செவ்வாய், 17 செப்டம்பர், 2013

தொடர்கதை : கலையாத கனவுகள் - 14

முந்தைய பதிவுகளைப் படிக்க...

           பகுதி-1        பகுதி-2        பகுதி-3       பகுதி-4        பகுதி-5     
           பகுதி-6        பகுதி-7        பகுதி-8        பகுதி-9       பகுதி-10   
           பகுதி-11      பகுதி-12      பகுதி-13
******
14. பதறும் பாவை

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக்குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரியில் வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான். காதலில் விழுந்தானா இல்லையா என்று போய்க் கொண்டிருக்கும் வாழ்க்கையில் கல்லூரிகளுக்கா கட்டுரைப் போட்டிக்குச் சென்று முதல் பரிசை வெல்கிறான். திரும்பும்போது அவளுடன் சேர்ந்து அமர்ந்து பஸ்ஸில் பயணிக்கிறான்.  கல்லூரியில் வைரவனைத் தாக்க வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறில் அடிபட்டதுடன் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு அம்மாவைக் கூட்டி வந்தால் வகுப்பிற்கு செல்லலாம் என்று சொல்லப்படுகிறது.

இனி...

ல்லூரிக்குள் இருந்து ராம்கி வெளியாக, புவனா உள்ளே நுழைந்தாள். தன்னைக் கடந்தது ராம்கிதானே என்று நினைத்துத் திரும்பியவள் அது உறுதியானதும் சைக்கிளில் இருந்து காலை ஊன்றியபடி "ராம்... ராம்..." என்று கூப்பிட்டாள்.

அவள் கூப்பிட்டது ராம்கி காதில் விழுகாமல் இல்லை... இருந்தும் கேட்காதவனாக சைக்கிளை மிதித்தான். அவளுடன் கல்லூரிக்குள் பேசக்கூடாது என்றவன் பின்னால் வருவான். அவன் வரும் போது கல்லூரி வாசலில் பேசிக்க்கொண்டு நின்றாள் என்ன செய்வான் என்று தெரியாது. அதுவும் தலையில் கட்டுடன் அவளுடன் பேசப் போனால் துருவித் துருவிக் கேட்பாள். இப்போ இருக்கும் சூழலில் இதெல்லாம் சரியில்லை என்பதால் சைக்கிளை வேகமாக மிதித்தான்.

அவன் தலையில் கட்டு இருப்பதைப் பார்த்து என்னவாக இருக்கும்... எப்படி அடிபட்டிருக்கும். ஏன் திரும்பாமல் போகிறான்... என்ற யோசனையில் சென்றவளை வைரவனின் பைக் கடக்க, அவன் அரைக்கைச் சட்டை அணிந்திருந்ததால் கையில் போட்டிருந்த கட்டு நன்றாகத் தெரிந்தது. அவளது மனது ராம்கியின் தலையையும் வைரவனின் கையையும் முடிச்சிட்டுப் பார்த்தது.

வைரவன் ராம்கியை அடிக்க... அவன் திருப்பி இவனைத் தாக்கியிருப்பானோ... எதனால் இருவருக்கும் சண்டை வந்திருக்கும்... காரணம் நானாக இருப்பேனோ... பஸ்ஸில் இருவரும் சேர்ந்து வந்ததை யாராவது இவனிடம் சொல்லியிருப்பார்களோ?... எதற்காக இருவருக்கும் சண்டை... பலவித குழப்பத்தில் சைக்கிளை ஸ்டாண்டில் வைத்துவிட்டு தோழிகளைத் தேடினாள்.

அவர்கள் மரத்தடியில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருக்க, அவர்களின் அருகில் சென்றாள்.

"என்னடி... காலையில ஆளைக் காணோம்..."

"வயித்தவலிடி... அதான் வரலை..."

"அப்புறம் எதுக்கு இப்ப வந்தே.. ஒருதா நாளைக்கு வரவேண்டியதுதானே..."

"பொழுது போகலடி..."

"அது எப்படிப் போகும்?" என்றாள் ஒருத்தி குதர்க்கமாக.

"சும்மா இருங்கடி... என்னடி பிரச்சினை.... எங்கண்ணன் கட்டோட போறான்..."

"உங்க அண்ணனை மட்டும்தான் பார்த்தியா..." கேட்டபடி அவள் முகம் பார்த்தாள் ஒருத்தி.

"ஆமா... ஏன்... எங்கண்ணனும் அவன் பின்னாடி சுத்துற வானரத்துல ஒண்ணும்தான் போகுது..."

"அப்ப திருவாளர்.ராமகிருஷ்ணனை நீ பார்க்கலை..."

"இல்ல... பாக்கலைடி..."

"சரி... உங்க அண்ணனும் ராம்கியும்..."

"சண்டை போட்டுக்கிட்டாங்களா... ராம்கிக்கு என்னாச்சு...?"

"ஏண்டி பதறுறே... அண்ணன்காரன் கையில கத்திக்குத்து வாங்கிப் போறான்... அதுக்குப் பதறாம... அடுத்தவனுக்குப் பதறுறே...?"

"சொல்லுடி... சும்மா சும்மா சீண்டிக்கிட்டு அவனைத்தான் பாத்துட்டேனே... ராம்கியை பாக்கலை அதான் கேட்டேன்..."

"ம்... அவங்க ரெண்டு பேரும் அடிச்சிக்கலை..."

"அப்பா...."

"எதுக்குடி இப்ப அப்பாவைக் கூப்பிடுறே?"

"அவங்க சண்டை போடலையில்ல அதான்... ஆமா அப்புறம் எப்படி அடி..."

"அதுவா... உங்கண்ணனும் ராம்கியும் காலேசுக்கு வெளியே பேசிக்கிட்டு இருக்கும் போது நாலஞ்சு பேரு வந்து உங்கண்ணனை அடிச்சிருக்காங்க... அப்ப ராம்கி அவங்களை தடுத்து அடிச்சிருக்கான்... அந்த சண்டையில அவனுக்கு மண்டை உடஞ்சி போச்சு... உங்க அண்ணனுக்கு கையில கத்திக்குத்து..."

"அய்யய்யோ.. காயம் பலமா பட்டிருக்காமா?"

"யாருக்கு...அண்ணனுக்கா... அத்தானுக்கா..."

"சீ.... சும்மா சீண்டாதிங்கடி..."

"ஏண்டி... அவ அண்ணனைப் பத்தி கவலைப்படுறவளா இருந்தா பாத்ததும் சைக்கிளை நிறுத்தி கேட்டிட்டு வந்திருக்க மாட்டாளா? இந்தமான் அந்தமானைக் கேக்குது..."

"அதான் தெரியுமே... நல்ல காயம்தான்... கல்லைவிட்டு எறிஞ்சிட்டாங்களாம்... காலேசுல உங்கண்ணனை பதினஞ்சு நாள் சஸ்பெண்ட் பண்ணியிருக்காங்களாம்... ராம்கியை..."

"ராம்கியை...?"

"ஏண்டி பதறுறே... இவ்வளவு சொன்னவ அதை சொல்ல மாட்டேனா.... அம்மாவை என்னைக்கு கூட்டிக்கிட்டு வாறானோ அன்னைக்கு வகுப்புக்கு போகலாம்ன்னு சொல்லியிருக்காங்களாம்... அவங்க புரபஸரும் தமிழய்யாவும் அவனுக்கு சப்போர்ட்டா பேசினாங்களாம்... இப்பதான் அவங்க கிளாஸ் மல்லிகா சொன்னா... பாத்துடி அவ அவனப் பத்தி டீடெயிலா வச்சிருக்கா, எனக்கென்னமோ அவ உனக்கு எதிரியா வந்துடப்போறான்னு நினைக்கிறேன்... ராம்கிக்கு அடிபட்டிருச்சுன்னு புலம்புறான்னா பாறேன்..."

"ம்.... அவ புராணம் இப்ப எதுக்கு... ஐயாகிட்ட பேசி பிரின்ஸ்பாலைப் பார்த்து ராம்கியை மன்னிச்சு விடச் சொல்லலாமாடி..."

"ஏண்டி உனக்கு இந்த வேலை.... எல்லாம் நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்கு... நாளைக்கு அவங்க அம்மாவை கூட்டிக்கிட்டு வந்தா பிரச்சினை முடிந்தது... நீ போயி பேசி உனக்கும் அவனுக்கும் என்ன அப்படின்னு புரபஸர்ஸ் ஆராய்ச்சி பண்ண... பசங்க டாய்லெட் சுவரெல்லாம் உங்களைப் பத்தி கரியால கவிதை எழுத...  உங்கண்ணன் அடுத்த சண்டைக்கு தயராக நீயே எடுத்துக் கொடுக்குறியா.... சும்மா இரு..."

"இல்லடி எனக்கு ராமைப் பார்க்கணுமின்னு..."

"என்னடி ராமகிருஷ்ணன் ராம்கியானார்.... இப்ப ராம் ஆயிட்டாரா... அதுசரி... ஸ்பீடாத்தான் போகுது... ம்.... புவனாராம் நல்லாத்தாண்டி இருக்கு... அவனுக்கு ஒண்ணுமில்ல... நாளைக்கு காலையில வருவான்... அப்ப பாத்துக்கலாம்... இப்ப கிளாஸ்க்குப் போகலாம்.... வாங்கடி..."


"என்னடா... என்னாச்சு...?" பதறினாள் சீதா.

"சைக்கிள்ல ஒரு பைக்குக்காரன் மோதிட்டாங்க்கா..."

"ஆத்தாடி... வேற எங்கயும் அடிபட்டிருக்கா... காமி பாப்போம்..."

"இல்லக்கா... மோதினதும் பாலன்ஸ் பண்ணி நிக்கப் பாத்து கீழே விழுந்தா கல்லுக்கிடந்து குத்திப்புடுச்சு... அதான் வேற ஒண்ணுமில்ல... அந்த ஆளு மேலயும் தப்பில்லை... அப்புறம் அவரே ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டுப் போயி காமிச்சு விட்டார்."

"படாத எடத்துல அடி பட்டிருந்தா என்னாகிறது.... ஏண்டா பாத்துப் போப்படாதா?... முகமே வீங்கியிருக்க மாதிரி இருக்கு... வலி அதிகமா இருக்காடா...?" புலம்பினாள்.

"இல்லக்கா... சின்னக் காயம்தான்... பயப்படாதே... ஆமா... அம்மா எங்க...?"

"மாடு மேய்க்கப் போயிருச்சு.... நீ சாப்டியா..?"

"எனக்கு சாப்பாடு வேண்டாம்.... எதுக்கு அது போச்சு... நீ போகலியா... வெயில்ல அலஞ்சிட்டு வந்து தலவலிக்கிதுன்னு கெடக்கவா.."

"ம்... கம்மாக்குள்ள மேய்ப்பாங்க... முனியய்யா கோயில் இருக்கு... அதான் ரெண்டு நாளா அது போகுது.. கொஞ்ச நேரம் தூங்கு... போ..."

"சரி... அம்மா வந்தா உளறி வக்காதே... லேசான அடிதானாம்ன்னு சொல்லு..." என்றபடி படுத்தவன் வலி கொடுத்த அசதியில் உறங்கிப்போனான்...

"அடி ஆத்தி... இப்படி அடிபட்டு வந்து படுத்துக்கெடக்கானே...? ஆத்தா மாரி... உன்னய நல்லாத்தானே கும்பிட்டுக்கிட்டுக் கெடக்கேன்... எம்புள்ளகளுக்கு மட்டும் ஏன் இப்படி கசுட்டத்தைக் கொடுக்கிறே...?"

"அம்மா... சின்ன அடிதான்... பைக்காரன் தெரியாம  மோதிட்டானாம்..."

"அந்த கட்டையில போறவன் கண்ணை என்ன பின்னாலயா வச்சிக்கிட்டு வந்தான்... மொட்டையாப் போவான்... நாசமத்துப்போவான்..."

அம்மாவின் கத்தல் கேட்டு முழுத்தவன், "ஐயோ அம்மா எதுக்கு கத்துறீங்க.... சின்ன அடி... எதிர்பாராம நடந்திருச்சு... என்ன பண்றது...விடுங்க.... எனக்கு வலியெல்லாம் இல்ல சும்மா மருந்து வச்சிக் கட்டினாங்க.. நாளைக்கு கட்டை அவுத்துடுவாங்க... ஒண்ணுமில்லேம்மா"

"ஏம்மனசு கெடந்து அடிக்கிறது உங்களுக்கு எங்க தெரியும்... இதே அடி பலமாப் பட்டிருந்தா... ம்... ஆத்தா மாரி சீக்கிரம் குணமாக்கிவிடு..." என்று கோவிலை நோக்கிக்  கும்பிட்டாள்.

றுநாள் எப்போது விடியும் ராம்கியைப் பார்ப்போம் என்று புவனாவும் சொன்னபடி வைரவண்ணன் அம்மாவை ரெடிபண்ணி விடுவாரா என்றும் ராம்கியும் தவிப்போடு காத்திருக்க, அன்றைய இரவு இருவருக்கும் தூக்கமில்ல இரவாகக் கழிந்து கவலையுடன் விடிந்தது. 

(சனிக்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

1 கருத்து:

  1. பெயரில்லா18/9/13, 3:27 AM

    வணக்கம்

    கதையின் கரு அருமை கதை பின்னிய விதமும் அருமை வாழ்த்துக்கள் குமார் (அண்ணா)

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி