ஞாயிறு, 23 ஜூன், 2024

புத்தக விமர்சனம் : தீரா நதி

'இன்னும் தீ தான் தெய்வம்

நீர் தான் வாழ்வு'

இந்த வரிகளைத் தனது ஒப்புதல் வாக்குமூலம் என்னும் முன்னுரையில் இறுதி வரியாக எழுதியிருப்பார். இது  எத்தனை சத்தியமான வரிகள்.


தீரா நதி என்னும் இந்தத் தொகுப்பில் 'ஒப்புதல் வாக்குமூலம்', பின்னுரையாக எழுதப்பட்ட 'மணலின் கதை' தவிர்த்து இதில் மொத்தம் ஆறு கதைகள் இருக்கின்றன. பெரும்பாலும் எல்லாமே சற்றே பெரிய சிறுகதைகள்தான். அதுவும் 'தீரா நதி' என்னும் கதை எழுபது பக்கங்களுக்கு மேல் எடுத்துக் கொண்ட நெடுங்கதை, அதாவது குறுநாவலின் வடிவம்.

எழுத்தாளர் வண்ணதாசன் தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் நிறையப் பேசிக் கொண்டே வருகிறார், இந்தக் கதைகளில் வரும் எல்லோரும் நான் தான், யாரும் நான் இல்லை என்கிறார். அதை விரிவாகப் பேசவும் செய்திருக்கிறார்.

மேலும், 'ஒரு நெடுங்கதையும் ஐந்தே ஐந்து சிறுகதைகளும் தான். எல்லாக் கதைகளிலும் அறுபது என்றும் எழுபது என்றும் எண்பது என்றும் இருக்கிற முதியவரும் முதிர்ச்சியரும் வருகிறார்கள். வண்டு கதையில் வருகிற சாமியாராகவும், சுடலைத் தேவராகவும், தாண்டு மாமாவாகவும், ராமையா மாமாவாகவும் நான் இருக்கிறேன் எனில் எனக்கு அதில் சம்மதம்' என்றும் சொல்கிறார்.

அதேபோல் 'தீரா நதியைக் கொஞ்சம் கொஞ்சமாக, இரண்டு வாரங்களில், அதற்கு இடையேயும் ஒரு சொல் எழுத வாய்க்காத இடைவெளியோடு எழுதியிருப்பேன். 1989-ஆம் ஆண்டில், அம்பலமேடு Staff Training Centre-ல் காலைகளிலும் இரவுகளிலும் 'சின்னு முதல் சின்னு வரை'யை எழுதிய பருவம் என்பது நானும் என் வாழ்வும் உயிரோடும் உயிர்ப்போடும் இருந்த ஒரு காலம்' என்கிறார்.

'இந்த 'தீரா நதி'யை எழுதின நாட்கள, ஒப்பீட்டளவில் அப்படி அற்றவை. இவை எழுத எழுத நான் உயிர்ப்புற்றேன், வாழ்வுற்றேன் என்பதும் மெய். அந்தச் சுடலைத் தேவராகி, வடிவாகி, வடிவிலிருந்து நாச்சியார் ஆகி, தளவாய் ஆகிக் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து என்னை நான் உயிர்ப்பித்துக் கொண்டேன். சா.கந்தசாமி 'அவனது ஆனது' என்று எழுதியிருப்பார். நான் மீண்டும் நான் ஆனது தீரா நதியை எழுதினதால், பார்க்கப் போனால் இதில் கூட நதியை விட, மணலைத்தான் அதிகம் எழுதியிருக்கிறேன்' என்றும் சொல்லியிருக்கிறார்.

வண்டு கதையில் தோட்டத்தில் மாம்பழம் பிடுங்கப் போய் அங்கு கூட்டிக் கொண்டிருக்கும் அக்கா சில காய்களைக் கொடுத்து உனக்குப் போக  மிச்சத்தைச் சாமியார்க்கிட்டே கொடு என்று சொல்கிறாள். அவனும் சாமியாரிடம் கொடுக்கச் செல்கிறான். அவனும் அவரும் பேசுவதுதான் கதையின் முக்கியமான பக்கங்கள்.

ஒரு புகைப்படம், சில வாசனைகள் என்னும் கதையில் தனது மதினியின் இறப்புக்குப் பின் அந்த வீட்டுக்கு வரும் சுந்தரம்,  முந்தைய நினைவுகளை மீட்டிப் பார்ப்பதையும் அங்கும் அவர் நடந்து கொள்ளும் விதத்தையும் விரிவாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது.

தீரா நதி - இந்த நெடுங்கதையை வாசிக்கும் போது இடையில் வைத்து விட்டு அப்புறம் படிக்கலாம் எனத் தோன்றவே இல்லை. வாசித்து முடித்தபின் நீண்ட நேரம் அமைதியாய் அமர்ந்திருக்க வேண்டும் போல் இருக்க, அதைத்தான் செய்தேன். இந்தக் கதை என்னை என்னவோ செய்தது. 

ஒரு நாலைந்து கதாபாத்திரங்களை வைத்து, அதிலும் இரண்டு காதாபாத்திரங்கள் மட்டுமே கதை முழுவதும் பேசிக் கொண்டே இருப்பதாய் எழுதுவதை எல்லாரும் செய்ய முடியும்தான், ஆனால் அந்தக் கதாபாத்திரங்களின் உரையாடலில் அத்தனை எதார்த்தத்தை, அவர்களின் வாழ்வை, கடந்து வந்த பாதையை அத்தனை அற்புதமாய்ச் சொல்ல எல்லாருக்கும் வாய்ப்பதில்லை. வண்ணதாசன் அத்தனை அழகாக நதியை... அதனுடன் கூடதலாக நதியோரத்து மணலை, பெண்களை நம் கண் முன்னே நிறுத்தியிருக்கிறார். அத்தனை அற்புதமான கதை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டிய கதை இது.

இந்தப் புத்தகத்தை வாசியுங்கள் எனப் பழனி ஐயாதான் எனக்குக் கொடுத்தார். இந்தக் கதையை வாசித்த போது இதில் சில இடங்களில் மட்டுமே வரும் சங்கையா கதாபாத்திரம் அவரைக் கவர்ந்திருக்கிறது என்பதை எனக்கும் ஒரு சங்கையா கிடைக்க வேண்டும் என்று எழுதி வைத்திருக்கிறார். நானோ சுடலைத் தேவரை ஒரு முறை சந்திக்க வேண்டும். அப்படிச் சந்திக்க நேர்ந்தால் அவரிடம் நதி, மணல், படித்துறை கூடவே வடிவு குறித்து இன்னும் நீங்கள் சொல்லாமல் விட்டவற்றைச் சொல்லுங்களேன் எனக் கேட்க வேண்டும்.

தாண்டவம் என்னும் கதையில் தனது மாப்பிள்ளையுடன் அவரின் பெரியப்பா வீட்டுக்குப் போகும் தாண்டு மாமா,போன இடத்தில் வர்களின் போட்டோவைப் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பார். பெரியம்மாவின் பெயரான அனவிரதம் என்னும் பேரைக் கேட்டதும் அதன்பின் அவர் நடந்து கொள்ளும் விதம், திரும்பி வரும்போது தான் பெண் பார்த்த கதையை சொல்வது எனக் கதை நம்மை உள்ளே இழுத்துக் கொள்கிறது.

புது வீடு கட்டி, சில வேலைகள் பாக்கியிருக்கும் போது குடி வந்து விட்டு முடிக்க வேண்டிய வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது அந்த வழியே ஆட்டையும் கூட்டிக் கொண்டு வரும் குடும்பம் அந்த வீட்டின் முன் ஓய்வெடுப்பதும் மரவேலை பார்த்துக் கொண்டிருக்கும் பசங்களும் வீட்டுக்காரர்களும் அவர்களுக்கு உதவிகள் செய்வதும் மகிழ்வோடு அளவளாவுவதும் எனக் கூடுவிட்டு... கதை சிறப்பாய் பயணிக்கிறது.

சுத்தம் அண்ணன் தம்பி பிரச்சினையையும் அவர்களை இணைக்க நினைக்கும் பெரியப்பாவுக்கும் தம்பிக்காரனுக்கும் நடக்கும் உரையாடலும் அவன் என் மனைவியைக் கேவலமாப் பேசினான் என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லும் தம்பிக்காரன் வேகமாய்ப் பேசுவதும் எல்லாம் முடிந்தும் அவன் எதையும் ஒத்துக் கொள்ளாதபோது நீ சொல்லும்மா என மருமகளிடம் அவர் கெஞ்சலாய்க் கேக்கும் போது 'இனிமே ஒண்ணுமில்லாம சுத்தம் ஆயிரும்லா' என்று சொல்வதைக் கேட்ட மகள் அம்மா கையிலிருக்கும் காலிச் சொம்பை வாங்க வேண்டும் என்பதுடன் முடியும் சுத்தம், நம்மை என்னவோ செய்கிறது.

பின்னுரையாக வரும் மணலின் கதையில் 'நான் இதுவரையிலும் எதையும் திட்டமிடவில்லை. எதையும் இலக்கு எனக் கொண்டு என் வாழ்வையோ, என் விரலையோ நகர்த்திக் கொள்ளவில்லை. நான் எந்த இடத்திலும் நின்றதே இல்லை. நின்று கொண்டு இருப்பதை விடச் சென்று கொண்டு இருப்பவனாக இருக்கிறேன். ஒரு தாவரம் போல, அல்லது எனக்குப் பிடித்த வேப்ப மரம் போல, அதனதன் பருவம் சார்ந்து வெயிலும்  வெயில் சார்ந்துமாக நின்று நிழலும் நிழல் சாந்ததை எழுதிக் கொண்டு வருகிறேன்' என்று சொல்லியிருக்கிறார்.

நீரில் மிதந்து வருகிறது நீச்சல் தெரியாத என்னை நோக்கி, எப்போதும், இப்போதும் ஒரு பூ என்னும் வரிகளுடன் இந்தத் தொகுப்பை முடித்திருக்கிறார் வண்ணதாசன்.

அப்படித்தான் ஒரு பூ என்னக்குள்ளே சுற்றித் திரிகிறது இந்தத் தொகுப்பில் இருக்கும் கதைகளை வாசித்தபின்.

கல்யாண்ஜி என்னும் கவிஞரும் இதே வண்ணதாசனுக்குள்தான் இருக்கிறார் என்பதால் கதைகளை எதை விவரித்தாலும் கவி நயத்துடன் எழுதி, வாசிக்கும் நம்மை ஒவ்வொரு வார்த்தையையும் ரசிக்க வைக்கிறார். அத்தனை அழகான வரிகள் புத்தகம் எங்கும் வயலில் தலை சாய்த்து ஆடும் நெற்கதிரென நிறைந்து கிடக்கின்றன. நம்மை ரசிக்க வைக்கின்றன.

தீரா நதி என்னும் இந்தத் தொகுப்பு நம்முள் ஏதோ செய்யும் என்பது உண்மை. அதுவும்  இந்தத் தலைப்பிலான நெடுங்கதை அத்தனை அற்புதமாய் எழுதப்பட்டிருக்கும். நதி நமக்குள் பாய்ந்து கொண்டே இருக்கும். தேவரும் வடிவும் அத்தனை சீக்கிரம் மனசைவிட்டு அகலமாட்டார்கள்.

-------------------------------
தீரா நதி
வண்ணதாசன்
சந்தியா பதிப்பகம்
பக்கம் : 156
விலை : ரூ.155/-
-------------------------------

-பரிவை சே.குமார்.

2 கருத்துகள்:

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி