வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

சினிமா விமர்சனம் : கொட்டுக்காளி

கொட்டுக்காளி-

இந்தப் படம் நல்லாயில்லை என்றும், இது விருதுக்கென எடுக்கப்பட்ட படம் இதை எப்படி வெகுஜன சினிமாக்களுடன் களமிறக்கலாம் என்றும் ஆளாளுக்குப் பேசிக் கொண்டிருக்கும் போது விகடன் மிகச் சிறப்பானதொரு விமர்சனத்தை அளித்திருக்கிறது. இந்தக் கதை பெரும்பாலும் நகர மக்களிடம் எடுபடாமல்தான் போகும். அவர்களுக்கு மருந்து எடுத்தல், விபூதி போடுதல் போன்றவற்றில் நம்பிக்கை இருப்பதில்லை. இதைப் பற்றி யோசிப்பதும் இல்லை. இந்த வாழ்க்கையை வாழ்ந்த, அனுபவித்த மக்களிடம் மட்டும் இந்தப்படம் எடுபடும். இவ்வளவு தூரம் மருந்தெடுக்கவோ துணூறு போடவோ போவார்களா என்றெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை. எங்கள் ஊரில் இருந்து ராமநாதபுரத்துக்கு அருகில் வரை சென்று வந்தவர்களும் உண்டு. இப்படியான வாழ்க்கை இன்னமும் தென் தமிழகக் கிராமங்களில் உயிர்ப்போடு இருந்து கொண்டுதான் இருக்கிறது.


இந்தப் படத்தில் சேவல் கொண்டு போக வேண்டும் என்றும் சாமியார் அதை பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னே அறுத்து வீசுவார் என்று காட்டப்படுகிறது. இத்தனை கோழி வேண்டும், அதில் கறுப்பு இத்தனை, வெள்ளை இத்தனை இருக்க வேண்டும் எனக் கேட்டு, பூஜையின் போது  கோழியின் கழுத்தைப் பல்லால் கடித்து ரத்தம் குடித்துப் பேயோட்டிய சாமியாரை நான் நேரடியாகவே பார்த்திருக்கிறேன். மாடு மேய்க்கப் போய் அல்லது தண்ணி எடுக்கப் போய் வந்தபின் ஒரு ஓரமாக உட்கார்ந்து உத்தரத்தைப் பார்த்தாலோ நிலம் பார்த்தாலோ பேய்க் கோளாறெனத் துணூறு போட உள்ளூர்ச் சாமியாடிகளை அழைத்து வந்த நிகழ்வுகளை கண்டு வாழ்ந்தவன் என்பதால் கொட்டுக்காளி எனக்குப் பிடித்துத்தான் இருந்தது.

எங்கள் பக்கம் பேய் பிடித்திருந்தால் முதலில் ஊரில் இருக்கும் சாமியாடிகளிடம் விபூதி போட்டுப் பார்ப்பார்கள், அருகில் இருக்கும் முனியய்யா கோவிலுக்குக் கூட்டிச் சென்று பூசாரியிடம் விபூதி போடுவார்கள். இதில் சரியாகவில்லை என்றால் அந்தப் பகுதியில் பேய் விரட்டும் சாமியாரிடம், பிரபலமான குறி, கோடாங்கிகளிடம் கூட்டிச் சென்று காட்டி பேயோட்டப் பார்ப்பார்கள். அவர்களும் மாண்ட கன்னி மட்டும் பிடிக்கலைப்பா அது கூட முனியெல்லாம் சேர்ந்து பிடித்திருக்கிறது என்று சொல்லி விபூதி போடுவார்கள். இதில் சரியானதும் உண்டு இவர்களை விட இன்னும் பெரிய ஆட்களிடமெல்லாம் போய் சரியாகாமல் இருப்பவர்களும் உண்டு.

அதேமாதிரி மருந்து மாயம் வைச்சிருப்பாங்களோ... இப்படி இருக்காளே... எனச் சொல்லி மருந்து எடுப்பவர்களிடம் கூட்டிச் செல்வார்கள். அவர்கள் ஊதி மருந்தெடுப்பார்கள். அவர்கள் எப்படி எடுப்பார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும் என்றாலும் அது ஒரு நம்பிக்கை. அப்படியான ஒரு கதைக்களம்தான் கொட்டுக்காளி. மதுரைப் பக்கம் ஒரு கிராமத்தில் இருக்கும் மீனா - அன்னா பென் - என்ற பெண்ணுக்குப் பேய் பிடித்திருப்பதாகவும், யாரோ மருந்து வச்சிருப்பார்கள் என்றும் முடிவு செய்து சாமியாரிடம் கூட்டிச் செல்லும் பயணத்தில் நடக்கும் நிகழ்வுகளே கதை.

உண்மையைச் சொல்லப் போனால் மீனாவுக்குப் பேய், மருந்து என்பதெல்லாம் உண்மையான காரணம் ஊருக்குத் தெரியாமல் இருக்க குடும்பத்து ஆட்கள், குறிப்பாக சூரியின் குடும்பத்தார் பேசும் பேச்சாகத்தான் தெரிகிறது, காரணம் அவள் படிக்கப் போன இடத்தில் வேறு சாதிப் பையனை விரும்புவாள். அதிலிருந்து அவளை மீட்டெடுக்கத்தான் சாமியாரிடம் செல்வார்கள். இங்கே சாதிதான் பிரதானமாகிறது, அவள் எப்படி இன்னொரு சாதிக்காரனை விரும்பலாம் என்ற ஆணவமே முன் நிற்கிறது.

மீனாவைக் கட்டிக் கொள்ள இருக்கும் முறை மாப்பிள்ளை பாண்டி - சூரி - அவள் படிக்கட்டும் எனச் சொல்லிவிட்டு வெளியூர் சென்றிருக்கிறார். அவர் திரும்பி வந்திருக்கும் போதுதான் இந்தப் பிரச்சினை. அவருக்குத் தொண்டை கட்டியிருக்கிறது. அதற்காக அவருக்கு சுண்ணாம்புப் பத்துப் போடப்பட்டுள்ளது. அன்றைய பயணத்தில், கோபப்பட்டு ஆட்டம் போட்ட போது கூட அது கொஞ்சம் கூட கொட்டிப் போகாமல் கெட்டியாகப் பிடித்திருக்கிறது. நல்ல சுண்ணாம்பு போல.

பாண்டியின் குணம் என்ன என்பதை ஆரம்பக் காட்சியிலேயே காட்டி விடுகிறார்கள். மீனாவைப் பற்றி தங்கை தப்பாகப் பேசும் போது அடிப்பதுடன் அங்கு வரும் உறவுகளையும் அடிக்கும் போது இவன் கோபம் வந்தால் முரடன், மூடன் எனக் காட்டி விடுகிறார்கள். அதேபோல் கல்லில் கட்டப்பட்டிருக்கும் சேவல் இழுத்து இழுத்து அவிழ்த்துக் கொள்ளப் பார்க்கும் போது வெறித்த பார்வையோடு உட்கார்ந்திருக்கும் மீனாவின் நிலையும் இதுதான். இந்தப் பிடிக்குள் இருந்து அவளால் நழுவ முடியவில்லை என்பதையும் சொல்லாமல் சொல்லி விடுகிறார்கள்.

ஒரு நீண்ட பயணம்... ஆட்டோ, பைக்குகள் என ரோடு, காடு, முள்ளு மொடலு எனப் பயணிக்கிறது. கிராமத்து மனிதர்களின் குலதெய்வங்கள் பெரும்பாலும் சிறுதெய்வங்களாகத்தான் இருக்கும்... காளி, கருப்பன், முனி என. இவர்களின் குலசாமி இருப்பதென்னவோ முள் சூழ்ந்த பாதையில் பயணித்து போனால் ஒரு காட்டுக்குள்.  அங்கே வேல்கள் மட்டுமே இருக்கின்றன. அந்த வேல் அம்மனா..? ஐயாவா...? கும்பிடுகிறார்கள். வீட்டுக்கு விலக்கான தங்கைக்காரி ஒருத்தி கோவிலுக்கு வராமல் ஆட்டோ நிறுத்திய இடத்தில் நின்று கொள்கிறாள். மீனா அங்கே நீண்ட நேரம் வேண்டுகிறாள். அவள் அப்படியென்ன வேண்டியிருக்கப் போகிறாள். இந்தச் சாதி வெறியும் ஆணாதிக்கமும் நிறைந்த மனிதர்களிடமிருந்து என்னை மீட்டு என் காதலனிடம் சேர்த்து வை என்றுதானே வேண்டியிருக்கக் கூடும்.


சாமி கும்பிட்டு ஆட்டோவைத் திருப்பிக் கூட பயணிக்க முடியாத நிலையில் பின்புறமாகவே எவ்வளவு தூரம் போக என ஆட்டோவை அப்படியே தூக்கித் திருப்புகிறார்கள். அப்போது கூட அவள் ஆட்டோவில் இருந்து இறங்கவில்லை, என்னைத் தூக்கித்தான்டா சுமக்கணும். நானா இறங்கினால் மட்டுமே நீங்கள் வெற்றி பெற்றதாக கொண்டாடிக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டு இருந்திருக்கக் கூடும். இந்தக் காட்சியில் ஆட்டோவைத் தூக்குவது நமக்குச் சிரிப்பாக இருந்தாலும் இப்படியும் பல கோவில்கள் இருக்கின்றன. பாதையை மாற்றாதே.... கல் முள்ளில் நடந்து வா... எனக்குப் படைத்ததை வீட்டுக்கு எடுத்துச் செல்லாதே, உன் குடும்பம் தவிர வேறு யாருக்கும் கொடுக்காதே என்றெல்லாம் சொல்லக் கூடிய, சொல்லியிருப்பதாக முன்னோர் சொல்லிச் சென்ற குலசாமிகளும் வீட்டுச்சாமிகளும் இங்கே நிறையவே உண்டு. இந்தக் காட்சியில் சூரி கூட பைக்கின் ஸ்டாண்டை எடுக்காமலயே சுற்றித் திருப்பியிருப்பார். 

கிராமத்து ரோடுகளில் ஐஸ்காரன், பஞ்சு மிட்டாய் விற்பவன், பிளாஸ்டிக் குடம் விற்பவன், பழைய ஈயம் பித்தளைக்குப் பேரிச்சம்பழம் விற்பவன். திருஷ்டி பொம்மைகள் கயிறுகள் விற்பவன், புடவை வியாபாரி, உப்பு வியாபாரி, பழைய பாத்திரங்களின் ஓட்டை அடைப்பவன் என வாகனங்கள் பயணப்பட்டுக் கொண்டு இருந்தது ஒரு காலம். இப்போதெல்லாம் கிராமங்களில் மனிதர்களும் மாடுகளும் குறிப்பாக விவசாயமும் அத்துப்போன நிலையில் இதெல்லாம் காணாமலே போய்விட்டது என்றாலும் கொட்டுக்காளியில் சாமியாரைத் தேடிச் செல்லும் பயணத்தில் இயக்குநர் பிளாஸ்டிக் குடங்களைக் கட்டி, திருஷ்டிக் கயிறுகளைச் சுமந்து செல்லும் வண்டிகளைக் காட்டியிருப்பார். அந்த வண்டிகளின் பின்னே கேமரா பயணிக்கும் போது நாமும் பால்யத்துக்குப் போய்த் திரும்பி வருவோம்.

மதுரைப் பக்கத்து தாய் மாமன் சீர் செல்வதையும் நேர்த்தியாக கதையோடு காட்டியிருப்பார். அது கூட தங்களின் பகட்டைக் காட்டும் விதமான ஒரு நிகழ்வுதான் என்பதையும், எத்தனை வண்டி வந்தாலும் ரோட்டை அடைத்துக் கெத்துக் காட்டிச் செல்வதையே இம்மக்கள் விரும்புவார்கள் என்பதையும் சொல்லாமல் சொல்லியிருக்கும் அற்புதமான காட்சி இது. அதற்கு அடுத்த காட்சியில் மீனா சடங்கு வீட்டில் கேட்ட பாடலை முணுமுணுக்க ஆரம்பிப்பாள். அவளுக்கு முன்பு பாண்டியின் தங்கை மகன் அதே பாடலைப் பாடிக் கொண்டுதான் வருவான். அப்போதெல்லாம் ஆட்டோவில் டிரைவருக்கு அருகில் அமர்ந்திருக்கும் பாண்டி சும்மாதான் வருவான். இவள் பாட ஆரம்பித்ததும் அவனின் ஆண் என்ற அகங்காரக் குணம் வெளிவரும். அவனை நினைத்துப் பாடுறியாடி என எகிறி எகிறி அடிப்பான். தொண்டை கட்டிப் பேச முடியாதவன் அந்தக் கரகரப்பில் தன் கோபத்தை அழுத்தமாய் இறக்கி, அவளை, அவளின் அம்மாவை, தடுக்க வந்த தங்கைகளை, மாமனை என எல்லாரையும் அடித்துத் துவம்சம் செய்வான். அப்பாவைக் கூட ஒரு கெட்டவார்த்தை சொல்லித் திட்டுவான். அவனின் ஆதிக்கமே அந்த இடத்தில் தலைமையாய் நிற்கும் என்றாலும் அந்தப் பிரச்சனையின் ஊடே அவனுக்கு ஒன்று பிடிபட ஆரம்பித்திருக்கும் அது அவளுக்குப் பேய் பிடிக்கவில்லை என்பதுதான்.

அத்தனை அடியையும் வாங்கிக் கொண்டு பேசாமல் அமர்ந்திருக்கும் மீனா, மகனை மறிக்கப் போய் கெட்ட வார்த்தையால் திட்டு வாங்கும் அப்பா, இந்தக் கூத்தில் என்னோட மாலையை அறுத்துட்டானுங்க எனப் புலம்பும் ஆட்டோ டிரைவர் என கதை மாறிமாறி நகரும் போதிலும் அந்தப் பையனைப் பார்த்து மீனா மெல்லச் சிரிப்பாள். அது கூட இவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் ஆடட்டும் அடிக்கட்டும் சாமியார் முன்னால் நிப்பாட்டட்டும் நான் எப்படியும் என்னவனைக் கைபிடிப்பேன் என்பதாகத்தான் இருக்கும்.

இங்கே ஆண் ஒருவன் தெரு ஓரத்திலோ பேருந்து நிலையத்திலோ வயல் வரப்பிலோ... எங்கே என்றாலும் வேஷ்டியைத் தூக்கிக் கொண்டோ, பேண்ட் ஜிப்பைத் திறந்து கொண்டோ ஓரமாக நின்று சிறுநீர் கழித்து விடமுடிகிறது. ஆனால் பெண்...? அப்படி ஒரு பெண் ஓரமாக நின்றால் இந்தச் சமூகம் அவளை என்ன திட்டுத்திட்டும். அப்படித்தான் இந்தப் படத்தில் வீட்டுக்குத் தூரமான பெண், பேடு மாற்ற வேண்டுமென இறங்கி மரங்களுக்கு இடையே நடந்து ரொம்பத் தூரம் போய் இங்கு யாரும் இருக்கமாட்டார்கள் என்ற முடிவுக்கு வந்த பின்னே மாற்றுகிறாள். அதே நேரம் பாண்டியோ மற்றவர்களோ ரோட்டின் ஓரத்திலேயே வேஷ்டியைத் தூக்கிக் கொண்டு அமர்ந்து விடுகிறார்கள், இந்த நிலை எப்போதும் மாறாது என்றாலும் இப்படி ஒரு காட்சியை, இன்றைய அவலநிலையை பயணத்தின் போது வைக்க நினைத்த இயக்குநருக்கு வாழ்த்துகள்.

ரோட்டை  மறித்து நிற்கும் மாடு... இவர்கள் அதைத் தாண்டிப் போக வேண்டும் என்றால் அதுதான் வழி விடவேண்டும். அதை விரட்டப் போனால் முட்ட வருகிறது. பக்கத்துத் தோட்டத்து ஆளிடம் உன்னோட மாடா என ஒருவன் போய் விசாரிக்க, அவன் ஆமெனச் சொல்லி, மகளைத் திட்டிப் போய் பிடித்து வரச் சொல்கிறான். அந்தச் சிறுமி ஓடி வந்து மூக்கணாங்கயிறைப் பிடித்ததும் அவள் பின்னாலயே போகும் மாட்டிடம் செல்லமாய்த் திட்டியபடி அந்தச் சிறுமி பயணிப்பது கவிதை. நாட்டு மாடுகள் மூர்க்கமானவைதான் பழகிட்டா பால் குடிக்கிற பிள்ளையிடம் கூட விளையாடும் என்பதைக் காட்டும் காட்சியாகினும் மீனா கூட முரண்டு பிடிக்கத்தான் செய்கிறாள் என்றாலும் பாண்டியின் தங்கை மகனிடம் சிநேகமாய் இருக்கத்தானே செய்கிறாள் என்பதைக் காட்டும் காட்சிப்படுத்துதல் என்று கூட வைத்துக் கொள்ளலாம்.


இந்தப் பயணத்தில் டாஸ்மாக்கைத் தேடிப் போதல் என்பது இன்றைய நிலையில் தமிழகத்தில் சரக்கு என்பது வாழ்வியலோடு ஒன்றாகிப் போனதையே காட்டுகிறது. அதேபோல் கடையில் டீ சாப்பிட நிற்கும் போது பையன் சேவலுக்கு இரையாக அரிசியை அள்ளி வந்து ஆட்டோவில் வைத்துக் கொடுப்பது, மயக்க நிலையில் இருக்கும் சேவலுக்குத் தண்ணி அடித்து காதில் சூடு பார்த்துக் கைலியை அவிழ்த்து வீசி விடுவது, அண்ணன் மீனாவைக் கட்டக்கூடாது எனச் சண்டை போடும் தங்கைகள் அவன் அவளை அடிக்கும் போது தடுப்பது,  நாளைக்கே ஒரு பிள்ளையைப் பெத்துப் போட்டா நாங்க கொஞ்சமாட்டோமாக்கும் எனத் தங்கள் அத்தையிடம் சொல்வது என கிராமத்து மனிதர்களுக்கு உரிய வாஞ்சையையும் கோபத்தையும் மிக அழகாகக் காட்டியிருக்கிறார்கள்.

இப்பவும் கிராமங்களுக்குப் பயணப்பட்டால் போற வழியில் இருக்கும் ஒரு பெட்டிக்கடையில் பெட்ரோல் போட்டுக் கொள்ள முடியும் என நம்பிப் போகலாம். அதேபோல் பூஜாரியோ சாதகம் பார்ப்பவரோ இருந்தால் அந்த ஊரில் நுழைகையில் ஒரு கடையில் அவர் என்னென்ன கேட்பாரோ அதெல்லாம் வைத்து விற்பார்கள் அங்கயே வாங்கிக் கொள்ளலாம் என்றும் தைரியமாகப் போகலாம், அதையும் அழகாகக் காட்சிப்படுத்தியிருப்பார்கள். இந்தப் பயணம் ஆரம்பம் முதல் இறுதிவரை சுவராஸ்யமாய்த்தான் இருந்தது. அதுவும் இப்படி ஒரு பயணத்தை அனுபவித்தோ அல்லது இப்படியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்தோ இருந்தால் கண்டிப்பாக கொட்டுக்காளி மனம் கவரும்.

இறுதிக் காட்சியில் தங்களுக்கு முன் ஒரு பெண்ணுக்கு மருந்து எடுப்பதைப் பார்த்ததும், அடுத்தவனைக் காதலிப்பதை விரும்பாத பாண்டி, இங்கே சாமியார் அந்தப் பெண்ணை எங்கெங்கெல்லாமோ தொட்டுச் செய்யும் மந்திரங்களைப் பார்த்ததும் பின் வாங்குவதாய்த் தோன்றினாலும் ஆட்டோவில் அவள் பாட்டுப்பாடும் போதே அவளுக்குப் பேய் பிடிக்கவில்லை என்ற எண்ணத்திற்கு வந்தவன் இதற்குமேல் அவளுக்கு பேய் ஓட்டி என்னாகப் போகிறது என்று நினைத்து ஒதுங்கியிருக்கலாம் அல்லது அவனது ஆணாதிக்கப் பேய் அந்த இடத்தில் மடிந்து மனிதனாக மாறித் தன் தந்தையின், தங்கையின் அழைப்பிற்கு வராமல் நின்றிருக்கலாம். முடிவைப் பார்வையாளன் பார்வைக்கே விடும் சிறுகதையே நல்ல கதை என்று சொல்வார்கள்... அப்படித்தான் இதிலும் முடிவு உங்கள் கையில் என்பதாய் முடித்திருக்கிறார்கள். முடிவை நாம் எப்படி வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம். இதுவும் ஒரு வித்தியாசமான சிந்தனையே என்றாலும் பலரால் இதை ஏற்றுக் கொள்ள முடியாதுதான், நாமெல்லாம் நல்லதோ கெட்டதோ ஏதோ ஒரு முடிவைப் பார்த்தே பழகிவிட்டோம். சற்று வித்தியாசமாய் பாண்டியின் பார்வையில் யோசித்துப் பார்ப்போமே...

மீனாவின் பெற்றோர் மகள் இப்படி ஆணாதிக்கம் நிறைந்த குடும்பத்தில் மருமகளாய் போவதைவிட, விருப்பப்பட்டவனுடன் போவதே மேல் என நினைத்துக் கொண்டு வேண்டா வெறுப்பாகத்தான் இந்தப் பயணத்திற்கு இசைகிறார்கள் என்பதை அவர்களின் கலங்கிய கண்ணும், இறுகிய முகமும் படம் நெடுக நமக்குக் காட்டிக் கொண்டேதான் இருக்கின்றன. 'உன்னைய அடிச்சே கொன்னுருவாகடி' என்ற அம்மாவின் வார்த்தைக்கு 'அடிக்க மட்டுமா செய்யிறீங்க..?' என்று கேட்டு ஒரு பார்வை பார்க்கும் மீனா இந்தப் படத்தில் பேசியிருக்கும் இடம் அது மட்டுமே. படம் முழுவதும் வெறித்த பார்வை, வெளிறிய, இறுக்கமான முகமுமாய்தான் இருக்கிறார். அடங்காப்பிடாரி என்பதுதான் கொட்டுக்காளி... ஆம் அவள் மனசுக்குள் வைத்திருப்பதைப் பாதுகாத்தபடி இவர்களின் ஆணாதிக்க ஆட்டத்துக்கு அடங்காமல் எதுவரை போகும்... போவார்கள்... போகட்டும், நாமும் போவோம் என்பதாய்த்தான் பயணிக்கிறாள்.

இசை இல்லாது பயணிக்கும் பாதையில் கேட்கும் சப்தங்களையே இசையாக்கியிருக்கிறார்கள். அதுவும் நல்லாத்தான் இருக்கு என்றாலும் இசை இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் எனத் தோன்றியது. விருதுக்கான படம் என்பதால் ஆரம்பக் காட்சியில் சாமி கும்பிட்டு வீடு வரும் வரை மீனாவின் அம்மாவின் பின்புறத்திலேயே கேமரா பயணிப்பதும், மாடு உன்னோடதான்னு கேக்கப் போறவன் ரோட்டில் இருந்து வீடு போற வரை அவன் பின்னே பயணிப்பதும், சிறுமி ஓடி வரும்போது அவள் பின்னே பயணிப்பதும் என ரொம்ப இழுப்பது போல் தெரிந்தாலும் அது கூட நல்லாத்தான் இருக்கு, கொஞ்சம் வித்தியாசமாய் அந்தக் கதாபாத்திரம் தவிர்த்து அது செல்லும் பாதைச் சூழலும் அந்த நேரத்துக் கதையை நம்முள் கடத்திவிடுகிறது. 


அந்தப் பெண்ணைப் பற்றிப் பேச வேண்டியதை எல்லாம் குடித்தபடி பேசும் கூட வந்த சொந்தக்கார இளைஞர்களில் ஒருவன், 'ஏப்பா டேய் வேற யாருடனாவது குடிக்கும் போது இதையெல்லாம் அங்கிட்டுப் பேசிடாதே' என்று சொன்னதும் 'அதெப்படி நம்ம புள்ளயப் பத்தி தப்பா பேசுவோமா?' என்று மற்றொருவன் சொல்வான். பேசியதெல்லாம் தப்புத்தான் என்றாலும் இப்படித்தான் பேசுவார்கள். இதுதான் அவர்களின் குணம். இந்தப் படத்தின் சிறப்பே நடிகர்கள் பட்டாளத்தை வைத்துக் கொண்டு மதுரை வட்டார வழக்குல பேசுறேன்னு எதையாவது பேச விட்டு, இதுதான் மதுரையின்னு அருவாளைத் தூக்கிக் காட்டுற மாதிரி இல்லாமல் அந்த நிலத்து மனிதர்களையே நடிக்க வைத்ததுதான். எல்லாக் கதாபாத்திரங்களுமே எதார்த்தமாய் நடித்திருக்கிறார்கள். ஆட்டோவும் சேவலும் கூட கதையோடு இணைந்து பயணிக்கின்றன.

சூரி தேர்ந்தெடுக்கும் கதைக்களங்களுக்காகவே அவரைப் பாராட்டலாம். சிரிப்பு நடிகராய் இருந்து நாயகனாகி மாஸ் கதாபாத்திரம் மட்டுமே பண்ணுவேன் எனப் பலர் தோற்றுப் போன திரையுலகில் கதையின் நாயகனாக மட்டுமே என்னைப் பார்க்கும்படியான படங்கள் கிடைத்தால் போதும் எனத் தேர்வு செய்து நடிப்பதில் சூரி தேர்ந்துவிட்டார். தொடரட்டும் அவரின் வெற்றிப் பயணம்.

இப்படி ஒரு படத்தைத் தயாரித்த சிவகார்த்திகேயனுக்கும் எடுத்த இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள்.

கொட்டுக்காளி ஒரு வித்தியாசமான அனுபவம்.

-பரிவை சே.குமார்.

1 கருத்து:

  1. நல்ல விமர்சனம். சில விமர்சனங்கள் எதிர்மறையாகவே இருந்தன. இங்கே தியேட்டரில் பார்க்க முடியாது.

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி