செவ்வாய், 23 ஜனவரி, 2024

சினிமா விமர்சனம் : கிடா

 கிடா-


மிழ்ச் சினிமாவின் துப்பாக்கிச் சத்தங்களுக்கு இடையே அவ்வப்போது வாழ்வியலைப் பேசும் உணர்வுப்பூர்வமான படங்கள் வருவதுண்டு. அப்படி வரும் படங்கள் வெற்றிப்படமாவதும், தியேட்டரில் நிற்பதும் கேள்விக்குறிதான் என்றாலும் சொற்பமே பார்த்தாலும் பார்த்தவர்களின் மனதுக்குள் சிம்மாசனம் இட்டு உட்கார்ந்து தன் வெற்றியைப் பறைசாற்றும். அப்படியானதொரு படம் இது.

மிகப்பெரிய கதைக்களம் எல்லாம் கிடையாது. சிறு வயதில் நாம் பார்த்த, அனுபவித்த வலிதான் கதைக்களம். அந்த வலியைக் கடத்திய விதத்தில் வென்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் ரா.வெங்கட். 

பெரிய நடிகர்கள் இல்லை... பரபரப்பான திரைக்கதை இல்லை... துப்பாக்கிச் சத்தம் இல்லை... எளிய மனிதர்களை அவர்கள் போக்கில் நடிக்க விட்டு எடுத்திருக்கும் படம் இது.


தீபாவளிக்கு முன் பிள்ளைகளுக்குத் துணி எடுக்க வழி, வசதியில்லாமல் இருப்பவர்களிடம் கடன் வாங்கித் துணி எடுப்பதையும், பிள்ளைகளுக்கு ஒரு புதுத்துணி எடுக்க வழியில்லாம வக்கத்துப் போயிட்டேனே எனப் புலம்புவதையும், மேலக்கி எடுத்துத் தர்றேன்... இப்ப இருக்கதுல நல்லதப் போட்டுக்கப்பா எனச் சொன்ன அம்மாக்களையும் குடும்பங்களையும் பார்த்திருக்கிறோம். ஏன் சிறு வயதில் நானெல்லாம் கூட இப்படியான அனுபவத்தை எதிர் கொண்டிருக்கிறேன்.

நாலைந்து புதுத் துணி எடுக்கும் மனிதர்கள் மத்தியில் புதிதாக ஒன்று கூட எடுக்க முடியாத நிலையில் இருக்கும் குடும்பங்கள் இப்போதும் இருக்கத்தான் செய்கின்றன. அப்படியான குடும்பத்தின் கதையைத்தான் இந்தக் கிடா பேசுகிறது.

இருவேறு குடும்பத் தலைவர்களின் பிரச்சினைக்கான களத்தை ஒரு புள்ளியில் கொண்டு வந்து சேர்த்துக் கதையை நகர்த்தி, முடிவில் என்ன ஆனது என்பதைச் சொல்லியிருக்கிறது கிடா.

கிராமங்களில் சாமிகளுடன் ஒரு நேரடி நட்பு இருக்கும். கோபமோ சந்தோசமோ கோவில் வாசலில் நின்று தனக்கு எதிரே நிற்கும் தெய்வத்திடம் 'நீ இத நடத்தித் தரலயில்ல... உனக்கு வெட்டுறேன்னு சொன்ன ஆட்டை வெட்ட முடியாது. எப்ப நடத்தித் தாரியோ அப்பத்தான் வெட்டுவேன்' என்றோ, 'எனக்கு இதைச் செஞ்சியன்னா உனக்கு ஒண்ணில்ல ரெண்டு கிடா வெட்டுறேன்' என்றோ காரசாரமாக பேசியபின் சொல்லிச் செல்வதைப் பார்க்க முடியும்.

அப்படித்தான் அய்யனாருக்கு வெட்ட விட்டிருந்த கிடாயை, ஒரு விபத்தில் மகளையும் மருமகனையும் இழந்த போது விரக்த்தியில் சாமிக்கான நேர்த்திக்கடனை செய்ய மனம் வெறுத்துப் போய் தனது பேரனை தங்களோடு வைத்துக் கொண்டு அடுத்த வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் செல்லய்யா (மறைந்த பூ இராமு), தீபாவளிக்குத் தன் பேரனுக்குப் புதுத்துணி எடுத்துக் கொடுக்கிறேன் என வாக்குக் கொடுத்து விட்டு பணமில்லாமல் சிலர் கேட்டும் கிடைக்காமல் தான் வளர்க்கும் ஆட்டை விற்றுவிடலாம் என்ற முடிவுக்கு வருகிறார்.

சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் குடியில் விட்டுவிடும், பாய் கறிக்கடையில் வேலை பார்க்கும் வெள்ளச்சாமி (காளி வெங்கட்) சரியான நேரத்தில் கடைக்குப் போகாததால் பாயின் மகனுடன் ஏற்படும் மோதலால் தீபாவளிக்குத் தனியே கடை போடுகிறேன் எனச் சவால் விட்டுவிட்டுக் கையில் காசில்லாமல் ஆடு வாங்க ஊரெல்லாம் சுற்றி வருகிறார்.

இவ்விருவரையும் இணைக்கிறது அந்தக் கிடா. கிடாயை விற்று முன்பணம் வாங்கியபின் ஊரில் சின்னச் சின்னத் திருட்டுக்களைச் செய்யும் நால்வர் கும்பல் அதைக் கடத்திக் கொண்டு போகிறது. அதன் பின் என்ன ஆனது என்பதுதான் கதை.

கிடாயுடன் அந்நியோன்யமாய் பழகும் பேரன் கதிர் (தீபன்), கருப்பு எனக் குரல் கொடுத்தால் போதும் அந்தக் கிடாய் எங்கிருந்தாலும் ஓடி வந்துவிடும். அப்படிப்பட்ட கிடாயை விற்றுத்தான் தனக்குப் புதுத்துணி வாங்க வேண்டும் என்ற சூழலில் புதுத்துணிக்காக காத்திருந்தவன் எனக்குத் துணியே வேண்டாம் என்று சொல்வதும்...


கிடாயை வெட்டும் போது கோவிலில் செலவுக்கு என்ன பண்ணுவதென சிறுகச் சிறுகச் சேர்த்து வைக்கும் உண்டியலை உடைத்துப் பேரனுக்குத் துணி எடுக்க ஆயா மீனாம்மா (பாண்டியம்மா) இரவில் கடைத்தெருவுக்குப் போவதும்...

உண்டியலில் இருந்த சில்லறைக் காசுகளை எல்லாம் கொண்டு போய் அதை எண்ணாமல் ஆயிரம் ரூபாயைக் கொடுப்பவரும், அதை வாங்கி தன்னிடம் இருந்த ஐநூறு ரூபாயையும் சேர்த்துக் கொடுக்கும் அவரின் அம்மாவும், பட்டாசை எடுத்துக் கொடுக்கும் போது தன் பங்கிற்கு கொஞ்சமாய் அள்ளிப் போடும் அவளின் பேரனும் என பார்க்கும் நம் மனதைக் கவர்ந்த குடும்பமும்...

வீராப்பாய் பேசிப் போனவனின் மனைவி தன்னிடம் உதவி கேட்டதும் அதுக்கென்ன இப்ப என்ன செய்யணும் சொல்லு எனச் சொல்லும் பாயும்... எங்கிட்டே இருந்தா உனக்குக் கொடுத்துருவேனேப்பா எனப் பூ ராமுவிடம் சொல்லும் அவரின் முஸ்லீம் நண்பரும்..,

கடையில் கத்தினாலும் இரவில் தனியாக நிற்கும் போது வீட்டில் கொண்டு வந்து விடும் முதலாளியும்...

மாமா நாம எப்படியும் ஆடு வாங்குறோம் என்ற நம்பிக்கையை விதைத்தபடி காளிவெங்கட்டை சைக்கிள் வைத்து ஓட்டிச் செல்லும் மாப்பிள்ளையாய் வருபவரும்...

சாமிக்கு நேந்து முடிஞ்சி வச்ச காசுதான் இருந்தாலும் தொழில் தொடங்குறேன்னு சொல்றே... செய்யிறியோ இல்ல குடிக்கிறியோ தெரியாது என்றபடி காளி வெங்கட்டின் மனைவி (லெட்சுமி) இந்தா என்னோட பங்கா இதை வச்சிக்க என ஐநூறு ரூயாயைக் கொடுப்பதும்... 

திருடப் போய் நாயிடம் கடி வாங்கும் அந்த நால்வரும்...

இதற்கு இடையே அத்தை மகள் (ஜோதி) மாமன் மகன் (பாண்டி) இடையிலான சின்னதாய் ஒரு காதலும்... 

என படம் எதார்த்தமாய், எந்த இடத்திலும் சுவராஸ்யத்திற்காக எதையும் திணிக்காமல் மிக அழகாகப் பயணிக்கிறது.


சில இடங்களில் அயற்சியைக் கொடுத்தாலும் முழுப்படத்தையும் பார்த்து முடித்தபோது நம் சிறுவயது தீபாவளியை மனதில் நிறுத்தி, நல்லதொரு படத்தைப் பார்த்த திருப்தியைக் கொடுக்கிறது.

தீசன் இசையும் ஜெயப்பிரகாஷின் ஒளிப்பதிவும் படத்துக்கு நிறைவு.

இந்தப் படம் குறித்த விமர்சனப் பார்வையை எங்கள் நட்புக்களின் புத்தாண்டுக் கூடுகையின் போது ஒரு ஏரிக்கரை ஓரத்தில் நிகழ்த்தினோம். அப்போது இப்படத்தில் இயக்குநர் ரா.வெங்கட் அவர்கள் இணைய வழி இணைந்து மக்களோடு மக்களாக நடிகர்களை நடிக்க வைத்து படம் எடுத்ததைப் பற்றியும் தீபாவளி பற்றி அதிகம் தெரியாத தெலுங்கு தயாரிப்பாளர் இப்படத்தைத் தயாரிக்க முன் வந்ததைப் பற்றியும் சொன்னார். 

எதார்த்தமான படமாய்... அதுவும் மேலூரைச் சுற்றி இருக்கும் பகுதிகளைக் களமாக வைத்து இப்படி ஒரு படம் கொடுத்திருப்பதைப் பாராட்டி ஆளாளுக்குப் பேசியதைக் கேட்டதும் அடுத்து அருவாளோட வரலாம்ன்னு பார்த்தா என்னைய வர விட மாட்டீங்க போலவே எனச் சிரித்துக் கொண்டே சொன்னார்.



வெங்கட்டுக்கு வாழ்த்துக்கள். இப்படியான படம் எடுங்கள் என்று சொல்லவில்லை, அடுத்தடுத்து நல்ல படங்களை இயக்குங்கள்.

-பரிவை சே.குமார்.

2 கருத்துகள்:

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி