முகம் மறைக்கும் தாடி, கந்தல் ஆடை, உடல் போர்த்திய அழுக்கு, பக்கத்தில் போனாலே துர்வாடை. எல்லா ஊர் பிளாட்பாரங்களிலும் - பஸ் ஸ்டாண்டுகளிலும் இப்படிப்பட்ட ஆசாமிகளைப் பார்க்க முடியும். நம்மையெல்லாம் அருவருப்புடன் ஒதுங்கிச் செல்ல வைக்கும் இவர்கள்தான் மணிமாறனைப் பொறுத்தவரை செல்லக் குழந்தைகள்.
இப்படிப்பட்டவர்களுக்கு முடி வெட்டி, குளிப்பாட்டி, ஆடைகள் தந்து அரவணைப்பதையே வாழ்க்கையாக்கிக் கொண்டிருக்கிறார் இந்த 27 வயது இளைஞர்.
பழனி புது பஸ் ஸ்டாண்ட்... ஊரே பார்த்திருக்க, மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு படாத பாடுபட்டு ஷேவ் செய்து கொண்டிருக்கிறார் மணிமாறன்.
‘‘யாருடா நீ...’’
‘‘எம் பேரு மணிமாறன். திருவண்ணாமலையில இருந்து வர்றேன். என்னைய உங்க புள்ளையப் போல நெனச்சுக்குங்க!’’ - எத்தனை முறை பதில் சொன்னாலும், நிமிடத்துக்கொரு முறை அவரிடமிருந்து ‘‘யாருடா நீ’’ கிளம்பிக்கொண்டே இருக்கிறது.
அவரின் திமிறல், விலகல், தாக்குதல் என அத்தனையையும் சமாளித்து கட்டிங், ஷேவிங், குளியல் முடித்தபோது, அடையாளமே தெரியாத ஒரு பர்சனாலிட்டியாகிப் போயிருந்தார் அந்த ‘யாருடா நீ’.
‘‘பாவம் சார், அவர் பேரு கூட அவருக்குத் தெரியல. ஊருக்கு ஒரு மனுஷன் இப்படித் திரியிறான். இவங்கல்லாம் யாரு, எந்த ஊரு, எப்படி வாழ்ந்தாங்க... ஒண்ணும் தெரியாது. உங்களையும் என்னையும் விட சொகுசா காரு பங்களான்னு இவர் வாழ்ந்திருக்கலாம்... யாரு கண்டா? சில்லறை போடுறதையும் ‘சீ போ’ன்னு விரட்டுறதையும் தாண்டி இவங்களுக்கு என்ன செய்ய முடியும்னு ஒரு நாள் யோசிச்சேன். அதுதான் இங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு!’’ என்கிற மணிமாறன், திருவண்ணாமலை பக்கம் தலையாம்பள்ளம் என்ற கிராமத்தில் வசிக்கிறார். ‘‘அங்க இருந்து பழனி வரைக்கும் வந்திருக்கீங்களே’’ என்றால், ‘‘நீங்க வேற... ஒடிசா வரைக்கும் போறேன் சார்’’ என்று ஸ்தம்பிக்க வைக்கிறார்.
‘‘எனக்கும் ஏழைக் குடும்பம்தான். அப்பா, அம்மாவுக்கு கூலி வேலை. கஷ்டத்துல வளருற பசங்களுக்கு ரெண்டு விதமான எண்ணம் வரும்... ‘இனிமே கஷ்டப்படவே கூடாது. நிறைய சம்பாதிச்சு சேர்த்து வைக்கணும்’ங்கிறது ஒண்ணு... ‘கஷ்டம்னா இப்படியா இருக்கும்? இதை யாருக்கும் வரவிடவே கூடாது’ங்கறது இன்னொண்ணு. நான் இதுல ரெண்டாவது வகை. 16 வயசுல முதல்முதலா வேலை பார்த்து முதல் சம்பளத்துல 50 பேருக்கு சாப்பாட்டுப் பொட்டலம் வாங்கிக் கொடுத்தேன்.
‘சேவை செய்ய நிறைய பணம் தேவையில்லை. நேரமும் மனசும்தான் தேவை’ன்னு அப்புறம்தான் தெரிஞ்சது. அதனால அதுக்கு ஏத்த மாதிரி என் தொழிலை அமைச்சுக்கிட்டேன். சனி, ஞாயிறுல திருப்பூர்ல இருந்து துணிகளைக் கொண்டு வந்து கடைகள்ல விக்கிறதுதான் இப்ப என் தொழில். மத்த நேரமெல்லாம் ரோட்டோரத்துல உள்ள மனுஷங்களுக்காகத்தான். மாசம் தவறாம வந்து அவங்களை சுத்தமாக்கி, தோற்றத்தை மாத்தி திரும்ப அங்கேயே விட்டுட்டுப் போறேன்’’ என்கிற மணிமாறன், இதற்காகவே தனியாக படித்திருக்கிறாராம்.
‘‘பல பேர் தொழுநோயாளிகளா இருப்பாங்க. கல்லடி பட்டோ, தவறி விழுந்தோ பெரிய காயங்களோட இருப்பாங்க. முறையான சிகிச்சை இல்லாம மோசமான கண்டிஷன்ல இருப்பாங்க. சுத்தம் செய்யிறதுல எனக்கு அருவருப்பு இல்ல. ஆனா அதை முறையா செய்யத் தெரியணுமே... நாம என்ன டாக்டரா, நர்ஸா? அதுக்காகத்தான் பெங்களூருவுல ஒரு கோர்ஸ் படிச்சேன்.
எனக்கு இது ரொம்ப சாதாரணமான விஷயம்தான். ஆனா, சுத்தியிருக்கறவங்களுக்கு இது பெருசா படுது. ஒண்ணு, ‘பைத்தியக்காரன்’னு காதுபடவே பேசுவாங்க. இல்லாட்டி, ‘ஆஹா... ஓஹோ’ன்னு பாராட்டுவாங்க. நான் ரெண்டுத்தையும் ஒரே மாதிரிதான் பார்க்கறேன். ஆனாலும், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இதுக்காக என்னைப் பாராட்டி சான்றிதழ் கொடுத்ததை மறக்கவே முடியாது.
இப்ப என்னைப் போலவே நல்லது செய்யணும்ங்கிற எண்ணத்தோட இன்னும் ஆறு பேர் என் கூட சேர்ந்திருக்காங்கன்னா, அதுக்கு இந்த அங்கீகாரம்தான் காரணம். அவங்களோட சேர்ந்து 2009ல ‘உலக மக்கள் சேவை மையம்’ ஒரு தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி பதிவு செஞ்சேன். அதன் மூலமா தொடர்புகள் விரிஞ்சிருக்கு. கர்நாடகம், குஜராத், டெல்லி, அசாம், ஒடிஷா, பீகார், உத்தரப் பிரதேசம்னு தகவல் வர்ற இடத்துக்கெல்லாம் போறோம். சில இடங்கள்ல நாங்க ஒரு முறை போனதுமே, ‘இனிமே நாங்க பார்த்துக்கறோம் தம்பி’ன்னு பக்கத்துல உள்ள ஸ்கூல், ஹாஸ்பிடல்னு யாராவது முன்வர்றாங்க. ஒரு விளக்கை ஏத்தி வச்ச சந்தோஷம் பிறக்குது இதுல’’ என்கிற மணிமாறன் இந்தச் சேவை வேகத்தில் திருமணம் பற்றிக்கூட இதுவரை சிந்திக்கவில்லையாம்.
"நாம நினைக்கிறோம், இவங்கல்லாம் பைத்தியக்காரங்க, பிச்சைக்காரங்கன்னு. ஆனா, இவங்கள்ல பல ஞானிகளை நான் சந்திச்சிருக்கேன். அழுக்கு உடம்புல இருந்து ஜவ்வாது வாசனை வந்ததைப் பார்த்து மிரண்டிருக்கேன். ‘என் தோற்றம் இப்படியே இருக்கட்டும்’னு இடி இடிச்ச மாதிரி சொன்னவங்ககிட்ட பதில் பேசாம திரும்பியிருக்கேன். இவங்களோட புழங்குற புண்ணியம் யாருக்குக் கிடைக்கும்? இதுவே எனக்குப் போதும்’’ - புன்னகை துளிர்க்கிறது மணிமாறனிடம்!
- பா.கணேசன்
மின்னஞ்சலிலில் வந்தது...
மணிமாறனுக்கு வாழ்த்துக்கள்.
எழுதியவருக்கும் அனுபியவருக்கும் நன்றி.
மின்னஞ்சலிலில் வந்தது...
மணிமாறனுக்கு வாழ்த்துக்கள்.
எழுதியவருக்கும் அனுபியவருக்கும் நன்றி.
-'பரிவை' சே.குமார்
// நேரமும் மனசும்தான் தேவை //
பதிலளிநீக்குஅற்புத எண்ணங்கள்...
மணிமாறன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குபொதுவாகவே இது மாதிரி சேவை மனப்பான்மை,தன்னலம் பாரா தொண்டு மனப்பான்மை,இயலாதவர்களுக்கு உதவி செய்யும் இரக்க குணம், பணிவு,பண்பு ,அடக்கம் போன்ற அனைத்து பண்புகளும் ஒருசேர அமைந்தவர்கள் உலகத்தில் ஆங்காங்கே சிலர் உண்டு.. இவர்களுக்கு புத்தன், இயேசு, காந்தி என தனித்தனியா பெயர் வைக்காமல் அனைத்தையும் உள்ளடக்கி ஒரே பெயராக 'மணிமாறன்' என்றே அழைக்கப்படுகிறார்கள்..சில இடங்களில் ஆங்கிலத்தில் 'manimaran ' என்று கூட சொல்வார்கள்..
பாராட்டுக்கள்,மணிமாறனுக்கு!பகிர்ந்த உங்களுக்கு நன்றிகள்!
பதிலளிநீக்கு