திங்கள், 23 செப்டம்பர், 2019

பிக்பாஸ் : சே'ரன்'... சேர்'மேன்'

Image result for bigg boss 91st day images cheran
சேரன்...

எப்படியும் வெளியாக்கப்படுவார் என்பது தெரியும்.

தொடர்ந்து இரண்டாம் இடத்தில் இருந்தவர் இறுதி நாளில் ஷெரினுக்கு கீழ் வருவதற்கு காரணம் என்ன என்று யோசிப்பதைவிட, லாஸ்லியாவை விட அதிக ஓட்டுக்கள் பெற்றிருந்தும் விரட்டப்பட்டது ஏன் என்பதைத்தான் யோசிக்க வேண்டும்.

விஜய் டிவியைப் பொருத்தவரை இன்னும் பத்து நாளில் முடிந்தளவு டிஆர்பியை ஏற்றிக் கொள்ள வேண்டும், அதற்காகப் பக்காவா ஸ்கெட்ச் போட ஆரம்பிச்சிட்டாங்க... தறுதலை ஜோடி கவின்-லாஸ்லியா இருந்தால்தான் அது நடக்கும்... அதே நேரத்தில் தரமான ஜோடி ஷெரினும் தர்ஷனும் உள்ளிருக்க வேண்டும் என்பதே பிக்பாஸின் மாஸ்டர் பிளான்.

அதனால கூட்டிக்கழிச்சிப் பார்த்தா... வேண்டாத பொருளென விலக்கி வைக்க வேண்டியது அந்த வீட்டில் சேரன் மட்டுமே... சேரன் மக்கள் மனங்களை வென்ற போதும் பிக்பாஸால், கமலால், அங்கிருக்கும் காதல் ஜோடியால் தோற்கடிக்கப்பட்டார். இந்த விஷயத்தில் பிக்பாஸ் - கவின் திட்டமே வெற்றி பெற்றது.

வாரவாரம் வெளியேற்றத்தின் போது கமல் தவறாமல் சொல்வது மக்கள் தீர்ப்பு... அவங்க முடிவு இதுதான்... நான் என்ன சொல்ல முடியும் என்பதே ஆகும்... இதுவரை நடந்த வெளியேற்றத்தில் மக்கள் முடிவு என்பது பாதியாவது இருக்குமா என்றால் சந்தேகமே... கமல் வாய்ச் சொல்லில் வீரர். மக்கள் வாய் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்பதை உணராத கலைஞனா கமல்..?

கமலைக் கவனித்துப் பார்த்தால் நீங்கள் ஒன்றை உணர முடியும்... அது... ஒண்ணுமே இல்லாத அன்னைக்கு 'ஆங்க்க்க்க்க்' என இழுக்கும் கமல், உண்மையாக வெளியே போக வேண்டிய ஆள் உள்ளிருக்க, மற்றொரு ஆளை அனுப்பும் சூழலில், 'இது மக்கள் தீர்ப்பு', 'ஓட்டுப் போட்டவங்க வெளிய இருக்காங்க', 'அவங்க முடிவெடுக்கிறாங்க நான் அதைச் சொல்றேன்', 'மக்கள் பிரதிநிதி நான்', 'நீங்க என்ன செய்தாலும் மக்கள் முடிவுதான் இறுதியானது' என்ற வரிகளை அடிக்கடி சொல்வார். அதைத்தான் நேற்றும் சொல்லிக் கொண்டே இருந்தார்.

ஆரம்பத்தில் மழை குறித்துப் பேசினார்... தண்ணீர் சேமிப்பு, விவசாயம் என விரிவாய்ப் பேசி ஏரி, குளம், கண்மாய், ஊரணி என எல்லாவற்றும் விளக்கம் சொன்னார். இதெல்லாம் நல்லாத்தான் இருக்கு... ஆனா செய்யிற தப்பை மறைக்க ஜவ்வாய் இழுப்பதுதான் நல்லாயில்லை.

சேரன்...

முதல் முறை வெளியான போது கஸ்தூரியைப் போல, ரகசிய அறையெல்லாம் வேண்டாமெனத் தூக்கிப் போட்டுட்டுப் போயிருக்க வேண்டும். ரகசிய அறைக்குச் சென்று வந்ததால் அவர் சாதித்தது என்ன..? சங்கட்டங்களை மட்டுமே சம்பாதித்துக் கொண்டார்... இதை மீறி சாண்டியுடனான நெருக்கத்தை வேண்டுமானால் அவரின் சாதனையாகச் சொல்லலாம்.

இவரின் அறிவுரைகளைக் கேட்கும் மனநிலையில் லாஸ்லியா இல்லை... பெத்தவங்க சொல்லியே கேட்காதபோது பெருமாள் கோவில் பூஜாரி சொல்லியாக் கேக்கப் போகுது. பள்ளியில் கேலி செய்கிறார்கள் அக்கா எனச் சொன்ன தங்கையை மறந்து பள்ளியறையில் இருப்பதுபோல் கவினுடன் இருக்கும் லாஸ்லியாவுக்கு இவர் எதற்கு அறிவுரை சொல்கிறார்...? இது சேரனுக்குத் தேவையில்லாத ஆணி # 1.

வெளியில் வந்து பேசும் போது நிறைவாகப் பேசினார்... இயக்குநர் இல்லையா..? உண்மையில் அவர் கற்றுக் கொண்ட பாடங்கள் அதிகம்தான் என்றாலும் கவின்-லாஸ்லியாவிடம் கற்றுக் கொள்ளாமல்தான் வந்திருக்கிறார். அவர்கள் நடிகர்கள் என்பதை இறுதிவரை தெரிந்து கொள்ளாத இயக்குநராய் சேரன் இருந்துவிட்டார்.

வெளியில் இருந்து பேசும் போது கவினுக்குச் சொன்ன அறிவுரைகளைக் கேட்டு அவன் அப்படியே மீதமிருக்கும் நாட்களில் போராடி விளையாடப் போறானாக்கும்... போடா டே... நீ தொலைஞ்சதுல சந்தோஷம்ன்னு இனித்தான் குட்டி போட்ட நாய் மாதிரி அவளைச் சுத்துவான்... கிளம்பும் போது கூட கண்டு கொள்ளாதவன்தான் அவன்... வெளியில் இருந்து அகம் டிவி வழி வந்தபோது ஷெரின் குதிக்க, எல்லாரும் 'சேர்மேன்' என அழைக்க, எதுவும் சொல்லாமல்தான் அமர்ந்திருந்தான் அவன். அவனுக்கு இவர் அறிவுரை சொல்கிறார். இது தேவையே இல்லாத ஆணி # 2.

நான் அங்கு பார்த்த பெண்களிலேயே சிறந்த பெண்மணி நீதான்... எந்த ஒரு பாசாங்குமில்லாத, முகத்துக்கு திரையிடாத, முகமற்றவள் நீ என ஷெரினைச் சொன்னதும் சிறப்பு. இந்த வரிகளுக்குப் பொருத்தமானவர் ஷெரின்... கண்டிப்பாக சேரனை ரொம்பவே மிஸ் பண்ணுவது ஷெரினாகத்தான் இருக்கும்.. சேரப்பாவெல்லாம் உதடோடு மட்டுமே... மனதால் அப்பாவாய் பார்த்தது ஷெரின் மட்டுமே.

சாண்டி சேரனுடன் நெருங்கமானதை நாம் அறிவோம்... அதையே சேரனும் சொன்னார்... சாண்டிக்குப் புகழ்மாலை... அதேபோல் முகன், தர்ஷனுக்கும் நல்ல வார்த்தைகள் நாலு சொன்னது சிறப்பு.

லாஸ்லியாவை நான் சொன்னபடி விளையாடு... உன் வெற்றி உன்னுடைய ஆகாசக் கோட்டையை கண்டிப்பாக வென்று கொடுக்கும்... முதல்ல அப்பா அம்மா சந்தோஷம்... அதில் ஜெயிச்சிட்டா... உன்னோட ஆசை, கனவு எல்லாத்தையும் நீ வெல்ல முடியும்... உன்னை இதுவரை தள்ளிக் கொண்டு வந்து விட்டிருக்கேன்... இனி நீ தீவிரமா விளையாடு என்று கொஞ்சம் அதிகமாகவே அறிவுரை சொன்னார். அறிவுரைகளைக் கேட்கும் அறிவிருந்திருந்தால் மரியதாஸ் வருகைக்குப் பின் தீவிரக் காதலில் இறங்கியிருக்க மாட்டாரே. இங்கே சேரன் பிடிங்கியது தேவையில்லாத துருப்பிடித்த ஆணி # 3.

சேரன் லாஸ்லியாவிடம் சுத்தி வளைச்சிச் சொன்னதெல்லாம் கவின் என்னும் பெயருக்கான வார்த்தைகள்தான் என்பதை எல்லாரும் உணர முடியும் போது அவர்கள் இருவரும் உணர மாட்டார்களா என்ன... லாஸ்லியா வானத்தில் பறந்தார். கவினுக்குள் அப்போதுதான் சிரிப்பு 'சாரிண்ணே.... இவளைக் கவனிச்சதால உங்ககிட்ட பேசக்கூட இல்லை.. வெளியில வந்து பார்க்கிறேன்...' என்றான். எப்பவும் அவளை மட்டும்தானே கவனித்துக் கொண்டிருக்கிறான்... ஆமா அவன் வேற Zone-ல இருக்கான்.

நீ 90 நாளா என்னையப் பார்க்கலையேடா... பேசலையேடா... என்று சேரன் சொன்னது சிறப்பு. கவினுக்குச் செருப்படி.

சேரன்.... வெளியேறும் முன்....

லாஸ்லியாவும் சேரனும் தனியறைக்குள் போங்கன்னு கமல் சொன்னதும் இருவரும் கிளம்ப, எல்லாரும் சேரனிடம் பேச, கவின் கண்டு கொள்ளவே இல்லை... வெடக்கோழியைச் சுற்றும் வெள்ளைச் சேவல் மாதிரி, நீ போகமாட்டே... எனக்குத் தெரியும்... டிரஸெல்லாம் எடுக்காதே... சொல்றதைக் கேளு... அந்தாளைத்தான் அனுப்பனும்ன்னு பிக்பாஸ்க்கிட்ட முன்னாடியே சொல்லிட்டேன் எனப் புலம்பிக் கொண்டே இருந்தான்.

இதை ஏன் இப்ப வெளியில சொல்றே... அப்பனைப் பிரிஞ்சி அழற மாதிரி ஒரு பில்டப்பை போட்டுட்டு வாறேனே... அதையும் கெடுக்காதே... போ பாத்ரூம்ல என்னோட ஜட்டி, பிரால்லாம் கெடக்கு... அதைப் போயி எடுத்துக்கிட்டு வா என்றதும் இங்கேரு... நம்மளைப் பிரிச்சான்னா அந்த பிக்பாஸ் நல்லாவே இருக்கமாட்டான்னு நேத்தே கேமரா முன்னாடி நின்னு யாருக்கும் தெரியாமச் சொல்லிட்டேன்... நீ போகலை...  போகமாட்டேன்னு புலம்பினான் கவின்.

கவினை விட்டிருந்தா,

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்...
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்...

அப்படின்னு பாடியிருப்பான். நல்லவேளை அப்படிப் பாடாம முகத்தைத் தூக்கி வச்சிக்கிட்டு ஒரு ஓரமா உக்காந்திருந்தான். கவின் நல்ல நடிகன்... சிவாஜி இல்லாத இடத்தை, கமல் இல்லாத இடத்தை நிரப்ப தமிழ்ச் சினிமா உலகம் இவனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே நேற்று விஜயின் பிகிலைவிட கவினை டுவிட்டரில் டிரண்டாக்கிய கோடானுகோடி ரசிகர்களின் வேண்டுகோள்.... இதை யாராவது ஒரு இயக்குநர் செய்து தமிழகத்துக்கு, கலை உலகுக்கு மோட்சம் உண்டாக்க வேண்டும்.

உள்ள போன சேரன், லாஸ்லியாவிடம் பேசிய கமலு... (கவனிக்க கமல் கமலாய் இல்லை... கமலுவாகத்தான் இருந்தார்) ஒரு கார்டு இருக்கும்... அதை எடுங்க... அதுல சேரன்னுதான் போட்டிருக்கும்... அவரை வெளிய தள்ளுங்க... நீங்க கொஞ்சம் அழுங்க... அப்புறம் போயி கவினோட கடலையை வறுங்கன்னு சொல்ல, அதே வரிசையில் எல்லாம் நிகழ, சேரன் வேளியேறினார்... அப்புறம் கமலைப் பார்த்த பின்னர்தான் மேலே சொன்ன பேச்சுக்கள் எல்லாம்... 

அதில் புடுங்கியதுதான் 1, 2, 3  என வரிசைப்படுத்தப்பட்ட தேவையில்லாத ஆணிகள் எல்லாம்.

யாரைக் காப்பாற்றலாம் என மக்களிடம் கேட்டபோது சேரன், ஷெரின் என்பது நமக்கே கேட்க, கமலுக்கு மட்டும் கவின், லாஸ்லியாவும் சேர்த்துக் கேட்டுச்சாம்... ஷெரின் காப்பாற்றப்பட்ட பின், உள்ள இருக்கவங்க எல்லாருமே சேரனைக் காப்பாற்றுங்கன்னு சொல்ல, மக்கள் சொல்லிட்டாங்க நீங்க சொல்றதை நான் எப்படிக் கேப்பேன்னு எப்பவும் போல் கவினைக் காப்பாற்றினார்... அவனும் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி முகத்தை வச்சிக்கிட்டு இருந்தான். இதுவும் அவன் எப்பவும் செய்வதுதான்... இதென்ன புதுசா..?

கவினுக்கு ஓட்டுப் போடுறவனெல்லாம் பதினெட்டு வயசுக்கு கீழிருக்கும் காதலில் விழத் தயாராக இருக்கும் இளவட்டம்தான்... எனக்கிருக்கும் ஓட்டுக்கு நான் பிரதமராககூட ஆயிருவேன்னு நினைச்சிக்கிட்டு நான் எதுவுமே செய்யலைன்னாலும் என்னமோ செய்யிறேன்னு நினைக்கிறாங்க சார் அது போதும்ன்னு வாராவாரம் சொல்றான் கவின். 

ரஜினி அரசியலுக்கு வரணும்ன்னு எவன் சொல்றானோ அவன்தான் கவின் பாசறை அமைத்திருக்கிறான். அதெல்லாம் ஓட்டுப் போடமுடியாத, ஓட்டுப் போடும் வயசுக்கே வராத கேசு... அதை அறிஞ்சிருப்பதாலேயே ரஜினி கட்சி ஆரம்பிக்கிறதுக்கு காலம் கடத்த வேண்டியிருக்கு... எப்படி கடைசி வரை கவின் திருந்தப் போறதில்லையோ அதே மாதிரி ரஜினியும் கட்சி ஆரம்பிக்கப் போறதில்லை என்பது மட்டும் நிச்சயம்... பிஞ்சுகளை நம்பினால் வெம்பித்தான் விழுகணும் கவிராஜா.

நாங்க இப்பத்தான் விளையாட ஆரம்பிச்சிருக்கோம்... ஆனா எங்க முதுகுக்குப் பின்னே தப்பாப் பேசுறாங்கன்னு லாஸ்லியா சொன்னதெல்லாம் ரொம்ப அதிகம்... யார் தப்பாப் பேசினா... நீங்க நடந்துக்கிறதைத்தான் உலகமே பார்க்குதே... அப்படின்னு நமக்குச் சொல்லத் தோன்றினாலும் கமல் சொல்லவில்லை... காதல் இளவரசன்... காதல் மன்னன்... காதலுக்கு எதிரியாவாரா என்ன...

சேரன் போய்விட்டார்... 

இனி முக்கியக் குறி ஷெரின்தான்... 

அவெஞ்சர்ஸ் நினைத்தபடி ஐவரும் இறுதிப் போட்டிக்கு... 

மக்கள் நினைவில் மண் அள்ளிப் போட்டு கவின், லாஸ்லியாவெல்லாம் இறுதிப் போட்டிக்கு என்பது வருத்தமான விஷயம். இதில் கமல் இவர்களுக்கு அமைக்கும் அரண்தான் ரொம்பக் கேவலமானது. பொறுப்புடன் பேச வேண்டியவராய் சீசன் ஒன்றில் மட்டுமே கமல் இருந்தார். இரண்டில் 50-50 ஆக இருந்தவர்... இதில் 100% கவின்-லாஸ்லியா காதலுக்கு ஒத்துழைப்பு நல்கி, 100% சொம்படிக்க ஆரம்பித்து விட்டார். கமலின் அரணே பிக்பாஸ் தோல்விக்கு முக்கியக் காரணமாகியிருக்கிறது.

முன்னதாக... அதாவது கமல் வரும் முன்னே நான் போகணும் பிக்பாஸ்ன்னு லாஸ்லியா கருத்துக் கேட்பு அறையில் கத்திக் கொண்டிருந்தார். உடனே பிக்பாஸ் நீங்க சிரிச்சா அழகாயிருக்கும்னு உலகமாக பொய்யைச் சொல்லிக்கிட்டு இருந்தார். பிக்பாஸ் அந்தச் சிரிப்பை மட்டும் குளோசப்ல காட்டிறாதீங்க... உங்களுக்குப் புண்ணியமாப் போகும். எங்களுக்குச் சின்னக்கவுண்டர் மனோரமா சிரிப்பே தெய்வீகச் சிரிப்பு.

சேரன் வெளிய போகணும்ன்னு சொன்னதும் சார் நான் போறேன் அவங்க இருக்கட்டும்ன்னு லாஸ்லியா அடுத்த அஸ்திரத்தை இறக்க, கமலோ உன்னையும் கவினையும் வச்சித்தான் நாங்க கல்லாக் கட்டணும்... நீ என்னடான்னா போறேன் போறேன்னு நிக்கிறே... அதெல்லாம் அப்படி பொசுக்குன்னு போக விடமாட்டோம்ன்னு சொல்லிட்டாப்புல... அங்க ஒரே சோக சீன்.... வெளிய வரும் போதும் மழை வரப்போற வானம் மாதிரி... அப்புறம் உள்ள வந்தப்போ கரண்ட் போன கக்கூஸ் மாதிரி... வகைவகையா முகத்தைக் கவின் மாதிரி மாத்திக்கிட்டு இருந்த லாஸ்லியா மெல்லச் சிரித்தார்... 

அது அந்நியன் சிரிப்பு.

சேரனுக்காக வெளியில் இயக்குநர்கள் பொங்கியதை எல்லாம் சொல்லி, நீங்க நிறையக் கத்துக்கிட்டு வந்திருப்பீங்க... உங்க மனசைப் பாதிக்கிற மாதிரி விஷயங்கள் நடக்கத்தான் செய்தது என்றாலும் மனசுக்குப் பிடிச்ச மாதிரி, மத்தவங்களுக்கு முன்னுதாரனமா இருந்துட்டு வந்திருக்கீங்கன்னு சொன்னார் கமல். 

சேரன் முகத்தில் தெளிவு இருந்தது.

காட்டப்பட்ட குறும்படத்தில் குழப்பமான சேரனே அதிகமிருந்தார் என்றாலும் கவின் லாஸ்லியா திட்டியதெல்லாம் போடாதது சிறப்பு.

அந்தத் திரவத்தை ஊற்றிய டாஸ்க் பற்றிப் பேசியபோது யார் பிரச்சினை பண்ண மாட்டங்களோ அவங்களுக்கு ஊற்றினோம் என்றார்கள். அதில் எங்களுக்கு ஊற்றியது தவறென கவினும் லாஸ்லியாவும் சேர்ந்து சொன்னார்கள். எதிராளியின் கேள்விக்கு எப்படிப் பதில் சொன்னால் அவரால் புரிந்து கொள்ள முடியாது என்பதை கவினும் அவனிடமிருந்து லாஸ்லியாவும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். மிகச் சரியாக அந்த அஸ்திரத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

இப்பவும் இவர்கள் இருவர் மனதிலும் வெளிய போன எல்லாருமே ஏதோ தப்புப் பண்ணித்தான் போயிருக்காங்க.... நாம தப்பே பண்ணலை அதனால்தான் உள்ளிருக்கிறோம்... இதை சக போட்டியாளர்கள் புரிஞ்சிக்காம நாம தப்புப் பண்றதா நினைச்சிக்கிட்டு இருக்காங்கங்கிற எண்ணம் மட்டும் உசேன் போல்டை விட வேகமாக ஓடி, எவரெஸ்டை விட உயரமாக மனசுக்குள் எழும்பி நிற்கிறது. 

மக்களால் அல்ல விஜய் டிவியின் சுயநலத்தால்தான் நாம் இன்னும் நிற்கிறோம் என்பதை அவர்கள் உணரவேயில்லை... இனி உணரவும் போவதில்லை.

இந்த வீட்டுக்குள் வரும் போது வில்லியாக இருந்து வெளியேறி, மறு பிரவேசத்தில் வில்லியாகவே உள்ளே போய் எல்லாருக்கும் பிடித்த மனுசியாக, தாயாக வெளியே சென்றார் வனிதா. ஆனால் உள்ளே நுழைந்த சில வாரங்கள் எல்லாரும் கொண்டாடும் பெண்ணாக உயர்ந்து நின்ற லாஸ்லியா, இன்றைய நிலையில் உலகில் அதிகம் வெறுக்கப்படும் பெண்ணாக, யாருக்கும் பிடிக்காத பெண்ணாக மாறி நிற்பதை என்ன சொல்வது..? காலம்தான் பாடம் கற்றுக் கொடுக்கும்... காதல் அல்ல... என்பதை உணராத வரை லாஸ்லியா கீழேதான் போய்க் கொண்டிருப்பார்.

வரிசையாக எல்லாரும் கமலைப் பார்க்க அமர்ந்திருக்கும் போது சேரன் உள்பட ஆண்கள் யாருமே கால் மீது கால் போடவில்லை.... ஷெரினும் அப்படி அமரவில்லை... ஆனால் லாஸ்லியா ஆங்காங்கே கிழித்து விடப்பட்ட ஜீன்ஸ் போட்டுக் கொண்டு கால் மீது கால் போட்டு அமர்ந்திருந்தார். தன்னை விடப் பெரியவர் எதிரே நிற்கிறார் என்ற உணர்வே அவருக்கு இல்லை. அப்பா சொல்லிச் சென்றும் அதை அவர் கைவிடவில்லை. 

அந்தக் காலை ஆட்டிக் கொண்டே இருப்பது எவனுக்குமே என்னால் மரியாதை கொடுக்க முடியாது என்று சொல்வதாய் இருந்தது... வெறும் காலை ஆட்டினாலே என்ன காலாட்டுறேன்னு கையில் இருப்பதால் காலில் அடிக்கும் குடும்பத்தில் வளர்ந்தவன் நான். அந்த வளர்ப்புத்தான் இன்னும் மரியாதையாய் நடக்கச் சொல்கிறது. 

இங்கே இந்த இலங்கைப் பெண்... மரியாதையைக் கற்றுக் கொடுக்கும் ஊர் அது. சின்னப் பிள்ளையைக் கூட வாங்க, போங்க என மரியாதையாக அழைப்பவர்கள் அவர்கள்... அங்கிருந்து வந்தவள் செருப்புக்காலை ஆட்டிக் கொண்டிருக்கிறாள். கமல் ஏற்றுக் கொள்ளலாம்.. உலகம் வளர்ப்பைக் கேவலமாகப் பேசும். திருந்தாத ஜென்மம் லாஸ்லியாவே வெற்றியாளராக வரக்கூடும்... எதிர்பாராததை எதிர்பார்ப்போம்.

திரும்பி வந்த லாஸ்லியா பின்னாலேயே சுற்ற ஆரம்பித்திருக்கிறான் கவின்... இவனின் மெமரி முழுவதுமே லாஸ்லியா... லாஸ்லியா என்றே நிரப்பப்பட்டுவிட்டது.... சேனம் பூட்டிய, கடிவாளம் கட்டிய குதிரையாய் இவனுக்கு அருகிலிருக்கும் எதுவும் தெரிவதில்லை... லாஸ்லியா தவிர....

இனி வரும் நாட்களில் இந்தக் கருமத்தை மட்டுமே பார்க்க வேண்டியிருக்கும் என்று நினைக்கும்  போதே கடுப்புத்தான் வருது... இருப்பினும் இறுதி நாள் வரை என் பதிவு தொடரும்.. இனி வரும் பத்து நாட்களும் நிகழ்வுகளின் தொகுப்பாக இல்லாமல் என் பார்வையாகத்தான் வரும் பதிவுகள் இருக்கும். இதுவரை எல்லாப் பதிவுகளுமே என் மனவோட்டமாக, கலந்துகட்டித்தான் எழுதினேன் என்று நினைக்கிறேன். 

சோகத்தையெல்லாம் தூக்கி வீசிவிட்டு கவினிடம் தர்ஷனைப் பற்றி பத்த வைக்க ஆரம்பித்து விட்டார் லாஸ்லியா... மச்சான் மச்சான்னு அவன் பின்னால போகாதே... அவன் என் கூடப்பிறந்தவன் இல்லை... நாளைக்கு நம்ம பிள்ளைக்கு அவன் மாமச்சீரெல்லாம் கொண்டு வரமாட்டான்... அதனால் நீ சாண்டிக்குப் போட்டுக் கொடுக்கும் திட்டத்தில் தீவிரமா தர்ஷனைப் போடு... அவனிருந்தால் நீயில்லை சாண்டி கூட இறுதிக்குப் போக முடியாது... அப்படியிருக்க நானெப்படி சேரப்பா சொன்ன மாதிரி இறுதிக்குப் போறது... அதனால் அவனை வீழ்த்துன்னு சொல்ற மாதிரியே இருந்தது... கூனி சாண்டியோடு... ஷெரினோடு மோத வைத்தாள்... இப்ப அவளின் குறி தர்ஷன்... நடப்பதை... நடக்க இருப்பதை வேடிக்கை பார்ப்போம்.

சேரன் உள்ளிருக்கும் போது காலர் ஆப் தி வீக்கில், யோவ் லாஸ்லியாவை மகமகன்னு சொல்றே... அது உன்னை அப்பன்னு சொல்லுதான்னு கேக்காதே... இது வேற கேள்வி, உன்னோட மக வந்தப்போ லாஸ்லியாக்கிட்ட ஒட்டு உறவு வச்சிக்கிட்டேன்னா நான் கொல்லங்குடி காளியா மாறிருவேன்னு சொன்னப்போ நீ பேசாமத்தானே இருந்தேன்னு ஒரு அறிவு ஜீவி உலகமகா கேள்வி கேக்க, அட லூசுப் பதறே... நான் அப்பவே பதறிட்டேன்... எம் மககிட்ட விவரம் சொல்லி விஷயத்தை முடிச்சிட்டேன்... அதெல்லாமா உனக்குக் காட்டுவாக... அவுக காட்டத்தான் கவின் - லாஸ்லியா காதலிருக்கேன்னு சொல்லி முடிச்சிட்டார். 

கமலால் இதற்குப் பதில் பேச முடியலை... இப்ப கமல் கவினைப் போல... அதாவது GEM-ஆக நின்றார். 

GEM அப்படின்னா தெரியும்தானே.... 

தெரியலைன்னா....

Ginger Eating Monkey

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

3 கருத்துகள்:

  1. ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது அந்தக்காலத்தில் ராஜகோபாலாச்சாரியாருக்கு திமுகவினர் கருப்புக் கொடி காட்டினார்களாம் நான் கருப்புக் கண்ணாடிஅணிந்ததால் எனக்கு அது தெரிய வில்லை என்றாராம் ராஜாஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...ஹா...
      இங்கும் அப்படித்தான் நடக்கிறது.
      கருத்துக்கு நன்றி அய்யா...

      நீக்கு
  2. உங்களுக்கு ஏற்பட்ட வெறுப்பு தான் எனக்கும்...

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி