சில நிகழ்வுகள் மனசுக்கு நெருக்கமாகவும், மகிழ்வாகவும் அமையும். அப்படியானதொரு நிகழ்வு சென்ற வருடத்தின் இறுதிச் சனிக்கிழமை (30/12/2023) மாலை அல் குத்ரா ஏரியில் நிகழ்ந்தது. ஒரு மாதத்துக்கு முன்பே திட்டமிட்ட ஒன்று கூடல் நிகழ்வு அது. நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைத்து, மகிழ்வான, மனசுக்கு நெருக்கமான விழாவாக நடத்தி முடித்த பாலாஜி அண்ணன், சகோதரர் பிலால் அலியார், ஜெசிலா மேடம் ஆகியோருக்கு முதலில் நன்றி.
அல் குத்ரா ஏரிக்குப் போவதற்குப் பாதைகள் சரியில்லாததாலும் ஏதாவது ஒரு இடத்தில் போய் நின்றோமென்றால் மற்றவர்கள் நம்மை வந்தடையவோ அல்லது நாம் அவர்களிடம் சென்று சேரவோ முடியாத சூழல் ஏற்படும் என்பதால் மெயின் ரோட்டில் இளைப்பாறிச் செல்லக் கடைகள், கழிவறைகள், பெட்ரோல் பங்க் என இருக்கும் இடத்தில் எல்லாரும் ஒன்று கூடி, அங்கிருந்து கிளம்பிப் போய் ஒரு நல்ல இடமாய் பார்த்து அமர்து கொண்டோம்.
இந்தக் கூட்டம் பத்தோடு பதினொன்றான கேளிக்கை நிகழ்ச்சி என்பதைப் போலில்லாமல் சிறப்பான நிகழ்வாக, கேலக்ஸியின் வெற்றிக் கூடுகையாகவும் இருக்க வேண்டும் என்பது தீர்மானித்த ஒன்றாக இருந்ததால், எதிர்பார்த்ததைவிட நண்பர்கள் அனைவரும் குடும்பம் குடும்பமாய் வந்திருந்ததால் நிகழ்வு இன்னும் கூடுதல் சிறப்புப் பெற்றது, மகிழ்வான நிகழ்வாக இதை நடத்த வேண்டும் என்ற முடிவின்படி ஜெஸிலா மேடம் அரங்கேற்றி அமீரக குறுநாடகப் போட்டியில் பல பரிசுகளை வென்ற 'தெட்டு' நாடகம் நடித்துக் காட்டப்பட்டது. தெரிசை சிவா வராததாலும், ரபீக் அண்ணன் வரத் தாமதம் ஆனதாலும் அவர்களின் கதாபாத்திரத்தை நாஷ் மற்றும் ஸ்ரீஹரீஸ் நடித்தார்கள்.
அதன்பின் எளிய மனிதர்களின் எதார்த்த வாழ்க்கையைப் பேசும் படமான 'கிடா' குறித்த உரையாடல் ஆரம்பமானது. இப்படத்தின் இயக்குநர் ஆர்.வெங்கட் அவர்கள் இணைய வழி இணைந்து நிகழ்வின் ஆரம்பம் முதல் இறுதி வரை இருந்து, தனது படம் குறித்த விபரங்களைச் சொன்னது சிறப்பு. பிறந்தது மதுரை வளர்ந்ததெல்லாம் ராமநாதபுரம் என்று சொன்னதும் அதுதான் இப்படியான கதையைப் படமாக்கியிருக்கிறார் என்ற பேச்சும் எழுந்தது.
நிகழ்வை பாலாஜி அண்ணன் தொகுத்து வழங்கினார்.
முதலில் பேச வந்த கலைஞன் நாஷ் ஆரம்பிக்கும் போது அல் குத்ராவுக்கு வருவதில் இருக்கும் சிக்கலைச் சொல்லி, நல்ல ரோடு போட்டுத்தாருங்கள் என்ற கோரிக்கையை வைத்தார். யாரிடம் வைத்தார் என்று யோசித்தபோது ஒருவேளை அரசு அதிகாரியான பாலாஜி அண்ணனிடம் வைத்திருப்பார் போலும். படம் எதார்த்தத்தைப் பேசியதைச் சொன்னவர், காதலர்களுக்கு இன்னும் கொஞ்சம் காட்சிகள் வைத்திருக்கலாம். அது மட்டும்தான் குறையாக இருந்தது என்றார். மேலும் இது போன்ற சிறிய பட்ஜெட் படங்கள் இங்கு திரையிடப்படுவதில்லை, இந்தப் படங்களும் இங்கு திரையிடப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அடுத்துப் பேசிய பால்கரசு, தனக்கும் தீபாவளிக்குமான தொடர்பு குறித்து கொஞ்சம் பதட்டமாகப் பேசி முடித்தார். சின்ன வயதில் படத்தில் வரும் சிறுவனைப் போன்ற நிலையில்தான் தானும் இருந்தேன் என்று சொன்னார். ராஜாராம் பேசப் போனதும் இராம்நாடா.... அங்க.... பாரதி நகரா... நாம ஒரே ஏரியாதான் என்பதாய் பேசி, படத்தில் வரும் பெண் கதாபாத்திரங்களைப் பற்றிப் பேசினார். பூ இராமுவின் மனைவியாக வரும் கதாபாத்திரத்துக்கு வைத்திருந்த மீனாம்மா என்ற பெயர் இயக்குநரின் ஆயாவின் பெயர் என்பதையும் சொன்னார்.
பிலால் பேசும் போது இந்து முஸ்லீம்களின் மதம் கடந்த நட்பை படம் பேசியிருப்பதையும் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்வது குறித்தும் பேசினார். தென் மாவட்டங்களில் குடிக்கு வாழ்க்கையைத் தொலைப்பவர்களைப் பற்றியும் விரிவாகப் பேசினார். ஜெஸிலா பானு பேசும் போது இராஜாராம் சொன்னதைப் போல் பெண் கதாபாத்திரங்கள் குறித்துப் பேசினார். சில்லறைகளைக் கொண்டு போய் கொடுத்து நோட்டாகத் தாருங்கள் என்று சொல்லும் போது அதை எண்ணிப் பார்க்காமல் ஆளைப் பார்த்து நம்பிக்கையோடு கொடுப்பதைக் குறித்துப் பேசினார். சதீஷ்குமார் பேசும் போது கதை சொன்ன எதார்த்தங்களைச் சொன்னார்.
இருட்டி விட்டதால் இதற்கு மேல் பேசுவது சிரமம் என்பதால் திலீப் உள்ளிட்ட சிலர் பேச முடியாமல் போனது. பாலாஜி அண்ணன் இயக்குநரிடம் மதுரையின்னாலே அரிவாள் எடுக்கிற கதைதான் எடுக்கிறாங்க... நீங்கதான் எங்க வாழ்க்கையைக் காட்டியிருக்கீங்க. கசாப்புக் கடையில என்னோட நண்பன் ரபீக் ராஜாலாம் நின்னுக்கிட்டு இருந்தான் என்று சொல்லி இயக்குநரைப் பேசச் சொன்னார்.
அதன் பின் கொஞ்ச நேரம் கூட்டம் கூட்டமாய் அளவளாவல் நிகழ்ந்தது. அப்புறம் பாட்டுக்குப் பாட்டு நிகழ்வு அரங்கேறியது. அதனிடையே பொங்கலும், மட்டன் கோலாவும் கொடுக்கப்பட்டது. அரை அரை வரியாய் பாடி - ஆண்கள் பக்கம்தான் , பெண்கள் ரெண்டு வரிக்கு மேல் பாடினார்கள் - அரைமணி நேரம் வரை நீடித்தது.
அப்பறம் குளிரை மறந்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பெரியவர்கள் கூடிக் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆறு மணியில் இருந்து இருக்கும் இடம் கேட்டு எட்டு மணியளவில் ரபீக் சுலைமான் அண்ணன் பிரட் அல்வாவுடன் வந்து சேர்ந்தார்.
சசிக்குமார் அண்ணன் வீட்டில் இருந்து அண்ணி செய்து கொண்டு வந்திருந்த பொங்கல் தித்திப்பு. திலீப் வீட்டில் இருந்து செய்து கொண்டு வந்திருந்த மட்டன் கோலா ஈர்த்தது.
இரவுச் சாப்பாடு மனசுக்கு வயிற்றுக்கும் நிறைவாய்.
கேலக்ஸியின் இந்த வருடத் திட்டங்களில் சிலவற்றைப் பற்றி பாலாஜி அண்ணன் பேசினார்.
நிகழ்வு சிறப்பாக நிறைவு பெற, எல்லோரும் மகிழ்வுடன் வீடு திரும்பினோம்.
கேளிக்கையான கூடுகையாக இல்லாமல் மிகச் சிறப்பான, மகிழ்வான நிகழ்வாக அமைந்தது.
-பரிவை சே.குமார்.
நீங்கள் அனுபவித்த சுவாரஸ்யத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.புத்தாண்டு வாழ்த்துகள் குமார்.
பதிலளிநீக்குநன்றி நித்யா அண்ணா...மறுபடியும் குத்ரா போய் மகிழ்ந்து வந்த உணர்வு....
பதிலளிநீக்கு