரொம்ப நேரப் பேச்சு வார்த்தைக்குப் பின் ஷெரினுக்குள் ஒரு மத்தாப்பு மெல்ல பூவாய் விரிய, அந்த நேரத்தை தர்ஷன் தனக்குச் சாதகமாக்கி என்ன சிரிப்பு எனச் சொல்ல, தேவதை புன்னகையை இதழ்களில் உயிர்ப்பித்தது.. இந்த இடத்தில் இருவரின் வேதியியல், உயிரியல், மண்ணியல், பெண்ணியல் எல்லாமே செம. தர்ஷனின் காதலி சனம் இந்தப் பிரச்சினையில் தர்ஷன் மேல செம கோபமாய் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். யூடியுப் சேனல்காரர்கள் அவர்களுக்குள் காதல் முறிந்தது என்பது வரை தலைப்பு வைத்து ஹிட்ஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பாவம் தர்ஷன் கடைசியில் தனியே தன்னந்தனியேதான் போல.

வெற்றிகரமான எழுபத்தைந்தாவது நாளை 'சொப்பன சுந்தரி நாந்தானே' பாடலுடன் ஆரம்பித்தார் பிக்பாஸ். ஷெரினும் சாக்சியும் ஒரு பக்கம் ஆட மற்றவர்கள் ஒரு பக்கம் ஆட ரகளையாய் ஆரம்பித்தது அந்தக் காலை.... அதெப்படி ஆட்டம் பாட்டம்  கொண்டாட்டம்... வனிதாவுக்கு கொஞ்சமாச்சும் எடுத்துக் கொடுப்போமே என மோகன் ஷெரினுக்கு வைத்தியம் பார்த்தார்... இங்க எல்லாருமே... அதாவது எல்லாருமே உதட்டளவுலதான் பேசுறாங்க... உள்ளத்துல இருந்து வார்த்தை வரலை... புரிஞ்சிக்க ஷெரின்னு சொன்னதும் அருகில் முகன் இருந்ததால் முகனெல்லாம் அப்படியில்லை என்று சொன்னார் ஷெரின். அவனும்தான் என மோகன் சொல்ல, முகன் தட்டைக் கொண்டு போய் கழுவப் போடும் போது மோகனையே தூக்கிப் போட்டதா நினைச்சிருப்பான் போல... மோகனுக்கு கோமா வந்த மாதிரி ஆயிருச்சு.

அப்புறம் வெளியில போயி உக்கார்ந்திருந்தார்... முகன் வேற காதல் கொண்டேன் தனுஷ் மாதிரி சுத்திக்கிட்டு இருந்தான்... ஆஹா கட்டிலை உடைச்சாலும் பரவாயில்லை கட்டையில போறவன் கையைக் காலை உடைச்சிட்டான்னு பயந்த மோகன் அவனை அழைத்து உன்னோட பிரண்ட்ஸ் என்னைக் கலாய்க்கும் போது நீ எதிர்த்துப் பேசலை... பேசியிருக்கணும்... நைனா அப்படியில்லைன்னு சொல்லியிருக்கணும்... நீ சொல்லலை... எவ்வளவு வலிச்சிச்சு தெரியுமான்னு சிவாஜி பெர்பார்மன்ஸ் கொடுக்க, யோவ் இங்க சிவாஜியா நடிக்க ஒரு ரெண்டு பொண்டாட்டிக்காரன் இருக்கான்... நீ வேறயான்னு நினைச்சிக்கிட்டே, அவங்க கலாய்ச்சது நல்லாயிருந்துச்சு அதனால கேக்கலை... தப்புத்தான்... ஆனாலும் இனிமேல அவங்ககிட்ட கேட்க மாட்டேன். இப்பவும் உங்களை வச்சித்தான் செஞ்சிக்கிட்டு இருக்காங்க... நானும் சிரிச்சிக்கிட்டுத்தான் இருக்கேன் சொல்லாமல் சொல்லிட்டுப் போக, மோகனுக்கு ஏன்டா கூப்பிட்டுப் பேசினோம்ன்னு ஆயிருச்சு.

இந்த மோகனை நைனா நைனான்னு தூக்கித்தான் வச்சிருந்தானுங்க சாண்டி குழு... கேலி பண்ணினாலும் கிண்டல் பண்ணினாலும் பாசம் என்பது உண்மையாகத்தான் இருந்தது. அதில் லாஸ்லியா, கவின் நடிப்பெல்லாம் இல்லை... அது தரமான அக்மார்க் நெய்தான்... தனக்கு இருக்கும் வருத்தத்தை இருவரிடமும் மனம் விட்டுப் பகிர்ந்திருக்கலாம்... உட்கார்ந்து பேசினால் தீராத விஷயங்களே இல்லை ஆனால் நாம்தான் உட்கார்ந்து பேசுவதில்லை... அதனாலேயே சின்னப் பிரச்சினை என்று நினைத்திருப்பது மிகப் பெரிய பிரச்சினையாக பூதகரமான பிரச்சினையாக வளர்ந்து சாகும் வரை பேச்சு வார்த்தையில்லை... பச்சத்தண்ணி குடிக்கக் கூடாது அவன் வீட்டுல என உறவுக்குள் சுவர் எழுப்பி விடுகிறது. 

இனித் திரும்பப் போவதில்லை என்ற போதிலும் கூட கடைசியாக தன்னோட பிறந்தவன் / வள் முகத்தைக் கூட பார்க்க மாட்டேனென உட்கார வைத்துவிடுகிறது. எல்லாரையும் அத்து விட்டுட்டு வாழ்வதால்  போகும் போது எதைக் கொண்டு போகப் போகிறோம். மோகன் பெரிய மனிதர் என்றால்... வெளியில் பார்த்துட்டுத்தான் வந்திருக்கிறேன் என்றால்... அவர்களிடம் பேசியிருக்கலாம்... அவர்களும் மன்னிப்புக் கேட்டிருக்கலாம்... ரத்த உறவு இல்லையென்றாலும் இது கொஞ்சக் காலம் தொடரும் உறவாக இருந்திருக்கும். ஆனால் அவர் பேசவேயில்லை... செஞ்சிட்டானுங்கன்னு மனசுக்குள்ள வச்சிக்கிட்டு வன்மம் தீர்க்கப் பார்த்தல் முதுமைக்கு அழகல்ல. அதுபோக வனிதாவிடம் நல்ல பேர் வாங்குவதால் எந்தப் பிரயோசனும் இல்லை. ஏன்னா அதுவே தன்னைப் பெற்றவர்களிடம் நல்லபேர் வாங்க முடியாமல்தான் நடுத்தெருவில் நிற்கிறது. மோகனெல்லாம் வாழ்வைப் புரிந்து கொள்ள வேண்டும். தடித்த வார்த்தைகள் அன்பைக் கொடுக்காது என்பது புரியாத மனிதரா மோகன்...?

வனிதா சமையல்ல... காதல் கவின், சாண்டி, லாஸ்ஸான லியா, முகன் என எல்லாரும் ஜாலியாய்ப் பேசிக் கொண்டிருந்தார்கள். சாம்பார் கொதித்ததோ இல்லையோ வனிதா மனசு கொதிக்க, புயலென வெளியில் வந்து மதியச் சமையல் ஆரம்பிச்சிட்டோம்... என்ன பாத்திரம் வேணும்... ஏதைக் கழுவணும்ன்னு பாத்திரம் கழுவுற பயலுக வந்து கேக்க மாட்டீங்களா... உங்களை எல்லாம் வெத்தலை பாக்கு வச்சி அழைக்கணுமான்னு கத்த, புல்லுக்கட்டைப் பார்த்த கன்னுக்குட்டி மாதிரி வனிதா பின்னால ஓடினான் கவின்.

வனிதா கேக்கலைன்னு சொல்ல, ஒன்னறை மணி நேரமாக் கழுவுனோம்க்கா... அப்ப இந்தப் பாத்திரங்களைக் கொடுத்திருக்கலாம்ல்ல அவங்க ஏன் கொடுக்கலைன்னு சொன்னான். வனிதாவோ இப்பத்தானே சமைக்கிறோம்... அப்புறம் அப்பவே எப்படிக் கொடுப்போம்ன்னு சொல்ல, அதாங்க ஒன்ன்றை மணி நேரமா இங்கதானே கழுவிக்கிட்டு இருந்தோம்ன்னு கவின் ஆரம்பிச்சான்... முடிக்கவேயில்லை... நீ செஞ்சியா... என்ன நீ செஞ்சியான்னு வடிவேலு ஆடு திருடுன காமெடி ஒண்ணு இருக்குமே... அதுல கூட 'நான் சரியாத்தானே பேசுறேன்'னு தலைவர் சொல்லி டயர்டாகிருவாருல்ல அப்படி வனிதாக்காவை டயர்டாக்கிட்டான்.

இவனுக்கிட்ட பேசுனா நம்ம நிலமை கந்தல்ன்னு சேரன்கிட்ட உங்க அணியில் ஒருத்தர் வேலையே பார்க்கலைன்னு சொல்லி, அதுக்கு இடையில கமலஹாசன் மானே... தேனே... பொன்மானே... எல்லாம் போட்ட மாதிரி 'டூ பி ஹானஸ்ட்...', 'அஸ் ஏ கேப்டன்...', 'ப்ராங்கிளி ஸ்பீக்கிங்...', 'போல்டாச் சொல்லுறேன்...' எல்லாம் போட்டு ஏத்திவிட்டார். அங்கு வந்த ஷெரினிடம் சேரன் கேக்க, வனிதா வாயைத் திறக்க, அப்பா டேய் அது வாயாடா அது... திருவிழாவுக்கு குழாய் ரேடியோ கட்டுன மாதிரி கத்த ஆரம்பிச்சிருச்சு... ஆனா ஷெரின் குளிச்சிட்டு வந்து கேட்டப்ப எல்லாம் முடிஞ்சதுன்னு  சொன்னது அந்த வாய்தான்... அதைச் ஷெரின் சொன்னபோது பேச விடாமல் கத்திக்கிட்டே இருந்துச்சு... வனிதாவைப் பொறுத்தவரை எதிராளி பேசினால் தன் நிலமை மோசமாகும் என்பதைப் புரிந்தே வைத்திருக்கிறார்.

எப்பவுமே ஒரு பிரச்சினையோட விஸ்வரூபத்தைத் தடுக்கணும்ன்னா எல்லாருடைய கவனமும் வேற பக்கம் திரும்புற மாதிரி எதாவது செய்யணும்... அதை சேரன் செய்தார்... சூடான பாத்திரத்தை அப்படியே தூக்க கையில் சுட்டு குதித்து ஓட, எல்லாரும் சார் பார்த்து எனக் கத்த, வனிதா பேஸ்ட் கொண்டு வந்தார். ஷெரின் தண்ணியில வைங்க என்றார். சேரனுக்குப் பேஸ்ட் போட சண்டைக்குப் பூட்டுப் போட்டாங்க என்றாலும் வனிதா வேலை முடிந்தது என்று சொல்லி பின்னர் வம்பிழுத்ததை ஷெரினால் தாங்க முடியவில்லை. சேரனிடம் சொல்லிச் சொல்லிப் புலம்பினார். விடும்மா... என ஆறுதல் சொன்னார் சேரன்.

சாக்சி, வனிதா, சேரன், மோகன் பேசிக் கொண்டிருக்க, ஷெரினை ஏஞ்சல் எனச் சொன்னது இந்த ஊஞ்சல் வனிதாவுக்குப்  பிடிக்கலை... அதெப்படி எல்லா வேலையும் இழுத்துப் போட்டுப் பார்க்கிற நான் ஏஞ்சலாக இல்லாமல் எரிச்சலாக இருக்கிறேன்... ஒரு வேலையும் பார்க்காமல் காயத்துக்கு மருந்திடும் நர்ஸ் வேலை பார்க்கிற அவள் ஏஞ்சலாவாள் என்பதுதான் வனிதாவின் இந்த ருத்ரதாண்டவத்துக்கு காரணம் என்பது பேச்சு வாக்கில் வந்தது. சாக்சி இங்கிட்டு வாங்கி அங்கிட்டுப் போட்டு... அங்கிட்டு வாங்கி இங்கிட்டுப் போட்டு... ஆஹா... இதுக்கெல்லாம் ஆயிரம் அவார்டு கொடுக்கலாம். ஷெரின்தான் மெல்லப்படும் பொருள் என்பதாக மாற, சேரன் தண்ணி இல்லை என்பதாய் வாட்டர் கேனை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். ஜென்டில்மேன்கள் எப்பவும் இப்படித்தான்... வெண்டக்காய் நறுக்குவார்கள்... இல்லேன்னா வெளிநடப்புச்  செய்வார்கள்.

பட்ஜெட் டாஸ்க்ல யார் ரெண்டு நல்லா விளையாண்டாங்கன்னு ஜெயிச்ச டீம்ல இருந்து சொல்லுங்கன்னு உதவாக்கரை பிக்பாஸ் சொன்னாரு... தேர்வுல முதலிடத்தில் வரலைன்னா அவன் படிக்கலைன்னு அர்த்தமா... எங்க படிச்சீங்க பிக்பாஸ்... ரெண்டு அணியிலும் தலா ஒருவரைத்தானே தேர்ந்தெடுத்திருக்கணும்... அதைவிட்டு விட்டு ஒரு அணியில் இருவர் என்றால் தோற்ற அணியில் விளையாண்டவனுக்கு என்ன பயன்... உலகுக்கே முகினும் தர்ஷனும் விளையாட்டில் நல்லா விளையாண்டார்கள் என்பது தெரியும். இங்க உங்க அணி மட்டும் என்றதும் எதுவுமே விளையாடாத எங்க வனிதா தன்னோட பேரையும் தர்ஷனோட பேரையும் சொல்லிக்கிச்சு... அப்படியே வெற்றி பெற்ற அணி என்றால் ஷெரின் சொன்னது போல் சேரன் தன்னோட வேலையை நல்லாவே செய்தார். தர்ஷனுடன் ஓடி அவன் தள்ளிவிட உதவியாய் இருந்து அழகாக தலையணை தைத்து எல்லாம் பண்ணினாலும் அடிச்சி ஆடியது ரோகித் என்றாலும் கப் வாங்குறது கோலி மாதிரி அக்கா தன்னையே முன் நிறுத்திக்கிச்சு.

மொத்தத்துல பெஸ்ட்டுன்னு சேரன் அண்ணாவைச் சொல்றேன்னு சொன்னுச்சு... ஆனா முடிவில் எல்லாருமே ஒரு மனதா லாஸ்லியா என்றார்கள். இங்க முகினைச் சொல்லியிருக்க வேண்டும் என சிலர் எழுதியிருந்தார்கள்... டாஸ்க் மட்டுமின்றி ஒட்டுமொத்தமான எல்லா வேலைகளும் என்று வரும்போது சேரன், லாஸ்லியாதான் சரியான தேர்வு... அதில் லாஸ்லியாவுக்கு என்பது சரியே. கவினுடன் லவ்வினாலும் வேலைகளை சரிவரச் செய்திருந்தார். எல்லாத்தும் அந்த 'ஈஈஈ'ன்னு சிரிக்கிறதை விட்டுடலாம்... அது பார்க்கச் சகிக்கலை. சரி யாருடா சரியா விளையாடலைன்னு ஜெயிக்கிற அணி சொல்லனும்ன்னு சொல்லி வச்சிருந்த பிக்பாஸ், எப்படியும் கவினைத்தான் சொல்லுவானுங்க... ஏற்கனவே ஷெரின்- கவின், சேரன் - கவின், வனிதா - கவின்னு வாய்க்கால் தகராறு இருக்கு... அப்புறம் அதுக்கு ஒரு பஞ்சாயத்தைக் கூப்பிட்டு இந்த வனிதா தன்னைக் கண்டமேனிக்குத் திட்டும் என்பதால் தோற்ற அணியே முடிவு பண்ணுங்கன்னு சொல்லிட்டார்.

எப்பவும் போல கவின் முன்வர, லாஸ்லியா அவனைக் காப்பாற்ற முகனையாவது சாண்டியையாவது வண்டியில் ஏற்ற பெரும் முயற்சி எடுத்தார்... ஆனாலும் அது வெற்றி பெறவில்லை...கவின் அடுத்த வாரத்துக்கு நேரடி நாமினேசன் ஆனார். லாஸ்லியாவுக்கு முகம் காற்றுப் போன பூரி மாதிரியாயிருச்சு... ஒரு காயின் கிடைத்ததை வேண்டா வெறுப்பா எடுத்து வந்து உண்டியல்ல எரிஞ்சிட்டு உம்முன்னு போயி கம்முன்னு படுத்துட்டார். கணவனைக் காக்க முடியலையே... சாவித்திரி ஆக முடியலையேன்னு கவலை... அவங்கவங்க கவலை அவங்கவங்களுக்கு.

சரி விருது கொடுக்கலாம்... அப்பத்தான் அடிச்சிப்பானுங்க... நமக்கு எபிசோடை தயாரிக்க விருந்து கிடைக்கும்ன்னு வெளிய இருந்து போனவங்க முடிவு பண்ணி, என்ன காரணத்துக்காக இந்த விருது எனச் சொல்லிக் கொடுங்கன்னு பிக்பாஸ் சொல்லிட்டார்... எந்த விருது யாருக்கு என்பதையும் அவரே சொல்லி விட்டிருப்பார் என்பது சொல்லித்தான் தெரியவேண்டுமா..?

விழா மேடையில் நடுவர்கள்... அபிராமி அழகுய்யா... முதல் விருதான 'பச்சோந்தி' லாஸ்லியாவுக்கு கொடுக்கப்பட்டது. அதை வாங்கி நானெல்லாம் இதை ஏத்துக்க முடியாது என தூக்கியெறிந்தார். உடனே சண்டை... சாக்சிக்கும் லாஸ்லியாவுக்கும் குழாயடிச் சண்டை... ரெண்டு பொண்டாட்டிக்காரன் நிலமை திருவிழாவுல காணமப்போன குழந்தை மாதிரித்தான் என கவின் புரிந்து கொண்டிருப்பான். சண்டை உச்சம் பெற மோகனைப் பார்த்து லாஸ்லியா அலோ என அழைக்க, மோகன் நரசிம்ம அவதாரம் எடுத்தார். சண்டையின் களம் மாறுவதைப் பார்த்த சேரன், இடையில் புகுந்து காரணம் சொல்லாமல் கொடுத்தது தவறுன்னு பேசி சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அப்பா - மக பாசத்தில் லாஸ்லியா பச்சோந்தியாய் இருக்கிறார் என்று சொன்னதை சேரன் ஏற்கவில்லை... வேறு காரணம் சொல்லிக் கொடுக்கப்பட்ட போது லாஸ்லியா தான் செய்தது சரியே என்பதாய் போட்டு விட்டுத்தான் வந்தார். மேலும் லாஸ்லியா நடந்து கொண்ட விதம் மிகமிக கேவலமானது. மக்கள் தன்னையும் கவினையும் உச்சத்தில் தூக்கி வைத்து இருக்கிறார்கள் என்ற மதர்ப்பு லாஸ்லியாவுக்குள் அதிகமிருக்கிறது. ஆரம்பக் கைதட்டலையும் தற்போதைய கைதட்டலையும் உற்று நோக்கி ஆராய்ந்தார் என்றால் அவருக்கே உண்மை புரியும்... இங்கே வான்கோழி தன்னை மயிலாக நினைத்துக் கொண்ட கதைதான் நடக்கிறது. மயிலை ஒவியா என்றும் சொல்லலாம்.

சாண்டிக்கு நரி விருது கொடுத்ததும் தாங்கள் ஐவரும் யாரை நாமினேட் செய்வது என முன்முடிவு செய்வதைத் தைரியமாக மேடையில் ஒத்துக் கொண்டார். யாரை நாமினேசன் செய்வது என்றோ... செய்தோம் என்றோ பேசக்கூடாது என்பது பிக்பாஸ் விதி, அதை நாங்கள் உடைத்துத்தான் இருக்கிறோம் என்ன செய்வாய் பிக்பாஸ் என்பதாய் இருந்தது அவரின் பதில்... மேலும் முதல் இரண்டு சீசன்களில் இருந்த கமல் வேறு... இப்போதிருக்கும் கமல் வேறு... இவர் எங்க பாக்கெட்டுக்குள்ள இருக்கார் என்பதாய்த்தான் இருந்தது அவரின் வெளிப்படையான பேச்சு.

கவினுக்குத் தவளை, சேரனுக்கு யானை, முகனுக்கு கிளி, ஷெரினுக்கு மின்மினிப்பூச்சி, வனிதாவுக்கு கொசு, பசு என விருதுகள் வழங்கப்பட்டன.  எல்லாத்துக்கும் ஒரு காரணம் சொல்லப்பட்டது. 

விருதை மதிக்கணும் என லாஸ்லியாவுக்கு வகுப்பெடுத்தவர் வனிதாவுக்கு மற்றொரு விருது கொடுக்கப்பட்ட போது வாங்க மறுத்து பெரிய நாவலே எழுதினார். ஒரு வழியாக பிரச்சினைகளுடன் நடந்த விருது விழா முடிவுக்கு வர, மோகன் லாஸ்லியாவுடன் சமரசம் பேசினார். லாஸ்லியாவோ அலோ சொன்னதுக்கு மட்டும் சாரி கேட்பேன்... இந்த வீட்டுல சாரிக்கு மரியாதையில்லை...  அப்படியிப்படின்னு பேசினார். மேலே சொன்னதுதான் ஓவியா என்னும் அணிலைப் பார்த்து சூடு போட்டுக் கொண்டிருக்கும் எலிதான் லாஸ்லியா.

கமல் வரும் நாட்கள் அழகாய் இருந்தன முந்தைய சீசன்களில்... அப்ப இந்த சீசனில்... கமல் ஏன் வருகிறார் என்றே தோன்றுகிறது. எப்பவும் போல் கவினுக்கும் சாண்டிக்கும் சொம்படித்து விட்டு சாதித்ததைப் போல் மக்களுக்கு கருத்துச் சொல்லிவிட்டுச் செல்வார். 

சேரன்தான் என்றாகிவிட்டது இந்த வாரம்... வனிதா செய்த காரியத்தால் ஷெரினுக்கு ஓட்டுக்கள் கூடி விட்டன. கவினுக்கும் லாஸ்லியாவுக்கும் தனிப்பட்ட முறையில் ஓட்டுக்கள் வழங்கப்படுகின்றன என்பதாய்ப் பேச்சு.... சேரனை சீக்ரெட் அறைக்கு அனுப்பலாம் என்ற வதந்தியும் இருக்கு... சீக்ரெட் அறை என்றானால் சேரனைவிட ஷெரின் அல்லது லாஸ்லியாவை அனுப்பலாம்.

பார்ப்போம் ஆண்டவரின் அந்தர் பல்டி ஆடுறா ராமா வகைதானா இல்லை அதையும் தாண்டி அதிரடியாய் இருக்கிறதா என்பதை...

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

6 கருத்துகள்:

  1. //வேதியியல், உயிரியல், மண்ணியல், பெண்ணியல்...//

    இன்னும் சிரிப்பை அடக்க முடியவில்லை... ஹாஹாஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப நன்றிண்ணா வாசிப்புக்கும் கருத்துக்கும்...

      நீக்கு
  2. // உட்கார்ந்து பேசினால் தீராத விஷயங்களே இல்லை... ஆனால் நாம்தான் உட்கார்ந்து பேசுவதில்லை...
    அதனாலேயே சின்னப் பிரச்சினை என்று நினைத்திருப்பது, மிகப் பெரிய பிரச்சினையாக பூதாகரமான பிரச்சினையாக வளர்ந்து சாகும் வரை பேச்சு வார்த்தையில்லை...//

    நல்லதொரு ஆய்வு... இங்கே தான் குமார் அவர்களின் மனதை எட்டிப் பார்க்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிக்பாஸை ஒரு பொழுது போக்குக்காக எழுதவில்லை... சில விஷயங்களைப் பகிரவும் முடிகிறது என்பதாலேயே தொடர்கிறேன்.. உங்கள் வாழ்த்துக்கு நன்றி அண்ணா.

      நீக்கு
  3. உங்களது மற்ற கவனிப்புகளும் அருமை...

    வியாபார பயணத்தில் இருப்பதால், இவ்வளவே...

    மிகப் பெரிய பொறுப்பை முத்துநிலவன் ஐயா கொடுத்துள்ளார்... முதலில் அதை கவனிக்க வேண்டும்... நன்றி குமார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அண்ணா...
      தொழில் முக்கியம்.
      விழா சிறப்பாக நடக்கட்டும்... நானும் பகிர்ந்திருக்கிறேன்..

      நீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி