'வேலையத்த அம்பட்டையன் பூனையப் போட்டுச் செரச்சானாம்...'
'அறுக்க மாட்டாதவன் கையில அம்பத்திரெண்டு கருக்கறுவாளாம்...'
'கொடுமை கொடுமையின்னு கோயிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடுமை சிங்கு சிங்குன்னு ஆடிச்சாம்...'
இப்படியெல்லாம் ஊருல நிறையப் பழமொழிகள் சொல்வாங்க... அப்படித்தான் இருந்துச்சு ஒண்ணுமில்லாத கடையில கமலஹாசன் என்னும் நான் ஒரே டீயை ஒருமணி நேரமா ஆத்திக்கிட்டு இருந்தது.
ஆண்டவர் வருகை...
பார்வையாளர்களுடன் அமர்ந்திருந்தார்...
அவருக்கு மட்டுமே ஓளி பாய்ச்சப்பட்டது.
மற்ற முகங்கள் ஒளியிழந்து...
இந்த எபிசோட் பார்த்து முடித்த போது நாமும் ஒளியிழந்தே...
போட்டியாளர்களின் குடும்பங்கள் அங்கே இருந்தார்கள்...
ஆண்டவர் போன வாரம் அடித்து ஆடினார்... யார் கண் பட்டதோ தெரியவில்லை... இந்த வாரம் ஆடாமல் தலையில் அடித்துக் கொள்ள வைத்தார்.
சென்னையில் பேனர் விழுந்து உயிரிழந்த சகோதரி சுபஸ்ரீக்காக வருத்தப்பட்டார். கட்டவுட் / பேனர் கலாச்சாரத்தைச் சாடினார். அது குறித்து நிறையப் பேசினார்.
சுபஸ்ரீயின் ஆன்மா சாந்தியடையவும் அவரின் பெற்றோர் இவ்விழப்பில் இருந்து மீண்டு வரவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இன்னைக்கு நீ அரசியல்வாதியாக மாறவும் இதைப் பேசுறே.. உன்னோட படத்துக்கும்தானே கட்டவுட் வச்சிப் பாலாபிஷேகம் செய்யிறாங்க என யாரும் கேட்டு விடக் கூடாது என்பதால் நீ யார் இதைப் பேசன்னு சிலர் குரல் கொடுக்கலாம். முப்பது வருசத்துக்கு முன்னால என்னோட ரசிகர் ஒருவர் கட்டவுட்டுக்குப் பால் ஊத்தப்போயி அவருக்குப் பால் ஊத்துற மாதிரி ஆயிருச்சு. அப்ப அவங்க வீட்டுக்குப் போனா எட்டுக்கு எட்டு வீட்டுல ஒரே ஒரு அம்மா மட்டும் இருந்தாங்க... எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை... இப்பவாச்சும் வந்தீங்களேன்னு சொன்னாங்க... அப்பவே இனி என் ரசிகர்கள் யாரும் கட்டவுட் வைத்துப் பாலாபிஷேகம் செய்யக்கூடாதெனச் சொன்னவன் நான். இப்பவும் சின்னச் சின்னதாய் செய்கிறார்கள் என்றாலும் நான் கண்டிக்கத் தவறுவதில்லை என்றார்.
பின்னர் போட்டியாளர்களின் குடும்பத்தாரைப் பார்த்து பேசிவிட்டு அகம் டிவி வழியே அகத்துக்குள் போய் 82ம் நாளின் தொடர்ச்சியைப் பார்க்கச் சொன்னார்.
சாண்டியின் மனைவியும் கிளம்ப, சாண்டி அழ, வானம் அழ, நீ நல்லா விளையாடு என மனைவி முத்தம் கொடுக்க, சாண்டி அழ, வானம் அழ, மனைவி அழ, லாலாவும் மனைவியும் கிளம்ப, சாண்டி அழ, வானம் அழ, எல்லாரும் ஆறுதல் சொல்ல, சாண்டி அழ, வானம் அழ, என்னைய மறந்துட்டா... போச்சு எல்லாம் போச்சுன்னு சாண்டி அழ, வானம் தன் அழுகையை நிறுத்தியிருந்தது.
83ம் நாள் காலை ஒன்பது மணிக்கு ப்ரூட்டி இசை ஒலித்த பின், 'கிளம்பு கிளம்பு... அந்து போச்சு... கிளம்பு கிளம்பு...' பாட்டுப் போட நீண்ட நாளைக்குப் பின் சாண்டியுடன் ஆடினான் கவின். பார்க்க நல்லாயிருந்தது.
அப்புறம் ப்ரூட்டி பத்து ரூபாய் புதிய பாட்டிலை இந்த வாரத் தலைவர் லாஸ்லியாவை அறிமுகம் செய்யச் சொன்னாங்க... அதுக்காக ப்ரூட்டி குழுமத்தில் இருந்து மூவர் வந்திருந்தாங்க. லாஸ்லியா அறிமுகம் செய்ய நடந்து போனதைப் பார்த்து ஆஹா என்ன நடைடா இது எனச் சாண்டி சிலாகித்தார். அறிமுகம் செய்த பின் லாஸ்லியா ஒரு கெட்ட ஆட்டம் போட்டார். அதைப் பார்த்தவர்கள் சத்தியமா ப்ரூட்டி வாங்கிக் குடிக்க மாட்டார்கள். என்ன கருமம் புடிச்ச ஆட்டம்டா அது.
அடுத்து அதே ப்ரூட்டியை வைத்து ஒரு டாஸ்க்... சின்னப் புள்ளைங்க விளையாடுற மாதிரி... கயிறு கட்டி அதை பிடித்து பலகையை நிறுத்தி, பாட்டிலை அடுக்கி, ம்க்கூம் இதெல்லாம் ஒரு டாஸ்க்... சாண்டி, கவின், ஷெரின், வனிதா அணி வெற்றி... வெற்றிக்காக பீஸா அனுப்பியிருந்தானுங்க... எல்லாரும் பிச்சிப்பிச்சித் தின்னானுங்க...
எனக்கு ரெண்டு பீசாவது பீஸா வையுங்கடா... ராத்திரிக்கி தின்னுக்கிறேன்னு ஷெரின் சொன்னுச்சு... வச்சானுங்களான்னு தெரியலை... கல்யாணக்கார வீட்டுச் சாப்பாட்டுல தனியாவர்த்தனம் பண்ணுற மாதிரி, அடுத்த கோழி இரையைத் தின்னுறுமோன்னு அடைக்கோழி வச்சி அமுக்கிற மாதிரி தர்ஷன் தின்னான். சாப்பாட்டில் என்ன வெட்கம்... தமிழனா இருந்தா பகிர்ந்துக்கங்கன்னு இந்த நேரத்துல தர்ஷனிடம் சொன்னால் எதைக் கொண்டு அடிப்பான்னு தெரியாது.
அடுத்து சொமாண்டோ சமையல் டாஸ்க்... அஞ்சு பேர் சமைக்க, மூவர் உதவி செய்யணும்... ஷெப் தாமு சமையல் படப்பிடிப்புக்கு வந்து சும்மா தூங்கிக்கிட்டு இருந்திருப்பார் போல... ஒரு சுத்து உள்ள போய் வாங்க, தூக்கம் போகும்ன்னு அனுப்பிட்டாங்க போல... சமைக்கும் போது தன் கருத்தையும் கூறிக் கொண்டிருந்தார். வனிதாவிடமே அதிக நேரம் செலவழித்தார். பதார்த்தத்தை எதார்த்தமாய் முகர்ந்து பார்த்து உப்பு இல்லை... உரைப்பு இல்லைன்னு சொன்னார். பின்னர் அசலுடன் இவர்களின் சமையலை ஒத்துப் பார்த்து ஷெரின், சேரனை வெற்றியாளர்கள் என்றார்.
சாண்டியுடன் 'காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்...' பாடலுக்கு டான்ஸ் ஆடினார். மீண்டும் ஒருமுறை எஸ்.பி.பி.யைப் பார்த்தது போலிருந்தது. வந்த வேலை முடிந்து கிளம்பிப் போய்விட்டார்.
அவர் போன பின்னே பிரியாணியும் பீஸாவும் வந்து சேர, இப்பவும் எவனோ என்னமோ பண்ணுங்கடான்னு பிரியாணியைப் பிரித்து மேய ஆரம்பித்தான் தர்ஷன். அவனுக்கு மேங்கோ ஜூஸ் எடுத்துக் கொடுத்து சமத்தாப் பள்ளிக்கூடம் போகணும் என்றார் ஷெரின். சாப்பிடவே நேரம் பத்தலை இதுல படிப்புத்தான் ஒரு கேடு... இப்ப அஞ்சாப்பு எட்டாப்புக்கு எல்லாம் அரசாங்கத் தேர்வாம்... எவனும் படிக்கக்கூடாதுன்னு அவனுங்க என்ன முடிவு பண்றது... நானே போகலை... நீ இன்னொரு பிளேட் பிரியாணி எடுத்தா என்பதாய்ப் பார்த்தான்.
கமல் அகம் டிவி வழி அகத்துக்குள் சென்றார்...
ஆமா என்ன பேசினார்..? என்னத்தை எழுதுறது..?
பேச வந்ததை எப்படிப் பேசுறதுன்னு தெரியாம ரெண்டு கிலோ மீட்டருல போய்ச் சேர வேண்டிய ஊருக்கு இருபது கிலோ மீட்டர் சுற்றுப் பாதையில் சைக்கிள் ஓட்டினார். இடையிடையே எங்கள் கல்லூரிப் பேராசிரியர் ஆறுமுக ஐயா அவரே நகைச்சுவை சொல்லி, அவரே சிரிப்பது போல் இவரும் செய்தார்.
ஒரு படத்துல அதான் கூட்டம் முடிஞ்சிருச்சுல்ல... எல்லாம் கிளம்பு... கிளம்புன்னு வடிவேலு விரட்டுற மாதிரி கமலை விரட்டத் தோணியது எனக்கு மட்டும்தானா..?
வனிதா குழந்தைகளுடன் இருந்த போது பார்த்த அந்த சாந்தமான அம்மாவை எல்லாரும் புகழ்றாங்க என அன்னை வனிதா என்றழைத்தார்.
கவினிடம் லாஸ்லியாவின் அப்பா நடந்து கொண்ட விதம் குறித்துப் பேசி, அவர் நடந்து கொண்ட விதம் அருமை எனப் பாராட்டினார். அவர் தன் கணவனைப் பாராட்டும் போதெல்லாம் லாஸ்லியாவின் அம்மா பார்த்த காதல் பார்வைகள்... ஆஹா... செம க்யூட்... தன் கணவனைச் சிறந்தவன் எனச் சொன்ன தருணங்களில் அவர் சொக்கித்தான் போனார்.
கவின் திட்டிய பின்னர் அழுதுவிட்டு கக்கூஸை விட்டு வெளியே வந்தவர் அவன் தனியே அமர்ந்திருப்பதைப் பார்த்த சாண்டி, மீண்டும் போய் அவனைக் கூட்டி வந்ததை, அந்த நட்பைப் பாராட்டினார்... கைதட்டல் அள்ளியது.
சேரனை லாஸ்லியா குடும்பம் தங்களில் ஒருவராய் ஏற்றுக் கொண்டு உறவு பாராட்டியதைச் சொல்லி வேறென்ன வேண்டும் என்ற போது ஆமாம் சார்... லாஸ்லியாவோட இங்க இருக்கேன்... ஆனா அவங்க தங்கச்சிங்க ரெண்டு பேரும் சேரப்பான்னு வந்து கட்டிக்கிட்டாங்க பாருங்க... அதுவே எனக்குப் பெரிய வெற்றி என்றார் சேரன்.
முகன் எல்லாரும் தான் செய்த கிராப்டைக் கொடுப்பதையும் சொல்லி வாழ்த்தினார்.
சென்ற சீசன்களில் விளையாட்டை விளையாடுங்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தோம்.. அதை இப்ப நீங்களே விளையாட்டு எனச் சொல்ல ஆரம்பித்து விட்டீர்கள் என்றார்.
லாஸ்லியா கால் மீது கால் போடுவது தவறில்லை என்றார்... அதுவே அழகு என்றும் சொல்லிக் கொடுத்தார்.
கவினை விளையாட்டை இன்னும் சிறப்பாக விளையாடுங்கள் என்றார்.
சேரனுக்குத் தனிமை அறை... கவினுக்கு வேறொரு அறை எனப் பஞ்ச் பேசினார்.
லாஸ்லியா அப்பாவிடம் இது மாடர்ன் உலகம்... இங்க இன்னமும் பக்கத்து வீட்டுக்காரன் சொல்றான்னு கட்டுப்பெட்டித்தனமா இருக்காதீங்க... புள்ள விரும்புற கவினைக் கட்டி வையுங்க... அப்பனாச் சொல்றேன்னு சுத்தி வளைத்து...புரிந்தும் புரியாமலும்... அறிந்தும் அறியாமலும்... வளவாளா கொழகொழான்னு வாய்க்குள் வார்த்தைகளை மென்று விழுங்கிப் பேசினார்.
கவினிடம் ஒரு அப்பனாய் நான் என்ன செய்வேனோ அதைவிடச் சிறப்பாக லாஸ்லியாவின் அப்பா செய்தார் என்றார். இதே கமல்தான் சென்ற வாரத்தில் வனிதாவிடம் அது அவர்களின் சுதந்திரம் அதில் நீங்கள் தலையிடாதீர்கள் என்றார். சேரனிடம் சின்னஞ்சிறுகளை தனியே விடுங்க என்றார். அது வேற வாய்... இது வேற வாய்.... ஆண்டவரே அடுக்குமா..?
நடுத்தர வர்க்கம் இப்படித்தான் இருக்கும் என்றார்... மேட்டுக்குடி போல விவகாரங்களையும் விவகாரத்துக்களையும் விரும்பாத நடுத்தர வர்க்கத்தையும் இப்ப விவகாரங்களும் விவகாரத்துக்களும் பிடித்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டன... அப்படிப்பட்ட சூழலில் ஒரு நடுத்தர வர்க்கம் மானத்துடன் வாழ நினைப்பது தவறல்லவே.
அப்பறம் எல்லாரும் யாரை மிஸ் பண்ணுனீங்க என்றதும் லாஸ்லியா அப்பா வந்ததே பெரிதென்றார்...வனிதா மகன் நினைவில் கண்ணைக் கசக்கினார்... ஷெரின் தன்னோட பப்பி வரலைன்னு வருந்தினார்... தர்ஷன் அப்பா வரலைன்னு வருந்தினான்... கவின் நண்பன்தான் வருவான் என்பதால் எந்த வருத்தமுமில்லை என்றான்... முகன் அப்பா வந்திருக்கலாம் என வருந்தினான். சாண்டிக்கு கொழுந்தியா வரலைன்னு வருத்தம்... சேரனுக்கு மனைவி வரலைன்னு வருத்தம்.
குரங்குக்கு புண் இருந்தா அதைப் பிய்த்துப் பிய்த்து ஆறவே விடாதாம்... அது மாதிரித்தான் நேற்று ஆண்டவர் முடிந்த விசயங்களை மீண்டும் மீண்டும் பேசினார். என்ன பேசுறதுன்னு தெரியாத அரசியல்வாதி நான் என்ன சொல்ல வர்றேன்னான்னு திரும்பத் திரும்பப் பேசுவதைப் போல் பேசினார். ஒண்ணுமே தேறலை.
பெற்றவர்களிடமும் உறவுகளிடமும் பேசும் போது அவர்கள் ரகசியமாய்ச் சொன்னவற்றை எல்லாம் மற்றவர்களும் தெரிந்து கொள்ளும் வண்ணம் பேசினார்... அகம் டிவியை அணைத்து வைத்திருந்தார்கள் என்பதால் போட்டியாளர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை என்றாலும் முடிந்த விஷயங்களை.... சரி.. சரி... ஒண்ணுமே இல்லாம சாம்பார் வைக்கணுமின்னா இப்படித்தானே வளவளன்னு இருக்கும்.
சேரன் மகளிடம் லாஸ்லியாவிடம் சேரக்கூடாது சேரப்பான்னு சொன்னீங்க என்று கேட்டதும் லாஸ்லியா என்னோட சிஸ்டர்தான் ஆனால் நான் எப்பவும் எங்கப்பா எனக்கு மட்டும்தான் என்று நினைக்கும் பெண்... அக்காவுக்கே விட்டுக் கொடுக்கமாட்டேன் அதான் அப்படிச் சொன்னேன் என்றார். இதைத்தான் நான் நேற்றைய பதிவில் சொல்லியிருந்தேன். பெண் பிள்ளைகளின் பாசம் அப்படித்தான்.
பாவம் ஆண்டவர்... ரொம்பத்தான் யோசிச்சி யோசிச்சிப் பேசினாலும் உலகம் உருண்டைங்கிற மாதிரி மறுக்கா மறுக்கா அதே இடத்துல வந்து நின்னாரு... அவருக்கும் உள்ளிருப்பவர்களுக்கும் பணம்... நமக்கு இதெல்லாம் எதுக்குப் பார்க்கணும்ன்னு இருந்துச்சு... எழுதணுமேன்னு என்னைத் தேத்திக்கிட்டேன். பிரதிலிபி சகோதரிகளே கருணை காட்டுங்க... கொல்றானுங்க.
வெளியேற்றம் யாருன்னு நாளை சொல்றேன்... அதுக்கு முன்னாடி ஒருத்தரைக் காப்பாற்றணும் அதுவும் யாருன்னு நாளைக்குச் சொல்றேன்னு ஓடிட்டாரு...
இவனுக சாப்பிட ஆரமபிச்சிட்டானுங்க....
ஊரே பத்தியெறிஞ்சாலும் நாங்க சாப்பிட்டுக்கிட்டுத்தான் இருப்போம்ன்னு தின்னு தீர்க்கிறானுங்க... பிக்பாஸ் இந்த முறை சாப்பாட்டுக்குத்தான் அதிகமாச் செலவு செய்வார் போல.
வாரம் பூராம் குடும்பங்களைக் கூட்டியாந்து கும்மியடிச்சா வேற என்ன தேறும்..?
ஒண்ணத்துக்கும் உதவாத ஒரு நிகழ்ச்சியாத்தானே இருக்கும்...
மரண மொக்கை....
அதுவும் லாஸ்லியா அப்பாவுக்கு கமல் கொடுத்த அறிவுரையெல்லாம் மொக்கையிலும் மொக்கை... இதுக்கு நேரடியாக எங்க விஜய் டிவி பையன் கவினுக்கு உங்க பொண்ணைக் கட்டித் தருவீங்களான்னு வெற்றிலை பாக்கு வைத்துக் கேட்டிருக்கலாம்... சுருங்கிப் போன கவினாச்சும் விரிஞ்சி மலர்ந்திருப்பான்.
கவினும் லாஸ்லியாவும் சென்ற வாரம் வரை ஒரு இடத்தில் ஒட்டி அமர்ந்திருந்தனர். இந்த வாரம் எதிர் எதிர் திசையில் அமர்ந்திருந்தனர். அடுத்த வாரம்..?
லாஸ்லியா நேற்றும் இப்போதைக்கு நிப்பாட்டி வச்சிருக்கோம்... வெளிய போயிப் பாத்துக்கலாம்ன்னு வேற சொல்லி வச்சிருக்கு... எப்படியும் ரெண்டு நாள்ல சிவப்புக் கதவுக்கிட்ட ஆயிரம் சிவாஜிகளின் அதிரடி நடிப்பைக் காண முடியும்... என்ன மறுபடியும் ராத்திரியெல்லாம் இந்திதான் இந்தியாவின் ஒரே மொழின்னு சட்டம் இயற்றும் தீவிர ஆலோசனையில் இருப்பானுங்களேன்னு நினைக்கும் போதுதான் 'கதக்'குன்னு இருக்கு.
கவினின் நண்பன் அடித்தது உண்மையான அடியாகக் கூட இருக்கலாம் என்றாலும் மற்றவர்களின் பரிதாபப் பார்வையும் மக்களின் அணுக்கமான பார்வையும் கிடைக்கவே அது அந்தச் சூழலில் நிகழ்த்தப்பட்டது என எல்லாரும் அறிவோம்... அந்தப் பார்வைகளில் லாஸ்லியாவின் பார்வைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதே உண்மை. லாஸ்லியா சாய்வார்... வீழ்வார்... மாற்றமில்லை.
மொத்தத்துல இன்னைக்கு நிகழ்ச்சி... கலை நிகழ்ச்சி இல்லாத திருவிழா போல் கலையிழந்து இருந்தது.
இன்று வனிதா என்றால் அடுத்தடுத்த வாரங்களில் ஷெரின், சேரன், முகன் வெளியேற்றப்படுவார்கள்.
இறுதியில் இருக்கப் போகும் நால்வர் என்னைப் பொறுத்தவரை தர்ஷன், லாஸ்லியா, சாண்டி, கவின்.
இறுதி போட்டியில் கவினும் தர்ஷனுமே நிற்பார்கள். (தர்ஷன் தன் உழைப்பாலும் கவின் மக்கள்+விஜய் டிவி வாக்குகளாலும்).
சரியான தீர்ப்பெனில் தர்ஷன்... திருத்தப்பட்ட தீர்ப்பெனில் கவின் வெல்லக்கூடும்.
வெளியில் சேரனைக் குறித்து தகாத எழுத்துக்கள் அதிகமாய் பரப்பப்படுவதால் அவர் இறுதி நால்வருக்குள் வரும் வாய்ப்பில் 50% இழப்பு ஏற்படக்கூடும்... இல்லையேல் சாண்டி அல்லது லாஸ்லியாவுக்குப் பதில் அவர் இடம் பிடிக்க வாய்ப்பு அதிகம். இனி வரும் இரு வாரப் போட்டிகள் சேரனுக்குப் பெரிய சவாலாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது என்றாலும் இந்த முறை அப்படியொன்றும் கடினமாக விளையாட்டுகள் இல்லை என்பதால் சவாலெல்லாம் இருக்க வாய்ப்பில்லை என்றும் தோன்றுகிறது.
சாண்டிக்கு வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்றாலும் வெளிநாட்டுக்காரனும் அடிபட்டவனும் வெல்வதால்தான் விஜய் தொலைக்காட்சிக்கு லாபமே ஒழிய, சாண்டியோ சேரனோ வெற்றி பெறுவதால் ஒரு போதும் லாபமில்லை.
என் கணக்கு உங்கள் கணக்கோடு ஒத்துப் போகுமா தெரியலை...
உங்கள் எண்ணத்தையும் சொல்லுங்க.
-'பரிவை' சே.குமார்.
பதிலளிநீக்குகாலம் பதில் சொல்லும், கவனிப்போம்.
படிக்க மறக்காதீர்கள்
பதிலளிநீக்குநீங்களும் திருக்குறள் எழுதலாம்!
http://www.ypvnpubs.com/2019/09/blog-post_13.html