புதன், 14 ஆகஸ்ட், 2024

'காளையன்' ஒரு உணர்வுப் புயல் - சதீஷ் குமார்

'காளையன்' நாவல் குறித்து  சகோதரர் சதீஷ் குமார் அவர்கள் தனது விரிவான பார்வையை முகநூலில் பகிர்ந்திருந்தார். இந்த நாவலை அவரின் அமெரிக்கப் பயணத்தின் போது விமானத்தில் நான்கு மணி நேரத்தில் தொடர் வாசிப்பில் முடித்திருந்தார். அப்போதே எனக்குத் தனிப்பட்ட முறையில் செய்தி அனுப்பியிருந்தார். அமெரிக்காவில் இருந்து துபை வந்து, இங்கிருந்து இந்தியா செல்ல இருந்த இடைப்பட்ட நேரத்தில் சிறிய பதிவொன்றை எழுதிவிட்டு, செல்போனில் நீண்ட நேரம் சாக்காடு, காளையன் பற்றிப் பேசினார். 

காளையனில் இருந்த சில எழுத்துப் பிழைகளையும் சுட்டிக் காட்டினார். அப்போது காளையன் குறித்து இன்னும் விரிவா எழுதுவேன் என்றார். ஊருக்குப் போயிருந்தாலும் அங்கிருந்து எழுதிப் பகிர்ந்திருக்கிறார். மிக்க மகிழ்ச்சி.

எங்களின் 'காளையன்' வெளியாகி ஒன்பது மாதங்களுக்குப் பிறகுதான் முதல் விமர்சனத்தைப் பெற்றிருக்கிறது. இத்தனை நாள் காத்திருப்புக்கு இது சிறப்பான விமர்சனம்.

சகோதரர் சதீஷ்குமார் அவர்களுக்கு நன்றி.


பரிவை சே. குமார் தீட்டும் கிராம வாழ்க்கைப் படங்கள், நம் உள்ளத்தின் ஆழமான மூலைகளைத் தொட்டுச் செல்லும். கதை சொல்லும் கலைஞனாக அவர் கொண்டிருக்கும் திறமை அபாரமானது. அவர் எழுதும் ஒவ்வொரு வரியிலும் கிராமத்தின் மணம், அதன் மக்களின் வாழ்க்கை நம்மைச் சுற்றி விரியும்.

அவரது கதைகளில் கிராமத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கும் உயிர்ப்பிக்கப்படுகிறது. பழைய வீடுகள், தொழுவங்கள், மரங்கள், குளங்கள் என அனைத்தும் கண்முன்னே விரியும். கிராம மக்களின் பேச்சு வழக்கம், அவர்களின்  எளிய  வாழ்க்கை,  அவர்களிடையேயான அன்பும் பாசமும் அழகாகவும் நுணுக்கமாகவும் விவரிக்கப்படும். 

“காளையன்”  நாவலிலும் - ஒரு கிராமத்தின் முகம், அதன் மக்கள், அவர்களின் வாழ்வியல், கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் என அனைத்தையும் அத்தனை நுணுக்கத்துடன் பின்னியிருக்கிறார் எழுத்தாளர்.

மாடுகளுடனான பாசம், கிராமத்து வாழ்க்கையின்  பிரிக்க முடியாத பகுதி. எழுத்தாளர் இதை மிகுந்த நுணுக்கத்துடன் கையாண்டிருக்கிறார். மாடுகளின் நடத்தை, அவற்றின் உணர்வுகள், அவற்றுடனான  மனிதனின் பிணைப்பு என அனைத்தையும் அழகாக விவரித்திருக்கிறார். 

காளைதான்  இந்த நாவலின்  மையக்கரு  என்றே  தோன்றும். ஆனால் இது முழுக்க காளை  வளர்ப்புப்  பற்றிய கதை அல்ல. கதைக்கு உயிர்  கொடுப்பது  அதைச் சுற்றியுள்ள மனித உணர்வுகள்தான். கதாபாத்திரங்களின் உள்ளத்தைத் தொட்டுப் பேசுகிறது இந்த நாவல். 

அவர்களின் பாசம், அனுதாபம், எல்லையற்ற நேசம் என அனைத்தையும் நம் மனதில் விதைக்கிறது. கிராம வாழ்க்கையின் நுணுக்கங்கள்,  பழக்க வழக்கங்கள், மரபுகள், அதிலும் குறிப்பாக மஞ்சுவிரட்டு காளை வளர்ப்பின் சூழல், கால்நடைகளுடனான அபரிமிதமான பாசம், மனித உறவுகளின் ஆழம் ஆகியவற்றை அழகாகவும் விவரமாகவும் படைத்திருக்கிறார் எழுத்தாளர்!

நாவலில் விவரிக்கபடும் மஞ்சுவிரட்டுப்  போட்டி வழியாக கிராமத்து மனிதர்களின் ஆர்வம், உற்சாகம், போட்டியில் வெற்றி ,  தோல்வியை  ஏற்றுக்கொள்ளும் தன்மை என பல்வேறு பரிமாணங்களை எழுத்தாளர் வெளிப்படுத்தியிருக்கிறார்.  

பரிவை சே குமாரின் எழுத்தின் மிகப்பெரிய பலம், நம்மை கதையின் உலகிற்குள் இழுத்துச் செல்லும் திறன். நாம் வாசிக்கும்போது, நாம்தான் அந்த கிராமத்தில் வாழ்பவர்கள் என்றே தோன்றும் அளவுக்கு நம்மை அந்த சூழலில் மூழ்கடிக்கிறார். கதையின் ஒவ்வொரு காட்சியும் நம் கண்முன்னே விரியும் ஓர் அற்புதமான ஓவியம் போலிருக்கிறது.

பரிவை சே குமாரின் கதாபாத்திரங்கள் நம்மை போலவே உணர வைக்கின்றன. அவர்களின் சந்தோஷம், துக்கம், ஏக்கம், ஆசை என அனைத்தையும் நாம் நேரில் உணர்வது போலிருக்கும்.

ஒரு வாசகனாக, பரிவை சே. குமாரின்  கதைகளைப்  படிக்கும்போது,  கிராமத்துக்குப் பயணம் செய்வது போலவே உணர்வு மேலோங்கும்.  அவரது  வார்த்தைகள் என்னை அந்த சூழலுக்குள் இழுத்துச் செல்கின்றன. அவரது கதைகள் வாசிப்பின் இன்பத்தைத் தாண்டி, நம் உள்ளத்தை செம்மாற வைக்கின்றன.

காளையன்  - ஒரு உணர்வுப் புயல்.

-----------------------------------
காளையன் (நாவல்)
பரிவை சே.குமார்.
கலக்கல் ட்ரீம்ஸ்
விலை. ரூ. 150/-
தொடர்புக்கு:
தசரதன்
9840967484
-----------------------------------

1 கருத்து:

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி