திங்கள், 16 செப்டம்பர், 2019

மனசின் பக்கம்: பாலாஜி டூ பாக்யா

மீரக எழுத்தாளர்கள் குழுமத்தின் மாதாந்திர 'வாசிப்பை நேசிப்போம்' நிகழ்வில் அன்பின் அண்ணன் பாலாஜி அவர்கள் கலைஞரின் 'தென்பாண்டிச் சிங்கம்' புத்தகத்தைக் குறித்துப் பேசிவிட்டு, அந்தப் புத்தகத்தை எங்கள் மண்ணின் எழுத்தாளனுக்குக் கொடுக்கிறேன் என திடீரென அழைத்து, ஆசிப் அண்ணனிடம் கொடுத்து எனக்குக் கொடுக்கச் சொன்னார். உண்மையில் அந்தத் தருணம் என் வாழ்வில் மறக்க முடியாத, மகிழ்வான தருணம். 

(ஆசிப் அண்ணனிடமிருந்து புத்தகத்தை பெற்றுக் கொண்டேன், அருகில் பாலாஜி அண்ணன்)
எனது கதைகள் நிறையப் போட்டிகளில் வென்றிருக்கின்றன... ஒரு போட்டி... அதற்கு ஒரு கதை எழுதும் வாய்ப்பு... என்பதாய்த்தான் எப்போதும் கடந்து  போகிறேன்.. போயிருக்கிறேன். ரியாத் தமிழ்ச்சங்க சிறுகதைப் போட்டியைப் அப்படியே எடுத்துக் கொண்டேன். இவ்வெற்றி என் எழுத்துக்கான ஒரு இடத்தைப் பெற்றுக் கொடுக்கும் என நினைக்கவேயில்லை. நண்பர்களின் வாழ்த்திலும் முகநூல் பகிர்விலும்தான் அதைத் தெரிந்து கொண்டேன். 

புத்தகம் கொடுத்த தங்கள் அன்புக்கு நன்றி பாலாஜி அண்ணா.

தோ ஒரு தேடுதலின் போது செப்டெம்பர்-03ம் தேதி தினமணி இளைஞர்மணியில் எனது வலைப்பூவில் இருந்து மழை குறித்து எழுதிய பகிர்வில் சில பாராக்களைப் பகிர்ந்திருப்பதைப் பார்த்தேன். வலைப்பூவின் முகவரி கொடுக்கப்பட்டிருந்தாலும் இதை உங்கள் வலைப்பூவில் இருந்து எடுத்திருக்கிறோம் எனத் தெரிவித்திருக்கலாமே... தேடுதல் இல்லை எனின் எனக்குத் தெரியவே வாய்ப்பில்லை. என்ன நாம வேலை பார்த்த பத்திரிக்கை... பரவாயில்லைன்னு போகத்தான் சொல்லுது. 


இந்தத் தேடலில் எனது சச்சின் குறித்த கட்டுரை உள்ளிட்ட சில கட்டுரைகள் வேவ்வேறு தளங்களில் பகிரப்பட்டு வலைப்பூ முகவரி கொடுக்கப்பட்டிருப்பதை அறிந்து கொள்ள முடிந்தது. அதை எடுத்த யாருமே எடுத்திருக்கிறோம் எனச் சொல்லவே இல்லை என்பதே வருத்தமான விஷயம். இணையத்தில் பகிர்ந்த பின் உரிமை கொண்டாடாதே என்றாலும் அவை முழுக்க முழுக்க என் எழுத்துத்தானே... எங்கிருந்தும் காப்பி செய்யப்பட்டவை அல்லவே... எழுதியவனிடம் இந்தத் தளத்தில் பகிர்ந்திருக்கிறோம் என சொன்னால் அவனுக்கும் மகிழ்ச்சியாக இருக்குமல்லவா.? 

இனிமேலேனும் செய்யுங்கள் நண்பர்களே...

சிறுகதைகள்.காம் தளத்தில் எனது இரண்டாவது கதையாக 'கோட்டாமி' பகிரப்பட்டிருக்கிறது. முதலில் பதியப்பட்ட 'விழலுக்கு இரைத்த நீர்' அந்த வாரத்தில் சிறந்த கதையாக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த கதைகள் பகுதியில் பதியப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சேனைத்தமிழ் உலா சிறுகதைப் போட்டி-2015ல் முதல் இடம் பிடித்தது சரியே என நிரூபித்திருக்கிறது.'கோட்டாமி' - 2011-ல் என் மனசு தளத்தில் எழுதிய கதைதான். 

கதையைப் பகிர்ந்து கொண்ட சிறுகதைகள்.காம் இணையத்துக்கு நன்றி.

வைரஸ், இஸ்க், இப்போது பாதி பார்த்திருக்கும் அம்புலி எனச் செமையான மலையாளப் படங்களைக் குறித்து எழுத வேண்டும்... இப்போது பிக்பாஸ் பதிவெழுதுவதால் வேறெதுவும் எழுத முடியாத நிலை... மேலும் பல்வேறு குழப்பமான மனநிலையும் சேர, பிக்பாஸ் மட்டுமே எழுத முடிகிறது. விரைவில் விமர்சனங்கள் வரும்.

பாக்யா மக்கள் மனசுப் பகுதியில் கிட்டத்தட்ட ஐந்தாண்டுக்கு மேலாக சில வாரங்கள் தவிர்த்து தொடர்ந்து எனது கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன. தொடர் வாய்ப்புக் கொடுக்கும் பாக்யா ஆசிரியர் பாக்யராஜ் சாருக்கும் மக்கள் மனசு பகுதியைத் தொகுத்து வழங்கும் எஸ்.எஸ்.பூங்கதிர் சாருக்கும் என் நன்றி.

முகநூலில் குடந்தை சரவணன் அண்ணன் அவர்கள் பாக்யராஜ் சார் அவர்களின் படங்கள் குறித்த பார்வையை 'இது நம்ம பாக்யராஜ்' என்ற பெயரில் தினமும் எழுதி வருகிறார். சுவராஸ்யமான பார்வை... இது பாக்யாவில் தொடராக வந்தால் இன்னும் சிறப்பாகும். பூங்கதிர் சார்தான் ஆவண செய்ய வேண்டும். 

வாழ்த்துக்கள் சரவணன் அண்ணா.

மனசின் பக்கம் வளரும்.
-'பரிவை' சே.குமார்.

2 கருத்துகள்:

  1. நல்லதொரு கதம்பம்.... பாராட்டுகளும் வாழ்த்துகளும்....

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகள் குமார்...

    குடந்தையார் அசத்துகிறார்...

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி