திங்கள், 9 அக்டோபர், 2023

பிக்பாஸ் : பவா பிரம்மா அல்ல

பிக்பாஸ் வீட்டிலிருந்து பவா வெளியேறியதாகச் செய்திகள் வருகின்றன... மகிழ்ச்சி.

வேலை பார்க்கும் 'சின்னத் தலைவன்' வீட்டுக்குச் செல்வதை அவர் விரும்பவில்லை என்பதை நேற்றைய ஒளிபரப்பில் காணமுடிந்தது. பவா மட்டுமல்ல வீட்டில் இருக்கும் அத்தனை பேரும் டாஸ்க் ஆடிக்கொண்டு நன்றாக தின்று கொழுக்கலாம் என நினைக்கும் 'பெரிய தலைவன்' வீட்டிலிருப்பதையே விரும்புகிறார்கள் என்பதை ஒவ்வொருவரின் பெயரையும் இந்த வாரத்தலைவன் சொன்னபோது சம்பந்தப்பட்டவர்கள் முகத்தில் காட்டிய வெறுப்பிலேயே தெரிந்து கொள்ள முடிந்தது. அதிலிருந்து வெளியேறத்தான் மாயாவே நாடகம் ஆடினார். பிக்கி வாரம் ஆறு பேர் எனச் சுழற்றி முறையில் சின்னத் தலைவன் வீட்டுக்கு அனுப்பலாம்.



பவாவைப் பொறுத்தவரை வெளிநாடுகளில் கதை சொல்லி, நிறையவே சம்பாரித்துக் கொண்டிருந்தார். இங்கெல்லாம் அவர் வரும்போது அவரை தங்கள் இடங்களுக்கு அழைத்துச் சென்று கதை கேட்டவர்கள் எல்லாருமே பெரிய படிப்பெல்லாம் படிக்காமல் குடும்பத்துக்காக கடுமையான வேலை பார்க்கும் தொழிலாளர்கள்தான். அவர்களை மனதில் வைத்தே 'படிப்பெல்லாம் மயிரு'ன்னு சொன்னார். அதுபோக விசித்ராவை பிடிக்காத காரணத்தால் அல்லது ஒரு நடிகை டாக்டரேட் பண்ணுவதா என்ற காழ்ப்புணர்ச்சியில் நான் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கிறேன். பிஹஸ்டியெல்லாம் அட்ட வேஸ்ட் என்பதாய் பேசினார். பல இடங்களில் அவர் கதைகளைச் சொல்லும் போது கல்வியின் அவசியம் குறித்தும் பேசக் கேட்டிருக்கிறோம் என்பதுதான் முரண். இதெல்லாம் தேவையில்லை என்பவர் தன் பிள்ளைகளைப் படிக்க வேண்டாமெனச் சொல்லவில்லை என்று நினைக்கிறேன். ஹிந்தி படிக்காதீங்கன்னு நமக்கெல்லாம் சொல்லிட்டு தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்த அரசியல்வாதிகளும் இவர்களும் ஒன்றுதான்.

அவர் கதையில் கவர்ச்சியைக் கூட்டி, கதாசிரியன்னா மரியாதை இருக்கணும் (இங்கே அவருக்கான மரியாதையை எதிர்ப்பார்த்துதான் மாற்றப்பட்டது) என இடுப்பைக் கிள்ளிய கதையில் டீச்சரையே மறைத்துக் கதை சொன்னதை கமல் சுட்டிக் காட்டி, கதையை விரிவாகப் பகிர்ந்ததில் அவர் இப்படித்தான் பல கதைகளுக்கு காரம், கவர்ச்சி கூட்டியிருக்கிறார் என்பது பொதுவில் உடைந்ததில் அவரும் உடைந்திருக்கலாம்.

அதேபோல் ஜெயகாந்தன் - கமல் நிகழ்வில் நிகழ்ந்ததை அவர் காதுல பூ கணக்காக சற்றே மாற்றிக் கதை சொன்னதையும் கமல் உடைத்து விட்டார்.  ஒருமுறை உடைந்த இதயம் மறுமுறையும் உடைந்தபோது வெளியில் தான் கட்டிவைத்திருக்கும் கதை சொல்லி பிம்பம் உடைந்து போய்விடுமோ என்ற அச்சம் காரணமாக வெளியேறும் முடிவை எடுத்திருக்கலாம்.

தன்னோட இன்னொரு பக்கத்தைப் பார்க்கத்தான் வந்தேன் என்றார். அதை கல்வி விசயத்தில் ஜோவிகாவுக்கு ஆதரவாய் நின்று நமக்குக் காட்டியும் விட்டார், அவரும் அதை தன்னளவில் உணர்ந்திருப்பார். சரி நம்மளோட இன்னொரு பக்கத்துல கொஞ்சம் வெளிய வந்திருச்சு எல்லாமும் வெளிவரும் முன்னர் போய்விடுதல் நலமென யோசித்து இந்த முடிவை எடுத்திருக்கலாம்.

சாப்பாடு குறித்துப் பேசிய எல்லாரும் அவர் அதிகமாய் சாப்பிடுவதாய் சொன்னது கூட அவரைப் பாதித்திருக்கும். டீ, காபி போன்ற 'தண்ணி' ஆகாரங்கள் அதிகமாக எடுத்துக் கொள்ளும் நபர் என்பதால் அதில் ரேசன் என்பதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போயிருக்கலாம். 'சோம்பேறி' என்ற சொல் கூட இந்த முடிவை எடுக்க வைத்திருக்கலாம்.

பிக்பாஸ் வீட்டிற்குப் போனது அவரின் விருப்பம் என்றால் வெளியேறியதும் கூட அவரின் விருப்பம்தான்.

இதில் எழுத்தாளனின் சுயம் கெடாமல் வெளியேறிவிட்டார் என முகநூலெங்கும் எழுத்தாளக் கண்மணிகள் பதாகை வைப்பதெல்லாம் ரொம்ப ஓவர், வெளிநாடுகளுக்கு வந்து நிகழ்வுகளில் கலந்து கொள்ளும்போது இவர்கள் எல்லாம் தங்கள் 'சுய'த்தை எப்படிக் கெடாமல் வைத்துக் கொள்கிறார்கள் என்பதை பார்த்திருக்கிறோம். பலரின் செய்கைகளைப் பார்த்து ஊருக்குள்தான் உபதேசங்கள் என்பதையும் உணர்ந்திருக்கிறோம்.

அதேபோல் பிக்பாஸ் வீடு உங்களுக்கு வேண்டாம் பவா, நீங்க வெளிய வந்தது மகிழ்ச்சி என்று சொல்வதையெல்லாம் பார்க்கும் போது சிரிப்புத்தான் வருகிறது. அவர் விரும்பித்தான் உள்ளே போயிருப்பார். அவர்களின் விதிமுறைகளுக்கெல்லாம் ஒத்துக்கொண்டுதானே போயிருப்பார். அவர் வீட்டில் வந்து பிடித்துக் காரில் ஏற்றிக் கொண்டு போனார்களா என்ன... பின்னே எதுக்கு உங்களுக்கு வேண்டான்னுல்லாம் பில்டப் பண்றாங்கன்னு தெரியல.

எச்சில் துப்பியதை ஏற்றுக் கொள்ள விரும்பாத, சரியான கருத்தைச் சொல்ல வேண்டிய இடத்தில் காழ்ப்புணர்ச்சி காட்டிய ஒரு மனிதர்தான் பவா. அவர் புனிதரல்ல... அந்த வீட்டைவிட்டு அவர் வெளியேறியதால் புனிதமாகிவிட்டார் என்றெல்லாம் பேசுவதைப் பார்க்கும் போது சிரிப்புத்தான் வருகிறது. கல்வியில் அவர் சறுக்கியதற்கு எப்போதும் புனிதமாகப் போவதில்லை. பவாவின் பிம்பம் இந்த ஒரு வாரத்தில் உடைந்துதான் போனதே ஒழிய உயர்ந்து விடவில்லை என்பதை உணருங்கள்.

இதுல ஒருத்தர் பிக்பாஸ் பாக்குறவனெல்லாம் முட்டாள்ன்னு சொல்லிக்கிட்டு பவா கதை சொன்னார், பவா இப்படிப் பேசினார் அப்படிப் பேசினார்ன்னு பக்கம் பக்கமா எழுதித் தள்ளினார். அப்ப அவர் பிக்பாஸ் பார்த்திருப்பார்தானே... அப்ப அவரும்....

தாங்கள் பொட்டு வைத்துப் பூச்சூடிச் சொல்லும் கதைகளை கேட்க ஆளிருக்கும் வரை இவர்கள் எல்லாம் பெரியவர்கள்தான்... புனிதர்கள் அல்ல.

பவா வெளியேறியதில் மகிழ்ச்சி.

பவா அங்கே இறுக்கமாகத்தான் இருந்தார். இளைஞர்களுடன் அவ்வளவு சீக்கிரமாய் அவரால் நட்பு பாராட்ட முடியவில்லை என்பது ஒரு காரணம் என்றால் தான் சொன்ன பொய்கள் தன்னைத் தாக்க ஆரம்பித்ததும் கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம், அதை அவரும் பூரணமாக உணர்ந்திருக்கக்கூடும்.

என்னமோ பிக்பாஸ் வீட்டில் இருந்து சிங்கமென அவர் வெளிவருவதாய் கதைகள் எழுதாதீர்கள். எழுத்துலகத்தைக் காத்த பிரம்மா என மாலை சூடாதீர்கள்.  பொழப்புக்காக அவர் உள்ளே போனார். இன்னும் கொஞ்சநாள் இருந்தால் வெளியே பொழைப்பு போய்விடும் என்பதால் வெளியேறியிருக்கிறார், அவ்வளவுதான்.

அவரை மகான் ஆக்காதீர்கள்... அவரும் சராசரி மனிதரே.

-பரிவை சே.குமார்.

5 கருத்துகள்:

  1. சரியான பார்வை...

    அவர் இங்கு வராமலேயே இருந்திருக்கலாம்...

    // தாங்கள் பொட்டு வைத்துப் பூச்சூடிச் சொல்லும் கதைகளை கேட்க ஆளிருக்கும் வரை இவர்கள் எல்லாம் பெரியவர்கள்தான்... புனிதர்கள் அல்ல... //

    புராண புரட்டுகளும் இவ்வாறே... 2000 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து கொண்டிருக்கும் அவலம்...

    பதிலளிநீக்கு
  2. வலைப்பூவின் பின்புற அமைப்பு அருமை...

    பதிலளிநீக்கு
  3. சுவாரஸ்யமான பார்வை.

    பதிலளிநீக்கு
  4. 'சராசரி'யா அதற்கும் கீழேயா?

    மிகச் சிறந்த ஆய்வு.

    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  5. குமார், உங்கள் கோணமும், கருத்தும் வித்தியாசமாக நன்றாக இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி