தோப்பு-
கேலக்ஸி பதிப்பகம் நடத்திய முதலாமாண்டு உலகளாவிய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற ஐந்து கதைகளுடன் புத்தகத்திற்குத் தேர்வான பதிமூன்று கதைகளையும் சேர்த்து சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியான சிறுகதைத் தொகுப்பு இது.
ஒரு எழுத்தாளரின் எழுத்தில் ஒரு சிறுகதைத் தொகுப்பு மலர்வதற்கும் பதினெட்டு எழுத்தாளர்களின் எழுத்தில் ஒரு தொகுப்பு மலர்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஆம் ஒருவரின் சிறுகதைகள் என்றால் அவரின் களம் அல்லது எழுத்து நடையை வைத்து நாம் இன்னாரின் கதை இது என்பதை ஒரளவேனும் கணிக்க முடியும். இங்கே பதினெட்டு கதைகள்… பதினெட்டு எழுத்தாளர்கள்… ஒவ்வொருவரின் எண்ணமும் கருத்தும் வித்தியாசமாய்… இந்தக் கதைகளைப் படித்து முடிக்கும் போது நீங்கள் வித்தியாசமான அனுபவத்தையும் இதிலிருக்கும் கதைகள் வெற்றிக் கதைகள் என்ற இடத்துக்கு வரத் தகுதியான கதைகளே என்பதையும் உணர்வீர்கள்.
இரண்டாம் பரிசு பெற்ற பூரணம் - எழுத்தாளர் காயத்ரி.ஒய் - தற்கொலை எண்ணத்திலிருக்கும் ஒரு பெண் தனக்குள் எழும் எண்ணங்களால் அவள் சாகலாம் என்று நினைக்கிறாள். அவளின் மனதை மாற்ற வேறு இடத்துக்கு அழைத்துச் சென்ற போதும் அதே எண்ணம் தொடர, அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறாள் என்பதைப் பற்றிப் பேசுகிறது.
மூன்றாம் பரிசு பெற்ற காலங்கள் மாறும் - எழுத்தாளர் அனந்த் ரவி - தன்னைக் கண்டு கொள்ளாத தன்னைத் தேடி வராத பிள்ளைகளை நினைத்து வருந்தும் மனிதர், பறவைகளின் மீது பாசமாய் இருக்கிறார். 'என்னால்தானே அந்தப் பறவைகள் - பிள்ளைகள் - திரும்பி வரவே இல்லை' என ஏக்கமாய் கேட்கிறாள் அவருடைய மனைவியின் இறப்புக்குப் பின் சேர்ந்து வாழும் பத்மா. ஒரு தந்தையின் ஏக்கத்தைப் பேசுகிறது இக்கதை.
ஆறுதக் பரிசு பெற்ற மனிதயானை - எழுத்தாளர் ஆர்.இராஜசேகரன் - சிறுகதையில் தன்னைக் கொலை செய்யும் வெறியுடன் வரும் மனிதன் தடுமாறி விழ, அவனுக்குத் தான் சாப்பிட வைத்திருந்ததைக் கொடுத்து இப்ப நீ வந்த காரியத்தைச் செய்யுடா எனச் சொல்லும் மனிதனைப் பற்றிப் பேசுகிறது.
ஆறுதல் பரிசு பெற்ற சாதாரணன் சிவா - எழுத்தாளர் படிப்பகத்தான் - வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்தவன் நண்பனைப் பார்க்கப் போன இடத்தில் அவன் செய்யும் உதவிகளைப் பற்றி அறிகிறான். ஒரு பையனைப் படிக்க வைக்கும் கதையைக் கேட்ட போது தனக்கில்லை என்றாலும் அடுத்தவருக்கு உதவும் அவனின் குணத்தை நினைத்து பெருமை அடைகிறான்.
பாவமும் பரிகாரமும் - எழுத்தாளர் எம்.சங்கர் - நிச்சயித்த பெண்ணுக்கு ஏற்படும் பாலியல் வன்புணர்வுக்குப் பின் மாப்பிள்ளை ஏற்றுக் கொள்வாரா என்று நினைத்திருக்கும் போது ஊருக்கு வரும் மாப்பிள்ளை என்ன சொல்கிறான் என்பதைப் பற்றிப் பேசுகிறது.
எல்லோரும் கொண்டாடுவோம் - எழுத்தாளர் கல்பனா சன்னாசி - கதையில் அம்மாவுக்கு மருந்து இல்லை, வீட்டுச் செலவுக்குப் பணமில்லை என்ற நிலையில் தனது தையல்கடையில் தீபாவளி துணிகளைத் தைக்கும் அப்துல், எப்பவும் பாக்கி சொல்லி வாங்கிச் செல்லும் பசுபதியிடம் இந்த முறை பணம் கொடுத்தால்தான் உன் துணிகள் எனக் கறாராய் சொல்லியிருந்தாலும் அவன் தீபாவளிக்கு முந்திய இரவு வரை வராததால் துணி கொடுக்க வந்த போது அவனின் குழந்தை நடந்து கொண்டதை நினைத்துப் பார்க்கிறான். துணியைக் கொடுத்தானா...? என்பதைப் பேசுகிறது.
சக்தியின் வடிவம் - எழுத்தாளர் எஸ். அர்ஜூனன் சிவகாமிநாதன் - கதையில் தான் பார்த்த ஒரு ஆக்ஸிடெண்ட்டில் தன்னாலானதைச் செய்யும் சக்தி, அதைப் பற்றி, முதலுதவி விபரங்கள் பற்றி விரிவாகப் பேச அது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகிறது. கொழுந்தன் அவளிடம் தவறாக நடக்க நினைக்க, அவனுக்கு புத்திமதி சொல்கிறாள்.
வடக்கிரு - எழுத்தாளர் மாலா மாதவன் - என்னும் கதையில் முடியாத மாமனாரைப் பார்க்காத மருமகள், சாவை எதிர்நோக்கி எதையும் சாப்பிடாமல் வடக்குப் பக்கமாய் பார்த்தபடி கிடக்கும் பூனைக்கு வைத்தியம் பார்க்கிறாள். முடியாமல் இருக்கும் தன் நண்பனைப் பார்க்க வந்தவருக்கு அவளின் செய்கை கடுப்பாய் இருக்கிறது.
உனக்கும் கிழக்கு உண்டு - எழுத்தாளர் ப்ரஸன்னா வெங்கடேஷ் - காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்ள எண்ணும் ஒருவனின் கதையையும், சபதம் - எழுத்தாளர் ஆர்.சுமதி - புரிதல் இல்லாத அப்பாவால் அம்மா இறக்க, அதன் பின் என்ன ஆனது என்பதையும், ஹோம் மேக்கர் - எழுத்தாளர் தி.சுதா - மனைவி வேலைக்குப் போக, கணவன் வீட்டில் இருக்க, ஊருக்கு வரும் பெரியம்மாவால் ஏற்படும் பிரச்சினை எப்படித் தீர்ந்தது என்பதைப் பற்றிப் பேசுகிறது.
சுயம் - எழுத்தாளர் அலை. யுவராஜன் - பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வேலை வாங்கிக் கொடுக்க, அங்கும் அவளின் முந்தைய வாழ்க்கை பேசப்பட, அங்கிருந்தும் வெளியாகும் அவளின் நிலமை என்ன ஆனது என்பதையும், போர் - எழுத்தாளர் ராம்பிரசாத் - ஒதுக்கப்பட்டவர்களின் வீடுகள் கூட தாழ்வாய் இருப்பதையும் அப்படிப்பட்ட ஒருவன் எப்படி உயர்ந்த வீட்டை அடைகிறான் என்பதையும் பற்றிப் பேச, மீனாட்சி திருக்கல்யாணம் - எழுத்தாளர் மைதிலி கல்யாணி - திருமணம் ஆகாத ஒரு பெண் எப்படியான வாழ்க்கையை வாழ்வாள் அவளின் வாழ்வில் எப்படி வசந்தம் வருகிறது என்பதைப் பற்றிப் பேசுகிறது.
நீங்கள் கேட்டவை - எழுத்தாளர் ஜெயசீலன் சாமுவேல் - கையில் பணமில்லாத நிலையில் ஒருவன் எப்படித் தன் குடும்பத்துக்கு துணிமணி வாங்குகிறான் என்பதைப் பற்றியும், அன்பென்னும் குடையை நீட்டுகிறாய் - எழுத்தாளர் பூபதி பெரியசாமி - சிறப்புக் குழந்தையைப் பற்றியும் அதன் குடிகாரத் தகப்பனையும் இதையெல்லாம் சுமக்கும் அம்மாவைப் பற்றியும் இக்கதை பேசுகிறது. இவள் ஒரு மாதிரி..! - எழுத்தாளர் ஜே.செல்லம் ஜெரினா - ஆதரவில்லாமல் பயணிக்கும் புள்ளைத்தாச்சிக்கு ஆதரவு கொடுக்கிறாள் கிழவி ஒருத்தி, அவள் வீட்டில் இருக்கும் அவளின் பிள்ளைகள் என்ன ஆனார்கள், அவளின் முந்தைய வாழ்க்கை என்ன என்பதைப் பற்றிப் பேசுகிறது.
மொத்தத்தில் தோப்பு மிக அருமையாய் வந்திருக்கிறது. சமூக நிகழ்வுகளை, அவலங்களை எல்லாம் தங்கள் எண்ணத்திலிருந்து எழுத்தாய் மாற்றியிருக்கிறார்கள்.
-------------------------------------
தோப்பு (சிறுகதை தொகுப்பு)
கேலக்ஸி பதிப்பகம்
விலை ரூ. 220
-------------------------------------
-பரிவை சே.குமார்.
நல்லதொரு அறிமுகம் குமார்.
பதிலளிநீக்குதோப்பு - சிறுகதைத் தொகுப்பு குறித்த தங்கள் அறிமுகம் நன்று. வாசிக்க முயல்கிறேன்.
பதிலளிநீக்கு