முந்தைய பகுதிகள் :
"சரி விடுங்க... ஏதோ பேசிட்டேன்..." என்றபடி பொங்கலை ஆரம்பிக்க சுப்பியை ஒடித்தவள் கையில் முள் குத்தி ரத்தம் வர. "ஏய் அசடு... கையில முள்ளைக் குத்திக்கிட்டு..." என்று அவளின் விரலை வாயில் வைத்து ரத்தத்தை உறிஞ்சியவன் "நீ தள்ளு நான் அடுப்பை பாக்குறேன்... அரிசியை கலைஞ்சி பாலை எடு..." என இதுவரை எதுவுமே நடக்காதது போல் கண்ணதாசன் பேச, "எப்படிங்க உங்களால் இப்படி இருக்க முடியுது..." என அவன் தலை கலைக்க, அங்கே ஆனந்தப் பொங்கல் பொங்க ஆரம்பித்தது.
இனி...
மாட்டுப் பொங்கல் முடிந்த அன்று மாலை சுந்தரியும் அழகப்பனும் குழந்தைகளுடன் வந்து சேர, கற்பகமும் கணவன் குழந்தைகளுடன் வந்திருந்தாள். இளையவள் கண்மணியும் பிரச்சினைக்குரிய மாப்பிள்ளை ரமேஷூம் வரவில்லை. எல்லாரும் வீட்டில் நிறைந்திருக்க சந்தோஷத்தில் திளைத்திருந்தது அந்த பழைய காலத்து வீடு.
இரவுச் சாப்பாடு முடிந்ததும் வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். கண்ணதாசனும் வந்து அவர்களுடன் இணைந்து கொண்டான்.
"என்ன கண்ணா... சின்னவருதான் வரலையின்ன அந்தப்புள்ளைகளையாச்சும் அனுப்பக்கூடாதா? ஆத்தா அக்கான்னு எல்லாம் ஒண்ணாத் திரியும் போது அதுக இல்லாம... பேரம்பேத்திகளைப் பாக்கணுமின்னு எனக்கு ஆசையிருக்காதா?" மெதுவாக பேச்சை ஆரம்பித்தார் கந்தசாமி.
"சித்தப்பா... நாங்கள்லாம் சிராவயல் மஞ்சுவிரட்டுக்குப் பொயிட்டு இருட்டோடதானே வந்தோம். சின்னத்தான் அங்க போயிட்டு வீட்டுக்குப் போக நேரமாயிருக்கும்... காலையில கூட்டிக்கிட்டு வருவாரு..."
"ஆமா மாமா... கண்மணி புருஷன் அதிக பழக்கவழக்கம் உள்ள ஆளு... எங்கிட்டக்கூட பேசினான்... வாறேன்னுதான் சொன்னான்... வந்துருவான்... கோபம் மாறி ஆளு இங்கிட்டு வரணுமில்ல... வரட்டும்..." என்றார் அழகப்பன்.
"ம்... ம்... முறுக்கிக்கிட்டு இருக்காம வந்தாச் சரி..." என்றார் கந்தசாமி.
"முறுக்கிக்கிட்டு கெடந்தா கெடக்கட்டும்... என்ன நம்ம பேரம்பேத்திகள கண்ணுல காட்டாம வச்சிருப்பாரு... அம்புட்டுத்தானே..." காளியம்மாள் புலம்பினாள்.
"அம்மா... நாளைக்கி வருவாங்க... வரமா எங்க போகப்போறாங்க..." இது சுந்தரி.
"சின்னம்மா... அவரு கோவக்காரரா இருந்தாலும் பாசமிருக்கும்... என்னையெல்லாம் எங்கன பாத்தாலும் காரை நிறுத்தி அத்தாச்சி எப்புடியிருக்கேன்னு கேட்டுட்டு.... வா கொண்டே விட்டுட்டுப் போறேன்னு சொல்லுவாரு... என்ன கொணந்தான் கிறுசுகெட்ட கொணம்" என்றான் கற்பகம்.
"ஆமா... உன்னோட கொழுந்தனுக்கு ரொம்பப் பாசந்தான்..." முணங்கினான் குமரேசன்.
"நீ சும்மா இருடா... அவருக்கென்ன... அவரு மேல கை வச்சது தப்புத்தானே.... நம்ம மேலயும் தப்பு இருக்குல்லடா..." என்றாள் கற்பகம் அவனின் தலையில் தட்டியபடி.
"ம்... அதுக்காக.... இந்தா அத்தான் உன்னைய தூக்கிப் போட்டு மிதிச்சிருந்தா... நாங்க பாத்துக்கிட்டா இருந்திருப்போம்... அவரை...." பேச்சை நிறுத்தி அவரைப் பார்த்தான் குமரேசன்.
"ஏம்மாப்ள... ஏன்... நல்லாத்தானே போயிக்கிட்டு இருந்துச்சு.... என்னைய ஏன் சந்திக்கு இழுக்குறே... நா உங்க அக்காவை அடிக்கிறதா.... அவ என்னைய தூக்கிப் போட்டு மிதிக்காம இருந்தாச் சரி..." என்றார் கற்பகம் கணவர்.
"என்ன மாப்ள... எம்புள்ளக அப்படியா வளந்திருக்குக..." என்றார் கந்தசாமி.
"நீங்க வளக்கலை மாமா... அங்க வந்ததும் அதுகளா வளந்திருச்சுக..." மெதுவாக முணங்கியவர் காளியம்மாளிடம் "அயித்தை அந்த வெத்தலைப் பொட்டியக் கொடுங்க... " என்று வாங்கி வெத்தலை போட ஆரம்பித்தார்.
"என்னத்தான் சொன்னீக.. சரியா காதுல விழுகலை..." என்றான் மணி.
"நீ வேற சும்மா இரு மாப்ள... வெத்தலையில காரமில்லைன்னு சொன்னேன்..."
ரொம்ப நாளைக்குப் பிறகு எல்லாரும் ஒண்ணு சேர்ந்ததால் நீண்ட நேரம் சந்தோஷமாகப் பேசிக்கிட்டு இருந்துவிட்டு படுக்கச் சென்றனர்.
மறுநாள்....
காலை 9 மணியைப் போல் ரமேஷ் குடும்பத்துடன் வந்திறங்கினான். ஸ்வேதாவும் சங்கரும் ஐயா, ஆயாவைப் போய்க் கட்டிக் கொண்டனர்.
"வாங்க மாப்ள..." - கந்தசாமி.
"வாங்கப்பா" - காளியம்மாள்.
"மாமா உடம்புக்கு எப்படியிருக்கு..? மறுபடி செக்கப்புக்குப் போனீங்களா?" அன்பாய் அவரின் கை பிடித்துக் கேட்டான்.
"பரவாயில்லைப்பா... செக்கப் போகணும்..." என்றார்.
"வாங்கத்தான்..." - மணி.
"அத்தான் வாங்க..." - குமரேசன்.
"ம்..." பொத்தாம் பொதுவாய் சொல்லி வைத்தான் ரமேஷ்.
"வா ரமேஷ்... நேத்தே வருவேன்னு பார்த்தேன்..." என்றார் அழகப்பன்.
"இல்லண்ணே... நேத்து சிராவயல் பொயிட்டு ரொம்ப லேட்டாயிடுச்சு... இவகிட்ட பிள்ளைகளைக் கூட்டிக்கிட்டு போன்னு சொன்னேன்... கூட்டத்துல பஸ்ல இழுத்து வரமுடியாதுன்னு சொல்லிட்டா..." என்றான்.
"சரி... சரி... "
"வாங்கத்தான்... வா கண்மணி..." என்றபடி வந்தான் கண்ணதாசன். அவன் பின்னே கற்பகமும் வந்தாள்.
"சாப்பிடுங்கப்பா..." என்றாள் காளியம்மாள்.
"இல்ல அயித்தை... சாப்பிட்டுத்தான் வந்தோம்... என்ன சித்ரா, அபி மத்தியானம் ஆடா... மாடா..." என்றான் சிரித்தபடி.
"அய்யோ மாடா... அதெல்லாம் சாப்பிடுவீங்களா...?" என்றாள் அபி.
"அட சும்மா கேட்டேன்.... என்ன விசேசம்?"
"நாட்டுக்கோழி ரசம்..."
"ஆஹா... காலையிலயே வயிற்றைக் காயப் போட்டிருக்கலாமோ?"
"உக்காந்து மெதுவாச் சாப்பிடுங்க..." என்றாள் சுந்தரி.
"அது சரி மாப்ள சாப்பாட்டு ராமனான்னு திட்டப் போறாங்க...." என்று சிரித்தவன் "என்ன கோவக்கார மச்சான்... உர்ருன்னு இருக்கீக... எப்படா சட்டையப் புடிக்கலாம்ன்னா... இப்ப தப்புப் பண்ணலையே... ஆத்தா கண்மணி உன்னோட கையைக் காலைக் காட்டுடி... அது வேற என்னைய அடிக்க வந்துறாம..." எனச் சொல்லிச் சிரித்தான்.
"நீங்க வேற ஏந்த்தான்... அவன் சும்மா இருக்கான்" என்றான் கண்ணதாசன்.
"அட மச்சானை கேலி பேசக்கூடாதா?"
"நல்லா பேசுங்க... என்னமோ தெரியலை... பொங்கல் முடிஞ்சதும் சின்னம்மா இவனுக்கு வேப்பெண்ணை கொடுத்திருச்சு போல... அதான் உர்ருன்னு இருக்கான்..." என்று கண்ணதாசன் சிரிக்க, எல்லாரும் சிரித்தனர்... குமரேசனும் சேர்ந்து கொண்டான்.
காலை 11 மணிக்கெல்லாம் ஊரில் உள்ள சில முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பங்கு பிரிக்க அமர்ந்தனர்.
"ஏப்பா கந்தசாமி... இப்ப பொம்பளபுள்ளைகளுக்கு ஆத்தா வீட்டுச் சொத்துன்னு கொடுக்குறாங்க... நீ என்ன முடிவு பண்ணி வச்சிருக்கே..." கந்தசாமியின் சித்தப்பா தணிகாசலம், முன்னந்தலையில் முடிகள் இல்லாமல் பளபளன்னு மின்னிய வழுக்கையைத் தடவியபடி கேட்டார்.
"உங்க பேராண்டிகளைக் கேளுங்க சித்தப்பா..."
"என்னப்பா... சொல்லுங்கப்பா..."
"ஐயா... அவனுககிட்ட என்ன கேட்டுக்கிட்டு... எங்ககிட்ட வேணுங்கிற சொத்து இருக்கு... அதைப் பாக்கவே எங்களால முடியல... இதுல இங்க வேற சொத்தா... அதெல்லாம் வேண்டாம்... மச்சானுங்க நல்லாயிருந்தா எதையும் கேட்டு வாங்கிக்கலாம்...." என்றான் ரமேஷ்.
"சின்னவுக டப்புன்னு போட்டு ஒடச்சிட்டாங்க... மூத்தவரு ஒண்ணும் சொல்லலையே..." என்றார் பரமசிவம்.
"இதுல நாஞ் சொல்ல என்ன இருக்கு மாமா.... அதான் தம்பி சொல்லிட்டானே... மச்சானுங்க நல்லாயிருந்தா அதைச் செய்யிங்க... இதைச் செய்யுங்கன்னு கேட்டு வாங்கிக்கலாம்... சொத்துல பங்கு வச்சிக்கிட்டு பாசத்தை விட்டுட்டு போக வேண்டியிருக்குமே மாமா..." என்றார் அழகப்பன்.
"அப்ப பொண்ணுங்களுக்கு வேண்டாம்... இருக்க சொத்தை பிரிச்சினை இல்லாம பிரிச்சிட வேண்டியதுதானே...." என்றார் தணிகாசலம்.
"இதுல அடிச்சிக்கிற என்ன இருக்கு... அப்பாதான் பிரிக்கணுமின்னாங்க... அவங்க ஆசை... பிரிச்சிக் கொடுத்துட்டு அவருதானே பாக்கப்போறாரு..." என்றான் மணி.
"எல்லாருக்கும் நா ஒண்ணு சொல்லிக்கிறேன்... சின்னவுகளுக்கு சொந்த வீடு இருக்கு... அதனால அந்த மாமரத்துக் கொல்லையை எங்களுக்கு கொடுத்துட்டா... அதுல வீடு கட்டிப்போம்..." என்று ஆரம்பித்து வைத்தாள் சித்ரா.
(வேரும் விழுதுகளும் வளரும்)
-'பரிவை' சே.குமார்.
சொற்றொடர்களுக்கிடையேயான உளவியல் சிந்தனைகளை தங்களது விவாத நடை மேம்படுத்துகிறது. பாத்திரங்களின் மன நிலையைப் புரிந்துகொள்ள அது மிகவும் உதவியாக இருக்கிறது. நன்றி.
பதிலளிநீக்குவாங்க ஐயா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
படிக்க தூண்டும் உரையாடல்கள் ....நல்லா இருக்கு அண்ணேன்
பதிலளிநீக்குவாங்க ஐயா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அருமை நண்பரே
பதிலளிநீக்குதொடருங்கள் தொடர்கிறேன்
தம +1
வாங்க ஐயா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அருமையாக செல்கிறது..
பதிலளிநீக்குதமிழ் மணம் 5
வாங்க அண்ணா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம் சகோதரரே.!
பதிலளிநீக்குகதை நன்றாக நகர்கிறது..மாப்பிள்ளை முறைக்காமல், மகனாக இறங்கி வந்திருக்கிறார். நல்லது.! இப்படியே இருந்தால் நன்றாகவிருக்கும்.. சொத்துப் பிரிப்பதில் தகராறும் தலை காட்டாமல் இருக்க வேண்டும். இனிதே கதையை தொடருங்கள்..தொடர்கிறோம். வாழ்த்துக்கள்..
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
வாங்க ஐயா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.,
நல்ல நடையில் செல்கின்றது....தொடர்கின்றோம்.
பதிலளிநீக்கு